UN NINAIVIL VAAZHVEN NAANAAGAVE …

அத்தியாயம் _ 16 

அவளின் ஒரு தோளை ஒரு கரம் மென்மையாக அழுத்தியத்தில் ஹம்ஸினீ தன் விழிகளை துடைத்துக்கொண்டு மெல்ல எழ, முதல் நாள் சந்தித்த டாக்டர் சரத் தான் நின்றிருந்தார். 

“கெளதம் சொன்னார் இவங்க உங்க கஸின் சிஸ்டர் என்று. கவலைப்படாதீங்க அபினயா சீக்கிரமே குணமாயிடுவாங்கன்னு நம்புவோம்…”

அவர் சொன்னதின் அர்த்தம் மூளையில் உரைக்க ஹம்ஸினீயின் விழிகள் சட்டென்று ஒளிப்பெற்றது. 

“டாக்டர் நீங்க என்ன சொல்றீங்க? அபி குணமாயிடுவாளா? எனக்கு பழைய அபியா கிடைப்பாளா…? என்றாள் ஆர்வத்துடன்.

“கண்டிப்பா மிஸ் ஹம்ஸினீ, உங்க ஆசை இன்னும் சில நாட்களிலோ, மாதங்களிலோ அல்லது வருடங்களிலோ கூட நடக்க வாய்ப்புண்டு. அதனால் தான் சொல்றேன், கவலைப்படாம இருங்க…”

டாக்டர் பேச பேச அவளுள் சிறு நம்பிக்கை வெளிச்சம் உயிர் பெற்றது, ஆனால் உடனேயே அது அனைத்தும் போய்விட முகம் மீண்டும் இருட்டடித்தது. 

அவளையே பார்த்துக்கொண்டிருந்தவர்,”என்னாச்சு மிஸ் ஹம்ஸினீ …? என்று கேள்வி எழுப்பினார். 

அதற்குள் கௌதமும் வந்து சேர,”அதில்லை ஒரு மாதத்திற்கு முன் வந்த பொழுது அவள் இப்படி தான் இருப்பாள்ன்னு நீங்க சொன்னதாக நினைவு. ஆனால் இன்று எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க? 

“ஹ்ம்ம் நல்ல கேள்வி. நீங்களும், கௌதமும் அந்த போன பிறகு அவளின் பார்வையில் செய்கையில் நிறைய மாற்றங்கள். ஒரு வேளை நீங்க அவளுடைய ரத்த சொந்தம் என்பதால் உங்களின் குரல், அழுகை அவங்களை எட்டியிருக்கோ என்னவோ. இந்த மாதிரி மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போ , எந்த விதத்தில் உணர்வுகள் திரும்புன்னு சரியாக கணித்து சொல்ல முடியாது. காரணம் மூளையின் செயல்பாடுகள் அப்படி. இத்தனை வருடம் கெளதம் வந்து அவளிடம் பேசிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் ஒரு முறை கூட அபியிடம் நாங்க இப்படி ஒரு மாற்றத்தை பார்க்க வில்லை. 

ஆனால் நீங்க வந்து அவள் கையை பிடித்து, முகத்தை வருடி, அணைத்து அழுது, பேசிவிட்டு சென்றபிறகு அபியிடம் முதலில் அசைவில்லை. இரண்டு நாள் எதையோ வெறித்தபடி அமர்ந்திருந்தார்கள். அப்புறம் திடீர்னு யாரையோ அவர்களின் விழிகள் தேடியது. அப்பொழுது எங்களால் புரிஞ்சிக்க முடியலை. 

எப்பொழுதும் இந்த அறையை விட்டு செல்லாதவள் அதன்பிறகு இந்த அறையை விட்டு வெளியே அதாவது ஹாஸ்பிடலை விட்டு வெளியே போக முயற்சித்தாள். நாங்களும் பலமுறை தடுத்து பார்த்தும் அவள் ஒரே செயலை திரும்ப திரும்ப செய்தாள். சரியாக சாப்பிடுவதில்லை, தூங்குவதில்லை. நடுராத்திரியில் எழுந்து சுவற்றில் எதையோ கிறுக்குவாள். சாப்பிட சொல்பவர்களை அடிப்பாள். ஆண்களை கண்டாலே கடித்து வைக்கிறாள். 

திடீர்ன்னு பார்த்தால் அடுத்தவர் சாப்பாட்டையும் சேர்த்து இவளே சாப்பிட்டுவிடுவாள். மொத்தத்தில் பயங்கர சேட்டை. இவளால் அடிவாங்கியவர்கள் இவளை பார்த்துக்க மாட்டேன், இவளை தனி அறையில் அடைக்க சொல்லி கேட்டதால் வேறு வழியில்லாமல் அவளை ஊசி போட்டு உறங்க வைக்கிறோம் இரண்டு நாளைக்கு ஒரு முறை. இல்லையென்றால் உறங்க மாட்டேன்கிறாள். சாப்பாடு சலைன் வழியாக கொடுக்கப்படுகிறது. இப்பொழுது புரியுதா அபி சரியாகிவிடுவாள்ன்னு நான் சொன்னது…”

டாக்டர் பேச பேச ஹம்ஸினீயின் விழிகளில் நீர் தாரை தாரையாக வழிய முகத்தில் நம்பிக்கையின் சாயல். ஏற்கனவே அவர் கௌதமிடம் அபியின் நிலையை சொல்லியிருந்தால் கௌதமுக்கு மிகவும் சந்தோஷம். 

“ஸார் சீக்கிரமே அபி சரியாயிடுவாள்ன்னு சொல்றார். அப்புறம் ஏன் அவளை நாம இங்கேயே விடணும். நாமளே அழைச்சிட்டு போய்டலாமே, ப்ளீஸ் ஸார்…”

ஹம்ஸினீ திடீர்ன்னு கேட்டதில் ஆண்கள் இருவருமே அதிர்ந்து போயினர். அதில் அதிகம் அதிர்ந்தது டாக்டர் தான். கௌதமுக்கு அதிர்ச்சி தான், ஆனால் ஹம்ஸினீ சொன்ன விஷயத்தை யோசித்ததில் வீட்டுக்கு அழைத்துச் சென்றால் அபியின் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை விதை விழுந்தது அவனுள். 

“உங்களுக்கு சிரமமென்றால் சொல்லுங்க, நான் அவளை ஊருக்கு அழைச்சிட்டு போய்டறேன்…” என்றாள் ஓர் அவசரத்துடன். 

“அமைதி …அமைதி … எனக்கு ஒரு சிரமுமில்லை. அபியை அழைத்துச் செல்ல முதலில் டாக்டரிடம் நாம் அனுமதி வாங்கணும், வீட்டிலும் சில ஏற்பாடுகள் செய்யணும். அதை தான் யோசிச்சிட்டிருந்தேன். சரத் நீங்க என்ன சொல்றீங்க? உங்க டீனிடம் பேசி அபியை எங்களுடன் அனுப்பி வைக்க முடியுமா? சாரி சாரி அதற்குண்டான வேலைகளை செய்யுங்க…”

கௌதமும் ஹம்ஸினீயை ஒட்டியே பேசவும் சரத் திண்டாடிப்போனார்.

“ஹையோ கெளதம் அவங்க தான் இமோஷனலா முடிவெடுக்கிறாங்க. எல்லாம் தெரிஞ்ச நீங்களும் இப்படியே பேசலாமா? அபியை உங்களால் தனியாக சமாளிக்க முடியாது. நீங்க இங்கே வந்ததே ப்ராஜெக்ட் விஷயமாக. இவங்களும் உங்களுடன் ஆபிஸ் வந்துவிட்டால் அபியை பக்கத்திலிருந்து கவனிக்க ஆள் வேண்டுமே. 

இங்கே இத்தனை பேர் இருந்தே எங்களால் சமாளிக்க முடியலை. ஆனால் நீங்கள் மிக சுலபமாக அழைச்சிட்டு போறேன்னு சொல்றீங்க. முதலில் டீன் இதுக்கு ஒத்துக்க மாட்டார். முடிந்தால் நீங்க பேசி பாருங்க…”

அழுத்தமாக சொல்லிவிட்டு தனக்கு இனி இந்த விஷயத்தில் எவ்வித சம்மந்தமும் இல்லை என்கிற மாதிரி அவர் அங்கிருந்து நகர்ந்துவிட ஹம்ஸினீயின் விழிகளில் நிராசை படிய கௌதமை நோக்கினாள். விழிகளை மூடி திறந்து அவளை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு டீனை  பார்க்க சென்றான். 

மீண்டும் மண்டியிட்டு அமர்ந்து ஒரு சித்திர பாவை போல உறங்கும் தங்கையின் முகத்திலிருந்த அமைதியை விழி இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் ஹம்ஸினீ. எவ்வளவு சென்றதோ அழுத்தமான ஷூ சத்தம் கேட்க அவளின் விழிகள் ஆவலோடு வாயில் பக்கம் திரும்பியது. அவள் எதிர்பார்ததப்படியே கெளதம் தான் அவளை நோக்கி வந்துக்கொண்டிருந்தான் முக மலர்ச்சியோடு. அவளை அதிகம் தவிக்க விடாமல் கண்டேன் சீதையை என்கிற மாதிரி பேச ஆரம்பித்தான்.

“அபியை அழைச்சிட்டு போக பெர்மிஷன் வாங்கியாச்சு. ஆனால் இன்று முடியாது இன்னும் இரண்டு மூன்று நாளாகும்ன்னு சொல்லியிருக்கார்…”

அபிஅய்ய் அழைச்சிட்டு போகலாம் என்றதும் பளீரென்று மலர்ந்த முகம், இரண்டாம் பாதியில் லேசாக வாட தொடங்க கெளதம் அவளின் கலக்கத்தை புரிந்து அவளை ஆசுவாசப்படுத்தினான். 

“சில பார்மாலிட்டீஸ் இருக்குதாம். அண்ட் சில சோதனைகள் செய்யணுமாம். எல்லாம் முடிந்ததும் அழைச்சிட்டு போக சொல்லிட்டாங்க. அதற்குள் நமக்கும் அபிக்கு தேவையானதை செய்ய அவகாசம் கிடைக்கும். இப்போ ஹாப்பி தானே…”

விழிகளில் நீர் மல்க நன்றி உணர்ச்சியுடன் கைகளை கூப்ப சட்டென்று அவளின் கையை பற்றி இறக்கினான். பற்றிய கையை விடாமலே அபியின் முகத்தை ஒரு முறை பார்த்துவிட்டு ஹம்ஸினீயை வெளியே அழைத்து வந்து காரில் அமர்த்திவிட்டு தன் சீட்டில் அமர்ந்து காரை எடுத்தான். 

மாலை நேரத்தை தொட்டிருக்க ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. இன்னும் இரண்டு நாளில் பிறக்க போகிற புதுவருடத்தை சந்தோஷமாக வரவேற்க ஏற்பாடுகள் நடந்துக்கொண்டிருக்க வண்டி ஒரு ரெஸ்ட்டாரெண்டின் உள்ளே சென்று நின்றது. கேள்வியாக நோக்கியவளை இறங்க சொல்லி சைகை செய்துவிட்டு அவனும் இறங்க, அவளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான். 

ஒரு ஓரமாய் டேபிளை தேர்ந்தெடுத்து அமரும் முன்,”முதலில் முகத்தை கழுவிக்கிட்டு வா ஹம்ஸினீ…” என்றான் கனிவாக. 

அவன் பேச்சை தட்ட விருப்பமில்லாமல் மௌனமாக தலையை உருட்டிவிட்டு ரெஸ்ட்ரூம் நோக்கி சென்றவளை பார்த்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் மெனு கார்டை கையிலெடுத்தான்.

அடுத்த சில நொடிகளில் பளிச்சென்ற முகத்துடன் திரும்பி வந்து தன் முன்னே அமர்ந்தவளை நோக்கி புன்னகைக்க அவளின் இதழ்களிலும் குறும் புன்னகை.    

அடுத்த சில நொடிகளில் அவன் ஆர்டர் செய்திருந்த ஹேஸல்நெட் காஃபியும், சிக்கன் சமோஸாவும் வர அவளை எடுத்துக்க சொல்லிவிட்டு தானும் ஒரு கப்பை எடுத்துக்கொண்டான். ஆர்டர் செய்ததை மறுக்க மனமில்லாமல் சமோஸாவை மறுத்துவிட்டு காஃபியை மட்டும் எடுத்துக்கொள்ள வற்புறுத்தி சமோஸா தட்டை நீட்டி எடுத்துக்க வைத்தான். இருவரும் சாப்பிட்டு முடித்து காஃபியை பருகி முடித்தனர். 

“தேங்க்ஸ் சார், காஃபி ரொம்ப வித்யாசமாக இருந்தது…”

அதை மெல்லிய புன்னகையில் ஏற்றுக்கொண்டவன் எதையோ தீவிரமாக சிந்தித்தபடி அமர்ந்திருக்கவும் ஹம்ஸினீயின் விழிகள் அவன் முகத்திலேயே நிலைத்திருந்தது. சில நொடிகள் பொறுத்திருந்து பார்த்துவிட்டு மெல்லிய குரலில் தயக்கத்துடன் அழைத்தாள்.

“ஸார் என்னாச்சு, அபியை டாக்டர் அனுப்பமாட்டேன்னு சொல்லிட்டாரா, என்னை சமாதானப்படுத்த மாற்றி சொன்னீங்களா…? என்று சிறு கலக்கத்துடன் கேட்டவளை அவசரமாக மறுத்தான். 

“நோ நோ அபியை அழைத்து வருவதில் எந்த பிரச்சினையுமில்லை. ஆனால் என் யோசனை எல்லாம் அபி என்னிடம் எப்படி வந்தாள்ன்னு கேட்டியே, அதை சொல்ல எங்கிருந்து ஆரம்பிப்பதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன். உன் பார்வை என்னை கூறுபோடுவதை பார்த்தால் என்னால் தான் அபிக்கு பிரச்சினைன்னு நினைக்கிறாயா? 

“ச்சேசே அப்படியெல்லாம் இல்லை, ஆனால் அபி எப்படி உங்களிடம் வந்தாள் என்ற கேள்வி தான் என்னிடம்…”

“தேங்க்ஸ் ஹம்ஸினீ…” என்றவன் சிறு மௌனத்திற்கு பிறகு அபியை சந்தித்த நாளை நினைவு கூர்ந்தான்.

நான் பெங்களூரில் கட்டிட கலை முதுகலை படிச்சிட்டிருந்தேன், அப்பொழுது கடைசி வருட மாணவன், அபி முதல் வருட மாணவி. அவள் என்ன டிபார்ட்மென்ட் எடுத்தாள்ன்னு எனக்கு தெரியாது. யூனிவெர்சிட்டியில் அவளை எனக்கு பழக்கம் இல்லை. ஓரிரு முறை பசங்க ராகிங் செய்யும் பொழுதும், கல்ச்சுரலிலும் பார்த்திருக்கிறேன். அவ்வளவு தான். என் படிப்பு முடிந்து நான் சென்னை திரும்பிவிட்டேன். அதன் பிறகு என் கரியரில் கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டேன். நான் தொழில் தொடங்கி இரண்டு , இரண்டரை வருஷம் இருக்கும். ஒரு நாள் நான் ஒரு கிளையண்டை சந்திச்சிட்டு வீடு திரும்பும் பொழுது ஒரு பெண் பாலத்தின் மேலே நின்றுக்கொண்டிருந்தாள் தனியாக. 

இரவு நேரம், யாருமில்லாத ரோடு, அது ஒரு பாலம். கீழே விழுந்தால் எலும்பு கூட தேறாது. அப்படியொரு நிலையில் ஒரு பெண்ணை பார்த்ததும் எனக்கு எதுவும் புரியாத நிலை. அவசரமாக அக்கம் பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா என்று தேடினேன். ஆனால் யாருமே இல்லை என்றதும் வண்டியை ஓர் ஓரமாக நிறுத்திவிட்டு மெல்ல அந்த பெண்ணை நெருங்கினேன். அவள் எதையும் கவனிக்கும் சூழ்நிலை இல்லாதவள் போல சிலை போல கீழேயே பார்த்தவண்ணம் நின்றிருந்தாள்.

ஆவலுடன் யாரும் வரவில்லை, அவள் தற்கொலை எண்ணத்துடன் தான் பாலத்தின் சுவர் மேல் நிற்கிறாள் என்று புரிய அந்த பெண்ணின் கையை பிடித்து இறங்க சொன்னேன். அதுவரை சிலை போல நின்றிருந்தவள் என்னை விடுங்க என்று திமிற, நானும் அவள் கீழே விழுந்திடாதவாறு கையை பிடித்து பாதுகாப்பாக இறக்கினேன். 

அவளிடம் தற்கொலைக்கு காரணம் கேட்டதற்கு அவள் பதிலே சொல்லவில்லை. சரி வாங்க உங்க வீட்டில் டிராப் செய்கிறேன் என்றதுக்கும் சரியான பதிலில்லை. அமைதியாக நின்றிருந்தவளை அந்த நிலா வெளிச்சத்தில் உற்று பார்த்த பொழுது தான் எனக்கு எங்கேயோ பார்த்த ஞாபகம். அப்புறம் தான் எனக்கு தெரிஞ்சது அவள் அபிநயா என்று. அவள் யாரென்று தெரிந்ததும் செம ஷாக். 

நன்றாக படித்த பெண், போதத்திற்கு வசதியான பெண். இவளுக்கென்ன பிரச்சினை வந்துவிட போகிறது என்ற குழப்பம். அவளை நான் யூனிவெர்சிட்டியில் பாரத்தை கூறி விஷயத்தை கேட்டபொழுது முதலில் வாயே திறக்கவில்லை. சரி வா உன் வீட்டில் கொண்டு போய் விடுகிறேன் என்று அழைத்த பொழுது முதன் முதலாக வாயை திறந்தாள். 

வீட்டை விட்டு வந்துவிட்டதாகவும் தனக்கென்று யாருமில்லைன்னு மட்டும் சொன்னாள். அதற்கு மேல் அவள் எதுவும் பேசவில்லை. சரி ஏதோ வீட்டில் பிரச்சினை, அந்த அதிர்ச்சியில் இருக்கிறாள் அப்புறமாக அவளை பற்றி விசாரித்து அவள் வீட்டில் கொண்டு போய், விடலாம் என்று முடிவு செய்து அவளை வற்புறுத்தி என் வீட்டுக்கு அழைத்து வந்தேன்.

நான் வந்ததே இரவு நேரம் என்பதால் எல்லோரும் உறங்கிவிட்டதால் அவளை சாப்பிட வைத்து கெஸ்ட் ரூமில் தங்க வைத்துவிட்டு என் ரூம்க்கு போய்ட்டேன். காலையில் சாப்பிடும் பொழுது வேலைக்காரனிடம் அபிக்கு சாப்பாடு அனுப்ப சொல்லிவிட்டு வீட்டு பெரியவர்களிடம் அவளின் நிலைமையை எடுத்து கூறி கொஞ்ச நாள் அவள் இங்கேயே தங்கட்டும், அவளிடம் எதையும் கேட்டு தொல்லை செய்யாதீர்கள் என்று சொல்லிவிட்டு, அபியிடம் சொல்லிக்கொண்டு ஆபிஸ் சென்றுவிட்டேன். மதியம் சாப்பிட வந்த பொழுது கூட அபி ரூமை விட்டு வெளியே வரலை. அவளை அங்கேயே சாப்பிட வைத்துவிட்டு மீண்டும் ஆபிஸ் கிளம்பிவிட்டேன்… »

கெளதம் பேச பேச ஹம்ஸினீ மூச்சு விட கூட மறந்து கேட்டுக்கொண்டிருந்தாள். மூச்சு விடும் சத்தம் கூட கௌதமின் பேச்சை தடைபடுத்துமோ என்ற பயம்.

“நான் ஆபிஸ் சென்று இரண்டு மணி நேரம் கூட இருந்திருக்காது, எனக்கு வீட்டிலிருந்து போன் வந்தது அபி சூசைட் செய்துக்கிட்டாள்ன்னு. ஒரு நொடி என் காதில் விழுந்த விஷயத்தை நம்ப சிரமமாக இருந்தாலும் அடுத்த நொடி கிளம்பி வீட்டுக்கு போவதற்குள் ஆம்புலன்ஸ் வந்து அவளை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றுவிட்டது. அங்கே சென்று பார்த்த பொழுது மாடியிலிருந்து குதித்ததால் தலையில் பலமாக அடிபட்டிருக்கு, ஆனால் உயிருக்கு சேதமில்லைன்னு சொன்னாங்க. 

அவள் ஏன் தற்கொலை முயற்சி செய்தால் என்று புரியவில்லை என்றாலும் ஒரு விதத்தில் அபியின் உயிருக்கு ஆபத்தில்லை என்பதால் சற்று நிம்மதி. ஆயினும் அவள் கண் திறக்கும் வரை நான் அங்கே தான் தவமிருந்தேன். வீட்டுக்கும் போகவில்லை. அவ்வப்பொழுது அப்பா தான் வந்துவிட்டு அபியை பற்றி விசாரித்துவிட்டு சென்றார்.

ஐந்து நாள் சென்றிருக்கும், அபி கண்ணை திறந்துவிட்டாள் என்று டாக்டர் சொன்னதும் தான் எனக்கு பெருத்த நிம்மதியோடு உள்ளே சென்று பார்த்த தலையில் யாரோ கல்லை தூக்கி போட்ட உணர்வு. கண்ணை விழித்தாளே தவிர அவள் யாரென்று அவளுக்கே தெரியவில்லை. மண்டையில் அடிபட்டதால் அது அவள் மூளையை பலமாக அதிர்ச்சிக்குள்ளாக்கி மனநிலையை பிழற வைத்துவிட்டது. 

அபி மீண்டும் பழைய அபியாக மாறவேண்டும் அட் எனி காஸ்ட் என்று டாக்டரிடம் கெஞ்சியும் பலனில்லை. அவங்களை இங்கே வைத்து ட்ரீட் செய்வதில் பலனில்லை. மெண்டல் அசைலத்தில் சேர்த்துவிடுங்கள். அங்கே அவர்களுக்கு உகந்த வகையில் மருத்துவம் செய்வார்கள் என்றுவிட நான் சுத்தமாக உடைந்துவிட்டேன். 

அடுத்து என்ன செய்வதென்று புரியாத நிலை. உயிரை காப்பாற்றுகிறேன் பேர்வழின்னு வீட்டுக்கு அழைத்து வந்து அவளை இப்படியொரு நரகத்தில் தள்ளிவிட்டுவிட்ட குற்ற உணர்வு. சோர்ந்து போய் வீடு திரும்பியவனுக்கு அபியின் இந்த நிலைமைக்கு காரணம் என்னை பெற்றவள் என்று வேலைக்காரன் மூலம் தெரிய வந்தது. 

ஏற்கனவே என் தாய் செய்த ஒரு வேலையில் எனக்கு அவரின் முகத்தை பார்க்கவோ , பேசவோ பிடிக்காமல் ஒதுங்கி இருந்தேன். இப்பொழுது அபியின் இந்த நிலைமைக்கும் அவங்க தான் காரணம் என்று தெரிந்ததும் எனக்கு மனது விட்டு போச்சு. என் தந்தையிடம் மட்டும் மட்டும் கேட்டேன். பாவம் அவராலும் என கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி போனார். நான் யாரைன்னு குற்றம் சொல்ல. 

என்னை பெற்றவள் என் மகனை மயக்கி இங்கே வந்து தங்கியிருக்கியா என்று கேட்டதிற்கு அபி தற்கொலைக்கு முயலுவாள் என்று கனவிலும் நினைக்கவில்லை. மொத்தத்தில் அபியின் இந்த நிலைமைக்கு நான் மட்டுமே காரணம் என்ற குற்ற உணர்ச்சியில் தான் நான் இன்றும் உழன்றுக்கிட்டு இருக்கேன்.

சண்டை போட்டு எவ்வித புண்ணியமுமில்லையே. ஏற்கனவே நொந்து போனவளை நோகடிக்கிற மாதிரி பேசிய தாயை நோவதா ? இல்லை அவளை அழைத்து வந்த என்னை பற்றி நினைத்தும் பாராமல் தற்கொலைக்கு முயன்ற அபியை நோவதா ? யாரை நொந்து என்ன பயன். நடந்த நிகழ்வுகள் இல்லையென்று ஆகிவிடுமா… ? 

ஐ ம் சாரி ஹம்ஸினீ, நான் தெரிந்தே எதுவும் செய்யலை. அபி சற்று பொறுமையாக இருந்து என்னிடம் விஷயத்தை சொல்லியிருந்தால் கூட நான் வேறு ஏதாவது ஏற்பாடு செய்திருப்பேன். ஆனால்… ? 

பேசிக்கொண்டே வந்தவனின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக நிலவு போல தேய்ந்து குரல் பிசிறடிக்க பேச்சை நிறுத்தி சட்டென்று எழுந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டு ரெஸ்ட் ரூம் நோக்கி சென்றான். 

கெளதம் சொன்னதை கேட்டு ஹம்ஸினீ உறைந்து போய் அமர்ந்திருந்தவளுக்கு என்ன சொல்வது, யாரை குற்றம் சொல்வதென்று புரியவில்லை. ஆனால் ஒரு விஷயம் மட்டும் அவள் மனதில் தெளிவாக புரிந்தது அது அபியின் இந்த நிலைக்கு நிச்சயம் கெளதம் காரணகர்த்தா இல்லையென்று.