UN NESATHTHIL VAZHVEN NAANAAGAVE…

அத்தியாயம்_ 10

காரிலிருந்து இறங்கிய கெளதம் முற்றிலும் வேறு மாதிரி இருந்தான். தாடி, மீசையெல்லாம் அழகாக ட்ரிம் செய்யப்பட்டு முடியை ஸ்டைலாக க்ரூமிங் செய்து முகத்தின் மொத்த அழகையும் வெளிக்காட்டும்படி இருந்தது அவனின் தோற்றம். 

மலைத்து போய் நின்றிருந்தவளை நெருங்கியவன் மெலிதாக புன்னகைக்க அது ஹம்ஸினீயை சுனாமியாய் சுருட்டி இழுத்துச் செல்ல முயன்றது. 

“வீட்டை சுற்றி பார்த்துட்டீங்களா…? 

திடீரென்று கேட்ட கேள்வியில் திடுக்கிட்டு பின் சுதாரித்து,”ஹ்ம்ம் பார்த்தாச்சு, நல்லா இருக்கு…”

“பிரேக்பாஸ்ட் சாப்பிட்டீங்களா? சரசம்மா எங்கே?

அவன் கேட்டதுமே கார் சத்தம் கேட்டு வெளியே வந்த சரசம்மா பதில் கூறினார். 

“இன்னும் இல்லை சின்னய்யா, நீங்க வந்ததும் சாப்பிடறேன்னு சொல்லிட்டாங்க…”

அவள் பக்கம் திரும்பியவன்,”எனக்காக காத்திருக்க வேண்டாம் ஹம்ஸினீ, உங்களுக்கு பசித்தால் சாப்பிட்டுடுங்க. நான் சில நேரம் வெளியே சாப்பிட்டுட்டு வந்திடுவேன். சோ நோ மோர் வைட்டிங். சரசம்மா நீங்க டிஃபன் எடுத்து வையுங்க. அவங்க வேண்டாம்ன்னு தான் சொல்வாங்க. இவங்க இந்த வீட்டு கெஸ்ட். இவங்களை ஒழுங்கா சாப்பிட வைப்பது உங்க வேலை. சரி ரெபிரெஷாகி வந்துடறேன் …” என்று மேலே செல்ல ஹம்ஸினீக்கு ஒரு பெருமூச்சு தான் எழுந்தது. 

அடுத்த சில நிமிடங்களில் குளித்துவிட்டு டிராக் ஷூட்டில் இறங்கி வர சரசம்மா அவளை டைனிங் டேபிளில் அமர்த்தி டிஃபனை பரிமாறியிருந்தார். 

அவளின் எதிரில் அமர்ந்தவனுக்கு தட்டை வைத்து பரிமாற, சாப்பிட ஆரம்பித்தவன் கூச்சத்தோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தவளை கண்டு மென்மையாக புன்னகைத்தான்.

“இதை உங்க வீடு மாதிரி நினைச்சிக்கங்க ஹம்ஸினீ, சாப்பாட்டில் கூச்சம் வேண்டாம். உங்களுக்கு என் எதிரில் சாப்பிடுவது கூச்சமாக இருந்தால், இனி நான் என் ரூமில் சாப்பிடறேன், சரசம்மா எனக்கு ….”என்றவனை அவசரமாக இடையிட்டாள் ஹம்ஸினீ. 

“நோ நோ ஸார், அதெல்லாம் வேண்டாம். ஏனோ எனக்கு பசிக்கலை அதான். மத்தபடி ஒன்றுமில்லை…”

மீண்டும் ஒரு புன்னகையை கொடுத்துவிட்டு,”ஓகே சாப்பிடுங்க …” என்று சாப்பிட்டபடி போனில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு கொஞ்சம் சங்கடமாக தான் இருந்தது. 

அவனை நிமிர்ந்து பார்க்காமல் சாப்பிட்டு முடித்து எழ, அதற்குள் கைகழுவிவிட்டு வந்த கெளதம் அவளை ஹால் சோபாவில் அமர சொல்லிவிட்டு தானும் அமர்ந்தான்.

“இன்று முழுவதும் உங்களுக்கு செய்ய ஏதும் இல்லையென்றால் பெங்களூரை சுற்றி பார்க்க வர்றீங்களா ? இல்லை வீட்டிலேயே ரெஸ்ட் எடுக்கறீங்களா ? பிகாஸ் வேலை ஸ்டார்ட் ஆயிடிச்சுன்னா மூச்சு விட கூட நேரமிருக்காது. வெளியே போகலாம் என்றால் ஒரு மணி நேரத்தில் கிளம்பிடுங்க…” 

சில நொடிகள் யோசித்தவளுக்கு வீட்டிலேயே இருந்தால் போரடிக்கும் என்று தோன்ற மெல்ல தலையை உருட்டினாள் வெளியே வருவதாக. 

“குட், கெட் ரெடி …” என்றவன் இரண்டிரண்டு படிகளாக தாவி ஏறி அவன் அறைக்குள் தஞ்சமடைந்துவிட ஹம்ஸினீ யோசனையுடன் அவளை அறையை அடைந்தாள்.

ரெடியாகி கீழே வர சரசம்மா அவள் கையில் ஆரஞ்ச் ஜூஸை அவளுக்கு கொண்டு வந்து கொடுக்க வாங்க மறுத்துக்கொண்டிருந்தவளை நெருங்கினான்.  

“குடிங்க ஹம்ஸினீ, வீட்டில் விளைந்த பழத்தில் தயாரித்த ஜூஸ், நல்லா இருக்கும்…” என்றவன் அவனுக்கு நீட்டிய ஜூஸை எடுத்து குடித்துவிட்டு தம்பளரை ட்ரேயில் வைத்தான். 

“கிளம்பலாமா …”சம்மதமாக தலையை உருட்டிவிட்டு அவனை பின்தொடர்ந்தாள். 

காரில் ஏறியதும்,”உங்களுக்கு பெங்களூரில் எங்கேயாவது போகணும்ன்ற ஆசை இருந்தால் சொல்லுங்க, அங்கே போகலாம் முதலில் …”

“சாரி எனக்கு அப்படியொரு ஐடியாவே இல்லை, ஆனால் முதன் முதலில் பெங்களூருக்கு வந்திருக்கேன் வேலைக்காக. சோ இங்கே எந்த கோவில் பிரபலமோ அங்கே அழைச்சிட்டு போக முடியுமா …? 

அவளின் தயக்கமான வேண்டுகோளுக்கு புன்னகைத்துவிட்டு,”கண்டிப்பா போகலாம்…” என்றவன் சோமேஸ்வரர் கோவிலுக்கு அழைத்துச் சென்றான். 

அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் தான் இருந்தது. கோவிலுக்கு உள்ளே நுழைந்தவளை நிறுத்தி கெளதம் அர்ச்சனை தட்டு வாங்கி கொடுக்க ஹம்ஸினீ அசடு வழிந்துக்கொண்டே வாங்கிக்கொண்டு அவனுடன் நடந்தாள். பார்த்தவுடனே அவளின் மனதில் பச்சக்கென்று ஒட்டிக்கொண்டது அந்த கோவிலின் பழமையும், அழகும், அமைதியும். கோவிலை நிதானமாக சுற்றி பார்க்கவே இரண்டு மணி நேரம் தேவைப்படும் போல தோன்றியது.

சோமேஸ்வரரை தரிசிப்பதற்கு முன் நந்திகேஸ்வரரை வணங்கிவிட்டு உள்ளே செல்ல அர்ச்சர்கர் கௌதமை பார்த்துவிட்டு முக மலர்ச்சியோடு அவர்களை நெருங்கினார்.

“வாங்க …வாங்க எப்போ வந்தீங்க இங்கே? ரொம்ப வருஷமாச்சே உங்களை பார்த்து? திருமணம் ஆயிடுச்சா, இவங்க உங்க மனைவியா …? 

சலசலவென்று பேசிக்கொண்டே அவள் கையில் வைத்திருந்த அர்ச்சனை கூடையை வாங்கிக்கொள்ள ஹம்ஸினீக்கு தூக்கிவாரிப்போட்டது அவரின் கேள்வியில். கெளதம் கூட ஒரு நொடி திடுக்கிட்டான். அடுத்த நொடியே தன்னை சுதாரித்து பார்வையை ஹம்ஸினீ பக்கம் திருப்ப அவளின் முகம் இறுகியிருந்தது. 

“அதெல்லாம் இல்லை, சாமி பெயருக்கே அர்ச்சனை பண்ணுங்க …” 

“ஓ தப்பா நினைச்சிக்கப்படாது, ஏதோ தெரியாம கேட்டுட்டேன், சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை குட்டியோடு கோவிலுக்கு வாங்கோ …” என்றபடி சன்னதியின் உள்ளே செல்ல கெளதம் தலையை குலுக்கிக்கொண்டான் சலிப்போடு. 

அர்ச்சனை முடிந்து தீப ஆராதனையை கண்ணில் ஒற்றிக்கொண்டு திருநீற்றை கீற்றாக இட்டுக்கொண்டு பிரகாரத்தை சுற்றி வந்து ஆங்காங்கே இருந்த தெய்வங்களை தரிசித்துவிட்டு அப்படியே வெளியே செல்ல முற்பட்டவளை நிறுத்தி அமர சொன்னான். 

“ஏன் சார், அதான் சாமி கும்பிட்டாச்சே, போகலாமே …”

“அப்படி போக கூடாது ஹம்ஸினீ, விநாயகர் கோவிலுக்கு சென்றால் கூட கும்பிட்டுவிட்டு அமராமல் போகலாம். ஆனால் சிவன் கோவிலுக்கு வந்தால் கண்டிப்பாக அமர்ந்துவிட்டு தான் போகணும். அது மட்டுமில்லை இங்கிருந்து ஒரு தும்பு தூசியை கூட நாம் எடுத்துக்கொண்டு செல்ல கூடாது. அப்படி செய்தால் சிவன் சொத்து குல நாசம்னு சொல்வாங்க.கையிலிருக்கிற தூசியை தட்டிவிட்டு தான் செல்ல வேண்டும். ஏன் உங்களுக்கு இதெல்லாம் தெரியாதா …? என்றான் ஆச்சர்யத்துடன்.

“ப்ச் தெரியாது. நான் அதிகமாக கோவிலுக்கு போனதில்லை. படிக்கிற வயதில் அம்மா கோவிலுக்கு அழைப்பாங்க, ஆனால் எனக்கு இன்ட்ரெஸ்ட் இருந்ததில்லை. பிறந்த நாள், விசேஷம்னு வந்தால் அவங்க வற்புறுத்தி அழைச்சிட்டு போவாங்க. சில சமயம் என்னை போய்விட்டு வர சொல்லுவாங்க. அப்பொழுதெல்லாம் எனக்கு பெரிசாக தோன்றியதில்லை. ஆனால் இப்போ …? 

பேசிக்கொண்டே வந்தவளுக்கு தாயின் நினைவில் தொண்டை அடைத்தது.

“சாரி ஹம்ஸினீ, தேவையில்லாத கேள்வியை கேட்டுடேனா…?

அதற்குள் தன்னை சரி செய்து,”நோ நோ அப்படியில்லை. எப்பொழுதுமே இருக்கும் பொழுது அதன் அருமை தெரியாதுன்னு சொல்வாங்க, அது எவ்வளவு நிதர்சனமான உண்மை. அம்மா இருக்கும் வரை எனக்கு அவங்க அருமை தெரியலை. இப்போ அந்த உறவு இல்லையேன்னு வருத்தமா இருக்கு. கத்தினாலும், கதறினாலும் அவங்க திரும்ப வரக்கூடிய இடத்திற்கு போகலையே …? 

அவள் அம்மாவை நினைத்து வருத்தப்பட கௌதமுக்கு அம்மா என்ற சொல்லே கசந்தது. ஒரு நொடி அவள் மீது பொறாமை கூட வந்தது. ஹம்ஸினீக்கு வாய்த்த அம்மா பாசமானவள் போல.  தன் எண்ணங்களை உதறி நடப்புக்கு வந்தான்.

“ஓ ! அப்பா இருந்தார் தானே…? 

“ஹ்ம்ம் இருந்தார், ஆனால் படுக்கையில் நோயாளியாக…”

“ஓ ! என்றான் வருத்தமாக.

“அம்மா இறந்ததும் அப்பா அந்த கவலையிலேயே நெஞ்சை பிடிச்சிட்டு சரிஞ்சிட்டார், அதன் பிறகு ஹாஸ்பிடல் வாசம் தான். ஒரு நாள் கூட அவரும் நிம்மதியாக இல்லை, நானும் நிம்மதியாக இல்லை. அவரை குணமாக்க போராடியும் பலனில்லாமல் அவரும் அம்மாவிடம் போய்ட்டார்…”

பேசிக்கொண்டே சென்றவள் சட்டென்று தன்னை நிதானித்து அவனை ஏறிட்டு நோக்கினாள்.

“சாரி நான் தேவையில்லாததை பேசி உங்க நேரத்தை வீணடிச்சிட்டேன். சரி இப்போவாவது கிளம்பலாமா …? 

“போகலாம் ….”என இருவரும் எழுந்து காருக்கு வந்தார்கள். 

அடுத்து பிருந்தாவனத்திற்கு அழைத்துச்சென்றான். அங்கே சற்று நேரம் சுற்றி பார்த்துவிட்டு வெளியேறி மதிய சாப்பாட்டை முடித்துக்கொண்டு ஜவாஹர்லால் பார்க், லால் பாக் ஆகியவற்றை சுற்றி முடிக்க இருவருமே களைத்து போனார்கள். 

நடுநடுவில் தாங்கள் சென்ற ஊர்களை பற்றியும், பார்த்த இடங்களை பற்றியும் பேச அவர்களுள் இருந்த இறுக்கம் சற்றே தளர்ந்தது. அதுவும் ஹம்ஸினீ அவளின் பெற்றோர்களை பற்றி பேசியதும் கௌதமுக்கு அவளை நினைத்து பரிதாபம் உண்டாக அவளிடம் தன் கடுமை பேச்சையும், பார்வையையும் குறைத்துக்கொண்டான். சார் என்ற அழைப்பு கெளதம் சார் என்று மாறியிருந்தது. 

“போதும் கெளதம் சார், வீட்டுக்கு போய்டலாம். ரெஸ்ட் எடுத்தால் தான் நாளை வேலையை கவனிக்க முடியும்…” என்ற பொழுது அவனுக்கும்  அது தான் சரியென்று தோன்றியது. 

“ஓகே அதற்கு முன்னால் ஒரு முக்கியமான இடத்திற்கு போகணும். அங்கே போயிட்டு வீட்டுக்கு போய்டலாம்…” என்றவன் காரை மெண்டல் அசைலத்தின் முன் நிறுத்த அவளின் விழிகள் அவனை கேள்வியாக நோக்கியது. 

அதை கண்டுக்கொள்ளாதவன் மாதிரி காரை விட்டிறங்கி உள்ளே நடக்க ஹம்ஸினீயும் குழப்பத்தோடு அவனை பின்தொடர்ந்தாள். நீண்ட காரிடாரில் நடந்து ஒரு அறைக்குள் நுழைய யாரிடமோ போனில் பேசிக்கொண்டிருந்த டாக்டர் அவசரமாக எழுந்து அவனை சைகையால் வரவேற்று அமரவைத்துவிட்டு தன் பேச்சை முடித்து போனை அணைத்தார். 

“ஹல்லோ கெளதம் எப்படி இருக்கீங்க? என்னாச்சு கொஞ்ச நாளாக ஆளையே காணோம். முந்தி வந்ததற்கும் இப்போதைக்கு ஆளே உருமாறி வந்திருக்கீங்க. லுக் சோ ஸ்மார்ட். சரி நீங்க வந்து எப்படியும் இரண்டு மாசம் இருக்குமா …? ஏன் ஒர்க் லோட் அதிகமோ…?

லொட லொடவென்று கேள்விகளை கொட்டினார். அவரின் கேள்விகளுக்கு கௌதமிடமிருந்து மெல்லிய புன்னகை வெளிப்பட்டது.

“எஸ் சரத், இங்கே ஒரு ப்ராஜெக்ட் கிடைச்சிருக்கு, அதை ஸ்டார்ட் பண்ணுவதற்காக அங்கே இருக்கிற வேலைகளை முடிக்கவேண்டி இருந்தது. அதனால் தான் வரமுடியலை. இவங்க என் செயலாளர்  ஹம்ஸினீ. சரி அபி எப்படி இருக்காள் சரத். ஏதும் இம்ப்ரூவ்மென்ட் இருக்கா…? என்றான் கண்ணில் ஆர்வத்துடன். 

ஹம்சினிக்கு ஒரு ஹலோ சொன்ன சரத் கௌதமின் பின்னால் ஜனித்த கேள்விகளுக்கு இதழை பிதுக்கினார் சற்று வருத்தத்துடன். 

கௌதமின் விழிகளில் நிராசை படர,”ஏன் சரத், இன்னும் எத்தனை வருஷம் இப்படியே இருப்பாள், அபி குணமாக வாய்ப்பு இருக்கா இல்லையா? இல்லை அவளை வெளிநாட்டுக்கு அழைச்சிட்டு போய்டலாமா …? என்றான் கனத்த இதயத்துடன். 

“கமான் கெளதம், எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி பேசலாமா? நாங்க எங்க பெஸ்ட்டை கொடுத்துட்டோம், நீங்க வெளிநாட்டுக்கு அழைச்சிட்டு போவதினால் எந்த பலனும் இல்லை. அவங்க மூளை எதற்கும் ரெஸ்பான்ஸ் கொடுக்கலை, நாங்க என்ன செய்ய முடியும். அவங்க இருக்கும் வரை இப்படியே இருப்பாங்கன்னு தான் தோணுது. சாரி கெளதம் …”

டாக்டர் கௌதமை தேற்ற முற்பட அவனின் முகம் கல்லாய் இறுகியது. பக்கத்திலிருந்த ஹம்ஸினீயை அவனால் ஏறிட்டும் பார்க்க முடியாமல் தளர்ந்து போய் எழ சரத் எழுந்து வந்து அவனின் தோளை தட்டினார் ஆதரவாக.

“சரி வாங்க அபியை பார்க்க போகலாம் …” என சரத்துடன் இரண்டடி எடுத்து வைத்தவன் அப்பொழுது தான் நினைவு வந்தவனாக ஹம்ஸினீ பக்கம் திரும்பினான். 

“நீங்க இங்கேயே வெயிட் பண்ணுங்க ஹம்ஸினீ, இதோ வந்துடறேன்…”

“கெளதம் சார் நா …”என்னும் பொழுதே சரத் இடையிட்டார். 

“ஏன் அவங்களும் வரட்டுமே, அதிலென்ன இருக்கு கெளதம்…”

“வேண்டாம் சரத், அவங்க அபியை பார்த்தால் பயந்திடுவாங்க அதான்…” 

கௌதமின் பேச்சிற்கு மறுத்துவிட்டு,”நானும் வர்றேன் ஸார் …” 

பிடிவாதமாக அவர்களுடன் நடக்க அந்த வளாகத்தின் கடை கோடியில் திரும்பி மறுபடியும் நீண்ட காரிடாரில் நடக்க எதிரே கையில் தடியுடன் வெள்ளை சீருடை அணிந்த ஒருத்தன் வந்தான். 

“சித்ரா சிஸ்டர் டூட்டிக்கு வந்துட்டாங்களா வேலு…?

வேலு எனப்பட்டவன் பெரிதாக தலையை உருட்டி, அவங்க எப்பவோ வந்துட்டாங்க சார், அந்த அபிநயா பெண்ணிடம் சாப்பிட சொல்லி மல்லுக்கட்டிட்டு இருக்காங்க. அந்த பொண்ணு வழக்கம் போல சாப்பிடாமல் மக்கர் பண்ணுது …” என்றான் அலுப்புடன் ஆனால் பணிவுடன். 

“ஓகே நாங்க பார்த்துக்கிறோம்…” 

மூவரும் தொடர்ந்து நடக்க, வேலுவின் பார்வை புதிதாக வந்த ஹம்ஸினீயை வினோதமாக பார்த்துவிட்டு செல்ல, எதேச்சையாக திரும்பின ஹம்சினியின் விழிகளில் அவன் பார்வை பட்டது. அதை பற்றி யோசிக்க கூட நேரமில்லாமல் அவளுக்கு உள்ளுக்குள் ஏதோ பரபரவென்றிருந்தது. யார் இந்த அபிநயா, சார்க்கும் இவளுக்கும் என்ன தொடர்பு? அவள் ஏன் இங்கே இருக்கிறாள். மூளை ஒத்துழைக்கவில்லை என்கிறார் மருத்துவர், என்ன தான் நடக்கிறது இங்கே…? 

யோசித்து முடிக்கும் முன்னரே இரு ஆண்களும் ஒரு வார்டினுள் நுழைய ஹம்சினியின் கால்களும் தயக்கத்துடன் உள்ளே அடியெடுத்து வைத்தது. உள்ளே மனநலம் பிழறிய பெண்கள் வெள்ளை சீருடையில் எங்கும் சிதறிக்கிடந்தனர். ஆமாம் அப்படி தான் அவள் பார்வைக்கு பட்டது. யாருமே சரியாக அமர்ந்தோ, நின்றோ, படுத்தோ இருக்கவில்லை. பெரிய ஹால் மாதிரியான அமைப்பு கொண்ட அந்த அறையின்  மூலையில் ஒரு பெண் குப்புற படுத்து காலை உயர்த்தி ஆட்டிக்கொண்டிருந்தாள்.  இன்னொருத்தி குத்துக்காலிட்டு அமர்ந்து தலையை அதில் பதித்திருந்தாள். நடு ஹாலில் ஒரு வயதான பெண்மணி தன் மடியில் இன்னொரு பெண்ணை படுக்க வைத்து அவள் முடிகளை எண்ணிக்கொண்டிருந்தாள். மற்றொருத்தியோ காலை பப்பரக்கா என்று நீட்டி அமர்ந்து சூனியத்தை வெறித்துக்கொண்டிருந்தாள். இன்னொரு பெண் ஒரு பேப்பரில் கிறுக்கிக்கொண்டிருக்க அதை ஒருத்தி பிடிங்கி கிழித்து போட்டாள். 

யாருக்குமே தாங்கள் யார் எங்கே இருக்கிறோம் என்ற ஸ்மரணை இல்லாமல் இருக்க ஹம்ஸினீயன் நெஞ்சம் பதறியது. இவர்களை பெற்றவர்கள், கணவர்கள், பிள்ளைகளின் நிலைமை என்ன ? ஏன் இப்படி இருக்கிறார்கள். ஒவ்வொருத்தருக்கும் ஒரு கதை இருக்கும் என்றாலும் ஏன் இப்படியாக வேண்டும் என்ற ஆற்றாமை ஹம்ஸினீயின் இதயத்தை கசக்கி பிழிந்தது. 

“அபி…” என்ற வேதனை நிறைந்த கௌதமின் குரலில் வேகமாக பார்வையை திருப்பியவள் அவன் ஒரு பெண்ணின் முன் மண்டியிட்டு அவளின் கையை பிடிக்க ஹம்ஸினீக்கு அவளை கண்டு தூக்கிவாரி போட்டது.