UN NESATHTHIL VAAZHVEN NAANAKAAVE …

அத்தியாயம் -1

டிசம்பர் மாத மார்கழி மாலை நேரம், ஆறு மணிக்கே லேசாக இருட்டிக்கொண்டு வர, இளம் பனி பொழிய தொடங்கியது. தெருவிளக்குகள் உயிர் பெற்றது. சாலை போக்குவரத்தில் சர்ர் சர்ரென்று பாயும் வண்டிகளும், கூட்டம் கூட்டமாக நடந்துசெல்லும் மக்களும் சாலையோர கடைகளும், அதில் விற்பனை செய்பவர்களும், கொடுப்பவர்களும் என சென்னை மாநகரம் நிரம்பி வழிய, அதில் பனியின் ஊதல் காற்று காணாமல் போயிருந்தது. 

ஆயினும் நடந்துச் செல்லும் வயதான பாதசாரிகள் குளிரை சமாளிக்க முடியாமல் கழுத்தில் மஃப்ளரை சுற்றி, காதில் பஞ்சு வைத்து மறைத்துக்கொண்டு சென்றார்கள். இளங்கன்றுகள் அவர்களை கண்டு புன்னகையோடு கடந்து சென்றார்கள். கல்லூரி மாணவிகளை குளிர் தீண்டியதாகவே தெரியவில்லை.

நெடுஞ்சாலையில் பாய்ந்து சீறிக்கொண்டு வந்த வாகனங்கள் சிவப்பு சிக்னல் விழவும் சட்டென்று தங்கள் வேகத்தை குறைத்து பச்சை சிக்னல் விழுவதற்காக பொறுமையில்லாமல் காத்திருக்க ஆரம்பித்தார்கள். அவர்களின் பொறுமையை சோதிப்பது போல கவுண்டவுன் மெதுவாக சென்றுக்கொண்டிருந்தது. 

எதிர்சாரியிலும் அதே போல பைக்குகளும், கார்களும், மொபெட்களும் சிக்னலை பார்த்தபடி ஆக்சிலேட்டரை முறுக்கிக்கொண்டிருந்தனர். 

ஆபிஸ் முடிந்து மிகவும் களைப்பாக பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்த பிரபுக்கு கொஞ்சம் கூட பொறுமையில்லை. எப்பொழுது வீடு திரும்புவோம், சில்லென்று ஒரு குளியல் போட்டு அம்மாவின் கையால் சூடான காஃபியை குடித்துவிட்டு நேற்றிரவு டவுன்லோட் செய்து வைத்த ஆங்கில படத்தை பார்ப்போம் என்றிருந்தது. 

தன்னுடன் நின்றிருந்த எல்லோருக்குமே ஏதோ ஒரு வகையில் வேலை இருந்தது, கவுன்டவுன் முடிந்து தான் பச்சை சிக்னல் விழும் ன்று தெரிந்தும் ஹார்ன் அடித்துக்கொண்டும், ஆக்சிலேட்டரை டூர்…டூர்… என்று முறுக்கிக்கொண்டும் இருந்தார்கள். ஏனோ இன்று பார்த்து கவுன்டவுன் ஆமை வேகத்தில் செல்வதாக தோன்ற பிரபுவின் விழிகள் இடது பக்கத்தில் பாய்ந்தது சுவாரஸ்யமின்றி. 

அங்கேயும் பொறுமையில்லாத மனிதர்கள் தான். உலகத்தில் யாருக்குமே பொறுமை என்பதே இல்லையா என்ற கேள்வி எழ சட்டென்று தன்னை நினைத்து கொட்டிக்கொண்டான் நீ மட்டும் பொறுமையானவனா என்று கேட்டு. உள்ளுக்குள் கேள்வி எழவும் அவனையுமறியாமல் இதழ்களில் குட்டி புன்னகை மலர்ந்தது. 

எந்த ஒரு இக்கட்டையும் நிதானமாக பார்க்க பழகு, பின் அதுவே பழகிவிடும். அதன் பிறகு அதுவே அழகாகவும் மாறிவிடும் என்று யாரோ சொன்னது நினைவு வர பிரபு மெலிதாக சிரித்துக்கொண்டான். ஆபிஸ் முடிந்து களைப்புடன் பைக்கில் வந்து இப்படி ஆயிரம் பேருக்கு நடுவில் வியர்வை கசகசக்க நிற்கும் பொழுது எங்கிருந்து நிதானம் வரும். இதெல்லாம் சாத்தியமானதா என்று கேலியாக புன்னகைத்தபடி அவனின் விழிகள் அங்கு நின்றிருந்த ஒவ்வொருத்தர் மீதும் அவர்களின் வண்டியின் மீதும் படிந்து படிந்து மீண்டுக்கொண்டிருந்தது.

அவனுக்கு ஒரு வினோத பழக்கம் உண்டு, சிக்னலில் நிற்கும் பொழுதே, நடந்துசெல்லும் பொழுதே சாலையில் செல்லும் வண்டிகளை முக்கியமாக கார்களை ஊன்றி கவனிப்பான். அவன் வாழ்க்கையின் இரண்டு லட்சியங்களில் ஒன்று கார் வாங்குவது. அதுவும் இன்ஸடால்மெண்டில் வாங்காமல் முழு பணத்தையும் கொடுத்து வாங்கி உபயோக்கிக்கணும், அப்பொழுது தான் அது என்னுடைய கார் என்ற பீலிங் வரும் என்பான். அதற்காக பணத்தை சேமித்துக்கொண்டு வருகிறான். அதனால் எந்த வண்டி மாடல் ஸ்டைலிஷாக இருக்கிறது, கலர் நன்றாக இருக்கிறது என்பதையெல்லாம் தனது பைக்கை சரி பார்க்கும் மெக்கானிக்கிடம் டிஸ்கஸ் செய்தது போக, அடிக்கடி கார் ஷோரூம் சென்று பொல்லாதவன் தனுஷ் மாதிரி அங்கிருக்கிற சேல்ஸ் மேனேஜரை ஒரு வழி செய்துவிட்டு வருவான்.  

அதே போல வீடு.  பெரிய பங்களா டைப் வீட்டிற்கு ஆசைப்படவில்லை. இரண்டு பெட்ரூம் பிளாட் தான் இப்போதைய அவன் கனவு. 

இன்றும் அப்படி நோட்டமிடும் பொழுது ஒரு மிஸ்துபிஷி சாக்லேட் கலர் காரை கண்டதும் அவனின் இதழ்களில் மெல்லிய ரசனையான புன்னகை மலர்ந்தது. நைஸ் கார், வித்யாசமான கலர், இதன் மைலேஜ், பீச்சர்ஸ் பற்றி தெரிஞ்சிக்க மிஸ்துபிஷி ஷோரூம் மேனேஜரை பார்க்கணும். தனக்குள் பேசிக்கொண்டே அந்த வண்டியின் உள்ளே அமர்ந்திருந்த நவ நாகரிக பெண்ணை பார்த்துவிட்டு அடுத்த வண்டிக்கு விழிகள் தாவியது. காரை அடுத்து ஒரு கைனெடிக் ஹோண்டா நிற்க அதிலும் ஒரு பெண் முகமூடி கொள்ளைக்காரி போல எல்லாவற்றையும் துணி வைத்து மறைத்து அடிக்கடி கையை திருப்பி கையுறை மேலே கட்டியிருந்த கடிகாரத்தை பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஆனால் பிரபுவின் மூளையில் ஏதோ மின்னலடிக்க அவனின் விழிகள் கைனெடிக் ஹோண்டா பெண்ணிடமிருந்து அவசரமாக திரும்பி மீண்டும் சாக்லேட் கார் பெண்ணிடம் பாய்ந்தது. இவள்…இவள்…என்று குழம்பியவன் அவளை உற்று நோக்கினான் தான் நினைப்பவள் தானா என. 

அதற்குள் கவுன்டவுன் முடிய இன்னும் ஐந்தே நொடிகள் என்னும் பொழுது அதுவரை சற்று அமைதியாக இருந்த வண்டிகள் சீறி பாய்வதற்கு தங்களை தயார் செய்துக்கொண்டிருக்க பிரபுவுக்கு மனது படபடத்தது. 

சுற்றியிருந்தவர்களின் வண்டிகள் கிளப்பிய பரபரப்பிலும், சத்தத்திலும் அவனும் பைக்கின் கிக்கரை உதைத்து ஸ்டார்ட் செய்து ரெடியாகவும், பச்சை சிக்னல் விழவும் சரியாக இருக்க கட்டவிழுந்த காளைகள் போல வண்டிகள் சீறி பாய்ந்துக்கொண்டிருந்தது.

பிரபுவுக்கு வீட்டுக்கு செல்வதா இல்லை சாக்லேட் நிற வண்டியில் இருப்பவளை யாரென்று கண்டுபிடிப்பதா என்ற குழப்பம் மேலோங்கி க்ஷண நேரத்தில் அவளை யாரென்று கண்டுபிடித்தே தீர வேண்டும் என்று அவன் புத்தி அறிவுறுத்தியது. அவளுக்கு இன்னும் பச்சை சிக்னல் விழவில்லை. அவள் எப்படியும் பிரபு செல்லும் சாலையில் தான் வளைந்தாக வேண்டும் என்பதால் பிரபு வண்டியை ஒரு ஜூஸ் கடையின் முன் நிறுத்தி வண்டியிலிருந்து இறங்காமல் அவளுக்காக ஒற்றை கால் கொக்கு போல தவமிருந்தான். 

அடுத்த சில நொடிகளிலேயே அவளின் சாக்லேட் நிற கார் அவனை தாண்டிச் செல்ல பிரபுவின் பைக் அவளை பின்தொடர்ந்தது. அந்த வண்டி சென்ற வேகத்திற்கு அவனின் வேகம் மிகவும் மட்டுப்பட்டிருக்க, அவனுக்கு முன் இரண்டு வண்டிகள் முந்திக்கொண்டன. ஆயினும் பிரபுவின் விழிகள் அந்த வண்டியை தனக்குள் சிறைப்படுத்தியபடி தொடர்ந்துக்கொண்டிருக்க மீண்டுமொரு சிக்னல். 

க்ஷண பொழுதில் சாக்லேட் கலர் கார் சிக்னலை கடந்துவிட பிரபு மீண்டும் சிக்னலில் மாட்டிக்கொள்ள அந்த வண்டி அவன் கண் முன்னே மின்னலாய் பறந்துக்கொண்டிருந்தது.

“ச்சே ஜஸ்ட் மிஸ்ஸு…” என்று கையை உதறினான் எரிச்சலுடன்.

“இன்னும் கொஞ்சம் வேகமாக வந்திருந்தால் நானும் சிவப்பு விழும்முன் சாலையை கடந்திருக்கலாம். ப்ச் இப்போ எங்கே போனாளோ, இது பச்சை விழுவதற்குள் கார் நிச்சயம் எங்கேயோ போயிருக்கும், இனி அவளை எங்கே போய் தேடுவது. யாராவள், ஒரு வேளை நான் நினைக்கிற மாதிரி அவள் ஹம்ஸினீ தானா ? இல்லை அவள் மாதிரி இருக்கிற வேறொருத்தியா என்று யோசித்துக்கொண்டிருந்தவனுக்கு அப்பொழுது தான் ஏதோ ஒன்று உறுத்தியது. அவன் பின் தொடரும் வரை நிதானமான வேகத்தில் சென்ற கார் சிக்னலை தாண்டியதும் சீறி பாய்ந்தது, ஏன் எதற்கு சீறி பாய வேண்டும் என்று குழப்பம் வந்தது.

அப்படியென்றால் நான் நினைத்த மாதிரி அவள் ஹம்ஸினீ தானா ? அவளும் என்னை பார்த்துவிட்டாளா ? அதனால் தான் என்னிடமிருந்து தப்பித்து ஓடுகிறாளா, ச்சே பச்சை துரோகி. அவளை சும்மா விட கூடாது என்ற கோபத்திலிருந்தவனுக்கு அவளை மறுபடியும் எங்கே எப்படி பார்ப்பதென்ற குழப்பம் எழுந்தது. அவளை பார்த்தே ஒரு வருடம் ஆகிறது, திடீரென்று முளைத்த மாதிரி வந்து நிற்கிறாள், எங்கே சென்றாள் இத்தனை நாட்களாக. 

அவளை பற்றிய எண்ணங்களில் மூழ்கியிருந்தவனுக்கு சட்டென்று இன்னொரு விஷயம் மூளையில் உதித்தது. அவள் காரில் சென்றது, அதுவும் அவளே ஒட்டிக்கொண்டு சென்றது தான் உறுத்தியது. ஹம்சினிக்கு கார் ஓட்ட தெரியுமா ? இதை எப்பொழுது கற்றுக்கொண்டாள். அவள் ஒட்டிக்கொண்டு செல்வது அவளுடைய காரா ? அவளுக்கு ஏது கார்… ? எப்பொழுது வாங்கினாள். அதை வாங்குகிற அளவுக்கு அவளுக்கு ஏது வசதி. 

ஹம்ஸினீயின் குடும்பம் ஏழை குடும்பம் இல்லை தான். அப்பர் மிடில் க்ளாஸ். ஆனாலும் தங்கள் ஒரே பெண்ணிற்கு கார் வாங்கி கொடுக்கிற அளவுக்கு அவள் அப்பன் சைனீஸ் மூக்குகாரன் நல்லசிவம் தாராள மனதுடையவன் இல்லையே. தண்ணீரில் வெண்ணை எடுக்கிற ரகமாச்சே. கல்லில் கூட நாரை உரிச்சிடலாம் அப்பப்பா அவள் அப்பனிடமிருந்து ஒரு பைசா தேறாது. நிச்சயம் அவள் வீட்டில் வாங்கி கொடுத்திருக்க வாய்ப்பில்லை யோசித்தபடியே சென்றவன் வண்டி ஓரிடத்தில் நிற்கவும் தன் சிந்தனைகளை தள்ளி வைத்துவிட்டு எந்த இடம் என்று நிமிர்ந்து பார்த்தான். 

அவன் வீட்டின் முன் தான் பைக் நின்றிருந்தது. சேனை கட்டிய குதிரை மாதிரி வண்டி வீட்டின் முன் நிற்கவும் தலையை குலுக்கி ஹம்ஸினீயின் நினைவுகளை தூர தள்ளி வைத்துவிட்டு உள்ளே சென்றான். 

மகனை கண்டதும் ஆவலாய் வரவேற்றார் பூங்காவனம். 

“வாடா பிரபு, ஏன் இன்றைக்கு லேட், சரியா ஆறரைக்கு எல்லாம் வீட்டில் இருப்பே …”

“ப்ச் இன்றைக்கு ஓவர் டிராஃபிக் அதான், சரி நான் பிரெஷ் அப் ஆயிட்டு வந்துடறேன்…” 

சொல்லிவிட்டு வேகமாக உள்ளே சென்றவனை தாயின் விழிகள் பின் தொடர்ந்தது. 

“என்னவாயிற்று இவனுக்கு, எப்பொழுதும் ஒரு சிரிப்பு அவன் முகத்தில் கூத்தாடும், ஆனால் இன்று வழக்கமில்லாமல் சலித்துவிட்டு போகிறான். ஆபிசில் ஏதும் டென்ஷனோ… ? 

அடுத்த அரைமணி நேரத்தில் குளித்து கைலியில் இறங்கி வந்தவன் ஒயர் பின்னிய சோஃபாவில் அமர்ந்து ரிமோட்டை கையில் எடுத்தவன் சற்று தயங்கினான்.

டிவியில் சத்யராஜின் தீர்ப்புக்கள் விற்கப்படும் படம் ஓடிக்கொண்டிருந்தது.

“ம்மா இந்த படம் நீ பார்க்கிறாயா ? இல்லை நான் மாத்திக்கலாமா … ? 

மகனின் இந்த கேள்விக்கு பூங்காவனத்தின் நெஞ்சு குளிர்ந்தது. அடுத்தவர்களின் விருப்பத்தை மதிக்காமல் தன் விருப்பத்தை மட்டுமே பெரிதாக நினைக்கும் இந்த காலத்து பிள்ளைகளிடமிருந்து பிரபு சற்று வித்யாசமானவன் தான். 

“நீ மாத்திக்கோ, நான் போரடிக்குதேன்னு பார்த்துட்டு இருந்தேன்…”என்றவாறு அவனெதிரில் காஃபியையும், வறுகடலையையும் கொண்டு வந்து வைத்தார்.

காஃபியை கையில் எடுத்தவன்,”கடலை வேண்டாம்மா …”என்றபடி காஃபியை பருக ஆரம்பித்தான்.

அப்படியே ஒவ்வொரு சேனலுக்கு குரங்கு மாதிரி தாவிக்கொண்டிருக்க பூங்காவனம் மகனுக்காக கொண்டு வந்து வைத்ததை எடுத்து கொறிக்க ஆரம்பித்தார். 

“என்னாச்சு பிரபு, உன் முகமே சரியில்லையே. ஆபிசில் ஏதேனும் பிரச்சினையாப்பா … ? 

தயங்கினாலும் அவரால் கேட்காமல் இருக்க முடியவில்லை. சேனலை மாற்றிக்கொண்டிருந்தவன் குடித்து முடித்த டம்பளரை கீழே வைத்துவிட்டு தாயின் பக்கம் திரும்பினான். 

“என் ஆபிசில் என்ன குறைச்சல். பாங்கில் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபிஸர். நல்ல வேலை, அதுவும் எனக்கு பிடித்த வேலை. யார் எனக்கு குடைச்சல் கொடுத்துவிட முடியும். அதெல்லாம் ஒன்றுமில்லை. ஆனால் வர்ற வழியில் அவளை பார்த்தேன்ம்மா, அதான் வர லேட் ஆயிடிச்சு…” 

“எவளை … ? 

“ம்ம்மா உனக்கு சபீனா போட்டு விளக்க வேண்டியதா இருக்கு. என்ன அம்மா நீ, எனக்கு எத்தனை பெண்களை தெரியும்… ?  என் காலேஜ் மேட், நான் கூட இங்கே அழைச்சிட்டு வந்திருக்கேனே… »

“ஓ …ஓ … சாரிடா அம்மா மறந்துட்டேன். ஹம்ஸினீயை சொல்றியா… ? அதுக்காக இப்படியா என்னை டேமேஜ் செய்யறது. சரி விடு, அவள் திடீர்ன்னு காணாம போய்ட்டாள்ன்னு சொன்னே, அப்புறம் இன்று எப்படி பார்த்திருக்க முடியும் ? ஒருவேளை அவள் தானோ ? இல்லை நீ சரியா பார்க்க…”என்று ஆரம்பித்துவிட்டு நிறுத்திக்கொண்டார்.

அவர் முகத்தில் குறும்பு கூத்தாடவும் மகன் செல்லமாக தாயை முறைத்துவிட்டு,”என்ன எனக்கு சரியா கண்ணு தெரியலைன்னு சொல்றியா ? அம்மா வர வர நீ ரொம்ப ஓவரா போறே …” 

“கோவப்படாதேடா ராசா, அம்மா சும்மா சொன்னேன் …”என்று சிரித்துவிட்டு,”சரி சொல்லு, எங்கே பார்த்தே, பேசினாயா … ? 

“ம்ஹீம் இல்லைம்மா, சிக்னலில் நிற்கும் பொழுது பார்த்தேன், அப்புறம் அவளை பாலோ செய்தேன், மீண்டும் ஒரு சிக்னலில் நான் மாட்டிக்கிட்டேன், ஆனால் அவள் பறந்துட்டாள்…”

“என்ன பறந்துட்டாளா, ஸ்கூட்டியில் வந்தாளா … ? 

“ப்ச் இல்லைம்மா, காரில் வந்தால், அதுவும் அவளே ஒட்டிக்கிட்டு வந்தாள். அதான் என் ஆச்சர்யமே…”

மகனின் ஆச்சர்யத்தை புரியாமல் நோக்க, மகன் தலையில் அடித்துக்கொண்டான் தாயின் முக பாவனையை கண்டு. 

“ஹையோ மக்கு அம்மா, நான் சொல்லியிருக்கேனே அவ அப்பா கடைஞ்செடுத்த கஞ்சன்னு. அந்தாள் எப்படிம்மா பொண்ணுக்கு இம்போர்ட்டட் கார் வாங்கி கொடுப்பாரு…”

“ஓ அதை சொல்றியா, சரிடா அவள் திடீர்ன்னு காணாமல் போய்ட்டேன்னு சொன்னியே, அப்போ அவள் எங்கேயாவது வெளிநாட்டுக்கு வேலை செய்ய போயிருக்கலாம். அந்த சம்பளத்தில் வாங்கியிருக்கலாமே. அப்படியும் இல்லையென்றால் அவளுக்கு திருமணமாகி இருக்கும், அவள் புருஷன் வாங்கி கொடுத்திருப்பார்.  இந்த காலத்தில் வண்டி வாங்குவதெல்லாம் ஆச்சர்யமாடா, எல்லோரும் உன்னை மாதிரி இருப்பாங்களா மக்கு பயலே…”

பதிலுக்கு தாய் மகனை வார பிரபு சிரித்தான். 

“ம்மா உனக்கு வால் நீண்டுட்டே போகுது, நான் கடன் வாங்கி கார் வாங்க மாட்டேன். இன்னும் இரண்டு வருஷம் ஆனாலும் சரி, என் பணத்திலேயே தான் கார் வாங்குவேன்…”

“நான் தர்றேனே பணம், நீ ஆசைப்பட்ட காரை வாங்கிக்கோயேன் பிரபு. எதுக்கு நீ கஷ்டப்படறே …”

ஆதங்கமாக கேட்ட தாயை கண்டு வாஞ்சையுடன் புன்னகைத்து அவரின் கன்னத்தை பிடித்து ஆட்டி செல்லம் கொஞ்சினான். 

“என்ன செல்ல அம்மாவே, எனக்கு தெரியாதா நீ பணம் தருவேன்னு. அப்பா நம்மை விட்டு போன பிறகு நீ கஷ்டப்பட்டு டீச்சர் வேலை செய்து என்னை வளர்த்து ஆளாக்கி ஒரு நல்ல வேலையில் உட்கார வைச்சிருக்கீங்க. இதுக்கும் மேலே உன்னை நான் எந்த விதத்திலும் கஷ்டப்படவிட மாட்டேன். உன் பணம் உன்னிடமே இருக்கட்டும். நான் என் சம்பாத்தியத்தில் வாங்கறேன் காரையும், வீட்டையும்…”

“ஏன் பிரபு உன் பணம், என் பணம்னு பிரிச்சி பேசறே, மனசுக்கு கஷ்டமா இருக்குப்பா…” 

தாயின் முக சுணுக்கத்தை தாங்க முடியாதவனாய், அவசரமாக தாயை சமாதானித்தான். 

“அச்சோ என்ன புஜ்ஜி, நான் அப்படி நினைப்பேனா. எனக்கு பண தேவை இருந்தால் உன்னிடம் தான் கேட்க போறேன். இப்போதைக்கு பணம் உன்னிடம் கையிருப்பு இருப்பது நல்லது தானேம்மா. பாருங்க நாம என்னமோ பேசிட்டிருந்தோம், அது அப்படியே டிராக் மாறி போச்சு. இப்போ எங்கே விட்டேன். ஆஹாங் அந்த ஹம்ஸினீ காரில் போனாள்ன்னு சொல்லிட்டிருந்தேன், அதுக்குள்ளே நீ டிராக் மாத்தி விட்டுட்டே. சரி உன் வாதப்படியே வர்றேன். அப்படியே அவள் வாங்கினாலும் அவள் அப்பன் வாங்க விட மாட்டானே. ஆனால் அவளுக்கு கல்யாணமான மாதிரியும் தெரியலையே… »

மகனின் சமாதானத்திலும், பேச்சிலும் மனம் குளிர்ந்து போனது பூங்காவனத்திற்கு. அதனால் என்னவோ சட்டென்று இயல்பு நிலைக்கு மாறி மகனின் தலையில் தட்டினார்.

“அதென்ன உனக்கு ஹம்ஸினீயின் மேல் கோபமிருந்தால் வயதில் பெரியவரான அவளின் அப்பாவை அவன் இவன்னா பேசறது, தப்பு பிரபு. என்ன தான் கஞ்சன் என்றிருந்தாலும் எல்லா நேரத்திலும் அப்படி இருக்க மாட்டாங்கப்பா. அதிருக்கட்டும் நீ ஹம்ஸினீயை பற்றி ஏதோ சொல்ல வந்தே, அதை விட்டு அவள் கார் வாங்கின கதையை பற்றி பேசிட்டு இருக்கே. விஷயத்துக்கு வாடா…”

தாய் வைத்த ஷொட்டில் தலையை கோதி அசடு வழிந்துவிட்டு,”அட ஆமாமில்லே, இப்போ நான் தான் தேவையில்லாததை பேசறேன். சரி சொல்றேன் …”என்று பேச துவங்கும் முன் அவனின் கைபேசி அலறியது.

டங்கா மாறி ஊதாரி புட்டுக்கின்னு நீ நாறி …”

திடிரென்று சத்தமாக பாடிய ரிங்க்டோனில் தூக்கிவாரி போட பூங்காவனம் கையில் வைத்திருந்த வறுகடலை தட்டு கீழே விழ கடலை சிதறியது.