UN NESATHTHIL VAAZHVEN NAANAGAVE …

அத்தியாயம்_ 13

ஒரு பெரிய கட்டிடத்தின் முன் கார் நிற்க இருவரும் இறங்கினார்கள். ஹம்ஸினீயின் விழிகள் டவர் மாதிரியிருந்த கட்டிடத்தை இன்ச் பை இஞ்சாக அலசிக்கொண்டிருந்தது.

“இது நம் சொந்த ஆபிஸ் இல்லை, இப்போதைக்கு வாடகைக்கு எடுத்திருக்கேன். இப்போ எடுத்திருக்கிற ப்ராஜெக்ட் முடிந்ததும் நமக்கென்று ஆபிஸ் கட்டிக்கொள்ளலாம் என்றிருக்கிறேன். ஓகே லெட்ஸ் கோ …” 

இருவரும் உள்ளே நுழைந்து கிரானைட்ஸில் பளபளத்த சுவர்களிடையே பதிந்திருந்த லிப்ட்க்காக பட்டனை அமுக்க, லிப்ட் தன் வாயை திறந்ததும் இருவரும் அதிலேறி தங்கள் தளத்திற்கு சென்றார்கள். 

“இது தான் நம் ஆபிஸின் தளம் ஹம்ஸினீ, ஏற்கனவே நம் ஆபிஸ் வேலைகளுக்கு ஸ்டாப்ஸ் ரெக்ரூட் செய்தாச்சு, மீதி பேர் சென்னை ப்ராஞ்சிலிருந்து வந்திருக்காங்க. வாங்க எல்லோரையும் அறிமுகப்படுத்தறேன்…” என்றபடி தன் ஆபிஸினுள் நுழைந்தான். 

வெளியிலிருந்து பார்க்க சிறியதாக தோன்றிய கட்டிடம் உள்ளே சென்றதும் தான் புரிந்தது அதன் நீள அகலம். மிக பெரிய ஆபிஸ். இருபக்கமும் ஸ்டாப்ஸ் அமர்ந்து வேலை செய்ய கண்ணாடி தடுப்பில் அமைந்த கேபின்கள். நடுவில் ஒரு பெரிய அறை. அதன் கதவில் பித்தளை தகட்டில் மிஸ்டர் கெளதம் சேர்மேன் என்று பளபளத்தது. 

எல்லோருக்குமே முதல் நாள் ஆபிஸ் என்பதால் யாரும் அவரவர் இடத்தில் அமராமல் கும்பலாக நின்றிருக்க கெளதம் வந்ததும் அவனுக்கு பொக்கே பரிசளித்து வரவேற்று ஆர்பரித்தார்கள். ஆட்களை ரெக்ரூட் செய்ததிலிருந்து, ஆபிஸ் அமைப்பதிலிருந்து எல்லாவற்றையும் செய்த விக்னேஷ் அவனின் சேர்மனுக்கு வாழ்த்து சொல்லி பொக்கே கொடுத்தான். அவனும் பதிலுக்கு எல்லோரையும் வரவேற்று ஒவ்வொருவருக்கும் கைகொடுத்து வாழ்த்து சொல்லி ஹம்ஸினீயையும் அறிமுகப்படுத்தியவன், விக்னேஷிடம்  அவரவர் கேபினை காட்டும்படி பணித்துவிட்டு ஹம்சினியுடன் தன் கேபின்க்கு சென்றான்.

“உங்க சீட் இங்கேயே இருக்கு ஹம்ஸினீ, இப்போ நாம சைட்டை போய் பார்க்கணும். அப்படியே ப்ராஜெக்ட் கொடுத்தவர்களோடு ஒரு மீட்டிங் இருக்கு. ஏற்கனவே கிரௌண்ட் ஒர்க்ஸ் எல்லாவற்றையும் விக்னேஷ் மூலம் செய்தாச்சு. இனி நம் வேலையை ஆரம்பிக்கணும். கிளம்பலமா …? 

பேசிக்கொண்டே போனில் யாரையோ அழைத்து பேசியபடி வெளியே நடக்க ஹம்ஸினீயும் அவனை தொடர்ந்தாள். மீண்டும் லிப்டில் பயணித்து கீழே வந்து காரில் ஏறி ஒரு சில நிமிடங்களில் போக்குவரத்தில் கலந்து நீந்தி மீண்டுமொரு பெரிய கட்டிடத்தின் உள்ளே நுழைந்து வண்டியை பார்க்கிங் செய்துவிட்டு இறங்க ஹம்ஸினீயும் இறங்கினாள். 

“இவங்க தான் நமக்கு ப்ராஜெக்ட் கொடுத்தவங்க. இவர்களோடு மீட்டிங் முடிச்சிட்டு அப்புறமாக சைட்டுக்கு போகலாம்…” 

பேசியபடி உள்ளே செல்ல உள்ளிருந்து வந்த கோட் போட்ட இருவர் கௌதமை இன்முகத்தோடு கைகுலுக்கி வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர். அவர்களுக்கு ஹம்ஸினீயை அறிமுகப்படுத்தி வைக்க அவளும் நாசூக்காக கைகுலுக்கினாள். 

அதன் பிறகு அவர்கள் கொடுத்த ப்ராஜெக்ட் ஷாப்பிங் மாலின் டிஸைன், அதில் எத்தனை தியேட்டர், எத்தனை கடைகள், எக்ஸ்லேட்டர், எலிவேட்டர், ரெஸ்ட்ரூம்ஸ், ரெஸ்டாரண்ட்ஸ், காஃபி பார், பிள்ளைகளுக்கு சிறிய பார்க், மற்றும் கேம்ஸ் பார் , கார் பார்க்கிங் ஆகியவற்றை பற்றி அலசி ஆராய்ந்து எப்படிப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்ற அவர்களின் அபிப்பிராயமும், இப்படியிருந்தால் நன்றாக இருக்குமென்ற கௌதமின் ஆலோசனைகளையும் கேட்டுக்கொண்டு எதெது எத்தனை சதுர அடியில் இருக்க வேண்டும் என்பதை கலந்தாலோசிக்க, ஹம்ஸினீ ஒன்று விடாமல் எல்லாவற்றையும் தன் ஐபேடில் குறிப்பு எடுத்துக்கொண்டாள். 

ஒரு வழியாக மீட்டிங் முடிய மதிய நேரத்தை தாண்டிவிட மீட்டிங்கை அரைகுறையாக முடிக்க மனமில்லாமல் வெறும் ஜூஸில் மதிய நேரத்தை கடந்து மீட்டிங்கை திருப்தியாக முடித்து எழுந்தனர். 

“ஓகே சார், உங்களிடம் ஒப்படைச்சிட்டோம். ஆவலோடு காத்திருக்கிறோம், பெஸ்ட் விஷேஸ்…”என்று ப்ராஜெக்ட் கொடுத்தவர்கள் கைகுலுக்கி வாழ்த்து சொல்ல கெளதம் நன்றி சொல்லிவிட்டு ஹம்சினியோடு வெளியே வந்து காரில் ஏறினான்.

“சாரி மதியம் லன்ச் டைம் தாண்டிடிச்சி…” என்று மன்னிப்பு கோரியவன் அவள் பதில் பேசுமுன் அருகிலேயே ஒரு சைவ ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான். 

அவனின் நோக்கம் புரிந்து,”சார் எனக்கு பசிக்கலை , நீங்க வேண்டுமென்றால் சாப்பிடுங்க …”

“எனக்கும் பசிக்கலை , ஆனால் இப்படியே விட்டால் வயிறு கெட்டுவிடும். சோ லைட்டா டிஃபன் சாப்பிட்டுட்டு போகலாம். சைட் இங்கிருந்து ரொம்ப தூரம். அங்கே சுற்றுவட்டாரத்தில் ஹோட்டல் எதுவும் இல்லை…” என்றவன் அவளிடம் கேட்டு ஆர்டர் கொடுத்தான். 

காத்திருந்த நேரத்தில் இப்பொழுது அபியை பற்றி இவரிடம் பேசலாமா ? பதில் சொல்வாரா … ? என்று மனதிற்குள் கேள்விகேட்டுக்கொண்டிருந்தவளிடம் கெளதம் சற்று முன் நடந்த மீட்டிங் பற்றி அபிப்ராயம் கேட்க சட்டென்று தன்னை சுதாரித்துக்கொண்டாள்.

கெளதம் கேட்ட கேள்விகளுக்கு அவள் பதிலளித்துக்கொண்டிருக்கும் பொழுதே அவர்கள் ஆர்டர் செய்த மெனு வந்துவிட இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு கிளம்பினார்கள். அதன் பிறகு அவர்களுக்கு நிதானமாக அமர்ந்து பேச நேரமோ, காலமோ அமையவே இல்லை. காலத்தின் காலில் யாரோ சக்கரம் கட்டிவிட்ட தினுசில் நாட்கள் காற்றாய் பறந்தது. 

இரவு தூங்க போகும் பொழுது வேலைகளை பற்றி பேசி விவாதித்து, பின் காலையில் எழும் பொழுதே என்னென்ன வேலைகள் இருக்கு என்று வரிசைகட்டி வைத்து அதற்கேற்ப வேலைகளை பிரித்து செய்ய என்று ஹம்சினியும், கௌதமும் பிசியாக ஓடிக்கொண்டிருந்தார்கள்.

கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள் ஒரு மாதம் சென்றுவிட்டிருந்தது. மால் கட்ட அரசாங்க ஆணை வாங்கி பூமி பூஜையை க்ராண்டாக நடத்தி வேலையாட்களை மேன்பவர் ஏஜென்சி மூலம் இறக்கி கட்டிட வேலைகளை தொடங்கி இருந்தது. ஒவ்வொரு நாளும் காலையில் ஆபிஸ் வந்து செய்ய வேண்டிய வேலைகளை முடித்துக்கொண்டு சைட்டுக்கு கிளம்பிவிடுவான். முக்கால்வாசி நேரங்களில் அவனுடன் ஹம்ஸினீயும் சென்றுவிடுவாள். ஒரு சில நேரங்களில் மட்டும் அவள் ஆபிஸில் இருக்கும்படி நேர்ந்துவிடும். சைட்டிலிருந்து ஆபிஸ் முடியும் நேரத்திற்குள் வந்துவிட்டால் கெளதம் அவளை வீட்டிற்கு அழைத்து வந்துவிடுவான். அப்படி வர முடியவில்லையென்றால் பக்கத்திலிருக்கிற டிராவல்ஸில் அவளுக்கென்று டாக்சியை புக் செய்துவிடுவான். 

நானே பார்த்துக்கொள்கிறேன் என்றாலும் கெளதம் விட மாட்டான். ஆரம்பத்தில் சூறாவளி போலிருந்த வேலை கட்டிடம் எழும்ப ஆரம்பித்ததும் வேலைகள் நிதானமாக செல்ல ஆரம்பித்தது. அந்த ஞாயிற்றுக்கிழமை ஹம்ஸினீ ஓய்வாக வீட்டிலிருக்க, கெளதம் காலையிலேயே எங்கேயோ கிளம்பிவிட்டிருந்தான். 

நிதானமாக தூங்கி எழுந்து குளித்துவிட்டு சரசம்மாவிடம் பேசிக்கொண்டே சாப்பிட்டு எழுந்தவள் சற்று காலாற தோட்டத்தில் நடந்துக்கொண்டிருந்தாள். இத்தனை நாள் வேலை பளுவில் அபியின் நினைவுகளை தற்காலிகமாக தள்ளி வைத்திருந்தாள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை வரும் பொழுதும் கௌதமிடம் சொல்லி அபியை பார்க்க அழைத்துச் செல்லுமாறு கேட்கவேண்டும் என்று நினைப்பதோடு சரி. ஆனால் வேலை அதற்கு சற்றும் இடம் கொடுக்கவில்லை.

ஆனால் இன்றும் முடியாது, தனக்கு தான் ஓய்வு, கௌதமுக்கு வேலை இருக்கத்தான் செய்தது, அதனால் தான் காலையிலே எழுந்து வேலையை பார்க்க சென்றுவிட்டான் என்று புரிந்தது. அபியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும் அவள் இருக்குமிடம் அவளுக்கு தெரியாது. அன்று அழைத்து சென்றபொழுது அவள் அந்த ஹாஸ்பிடலின் முகவரியையோ, பெயரையையோ சரியாக கவனிக்கவில்லை. கௌதமிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளலாம் என்றால் அவன் வேலை பளுவில் தொந்தரவு செய்ய மனமும் வரவில்லை. 

யோசித்தபடியே தோட்டத்தை சுற்றி சுற்றி வந்தவளுக்கு எங்கேயாவது வெளியே சென்றுவந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது. இன்னும் இரண்டொரு நாளில் புதுவருஷம் பிறக்க போகிறது. இதுவே அப்பாவும், அம்மாவும் இருந்திருந்தால் டிசம்பர் மாதம் பிறந்ததுமே கிருஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு ரெடியாக ஆரம்பித்துவிடுவார்கள். 

அவர்கள் ஹிந்து தான் என்றாலும் அவளை சிறிய வயதிலிருந்து சர்ச் பார்க் கான்வென்டில் படிக்க வைத்ததின் பலன் மகளுக்காக கிருஸ்துமஸ் விழாவை சிறப்பாக கொண்டாட வைத்தது. மகளுக்கு புத்தாடைகள், சின்ன சின்ன பரிசுகள், சிறப்பு உணவுகள் என்று அமர்க்களப்படும், அதே போல புது வருஷமும் சிறப்பாக கொண்டாடுவார்கள். 

ஒவ்வொரு புது வருஷமும் பொங்கல் வைத்து படைத்து, கோவிலுக்கு சென்று வருவது வழக்கம். ஒரே பெண் என்பதால் ஒவ்வொரு விழாவிற்கும் புத்தாடைகள் வாங்குவது உண்டு. நல்லசிவம் கொஞ்சம் பணத்தை இழுத்து பிடிக்கிறவர் தான், ஆனாலும் மகளின் உடைகள் விஷயத்தில் கஞ்சத்தனம் காட்டியதில்லை. நினைவுகள் சங்கிலி தொடராய் செல்ல மனதினுள் ஏக்கம் மண்டியது. இப்படியே யோசித்துக்கொண்டிருந்தால் பைத்தியம் தான் பிடிக்கும். 

ஷாப்பிங் போகலாம் என்று முடிவு செய்து கிளம்பி சரசம்மாவை அழைத்துக்கொண்டு வெளியே சென்றாள். 

இத்தனை நாள் கௌதமுடன் வெளியே சென்று வந்ததில் அவளுக்கும் நிறைய இடங்கள் தெரியவந்திருந்தது. எங்கே டாக்சி பிடிக்கவேண்டும், ஷாப்பிங் மாலுக்கு எப்படி போக வேண்டும் என்ற விஷயங்கள் ஓரளவுக்கு புரிந்திருந்தால் மிக சுலபமாக அவருடன் டாக்சியில் கமர்ஷியல் ஸ்ட்ரீட்க்கு சென்று இறங்கினார்கள். 

புது வருடமென்பதால் கூட்டம் கட்டியேறிக்கொண்டிருந்தது. காலாற நடக்க முடியவில்லை என்றாலும் கடைகளையும், கூட்டங்களையும், வேடிக்கை பார்த்துக்கொண்டே இரு பெண்களும் நடந்தார்கள். சரசம்மா அவருக்கு பிடித்த சிலதை வாங்கினார். அவளும் சரசம்மாவுக்கு புடவை வாங்கி கொடுத்தாள். அவளுக்கென்று எதுவும் வாங்க தோன்றாமல் வேடிக்கை பார்த்துவிட்டு அப்படியே நடந்து ஹோட்டலுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு பேசியபடி நடந்துவந்துக்கொண்டிருக்க ஓரிடத்தில் மீன்பாடி வண்டியில் நிறைய செடிகளை வைத்து விற்பனை செய்துக் கொண்டிருந்ததை பார்த்ததும் அவளின் கால்கள் பிரேக் போட்டது போல நின்றது.

வண்ண வண்ண ரோஜாக்களும், டாலியாக்களையும் கண்டதும் ஹம்ஸினீக்கு அதில் அபியின் முகம் தெரிய அவளையுமறியாமல் அவள் கால்கள் செடிகளை நோக்கி நகர்ந்தது.

சென்னை , பிரபு வீடு…

பள்ளிக்கு போய்விட்டு வீட்டை திறந்து உள்ளே சென்றவருக்கு உடம்பு சற்று அலுப்பாக இருக்க ஹாண்ட்பேகை வைத்துவிட்டு சேரில் சற்று ஆசுவாசமாக அமர்ந்தார். விடாமல் பெய்த மழையில் நனைந்தது வேறு உடலை முறுக்கி எடுத்தது. பள்ளியிலிருந்து ஆட்டோவில் வந்திறங்கினாலும் மழையில் ஆட்டோவில் ஏறும் பொழுதும், இறங்கும் பொழுதும் நனைந்துவிட்டிருந்தார்.

மகன் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவான், அவனுக்கு காஃபி தயாரிக்கணும் என்று தோன்றியதுமே அவருக்கு சூடாக ஏதாவது பணம் உள்ளே சென்றால் சற்று தேவலாம் போல தோன்ற உடனே எழுந்து பாத்ரூமை நோக்கி நகர்ந்தார். 

சற்று நேரத்திற்கெல்லாம் முகத்தை கழுவி துண்டால் துடைத்துக்கொண்டே வந்து பிரிட்ஜிலிருந்து பாலை எடுத்து வெட்டி பால் குக்கரில் ஊற்றி அடுப்பிலேற்றி விட்டு காலையில் ஊற போட்டுவிட்டு சென்ற கொண்டைக்கடலையை எடுத்து கழுவி பாதியை அவிக்க போட்டுவிட்டு மீதியை கொர கொரப்பாக அரைத்து , வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வடைக்கு ரெடி செய்தார். 

பால் பொங்கி வர தனக்கு காஃபியை கலந்து அதை பருகியவாறே அடுப்பில் வாணலியை வைத்து எண்ணையை ஊற்றி வடையை தட்டி போட்டு வேக வைத்து தட்டில் எடுத்து வைக்க பிரபுவின் குரல் கேட்டது. 

“ஹ்ம்ம் செம வாசனை தூக்குது, என்னம்மா செய்துட்டு இருக்கே…?  

வாசனையை ஆழ இழுத்தபடி சமையலறைக்கு வர சுட்டு வைத்த வடையை எடுத்து அவனுக்கு காட்டிவிட்டு ஒரு கடி கடித்தார். தனக்கு தான் தருகிறார் என்று ஆசையாக கையை நீட்டிய பிரபு ஏமாந்து போக உச்சு கொட்டினான். 

“என்ன அம்மா நீ, பையனுக்கு கொடுக்காமல் நீ சாப்பிடறே, ரொம்ப கெட்டு போயிட்டே பூங்காவனம் …”

“அழுக்கு மூட்டைக்கெல்லாம் சாப்பாடு கொடுக்க முடியாது, போய் கையை காலை கழுவிட்டு வா…” என்று அவனை கலாய்க்க, உன்னை வந்து வைச்சிக்கிறேன் என்று முணுமுணுத்துட்டு சென்றான். 

அடுத்த பத்து நிமிடத்தில் அரை ட்ரவுசரில் வந்த மகனிடம் சூடான காஃபியையும், வடை தட்டையும் கொடுத்துவிட்டு அவனெதிரில் வந்தமர்ந்தார். 

வடையை ரசித்து ருசித்துக்கொண்டிருந்தவனை சில நொடிகள் வாஞ்சையுடன் நோக்கியவருக்கு ஹம்ஸினீயின் நினைவு வந்தது. அவளுக்கு கடலைப்பருப்பு வடையை விட கொண்டைக்கடலையை செய்கிற வடை மிகவும் பிடிக்கும். அவளுக்காகவே அதிகம் செய்துக்கொடுப்பார். இன்றைக்கு காலையிலேயே அவள் நினைவு அதிகம் அவரை வாட்ட அதை சமாதானப்படுத்த கொண்டைக்கடலையை ஊரபோட்டுவிட்டு சென்றிருந்தார்.

“ஹம்ஸினீ எப்படி இருக்கா பிரபு, அவளிடம் பேசினாயா…?

வடையை ரசித்தபடி போனில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தவன் தாயின் பேச்சில் நிமிர்ந்தான். 

“நல்லா தான் இருப்பாள், ஏதாவது பிரச்சினை என்றால் கெளதம் சொல்லியிருப்பானே…? என்றான் அசட்டையாக. 

“அப்போ நீ அவளிடம் பேசலையா, என்னடா இது, என்னையும் பேசாதேன்னு சொல்லிட்டே, நீயும் பேசலைன்னா என்ன அர்த்தம். பெங்களுர் போனதும் உன் பொறுப்பையெல்லாம் கைகழுவி விட்டுட்டியா, சரி ஏதோ ஹம்ஸினீயும், கௌதமும் காதலிப்பாங்கன்னு சொன்னியே, அது எந்த லெவலில் இருக்கு, அதாவது தெரியுமா …?

தாயின் ஆதங்கத்திற்கு பிரபுவுக்கு சிரிப்பு தான் வந்தது.

“ம்மா ஹம்ஸினீக்கு தான் போன் செய்யலேன்னு சொன்னேன், ஆனால் கௌதமுக்கு போன் செய்வேன், மெசேஜ் அனுப்புவேன். அவன் ப்ராஜெக்ட் விஷயத்தில் ரொம்ப பிஸியா இருக்கான். ஹம்ஸினீயும் அவனுக்கு அசிஸ்ட் செய்யறதில் பிஸி. சோ இரண்டு பேரும் நல்லாத்தான் இருக்காங்க…”

“அது சரி கண்ணா நீ ஒரு நோக்கத்துக்காக ஹம்ஸினீயை அங்கே அனுப்பினாயே, அது என்னாச்சுன்னு சொல்லவே இல்லையே, ஏதாவது ப்ராகிரஸ் இருக்கா…?

தாயின் கேள்விக்கு உச்சு கொட்டினான். 

“அட போங்கம்மா நான் அப்படி நினைச்சி தான் அனுப்பினேன், ஆனால் சினிசியர் சிகாமணிங்க ரெண்டும் வேலை வேலைன்னு ஓடிட்டே இருக்குதுங்க…”

மகனின் அலுப்பிற்கு மௌன சிரிப்பில் குலுங்கியவர் மகனை ஓரக்கண்ணால் நோக்கிவிட்டு தொடர்ந்தார்.

“ப்ச் பேசாமல் பருத்தி மூட்டை குடவுனிலேயே இருந்திருக்கலாம் இல்லையா பிரபு…” 

தாயின் கேலிக்கு அவரை செல்லமாக முறைத்துவிட்டு,”மா இதெல்லாம் டூ மச், அவளுக்கென்று ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்னு தான் நான் இப்படி ஒரு வேலை செய்தேன். அது புரியாமல் நீங்களும் கலாய்க்கறீங்களே …”

“அதில்லை கண்ணா, ஹம்ஸினீக்கு ஒரு நல்ல வரனா பார்த்து நாம கல்யாணம் செய்து வைக்க மாட்டோமா? இப்போ பாரு நீ நினைச்ச விஷயம் ஒரு இல்லையில்லை அரை பர்சென்ட் கூட நடக்கலை. வட போச்சே மொமெண்ட் … “என்றார் உதட்டை பிதுக்கி.

“இல்லைம்மா எனக்கு நம்பிக்கை இருக்கு, ஒரு மாசம் தான் ஆகியிருக்கு. ஹம்ஸினீக்கும் மனதிலிருக்கிற ரணம் அவ்வளவு சீக்கிரம் எப்படி ஆறும், ஒரு வருடத்தில் பெற்றவர்களை அடுத்தடுத்து இழந்திருக்கிறாள். அந்த துயரம் தான் இப்போதைக்கு அவள் மனதை நிறைத்திருக்கும். லெட்ஸ் வெய்ட் அண்ட் சீ…”

“ஓகே உன் வாதபடியே வர்றேன், அவள் கௌதமை விரும்பலைன்னு ஒரு நிலைமை வந்தால் , என்ன செய்வே ? 

“யோசிக்க முடியலை, ஆனால் அவள் கௌதமை விரும்பணும், அதுவும் இயல்பா அவர்களுக்குள் நடக்கணும். அப்போ தான் ஹம்ஸினீ லைஃப் நல்லா இருக்கும்….” என்றான் யோசனையாக. 

“எது, இந்த கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ், பையாலஜி எல்லாம் நடக்கணுமா…? 

தாய் சொன்னதை கேட்டதும் பிரபு ஒரு நிமிடம் விழித்து பின் கடகடவென்று சிரித்தான். பூங்காவனம் விழிக்கவும் மேலும் அவனுக்கு சிரிப்பு பீறிட்டது. தாய் தன்னை முறைக்கவும், சிரிப்பை நிறுத்தி விளக்கம் கொடுக்கலானான்.

“ம்மா நீங்க சொன்னபடி கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் நடந்தால் ஓகே, ஆனால் பயலாஜி நடந்தால் அப்புறம் எனக்கு நீ ஆரம்பத்தில் கொடுத்த பட்ட பெயரை முத்திரை குத்திடுவாங்க…” 

சொல்லிவிட்டு மீண்டும் சிரிக்க பூங்காவனத்திற்கு அப்பொழுது தான், தான் சொன்னதின் அர்த்தம் புரிய, அசடு வழிய தன் தலையில் லேசாக தட்டிக்கொண்டு வெட்கத்துடன் மகனின் சிரிப்பில் கலந்துக்கொண்டார்.