UN NESATHTHIL VAAZHVEN NAANAGAVE …

அத்தியாயம்_ 25

பிரபு வீடு…

வாசலில் மகனின் வண்டி சத்தம் கேட்டு ஹாலிலிருந்து எட்டி பார்த்த பூங்காவனம் சமையலறைக்கு சென்று அடுப்பில் பாலை ஏற்றிவிட்டு இன்னொரு அடுப்பில் வாணலியை ஏற்றி எண்ணையை ஊற்றினார் பஜ்ஜிக்காக. 

உள்ளே நுழையும் பொழுதே தாயை அழைத்துக்கொண்டே வந்தவன் அவர் இந்நேரத்தில் வழக்கமாக இருக்கும் இடமான சமையலறைக்கு வந்தான். தாயை பார்த்ததும் ரெப்பிரேஷ் செய்துக்கொண்டு வரேன் என்று தன்னறைக்கு சென்று அடுத்த பதினைந்தாம் நிமிடம் உடைமாற்றிக்கொண்டு ஹாலுக்கு வர பில்டர் காஃபியின் மனம் நாசியை துளைத்தது.

மூச்சை ஆழ இழுத்து,”ஹ்ம்ம் நல்ல வாசனை…” என்று காபியை ஒரு சிப் பருகிவிட்டு சூடான பஜ்ஜியை எடுத்து கடித்தான். 

“பிரபு உன்னிடம் ஒரு விஷயம் சொல்லணும்…” என்று ஆரம்பித்த தாயை இடைமறித்தான். 

“அம்மா நானும் உங்களிடம் ஒரு விஷயத்தை சொல்லணும். அதுவும் ஒரு ஷாக் நியூஸ் …”

ஷாக் நியூஸ் என்றதும் அனிச்சை செயலாக பதறினார் பூங்காவனம் மகனுக்கு என்னவோ ஏதோ என்று. 

“பூங்காவனம் கூல் …கூல், ஷாக் நியூஸ் என்றேன் தவிர அது எனக்குன்னு சொல்லலையே… ? 

மகன் தன் பெயரை சொல்லி அழைக்கும் பொழுதெல்லாம் அவன் சந்தோஷமான மனநிலையில் இருக்கிறான் என்று அர்த்தம். ஆனால் இன்று ஷாக் நியூஸ் என்றுவிட்டு தன் பெயரை சுவாதீனமாக அழைக்க பெரியவர் குழம்பி போனார். ஆயினும் இன்று அவர் அனுபவித்த ஷாக் சம்பவத்தை மகனிடம் பகிர்ந்துக்கொள்ள அவசரப்பட்டார். 

“சரிம்மா நீயே சொல்லு, அப்படியென்ன அதிர்ச்சியான சம்பவம் நடந்தது உன் பள்ளியில். ஏதாவது மாணவி தற்கொலை செய்துகொண்டாளா ? அதுக்கு உன் பள்ளியின் முக்கிய பிரமுகர் யாராவது சம்மந்தப்பட்டிருக்காங்களா … ? 

“அடேய் முந்திரிக்கொட்டை, நான் என்ன சொல்லவர்றேன்னு தெரியாமல் நீயே ஒரு கதையை ரெடி பண்றே. என் அசட்டு மகனே நான் வேலை செய்யறது அரசு பள்ளி என்பதை சுத்தமா மறந்துட்டு பேசறே … ? 

தாயின் ஷொட்டில் அசடு வழிந்து,”அட ஆமாமில்லே …”

“ஆமாம் மட்டும் தான், உன்னையெல்லாம் எப்படிடா பேங்கில் வைச்சுக்கிட்டு குப்பை கொட்டறாங்க. வாயை மூடிட்டு காதை மட்டும் திறந்து வைச்சிட்டு நான் சொல்றதை கேளு. இன்றைக்கு என்னை தேடி ஒருத்தர் வந்தாங்க. யார் தெரியுமா ? என்றார் புதிர் போடும் விதமாக.

பிரபுவோ வாயில் வேண்டுமென்றே பஜ்ஜியை திணித்துக்கொண்டு கையை விரித்து தெரியாது என்று சைகை செய்து, உதட்டில் விரல் வைத்து பேசமாட்டேன் என சிரிப்புடன் அவன் தலையில் செல்லமாக குட்டிவிட்டு தொடர்ந்தார். 

“இதுவரை என்னை தேடி வராதவங்க, இன்று தேடி பேசணும்னு வந்தாங்க. அதான் நம்பமுடியாத ஆச்சர்யமா இருக்கு. அவங்க எப்படி இந்த முடிவுக்கு வந்தாங்க, நான் பேசினால் அவங்க விஷயம் சாதகமா முடியும்ன்னு…” 

எதிரில் அமர்ந்திருந்த மகனையே எதிர்க்கேள்வி கேட்க பிரபு திருதிருத்தான். 

“நீ இன்னும் விஷயத்திற்க்கே வரலை பூங்காவனம். என்னை பேசக்கூடாதுன்னு சொல்லிட்டு நீ வழ வழ கொழ கொழன்னு பேசிட்டு இருக்கே. நான் கொலை காண்டுல இருக்கேன்…”

மகன் நக்கலடிக்கவும் தன்னையே கொட்டிக்கொண்டு,”ஹய்யயோ இன்னும் விஷயத்தையே சொல்லலையா ? சாரி சாரி, இன்றைக்கு ஆங்கில வகுப்பு எடுத்துக்கிட்டு இருக்கும் பொழுது, கெளதம் அம்மா என்னை பார்க்க வந்தாங்க கண்ணா…” என்பதற்குள் பிரபு அதிர்ச்சியில் எழுந்தே விட்டான்.

அவனை புரியாமல் நோக்கிவிட்டு,”எனக்கும் இதே அதிர்ச்சி தான், ஆனால் நீ …”என பிரபு அவரை இடைமறித்தான். 

“கௌதமுக்கு ஒரு பெண்ணை பார்த்து வைச்சிருக்காங்க, அந்த பெண் பெயர் சுஹாஸினி, அவளை திருமணம் செய்துக்கொள்ள சொல்ல கௌதமிடம் சிபாரிசுக்கு போக சொல்லி கேட்டுக்க வந்திருந்தாங்க, அதானே… ? 

“உனக்கு எப்படி தெ… ? என்பதற்குள் மீண்டும் பிரபு குறுக்கிட்டான். 

“என்னையும் ஒருத்தர் வந்து சந்தித்தார், ஆ, ஆஹா நீ நினைக்கிற மாதிரி அந்தம்மா இல்லை, கௌதமின் அப்பா ராம் பிரசாத். அந்தம்மாவுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம், அதனால் என்னை தேடி வர வாய்ப்பே இல்லை. ஆனால் ராம்பிரசாத் அங்கிளின் வேண்டுகோளே வேறு…”

“என்னவாம் …? 

“மனைவி ஜபர்தஸ்தாக மகனுக்கு பார்த்த பெண்ணை கெளதம் தலையில் கட்டுவது அவருக்கு பிடிக்கவில்லை. அதனால் எப்படியாவது கௌதமிடம் சொல்லி இந்த திருமணத்திற்கு சம்மதிக்க கூடாதுன்னு சொல்ல சொன்னார். இன்னொன்றும் சொன்னார், என்னை மாதிரி என் மகனும் பணத்தை மட்டுமே மோஹிக்கிற பெண்ணிடம் மாட்டிக்க கூடாதுன்னும் சொன்னார்…”

“அடியாத்தி, என்ன கூத்து கண்ணா இது ? அந்தம்மாவுக்கு எதிர்மறையா சொல்லியிருக்கார் அந்த மனுஷன். போதத்திற்கு நாம ஒரு கணக்கு போட்டு வைச்சிருக்கோம். ஹையோ பாவம் அந்த பிள்ளை. சரி கௌதமிடம் விஷயத்தை கன்வே பண்ணிட்டியா … ? 

“ப்ச் இல்லைம்மா, நான் வீட்டுக்கு வரும் பொழுது தான் என்னை சந்திச்சி பேசினார். இனி தான் சொல்லணும். அவன் இப்போதைக்கு ஆபிஸ் வேலையா சைட்ல சுத்திக்கிட்டு இருப்பான். சீக்கிரமே அவனிடம் சொல்லி நித்யாதேவியின் பிளானை ஊத்திக்க வைக்கணும். கடவுளே அந்தம்மா ஏன் தான் இப்படியெல்லாம் செய்யுதோ. சரியான மெண்டல் கேஸ் போலிருக்கு…”

“அப்படி ஏண்டா சொல்றே ? ஒரு தாய்க்கு மகனை கல்யாண கோலத்தில் பார்க்கணும்ன்ற ஆசை இருக்கத்தானே செய்யும். அவள் எப்படிப்பட்டவள் என்றாலும் தாய் தாய் தானே…”

“ம்ம் மண்ணாங்கட்டி, அட போ பூங்காவனம் ? எல்லோரும் உன்னை மாதிரி வெள்ளேந்தியா இருப்பாங்கன்னு நினைக்காதே. அந்தம்மாவின் கணக்கே வேறு. அதான் அவசரசரமா ஒரு பெண்ணை பார்த்து கெளதம் தலையில் கட்ட முயற்சி செய்யுது. அர்ரகண்ட் லேடி …”

“நீ சொல்றது புரியலை… ? 

“சிம்பிள்ம்மா, நீ ஆரம்பத்தில் சொன்னியே நாம ஒரு கணக்கு போட்டு வைச்சிருக்கோம்ன்னு, விஷயமே அது தான். ஹம்ஸினீ அங்கு கௌதமுடன் தங்கியிருப்பது எப்படியோ அந்தம்மா காதுக்கு விஷயம் போயிருக்கு. அதான் இப்படி ஒரு ஏற்பாடு. இத்தனை நாள் இல்லாத பிரெண்டோட பெண் இப்போ திடீர்ன்னு வந்து குதிச்சிருக்காள்…”

“ஓ ! 

“ஆமா ஓ தான். நாம அனுப்பின ஆள் சரியான மக்கு சாம்பிராணி. கெளதம் மனசுல அவள் இடம் பிடிச்சிட்டாள். ஆனால் நம்ம மக்கு மனசுல கெளதம் இல்லை…”

“உனக்கு எப்படி தெரியும் … ? என்றார் தலையை குருவி மாதிரி சரித்து. 

“கெளதம் பேசும் பொழுது ஜாடை மாடையா சொன்னான். அபியை கவனிச்சிக்க ஹம்ஸினீயை வீட்டிலேயே இருக்க சொல்லி இருக்கான். அவளுக்காக என்ன வேண்டுமெனாலும் செய்ய தயாராயிட்டான் என்றால் என்ன அர்த்தம். அவனுக்கு ஹம்ஸினீயை பிடிக்காமல் தான் செய்கிறானா ? ஆனால் ம்மா கௌதமும் சரியான கல்லுளி மங்கன். எதையும் வாய் திறந்து சொல்லமாட்டான்…” என்று அர்ச்சித்தான். 

காஃபி டம்பளரை சேகரித்துக்கொண்டே எழுந்தவர்,”ஹ்ம்ம் என்ன செய்வது நான் பெத்ததுக்கு மட்டும் ஒழுகு வாயா இருக்கு. போதத்திற்கு மனக்கதவு துருபிடிச்சி போச்சு போல. அதான் எந்த பெண்ணாலும் திறக்க முடியாமல் கெடக்கு…” 

மகனை ஓரக்கண்ணால் பார்த்தபடி அவனை கலாய்த்துவிட்டு நமுட்டு சிரிப்புடன் அகல, பிரபுவுக்கு முதலில் தாய் சொன்னதின் அர்த்தம் புரியவில்லை. கௌதமுக்கு அழைக்கலாம் என்று அவன் நம்பரை எடுத்து அதை அழுத்த போகும் பொழுது தான் தாயின் பேச்சு புரிய கோபம் வருவதற்கு முன் சிரிப்பு வர வாய்விட்டு சிரித்தபடி கௌதமுக்கு அழைத்தான்.

பெங்களுர் …

“சரி பிரபு நான் வீட்டுக்கு போன பிறகு பேசறேன். இப்போ ஆபிசில் இருக்கேன் …” 

கைபேசியை அணைத்துவிட்டு தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவனுக்கு பிரபு சொன்னதை கேட்டு தாயின் மேல் கட்டுக்கடங்காத கோபம் எழுந்தது. 

‘என்னை என்ன நினைச்சிட்டு இந்த மாதிரி வேலையெல்லாம் செய்துட்டு இருக்காங்க. என் வாழ்க்கையில் மூக்கை நுழைக்க இவங்க யார் ? அந்த தைரியம் எப்படி வந்தது ? இம்முறை இவங்க நினைப்பை ஜெயிக்க வைக்க கூடாது. அண்ணன் இறந்ததுக்கும், அபியின் இத்தனை வருட போராட்டத்திற்கும் இவங்க பதில் சொல்லியே ஆகணும். 

அபியின் நினைவு வந்ததுமே அவளுக்கு நினைவு வந்த தருணம் மனக்கண்ணில் படமாக ஓடியது. அவளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றதும் அபியின் விழிகள் அந்த வீட்டை அச்சத்துடன் துழாவியது. 

“இது யார் வீடு, கெளதம் நீங்க இங்கே என்ன செய்யறீங்க … ? உங்களுடன் என்னை உங்கம்மா பார்த்தால் மீண்டும் தவறா பேசிட போறாங்க. அப்புறம் அப்பா இதையும் திரிச்சி பேசி என்னை அசிங்கப்படுத்துவார். ப்ளீஸ் இங்கிருந்து போய்டுங்க …” 

அவளின் பதட்டம் எதற்கு என்று புரிந்ததும் அவளை தன்னறைக்கு அழைத்து சென்றாள் ஹம்ஸினீ. சக்கர நாற்காலியிலிருந்து எழுப்பி அவளின் தோளை அணைத்து மெல்ல நடக்க வைத்து கட்டிலில் அமர்த்தினாள். இத்தனை நாள் படுத்தே கிடந்ததாலும், சக்ர நாற்காலியில் அமர்ந்து இருந்ததாலும் நடையே மறந்து போன மாதிரி இருக்க, நாலு அடி எடுத்து வைப்பதற்குள் திணறி போனாள். அவள் பக்கத்தில் அமர்ந்த ஹம்ஸினீ தங்கையின் கையை தன் கைக்குள் சிறையெடுத்து,”நான் சொல்றதை உணர்ச்சி வசப்படாமல் கேளு அபி. நாம இப்போ இருப்பது கௌதமின் வீடு…” 

ஹம்ஸினீ சொல்லி முடிப்பதற்குள் அபியின் தேகம் அதிர்ச்சியில் குலுங்க, விழிகள் பயத்தில் விரிந்தது. 

“எ…என்ன…சொல்றே …ஹம்ஸினீ …” திக்கி திணறினாள்.

“ஆமாம் நீ தற்கொலை செய்துக்க போன பொழுது கெளதம் உன்னை காப்பாற்றியது நினைவில் இருக்கா…? 

அவள் கேட்டதும் அபி ஆமாம் என்பதாக தலையை உருட்டியதும்,”அவர் உன்னை அவர் வீட்டுக்கு அழைச்சிட்டு போனது, அங்கு நடந்தது எல்லாமே உனக்கு தெரியும். மீண்டுமொரு தற்கொலை முயற்சியிலிருந்து உன்னை போராடி காப்பாற்றி கொண்டு வந்து இங்குள்ள அசைலத்தில் உன்னை சேர்த்து சிகிச்சை கொடுத்து வந்தார் கெளதம். பாவம் அவருக்கு தன்னால் தானே உனக்கு இந்த நிலைமை என்ற கவலை கழிவிரக்கம், குற்ற உணர்ச்சி எல்லாம்…”

“ஆனால் நீ எப்படி … ? என்றாள் யோசனையாக. 

“நான் அவரின் ஆபிசில் செயலாளராக இருக்கிறேன். ஒரு ப்ராஜெக்ட்க்காக இங்கேயே தங்க வேண்டிய சூழ்நிலை. உன்னை பார்க்க வந்த பொழுது என்னையும் அழைச்சிட்டு வந்தார். அப்பொழுது தான் நான் உன்னை பார்த்தேன். அதுவரை நான் உன்னை தேடிட்டே இருந்தேன். நீ எங்கே போனாய் என்று தெரியலை. உன்னை பார்த்ததும் இருவரும் முடிவு செய்து உன்னை இங்கே கொண்டு வந்துட்டோம். உன்னை கவனிச்சிக்க என்று என்னை ஆபிஸ் கூட வரவேண்டாம்ன்னு சொன்னவர் கெளதம். ஹீ இஸ் நைஸ் ஜென்டில்மேன் …”

“என்ன யார் ஜென்டில்மேன், அபி என்ன சொல்றாங்க ஹம்ஸினீ…” என்றவன் அவர்கள் எதிரில் இருந்த சேரில் அமர்ந்தான். 

“அபி பயப்படறா கெளதம், இந்த வீடே உங்களுடையது தான் சொல்லிட்டிருந்தேன்…”

கௌதமின் விழிகள் அபியை நோக்க, அவளுக்கோ நடந்த விஷயங்கள் ஒவ்வொன்றாய் நினைவு வந்தது போலும், தலையை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு வலியில் முனக சட்டென்று எழுந்தான். 

“ஹம்ஸினீ உன் தங்கையை அதிகம் யோசிக்க விடாதே. எல்லாவற்றையும் இன்றே பேசியாகணும்னு இல்லை. நாளை பார்த்துக்கலாம். முதலில் அபி ரெஸ்ட் எடுக்கட்டும். பார்த்துக்கோ…”என்றவன் கதவை மூடிவிட்டு வெளியேற ஹம்ஸினீயின் மனது மடியில் இருத்திய குழந்தையாய் அவனை நோக்கி நழுவி சென்றது.

உடையை மாற்றிக்கொண்டு மாமர ஊஞ்சலில் அமர்ந்து போனில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தவன் மெல்லிய காலடி ஓசையில் விழிகளை நிமிர்த்தினான். தயங்கி தயங்கி வந்துக்கொண்டிருந்தவளின் முகத்தில் சிறு சஞ்சலமும், எதையோ பேச துடிப்பதும் தெரிய தனக்குள் புன்னகைத்துக்கொண்டான்.

“வா ஹம்ஸினீ, உட்கார் …”என்று ஊஞ்சலிலிருந்து எழ முயற்சிக்க அவனை அங்கேயே அமர சொல்லிட்டு அவன் எதிரிலிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தாள்.

“அபி தூங்கிட்டாளா… ? பாவம் சுய நினைவு வந்து இந்தளவு அவள் பேசியதே அதிகம்…” என்றான் பரிதாபத்துடன்.

மடியில் கைகளை கோர்த்து கெளதம் பேசியதை கேட்டுக்கொண்டிருந்தவளுக்கு அபி பேசியதில் ஒரு வித கூச்ச உணர்வும், குற்ற உணர்வும் கலந்தடித்தது. ஆனால் இவன் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அபிக்காக யோசிக்கிறானே… ? 

“என்னாச்சு ஹம்ஸினீ, ஏதோ சொல்ல நினைக்கிறே போல. எதுவாக இருந்தாலும் சொல்லு …”

என்றைக்கு அவன் தன்னை பெயர் சொல்லி அழைக்க சொன்னானோ அன்றே ஒருமையில் தான் அவளை அழைக்க ஆரம்பித்திருந்தான். ஹம்ஸினீக்கு அது பெரிதாகவே தோன்றவில்லை. சொல்ல போனால் அவன் அப்படி அழைப்பதை மிகவும் விரும்பினாள்.

“சாரி கெளதம், இது உங்க வீடு… அது தெரியாமல் …அபி உங்களை வெளியே போக சொல்லிட்டாள்…. தவறா நினைச்சிக்காதீங்க …” 

திக்கி திணறி எப்படியோ சொல்ல வந்ததை சொல்லி முடிக்க கெளதம் ஏதோ பெரிய ஜோக் கேட்ட மாதிரி சிரிக்க ஆரம்பித்தான். 

அவன் சிரிப்பதையே கேள்வியாக பார்த்துக்கொண்டிருந்தாலும் அவளின் உள் மனது அவனின் அழகிய கவர்ச்சியான சிரிப்பை ரசித்துக்கொண்டிருந்தது. பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை முறைச்சு பார்க்கிற மாதிரி அவனையே பார்த்துக்கொண்டிருக்க கௌதமின் சிரிப்பு சுவிட்ச் போட்ட மாதிரி நின்றது. 

“அபி தெரியாமல் சொல்லிட்டாள், அதிருக்கட்டும், இது உங்க வீடுன்னு சொன்னியே, இது நம்ம வீடுன்னு சொல்ல கூடிய உரிமையை நீ என்னிடம் எடுத்துக்கலாமே. எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை…” என்றான் கண்ணில் சிரிப்புடன். 

“ப்ச் அதுக்கென்ன சொல்லிட்டா …”என்றவள் சட்டென்று நிறுத்தினாள்.

“நீ…நீங்க என்ன சொன்னீங்க… ? என்றாள் புரியாமல்.

“நீ சரியா தான் கேட்டே. நான் சொன்னதின் அர்த்தம் உனக்கு புரிஞ்சது. பதில் சொல்லு ஹம்ஸினீ. எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. உனக்கும் என்னை பிடிக்கும். என்னை திருமணம் செய்துக்குவியா… ? 

கெளதம் சட்டென்று கேட்டதும் ஹம்ஸினீயின் வார்த்தைகளை யாரோ திருடிக்கொண்டு சென்றது போல விழி விரித்து திருதிருத்தாள். ஊஞ்சலிலிருந்து இறங்கி அவளருகில் அமர்ந்து அவளின் கன்னத்தை மென்மையாக தட்டிவிட்டு அவள் கையை சிறையெடுத்தான்.

அவனின் ஒவ்வொரு செய்கைகளையும் நம்பமுடியாத இனிய அதிர்வோடு சிவந்த இதழ்கள் லேசாக பிளவு பட்டிருக்க அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.