UN NESATHTHIL VAAZHVEN NAANAGAVE …

அத்தியாயம் _ 24

பெங்களுர்…

“ஸார் என்ன சொல்றீங்க, அபியை கவனிக்க நான் வீட்டிலேயே இருக்கணுமா? அப்படியென்றால் உங்க ஆபிஸ் வேலைகள் தடைபடுமே …? 

அவளின் ஆச்சர்யத்திற்கும், நம்ப முடியாமல் கேட்டதிற்கும் மென்மையாக சிரித்தான். 

“முதலில் என்னை சார்ன்னு அழைப்பதை நிறுத்து ஹம்ஸினீ. நீ வந்த அன்றே என்னை பெயர் சொல்லி அழைக்க சொன்னேன். சிம்ப்ளி கால் மீ கெளதம்…”

கொஞ்சமும் பிகு செய்யாமல், “ஷியூர் கெளதம்…” என்றாள். 

அவளின் அழைப்பில் புன்னகைத்துவிட்டு,”ஹ்ம்ம் சௌண்ட்ஸ் குட், உன்னை இங்கே ஆபிஸ் வேலையாக அழைத்து வந்து விட்டு உன் வேலைகளையும் சேர்த்து நான் பார்ப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கு. ஒன்று அபி நல்லபடியா குணமாகணும். அவள் மனநிலையில் மெல்ல மெல்ல மாற்றங்கள் உண்டாவதை நம்மால் உணர முடிகிறது. இந்த சமயத்தில் அவளுடைய அக்காவான நீ அவள் பக்கத்தில் இருந்தால் அவளின் மனமாற்றத்தில் முன்னேற்றம் உண்டாகி சீக்கிரமே அபி குணமாகிவிடுவாள்…”

“எஸ் எக்ஸாட்டலி கெளதம், சரி இன்னொரு காரணம் ….? 

ஹம்ஸினீயின் கேள்விக்கு பதில் சொல்லாமல் சன்னமாக புன்னகைத்துவிட்டு,”நேரம் வரும் பொழுது சொல்றேன். நாளைக்கு ஒரு மீட்டிங் இருக்கு. அதற்கு ப்ரசன்டேஷன் தயாரிக்கணும். நீ போய் அபியை கவனி …” என்று எழ அவனை அழைத்து நிறுத்தினாள். 

“நான் ஒன்று சொல்லலாமா கெளதம்…? 

“ஹ்ம்ம் …”

“நீங்க பெரிய மனது பண்ணி என்னை அபியை கவனிக்க சொன்னதே எனக்கு ரொம்ப சந்தோஷம் தான். ஆனால் செயலாளராக வந்துட்டு உங்களுக்கு உதவாமல் வெட்டியா வீட்டில் இருப்பது எனக்கே ஒரு மாதிரி இருக்கும். உங்களுக்கு தேவையான மீட்டிங் அரேன்ஜ்மெண்ட், ப்ரசென்டேஷன், மற்ற சின்ன வேலைகளையெல்லாம் நான் செய்து கொடுக்கிறேனே. வேண்டாம்ன்னு சொல்லிடாதீங்க கெளதம் ப்ளீஸ் …”

அவளின் அழைப்பில் தன் பெயரே புதுவிதமாக தோன்ற அவள் பேசுவதை சுவாரசியமாக கேட்க ஆரம்பித்தவன் அவளின் நிபந்தனையை கேட்டு ஆச்சர்யம் வரவில்லை. மிகவும் சுயமரியாதை உடையவள், வேலை செய்யாமல் சம்பளத்தை வாங்கி கொள்ள மாட்டாள் என்று தெரிந்திருந்ததால் அவன் அனுமதியை சிறு புன்னகையில் வெளிப்படுத்தியவன் தயாரிக்க வேண்டிய ப்ரசன்டேஷனை பற்றி சொல்லிவிட்டு மாடியேற ஹம்ஸினீயின் விழிகள் அவனை முதல் முதலாக வித்யாசமான கோணத்தில் பார்க்க ஆரம்பித்தது. 

நொடிகள், நிமிடமாகி, நிமிடம் மணியாகி, மணி நாட்களாக உருவெடுத்து நான்கு வாரங்களை கடந்துவிட்டிருந்தது. ஹம்ஸினீ முன் போலன்றி கௌதமிடம் மிகவும் சகஜமாக பேசலானாள். வீட்டிலிருந்து அபியை கவனித்துக்கொண்டாலும் கௌதமின் ஆபிஸ் வேலைகளுக்கு உதவியாக இருந்தாள். 

நர்ஸ், சரசம்மா உதவியுடன் அபியை ரூமிலிருந்து கீழிறக்கி தோட்டத்திற்கு அழைத்து வந்து அவளை வெளிக்காற்றில் அமரவைத்து பழைய நினைவுகளை அவளுடன் பகிர்ந்துக்கொள்வாள். அபி பேசவில்லை என்றாலும் ஹம்ஸினீ பேசுவதை கண்கொட்டாமல் கேட்டுக்கொண்டிருப்பாள். சில சமயம் ஹம்ஸினீயின் கைகளை இறுக்கமாக பற்றிக்கொள்வாள். ஹம்ஸினீ சொல்லும் பழைய கதைகள் அவளின் விழிகளில் கண்ணீரை துளிர்க்க வைக்கும். 

கெளதம் அவளை வெளியே அழைத்துச் செல்ல சக்ர நாற்காலியை வாங்கி வந்து கொடுத்ததோடு நில்லாமல் லீவு நாட்களில் ஹம்ஸினீயோடு அபியை வெளியே அழைத்து செல்வான். பார்க்கிற்கு அழைத்துச்சென்று சக்ர நாற்காலியில் வைத்து அவளை தள்ளியபடி ஹம்சினியோடு பேசிக்கொண்டு பார்க்கை சுற்றி வருவான். 

ஒரு நாள் இதே போல ஜெய பிரகாஷ் நாராயணன் பார்க்கிற்கு சென்று அபியை சக்ர நாற்காலியில் தள்ளியபடி கௌதமும், ஹம்ஸினீயும் பேசிக்கொண்டே நடந்துக்கொண்டிருக்க ஹம்ஸினீயின் கை மீது அபியின் கை படிந்து அழுத்தியது. பேச்சு சுவாரஸ்யத்தில் ஹம்ஸினீ அபியை கவனிக்கவில்லை. 

“கெளதம் உங்களிடம் ஒரு விஷயத்தை கேட்கணும்னு நினைப்பேன், ஆனால் அடிக்கடி மறந்துபோயிடறேன். இப்போ நினைவு வந்துடிச்சி. கேட்டால் தப்பா நினைக்க மாட்டீங்களே…? என்றாள் பீடிகையோடு. 

“பீடிகை எல்லாம் பலமா இருக்கு, அப்படி என்ன கேட்க போறே…? என்றான் ஒற்றை புருவத்தை லேசாக உயர்த்தி. 

“பூங்காவனம் ஆன்ட்டி உங்களை பற்றி சொல்லும் பொழுது நீங்க இங்கே தான் உங்க மாஸ்டரை முடித்ததாக சொன்னாங்க. அவ்வளவு ஏன் அபியை நீங்க பெங்களூரில் அதாவது இங்கே படிக்கும் பொழுது உங்கள் ஜூனியராக சந்திச்சதாக சொன்னீங்க…”

“சோ வாட்ஸ் யுவர் பாயிண்ட் …? 

“அதுக்கு தான் வர்றேன், பொதுவா பணக்கார பொண்ணுங்களாகட்டும், பசங்களாகட்டும் தங்கள் மேற்படிப்பை வெளிநாட்டில் அது லண்டனோ, அமெரிக்காவோ, ஆஸ்திரேலியாவோ ஏதோ ஒரு நாட்டிற்கு சென்று படிப்பார்கள். ஆனால் நீங்க ராஜ பரம்பரையை சேர்ந்தவர். பணத்திற்கும் பஞ்சமில்லை. ஆனால் உங்கள் மேற்  மேற்படிப்பை இந்தியாவிலேயே படிச்சிருக்கீங்களே? அதான் ஆச்சர்யமா இருக்கு? ஏன் கெளதம் …? 

அவளின் கேள்விக்கு சில நிமிடங்கள் யோசனையாக இதழை கடித்தவன் அபி மேல் ஒரு பார்வையை வைத்தபடி சொல்ல ஆரம்பித்தான். 

“எங்க வீட்டில் நாங்க மூன்று பிள்ளைங்க, அதில் நானும் அண்ணனும் ரொம்ப எளிமையான குணமுடையவர்கள். அதாவது என் தந்தை மாதிரி. அவர் கோடீஸ்வரனாக இருந்தாலும் மிகவும் எளிமையானவர். ஆனால் என் தங்கை ரித்யா அப்படியே நித்யா தேவி மாதிரி…” என்றான் சிறு கசப்புடன். 

“ஓ உங்க அம்மா பெயர் நித்யாதேவியா ? தங்கை பெயரும் அழகா இருக்கு …” என்றாள் சிலாகிப்பாக.

கசப்புடன் புன்னகைத்து,”நல்ல பாம்புக்கு என்ன பெயர் வைத்தால் என்ன …? 

“என்ன கெளதம் இப்படியெல்லாம் சொல்றீங்க ? அந்தளவுக்கா அவங்களை வெறுக்கறீங்க …? 

முக இறுக்கத்துடன்,”உனக்கு நான் ஏன் இங்கேயே படிப்பை முடிச்சேன்னு தெரிய வேண்டுமா, இல்லை நித்யாதேவிரெட்டி பற்றி தெரிய வேண்டுமா …? 

அவனின் வெறுப்பை புரிந்து,”சாரி சொல்லுங்க …” என்றாள் 

“அவங்க என்னை சிறு வயதிலேயே லண்டனுக்கு அனுப்பி படிக்க வைக்க முயற்சி செய்தாங்க. அதற்கு என் தாத்தா ஜெகவீர ரெட்டியும் அங்கே ஒரு வீடு வாங்க முயன்றார். வாங்கவும் செய்தார். ஆனால் நான் வெளிநாடு போக மறுத்துட்டேன். காரணம் பிரபு. என்ன அப்படி பார்க்கிறே ஹம்ஸினீ. பிரபு என் சிறு வயது தோழன்னு உனக்கு தெரிஞ்சிருக்கும். அவன் என்னுடன் இருந்ததால் தான் இந்தளவு உயிர்ப்புடன் இருக்கிறேன். இல்லையென்றால் எப்பொழுதோ எனக்கு வாழ்க்கையே வெறுத்து சன்யாசியாய் போயிருப்பேன். 

பணம் ஒரு போதை வஸ்து ஹம்ஸினீ. அதற்கு அடிமையானவர்களுக்கு மனிதர்களின் மன உணர்வுகள் புரியாது. அதை நித்யா தேவி, ரித்யா, ஜெகவீர ரெட்டி இவங்க மூன்று பேரிடம் பார்த்து பார்த்து அதன் மீது ஒரு வெறுப்பு வந்துவிட்டது. நித்யா தேவியிடம் கணக்கில்லாத பணம், நகைகள், அசையா சொத்துக்கள் என்று அத்தனையும் இருந்ததால் என்னவோ அவருக்கு அவர்களை சேர்ந்தவர்களை தவிர மற்றவர்களை ஒரு மனிதனாக கூட மதிக்க மாட்டார். 

சில சமயம் அப்பாவையே மட்டம் தட்டுவார். இத்தனைக்கும் என் அப்பா கோடீஸ்வரன். அவரை விட பலமடங்கு பணம் வைத்திருக்கிற திமிர், ஆணவம், அகங்காரம். அது தான் எல்லோரையுடைய வாழ்விலும் மூக்கை நுழைக்க வைத்திருக்கு. ப்ச் அதை விடு. என்ன சொல்லிட்டிருந்தேன் பிரபு பற்றி தானே.  என் சிறு வயதில் வீட்டின் ஆடம்பர உணவை புறக்கணித்து அவன் வீட்டில் தான் அதிகம் சென்று சாப்பிட்டிருக்கிறேன். பூங்காவனம் ஆன்ட்டி என்னையும் அவங்க பிள்ளை போல பாசத்தை காட்டுவாங்க. நல்லது கெட்டது சொல்லி தருவாங்க. ஷி இஸ் வெரி ப்ரெஷியஸ் லேடி. பிரபு செம லக்கி, இந்த மாதிரி ஒரு அம்மா கிடைச்சதுக்கு…”பேச்சினூடே கடந்த காலத்தின் தாக்கத்தில் நெடிய பெருமூச்சு எழுந்தது.

ஹம்ஸினீக்கு கௌதமின் நிலைமையை நினைத்து பரிதாபம் எழுந்தது. அதே சமயம் பணம் இருந்தால் ஓவராக பந்தா செய்கிறவர்களின்  மத்தியில் கெளதம் வித்யாசமானவனாக தெரிந்தான். உண்மையான பாசத்திற்கு ஏங்கிக்கொண்டிருக்கிறான் என்று புரிய மனது நெகிழ்ந்தது. தன்னையும் அறியாமல் அவனின் கையை பிடித்து ஆறுதலோடு அழுத்திக்கொடுக்க கௌதமின் விழிகள் அவளை வியப்போடு நோக்கியது.

அவளின் தொடுகை அவனுள் ஓர் இதத்தை பரவவைக்க தன்னை மறந்து விழிகளை மூடியவன் சட்டென்று தன்னை நிதானித்து தன் கதையை தொடர்ந்தான். 

“என்னை லண்டனுக்கு அனுப்ப ஜெகவீர ரெட்டியும், நித்யா ரெட்டியும் அப்பாவிடம் சிபாரிசுக்கு போனார்கள். ஆனால் நான் பிடிவாதமாக மறுத்துவிட்டேன். பாவம் இதில் அப்பா தான் மாட்டிக்கொண்டார். பின் பெரிய போராட்டத்திற்கு பிறகு இந்தியாவிலே படிக்க எனக்கு அனுமதி கிடைச்சது. பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் பொழுதும் இதே பிரச்சினை. இம்முறை தாத்தா இல்லை தாயுடன் சேர்ந்து என்னை வற்புறுத்த. நான் என் தந்தையிடம் சொல்லிவிட்டேன் இந்தியாவை விட்டு வேறெங்கும் செல்ல விருப்பமில்லை என்று…”என்னும் பொழுதே ஹம்ஸினீ குறுக்கிட்டாள்.

“சார் நான் கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. உங்களுக்கு வெளிநாட்டில் படிக்க பிடிக்கவில்லையா? இல்லை இந்தியாவை விட்டு செல்ல பிடிக்கவில்லையா…?

“இரண்டுமில்லை, எனக்கு என்னை பெற்றவளின் பணத்தில் படிக்க பிடிக்கவில்லை. அஃப்கோர்ஸ் அதில் என் அப்பாவின் பணமும் இருக்கு. அவரால் என் உணர்வுகளை புரிந்துக் கொள்ள முடிந்தது. ஆனால் என் தாய் …”என்றவன் சட்டென்று பேச்சை நிறுத்தி விழி மூடி திறந்துவிட்டு பேச்சை தொடர்ந்தான். 

“அவங்க ஆடம்பரத்தை என் மீது திணிக்க முயற்சி செய்தாங்க. அது எனக்கு பிடிக்கவில்லை. நான் ஆரம்பத்தில் சொன்னேனே லண்டனில் வீடு வாங்கினார்கள் என்று. அந்த வீட்டில் தங்கி என் தங்கை தங்கி படித்தாள். இளங்கலை படித்து முடித்ததும் இங்கே வந்துவிட்டேன். கல்லூரி படிக்கும் பொழுதே பார்ட் டைம் வேலை பார்த்தேன். அதில் கொஞ்சம் பணம் சேர்த்து வைத்திருந்தேன். அதை வைத்து இங்கே வந்து ஒரு பார்ட் டைம் வேலை தேடிக்கொண்டு என் முதுகலை படிப்பை படித்து முடித்தேன். ஒரு பைசா கூட என்னை பெற்றவர்களிடம் கேட்கவில்லை. 

அதன் பிறகு ஒரு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்தது சென்னையில். இரண்டு வருடம் வேலை செய்தேன். அதற்கே வீட்டில் தினம் தினம் பிரச்சினை செய்வார்கள். ஆனால் நான் அதை கண்டுக்கொள்ளவில்லை.அதன் பிறகு நானே சின்னதாக ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி தொடங்கி இன்று இந்த அளவில் வந்து நிற்கிறது. மாண்புமிகு நித்யா தேவிக்கு அவங்க பணத்தை நான் உபயோகிக்கவில்லை என்ற ஈகோவில் எப்படியாவது என்னை அவங்க வழிக்கு கொண்டு வர முயற்சி செய்துட்டு இருக்காங்க. 

இதற்கு நடுவில் அண்ணன் மற்றும் அபியின் தற்கொலை முயற்சிகளில் முக்கிய பங்கு வகித்த நித்யா தேவி ரெட்டியை முழுவதுமாக வெறுத்துவிட்டேன். அவங்க இத்தோடு விட்டுட மாட்டாங்க. வேறு வழியில் என்னை மடக்க முயற்சி செய்வாங்க. இல்லை அவங்க இருக்கிற ஆடம்பர குழியில் என்னை இழுக்க ஏதாவது செய்ய யோசிப்பாங்க. ஆனால் இந்த கெளதம் அதற்கு அடங்க மாட்டான்னு பாவம் இன்னும் தெரியலை…” என்றான் முத்தாய்ப்பாக. 

“ஹ்ம்ம் பிரச்சினை என்பது எல்லோருக்கும் உண்டு தான், ஆளுக்கும், பணத்திற்கும், வசதிக்கும் ஏற்ற மாதிரி வருதே தவிர எவரும் பிரச்சினை இல்லாமல் வாழலை…” என்றாள் சிறு கசப்புடன். 

“ஆனால் பிரபு இருக்கிறானே ஹம்ஸினீ. என்னை கேட்டால் அவனை விட சந்தோஷமான மனிதன் வேறு யாருமில்லைன்னு சொல்வேன். அவன் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவன்…”

ஹம்ஸினீயால் ஏனோ கௌதமின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் பதில் சொல்லவும் இல்லை. யோசனையோடு பார்க்கில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளிடம் பார்வையை பதித்திருக்க,”ஹம்…சினீ …” என்று குரல் கேட்டது. 

யோசனை மாறாமலே கெளதம் பக்கம் திரும்பி,”சொல்லுங்க கெளதம்…”என்றாள்.

“என்ன …? என்றான் கேள்வியாக. 

“என்னை அழைச்சிங்களே …? 

“நா …”என்பதற்குள் மீண்டும் ஹம்ஸினீ என்ற மெல்லிய குரல் கேட்க இருவருமே ஒரு சேர திரும்ப அபி தான் கையை நீட்டி ஹம்ஸினீயை அழைத்துக்கொண்டிருந்தாள்.

இருவருமே ஆச்சர்யம் கலந்த சந்தோஷ பார்வை பரிமாற்றம்செய்துவிட்டு ஹம்ஸினீ வேகமாக எழுந்து அவள் நாற்காலியின் முன் மண்டியிட்டு நீட்டிய அபியின் கையை பிடித்துக்கொண்டாள். கௌதமும் இன்னொரு பக்கம் நின்று அவளையே ஆச்சர்யமும், வியப்பும் சற்றும் குறையாமல் பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கு வார்த்தை வர மறுக்க ஹம்ஸினீ தான் படபடத்தாள். 

“அபி …அபி…நீ …நீயா என்னை அழைத்தது ? என்னை அடையாளம் தெரியுதா … ? ஹையோ இது உண்மையா …? என்று நம்ப முடியாமல் அவளின் முகத்தை வருடி கேட்டவள் அதற்கு மேல் தாங்க முடியாமல் அபியை அணைத்து சந்தோஷத்தின் உச்சத்தில் முகமெங்கும் முத்தமிட்டாள். 

அவளின் முகத்தை கையிலேந்தி,”இந்த ஒரு தருணத்திற்காக தானடி இத்தனை நாள் காத்திருந்தேன். என் பழைய அபி திரும்ப கிடைச்சிட்டா. கெளதம் நம் அபி நமக்கு கிடைச்சிட்டாள். ரொம்ப தாங்க்ஸ் கெளதம். என் அபி மீண்டும் கிடைச்சதுக்கும் நீங்க தான் காரணம் …” என்றவள் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் சந்தோஷம் தாளாமல் சட்டென்று அவனின் கையை பிடித்து புறங்கையில் தன் மெத்தென்ற இதழை பதிக்க ஏற்கனவே பிரமிப்பில் இருந்தவன் ஹம்ஸினீயின் செய்கையில் பனிசிற்பமாக உறைந்தான்.

“ஹம்ஸினீ நான் எங்கே இருக்கேன், நீ ஏன் அழுகிறாய்… ? என்றவள் தான் ஒரு சக்ர நாற்காலியில் அமர்ந்திருக்கவும் அந்த நாற்காலியில் அவளின் கைப்பிடி இறுகியது. 

“நா…நா…நான்…”என்றவளுக்கு பேச்சே எழும்ப மறுக்க கெளதம் சுதாரித்து அவள் முன் மண்டியிட்டான். 

“அபிநயா ஆர் யு ஆல்ரைட், நான் யாரென்று தெரிகிறதா ? இந்த எந்த ஊரென்று உனக்கு தெரியலையா… ? என்றான் படபடவென்று. 

அவனுக்கு அபி பேச ஆரம்பித்து ஹம்ஸினீயை இனம் கண்டுகொண்டதுமே மனதிலிருந்த பாரம் இறங்கிய தினுசில் இருக்க அவனுக்கு கேட்க வேண்டிய கேள்விகள் நினைவு வர அதை அபியிடம் கொட்டினான். 

“ஹ்ம்ம் தெரியும், நீங்க கெளதம்…” என்றவளின் முகம் பழைய நினைவில் கசங்கியது. 

தேங்க் காட் …”என்று நெஞ்சில் கையை வைத்து கடவுளுக்கு நன்றி சொன்னவன் அபியின் தோளில் கைவைத்து மென்மையாக அழுத்தினான்.

“ஹேய் கமான், இப்போ தான் உனக்கு நினைவு திரும்பியிருக்கு, தேவையில்லாததை போட்டு குழப்பிக்காதே. இப்போதைக்கு நீ பாதுகாப்பான இடத்தில் தான் இருக்கே. இதோ உன் அக்கா ஹம்ஸினீ இருக்கும் பொழுது தேவையில்லாததை போட்டு குழப்பிக்காதே. ஹம்ஸினீ இங்கே வைச்சி எதையும் பேச வேண்டாம். நான் காரை பார்க் வாசலில் கொண்டு வந்து நிறுத்தறேன். அபியை அழைச்சிட்டு வந்திடு …”என்றவன் ஓட்டமும் நடையுமாக வாசலை நோக்கி செல்ல இரு பெண்களுமே அவன் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

சென்னை…

பேங்க் வேலை நேரம் முடிந்து வெளியே வந்து பார்க்கிங்கிலிருந்து தன் பைக்கை உருவி கிக்கரை உதைக்க எதிரில் ஒரு கார் வந்து நின்று அவனின் வழியை மறைத்தது. யார் தன் வழியை மறைப்பது என்ற எரிச்சலில் காரின் உள்ளே இருப்பவரை கண்டுக்கொள்ள முயற்சித்துக்கொண்டிருந்தவன் காரின் உரிமையாளரே காரை விட்டிறங்க அவனின் முகம் குழப்பத்திற்கு தாவியது இவர் ஏன் இங்கு வந்தாரென்று.