UN NESATHTHIL VAAZHVEN NAANAGAVE …

அத்தியாயம்_ 23

சென்னை …

ஆபிஸ் விட்டு வந்த ராம்ப்ராசாத்துக்கு வீட்டில் அணுகுண்டு காத்திருந்தது மனைவியின் மூலம். ரெப்பிரேஷ் செய்துக்கொண்டு வந்த கணவருக்கு காஃபியை கொண்டு வந்த நித்யா கூடவே ஒரு பெண்ணையும் கொண்டு வந்து நிறுத்தி இவள் தான் நம் மருமகள் என அவர் அதிர்ந்து போனார்.

“என்ன சொல்றே நித்யா…? 

“எஸ் ராம், இவ என் ப்ரெண்டோட பெண். பெயர் சுஹாஸினி. பேஷன் டிஸைனிங் படிச்சிருக்கா, ஒரு பொட்டிக் வைச்சிருக்கா. போதாதிற்க்கு சினிமாவில் காஸ்ட்யூம் டிஸைனரா இருக்காள். நம் கௌதமுக்கு ஏற்ற ஜோடி இவள் தான்…” 

மனைவி பேசிக்கொண்டே செல்ல ராம்ப்ரசாத்க்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. ஏற்கனவே கெளதம் பெற்றவள் மீது கடும் கோபத்தில் இருக்கிறான், இதில் இவள் இன்னொருத்தியை மருமகள் என்று கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறாள் அவனின் அனுமதி இல்லாமல். இதென்ன அநாகரிகம். இவளின் ஆணவத்தினால் இரண்டு உயிர்கள் போய் ஒரு உயிர் மூளை குழம்பி சுயநினைவு இல்லாமல் ஊசலாடிட்டு இருக்கு. இதில் புதுசா இன்னொரு பிரச்சினையை பேரம் பேசி கொண்டு வந்திருக்காளே. இவள் அடங்கவே மாட்டாளா…

ராம்பிரசாத்க்கு உள்ளுக்குள் கோபம் கனன்று எரிய தொடங்கியது. கணவனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த நித்யா அவரின் முகம் கடுப்பதை கண்டு என்னவென்று விசாரித்தார். தன் எண்ணங்களை வெளியிட முடியாமல் தன்னையே பார்த்தபடி செல்லுலாயிட் பொம்மை போல ரெடிமேட் புன்னகையுடன் நின்றிருந்த பெண்ணை ஏறிட்டார். 

தன் காஃபி கப்பை கையெலெடுத்தபடி எழுந்து,”நான் ரூம்க்கு போறேன், இந்த பெண்ணை அனுப்பிவிட்டு அங்கே வா…” என்றவர் மனைவியின் பதிலை எதிர்பாராமல் தன் வேக நடையோடு மாடியேறி சென்றுவிட இரு பெண்களுமே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

“என்ன ஆன்ட்டி, அங்கிளுக்கு என்னை பிடிக்கவில்லை போலிருக்கு. கோபத்துடன் எழுந்து போகிறார். அப்போ கெளதம் எனக்கில்லையா …? என்றாள் கொஞ்சலாக. 

“நோ ஒர்ரிஸ் சுஹா, என் பேச்சுக்கு மறுபேச்சு பேச மாட்டார் ராம். சோ நீ வீட்டுக்கு கிளம்பு. அப்படியே உன் போட்டோ இருந்தால் எனக்கு அனுப்பி வை. கௌதமுக்கு அனுப்பணும்…”

வருங்கால மாமியாரின் பேச்சில் அகமகிழ்ந்து போனவள் பெரிதாக தலையை உருட்டிவிட்டு அங்கு வந்த ரித்யாவுடன் வெளியில் கிளம்பிவிட நித்யா யோசனையுடன் கணவரை நாடி சென்றார். 

பால்கனியில் நின்றபடி கோபம் குறையாமலே இலக்கில்லாமல் வெறித்துக்கொண்டிருந்தவர் அரவம் உணர்ந்து திரும்ப நித்யா தான் வந்திருந்தார். 

“என்ன ராம், எதுவும் பேசாமல் பட்டுன்னு எழுந்து வந்துட்டீங்க. பாவம் சுஹா ரொம்ப பயந்து போய்ட்டாள். சரி இப்போ சொல்லுங்க நம்ம கௌதமுக்கு சுஹாஸினி ஏற்ற ஜோடி தானே…? என்றார் பெருமையோடு மார் தட்டிக்கொண்டு. 

மனைவியை வெறித்து நோக்கியவருக்கு இருக்கின்ற கோபத்திற்கு இழுத்து ஓர் அறை விடணும் போலிருந்தது. ஆனால் மனைவியிடம்  கைநீட்டுவது அநாகரிகம் என்ற ஒரே காரணத்திற்க்காக துரு துருத்த கையை அடக்கிக்கொண்டார். 

“நீ எந்த நம்பிக்கையில் இப்போ அந்த பெண்ணை இங்கே அழைச்சிட்டு வந்தே. நம்ம பையன் நம்ம பையன்னு வாய் ஓயாமல் சொல்றியே, அந்த பையனிடம் அவனின் திருமண விஷயத்தை பற்றி பேசினாயா? அவன் திருமணத்திற்கு சம்மதம் சொன்னானா …?

“என்ன ராம் இது கேள்வி, கௌதமுக்கு கல்யாண வயசு வந்து ரொம்ப வருஷம் ஆச்சு. இதுவரை அவனும் பிடிகொடுத்தே பேசலை. அதற்காக நாம அப்படியே அவனை விட்டுட முடியுமா? அதான் நானே ஒரு முடிவு எடுத்து அதை செயல்படுத்தவும் முடிவு செய்துட்டேன்…”

“அதாவது மயிலே மயிலேன்னு இறகு போடாதுன்னு நீயே இறகை பிடுங்க முயற்சி செய்துட்டே. அதெல்லாம் சரி கௌதமை எப்படி சம்மதிக்க வைப்பாய்…? கல்யாணம்ன்னு சொல்லி வர வைக்கிற ஐடியா இருக்கோ…? என்றார் விழிகள் இடுங்க. 

“என்ன கேள்வி இது ராம், இப்போதைக்கு கெளதம் ஒரு ப்ராஜெக்ட் வேலையா பெங்களூரில் இருக்கும் பொழுது அவனை தொல்லை செய்வது சரியில்லை…”

“ஓ அந்தளவு நாகரிகம் தெரிந்திருக்கே, வேற என்ன ஐடியா…? என்றார் நக்கலாக.

“சிம்பிள் சுஹாஸினியை பெங்களுர் அனுப்பி அங்கே கௌதமுடன் தங்க வைக்க போகிறேன். கொஞ்ச நாள் இருவரும் ஒன்றாக இருந்தால்  கௌதமுக்கு சுஹாஸினி மீது ஒரு அபிப்ராயம் வந்திடும். இல்லையென்றாலும் சுஹாஸினி அபிப்ராயம் வர வைச்சிடுவா. பஞ்சும், நெருப்பும் பக்கத்தில் பக்கத்தில் இருந்தால் பற்றிக்கொள்ளாமல் இருக்குமா சொல்லுங்க. இது தான் என் ஐடியா, எப்படி இருக்கு ராம் …” என்றார் விழிகளில் பெருமை பொங்க.

மனைவியை அவர் பார்த்த பார்வையில் சத்தியமாக அன்போ, பாசமோ, காதலோ , பாராட்டோ எதுவுமில்லை. வெறுப்பும், அருவருப்பும் மட்டுமே இருந்தது.

“படு கேவலமா இருக்கு …” என்றார் முகம் சுளித்து. 

கணவரின் பதில் புன்னகையில் குளித்திருந்த முகம் சுட்ட கத்தரிக்காய் மாதிரி மாறிவிட க்ஷண நேரத்தில் கோபம் குடியேறியது. 

“இதிலென்ன கேவலம் இருக்கு. நம்ம வருங்கால மருமகளை நம் மகனுடன் பழக விடுவதில் என்ன தவறு இருக்கு. இதெல்லாம் நம் பரம்பரையில் சகஜம் தானே. நீங்க என்னவோ மிடில் க்ளாஸ் பேமிலி ஆள் மாதிரி பேசறீங்க. அது மட்டுமில்லை. நம் வீட்டில் கௌதமோடு ஒரு செக்ரட்டரி பெண் தங்கியிருக்கிறாள். அவள் எந்த விதத்திலும் கௌதமுக்கு உரிமையில்லாதவள். அவளே தங்கியிருக்கும் பொழுது நமக்கு மருமகளாக போகிற சுஹாசினி தங்குவதில் என்ன கேவலத்தை கண்டுட்டுடீங்க. உங்களிடம் அபிப்ராயத்தை கேட்டது என் தவறு தான். 

கெளதம் திருமணத்தை எப்படி செய்யணும்னு எனக்கு தெரியும், நான் பார்த்துக்கிறேன். இன்னும் எத்தனை நாள் என்னை வெறுப்பான் கெளதம். நீங்க வேண்டுமென்றால் பாருங்க சுஹாசினி அங்கே போனால் கௌதமிற்கு என் மேலிருக்கிற கோபத்தை கண்டிப்பாக மாத்திடுவா. உங்களால் செய்ய முடியாததை நம் மருமகள் செய்யத்தான் போகிறாள்…” என்று விட்டு கடகடவென்று அறையை விட்டு வெளியேறிய மனைவியை திக்ப்ரமையோடு பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்.

‘ம்ஹீம் இந்த பெண் பெங்களுர் போக கூடாது. கெளதம் இப்பொழுது தான் கொஞ்ச நாட்களாக சந்தோஷமாக இருக்கிறான். இந்த நேரத்தில் இவள் சுஹாசினியை அங்கு அனுப்பினால் அவ்வளவு தான். முதலுக்கே மோசம் வந்துவிடும். அப்புறம் சென்னையையே மறந்துவிட்டு அங்கேயே தங்கிவிடுவான். ஹையோ நித்யாவின் மூளையில் உதித்த இந்த கேவலமான ஐடியாவை முதலில் தூக்கியெறியணுமே. எப்படி செய்வது? என்ன செய்வது? என்று கையை பிசைந்தபடி குறுக்கும் நெடுக்குமாக நடந்துக்கொண்டிருந்தவருக்கு தன் மீதே கோபம் வந்தது. இவளை ஏன் திருமணம் செய்துக்கொண்டேன் என.

நித்யாவின் தந்தை ஜெகவீர ரெட்டியின் விழிகள் தங்கள் தொழிலோடு கூட்டு வைத்த விஸ்வநாதனின் மகன் ராம் ப்ரசாத்தின் மீது விழுந்தது. பார்ப்பதற்கு நல்ல உயரமும், அழகும், படிப்போடு கூடிய புத்த்திசாலித்தனமும் , அவன் தொழிலில் காட்டிய முனைப்பும் ரெட்டியை கவர அவனை தன் மகள் நித்யா தேவிக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்தார். 

ஆனால் ராம்பிரசாத்தின் மனதில் அவருடன் படித்த ஒரு பெண் குடியிருந்தாள். அதிக வசதி இல்லையென்றாலும் ராம்ப்ரசாத்தின் குடும்ப அந்தஸ்திற்கு ஓரளவுக்கு ஒத்து வருகிறவர்கள் தான். ஜவுளி தொழிலும், கட்டிட கலை தொழிலிலும் ஈடுபட்டிருந்தது ராம்பிரசாத் குடும்பம். திறம்பட மிகவும் கடுமையாக உழைத்து அப்பர் மிடில் க்ளாஸ் தரத்திலிருந்து கோடீஸ்வரன் தரத்திற்கு உயர்ந்தவர் விஸ்வநாதன். மகனை வெளிநாட்டிற்கு அனுப்பி படிக்க வைத்து தன் தொழிலேயே ஈடுபடுத்திக்கொண்டார். 

ராம் பிரசாத் தந்தையுடன் தொழிலில் இறங்கிய பிறகு மேலும் தொழில் செழுமையாக வளர அந்நேரத்தில் தான் ரெட்டியின் கழுகு விழிகள் ராம் பிரசாத்தின் மீது விழுந்தது. தன் பெண்ணிற்க்காக ரெட்டி விஸ்வனாத்திடம் திருமணம் பேசிய பொழுது அவரால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. 

ராஜ பரம்பரையை சேர்ந்த பெண் தன் மகனை தேடி வரவும் பூரித்து போய் மகனை ஒரு வார்த்தை கூட கேளாமல் வாக்கு கொடுத்துவிட்டார். இதை கேள்விப்பட்ட ராம்க்கு உள்ளம் கொதித்து போனது. தந்தை தனக்கு பார்த்து வைத்த பெண்ணை அவர் அதுவரை பார்த்ததே இல்லை. தான் விரும்பிய பெண்ணை பற்றி ஒரு நல்ல நேரம் பார்த்து பெற்றோரிடம் சொல்லி திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தவர் தந்தையின் செயலால் நொறுங்கி போனார்.

எனக்கு ரெட்டியோட பெண் வேண்டாம், நான் காதலித்த பெண் தான் வேண்டும் என்று ஒரு நாள் வீட்டில் போட்டுடைக்க விஸ்வனாதன் ருத்ர மூர்த்தியானார். நான் வாக்கு கொடுத்துவிட்டேன், என் வாக்கு பொய்யானால் நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்று ஒரே போடாக போட அவரின் மனைவியோ கணவரின் பேச்சில் அதிர்ந்து மகனிடம் தாலி பிச்சை வேண்ட அதற்கு மேல் ராம் ப்ரசாத்த்தால் பிடிவாதம் பிடிக்க முடியவில்லை. தந்தைக்காக இல்லையென்றாலும் தாயின் கண்ணீர் அவரை இளக்கியது. 

ரெட்டியின் ஒரே பெண் என்பதால் நித்யாவுக்கு அடுத்தவரின் உணர்வுகளை பற்றி கவலையோ, அக்கறையோ இருக்கவில்லை. தன் உணர்வுகளும், தன் சுக துக்கங்களும் மட்டுமே அவளுக்கு பெரிதாக இருந்தது. திருமணமான புதிதில் சின்ன பெண் செல்லமாக வளர்ந்தவள் குழந்தைகள் பிறந்தால் எல்லாவற்றையும் புரிந்துக் கொள்வாள் என்று நினைத்து ராம் ப்ரசாத் மனைவியை அதிகம் கோபித்துக்கொண்டதில்லை. அது அப்படியே குழந்தைகள் பிறந்து வளர்ந்து மூத்த மகன் விஷயத்தில் நித்யாவின் ஆணவம் வெடிக்கும் வரை. 

மகன் தன் காதலில் தோற்று தன் உயிரையே மாய்த்துக்கொண்ட பொழுதும் நித்யாவுக்கு அவளின் அந்தஸ்தும், அவளை மதிக்காமல் எவளோ ஒருத்திக்காக உயிரை விட்ட மகனின் உணர்வை துச்சமாக மதித்தாள். எடுத்து சொல்ல வந்த கணவரையும் அவள் மதிக்கவில்லை. அவளின் பேச்சை கேட்டு நடக்கும் வரை மட்டுமே ராம் பிரசாத் அவளின் காதல் கணவர். அதே தவறை மீண்டும் அவள் அபியின் விஷயத்தில் செய்தபொழுது கௌதமின் கோபத்தை அவள் அனுபவிக்க வேண்டி வந்தது. 

மகனின் கோபத்தை சமாளிக்க அப்பொழுது அவள் கணவரிடமே சரணாகதி அடைய வேண்டியிருந்ததால் கணவர் சொல்வதை வேறுவழியில்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருந்தது. ஆனால் தலை தூக்கி சீரும் பாம்பை போல மீண்டும் நித்யாவின் ஆணவம் மகனின் திருமண விஷயத்தில் தலை தூக்கியிருக்க ராம் பிரசாத் ஒரு முடிவுக்கு வந்தார்.

இவளின் வழியிலேயே சென்று தான் நித்யாவுக்கு புரிய வைத்தாக வேண்டும் என்று தோன்ற வேகமாக கீழே இறங்கி வந்தார். ஹால் சோஃபாவில் கால் மேல் கால் போட்டபடி ஆங்கில பத்திரிகையில் மூழ்கியிருந்த மனைவியை கண்டதும் மனதிற்குள் தணலாய் எரிந்தது. தேவையில்லாத ஆணிகளை பிடிங்கி வைத்துவிட்டு ஒன்றுமே நடக்காதவள் போல அமர்ந்திருக்கிறாளே கிராதாகி, இவளை என்னவென்று செய்வது என்று பற்கள் நறநறத்தது. ஆயினும் தன் கோபத்தை கட்டுப்படுத்தி மனைவியை நெருங்கி அவளருகில் அமர்ந்தார். 

அசைவு உணர்ந்து பத்திரிக்கையை கீழே தாழ்த்தி கணவரின் பக்கம் திருப்பி ஓர் அலட்டல் பார்வையை வீசிவிட்டு மீண்டும் பத்திரிகையில் ஆழ ராம்ப்ரசாத் மனைவியின் கையிலிருந்த பத்திரிக்கையை வாங்கி எதிரிலிருந்த டீப்பாவின் மீது போட்டுவிட்டு அவளின் கையை தன் கைக்குள் அடக்கிக்கொண்டார். அப்பொழுதும் பார்வையை வேறெங்கோ பதித்திருந்தார் நித்யா. 

“லுக் நித்யா எனக்கு உன் ஆசை புரியுது. நம்ம கௌதமுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டியது தான், நான் வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால் அதை அவன் அனுமதியோடு செய்தால் தானே அந்த திருமணம் அவனுக்கும் இனிக்கும், நமக்கும் சந்தோஷத்தை கொடுக்கும். அவனை கேளாமலேயே நீ ஒரு முடிவு எடுத்து ஒரு பெண்ணை திடீரென்று அவனுடன் தங்க அனுப்பினால் சரி வருமான்னு நீயே யோசித்து பார். 

ஏற்கனவே ஒரு மகனை பறிகொடுத்துவிட்டோம். மீண்டும் உன் பிடிவாதத்தால் இருக்கிற மகனை கைநழுவ வவிட்டுட கூடாது. உனக்கே தெரியும் கௌதமின் பிடிவாத குணத்தை பற்றி. நீயே இவ்வளவு பிடிவாதம் பிடித்தால் உன் பிள்ளை அவன் அவனுக்கு எந்தளவு பிடிவாத குணம் இருக்கும். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்ற பழமொழி உனக்கு தெரியாததா…? 

“சரி அதுக்கு என்ன செய்ய சொல்றீங்க….? விறைத்துகொண்டு வந்தது கேள்வி. 

“பெரிசா ஒன்றுமில்லை. முதலில் கெளதம் ப்ராஜெக்ட் முடிச்சி கொடுத்திட்டு இங்கே வரட்டும். அதற்குள் அவனிடம் திருமணத்திற்கு சம்மதம் கேள்….”

கணவர் பேசிமுடிக்கும் முன்னரே இடையிட்டு, “அவன் கொடுக்கவில்லை என்றால் …? 

“கமான் நித்யா, இதே மாதிரி ஒரு முறை பெண் வீட்டாரை வரவழைத்து நீ அவனிடம் வாங்கி கட்டிக்கொண்டது மறந்து போயிடிச்சா உனக்கு. அவன் என் காலத்து பையனில்லை , தாய், தகப்பன் பேச்சை கேட்டு முடிவெடுக்க. இந்த காலத்து பையன் கெளதம். அவன் முடிவுக்கு நாம கட்டுப்படணுமே தவிர நாம நம்ம முடிவை திணிக்க கூடாது. அதுவும் அவன் விடலை பையனில்லை தானே ஒரு தொழில் சாம்ப்ராஜ்யத்தை நிறுவி அதை வெற்றிகரமாக நடத்திவருகிறவன்; அவனிடம் உன் முரட்டு கோபமும், முடிவும் செல்லாது. நீ தான் அசிங்கப்படுவாய். புரிந்துக்கொள்…” என்றார் முடிந்தவரை நிதானத்தை இழுத்து பிடித்து. 

அவரிடமிருந்து கைகளை உருவிக்கொண்டு,”அட்வைஸ் செய்து முடிச்சாச்சா? சரி இனி நான் என்ன செய்யணுமோ அதை செய்துக்கிறேன். நீங்க நடுவில் வராமல் இருந்தால் போதும்…” 

மனைவியின் திமிர் பேச்சில் ரத்தம் கொதித்தது. இவளின் பேச்சை கெளதம் எப்படியும் கேட்க போவதில்லை தான். ஆனாலும் அவனை மீண்டும் மனதளவில் நித்யா நோகடித்துவிட கூடாதே என்ற பயம் அவருள் விரவ நித்யாவின் முடிவை எப்படி மண்ணை கவ்வ வைக்கலாம் என்று மூளை பரபரவென்று யோசிக்க ஆரம்பித்தது.