UN NESATHTHIL VAAZHVEN NAANAGAVE …
அத்தியாயம் _ 15
தாய் சுதாரிக்க சற்று நேரம் கொடுத்துவிட்டு,”எஸ் மா உங்க கெஸ்ஸிங் இஸ் டூ ஹண்ட்ரட் பெர்சன்ட் கரெக்ட். அவர் ஒரு பேத்தாலஜிஸ்ட், இறந்த உடலை சோதித்து அவர்கள் இறந்த முறையை கண்டுபிடித்து பாரன்சிக் டிபார்ட்மெண்ட்க்கு ரிப்போர்ட் கொடுக்கிற ஒரு டாக்டர். புரியும்படி சொல்லனும்னா ஹீ இஸ் அட்டாப்ஸி ஸ்பெஷலிஸ்ட். அதனால் தான் அவர் தன் மனைவியை அந்த கோலத்தில் பார்த்ததும் பழக்க தோஷத்தில் டக்கென்று கத்தியை எடுத்து அவளை கிழிக்க வந்திருக்கிறார்…”
“ச்சே என்ன கொடுமை இது, பாவம்டா ஹம்ஸினீ, அப்புறம் எப்படி அவனிடமிருந்து தப்பி வந்தாளாம்…?
“ஹம்ஸினீக்கு அன்றிலிருந்து கணவனை பார்த்தாலே பயம் வந்திருக்கு. உடனே அவங்கப்பாவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல அவங்க உடைஞ்சி போயிருக்காங்க. கோபத்துடன் சம்மந்தி வீட்டுக்கு சென்று சண்டை போட்டிருக்காங்க. இதை கேட்டு பாவம் அவங்களுக்கும் ஷாக் தான். உண்மை தானே இப்படியொரு பிரச்சினையை பார்த்தவுடனே புரிஞ்சிக்க முடியாதே. பெண்ணை நீங்க அழைச்சிட்டு வந்துடுங்க, உங்க பெண்ணுக்கு டிவோர்ஸ் கொடுக்க சொல்றோம் . நாங்க அலிமோனி (ஜீவனாம்சம்) கொடுத்திடறோம் என்று உடனே சர்ரண்டர் ஆயிட்டாங்க. அவங்களிடம் போய் மேற்கொண்டு என்ன பேச முடியும். உடனே மகளுக்கு டிக்கெட் அனுப்பி வர சொல்லி சொல்லியிருக்காங்க.
ஆனால் ஹம்ஸினீயின் கணவன் அவள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டிருக்கிறான். நான் செய்தது தப்பு தான், என்னை விட்டு போயிடாதேன்னு சொல்லியிருக்கான். இவளோ பரிதாபப்பட்டு ஒரு மனநல மருத்துவரை பாருங்கன்னு சொல்லியிருக்காள். ஆனால் அவன் உடனே புளியமரத்தில் ஏறிக்கிட்டான்.
நானே ஒரு டாக்டர், என்னை போய் இன்னொரு டாக்டரை பாருன்னு சொல்றே, நான் ஒன்றும் மெண்டல் ஸ்டேபிள் இல்லாதவன் இல்லை. இனி நீ இங்கே இருக்கணும்னு அவசியமில்லைன்னு அலட்சியமாக கூற அதற்கு மேல் ஹம்ஸினீ அவனிடம் மல்லுக்கட்ட விருப்பமில்லாமல் இந்தியா கிளம்பி வந்துட்டாள்…”
மகனின் பேச்சில் குறுக்கிட்டு,”ப்ச் ரொம்ப பாவம்டா அந்த பொண்ணு, அவளுடைய வாழ்க்கை மொட்டிலேயே கருகிடுச்சே. எத்தனை கனவுகளோடு கணவனோடு வெளிநாடு போயிருப்பாள். கடவுள் ஏன் தான் பொண்ணுங்களுக்கு இப்படியெல்லாம் சோதனை கொடுக்கிறானோ. நல்ல வேளை ஹம்ஸினீ ஒரு விதத்தில் லக்கின்னு தான் சொல்லணும்…”
“ஏன் அப்படி சொல்றீங்க, வாழ்க்கையையே இழந்துட்டு வந்திருக்கா, இதில் என்ன அதிர்ஷ்டம் இருக்கு. போ பூங்காவனம். வர வர உன் மெதேட் ஆப் திங்கிங்கை என்னால் புரிஞ்சிக்க முடியலை…”
மகனின் அலுப்பிற்கு அவனின் தலையை செல்லமாக கோதி,”ஹம்ஸினீக்கு நல்ல வாழ்க்கை அமையலை நான் ஒத்துக்கிறேன். ஆனால் அவளுடைய அப்பா, அம்மா அவளின் பிரச்சினைகளை உடனேயே புரிந்துக்கொண்டு அதற்கேற்றாற் போல செயல்பட்டிருக்காங்களே அதுவே ஒரு விதத்தில் அதிர்ஷ்டம் தானே. எத்தனை பெத்தவங்க பொண்ணுங்களின் பிரச்சினைகளை புரிஞ்சிக்கிறாங்க சொல்லு. புருஷனை அடஜஸ்ட் செய்து போ, புகுந்த வீட்டில் நல்ல பெயர் எடுன்னு தானே சொல்றாங்க.
புருஷன் வீட்டில் செய்யும் கொடுமைகளை தாங்கவும் முடியாமல், புகுந்த வீட்டுக்கும் போக முடியாமல் எத்தனை தற்கொலைகள் நடக்குது. அதை சொன்னேன்…”
தாயின் வாதத்தில் உண்மையிருக்க அதை ஏற்றுக்கொள்ளும் விதமாக யோசனையுடன் தலையை உருட்டினான்.
“கரெக்ட் ம்மா, ஆனால் மகளின் வாழ்க்கை வீணாகிவிட்டதே என்ற கவலையில் அவளுடைய அம்மா மூன்றே மாசத்தில் இறந்து போக அன்றே அவளின் அப்பாவும் நெஞ்சை பிடிச்சிக்கிட்டு சரிஞ்சிட்டார். அன்றிலிருந்து அவளுடைய வாழ்க்கையே ஹாஸ்பிடலும், வீடுன்னு ஒரே போராட்டமாக ஆயிடிச்சு. இப்போ அவரும் இல்லை. இப்படியே விட்டால் அவள் தனிமரமா நின்னுடுவாம்மா. அது மட்டுமில்லை என்ன தான் நாம அவளுக்கு மாப்பிள்ளை பார்த்தாலும் அவள் மனது அதை ஏத்துக்காது. அவள் மனது சூடு பட்ட பூனையாய் இருக்கு. அவள் மனதிலிருக்கிற வடு மறைந்து இயல்பா அவள் ஒரு வாழ்க்கையை வாழணுமென்றால் அவள் மனதில் ஒரு காதல் மலரணும். அப்போ தான் இது சரியா வரும். இப்போ புரியுதா நான் ஏன் அவளை கௌதமுடன் அனுப்பி வைச்சேன்னு…”
மகன் குடித்த காபி டம்பளரையும், வடை தட்டையும் எடுத்தபடி எழுந்தவர்,”ஹ்ம்ம் நல்லாவே புரியுது. ஆனால் கெளதம் என்ன பண்ண போறானோ. பார்ப்போம்…” என்று பெருமூச்சுடன் அங்கிருந்து நகர பிரபுவுக்கும் அதே பயம் தான்.
கைபேசியை எடுத்து கௌதமுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான் இருவரின் நலத்தை பற்றியும், ஹம்ஸினீ வேலையில் பொருந்திவிட்டாளா என கேட்டு. அப்படியே தான் அடுத்த வாரம் தாயுடன் வருவதாக என்ற செய்தியையும் கூறி.
மீண்டும் சமையலறை வாசலிலிருந்து மகனை அழைத்து,”எனக்கொரு சந்தேகம் கண்ணா … ? என்றார் சீரியஸாக.
“என்ன சந்தேகம் சொல்லுங்க …?
“அதாவது உன் வாழ்க்கை அகராதியில் காதல், கத்தரிக்காய், கல்யாணம் என்ற வார்த்தையெல்லாம் கடவுள் பிரிண்ட் பண்ணலை. அதனால் நீ சந்நியாசியாய் இருக்கே. அதை என்னால் புரிஞ்சிக்க முடியுது. கெளதம் வாழ்க்கை அகராதியையும் அப்படியே பிரிண்ட் பண்ணிட்டாரா? அதாவது யோசித்து எழுத நேரமில்லாமல் உன் அகராதி பார்த்து காபி பேஸ்ட் பண்ணிட்டாரா, இல்லை கெளதம் அகராதியை பார்த்து உனக்கு காபி பேஸ்ட் செய்தாரா கடவுள். யாரை பார்த்து யாருக்கு காபி பேஸ்ட் செய்திருப்பார் பிரபு …?
தாய் பேசுவதை மிக சீரியஸாக கேட்டுக்கொண்டிருந்தவன் அவர் தன்னையும், கௌதமையும் நக்கலடிக்கிறார் என்று புரிய நறநறவென்று பல்லை கடித்தான்.
“பார்த்துப்பா பல்லு கொட்டிட போகுது …”என்று கேலி செய்து சிரித்துவிட்டு உள்ளே செல்ல பிரபுவுக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியாமல் ங்கே என்று விழித்தான்.
பெங்களுர்…
ஹம்ஸினீ செடிகள் விற்பனையாளரை நோக்கி நடக்க அவளை வேகமாக தொடர்ந்தார் சரசம்மா.
“என்னம்மா ரோஜா செடிகள் வாங்க போறீங்களா, நம் தோட்டத்தில் தான் நிறைய இருக்கே, அதையே பராமரிக்க முடியலை…”
அவள் பதில் பேசாமல் செடிகள் நிறைந்த வண்டியை நெருங்கியவளின் விழிகள் அவன் வைத்திருந்த செடிகளை ஆராய்ந்தாள். அதில் ஒரு குண்டு மல்லி செடியும், நித்திய மல்லி செடியை கண்டதும் ஆவலுடன் அதை எடுக்க சொல்லி கை நீட்டினாள்.
அவள் கேட்ட செடிகளை எடுத்துக்கொடுத்தவன்,”இது தான்ம்மா கடைசி பீஸ், ரெண்டுக்கும் சேர்த்து ஐநூறு கொடுங்கம்மா…”என்றான் கன்னடத்தில்.
கையில் வாங்கிய செடிகளை சற்று உற்று பார்த்தவளுக்கு அதில் அபியின் புன்னகை முகம் தெரிந்தது. அபிக்கு வாசனை பூக்களில் மிகவும் பிடித்தது குண்டு மல்லியும், நித்திய மல்லியும். அவள் வீட்டில் மல்லிகை கொடிகள், குண்டு மல்லி செடிகள் வைத்து அழகாக பராமரிப்பாள். மாலை நான்கு மணி ஆகிவிட்டால் பூவை பொறுமையாக பறித்து சாரமாக தொடுத்து கடவுள் படத்திற்கு போட்டுவிட்டு தன் நீள கூந்தலில் சூடிக்கொள்வாள். அதை பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும். ஹம்ஸினீ அவள் நேரெதிர். பூக்களை வைத்துக்கொள்ளவே யோசிப்பாள். பூக்கள் செடிகளில் இருந்தால் அழகு என்கிற ரகம். அம்மாதான் இழுத்து வைத்து அவள் கூந்தலில் பூவை சூடிவிடுவார்.
“என்னம்மா செடிகளையே பார்த்திட்டிருக்கீங்க. பணத்தை கொடுத்திட்டு எடுத்திட்டு போங்க …”
விற்பனையாளரின் பேச்சில் தன்னிலை உணர்ந்து சட்டென்று தன் கைப்பையிலிருந்து பணத்தை எடுத்துக்கொடுக்க அவர்களின் அருகில் ஒரு கார் சர்ரென்று வந்து நிற்க இருவருமே வேகமாக திரும்பினார்கள். கெளதம் தான் காரிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தான்.
“இங்கே என்ன பண்றீங்க…? என்றவனின் விழிகள் ஹம்ஸினீயின் கைகளிலிருந்து செடிகளை கண்டதும் மெலிதாக முறுவலித்தான்.
“ஹம்ஸினீ உனக்கு ஏதும் வேலை இருக்கா ? இல்லையென்றால் என்னுடன் வர முடியுமா… ?
அவளுக்கும் கௌதமிடம் பேச வேண்டியது இருக்க, தானாக கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் சம்மதத்துடன் தலையை உருட்டியவள் கையிலிருக்கிற செடிகளை பார்த்தாள் குழப்பத்துடன்.
“சரசம்மா நீங்க டாக்சி பிடிச்சி வீட்டுக்கு போய்டுங்க, இந்த செடிகளையும் எடுத்திட்டு போய் பத்திரமா வையுங்க. ஹம்ஸினீ சொன்ன பிறகு நடலாம். ஹம்ஸினீ கெட் இன்…” என்றவன் அவளுக்காக கதவை திறந்துவிட சிறு புன்னகையுடன் காரில் ஏறி அமர கௌதமும் ஏறியதும் வண்டி சீறி புறப்பட்டது அபி இருக்கும் ஹாஸ்பிடலை நோக்கி.
எங்கே போகிறோம் என்று கூட அவளுக்கு கேட்க தோன்றவில்லை. எப்படியும் அனாவசியமாக கடலை போடவோ, ஊர் சுற்றவோ அழைத்து போகமாட்டான். அவர்கள் இருவரும் செல்கிற இடமென்றால் ஒன்று ஆபிஸ், அடுத்தது சைட். இது இரண்டுக்குமே இன்று லீவ் என்னும் பொழுது கண்டிப்பாக ஹாஸ்பிடலுக்கு தான் அழைத்துச்செல்வான் என்று நிச்சயமாக தோன்ற மௌனத்தை உற்ற தோழியாக்கிக்கொண்டு காரின் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாள்.
“எங்கே போறோம்ன்னு கேட்க தோணலையா… ?
கௌதமின் கேள்விக்கு அவன் பக்கம் திரும்பியவள் மெலிதாக புன்னகைத்தாள்.
“நீங்க என்னை கடத்திட்டு போகலையே, அழைச்சிட்டு தானே போறீங்க. சோ நீங்களே சொல்வீங்க …”
“ஹ்ம்ம் ஸ்மார்ட், நாம இப்போ அபியை பார்க்கத்தான் போய்ட்டிருக்கோம். இந்த ஊருக்கு வந்ததும் பார்த்தது, அதன் பிறகு பார்க்க நேரமே இல்லாமல் வேலை பளு. ஆனால் டாக்டரிடம் நேரம் கிடைக்கும் பொழுது பேசிட்டு தான் இருக்கேன்…”
அவள் கேட்காமலேயே விவரங்களை கொடுக்க ஹம்ஸினீயின் இதழ்களில் சிறு புன்னகையின் சாயல். சில நொடிகள் மௌனித்தவள் அபியை எப்படி தெரியும்ன்னு இப்பொழுது கேட்டு தெரிஞ்சிக்கலாமா? அது தெரியாமல் மண்டையே காயுது…
“என்ன ஹம்ஸினீ ஏதோ கேட்கணும்னு நினைக்கிறே, ஆனாலும் அமைதியா வர்றே? ஒரு வேளை நீ அபியை பார்த்த முதல் நாள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாததால் வந்த தயக்கமோ …?
விழிகள் சுருக்கி இளம் புன்னகையோடு கேட்ட விதத்தில் ஹம்ஸினீக்கு இதயம் தடதடத்தது. அவனின் இளம் புன்னகையை ரசித்துக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தாலும் அவன் சொன்ன விஷயத்தின் சாராம்சம் அவளை எல்லாவற்றையும் பின்னுக்கு தள்ளியது.
“ஹ்ம்ம் …”
“சொல்றேன், முதலில் அபியை பார்த்திட்டு அப்புறம் சொல்றேன்…” என சிறு ஏமாற்றத்துடன் தலையை உருட்டினாள்.
அதன் பிறகு ஹம்ஸினீக்கு பேச எதுவும் இருப்பதாக தோன்றாததால் மீண்டும் விழிகளை காரின் வெளியே வீசினாள். சற்று நேரத்திற்க்கெல்லாம் மெண்டல் அசைலம் உள்ளே வண்டி நுழைய ஹம்ஸினீக்கு அபியை பார்க்க போகிறோம் என்ற பதட்டம் தொற்றிக்கொண்டது. வண்டி நிற்குமுன்னரே அவசரமாக கதவை திறக்க முயற்சித்தாள்.
“ஈஸி …ஈஸி …”என்றவன் வண்டியை நிறுத்தி இறங்கி வருவதற்குள் ஹம்ஸினீ இறங்கி அபியை சந்தித்த அந்த வார்டை நோக்கி வேகமாக விரைந்தாள்.
கௌதமம் அவளின் வேக நடையை மிக சுலபமாக எட்டி பிடித்து அவளுடன் நடக்க ஹம்ஸினீயின் கைகள் வார்டை நெருங்க நெருங்க இறுகியது. கால்கள் கூட பின்னியது. அவளின் மனப்போராட்டத்தை புரிந்து கெளதம் அவளின் கைகளை பிடித்துக்கொள்ள சட்டென்று ஹம்ஸினீயின் நடை தடைபட்டது.
இதயம் வேகமாக துடிக்க, விழிகள் அவனை நோக்கி என்னதென்றே புரியாமல் உயர, அவன் விழிகளை மூடி திறந்து, போகலாம் என்றான் தலையசைப்பில். அவளின் கைப்பிடியை விடாமலே உள்ளே அழைத்துச் செல்ல, ஹம்ஸினீயின் விழிகள் அவசரமாக அபியை துழாவியது அந்த ஹாலில்.
அவளை காணாததால் கெளதம் பக்கம் திரும்பியவள் அவன் ஒரு நர்ஸிடம் பேசிக்கொண்டிருக்கவும் வேகமாக வானை நெருங்கினாள்.
“ஸார்…”
அழைத்தவளை கையமர்த்தி,”அபி தூங்கிட்டிருக்காளாம், இரண்டு நாளாக ரொம்ப கலாட்டா செய்ததால் மயக்க ஊசி போட்டு தூங்க வைச்சிருக்காங்களாம். இன்றைக்கு பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க…”
“இல்லை …இல்லை எனக்கு அவளை உடனே பார்க்கணும். ப்ளீஸ் கெளதம் டாக்டரிடம் பேசுங்களேன். அவளை நான் உடனே பார்த்தாகணும். சிஸ்டர் ப்ளீஸ் சிஸ்டர் நான் என் தங்கையை பார்க்கணும். உதவி செய்யுங்களேன் … “
நர்ஸின் கையை பிடித்து அவள் கெஞ்ச ஆரம்பிக்கவும் அவளின் கையிலிருந்து நர்ஸின் கையை விடுவித்தான் நாசூக்காக.
“கமான் ஹம்ஸினீ, கொஞ்சம் வெயிட் பண்ணு. நான் டாக்டரிடம் பேசறேன். நாம அபியை பார்க்கலாம்…”
அவளை சமாதானப்படுத்தியபடியே தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து கைபேசியை எடுத்து டாக்டருக்கு விளித்து அவரிடம் பேசிவிட்டு நர்ஸிடம் நீட்டினான். அவளும் பேசிவிட்டு கைபேசியை கௌதமிடம் நீட்டினாள்.
“வாங்க சார், வாங்க மேடம் போகலாம் …”
கெளதம், ஹம்ஸினீயின் கையை அழுத்தமாக பிடித்தபடி நடக்க அவளுக்கு எதுவுமே உறைக்கவில்லை, மனம் முழுவதும் அபியை பார்க்க போகிறோம் என்ற படபடப்பு மட்டுமே நிறைந்திருந்தது.
அந்த வார்டை விட்டு வெளியே வந்து மீண்டும் சில அறைகளை கடந்து தனிமையில் இருந்த அறைக்கு அழைத்து சென்று பூட்டியிருந்த கதவை திறந்து உள்ளே அழைத்துச் செல்ல ஹம்ஸினீ வெளிறிய முகத்துடன் அவனை நோக்கினாள்.
எத்தனை முறை வந்து அபியை பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் அவனுள் ஒரு குற்ற உணர்ச்சி ஓடோடி வந்து அமர்ந்துக்கொள்ளும். அதன் விளைவாக விழிகளில் நீர் துளிர்த்துவிடும், மனம் பாரமாகிவிடும். இன்றும் அதே உணர்வு அவனை தாக்க ஹம்ஸினீயின் பார்வையை சந்திக்க மறுத்தான்.
உள்ளே சென்றவர்கள் நிறைய பெண்கள் வெள்ளை மற்றும் நீலக்கரை போட்ட புடவையில் இரும்பு கட்டிலில் மயக்கமருந்தின் உதவியால் உறங்கிக்கொண்டிருக்க ஹம்சினியின் விழிகள் அபியை தேடியப்படியே நர்ஸை பின்தொடர்ந்தது.
“இதோ நீங்க பார்க்க வந்த பேஷண்ட், தொல்லை பண்ணாமல் பார்த்திட்டு வெளியே வாங்க, அன்று மாதிரி அழுது ஊரை கூட்டாதீங்க, மற்ற பேஷண்ட்ஸ்க்கு தொல்லையாகிடும். நான் வெளியே இருக்கேன்…”
நர்ஸ் சொல்லிவிட்டு வெளியே செல்ல ஹம்ஸினீயின் காதுகளில் வேறேதும் விழவில்லை, அவள் விழிகள் அபியின் சிதைந்து போன சிருங்கார முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க, விழிகளில் வெள்ளம் உடைப்பெடுத்தது. அவள் கைகள் அபியின் முகத்தை சிறு நடுக்கத்தோடு வருடிக்கொடுக்க அழுகை வெடித்துக்கொண்டு வந்தது.
வாய்விட்டு ஓவென்று அழணும்னு போலிருந்த அழுகையை கட்டுப்படுத்தி, அவள் கட்டிலின் முன் மண்டியிட்டு அமர்ந்து அபியின் நெற்றியில் அவளின் இதழை பாசத்துடன் பதித்தாள். கௌதமும் கனத்த இதயத்துடன் அபியையே பார்த்துக்கொண்டிருந்தான் கண்ணீர் மல்க. ஏற்கனவே மனதளவில் பலகீனமாக இருந்தவன் ஹம்ஸினீயின் செய்கையில் உடைந்துவிட கடகடவென்று வெளியேறிவிட்டான்.
“உனக்கு என்ன ஆச்சு அபி, நான் ஹம்ஸி வந்திருக்கேன் கண்ணை திறந்து பார் அபி. சித்தப்பா உன்னை ஏத்துக்கலைன்னா போகுது, நானிருக்கேன் அபி உனக்கு. உன் வாழ்க்கையை நீ வாழாமல் போக கூடாது. கண்ணை திறந்து பார் அபி…”
மெல்லிய குரலில் அவள் முகத்தை வருடியபடியே புலம்பிக்கொண்டிருக்க அவளின் தோள் மீது ஒரு கரம் படிந்தது அழுத்தத்தோடு.