UN NESATHTHIL VAAZHVEN NAANAGAVE …

அத்தியாயம் _ 14

மகனின் பேச்சிற்கு சிரித்துக்கொண்டிருந்த பூங்காவனத்திற்கு சட்டென்று ஏதோ ஒரு விஷயம் நினைவு வர தன் சிரிப்பை நிறுத்தினார்.

“பிரபு உன்னிடம் ஒரு விஷயம் கேட்கணும்னு நினைக்கிறேன், ஆனால் மறந்திடறேன். கேட்டால் உண்மையை சொல்வாயா …?

தாயின் திடீர் சீரியஸான கேள்வியில் அவன் சிரிப்பு நின்றது.

“என்ன கேட்க போறீங்க, அதுவுமில்லாமல் உங்களிடம் மறைக்க என்னிடம் ஒன்றுமில்லையே, என்ன விஷயம் கேளுங்க ….?

“இல்லை உன்னிடம் மறைக்க விஷயமிருக்கு, அதனால் தான் இன்றுவரை நீ என்னிடம் சொல்லவே இல்லை. என்ன பிரபு அப்படி பார்க்கிறே, நானா சொல்றது புரியலையா? அல்லது புரியாத மாதிரி நடிக்கிறாயா …?

“ம்மா என்ன பேச்சு இது, நீங்களா இப்படி பேசறீங்க …?

“சரி சொல்லு, அன்றொரு நாள் மொட்டை மாடியில் நீயும், ஹம்ஸினீயும் ரொம்ப நேரம் பேசினீங்க. இரு இரு அதற்குள் முந்திரிக்கொட்டை மாதிரி கேள்வி கேட்காதே. பேசிவிட்டு வந்த உன் முகமும் சரியில்லை, அவள் முகமும் சரியில்லை. ஏதோ ஒரு விஷயத்தை அவள் உன்னிடம் சொல்லியிருக்காள். மே பீ அது கடந்தகாலமாக கூட இருக்கலாம். ஆனால் இதுவரை நீ என்னிடம் சொல்லலை. சொல்லு கண்ணா நீயும் நானும் மற்ற அம்மா, மகன் மாதிரியா பழகறோம், விஷயத்தை ஒளிச்சு வைக்கிற அளவுக்கு…?

தாய் பேச பேச பிரபுவுக்கு புரிந்துபோனது எதை பற்றி கேட்கிறார்கள் என்று. ஆனால் அவனுக்கு மறைக்க வேண்டுமென்ற எண்ணமில்லை. ஹம்ஸினீயின் கதையை கேட்ட அவனுக்கே நெஞ்சம் பதறி போச்சே, ஒரு தாயாக இருக்கிறவரின் மனது என்ன பாடு படும் என்ற பயத்தில் தான் அவன் தாயிடம் சொல்லாமல் மறைத்தான். ஆனால் இவர் எப்படி கண்டுபிடித்தார் என்ற ஆச்சர்யம் அவனை மூழ்கடித்தது. அவனின் விழிகள் அதை வெளிப்படுத்தவும் செய்தது.

“வாவ் சான்ஸ்லெஸ், அதெப்படி அவள் கடந்தகாலத்தை பற்றி தான் பேசினாள்ன்னு சொல்றீங்க. உண்மையில் அவளின் பாஸ்ட் பற்றி தான் சொன்னாள். நான் மறைக்கணும்னு மறைக்கலை, அவள் கடந்த கால வாழ்க்கை அவ்வளவு நல்ல வாழ்க்கை இல்லை. பாவம்மா அவள். நீங்க அதை கேட்டால் ரொம்ப வேதனைப்படுவீங்க. அதான் சொல்லலை. அதுமட்டுமில்லை அவளின் பாஸ்ட் லைஃப் பற்றி தெரிஞ்ச பிறகு தான் கௌதமுடன் அவளை அனுப்பி வைத்தேன்…”

“என்னப்பா சொல்றே…?

“ஆம்மாம்மா அவளுக்கு நடந்தது இனி எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாதும்மா. ரொம்ப பாவம் அவள். நான் கூட சொன்னேனே அவள் ஒரு வருடமாக ஆளையே காணவில்லைன்னு…”

“ஆமாம் சொன்னே, அவள் திருமணமாகி போயிருப்பாள் என்று சொன்னதற்கும் நீ ஒத்துக்கலை, ஏன் நான் சொன்னபடி அவளுக்கு திருமணம் ஆகிடுச்சா என்ன ?

“எப்படிம்மா இவ்வளவு சரியா சொல்றீங்க, அமேஸிங். அவளுக்கு திருமணமாகி அவள் கணவனுடன் அமெரிக்கா போய்ட்டாள். திருமணம் திடீர்ன்னு நடந்ததால் யாருக்கும் சொல்லலைன்னு சொன்னாள். அவள் கணவன் யு.எஸ்ஸில் டாக்டர். ஆனால் அது தான் அவளின் வாழ்க்கையை அழிச்சிருக்கு… ? என்றான் வேதனையோடு.

பூங்காவனம் அவனை புரியாமல் பார்த்து,”எனக்கு நீ சொல்றது புரியலை, ஒரு டாக்டரை தானே திருமணம் செய்து வைச்சிருக்காங்க.அதில் என்ன அழிவு வந்துவிட போகுது. ஏன் எந்த பெண்ணும் டாக்டரை திருமணம் செய்ததில்லையா ? டாக்டரை கல்யாணம் செய்துக்கிட்டு சந்தோஷமாக தானே இருக்காங்க பொண்ணுங்க …”

“இல்லைன்னு ஹம்ஸினீயின் வாழ்க்கை சொல்லுதே, ம்மா நாம எப்பவுமே ஒரு பக்கத்தை மட்டுமே தெரிஞ்சி வைச்சிட்டு பேசறோம். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியான பிரச்சினைகள் வரும். சிலபேர் டாக்டர் என்பதால் நேரம் காலமில்லாமல் உழைக்கிறார், நடுராத்திரியில் கூட எழுந்து ஆப்ரேஷன் இருக்குன்னு ஓடறார்ன்னு சொல்வாங்க. சில பேர் ரொமான்டிக் என்பதே இல்லை, எப்பொழுதும் ரத்தம், காயம், ஆப்ரேஷன் என்றே பேசறார்ன்னு சொல்வாங்க. மேலும் சில பேர் குடும்பத்தை பார்ப்பதே இல்லைன்னு சொல்வாங்க. ஆனால் ஹம்ஸினீயின் கேஸ் ரொம்ப வித்யாசம்…”

மகன் பேச பேச பூங்காவனத்திற்கு கவுண்டர் அடிக்கவோ, குறுக்கே புகுந்து பேசவோ விருப்பமில்லாமல் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார்.

“ஒரே பெண் என்பதால் டாக்டர் மாப்பிள்ளை அதுவும் அமெரிக்காவில் இருக்கும் டாக்டர் மாப்பிள்ளையாக பார்த்து திருமணம் செய்து வைச்சிருக்காங்க. அவனும் நிச்சயம் முடிந்த பிறகு ஹம்ஸினீயுடன் நன்றாக பழகியிருக்கிறான். அவளின் ஆசைப்படி ப்ரீ வெட்டிங் ஷூட், ஹல்தி பங்க்ஷன், சங்கீத் என்று வைச்சி அமர்களப்படுத்தி திருமணத்தை ரொம்பவும் க்ராண்டாக செய்த்திருக்காங்க. திருமணம் முடிந்தவுடன் அவர்களின் முதலிரவை அமெரிக்காவில் இருக்கிற வீட்டில் வைத்துக்கொள்ளலாம் என்று மாப்பிள்ளை சொல்லிவிட ஹம்ஸினீக்கு அது வித்யாசமாக தோன்றவில்லை.

ஒரே வாரத்தில் மனைவியை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை அமெரிக்கா செல்ல பிறந்த வீடும், புக்ககமும் அவளை சந்தோஷமாக வழி அனுப்பி வைத்திருக்கிறார்கள். அங்கே சென்று ஒரு வாரம் ஜெட் லாக், களைப்பு, வேலை பிஸி, அதனால் இப்போதைக்கு நாம வாழ்க்கையை தொடங்க வேண்டாம்ன்னு சொல்லியிருக்கான் மாப்பிள்ளை. ஆனால் பாவம் ஹம்ஸினீக்கு அதில் தான் பிரச்சினைன்னு தெரியாமலே கணவனின் பேச்சிற்கு தலையாட்டி வைத்திருக்கிறாள்.

ஒரு வாரம் பத்து நாள் ஓடிவிட ஒரு நாள் இரவு முதலிரவுக்கு பெரியவர்கள் நாள் குறித்து தர அன்று இருவரும் வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். வழக்கம் போல எல்லாம் நன்றாக தான் போயிருக்கிறது அவள் பால் கொண்டு போனது, இருவரும் கைகளை பிணைத்தபடி பேசிக்கொண்டது, சின்ன சின்ன சில்மிஷங்கள் செய்து சந்தோஷமாக இருந்தவரைக்கும் ஓகே. ஆனால்…”

சொல்லிக்கொண்டே வந்தவன் தாயின் முகத்தை பார்த்துவிட்டு சட்டென்று நிறுத்தினான் சங்கடத்துடன்.

“என்ன ஆச்சு பிரபு …”என்ற தாய்க்கு அவன் சங்கடம் புரிந்தே இருந்தது.

சின்ன சிரிப்புடன்,”புரியுது மேலே சொல்லு …”

“ஆனால் …ஆனால் …என்று இழுத்துவிட்டு,”திடீர்ன்னு மாப்பிள்ளை படுக்கையிலிருந்து எழுந்துவிட்டாராம் இன்று எனக்கு இதில் விருப்பமில்லைன்னு. ஹம்ஸினீயும் இதை பெரிசா எடுத்துக்கலை. ஆனால் இதுவே நாளைடைவில் தொடரவும் அவள் குழம்பி போனாள்…”

“தட் மீன்ஸ் போர் பிளே முடிந்து தாம்பத்தியம் தொடங்கும் முன் மாப்பிள்ளை ஹம்ஸினீயை விட்டு விலகிடறார் இல்லையா, ஏன் ஆண்மை இல்லாதவரா அவர். ஹம்ஸினீ வீட்டில் இதை சரியாக விசாரிக்கவில்லையா …?

தாய் தான் சொல்ல சங்கடப்பட்டதை மிக எதார்த்தமாக விரசம் இல்லாமல் சொல்லவும் பிரபுவுக்கு மனதுக்குள் ஒரு பெரிய நிம்மதி உண்டானது. ஆனால் அவர் கேட்ட கேள்விக்கு அவசரமாக மறுப்பாக தலையை உருட்டினான்.

“அப்படியெல்லாம் இல்லைம்மா, ஹம்ஸினீ அப்பா இந்த விஷயத்தில் ரொம்ப சரியாகவே விசாரித்திருக்கிறார். மாப்பிள்ளைக்கு எந்த பிரச்சினையுமில்லைன்னு ஹெல்த் சென்டருக்கு அழைத்துச் சென்று சான்றிதழ் வாங்கியவருக்கு மாப்பிள்ளையின் பிரச்சினையை கண்டுகொள்ள முடியவில்லை. அவரை சொல்லியும் குற்றமில்லை. மறைக்கணும்னு முடிவு செய்த பிறகு எப்படி வெளியே சொல்லுவாங்க, அதுவும் பெண் வீட்டில்…”

பூங்காவனம் புருவத்தை நெரித்தார் புரியாமல்.

“அப்படி என்ன பிரச்சினை அவருக்கு…?

“சொல்றேன், தினமும் இப்படியே நடக்க முதலில் குழம்பி போன ஹம்ஸினீ அதை கணவனிடமே கேட்டிருக்கிறாள். ஆனால் அவன் என்னென்னவோ சொல்லி அவளை சமாதானப்படுத்த அவளும் சமாதானமாகிவிட்டாள். ஆனால் மாப்பிள்ளை மாத கணக்காக இரவு டூட்டியில் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறான். கேட்டால் நிர்வாகம் கொடுக்கிற டூட்டியை நான் செய்து தான் ஆகவேண்டும் என்பானாம். அப்படியும் லீவ் நாட்களில் இரவு நேரம் வந்தால் சந்தோஷாமாக் ஊர் சுற்றி விட்டு வீட்டுக்கு வந்து புருஷன் பெண்டாட்டிக்கே உண்டான சீண்டல் சிணுங்கல்களுடன் போர் பிளே நடக்குமாம், எல்லாம் முடிந்து தாம்பத்யத்துக்கு தயாராகும் பொழுது அவனின் முகம் சட்டென்று இறுக்கமாகி அந்த இடத்தை விட்டே ஓடிவிடுவானாம்.

ஆரம்பத்தில் புரியாமல் குழம்பியவள் கணவன் வெட்கப்படுகிறான், தயங்குகிறான் என்றெண்ணி எப்படியும் கணவனின் தயக்கத்தை போக்கியே ஆக வேண்டுமென்று நினைத்து தொடர்ந்து முயற்சித்த பொழுது ஒரு முறை அவன் கட்டிலின் பக்கத்தில் பழத்தை நறுக்க வைத்திருந்த கத்தியை எடுத்துக்கொண்டு அவளை நெருங்கியிருக்கிறான்…”

குழப்பம் விலகாமலே கேட்டுக்கொண்டிருந்தவர் ஹையோ என்று வாயை பொத்திக்கொண்டார்.

“ஆமாம்மா கேட்கும் பொழுதே நமக்கு தூக்கிவாரி போடுதே, அப்பொழுது அவளின் உணர்வுகள் எப்படியிருக்கும்ன்னு யோசித்து பாருங்க. மாப்பிள்ளை கத்தியை எடுத்துக்கொண்டு அவளை நெருங்கியதுமே ஹம்ஸினீ பயந்து எழுந்து வாரிசுருட்டிக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்து வேறு அறையில் புகுந்து பூட்டிக்கொண்டாளாம்.

அடுத்த நாள் கணவனை பார்க்கவே பயந்தவளை அவளை காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்தியிருக்கிறான். இருந்தாலும் ஹம்ஸினீக்கு அந்த சம்பவத்தின் தாக்கத்தின் விளைவு இரவில் கணவனை படுக்கையில் சந்திக்கவே பயமாக இருந்திருக்கு. மாப்பிள்ளையும் அவளை வெளியே அழைத்துச் செல்வது, ரொமான்டிக்காக பேசுவது, அவளுக்காக சமைத்து தருவது என்றிருக்க அவளின் மனம் அன்று நடந்தது பிரம்மையோ என்ற மாதிரி மாறியிருக்கு. அதனால் மீண்டும் ஒரு நாளிரவு கணவனே அவளை கொஞ்சி தாம்பத்யத்துக்கு அழைத்திருக்கிறான்.

ஹம்ஸினீக்கு அவன் மேலிருந்த பயம் நீங்கி சந்தோஷத்துடன் அவனுக்கு சம்மதித்து எல்லாமே நல்லவிதமாக நடந்திருக்கு. எல்லாம் அவளின் உடலை முழுமையாக ஆடையின்றி பார்க்கும் வரை. சாரிம்மா …”என்றுவிட்டு மேலும் தொடர்ந்தான்.

பூங்காவனத்தின் இதயம் ஹைஸ்பீடில் துடித்துக்கொண்டிருந்தது, உண்மையில் இதை ஏதோ கதை என்ற ரீதியில் தான் கேட்டுக்கொண்டிருந்தார்.

“அதுவரை எல்லாம் நன்றாக போய்ட்டிருந்த அவர்களின் விளையாட்டு ஹம்ஸினீயை அப்படி பார்த்ததும் அவன் கை வழக்கம் போல கத்தியை எடுத்து அவள் நெஞ்சில் பதித்து கிழிக்க ஆரம்பித்திருக்கிறான். கணவனுடனான சல்லாப பரவசத்தில் விழி மூடி படுத்திருந்தவளுக்கு ஏதோ வித்யாசம் புரிய விழிகளை மலர்த்தியவள் கணவன் தன் நெஞ்சில் கத்தியை வைத்து கிழிக்க முற்படவும் அவள் அரண்டு போய் விதிவிதிர்த்து அவனை பதறி தள்ளி விட்டுட்டு அங்கிருந்து ஓடியிருக்கிறாள்…”

“நிறுத்து …நிறுத்து … “

அவசரமாக மகனை தடுத்த பூங்காவனம் நெஞ்சில் கைவைத்து நீரில்லாமல் தரையில் துடிக்கும் மீன் சுவாசத்திற்கு தவிப்பது போல தவித்தார். தாயின் முகம் வெளுத்து , நெஞ்சில் கையை வைத்துக்கொள்ளவும் மகன் பதறி அவரை நெருங்கினான்.

“அம்மா என்னம்மா ஆச்சு…? என்னம்மா பண்ணுது ….? என்றவன் பக்கத்திலிருந்த தண்ணீர் பாட்டிலை திறந்து தாயிடம் நீட்டினான் குடிக்க சொல்லி.

அதை மறுக்காமல் வாங்கி கடகடவென்று சரித்துக்கொண்ட பூங்காவனத்திற்கு இன்னும் படபடப்பு அடங்க மறுத்தது. பதட்டத்தில் தன் மேலே சிந்தியிருந்த தண்ணீரை துடைத்தபடி மகனை ஒன்றுமில்லை என்று சைகையில் சமாதானித்தார். சில நொடிகளில் அவர் நார்மலாகிவிட பிரபுவுக்கு உயிர் போய் உயிர் வந்தது.

“இதுக்கு தான் நான் உங்களிடம் சொல்லாமல் விட்டேன், இப்போ பாருங்க, கொஞ்ச நேரத்தில் ஆடி போய்ட்டேன் …” என்றான் கண்டன குரலில்.

“ஒண்ணுமில்லை கண்ணா, எனக்கு அந்த சூழ்நிலையை கற்பனை பண்ணி பார்த்ததும் ஒரு மாதிரி ஆயிடிச்சு. பாவம் ஹம்ஸினீ பொண்ணு. எப்படி பயந்திருப்பாள். அந்த மாப்பிள்ளை சரியான பைத்தியமாடா. எவனாவது இப்படி ஒரு காரியம் செய்வானா? டேய் பிரபு அவன் சைக்கோவா, அதை மறைத்து கல்யாணம் பண்ணிவைச்சிட்டாங்களா…? என்று விழிகளை அகல விரித்தார் பயத்தில்.

“ப்ச் அப்படியெல்லாம் இல்லைம்மா, அவன் சுபாவத்தில் நல்லவன் தான், அவன் மனைவி மேலே அன்பு, நேசம், பாசம் எல்லாம் இருக்கு. ஆனால் அவன் பார்க்கிற தொழில் அவனை அபப்டி நடந்துக்க வைச்சிருக்கு…”

“என்னடா பெரிய தொழில், உலகத்தில் எத்தனை டாக்டர்ஸ் இருக்காங்க, எல்லோரும் இப்படி தான் மனைவியை நியூடா பார்த்ததும் கத்தி எடுத்து வெட்…”

ஆத்திரத்துடன் சொல்லிக்கொண்டு வந்தவர் சட்டென்று பேச்சை நிறுத்தி, பின் யோசித்து மீண்டும் பேசினார்.

“ஹேய் பிரபு இப்போ நீ சொன்னதையெல்லாம் வைச்சி பார்த்தால் எனக்கு எங்கேயோ பார்த்த, கேட்ட நிகழ்ச்சி மாதிரி இருக்கு. இது …இது ஆடையின்றி ஒரு பெண்ணை படுக்கையில் பார்த்தால் அவன் கத்தி எடுக்கிறான், அப்படின்னா…கண்ணா …போஸ்ட்மார்ட்டம் செய்யும் பொழுது உயிரற்ற உடல்கள் ஆடையின்றி இருக்கும். மண்டையை உடைத்து, உடலை கிழித்து …ஹையோ எனக்கு தலை சுத்துது …” என்று தலையை பிடித்துக்கொண்டார்.

“அம்மா ரிலாக்ஸ்…ரிலாக்ஸ் …”என்றவன் தாயின் தோளை பிடித்தழுத்தினான் மிருதுவாக.