UN NESATHTHIL VAAZHVEN NAANAANGAVE …
அத்தியாயம் _6
நல்லசிவத்தின் கடைசி யாத்திரையை பிரபு எவ்வித குறைகளும் இல்லாமல் செவ்வெனே நிறைவேற்றி ஒரு வாரம் பத்து நாட்கள் ஓடிவிட்டிருந்தது. ஹம்ஸினீ சொன்ன மாதிரியே அவளின் சொந்தங்கள் நல்லசிவம் தன் கடைசி பயணத்தை தொடங்கியதுமே பறவைகள் கூட்டத்தில் கல்லெறிந்த மாதிரி எல்லோரும் கலைந்து போய்விட அவளின் விழிகள் பிரபுவை அர்த்தத்துடன் நோக்கியது.
“என்னடா இது, ஒரு வயசு பொண்ணு அப்பாவை இழந்து யாருமில்லாமல் தனியாக நிற்கிறாள், அவளை பற்றி யோசிக்காமல் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் இப்படி கைகழுவிட்டு போறாங்க. என்ன மனுஷங்க இவங்க …” பொரிந்து தள்ளினார் பூங்காவனம்.
“ம்மா விடுங்க, ஹம்ஸினீ தான் ஏற்கனவே சொல்லிட்டாளே. இவங்க யாரும் தேவையில்லை, நாம இவளை பார்த்துக்கலாம். ஹம்ஸினீ நீ கிளம்பு, இனி தனியா இங்கே இருக்க வேண்டாம்…”
“என் சொந்தகாரங்க எப்படின்னு எனக்கு எப்பவோ தெரியும். அவங்க போனதற்காக நான் வருத்தப்படலை, உண்மையை சொல்லனும்னா நான் சந்தோஷப்படறேன். கூடவே இருந்து அக்கறை காட்டறேன்ற பெயரில் டார்ச்சர் செய்யாமல் ஒதுங்கி சென்றதும் ஒரு விதத்தில் நல்லது அண்ட் நான் தனியா இருந்துப்பேன் பிரபு. அம்மா இறந்ததிலிருந்து எனக்கு தனிமை பழகிடிச்சி. இவ்வளவு தூரம் வந்து எல்லாவற்றையும் நல்லபடியா முடிச்சி கொடுத்ததுக்கு ரொம்ப நன்றிம்மா…”
“ப்ச் என்ன பேசிட்டிருக்கே, நன்றியெல்லாம் சொல்றது இருக்கட்டும். இவ்வளவு நாள் நீ தனியா இருந்தது வேறு, இப்போ தனியா இருக்கிறது வேறு. இந்த நிலைமையில் உன்னை தனியா விட்டுட்டு போறது சரியில்லை. ம்மா என்ன பார்த்திட்டு இருக்கீங்க, நீங்களும் சொல்லுங்களேன்…”
மகனின் குரலிலிருந்த பதட்டத்தை அவரால் புரிந்துக்கொள்ள முடிந்தது. ஆயினும் சுதந்திரமாக செயல்பட நினைக்கும் ஒருத்தியை அக்கறை என்ற போர்வையில் குண்டு சட்டியில் போட்டு அடைக்கவோ, சங்கடப்படுத்தவோ அவர் விரும்பவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு தேவை தான், அதற்காக எப்பொழுதும் ஆண்கள் முதுகுக்கு பின்னால் ஒளிந்துகொள்வது உவப்பானதன்று. இதை எப்படி பிரபுவுக்கு புரியவைப்பது.
“பூங்காவனம் என்ன யோசிக்கிறே, நான் சொன்னது காதில் விழலையா? ஹம்ஸினீ வரமாட்டேன்னு சொல்றா பாருங்க …”
படபடத்த மகனை விழி முடி திறந்து அவனை அமைதிப்படுத்தினார்.
“இப்போ எதுக்கு கடுகு மாதிரி பொரியறே கண்ணா, ஹம்ஸினீ சொல்றதும் சரி தானே. அதுக்காக நீ அவள் மேல் கொண்டுள்ள அக்கறை தப்புன்னு நான் சொல்ல வரலை. அவள் பக்கமும் நியாயமிருக்கு. இந்த உலகத்தில் பெண்கள் தனியா இருக்க முடியாதுன்னு நினைக்கிறியா பிரபு… ?
தாயின் நிதானமான கேள்வியில் துணுக்குற்று நிமிர்ந்தவன், அவசரமாக தலையை ஆட்டி மறுத்தான்.
“ஹையோ அம்மா நான் அப்படி சொல்ல வரலை. இப்போதிருக்கிற சூழ்நிலையில் அவளுக்கு ஒரு மனமாற்றம் தேவை. அதற்காக தான் சொன்னேனே தவிர ஹம்ஸினீயின் தைரியத்தை நான் குறைவாக மதிப்பிட்டு பேசலை, சாரி ஹம்ஸினீ என்னை தப்பா எடுத்துக்காதே…” என்றான் ஒரு வேகத்தோடு.
“லூசு மாதிரி பேசாதே, இவ்வளவு நாளாக ஒரு நல்ல ப்ரெண்டா இருந்தே, இப்போ என் அப்பாவின் காரியங்களுக்கு ஒரு மகன் ஸ்தானத்தில் இருந்து எல்லாவற்றையும் செய்து ஒரு சகோதரனாக மாறியிருக்கே. உனக்கு என் மீது கோபப்படவும், அக்கறை காட்டவும், திட்டவும் எல்லா உரிமையும் இருக்கு. ஆனால் நீ ஒன்றை மறந்திடாதே பிரபு…”என்றவள் பூங்காவனத்தின் கைகளை பிடித்துக்கொண்டாள்.
“அப்பப்போ அம்மாவை பார்த்து நானும் வளர்ந்திருக்கேன். உன்னை தனியாளாக தைரியமாக நின்று வளர்த்ததை நினைத்து பல நேரங்களில் வியந்திருக்கிறேன். அவங்களை போல என்னாலேயும் தனியா வாழ முடியும், அவங்க வளர்ப்பில் வளர்ந்த நீ என்னை நினைத்து பயப்படலாமா… ? என்று சிரித்தாள்.
பூங்காவனம் அவள் முகத்தை வழித்து நெட்டிமுறித்தார்.
“இப்படி தான் பெண்கள் துணிச்சலா இருக்கணும், உனக்கு எப்பொழுதெல்லாம் தோணுதோ அப்பொழுதெல்லாம் வீட்டுக்கு வந்துட்டு போ. உனக்கொரு அம்மா வீடு இருக்குன்னு மட்டும் மறந்திடாதே. ஏதாவது தேவையென்றால் ஒரு போன் செய், பிரபு ஓடி வருவான் …”
“ரொம்ப தேங்க்ஸ்ம்மா, என் அப்பாவை இழந்தது வருத்தமான விஷயம் தான், ஆனால் எதிர்பார்ப்பில்லாத அன்பை பொழிய எனக்கு ஒரு அம்மாவும், சகோதரனும் கிடைச்சதை நினைச்சி ரொம்ப சந்தோஷமா இருக்கு. நிச்சயம் நான் அடிக்கடி வீட்டுக்கு வந்து தொல்லை கொடுப்பேன்…”என்று சிரிக்க, பூங்காவனம் அவளை வாஞ்சையுடன் அணைத்து நெற்றியில் முத்தமிட்டார்.
பெண்கள் இருவரின் பாச சங்கமத்தை புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்தவன் திடீரென்று ஏதோ நினைவு வந்தவனாக அவளை அழைத்தான்.
“ஹம்ஸினீ, நீ வெளிநாட்டில் பார்த்த வேலையை விட்டுட்டேன்னு சொன்னே இல்லையா, இப்போ மறுபடியும் வேலைக்கு எங்கேயாவது அப்ளை செய்திருக்கியா … ?
“ம்ஹீம் இனி தான் வேலை தேடற படலத்தை ஆரம்பிக்கணும். வெளிநாட்டுக்கு போற ஐடியா இல்லை, இங்கேயே தான் தேடணும்…”
“ஓ ! சரி உன் ரெஸ்யூம் என் மின்னஞ்சலுக்கு அனுப்பு, நானும் முயற்சி செய்யறேன். மறுபடியும் கேட்கிறேன்னு டென்ஷன் ஆகாதே, பத்திரமா இருந்துப்பே தானே…” என்றான் அரைமனதாக.
“டோன்ட் ஒர்ரி பிரபு, நான் பத்திரமா இருந்துப்பேன், நீங்க கிளம்புங்க, அம்மாவும், நீயும் பத்து நாளாக எனக்காக லீவ் போட்டு இங்கேயே இருந்துட்டீங்க. நாளையிலிருந்து வேலைக்கு போகணுமே, போய் ரெஸ்ட் எடுங்க…”
“சரிங்க பாட்டி, அம்மா வயசான பாட்டி சொல்லிட்டா, நாம கிளம்பிடலாம். இல்லையென்றால் கழுத்தை பிடிச்சி தள்ளிடுவா போல…”
மகனின் கேலிக்கு சிரித்தபடி ஹம்சினியிடம் விடைபெற்று இருவரும் கிளம்ப அவளின் விழிகள் நிறைந்தது அவர்களின் அன்பிலும், நேசத்திலும்.
கெளதம் வீடு…
“இன்னும் இரண்டு நாளில் பெங்களுர் கிளம்பனும் பிரபு, நீ இன்னும் நான் கேட்டதை செய்து கொடுக்கலை…”என்றான் சிறு கோபத்தோடு.
“அய்யா சாமி, ரொம்ப சாமியாடாதே. நீ கேட்ட வேலைக்கு சரியான ஆளை தேட வேண்டாமா ? அதுவும் வருஷ கணக்கில் வேலைன்னு சொல்றே. அதான் யோசனையா இருக்கு. இரு நான் கிளம்பி அங்கே வர்றேன்…” என்று தொடர்பை துண்டிக்க முயல கெளதம் அவனை தடுத்தான்.
“டேய் …டேய்… நீ வராதே, நானே அங்கே வர்றேன். ஆன்ட்டியை பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு. ஊருக்கு கிளம்பறதுக்கு முந்தி பார்த்துட்டே கிளம்பறேன்…” என்று இணைப்பை துண்டித்தான்.
பிரபு வீட்டுக்கு போகணும், பூங்காவனம் ஆன்ட்டியை பார்க்கணும் என்றதும் உடம்பில் புது ரத்தம் பாய்ந்த மாதிரி ஒரு புத்துணர்ச்சியும், சந்தோஷமும் தொற்றிக்கொள்ள கடகடவென்று ரெடியாகி தன் உடமைகளோடு அறைக்கதவை திறந்தான். அந்நேரம் அவன் அறைக்கதவை தட்ட எத்தனித்த தந்தை மகனே கதவை திறக்கவும் புன்னகைத்தார்.
“நானே உன்னிடம் பேசணும்னு வந்தேன், நீயே கதவை திறந்துட்டே. ரொம்ப அவசரமா வெளியே கிளம்பறியா கெளதம்… ?
தந்தையை கண்டதும் அவனின் முகமும் பூவாய் மலர்ந்தது.
அவனுக்கு தந்தை மேல் என்றுமே கோபமிருந்ததில்லை. அவரும் கெளதம் மாதிரியே சிந்திக்கிறவர் தான். அதனால் என்னவோ தந்தை மீது அவனுக்கு ஓட்டுதல் அதிகம். அவரை எதிர்த்து பேசவோ, தட்டி பேசவோ அவன் முயன்றதில்லை. அதற்கான சந்தர்ப்பங்களையும் ராம்பிரசாத் கொடுத்ததில்லை.
மகன் தன்னை மதிக்கிறான், பாசம் காட்டுகிறான் என்பதற்காக அட்வான்டேஜ் எடுத்துக்கொண்டதில்லை. வயதுக்கு வந்த பையன், அதுவும் தந்தையின் நிழலில் நிற்காமல் தனக்கென்று ஒரு தொழிலை உருவாக்கி அதில் வெற்றிகரமாக முன்னேறி வந்தவன். அவனுக்கு தெரியாததையா நான் சொல்லிவிட போகிறேன் என்று யோசிப்பவர். அதனாலேயே இன்று வரை மகனுக்கும், மனைவிக்கும் நடக்கும் பனிப்போரில் அவர் தலையிட்டது இல்லை.
மனைவியை தான் கண்டிப்பார், நீ செய்தது தவறு, அதற்குண்டான விளைவுகளை அனுபவித்தே ஆகணும் நித்யா. அதை மற்றவர்கள் மேல் சுமத்தியோ, நீ செய்ததை நியாயப்படுத்தியோ என்னிடம் பேசாதே. கௌதமிடம் சமாதானம் செய்ய சொல்லாதே. நீ செய்த வேலைகளை நான் மன்னிக்கலாம், இழப்புக்களை ஏற்றுக்கொள்ளலாம், அதற்காக எல்லோரும் என்னை மாதிரியே விட்டுக்கொடுத்து போகவேண்டுமென்று ஆசைப்படாதே.
அவனாகவே மனம் மாறும் காலம் வரும் வரை நாம் காத்திருக்க தான் வேண்டும். செய்த தவறுகளை மன்னிப்பு என்ற வார்தைகளாலோ கண்ணீராலோ என்றுமே சரி செய்துவிட முடியாது என்பார்.
“என்னப்பா அதிசயமா என் ரூம் பக்கம் தரிசனம் தர்றீங்க, உள்ளே வாங்க …”
மகன் புன்னகையுடன் வரவேற்கவும் ராம்பிரசாத் சற்று தயங்கினார்.
“நீ எங்கேயோ கிளம்பிட்டிருக்கே, நீ முதலில் உன் வேலையை முடிச்சிட்டு வாயேன், நாம அப்புறம் பேசலாம்…”
“ஓ! பரவாயில்லை நீங்க வாங்க, நீங்க பேசணும் என்றாலே நிச்சயம் முக்கியமான விஷயமாக தான் இருக்கும். வந்து உட்காருங்க…”
அதற்கும் மேலும் பிகு செய்யாமல் உள்ளே சென்று அங்கிருந்த குஷன் சோஃபாவில் அமர, கௌதம் எதிரில் அமர்ந்தான்.
“சொல்லுங்கப்பா, எப்படி இருக்கீங்க ? உங்க பிஸினெஸ் எப்படி போய்ட்டிருக்கு, நான் ஏதாவது செய்யணுமா… ?
“பார்த்தாயா ஒரே கூரையின் கீழ் இருந்தாலும் என்னவோ பலவருஷம் பார்க்காதவங்க மாதிரி கேள்வி கேட்டுக்கிறோம். என் பிசினெஸ்க்கு என்ன நல்லா போய்ட்டிருக்கு, உன் பிசினெஸ் எப்படி போகுது, நீ பெங்களுர் போகணும்னு சொன்னியே? இந்த வாரமா ? லக்கேஜ் ரெடி பண்ணிட்டியா… ?
“பிசினஸ் சூப்பரா போகுது, இன்னும் இரண்டு நாளில் கிளம்பிடுவேன். சரி சொல்லுங்க ஏதோ பேசணும்னு சொன்னீங்களே… ?
கெளதம் விஷயத்திற்கு வர, ராம்ப்ரசாத்க்கு வந்த விஷயத்தை பேச தயக்கமாக இருந்தது. இதுவரை அவர் கொள்கையில் தீவிரமாக இருந்தவர் ஒரு கட்டத்திற்கு மேல் மனைவி படும் துன்பங்களையும், அவளின் கண்ணீரையும் பார்க்க சகிக்காமல் மகனிடம் தன் கொள்கையை கைவிட்டு பேச வந்திருந்தார்.
தந்தை அமைதியாக கைகளை பார்த்துக்கொண்டிருக்கவும் கெளதம்க்கு சிறு சந்தேகம் எழுந்தது அவர் என்ன பேசவந்திருப்பார் என்று.
“சொல்லுங்கப்பா, எனக்கு பிடிக்காத விஷயத்தை பற்றி நீங்க என்றைக்கும் பேச மாட்டீங்கன்னு தெரியும். உங்களுக்கு நான் ஏதாவது உதவி செய்யணுமா, அப்படியென்றால் தயங்காமல் சொல்லுங்க…”
மகனின் நேரத்தையும், அவனின் பொறுமையையும் சோதிக்கிறோம் என்று புரிந்தாலும் வந்த விஷயத்தை பற்றி பேச நா எழவில்லை, ஆயினும் பேசாமல் தீராதே.
தொண்டையை கனைத்துக்கொண்டு,”முதலில் உன்னிடம் நான் சாரி கேட்டுக்கிறேன் கெளதம், நீ எனக்கு ஒரு உதவி தான் செய்யணும், செய்வியா… ?
அவனுக்குள் எச்சரிக்கை மணி அடிக்க “என்ன உதவி… ? விழிகள் இடுங்க.
“உனக்கே தெரியும் நான்…”என்றவரை கையமர்த்தினான்.
“சுத்தி வளைச்சி பேசறது உங்களுக்கு பழக்கமில்லாதது, நேரடியாகவே விஷயத்துக்கு வாங்க…”
விழி மூடி தன்னை நிதானித்து,”இன்னும் எத்தனை நாளைக்கு உன் அம்மாவுக்கு தண்டனை கொடுக்கிறதா உத்தேசம் கெளதம். அவள் உன்னை பெற்றவள், தவறு செய்துட்டாள் தான், நான் இல்லையென்று சொல்லலை. அவளால் நீ நிறைய பாதிக்கப்பட்டிருக்கே. அதுக்காக காலம் முழுவதும் ஒருத்தரை தண்டிக்க முடியுமா ? இன்னும் எத்தனை நாள் நீயும் இந்த தனிமையில் உழலுவே… ?
தந்தை பேச பேச கௌதமின் இறுக்கம் கூடிக்கொண்டே போனது, ஏனோ அவனுக்கு தாயை பற்றி பேசவோ, அவர் செய்தவைகளை நினைவு கூரவோ சற்றும் விருப்பமில்லை.
ஒரு நெடிய பெருமூச்சை இழுத்து விட்டவன் அங்கிருந்து எழுந்து சில அடிகள் நடந்துவிட்டு மீண்டும் தந்தையின் எதிரில் அமர்ந்தான்.
“நீங்க என்னிடம் இப்படி பேசுவது கொஞ்சம் அதிர்ச்சியா தான் இருக்கு. பாதிக்கப்பட்டது நான் மட்டுமா அப்பா, நீங்க இல்லையா ? இழப்பு உங்களுக்கு இல்லையா ? மனைவியின் கண்ணீர் உங்களை எல்லாவற்றையும் மறக்க வைத்துவிட்டதா ? ஸ்ட்ரேஞ். இன்னும் எத்தனை நாள் இந்த தனிமைன்னு கேட்டீங்கல்ல. ஹ்ம்ம் குட் கொஸ்டின். முட்களை ரசிக்க ஆரம்பிச்சிட்டா வலிகளும், வேதனைகளும் பழகிடும். நானும் முட்களை ரசிக்க கத்துக்கிட்டேன்.
சாரிப்பா நான் நடந்த விஷயங்களை யோசித்து பார்க்க கூட விரும்பலை. நான் இழந்தது போதும், இனியும் என்னிடம் இழக்க ஒன்றுமே இல்லை. தனிமை எனக்கு தானே. எவ்வளவு பெரிய விஷயங்களையும் அசால்டாக எடுத்துக்கிறவங்களுக்கு நான் ஒருத்தன் இந்த வீட்டை விட்டு போவது பெரிசா தோன்றாது. இங்கே இருப்பதினால் தான் தேவையில்லாத எண்ணங்களும், வாக்குவாதங்களும் நடக்குது. இன்னும் இரண்டு நாள் பொறுத்துக்கங்க. அதன் பிறகு நான் பெங்களூரிலேயே செட்டில் ஆயிடுவேன்.
உங்களை நான் தட்டி பேசறேன்னு நினைச்சுக்க வேண்டாம், அப்படி ஒரு சூழ்நிலையையும் எனக்கு உருவாக்கி கொடுத்திடாதீங்க. இது என் வாழ்க்கை, அதை எப்படி அமைச்சிக்கிறதுன்னு நான் பார்த்துக்கிறேன். என்னை இந்தளவு ஆளாக்கி விட்ட உங்களை மேலும் மேலும் தொல்லை செய்ய எனக்கு இஷ்டமில்லை. சரிப்பா எனக்கு நேரமாச்சு நான் கிளம்பறேன்…”
ஒவ்வொரு வார்த்தைகளையும் தெளிவாக ஆனால் அழுத்தி சொல்லி முடித்துவிட்டு எழ, ராம் ப்ரசாத்க்கு மகனின் மனதிலிருந்த ரணம் கொஞ்சம் கூட ஆறவில்லை என்று புரிய அவரும் எழுந்தார்.
“ஓகே கௌதம், நீ கிளம்பு…” என்று அவன் தோளில் தட்டிக்கொடுத்துவிட்டு கீழிறங்கி செல்ல கௌதமின் விழிகள் அவரை வேதனையோடு தொடர்ந்தது.
பிரபுவின் வீடு…
கௌதமின் கார் சத்தம் கேட்டு வெளியே வந்தவன் காரிலிருந்து இறங்கியவனை அன்புடன் அணைத்து வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றான்.
சத்தம் கேட்டு சமையலறையிலிருந்து வந்த பூங்காவனம் கௌதமை கண்டு கனிவோடு வரவேற்றார்.
“வாப்பா கெளதம், எப்படி இருக்கே, பார்த்து வருஷ கணக்காச்சு…”
“நல்லா இருக்கேன் ஆன்ட்டி, உங்களை பார்க்க நேரமில்லாட்டாலும் பிரபுவிடம் உங்களை பற்றி விசாரிச்சு தெரிஞ்சுக்குவேன்…”
“சரிப்பா பேசிட்டு இருங்க, இதோ வர்றேன் …”என்று உள்ளே சென்றவர் மீண்டும் வெளியே வரும் பொழுது காஃபியோடு வந்தார்.
அவனிடம் காஃபியை கொடுத்துவிட்டு அவனெதிரில் அமர்ந்தார்.
“நீ பெங்களூர் போறேன்னு சொன்னான் இவன், எத்தனை மாசம் அங்கே இருப்பே…?
கெளதம் கேள்வியாக நண்பனை நோக்கிவிட்டு,”மாசக்கணக்கில் இல்லை ஆன்ட்டி, வருஷ கணக்கு. அங்கே ஒரு ப்ராஜெக்ட் வந்திருக்கு. அதை முடிச்சி கொடுத்திட்டு தான் சென்னை வருவேன்…”
“அப்போ இங்கே இருக்கிற உன் ஆபிஸ், அதன் வேலைகள்… ?
“கொஞ்ச காலத்துக்கு அதை விஷ்ணு பார்த்துப்பான், அதன் பிறகு ஆபிஸை பெங்களூரிலேயே மாத்திக்கலாம்ன்னு ஐடியா வைச்சிருக்கேன். சரிங்க ஆன்ட்டி உங்க ஸ்கூல் வேலை எப்படி இருக்கு ? இவன் என்ன சொல்றான் … ? எப்போ கல்யாணம் செய்துக்க போறானாம்… ?
அவனுக்கு பூங்காவனம் ஆன்ட்டி அடுத்து என்ன கேட்பார்கள் என்று புரிந்துவிட சட்டென்று பேச்சை திசை திருப்பினான்.
“உன் நண்பன் உன்னை மாதிரி தானே இருப்பான், கல்யாணம் என்றாலே பிடரியில் கால் பட காத தூரம் ஓடறான். அதுவுமில்லாமல் அவன் லட்சியத்தை அடைஞ்ச பிறகு தான் கல்யாணமாம்…”என்றார் அலுப்போடு.
தாயின் பேச்சு போகும் பாதை அறிந்த சீமந்தபுத்திரன் அவன் பங்குக்கு பேச்சை மாற்றினான்.
“அதை விடு, உன்னுடன் பெங்களுர் வர ஒரு பெர்சனல் அசிஸ்டண்ட் கேட்டியே, நான் ரெடி பண்ணிட்டேன். என்ன சம்பளம் தருவே … ?
“என்ன கேள்விடா இது, இவ்வளவு தூரம் என்னுடன் வர சம்மதித்து, என் ப்ராஜெக்ட் முடியற வரைக்கும் என்னோடவே இருக்க போறாங்க. அவங்க திறமைக்கு ஏற்ற சம்பளம் கண்டிப்பா கிடைக்கும். சரி அவங்களிடம் நீ எல்லா விஷயத்தையும் சொல்லிட்டியா ? அவங்க சம்மதிச்சிட்டாங்களா … ?
“இதில் சம்மதிக்க என்ன இருக்கு. வாரத்தில் ஐந்து நாள் வேலை, வீக்கெண்ட் லீவ், அவங்களுக்கு தனி பிளாட், மூன்று மாசத்திற்கு ஒரு வாரம் லீவ். நல்ல பேக்கேஜ். இதுக்கும் மேலே என்ன வேண்டும். இப்போதைக்கு சம்மதிக்க வேண்டியது நீ தான். இரு நான் கூப்பிடறேன், நீயே பார்த்து பேசிக்கோ…” என்றவன் எழுந்து உள்ளே செல்ல கெளதம் புரியாமல் பூங்காவனத்தை பார்த்தான்.
“பிரபுவோடு ப்ரெண்ட்ப்பா, அவளும் வேலை தேடிட்டு இருந்தாள். அவளை தான் உனக்கு ரெஃபர் செய்யறான். ரொம்ப நல்ல பொண்ணு…” என்றார் அவர் பங்குக்கு.
“ஆனால் ஆன்ட்டி ஆளே கிடைக்கலைன்னு…” சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே பிரபு ஒரு பெண்ணோடு வெளியே வந்தான்.