UN NESATHTHIL VAAZHVEN NAANAANAGAVE …

அத்தியாயம் – 3

எதிர்பாராத நேரத்தில் கேட்ட சத்தமான ரிங்க்டோனால் பூங்காவனம் பதறி கையிலிருந்த தட்டை நழுவ விட வறுகடலை எங்கும் சிதறி ஓடியது.

“டேய் என்ன கண்ராவி பாட்டுடா இது? அதுவும் உன் போனிலா , என்னாச்சுடா உன் டேஸ்ட் இவ்வளவு மட்டமா இருக்கு …”

மகனை கழுவி ஊற்றியபடி கீழே சிதறிய கடலைகளை பொறுக்கி தட்டில் போட ஆரம்பிக்க பிரபு போனை எடுத்து பேசியப்படியே தாய்க்கு கடலைகளை சேகரிக்க உதவி செய்தான். மகன் பேசிவிட்டு வைத்ததும் மீதி கடலைகளை அப்படியே விட்டுட்டு அவன் முன் அமர்ந்தார்.

“என்ன பாட்டுடா இது, கேட்கவே நாராசமா இருக்கு, நேற்று கூட உன் ரிங் டோன்ல ஒரு மெலோடி சாங் இருந்துச்சே…?

தாயின் கேள்விக்கு சிரித்தான்.

“ஹையோம்மா நீ நினைக்கிற மாதிரி இது நான் ஆசைப்பட்டு ரிங்க்டோன் செலெக்ட் செய்யலை. என் கொலீக் ஒருத்தன் ஒரு பெண்ணை லவ் பண்றான்…”

“பையனாக இருந்தால் பெண்ணை தானே லவ் பண்ணியாகணும் …” என்று மகனின் பேச்சில் குறுக்கிட்டு ஜோக்கடித்து சிரிக்க பிரபு தலையில் கையை வைத்துக்கொண்டான்.

“ஓ சரி சரி இனிமே நான் குறுக்கே பேசலை, நீ சொல்லு கண்ணா …”என்று தாஜா செய்தார்.

“ம்மா இனி ஒரு முறை நீ மொக்க போட்டே, அப்புறம் நான் பொல்லாதவனாயிடுவேன். சொல்றதை முதலில் கேட்டுட்டு அப்புறம் என்னை பிளேடு போடு …”என்று தாயை செல்லமாக மிரட்ட அவரோ இதழ்களில் ஒரு விரலை வைத்து மூடிக்கொண்டார் சிறு பிள்ளை போல.

“ம்ஹீம் உன்னை திருத்தவே முடியாது, சரி சொல்றேன் கேட்டுக்கோ. பைத்தியம் பிடிச்சவன் பக்கத்தில் கூட குடியிருந்திடலாம் போல, இந்த லவ் பண்றவங்க பக்கத்தில் உட்கார கூட முடியலை. எப்பொழுது பார்த்தாலும் தொண தொணன்னு ஒரே லவ் ரிங்க்டோன் தொல்லை. என் காதல் நீ தானா , காதல் நீதானான்னு, காதிலே ரத்தம் வருது அவனால்.

அதான் அவனை பழி வாங்க வேண்டுமென்றே இந்த ரிங்க்டோனை தேர்வு செய்து சத்தத்தையும் அதிகமாக்கிட்டேன். இன்று முழுக்க நான் என் பசங்களை வைச்சி கால் பண்ண சொல்லி அவனை வைச்சி செய்தேன்ல. பய கண்ணீர் விட்டு கதறிட்டான் என்னிடம் ரிங்க்டோனை மாற்ற சொல்லி…”

பிரபு சொல்லிவிட்டு சிரிக்க பூங்காவனத்திற்கு அந்த பையன் மனக்கண்ணில் தோன்றி அவன் கதறிய காட்சியை கற்பனை செய்து பார்க்க சிரிப்பு பீறிட்டது.

“டேய் அவனுக்கே அவன் காதல் மேலே சந்தேகம் போல, அதான் காதல் நீதானான்னு ரிங்க்டோன் வைச்சி அடிக்கடி கேட்டுக்கிறான் போல …”

சொல்லிவிட்டு பூங்காவனம் வெடித்து சிரிக்க, பிரபு தாயின் மொக்கைக்கு அவரை முறைக்க முயற்சி செய்து முடியாமல் வாய்விட்டு சிரித்தான். தாயும் மகனும் சிரித்து முடிக்க அப்பொழுது தான் பிரபுவுக்கு ஹம்ஸினீ கதையை பாதியிலே விட்டது நினைவுக்கு வந்தது.

“அச்சோ பாருங்களேன் நாம பேசிட்டிருந்த விஷயத்தையே மறந்துட்டேன், ஹம்ஸினீக்கு இன்னும் திருமணமே ஆகலைம்மா, அப்படி ஆகியிருந்தால் எங்க செட்டில் இருக்கிறவங்களுக்கு முக்கியமா எனக்கு தெரிஞ்சிருக்குமே. ஏன் திடீர்ன்னு காணாமல் போனாள்ன்னு முதலில் தெரிஞ்சிக்கணும்…”

பேசியபடி எழ, பூங்காவனம் அவனை கேள்வியாக நோக்கினார்.

“ம்மா ப்ரெண்ட் வர சொல்லியிருக்கான், நான் போயிட்டு சீக்கிரமா வந்துடறேன். நீங்க பசிச்சா சாப்பிட்டுடுங்க. எனக்காக பசியோடு காத்திருக்காதீங்க…”

சொல்லிக்கொண்டே அறையினுள் நுழைந்து அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் வெளியே செல்லும் உடையோடு வாட்சை காட்டிக்கொண்டே வர பூங்காவனத்தின் மனது மகனின் அழகில் நிறைந்து போனது.

ஆர்மி ஆபிஸரான கணவர் முரளிதரன் மாதிரியே நல்ல நிகு நிகுவென உயரம், நல்ல கலர், கைக்கொள்ளா கேசத்தை அழகாக பார்லர் சென்று க்ரூம் செய்திருந்தான். பிரபுவுக்கு மீசை, தாடியெல்லாம் பிடிக்காத ஒன்று. பூங்காவனம் பலமுறை சொல்லி பார்த்தும் அதில் மட்டும் தாயின் பேச்சை கேட்கவில்லை மகன். அதனால் பூங்காவனமும் வருத்தப்படவில்லை. அவனின் கலருக்கு இங்க் ப்ளூ கலர் ஷர்ட்டும், மணல் கலர் பேண்ட்டும் கண்ணை பறித்தது.

“என்னம்மா புதுசா பார்க்கிற மாதிரி பார்த்திட்டு இருக்கீங்க? சரிம்மா ஏதாவது வாங்கிட்டு வரணுமா, சொல்லுங்க வரும் பொழுது மார்க்கெட் போயிட்டு வந்துடறேன். அப்புறம் நான் சொன்னது நினைவு இருக்கட்டும், எனக்காக காத்திருக்க வேண்டாம். என்ன தேவையோ அதை எனக்கு வாட்ஸாப் செய்யுங்க…”

தாய்க்கு அறிவுறுத்தியபடியே சேரில் அமர்ந்து ஷூ லேஸை இறுக்கி முடிச்சிட்டபடி எழுந்து பைக் சாவியை எடுத்துக்கொண்டு விடைபெற்றவனை நிறுத்தினார் பூங்காவனம்.

“பத்திரமா போய்ட்டுவா, அப்புறம் உன் போன் ரிங்க்டோனை முதலில் மாத்துடா. இது திடீர்ன்னு கத்தினால் பாவம் பக்கத்தில் இருக்கிறவன் …”

தாயின் பேச்சிற்கு சிரித்துவிட்டு அவரிடம் கையாட்டி விடைபெற்றுச் செல்ல பூங்காவனம் புன்னகையோடு உள்ளே வந்து மீண்டும் டிவியின் முன் அமர டிவிக்கு பக்கத்திலிருந்த ஸ்டாண்டில் வைக்கப்பட்டிருந்த கணவரின் படத்தின் மீது விழிகள் படிந்தது.

முரளிதரன் பெயருக்கேற்ற மாதிரி அழகான, அன்பான கணவன். வேலையும் அதே போல அமைந்தது. ஆர்மியில் மேஜர். நாட்டுப்பற்று அதிகம் உள்ளவர். அதனால் என்னவோ ஒவ்வொரு முறை ஊருக்கு வந்துவிட்டு செல்லும் பொழுதும் தனக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால் அழுது ஒப்பாரி வைக்க கூடாது. தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் மறுமணம் செய்துக்கொள்ளவேண்டும் என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டு செல்வார்.

பிரபு பிறந்து ஐந்து வயதாகும் பொழுது முரளிதரன் ஒரு போரில் குண்டடி பட்டு சிகிச்சை பலனிக்காமல் இறந்து போனார். சின்ன குழந்தையை கையில் வைத்துக்கொண்டு கணவர் இல்லாமல் சமாளிப்பது கஷ்டமாக தான் இருந்தது. கணவருக்கு இருக்கும் தேசபக்தி அவருக்கும் இல்லாமலா போகும். போதத்திற்கு கணவரின் அறிவுரை வேறு. எல்லாம் சேர்ந்து பூங்காவனம் தன்னை சீக்கிரத்திலேயே சரி செய்துக்கொண்டார். ஆனால் கணவரை சுமந்த மனதிலும், நெஞ்சிலும் இன்னொருத்தரை சுமக்க பூங்காவனத்திற்கு துளியும் விருப்பமில்லை. அதனால் பெற்றோர்கள், உற்றார்கள் வற்புறுத்தியும் அவள் சம்மதிக்கவில்லை.

கணவருக்காக ஆர்மியில் கொடுத்த உதவி தொகையையும் திருப்பி கொடுத்துவிட்டார். என் கணவர் தேசத்திற்காக உயிரை கொடுத்திருக்கார், அதை நான் விலைபேச விரும்பவில்லையென. பிகாம் வரை படித்திருந்த பூங்காவனம் தெரிந்தவர் மூலம் ஒரு பள்ளிக்கூடத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கேயே வேலை செய்துக்கொண்டே முறைப்படி டீச்சர் வேலைக்கு படித்து பட்டம் பெற்று இன்று உயர்நிலை பள்ளியில் கணக்கு டீச்சராக வேலை செய்துவருகிறார்.

மகன் பிரபுவையும் ஒழுக்கமான பையனாக வளர்த்து, நன்றாக படிக்க வைத்து பேங்கில் ஒரு பெரிய பதவியில் அமரவைத்துவிட்டார். இனி அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். ஆனால் பிரபு தான் இன்னும் பச்சை கொடி காட்டவில்லை. திருமணம் அவனின் கார், வீடு வாங்கும் லட்சியத்திற்கு தடையாக இருக்குமாம்.

ஆரம்பத்தில் ஹம்ஸினீயை வீட்டிற்கு அழைத்து வந்த பொழுது பூங்காவனத்திதிற்குள் சிறியதாக ஆர்வம் மகன் அவளை விரும்புகிறானோ என. ஆனால் ஹம்ஸினீயும் சரி, பிரபுவும் சரி அப்படி ஒரு நம்பிக்கையை அவருக்கு கொடுக்கவில்லை. பூங்காவனமும் மகனை வற்புறுத்தவில்லை. அவன் போக்கிலேயே விட்டுவிட்டார், அவனுக்கு தெரியும், எது சரி எது தவறுன்னு என்ற நம்பிக்கை அவருக்கு. கணவரின் புன்னகையில் பூரித்த முகத்தையே சில நொடிகள் ரசித்துவிட்டு பார்வையை டிவிக்கு திருப்பினார். அவர் எப்பொழுது பார்க்கும் தமிழ் சீரியல்களை ஓட விட்டார்.

சற்று நேரம் அமர்ந்து அதிலேயே மூழ்கியிருந்தவர் மணி எட்டை தொடவும் டிவியை நிறுத்தாமலேயே சமையலறைக்கு சென்று பிரிட்ஜை திறந்து என்ன தேவை என்று பார்த்து மகனுக்கு குறுந்செய்தி அனுப்பிவிட்டு ,தேங்காய் சட்னியை அரைத்து தாளித்து, இரண்டு தோசை ஊற்றிக்கொண்டு வந்து மீண்டும் டிவி முன் அமர்ந்தார். அடுத்த ஒரு மணி நேரத்தில் பிரபுவின் பைக் சத்தம் கேட்டதும் பூங்காவனம் பரபரப்பாகி அடுப்பில் தோசை கல்லை போட்டார்.

உள்ளே நுழைந்தவனின் முகம் சற்றே வாடி போன மாதிரி இருக்க தாயின் புருவங்கள் நெரிந்தது கேள்வியாக. ஆனால் கேள்வி கணைகளை தொடுக்காமல் மகன் உடைமாற்றி வந்ததும் அவனை அமரவைத்து டிஃபனை பரிமாறி அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதி காத்தவர் அதற்கு மேல் தன் அமைதி நோன்பை முடித்துக்கொண்டார்.

“ப்ரெண்டை தானே பார்க்க போனே, ஏன் உன் முகம் வாடியிருக்கு பிரபு? என்னாச்சுப்பா…?

“ஒன்றுமில்லைம்மா, சரிம்மா நீங்க படுங்க. நாளைக்கு நான் சீக்கிரம் ஆபிஸ் போகணும் …” என்றவன் தன் அறைக்குள் நுழைந்துவிட பூங்காவனத்திற்கு யோசனையாக இருந்தது மகனின் செயல்.

அடுத்த நாள் எழுந்து வழக்கம் போல பூங்காவனம் காலையில் எழுந்து குளித்துவிட்டு வர அவர் கையில் சுட சுட காஃபியை திணித்தான் அருமை மகன். எப்பொழுதுமே காலை காஃபியை பிரபு தான் தயாரிப்பான். இந்த பழக்கம் அவன் கல்லூரியில் படிக்கும் பொழுது ஏற்பட்டது. இன்று வரை விடாமல் தொடர்கிறது. தாயும், மகனும் நிதானமாக காஃபியை குடித்தவாறே உலக விஷயங்களோ, பேங்க்கில் நடக்கும் விஷயங்களோ அவரின் பள்ளியில் நடக்கும் சுவாரசியமான விஷயங்களையோ, செய்தியில் பார்த்த விஷயங்களையோ அலசி ஆராய்ந்தவாறே குடித்து முடிப்பார்கள்.

ஆனால் இன்று பூங்காவனம் அமைதியாக இருக்க பிரபுவுக்கே ஒரு மாதிரி இருந்தது தாயின் மௌனம்.

“ஸாரிம்மா, நேற்று நான் கெளதம் வீட்டுக்கு தான் போயிருந்தேன். அவன் தான் வர சொல்லியிருந்தான். ப்ச் பாவம்மா அவன். அதே சமயம் அவங்க அம்மாவும், தங்கையும் படுகிற வேதனைகளை நினைச்சாலும் கஷ்டமா இருக்கு. யாருக்கு ஆறுதல் சொல்றதுன்னு தெரியாமல் முழி பிதுங்குது. அதான் நானும் கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டேன். நீ தப்பா நினைச்சிக்காதேம்மா…”

மகனின் மன்னிப்பு கோரல் தாயை உலுக்கியது.

“என்ன கண்ணா இது மன்னிப்பெல்லாம். சரி விடு, இன்னும் கெளதம் எத்தனை வருடம் தான் இப்படியே இருப்பான். அவனுக்கு நீ எடுத்து சொல்ல வேண்டியது தானே. அந்த பிள்ளையால் பெத்தவளும், கூட பிறந்தவளும் எவ்வளவு கஷ்டப்படறாங்க. எப்போ தான் இதுக்கு விடுவி காலம்…”

காஃபி டம்பளரை கையில் வைத்து உருட்டியபடி,”நான் சொல்லாமல் இருப்பேனா? எனக்கு கெளதம் ரொம்ப ஸ்பெஷல்ன்னு உனக்கே தெரியும். அவன் தனக்குள்ளே நத்தையாக சுருண்டு போவதை பார்க்க மனசு என்னமோ மாதிரி இருக்கும்மா. அதுக்காக நான் புத்தி சொல்றேன்னு அவன் மனதை புண்படுத்தவிட கூடாதே. அவனுடைய உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்கணுமே. ஏதோ என்னிடம் பேசி அவன் மன பாரத்தை இறக்கி வைக்கிறான். நானும் அவங்க வீட்டு ஆட்கள் மாதிரி நடந்துக்கிட்டால் அவ்வளவு தான், உள்ளதும் போச்சு நொள்ளை கண்ணா கதையாகிடும். அவன் என்னிடமும் பேசாமல் சுத்தமா அவனுக்குள்ளே ஒடுங்கிடுவான்…”

“ஹ்ம்ம் புரியுதுப்பா, ஆனால் இது எத்தனை காலத்துக்கு தொடரும். காலம் தானே காயத்துக்கு மருந்து. ஆனால் அந்த மருந்தையே நான் ஏத்துக்க மாட்டேன், எதையும் மறக்க விடமாட்டேன்னு இருக்கிற பிள்ளையின் மனது எப்படி தான் சரியாகும்…”

தாயின் அங்கலாய்ப்பு பிரபுவுக்கு நன்றாகவே புரிந்தது. கெளதம் நன்றாக இருந்த காலத்தில் பலமுறை வீட்டிற்கு வந்து பூங்காவனத்தின் கையால் சாப்பிட்டிருக்கான். அவனுக்கு தன் வீட்டை விட மிக எளிமையான பிரபுவின் வீடு தான் மிகவும் பிடித்தம். தன் வீட்டில் தாய் நித்யா தேவியின் பகட்டும், தந்தையின் எப்பொழுதும் வேலை வேலை என்ற பிஸியும், தங்கையின் அலட்டலும் அவனுக்கு சுத்தமாக பிடித்ததே இல்லை.

வீட்டில் எப்பொழுது பார்த்தாலும் அறுசுவை உணவு தான், கௌதமோ சாதாரண இட்லி சட்னிக்கு ஏங்குகிற ரகம். ஆனால் அதெல்லாம் இந்த வீட்டில் செய்ய கூடாது, எப்பொழுதும் பைவ் ஸ்டார் ஹோட்டல் மெனு தான் செய்யணும் என்பதில் பிடிவாதம் உள்ளவர் நித்யா. கௌதமுக்கு பிரபு அறிமுகமாகும் வரை வீட்டில் தான் சாப்பிட்டான்.

அதன் பிறகு பிரபு பள்ளிக்கு கொண்டு வரும் உணவை தான் எடுத்துக்கொண்டு அவனுக்கு மதியம் கேரியரில் வரும் சாப்பாட்டை பிரபுவிடம் கொடுத்துவிடுவான். சில சமயங்களில் பிரபுவுக்கே கெளதம் வீட்டு பகட்டான உணவை சாப்பிட திகட்டும். அதன் பிறகு கல்லூரியில் சேர்ந்த பிறகு அடிக்கடி பிரபு வீட்டுக்கு வந்துவிட்டு போவான். வந்தால் அவனை சாப்பிட வைத்து தான் அனுப்புவார் பூங்காவனம். அவருக்கு கௌதமும் தன் மகன் பிரபு மாதிரி தான்.

மிகவும் இரக்க குணம் உடையவன், ஒருத்தர் மீது எதிர்பார்ப்பில்லாத அன்பை வைப்பவன். யாரையும் எடுத்தெறிஞ்சி பேச மாட்டான். முடிந்த
வரை விட்டுக்கொடுத்து போகிறவன். அப்படிப்பட்ட பையன் இன்று பெற்றவர்களை ஒரு துளி கூட மதிக்காமல், பேசாமல் இருக்கிறான். ஹ்ம்ம் எல்லாம் காலத்தின் கோலம்.

“என்னம்மா அமைதியா இருக்கீங்க? என்ன யோசனை உங்களுக்குள் ஓடிட்டு இருக்கு …?

ஒரு நெடிய பெருமூச்சை எடுத்துவிட்டு,”ரத்தமும், சதையும், உயிரும், உணர்வுமாக இருக்கிற மனிதர்களை விட வெறும் அச்சடித்த காகிதம் பெரிசா போய்டிச்சி எல்லோருக்கும். பணம் என்பது தேவைக்கு இருந்தால் போதும்னு மனுஷங்க எப்போ நினைக்கிறார்களோ அப்போ தான் இந்த உலகமும் சுபீட்சமாக இருக்கும். ஹ்ம்ம் சரி அதை விடு. கௌதமின் பிஸினெஸ்ஸை இப்போ யார் பார்த்துக்கிறா…?

தாயின் பேச்சை கிரஹித்துக்கொண்டிருந்தவன் கௌதமின் பிசினஸ் பற்றி கேட்டதும் அவனின் சீரியஸ் முகம் மாறி அதில் சிறு கேலி வந்தமர்ந்தது.

“என்ன கேள்விம்மா இது, அவன் பெற்றவர்களின் பணம் வேண்டாமென்று அவன் ஆரம்பித்த பிசினெஸ் அது. அதுவும் ஆசை ஆசையாய் ஆரம்பித்தது. அதை எப்படி விடுவான். அவனுக்கு மனது சரியில்லை, வீட்டு ஆளுங்களோடு பேச்சில்லை தான், அதற்காக நாலு சுவத்துக்குள்ளே முடங்கிற ஆளா அவன். அதெல்லாம் அவனின் கன்ஸ்ட்ரக்ஷ்ன்ஸ் சூப்பரா போகுது. இப்போ புதுசா ஒரு ப்ராஜெக்ட் கிடைச்சிருக்குன்னு சொன்னான். இன்னும் ரெண்டு மாசத்திலே பெங்களுர்க்கு போயிடுவான்…”

“ஓ ! நல்ல விஷயம் தான், ஆனால்…? என்று இழுத்து மேற்கொண்டு கேட்காமல் நிறுத்தினார்.

“என்னம்மா ஏதோ கேட்க வந்தே ? என்ன விஷயம்…?

“அதில்லை, ஏற்கனவே கெளதம்க்கு அவங்க வீட்டு ஆட்களோடு சரியான ஒட்டுறவு இல்லை, இந்த நிலைமையில் ப்ராஜெக்ட், வேலைன்னு பெங்களுர் போனால் எப்படி? அப்புறம் அறவே உறவு முறிஞ்சிட போகுது. பார்த்துக்கோ பிரபு, அந்த பிள்ளையிடம் பேசு…” என்றார் சிறு கலக்கத்துடன்.

தாயை வாஞ்சையாக நோக்கிவிட்டு, எழுந்துச் செல்ல முற்பட அவன் கையை பிடித்து இழுத்து அமர்த்தினார்.

“நான் உன்னிடம் ஒரு விஷயம் பேசணும், அதற்கு இன்றே எனக்கு நீ தீர்வு சொல்லணும் …”

“என்ன பெரிசா பேசிட போறீங்க , எப்போ கல்யாணம் செய்துக்க போறேன்னு தானே கேட்பீங்க? இப்போதைக்கு நான் ரெடி இல்லை…” என்றான் அழுத்தம் திருத்தமாக.

“ஹேய் அதெப்படி கண்ணா நான் இதை தான் கேட்க போறேன்னு தெரியும் ?

“ம்கூம், இதை கண்டுபுடிக்க ஷெர்லாக்ஸ் ஹோம்ஸ் வரணுமா, இல்லை ஒரு மனோதத்துவ டாக்டர் வரணுமா? இதே கேள்வியை தானே நான் வேலையில் சேர்ந்த ஆறாம் மாசத்திலிருந்து கேட்கறீங்க. போரடிக்காதே பூங்காவனம், வா டிஃபன் செய்யலாம், பேங்க்க்கு நேரமாச்சு, நீயும் ஸ்கூலுக்கு கிளம்பணுமே …” என்று எழ, பூங்காவனமும் எழுந்தார் சிரிப்புடன்.

தாய்க்கு டிஃபன் செய்ய உதவிவிட்டு ரெடியாகி சாப்பிட்டுவிட்டு தாயை பள்ளியில் கொண்டு போய் விட்டுட்டு தன் ஆபிஸ்க்கு வந்து சேர்ந்து தன் சீட்டில் அமர்ந்து வேலையில் மூழ்கியிருந்தவன் உள்ளே வரலாமா என்ற குரலுக்கு சிஸ்டத்திலிருந்து விழிகளை அகற்றாமலே அனுமதி கொடுத்தான்.

“குட் மார்னிங் ஸார் …” என்ற கஸ்டமருக்கு விழிகளை அவர் பக்கம் திருப்பி பதில் வணக்கம் சொன்னவனின் விழிகள் கேபினுக்கு வெளியே கையில் டோக்கனுடன் தன் முறைக்காக காத்திருந்த பெண்ணின் மீது விழ, விலுக்கென்று எழுந்தான்.