UN NESATHTHIL VAAZHVEN NAANAANAGAVE …
அத்தியாயம் _ 5
மகனின் வரவை ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்த பூங்காவனத்திற்கு தாமதமாக வந்த மகனின் முகத்தை கண்டு திடுக்கிட்டு போனார். வந்ததும் விசாரணை வேண்டாம் என்றெண்ணியவர் பிரபு கைகால் கழுவிக்கொண்டு வரும் வரை அமைதியாக இருந்தவர் உடையை கூட மாற்றாமல் சோர்வாக சோஃபாவில் வந்தமர்ந்தவன் கையில் காஃபி டம்ப்ளரை திணித்துவிட்டு அவனெதிரில் அமர்ந்தார்.
தாய் எதிரில் அமர்ந்ததை கூட கவனியாமல் கையில் திணித்த காஃபி டம்பளரை உதட்டுக்கு கொடுத்தான் அனிச்சை செயலாக.
“என்னாச்சு பிரபு, வந்ததிலிருந்து யோசனையிலேயே இருக்கே, முகமும் சரியில்லையே. வேலையில் ஏதேனும் பிரச்சினையா கண்ணா … ?
தாயின் குரலில் சிந்தனை கலைய, நிமிர்ந்து ஒரு நொடி விழித்துவிட்டு பின் நிதானித்தான்.
“ம்ஹீம் எனக்கு பிரச்சினையில்லை, ஆனால் இன்று ஹம்ஸினீயை பேங்கில் சந்தித்தேன்…”
“ஓ சூப்பர்ப்பா, எப்படி இருக்காளாம், எங்கே போனாளாம் …” படபடவென்று கேள்விகளை கொட்ட தொடங்கியவர் சடாரென்று நிதானித்தார்.
“அது சரி நீ ஏன் ஒரு மாதிரி இருக்கே, முகமே சரியில்லையே… ?
“சொல்றேன்ம்மா …” என்றவன் பேங்கில் அவளை சந்தித்து பேசின விஷயங்களையும் ஹாஸ்பிடலில் அவள் அப்பாவின் பெயரில் பேஷண்ட் யாருமில்லை என்பதையும் கூறிமுடித்தான்.
“அவள் என்னிடம் பொய் சொல்லியிருக்களாம்மா, அதுவும் அப்பாவுக்கு ஆப்ரேஷன்னு எதுக்கு பொய் சொல்லணும், எனக்கு ஒரே குழப்பமா இருக்கு…”
“ஓ இதான் விஷயமா ? நான் ஏதோ என்னவோன்னு நினைச்சிட்டேன். அவள் ஏன் உன்னிடம் பொய் சொல்லணும் பிரபு. கொஞ்சம் யோசித்து பார். உனக்கும் அவளுக்கும் வாய்க்கா வரப்பு தகறாரா என்ன ? அதுவும் அப்பாவின் விஷயத்தில் பொய் சொல்கிறவள் இல்லை ஹம்ஸினீ. அதிருக்கட்டும் நீ அவளுக்கு போன் செய்து விஷயத்தை கேட்டியா… ?
தாய் சொல்வதிலும் நியாயமிருக்க பிரபுவுக்கு மேலும் யோசனை ஓடிக்கொண்டிருக்க தாயின் போன் செய்தியா என்ற கேள்விக்கு தாயை அலுப்பாக நோக்கினான்.
“ம்மா என்னிடம் அவளின் நம்பர் இல்லையே ? அப்புறம் எப்படி நான் போன் செய்ய முடியும் ? ஆனாலும் நீங்க சொல்றது ஒரு வகையில் சரின்னு தோணுது, இருந்தும் ஏன் அப்பாவை ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கேன், அவர் ஆபரேஷனுக்கு பணம் எடுக்க வந்தேன்னு சொல்லணும். அது தான் புரியலை, ஒரே குழப்பமா இருக்கு…”
“விட்டு தள்ளு அவளுக்கு என்ன பிரச்சினையோ ? சரி எங்கேயாவது வெளியே போறியா ? டிரஸ் மாற்றாமல் இருக்கே… ?
“ஆமாம்மா கெளதம் வர சொன்னான், ஏதோ முக்கியமான விஷயமாம், நான் போயிட்டு வந்துடறேன். நீங்க சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க …”
சொல்லியபடி பைக் சாவியை கையில் எடுக்க அவனின் கைபேசி நாதமாய் சிணுங்கியது. மகனின் ரிங்க்டோன் மாறியதை நினைத்து பூங்காவனத்திற்கு சிரிப்பு வந்தது.
கெளதம் அழைக்கிறானோ என்று யோசித்தபடி கைபேசியை எடுத்தவன் புது நம்பரை கண்டதும் புருவங்களை சுருக்கி தாயை நோக்கினான்.
யாருன்னு பார் என்ற தாயின் சைகையை தொடர்ந்து தொடர்பை இணைத்தான்.
“ஹல்லோ சொல்லுங்க, யார் வேண்டும் … ?
அவனின் நம்பரை கூறி,”இது பிரபு முரளிதரன் தானே…”
ஒரு இனிமையான பெண் குரல் சோகமாய் விசாரிக்க அவனுக்கு சட்டென்று பிடிபட்டது அது ஹம்ஸினீயின் குரல் என.
“நான் பிரபு தான், நீங்க ஹம்ஸினீ தானே, ஹேய் என் நம்பர் உனக்கு எப்படி… ?
மேலே பேசும் முன் பூங்காவனம் அவனை இடைவெட்டி விஷயத்தை கேளு என்று அறிவுறுத்தினார் சைகையால்.
தன் தலையில் தட்டிக்கொண்டு,”சொல்லு ஹம்ஸினீ, என்னாச்சு உன் குரல் ஒரு மாதிரி இருக்கு ? நான் கொஞ்ச நேரத்துக்கு முந்தி ஹாஸ்பிடல் வந்தேன் ஆனால் …”என்றவனை இம்முறை ஹம்சினீயின் குரல் இடைவெட்டியது.
“அப்பா இறந்துட்டார் பிரபு, கொஞ்சம் வீட்டுக்கு வர்றியா … ? அட்ரஸ் டெக்ஸ்ட் பண்றேன்…”
இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட பிரபு அதிர்ந்து தாயை நோக்கினான்.
“என்னாச்சுப்பா, ஹம்ஸினீ என்ன சொன்னாள்… ?
“அங்கிள் இறந்துட்டாராம்…”
“ஹையோ என்ன கொடுமை இது, பிரபு நீ உடனே அவ வீட்டுக்கு கிளம்பு, பாவம் கொழந்தை தனியா இருந்து என்ன கஷ்டப்படறாளோ. கௌதமுக்கு அவசர வேலைன்னு மெசேஜ் பண்ணிடு. இரு நானும் வர்றேன்…”
மகனின் பதிலை எதிர்பாராமல் விடுவிடுவென்று உள்ளே சென்று அடுத்த பத்தாவது நிமிடத்தில் வெளி வந்து டிவியை அணைத்து மகனுடன் பைக்கில் கிளம்பிவிட பிரபுவின் கைகளும், மனதும் இயந்திரத்தனமாக ஹம்ஸினீயின் வீட்டை நோக்கி பைக்கை செலுத்தியது.
தாய் சொன்ன மாதிரி இந்த விஷயத்தில் பொய் சொல்ல மாட்டார்கள் என்று நான் ஏன் நினைக்கலை. ஹாஸ்பிடலில் அங்கிளின் பெயர் இல்லையென்றதும் அத்தனை கோபப்பட்டேனே, அவளை சந்தேகித்தேனே, கடவுளே இதென்ன சோதனை. அம்மாவும் இறந்து நோயாளி தந்தையோடு போராடி கொண்டிருந்தவளுக்கு இன்று அவரும் இல்லாமல் தனியாளாக ஆகிவிட்டாளே. ச்சே இந்த கடவுளுக்கு இரக்கமே இல்லையா… ?
ஹம்ஸினீயின் வீட்டை கண்டுபிடித்து செல்ல முக்கால் மணிநேரமாகியது. அவள் வீட்டின் முன் ஷாமியானா போட்டு இறுதி ஊர்வலத்திற்கு ரெடியாகிக்கொண்டிருக்க கும்பல் ஜெ ஜெ என்றிருந்தது. வண்டியை சற்று தூரத்தில் நிறுத்திவிட்டு இருவரும் ஓட்டமும் நடையுமாக வீட்டினுள்ளே செல்ல பெரிய ஹாலின் நடுவில் ஐஸ்பெட்டியில் சமர்த்தமாக படுத்திருந்தார் நல்லசிவம். நல்லசிவம் என்ற பெயர் பறிபோய் பிணம் என்ற புதுப்பெயர்க்கொண்ட அவரின் மேல் ஏகப்பட்ட மாலைகள். கண்ணாடி பெட்டியின் மீதும் மாலைகள். அதை ஒருவன் ஒதுக்கி வந்தவர்களுக்கு முகம் சரியாக தெரியாமளவுக்கு செய்துக்கொண்டிருந்தான்.
பிரபுவுக்கு போனில் கேட்ட செய்தியையே ஜீரணிக்க முடியாமல் இருந்தவனுக்கு நேரில் அவரை ஐஸ் பெட்டியில் பிணமாக பார்த்ததும் சுவாசம் ஒரு நொடி நின்று துடித்தது. அவனின் பார்வை அந்த கூட்டத்தில் ஹம்ஸினீ எங்கேயென்று தேடியது. ஐஸ்பெட்டிக்கு சற்று தள்ளி ஒரு சில பெண்களுடன் அழுதழுது சிவந்த விழிகளும், காய்ந்த இதழ்களும் ஒளியிழந்த கண்களுமாக சோர்வாக தாயின் மார்பில் அடைக்கலம் புகுந்திருந்தவளை காண மனது துடித்து போனது.
காலையில் அன்றலர்ந்த மலர் மாதிரி இருந்தவள் இப்பொழுது வெயிலில் பறித்து எறியப்பட்ட மலர் போல வாடி வதங்கி சற்றும் ஜீவனே இல்லாமல் இருந்ததை காண காண மனம் தகித்தது.
அவளை நெருங்கி அழைக்கவும், தாயின் அணைப்பிலிருந்து மெல்ல விழிகளை உயர்த்தி நோக்கினாள் கண்ணீரில் ஊறிய விழிகளுடன். பிரபுவுக்கு அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் வார்த்தைகள் தொண்டைக்குள்ளே சிக்கிக்கொள்ள ஹம்ஸினீ விழிகளை துடைத்துக்கொண்டு அவனை ஏறிட்டாள்.
“பணம் எடுத்திட்டு ஹாஸ்பிடலுக்கு வர்றதுக்குள் அப்பாவின் உயிர் போய்டிச்சி. விசாரிச்சதுக்கு அவருக்கு பிட்ஸ் வந்தது தான் காரணம்ன்னு சொன்னாங்க. அவர் ஏற்கனவே பல மாசமா உடல்நிலை சரியில்லாமல் ஹாஸ்பிடலில் இருந்ததால் உடனே அடக்கம் பண்ண சொல்லி பார்மாலிட்டிஸ் முடிச்சி கொடுத்துட்டாங்க. மதியமே பாடி வீட்டுக்கு வந்துடிச்சி…”
“இவ்வளவு நடந்திருக்கு, நீ வழக்கம் போல என்னிடம் எதையும் சொல்லலை அப்படி தானே…?
பிரபுவின் குரலில் அடக்கப்பட்ட ஆத்திரம் தெரிந்தது.
“சொல்ல வேண்டாம்ன்னு தான் நினைச்சேன், ஆனால் நேரமாக ஆக என் தனிமை என்னை தின்ன ஆரம்பிச்சிடிச்சி பிரபு, அதனால் தான் போன் செய்தேன்…”
அவள் தனிமை என்றதும் சுற்றி இருந்த மனிதர்களை பார்வையால் அலச, ஹம்ஸினீயின் இதழ்களின் ஓரத்தில் கைந்த புன்னகை நெளிந்தது.
“எல்லோரும் அப்பாவை அடக்கம் பண்ணியதும் காணாமல் போய்டுவாங்க. வெறும் சொந்தகாரங்க…” என்றாள் வெறுத்த குரலில்.
“டோன்ட் ஒர்ரி நானும், அம்மாவும் இருக்கோம். நீ இந்த நேரத்தில் தான் தைரியமா இருக்கணும்…”
பூங்காவனத்தின் கையை பிடித்துக்கொண்டு,”ஆன்ட்டி இங்கே வந்ததுமே யானை பலம் வந்த மாதிரி ஒரு உணர்வு. இனி எனக்கு பயமில்லை பிரபு, தேங்க்ஸ்…”
“டோன்ட் பீ சில்லி, தேங்க்ஸ் தூக்கி குப்பையில் போடு. சரி நான் ஆக வேண்டிய காரியங்களை கவனிக்கிறேன்…”
நகர்ந்தவனை சிறு தயக்கத்துடன் நிறுத்தினாள்.
“ஒரு உதவி செய்யணுமே பிரபு …” என்றாள் தயக்கமும், கெஞ்சலுமாக.
“எதுக்கும்மா உதவின்னு சொல்லிட்டிருக்கே, என்ன செய்யணுமோ சொல்லு, உன் ப்ரெண்ட் செய்வான்…” என்றார் பூங்காவனம் சற்றும் பிசிறில்லாமல் .
“அதில்லை ஆன்ட்டி, அப்பாவின் கடைசி காரியங்களை நின்று செய்ய ஆண்பிள்ளை இல்லை. நான் ஒரே பெண் உங்களுக்கே தெரியுமே, அதான் …”என்னும் பொழுதே பிரபு கையை உயர்த்தி அவள் பேச்சை தடை செய்தான்.
“அங்கிளுக்கு கொள்ளி போடணும் அவ்வளவு தானே, ஒரு மகனா நான் அவருக்கு செய்யறேன். அம்மா அவளை பார்த்துக்கங்க …” என்றவன் கடகடவென்று வெளியே செல்ல ஹம்ஸினீயின் விழிகளில் மீண்டும் கண்ணீர் சுரந்தது.
ஆனால் இம்முறை அப்பாவை இழந்துவிட்டதற்காக அல்ல. அவரின் காரியங்களை செய்ய உடன் பிறந்தவன் போல பிரபுவும், ஒரு தாயை போல பூங்காவனம் அம்மாவும் வந்த நிம்மதியில்.
கெளதம் வீடு …
விக்னேஷின் தந்தையின் கடைசி காரியங்களுக்கு சென்றுவிட்டு அலுப்போடு வீட்டுக்கு வந்தவனுக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள். விக்னேஷின் குடும்பமும் சரி, சொந்தங்களும் சரி இறந்தவரின் மேல் வைத்திருந்த மரியாதையும், பாசமும் அவர்களின் அழுகையிலும் அந்த வீட்டு காரியங்களை எடுத்து செய்ததிலும் நன்றாகவே அவனுக்கு புரிந்தது. அக்கம் பக்கத்து ஆட்கள் கூட கூடி குழுமியிருந்தார்கள். அவரின் ஆபிசிலிருந்தும் மேல்மட்ட அதிகாரியிலிருந்து கடைநிலை ஊழியன் வரை வந்திருந்து மரியாதை செலுத்திவிட்டு சென்றார்கள். எல்லோரிடமும் ஒரு மனிதன் நல்லவனாக இருப்பது சற்று அசாத்தியமே. ஆனாலும் விக்னேஷின் அப்பா அப்படி தான் வாழ்ந்துவிட்டு போயிருந்தார். அப்படிப்பட்டவரை கொலை செய்ய வேண்டுமென்றால் என்ன மாதிரி காரணம் இருந்திருக்க முடியும். காலையில் விக்னேஷ் சொன்னதிலிருந்து இதே தான் அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
போலீஸ் காரங்களும் விக்னேஷை கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்க அப்பாவின் இழந்ததற்கு அழுவதா இல்லை போலீசின் கேள்விகளுக்கு பதில் சொல்வதா என்று தெரியாமல் விழிபிதுங்கி திணறிக்கொண்டிருந்தவனுக்கு கெளதம் கைகொடுத்தான். மேலிடத்தில் பேசி இப்போதைக்கு விக்னேஷை தொல்லை செய்ய வேண்டாமென்று கேட்டுக்கொள்ள அதன் பிறகே போலீஸ் அவனை அவன் வேலைகளை கவனிக்க விட்டது.
குளித்துவிட்டு டிராஃசூட்டில் மாறி கேசத்தை துண்டால் துவட்டிக்கொண்டே வெளிப்பட அவனின் அறைக்கதவு தட்டப்பட்டது. மாலை அவன் காஃபியை வேலைக்காரன் கொண்டு வந்து வைத்துவிட்டு சென்றுவிடுவான். அவன் சாப்பிடுவது காலை, இரவு மட்டுமே. அதிலும் காலை வெறும் காஃபி. இரவு நேரங்களில் பெரும்பாலும் பால் அல்லது ஏதாவது பழங்கள். கீழே சென்று குடும்பத்துடன் சாப்பிட்டே பல மாதங்கள் ஆகிறது. ஏனோ அவனுக்கு யார் முகத்தையும் காணவே சற்றும் விருப்பமில்லை. எல்லோரும் அலங்காரம் செய்யப்பட்ட மிருகங்கள் போல தான் அவன் கண்களுக்கு தெரிந்தது.
வழக்கம் போல வேலைக்காரன் என்று நினைத்து,”கம் இன்…”என்று குரல் கொடுத்துவிட்டு தலையை துவட்டிக்கொண்டே பால்கனிக்கு சென்றான்.
சில நிமிடங்கள் கழித்து ஏதோ ஒரு வித்யாசம் தோன்ற திரும்பி பார்த்தவன் அறையில் தாயை கண்டதும் முகம் கோபத்தில் இறுகியது. வேகமாக முகத்தை வெளிப்பக்கம் திருப்பிக்கொண்டு அசையாமல் சிலை மாதிரி நிற்க நித்யாவின் விழிகளில் கண்ணீர் சுரந்தது.
“கெளதம் என்னிடம் பேசமாட்டியா …? என்று கெஞ்சிய அந்த குரல் அவனின் காதுகளில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போலிருந்தது.
கோபத்தை கட்டுப்படுத்தும் விதமாக விழிகளையும், கைகளையும் இறுக மூடியபடி நின்றிருக்க மகன் திரும்ப மாட்டான், தன்னிடம் பேசமாட்டான் என்று புரிந்து நித்யா கதவை திறந்துக்கொண்டு வெளியேற எத்தனிக்க ஒரு நிமிஷம் என்று நிறுத்தினான் திரும்பாமலே.
மகன் அழைக்கவும் ஆர்வத்துடன் விழிகள் பளபளக்க திரும்பி ஆவலுடன் அவனை நோக்கினார் தாய்.
“இனி ஒரு முறை என் அறையில் உங்களை நான் பார்த்தால் அதன் பிறகு இந்த வீட்டில் நான் இருக்க மாட்டேன்…” என்றான் அழுத்தத்துடன்.
அவனின் கடுமை நிறைந்த பேச்சு நித்யாவின் நெஞ்சை அம்பு போல தைத்தது. வலி தாங்க முடியாமல் விம்மலுடன் கடகடவென்று படியிறங்கி செல்ல அப்பொழுது தான் உள்ளே நுழைந்த நித்யா தேவியின் கணவர் ராம்பிரசாத் மனைவியின் கண்ணீரை கண்டு துணுக்குற்று பின் விஷயத்தை ஊகித்துக்கொண்டார்.
கணவரை கண்டதும் கழிவிரக்கத்தில் அவரின் மார்பில் சாய்ந்துக்கொண்ட மனைவியை தன்னோடு அணைத்தபடி அவர்களின் அறைக்கு அழைத்துச் சென்று கட்டிலில் அமர்த்தினார்.