UN NESATHTHIL VAAZHVEN NAANAAKAVE…
அத்தியாயம் -2
முன்பகல் நேரம், சென்னையின் குறுகலான சந்தில் அமைந்திருந்த அந்த மொட்டை மாடி வீட்டின் முன் கூட்டம் கட்டுக்கொள்ளாமல் குழுமியிருந்தது. வீட்டின் உள்ளே போலீஸ் தலைகள் தெரிய, வெளியே வேடிக்கை பார்க்க முண்டியடித்துக்கொண்டிருந்த மக்களை ஏட்டு விரட்டியடித்துக்கொண்டிருந்தார்.
அவருக்கு இந்த மாதிரி கொலைகள் சர்வசாதாரணம் போல, அதனால் அலுப்போடு மக்களை கலைய சொல்லி தடியால் அடிப்பது போல பாவ்லா காட்டி கலைத்துக்கொண்டிருக்க, அவரின் விரட்டலையும் மீறி சில பேர் வீட்டின் உள்ளே எட்டி பார்க்க முயன்றுக்கொண்டிருந்தனர்.
மக்களுக்கு தன் வீட்டில் நடக்கின்ற விஷயங்கள் சுவாரஸ்யத்தை கொடுக்கிறதோ இல்லையோ, அடுத்தவர் வீட்டில் நிகழும் நிகழ்வுகள் அது சந்தோஷமோ, துக்கமோ, சண்டையோ, ரொமான்ஸோ எதுவாக இருந்தாலும் திருட்டு மாங்காயின் இனிப்பு தானே.
வீட்டின் நடுக்கூடத்தில் வாயை பிளந்தபடி, கைகால்களை பரப்பிக்கொண்டு விட்டத்தை முறைத்தபடி இறந்துக்கிடந்தார் சவரி முத்து. அவர் வாயை முத்தமிட்டபடி ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தது. கழுத்தில் பண்பட்ட ஓவியன் தீட்டிய ஸ்ட்ரோக் போல மெல்லிய நீண்ட வெட்டு. அதில் ரத்தம் கசிந்து ஆங்காங்கே திட்டு திட்டாய் உறைந்திருந்தது. வாயின் ஓரத்திலிருந்து கோடாக ரத்தம் வழிந்து அது காய்ந்தும் போயிருந்தது. வயது எப்படியும் நாற்பத்தைந்து, ஐம்பது இருக்கும். அவரின் இரண்டு பெண்களும் தாயுடன் ஒட்டி நின்று பயம் கலந்த அழுகையுடன் காணப்பட்டனர். கொலையானவரின் மனைவியோ ஏதோ பேயை கண்டது போல வாயை பிளந்து இறந்து கிடந்த கணவனையே வைத்த விழி வாங்காமல் பீதியுடன் பார்த்துக்கொண்டிருந்தார். விழிகளில் கண்ணீரின் வரத்து சுத்தமாக நின்று சிவந்து போயிருந்தது.
சவரிமுத்து ஒன்றும் வசதியானவர் இல்லை, நடுத்தரத்திற்கும் கீழ் தான். பலவருடமாக வெள்ளை பூச்சே காணாமல் சேற்றில் புரண்ட குளிக்காத சேரி பிள்ளை போலிருந்தது வெளிச்சுவர். வீட்டின் உள்ளே ஆங்காங்கே காரை பெயர்ந்து போய் சுவர் பல்லை காட்டிக்கொண்டிருந்தது. இரண்டு பெண்களும் வயதுக்கு ஏற்ற வளர்ச்சி இருந்தாலும் முகத்தில் வறுமை பசை போட்டு ஒட்டிக்கொண்டிருந்தது. கைகளிலும், காதுகளிலும் பிளாஸ்டிக் நகைகள் கொலுவீற்றிருந்தது. லேட் சவரிமுத்துவின் மனைவி கழுத்திலும், காதிலும் கவரிங் நகைகள் பாலிஷ் போய் கருத்திருந்தது.
இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் இறந்து கிடந்த சவரி முத்துவை சுற்றிசுற்றி வந்து பார்த்து எந்த ஒரு தடயமும் கிடைக்காமல் மோவாயை தடவிக்கொண்டிருந்தார். பிணத்தை ஏதோ நடிகையை படம் எடுப்பது போல எவ்வித பயமும், அருவருப்புமின்றி போட்டோகிராபர் வளைத்து வளைத்து போட்டோ எடுத்துக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பாரன்சிக் டிபார்ட்மெண்ட் டீம் கைகளில் க்ளவுஸ் மாட்டிக்கொண்டு நுண்ணியமாக லென்ஸ் வைத்து தேடி தனக்கு கிடைத்த ஆதாரங்களை பிளாஸ்டிக் கவரில் சேகரித்து அதை பத்திர படுத்தியும், பவுடர் தூவி கைரேகைகளை சேகரித்து கொண்டுமிருந்தனர்.
வெளியில் ஆம்புலன்ஸின் ஊய்…ஊய்… சத்தம் கேட்க ராஜேந்திரன் ஒரு பெருமூச்சுடன் பரபரப்பானர். ஒரு கான்ஸ்டபிளை அழைத்து செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை செய்ய சொல்லிவிட்டு வீட்டின் சொந்தக்காரர்களிடம் சொல்லிக்கொண்டு வெளியே வர ஆர்வத்தில் முண்டியடித்துக்கொண்டிருந்த கூட்டத்தை கண்டு எரிச்சலானார்.
“யோவ் கணேசன், கூட்டத்தை கலைக்காமல் என்ன வேடிக்கை பார்த்திட்டு இருக்கே, பாடியை எடுத்திட்டு போக ஆம்புலன்சுக்கு வழி செய்து கொடு. அதற்கு முன்னால் கூட்டத்தை விரட்டியடி. எங்கே கொலை நடக்கும்ன்னு காத்திட்டு இருப்பானுங்க போல, இருக்கிற வேலையெல்லாம் விட்டுட்டு ஓடி வந்திடுவானுங்க வேடிக்கை பார்க்க, பொறுப்பில்லாத கூட்டம். இருக்கிற தலைவலி போதாதுன்னு இவனுங்க வேற …”
ஏட்டை அதட்டிவிட்டு, பின் பாதியை முனகிக்கொண்டே தன் ஜீப்பில் ஏறி அமர ஜீப் உறுமிக்கொண்டு புறப்பட்டதும் ஜனத்தலைகள் தானாக வழிவிட்டது ஜீப் செல்ல.
போலீஸ் ஸ்டேஷன்…
தன் டேபிளில் அமர்ந்து ஏதோ ஒரு பைலை மும்மரமாக பார்த்துக்கொண்டிருந்த ராஜேந்திரன் உள்ளே நுழைந்துக்கொண்டிருந்த கான்ஸ்டபிள் செந்தில் நாதனை கண்டதும் நிமிர்ந்து அமர்ந்தார்.
“என்ன செந்தில் ரிப்போர்ட்ஸ் கலெக்ட் பண்ணிக்கிட்டு வந்தீங்களா? டாக்டர் என்ன சொன்னார் ?
விசாரித்த இன்ஸ்பெக்டரிடம் தன் கையிலிருந்த அரசு மருத்துவமனையிலிருந்து வாங்கி வந்த பழுப்பு நிற கவரை நீட்டியபடி பேச ஆரம்பித்தார்.
“சார் இது பக்காவான கொலை, கூர்மையான ஆயுதம் வைத்து கொஞ்சம் கூட சிந்தாமல் சிதறாமல் நிதானமாக கழுத்திலிருக்கிற நரம்பை கட் செய்திருக்காங்க. கொலை நடந்து எப்படியும் ஒரு பத்து மணி நேரமாகி இருக்கும்ன்னு சொல்றார்…”
செந்தில்நாதன் சொல்வதை கேட்டுக்கொண்டே ராஜேந்திரன் தன் கையில் வைத்திருந்த டாக்டரின் ரிப்போர்ட்டில் விழிகளை மேயவிட எழுத்துப்புற்களை விழி மான்கள் கபகபவென்று விழுங்கியது அசுர பசியோடு.
ரிப்போர்ட்டில் செந்தில் சொன்னதை தவிர்த்து புதிதாக எதுவும் இல்லையென்றானதும் அவரிடமிருந்து அலுப்பான உச்சு கொட்டல் ஒன்று வெளியானது.
“சார் அவங்க வீட்டு என்ன சொல்றாங்க ? கொலையாகி பத்து மணி நேரமாகி இருக்கு என்றால் எப்படியும் விடியற்காலை மூன்று அல்லது நான்கு மணிக்கு சம்பவம் நடந்திருக்கணும். அப்போ இறந்து போனவரின் மனைவி பிள்ளைகள் வீட்டில் தானே இருந்திருப்பாங்க. அவங்க என்ன சார் சொன்னாங்க… ?
கேசில் ஏதாவது பிடி கிடைக்குமா என்ற ஆர்வத்தில் விசாரித்தார் செந்தில். ராஜேந்திரனை விட வயதில் பெரியவர் தான். ஆனால் பதவியில் ராஜேந்திரனை விட கீழ் என்பதினால் மரியாதை தலைகீழாக பரிமாறப்பட்டிருந்தது.
“இல்லைய்யா சவரி முத்துவோட மனைவியும், மகள்களும் இரண்டு நாட்களாக ஊரில் இல்லையாம். எங்கேயோ கிராமத்தில் இருக்கிற அந்தம்மாவின் அம்மா வீட்டுக்கு போயிருந்தார்களாம். காலையில் பதினோரு மணிக்கு தான் வீடு திரும்பியிருக்காங்க. வீடு வெறுமனே மூடி இருந்ததாம். சம்பவத்தை பார்த்ததும் உடனே நமக்கு தெரிவிச்சி இருக்காங்க…”
சொல்லும் பொழுதே அத்தனை அலுப்பு அவரின் குரலில். எப்படி இருந்தாலும் கொலையாளி ஏதாவது ஒரு தடயத்தை விட்டு செல்வான் என்ற நம்பிக்கை அவருள் இருந்தாலும் ஒவ்வொரு கேசும் அவரின் தாலியை அறுத்துவிட்டு தான் முடிவுக்கு வருகிறது என்ற அலுப்பு.
“ஓ அப்படிங்களா சார், ஒருவேளை கொள்ளையடிக்க வந்தவன் விக்டிம் தனியாக இருப்பதை பார்த்து அவரை கொலை செய்திட்டு கொள்ளையடிச்சிட்டு போயிருப்பானோ … ?
செந்தில்நாதன் கேட்டதும் அதுவரை யோசனையில் இருந்தவர் கடகடவென சிரித்தார் சற்று கேலியாக.
“யோவ் நீ யோசிக்கவே மாட்டியா ? அந்த வீட்டை சரியா பார்த்தியா இல்லையா ? அந்தம்மா உடம்பில் குந்துமணி நகை இல்லை, பொண்ணுங்களும் பிளாஸ்டிக் நகைகள் தான் போட்டிருக்காங்க. அந்த வீட்டில் பஞ்சம் தலைவிரித்தாடுது. கொள்ளையடிக்க வந்திருந்தால் அவன் தான் பாவம் பார்த்து பணத்தை வைச்சிட்டு போகணும். நீ வேற …”
“சாரி ஸார், பழக்க தோஷத்தில் கேட்டுட்டேன். சரி வேற என்ன மோட்டிவ் இருக்கும். கொள்ளையும் இல்லை, பொண்ணுங்களும் வீட்டில் இல்லை அதனால் அப்படியும் யோசிக்க முடியாது. தொழில் முறை போட்டியாளர் பகை …”என்று சொல்லிக்கொண்டிருந்தவர் சட்டென்று நிறுத்தி ராஜேந்திரனை அர்த்தத்துடன் நோக்கினார்.
“ப்ச் அப்படியும் இருக்க வாய்ப்பிலை செந்தில். சவரி முத்து சாதாரண ப்ரோக்கர். நிலம் வாங்கி கொடுக்கிறது, வாடகைக்கு வீடு புடிச்சி கொடுக்கிறது, சில சமயங்களில் வரன் பார்த்து கொடுக்கிறதுன்னு. இதில் எங்கிருந்து போட்டி பொறாமை வரும். அதுக்கும் வாய்ப்பில்லை. அப்படியே போட்டி பொறாமை வரணும் என்றால் கூட இறந்து போனவர் வசதியாக இல்லையே. அன்றாடம்காய்ச்சியாக இருக்கிற மாதிரி இருக்கு. இவரின் நிலைமையை பார்த்தால் யாருக்கு பொறாமை கொள்ள தோணும். ம்ஹீம் இதுவுமில்லை, நாம வேற தான் யோசிக்கணும்…” என்றார் ஓர் பெருமூச்சுடன்.
“ஸார்…” என்றழைத்தவர் ஏதோ தோன்ற அமைதியானார்.
“சொல்லுங்க செந்தில்நாதன், ஏதோ கேட்க வந்தீங்க …?
“ஆ…ஆமாம் சார், நீங்க தப்பா நினைக்கலேன்னா நான் ஒன்று கேட்கலாமா?
“ஹ்ம்ம் …”
“க்ரைம் சீனை சரியா செக் பண்ணிங்களா ? நாம யோசித்த எந்த காரணங்களும் இல்லைன்னு நமக்கே தோணுது, அப்போ நிச்சயம் வேறு ஏதோ ஒரு மோட்டிவ் இருக்கு. அதனால் ஏதாவது வித்யாசமாக நமக்கு கிடைக்கலாம். சாரி சார் தப்பா ஏதாவது சொல்லியிருந்தால் …”
செந்தில்நாதனை கனிவாக பார்த்தார் ராஜேந்திரன்.
“இதில் நீங்க மன்னிப்பு கேட்க ஒன்றுமே இல்லை, கொலையை பெரிய அதிகாரிகள் தான் கண்டுபிடிக்கணுமா, ஏன் நீங்கள்ளாம் சரியான கோணத்தை சிந்திக்க கூடாதா? இல்லை சந்தேகப்படக்கூடாதா ? உங்க சந்தேகமும் யோசிக்க வேண்டிய விஷயம் தான். நான் மறுபடியும் போய் பார்க்கிறேன், இல்லை செந்தில் நாதன் நீங்களே போய் பாருங்க. உங்க மனதிலிருக்கிற சந்தேகத்தை அப்பொழுது தான் ஊர்ஜிதப்படுத்திக்க முடியும்…”
“தேங்க் யூ சார்…”என்று விறைத்து நின்று ஒரு சல்யூட்டை விநியோகித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.
போட் க்ளப் ஏரியா…
“கதவை திறடா, இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே தனிமையில் உன்னையே வருத்திக்க போறே. ப்ளீஸ் கதவை திற கெளதம்…” பூட்டியிருந்த கதவின் முன் நின்று அழாக்குறையாக கெஞ்சிக்கொண்டிருந்தார் நித்யாதேவி. கூடவே அவரின் செல்ல மகள் ரித்யாவும் கதவை தட்டிக்கொண்டிருந்தாள்.
“அண்ணா வெளியே வாண்ணா, வந்து சாப்பிடு. இன்னும் எத்தனை நாளைக்கு தான் யாரிடமும் பேசாமல் இருப்பே. உன் மனதை மாற்ற தான் அம்மா அப்படி செய்தாங்க. ப்ளீஸ் வெளியே வாங்கண்ணா …”
சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு கதவு திறக்கப்பட கதவின் பின் மழிக்கப்படாத தாடியுடன் காணப்பட்டான் கெளதம்.
நல்ல உயரம், மாநிறம், கூர்மையான விழிகள் அதில் வெறுமை மட்டுமே. அடர்த்தியான புருவங்கள், இறுகின முகம். அழுந்த மூடியிருந்த இதழ்கள், அதில் ஒரு சதவிகிதம் கூட புன்னகையின் சாயல் இல்லை. அலட்சியமாக வாரப்பட்டிருந்த கேசம். ஒரு சில கேச குழல்கள் அவன் நெற்றியில் புரண்டு அந்த இறுக்கத்திலும் அவனின் முக பொலிவை கூட்டிக்கொண்டிருந்தது.
மகனை கண்டதும் நித்யாதேவி வேகமாக சென்று மகனின் கையை பிடித்துக்கொண்டார்.
“நான் செய்தது தவறு தான், உனக்கு பிடிக்காது என்று தெரிஞ்சும் பெண் வீட்டுக்காரங்களை நான் வர சொல்லி இருக்க கூடாது. என்னை மன்னிச்சிடுப்பா. இனிமேல் அப்படி செய்ய மாட்டேன். நீ வந்து முதலில் சாப்பிடு வா …”
தாயின் கதறல் மகனின் இரும்பு இதயத்தில் மோதி உள்ளே போக முடியாமல் தோற்று போனது. தங்கையும் அவனின் கையை பிடிக்க மெல்ல அவளிடமிருந்து தன் கைகளை உருவிக்கொண்டான்.
“அண்ணா ப்ளீஸ் எங்க மீது கோபப்படாதீங்க, உங்க மேலிருக்கிற அக்கறையில் தான் அப்படி செய்திட்டோம். இனிமே உங்க அனுமதி இல்லாமல் எதுவும் நடக்காது…”
தங்கையின் மன்றாடலுக்கு அவனின் இதழ்கடையில் கசந்த புன்னகை ஒன்று ஜனித்தது.
“எனக்காக யாரும் அழ வேண்டாம், மன்னிப்பும் கேட்க வேண்டாம். என் வாழ்க்கையை எப்படி அமைச்சிக்கிறதுன்னு எனக்கு தெரியும். எல்லோரும் அவரவர் வேலைகளை பார்த்தால் போதும். இன்னொரு முறை இப்படியொரு சம்பவம் இந்த வீட்டில் நடந்தது நான் இந்த வீட்டில் இருக்கமாட்டேன். எனக்கு பசிக்கும் பொழுது வந்து சாப்பிடறேன் …”
நறுக்கென்று யார் முகத்தையும் பார்க்காமல் பேசிவிட்டு மீண்டும் கதவை மூடிக்கொள்ள தாயும், மகளும் திக்ப்ரமை பிடித்து நின்றார்கள்.
எல்லாம் சில நொடிகள் தான் அடுத்த நொடி அங்கிருந்து விரைந்துசென்றவர் ஹால் சோஃபாவில் அமர்ந்து தலையில் அடித்துக்கொண்டு அழ ரித்யா திணறிப்போனாள் தாயின் செயலில்.
“ஹையோம்மா என்ன செய்யறீங்க? அண்ணனின் குணம் தெரிந்தது தானே, அப்புறமும் நீங்க பெண் வீட்டாரரை ஏன் வரச்சொன்னீங்க. அதான் அண்ணன் கோபமா பேசறார். நாம செய்தது தப்பு தானே. விடுங்க சீக்கிரமே அண்ணன் நம்மை புரிஞ்சிக்குவார்…”
தாயை சமாதானித்துக்கொண்டிருக்க இயலாமை நிறைந்த கோபத்துடன் விழிகள் கண்ணீரில் ஊறியிருக்க நிமிர்ந்தார் நித்யா.
“இன்னும் எத்தனை நாளைக்குடி இந்த நரகத்தை நாம அனுபவிக்கிறது. என் மகன் வனவாசம் செய்திட்டு இருக்கான். பெத்த வயிறு பற்றி எரியுதுடி, என் வேதனையை உன்னால் புரிஞ்சிக்க முடியுமா ? நீ வாயால் மிக சுலபமா சொல்லிட்டே. ஆனால் என் மனது படும் பாடு உனக்கு புரியுமாடி …?
தாயின் கேள்விக்கு சிறியவளின் முகத்திலும் அலுப்பு தோன்றியது. அடுத்த நொடியே அது கோபமாகவும் உருவெடுத்தது.
“ஆமாம்ம்மா எனக்கு உன் வேதனை புரியாது தான், ஆனால் ஒன்று மட்டும் நல்லா புரியும். இப்போ நீ சொன்னியே வேதனை, பாடுன்னு அதே வலி தானே அண்ணனுக்கும் இருக்கும். நாம செய்யும் பொழுது அவரின் வேதனையை நம்மால் புரிஞ்சிக்க முடியலை. இப்போ அவர் ஒதுங்கி போகும் பொழுது நமக்கு வலிக்குது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுது. அதை தான் இப்போ நாம அறுவடை செய்திட்டு இருக்கோம். என்ன செய்யலாம் சொல்லுங்க …”
மகளின் நியாயமான கேள்வி நித்யாவின் கோபத்தையும், ஆற்றாமையையும் வழித்து துடைத்தெறிய பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து போனார்.