UN NESATHTHIL VAAZHVEN NAANAAGAVE …
அத்தியாயம் -4
கெளதம் வீடு …
ஆபிஸ் செல்லும் உடையில் கிளம்பி கார் சாவியோடு போர்டிகோவை நோக்கி சென்று கொண்டிருந்தவனை தாயின் குரல் நிறுத்தியது.
“நில்லு கெளதம், சாப்பிடாம எங்கே கிளம்பிட்டே, இன்னும் எத்தனை நாளைக்கு உன் கோபத்தை பிடிச்சிட்டு தொங்கிட்டு இருப்பே … ?
தாயின் கேள்வியில் இறுகியிருந்த முகம் மேலும் இறுகியது. சுறுசுறுவென கோபம் தலைக்கேறியது. விழிகளையும், கைகளையும் அழுந்த மூடி கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தான். அவனுக்கு தாய் என்றவளின் முகத்தை பார்க்கவோ, அவருக்கு பதில் சொல்லவோ சுத்தமாக விருப்பமில்லை. இப்பொழுது நிறுத்தி வைத்து சாப்பிட சொல்வது கூட உண்மையான அக்கரையில் இல்லை. தப்பு செய்த குறுகுறுப்பு. அதை சீர் செய்ய மீண்டமொரு டிராமா.
பதில் சொல்லாமல் மீண்டும் நடக்க எத்தனித்தவனை இம்முறை கைபிடித்து நிறுத்தினார் நித்யா.
“கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல கூட விருப்பமில்லாமல் போய்டிச்சி இல்லையா? அப்படி என்ன நான் தப்பு பண்ணிட்டேன்னு என்னிடம் பேசாமல் இருந்து கொல்றே, சொல்லு கெளதம் … ?
அவரின் கையை நாசூக்காக விலக்கி,”எனக்கு பசிக்கலை, ஒரு முக்கியமான மீட்டிங்கிற்கு போய்ட்டிருக்கேன், வீண் பேச்சு பேச நேரமில்லை…”
சுருக்கென்று சொல்லிவிட்டு தன் வேக நடையோடு வெளியே சென்று காரில் ஏறி அதை உசுப்பி சீறிக்கொண்டு வெளியே செல்ல நித்யா கண்ணீரோடு உறைந்து நின்றார். எவ்வளவு நின்றாரோ அவரின் தோள் மீது ஓர் இளம் கரம் படிய மெல்ல திரும்பினார்.
தாயின் கன்னங்களில் வழிந்தோடிய நீரை விரலால் சுண்டிவிட்டு அவரின் கைபிடித்து அழைத்து வந்து அமர்த்தினாள் அவரின் செல்ல மகள் ரித்யா.
“உங்கண்ணன் பேசியதை கேட்டியா ரிது, என் முகத்தை பார்க்கவே அவனுக்கு பிடிக்காமல் போய்விட்டது, என்னை அந்தளவுக்கு வெறுத்துட்டான் கெளதம் … “
சொல்லிக்கொண்டிருந்தவர் மகனின் பாராமுகம், அவனின் புறக்கணிப்பு, கோபத்தால் தாக்கப்பட்டு கழிவிரக்கத்தில் உடைந்து போய் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார். தாயின் அழுகையை ஓர் இயலாமையோடு பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு அவரை எப்படி தேற்றுவது என்று தெரியவில்லை.
செய்தது தவறுகள் இல்லை தப்புகள். ஒன்றாக இருந்தாலும் எப்படி எப்படியோ சமாதானம் சொல்லியோ, மன்னிப்பு கேட்டோ கோபத்தை குறைத்துவிடலாம். ஆனால் தொடர்ந்து ஒரே தப்பை மீண்டும் மீண்டும் செய்தால் எப்படி சமாதானம் செய்வது, அந்த சமாதானத்திற்க்கே அர்த்தமில்லாமல் போய்விடுமே. அது தான் அண்ணன் கெளதம் விஷயத்திலும் நடந்துவிட்டது.
“ம்மா போதும் நீங்க அழுதது. இன்னும் எத்தனை நாளைக்கு அண்ணனை நினைச்சி புலம்பிட்டு இருப்பீங்க. அண்ணன் உங்களை ஒரு நாள் புரிஞ்சிப்பார். அவருக்கும் கொஞ்ச டைம் கொடுங்க, கோபத்தில் இருக்கிறவர் முன் போய் தினமும் நின்று என்னிடம் பேசு பேசு என்றால் எப்படி பேசுவார். உங்கள் மேலிருக்கிற கோபம் அதிகரிக்குமே தவிர குறையாது. கொஞ்சம் விட்டு பிடிங்க…”
மகள் பெரிய மனுஷித்தனமாக பேசுவதை கேட்க சந்தோஷமாக இருந்தாலும், மகனின் புறக்கணிப்பில் விளைந்த ஆற்றாமை, கவலையில் அதை வியந்து பாராட்ட முடியவில்லை. ஆனாலும் கண்ணீரை துடைத்துக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தார்.
“நீ சொன்ன மாதிரி கெளதம் என்னிடம் பேசுவானா ? என் கவலையை புரிஞ்சிப்பானா ரிது… ?
என்னமோ மகள் எதிர்காலத்தை கணித்து சொல்லும் ஜோஸ்யராக அவர் கண்ணிற்கு தோன்ற சிறுபிள்ளை தனமாக ஆவலுடன் விசாரித்தார்.
தாயின் முகத்தை டீபாயில் மேலிருந்த டிஷ்யூ பேப்பரில் துடைத்துவிட்டபடி,”கண்டிப்பாம்மா, எவ்வளவு பெரிய காயத்தையும் காலம் சரி பண்ணும். அண்ணனும் எத்தனை காலம் தான் நம்மிடம் பேசாமல் போவார். அவரை தொல்லை செய்யாமல் விட்டால் அவரே யோசிப்பார், பாருங்க ஒரு நாள் அவராகவே வந்து பேசுவார். சரிம்மா இப்படி ஹாலில் உட்கார்ந்து அழாதீங்க. வேலைக்காரங்க கண்ணில் பட்டால் நன்றாக இருக்காது. அவங்க வாய்க்கு நம்ம வீட்டு கதை அவலாகிவிடும்… »
மகளின் பேச்சில் அப்பொழுது தான் நிலைமை புரிந்தது, அவசரமாக முகத்தை துடைத்தபடி வேகமாக தன் அறைக்கு சென்றார்.
கெளதம் பாரடைஸ் …
அவனின் கார் ஆபிஸ் வளாகத்தின் உள்ளே நுழைந்ததுமே செக்குரிட்டி ஓடி வந்து நின்ற காரின் கதவை பணிவாக திறக்க கெளதம் அவனை முறைத்தான்.
“எத்தனை முறை சொல்லியிருக்கேன் பழனி, ஓட்டிட்டு வந்த எனக்கு காரின் கதவை திறந்து இறங்க தெரியாதா ? எனக்கு பணிவிடை செய்யறதெல்லாம் இருக்கட்டும். இந்த ஆபிஸின் செக்குரிட்டி வேலையை சரியாக செய்…”
பழனி தலையை சொறிந்துக்கொண்டே,”மன்னிச்சிக்க ஸார், நீங்களும் பலமுறை சொல்லிட்டீங்க, ஆனால் என்னால் பழக்கத்தை மாத்திக்க முடியலை. பெரிய அய்யா கம்பெனியிலிருந்து ரிட்டையர்டு ஆன என்னை இங்கே பெரிய மனசு பண்ணி வேலை போட்டு கொடுத்திருக்கீங்க. அந்த விசுவாசம் அதுமட்டுமில்லை ஸார் பெரிய அய்யாவுக்கு கார் கதவை திறந்து விட்ட பழக்கம்ங்க…”
“உன் பழக்கத்தையெல்லாம் அந்த ஆபிஸோடு மூட்டை கட்டி வைச்சிட்டு இங்கே வேலைக்கு வா, சரி உன் பொண்டாட்டியை ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போனீங்களா… ?
“ஆச்சுங்க ஸார், டாக்டருங்க ஏதோ பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்றாங்க, எனக்கு ஒண்ணுமே புரியலைங்க. மருந்து மாத்திரை கொடுத்திருக்காங்க. ரொம்ப நன்றிங்க ஸார் பணம் கொடுத்து உதவினதுக்கு…” என்றான் கையெடுத்து கும்பிட்டு.
“கும்பிடு போடறது இருக்கட்டும், எந்த டாக்டரை பார்த்தீங்க, அவங்க என்ன மாத்திரை ப்ரெஸ்க்ரைப் செய்தாங்க… ?
“சார் நீங்க என்ன கேட்கறீங்கன்னு புரியலை…”
“ஓ சாரி, டாக்டர் கொடுத்த மருந்து சீட்டை என் செகரட்டரி விக்னேஷிடம் கொண்டு வந்து கொடுங்க, நான் டாக்டரிடம் பேசறேன் …”
“ஆகட்டும்ங்க சார் …”
செக்கூரிட்டி பெரிதாக தலையை உருட்ட ஆபிஸின் உள்ளே சென்று லிப்டில் புகுந்தான். மூன்றாம் தளத்தில் லிப்ட் நின்றதும் அதிலிருந்து வெளிப்பட்டு நீண்ட காரிடாரில் நடந்து சூட் ரூம் போலிருந்த தன் அறைக்குள் நுழைய பியூன் டேபிளை சுத்தம் செய்துக்கொண்டிருக்க கௌதமின் புருவங்கள் நெரிந்தது.
“நீ எப்படி இந்த அறைக்குள், விக்னேஷ் எங்கே? அவன் வரலையா?
“குட்மார்னிங் சா…சார் …” என்று தடுமாறிவிட்டு, “விக்னேஷ் சார் தான் என்னை கிளீன் பண்ண சொல்லி போன் செய்தார். இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடறேன்னு சொன்னார்…”
“ஓ ஓகே யு கேன் கோ, போய் ஜி எம்மை வர சொல்லு…” என்றபடி தன் சீட்டில் அமர்ந்தவன் தன் முன்னிருந்த ஐ மேக்கை ஆன் ஸ்டார்ட் செய்தான்.
இன்றைய நிகழ்ச்சி நிரல்களை ஏற்கனவே விக்னேஷ் பதிவு செய்து மெயில் செய்திருக்க அதை பார்வையிட்டு விட்டு அன்று வந்த மின்னஞ்சல்களையும் சரி பார்த்துவிட்டு நிமிர வியர்த்து விறுக்க விறுக்க விக்னேஷ் உள்ளே நுழைந்தான்.
எப்பொழுதும் தன் உடையிலும், தோற்றத்திலும் அதிக கவனம் எடுத்துக்கொள்ளும் விக்னேஷ் இன்று கலைந்த தலை, சிவந்த விழிகள் அவசரமாக கையில் கிடைத்ததை எடுத்து அணிந்த மாதிரி ஒரு ஷர்ட் என்று அழிந்த கோலம் மாதிரி காணப்பட்டவனை நோக்கி புருவம் உயர்த்தினான் கேள்வியாக.
“சாரி சார், என் அப்பா இறந்துட்டார்…”
“வாட்…”என்று அதிர்ந்து போய் எழுந்தான்.
“எஸ் ஸார் காலையில் வாக் போனவரை யாரோ பார்க்கிலேயே குத்தி கொலை செய்திருக்காங்க. பாடி இப்போ ஹாஸ்பிடலில் இருக்கு. நான் அங்கிருந்து தான் உங்களிடம் சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தேன்…”
“ஓ சாரி விக்னேஷ், உங்க அப்பாவை கொலை செய்யற அளவுக்கு அவருக்கு விரோதிகள் இருக்காங்களா?
“அவருக்கு விரோதிகள் இருக்க வாய்ப்பே இல்லை, ஆனால் யார், எதற்கு, எப்படி ஏன் என்ற கேள்விகளை பற்றி யோசிக்க என்னால் முடியாது. நிச்சயம் போலீஸ் விசாரணையில் தெரிய வரும். ஓகே சார் நான் கிளம்பறேன். அம்மா தனியாக இருப்பாங்க…”
தகவல் சொல்லிவிட்டு அவசரமாக கிளம்ப முற்பட்டவனை நிறுத்தினான்.
“தன் பேகை திறந்து கற்றை பணத்தை எடுத்து அவன் கையில் கொடுத்து,”இதை நீ போனிலேயே சொல்லியிருக்கலாமே, எதற்கு நேரில் வரணும். போய் ஆக வேண்டிய வேலையை பார். அப்பாவை வீட்டுக்கு கொண்டு வந்ததும் சொல்லு. ஏதாவது உதவி வேண்டுமென்றால் தயங்காமல் கேள் …”
“தேங்க் யு ஸார், நான் வரும் வரை என் வேலைகளை தேவ்விடம் ஒப்படைக்கலாம்ன்னு வந்தேன். இன்று அவன் சிக் லீவில் இருக்கிறான். நீங்க மேனேஜ் பண்ணிக்குவீங்களா… ? என்றான் தயக்கத்துடன்.
அவன் தோளில் ஆறுதலாக தட்டி,”அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ முதலில் அப்பாவின் இறுதி காரியங்களை நல்லபடியா செய்…”
மீண்டுமொரு நன்றியை தெரிவித்துவிட்டு வந்த வேகத்திலேயே விக்னேஷ் வெளியேறிவிட கெளதம் யோசனையுடன் அமர்ந்தான். அவன் விக்னேஷின் தந்தையை நேரில் பார்த்ததில்லை. ஆனால் விக்னேஷ் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறான். நடுத்தர குடும்பம் என்றால் பணத்திற்கு குறைச்சல் இல்லை. முனிசிபாலிட்டி ஆபிசில் தலைமை கணக்காளர்.
ரொம்ப அமைதியான மனுஷர், ஒரே பிள்ளை விக்னேஷ் மட்டுமே. விக்னேஷின் அம்மா குடும்ப தலைவி. தான் உண்டு, தன் வேலையுண்டுன்னு இருக்கிற அவரை யார், எதற்கு கொலை செய்திருப்பார்கள். ஒரு வேளை பணத்திற்காக கொலை செய்திருப்பார்களோ. அப்படியும் இருக்க வாய்ப்பில்லை, வாக்கிங் செல்லும் பொழுது வாட்சை தவிர என்ன இருந்துவிட போகிறது.
யோசனையில் இருந்தவனை ஆபிஸ் டெலிபோன் சிணுங்கி அழைக்க தன் சிந்தனைகளை கலைத்து வேலைகளில் கவனமானான்.
பேங்க் …
சூரிதாரில் அடிக்கடி வாட்சை பார்த்துக்கொண்டு தவிப்புடன் நிற்பது ஹம்ஸினீயே தான். இவள் இந்த பேங்க் கஸ்டமரா ? இத்தனை நாள் தெரியாமல் போய்டுச்சே. போய் பேசலாமா, வேண்டாமா ? அவளுடன் யார் வந்திருப்பது என்று விழிகளை சுழற்றிவிட்டு மீண்டும் அவளிடமே வந்து நிலைத்தது.
அவள் யாரிடமும் பேசினது மாதிரி தெரியவில்லை. பணம் எடுக்க வந்த கஸ்டமர்ஸ் அமர்வதற்கு போடப்பட்டிருந்த குஷன் சோஃபாவில் அமராமல் ஓர் ஓரத்தில் டோக்கன் நம்பர் ஓடிக்கொண்டிருந்த டிஜிட்டல் எந்திரத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். போய் பார்த்து பேசிவிட வேண்டியது தான் என்ற முடிவில் அமர்ந்திருந்த கஸ்டமரிடம் மன்னிப்பு கோரி காத்திருக்க சொல்லிவிட்டு வெளியே வந்தான்.
எப்பொழுது தன் டோக்கன் நம்பர் வரும், பணத்தை எடுத்துக்கொண்டு எப்பொழுது வீட்டுக்கு போகலாம் என்ற கவலையில் மீண்டுமொரு முறை வாட்சை பார்த்துவிட்டு சுற்றும் முற்றும் அசுவாரஸ்யமாக விழிகளை சுழற்றியவள் தன்னை நோக்கி வந்தவனை கண்டதும் சற்றே கலவரமடைந்தது.
அவளை நோக்கி வந்த பிரபு அவள் தன்னை பார்த்துவிட்டால் என்றதும் முகத்தில் புன்னகையை பூசியபடி அவளை நெருங்கினான்.
“ஹாய் ஹம்ஸினீ, எப்படி இருக்கே ? என்ன திடீர்ன்னு இங்கே காட்சி கொடுக்கிறே… ? என்னை ஞாபகம் இருக்கில்லே. ஐ ம் பிரபு…”
கடகடவென கேள்விகளை தொடுத்துக்கொண்டிருந்தவன் அவளின் புரியாத முகபாவனையை கண்டு குழம்பி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.
ஹேய் ஹாய், சாரி ஏதோ டென்க்ஷனில் இருந்தேன் அதான். நீ பிரபுன்னு சொல்லி தான் தெரியணுமா ? நான் நல்லா இருக்கேன், மணி வித்ட்ரா செய்ய வந்தேன், சரி நீ எப்படி இருக்கே ? நீயும் பணம் எடுக்க வந்தாயா… ?
“அப்பாடி அப்போ என் முகரக்கட்டையை மறக்கலேன்னு சொல்றே, சந்தோஷம். நான் சூப்பரா இருக்கேன். நான் கஸ்டமரா வரலை. இங்கே நான் அட்மினிஸ்ட்ரேஷன் ஆபிஸர். உன் டோக்கன் நம்பர் என்ன ?
கேட்டபடி அவள் கையிலிருந்த டோக்கனை வாங்கி பார்த்துவிட்டு டிஜிட்டல் எந்திரத்தில் ஓடிக்கொண்டிருந்த நம்பரை பார்த்தான்.
“எப்படியும் அரைமணி நேரமாகும். டூ ஒன் திங், என் கேபின்க்கு வா, அங்கே போய் பேசலாம்…” என்றழைக்க ஹம்ஸினீக்கும் மறுக்க எந்த காரணமும் இல்லை .
அவளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றவன் தன் டேபிள் முன் அமர்ந்திருந்த கஸ்டமரின் பிரச்சினையை விசாரித்து அவனை பக்கத்து டேபிளில் இருந்த கொலிக்கிடம் அனுப்பிவிட்டு ஹம்ஸினீயை அமரச்சொன்னான்.
பியூனை அழைத்து அவளின் டோக்கனை கொடுத்து பணம் வாங்கிட்டு வர சொல்லி அனுப்பியவன் அவளிடம் திரும்பினான்.
“ஹ்ம்ம் சொல்லு ஹம்ஸினீ, உன் லைஃப் எப்படி போய்ட்டிருக்கு. உன்னை பார்த்து ஒரு வருஷம் இருக்குமா … ? இப்போ என்ன செய்யறே … ?
பிரபுவின் தொடர் கேள்விகள் அவளை சலிப்படைய செய்தது. ஆனாலும் அவன் என்ன செய்வான். என் பிரச்சினைகளுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாதவனிடம் எரிச்சலை காட்டுவது தவறு. அவன் தோழி என்ற அக்கரையில் விசாரிக்கிறான். பதில் சொல்வதினால் என்ன குறைந்துவிட போகிறது.
ஹம்ஸினீ தன் விரல் நகங்களை ஆராய்ந்தபடி தலைகுனிந்து அமர்ந்திருக்க, பிரபு அவளை ஆச்சர்யமாக நோக்கினான். ஹம்ஸினீயா இவள். எப்பொழுது ஓட்டை பானையில் நண்டை விட்ட மாதிரி தொண தொணவென்று பேசிக்கொண்டே இருப்பாளே. இப்பொழுது என்னவாயிற்று.
“என்னாச்சு ஹம்ஸினீ, நான் ஏதும் கேட்க கூடாததை கேட்டுட்டேனோ. சொல்ல இஷ்டம் இல்லையென்றால் நோ இஷ்யூஸ். இன்னும் கொஞ்ச நேரத்தில் உன் பணம் வந்திடும். வாட் யூ ப்ரீபெர் ஜூஸ் ஆர் காஃபி… ?
“ஜூஸ் …”
அவள் சொன்னதும் இன்டெர்காமில் இரண்டு ஜூஸ் எடுத்து வர சொல்லி ஆர்டர் போட்டுவிட்டு அவளை நோக்கி புன்னகைத்தான்.
“உன்னை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் ஹம்ஸினீ, நேற்று கூட உன்னை டிராஃபிக்கில் பார்த்தேன். ஒரு சாக்லேட் கலர் காரை ஒட்டிக்கிட்டு போனே. அம்மாவிடம் சொன்னேன். உன்னைப்பற்றி விசாரிச்சாங்க. நேரமிருந்தால் என் வீட்டுக்கு ஒரு நாள் வந்துட்டு போயேன். நான் ஏதும் உன்னை டிஸ்டர்ப் செய்யலையே… ?
“ச்சே சேச்சே அதெல்லாம் ஒன்றுமில்லை, உன்னை திடீர்ன்னு சந்தித்ததால் வந்த இனிய அதிர்ச்சி அவ்வளவே. லைஃப் அப்படியே தான் போகுது, சொல்லிக்கிற மாதிரி இல்லை. அம்மா ஆறு மாசத்துக்கு முந்தி இறந்துட்டாங்க. அப்பாவும் கார்டியாக் அர்ரெஸ்ட் வந்து ஹாஸ்பிடலில் இருக்கிறார்…”
“ஹையோ என்ன இது குண்டு மேலே குண்டு போடறே, இவ்வளவு நடந்திருக்கு ஒரு போன் செய்து விஷயத்தை சொல்லவே இல்லையே. அந்தளவு நான் உனக்கு அந்நியனா ஆயிட்டேனா… ?
“ப்ச் அப்படியெல்லாம் இல்லை பிரபு, என் நிலைமையை உனக்கு சொன்னால் புரியாது. அதை விடு, இப்போ கூட அப்பாவின் ஆபரேஷனுக்கு பணம் கட்ட தான் பணம் எடுக்க வந்தேன்…”
“ஓ ரியலி சாரி ஹம்ஸினீ, அங்கிள் எந்த ஹாஸ்பிடலில் இருக்கிறார்… ?
ஹாஸ்பிடலின் பெயரை சொல்லி, நாளைக்கு காலையில் ஆப்ரேஷன், பார்ப்போம் எனக்குன்னு இருக்கிற ஒரே உறவு அப்பா மட்டும் தான். அவரை காப்பாற்றியாகணும் பிரபு…”
பியூன் கதவை திறந்துக்கொண்டு ஆர்டர் செய்த ஜூஸை பரிமாறிவிட்டு செல்ல,”ஹ்ம்ம் எடுத்துக்கோ ஹம்ஸினீ …”
அவளுக்கும் தொண்டை காய்ந்து போயிருக்க ஜூஸை எடுத்து நாசூக்காக உதட்டில் பொருத்தி ஒரு மிடறு விழுங்கினாள். பிரபுவுக்கும் அவள் சொன்ன செய்தியில் அதிர்ச்சியாக இருந்ததால் அடுத்து என்ன பேசுவது என்று புரியவில்லை. நேற்று தன்னை பார்த்தும் நிற்காமல் போனதற்காகவும், ஒரு வருடமாக எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்ததற்காகவும் அவளை நேரில் சந்தித்தால் சண்டை போடணும் என்றிருந்தவனுக்கு இப்பொழுது எல்லாம் மறந்து போயிற்று.
பிரபு அனுப்பிய பியூன் பணத்தோடு வரவும் அதை எண்ணி அவள் கையில் கொடுத்தான். அதை சரி பார்த்து தன் கைப்பையில் பத்திரப்படுத்தியவள் எழுந்தாள்.
கூடவே எழுந்தவனிடம்,”ரொம்ப தேங்க்ஸ் பிரபு, இந்த உதவியை நான் மறக்க மாட்டேன். உன்னிடம் நிறைய பேசணும்னு ஆசை இருக்கு, ஆனால் சூழ்நிலை சரியில்லை. சரி ஹாஸ்பிடல் போயிட்டு ஈவினிங் கால் பண்றேன். வர்றேன் …”
விடைபெற்று செல்ல வெறுமே தலையை உருட்டி விடை கொடுத்தவன் தனக்காக காத்திருந்த வேலைகளில் மூழ்கிப்போனான். ஆபிஸ் நேரம் முடியும் வரை எதை பற்றியும் யோசிக்க அவனுக்கு நேரமில்லை. வேலை முடிந்ததும் தன் உடமைகளை எடுத்துக்கொண்டு பைக்கின் அருகில் வந்தவனுக்கு வீட்டுக்கு செல்லாமல் ஹம்ஸினீயின் தந்தையை பார்க்க ஹாஸ்பிடல் சென்றால் என்னவென்று தோன்ற வண்டியை அவள் சொன்ன ஹாஸ்பிடலுக்கு விரட்டினான்.
வண்டியை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு உள்ளே சென்று அவரின் பெயரை சொல்லி விசாரிக்க அப்படியொரு ஆளே இல்லையென்று கூற பிரபு குழம்பினான்.