UN NESATHTHIL VAAZHVEN NAANAAGAVE …

அத்தியாயம்_ 12

கௌதமை வெற்று பார்வையால் அளந்த ஹம்ஸினீ ஒரு பெருமூச்சுடன் கதையை தொடர்ந்தாள்.

கணவனின் பேச்சை மேற்கொண்டு கேட்க முடியாமல் விஷயத்தை அவள் கணவன் வீட்டாரிடம் கொண்டு போக அவர்களும் கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி மகனையே ஒத்து பேசினர்.

எங்களுக்கு தேவை ஒரு இந்திய மருமகள், அவள் மூலம் பிறக்க போகிற பிள்ளைகள். அவர்கள் எப்படி பிறந்தாலும் எங்களுக்கு பிரச்சினையில்லைன்னு சொல்ல அபி அருவருப்பில் கூனி குறுகி போய்விட்டாள். இனியும் இங்கிருந்தால் அவர்களே தன்னை சாக்கடையில் நெளியும் புழுவாக மாற்றிவிடுவார்களோ என்ற பயத்தில் பெற்றவர்களுக்கு முதல் முதலாக விஷயத்தை தெரியப்படுத்த அவர்களோ அபியை வேறு மாதிரி பேசியிருக்கிறார்கள்.

என்னன்னு புரியலையா சார் உங்களுக்கு, ஆமாம் அபி அவர்கள் வீட்டில் விஷயத்தை இத்தனை மாதமாக மறைத்து வைத்திருப்பதாக அவள் நினைத்திருக்கிறாள், ஆனால் அவள் கணவன் வீட்டாரோ அவர்களின் மகனை குற்றம் சொல்ல ஆரம்பித்ததுமே அவர்கள் உஷாராகி அபியின் வீட்டில் அவளின் நடத்தையை பற்றி திரித்து சொல்லியிருக்கார்கள்.

மகளை விசாரிக்காமல், தான் பெற்ற மகளை பற்றி புரிந்துக்கொள்ளாமல் சம்மந்தி வீட்டார் சொன்னதை கேட்டு மகளை தவறாக எண்ணி அவளை தலைமுழுகியிருக்கிறார்கள். அது தெரியாமல் கணவன் வீட்டாரின் அக்கிரமங்களை பொறுக்க முடியாமல் அவள் பெற்றவர்களை அழைத்து உண்மையை சொல்ல அவர்களோ அபியை வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசியிருக்கிறார்கள்.

பிறந்த வீட்டின் குடும்ப மானத்தை அமெரிக்காவில் பறக்க விட்டுவிட்டதாகவும், தாலி கட்டின கணவனை விட்டுட்டு வேறு எவனுடனோ அவள் தொடர்பு வைத்துள்ளதாகவும், பல நாள் இரவு அவனுடன் அவள் கழித்ததாகவும் சொல்லி மகளின் உண்மை நிலை புரியாமல் அவளை இழி சொல்லால் தூற்ற அபி அயர்ந்துபோய்விட்டாள்.

அவளின் பேச்சை காது கொடுத்து கேட்டால் தானே உண்மை என்னவென்று எடுத்து சொல்ல முடியும், அதை விட்டு எதிராளி சொன்னதை கேட்டுக்கொண்டு இன்னது தான் விஷயம் என்று அழுத்தமாக நம்பிக்கொண்டு மகளை தவறாக எண்ணினால் என்னவென்று செய்ய முடியும். கணவன் வீட்டார் செய்த கொடுமைகளை விட பெற்றவர்களின் கேவலமான பேச்சும், நடத்தையும் தான் அவளை மிகவும் துன்புறுத்தியது.

இனி எங்கள் முகத்தில் விழிக்காதே, முடிந்தால் செத்து தொலை என்று பெற்றவர்கள் அழைப்பை துண்டித்துவிட அபி துடித்துப்போனாள். அடுத்து அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தன் வாழ்க்கை புயலில் சிக்கிய படகாய் மாறும் என்று அவள் கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை. இரண்டு நாள் செய்வதறியாது துவண்டு போய் அமர்ந்திருந்தவளை ஏளனமாய் பார்த்த கணவனின் பார்வை அவளை துணுக்குற செய்தது.

யாரிடம் உன் வேலையை காட்டறே, உன்னால் என்னை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது. அப்படி வேறு ஏதும் முயற்சி செய்தாலும் நீ தான் கேவலப்படுவாய் என்றது அந்த பார்வை. அதுவே அவளுள் ஒரு உத்வேகத்தை கொண்டு வந்தது.

இனியும் இந்த வீட்டில், இந்த நாட்டில் இருந்தால் நிச்சயம் என்னை நினைச்சி பார்க்க முடியாத கேவலத்திற்கு தள்ளிவிடுவார்கள், முதலில் இந்தியா சென்று நேரில் அப்பா, அம்மாவை பார்த்து என் நிலைமையை சொன்னால் நிச்சயம் புரிந்துக்கொள்வார்கள் என்று முடிவெடுத்தவள் சில மாதங்கள் பழக்கத்தில் பழக்கமான ஒரு சில இந்திய பெண்களிடம் அவள் நிலைமையை சொல்லி அங்கிருந்து செல்ல வழி கேட்டிருக்கிறார்கள்.

அதன்படி அமெரிக்காவில் உள்ள தெற்காசிய மையத்திற்கு சென்று திருமதி பார்க்கரை சந்தித்து அவளின் இழி நிலையை கூறியிருக்கிறாள். அவர்களும் அதை விசாரித்து பார்த்துவிட்டு அவள் அமெரிக்காவை விட்டு இந்தியா செல்வதற்காக டிக்கெட், விசா ஏற்பாடுகளை செய்து கொடுத்து அவளை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்கள்…”

“அபி வீட்டில் அவளை ஏற்றுக்கொள்ளவில்லை, அதுதானே …?

ஆச்சர்யத்தோடு அவனை நோக்கியவள், ஏதோ நினைத்துக்கொண்டவள் போல ஆமாமென்று தலையாட்டிவிட்டு தொடர்ந்தாள்.

“ஆமாம் அவள் இந்தியா வந்திறங்குகிறாள் என்று தெரிந்ததும் அவள் என் சித்தப்பா வீட்டில் எல்லோரும் சுற்றுலா கிளம்பிவிட்டார்கள். அவளும் தனியாளாக டாக்சி பிடித்து வந்து வீட்டில் வந்து இறங்கினால் அவளை பூட்டிய வீடு தான் வரவேற்றது. பாவம் அவள் தனக்கு இப்படியொரு அவல நிலை வரும்ன்னு கனவிலும் எதிர்பார்த்திக்கவில்லை. கோபத்தில் பேசுகிறார்கள், நேரில் வந்து நிலைமையை சொன்னால் பெற்ற மகளை புரிந்துக்கொள்ள மாட்டார்களா என்ற நப்பாசையில் வந்தவளுக்கு எல்லாமே நிராசையாகிவிட்டது. போதத்திற்கு அக்கம் பக்கத்தார் வேறு அவளை பார்வையாலே துகிலிருத்திருக்கிறார்கள்.

வாழ்க்கையில் ஏமாந்து போன சின்ன பெண்ணால் எதை தான் தாங்கிக்கொள்ள முடியும், ஒன்று கட்டின புருஷனின் ஆதரவு இருந்திருக்கணும், இல்லையா பெற்றவர்களின் ஆதரவு இருந்திருக்கணும். இரண்டுமே இல்லாமல் நடு ரோட்டில் நிற்கிற மாதிரி ஆகிவிட்டது அவள் நிலைமை. அதன் பிறகு அவள் எங்கு போனால் என்ன ஆனாளென்று யாருக்கும் தெரியாது. அவ்வளவு ஏன் தெரிந்துக்கொள்ள விருப்பமில்லைன்னு அப்பா சொல்லி கேள்விப்பட்டேன். சித்தப்பா தான் ஒரு நாள் என்னிடம் பேசும்பொழுது சொன்னார் அவள் காதலித்தவனோடு ஓடிப்போய்விட்டாளென்று.

ஆனால் எனக்கு நம்பிக்கையில்லை. அவள் கணவன் வீட்டாரோடு தொடர்பு கொண்டு கேட்டபொழுது அவர்கள் எங்களுக்கு தெரியாதென்று கைகழுவி விட்டார்கள். அப்பாவுடன் சேர்ந்து நான் அவளை ரகசியாமாக தேடினேன். ஆனால் … ?

அதற்கு மேல் அவளால் பேச்சை தொடர முடியாமல் அழுகை தடை போட, முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தாள். முதுகு அழுகையில் குலுங்குவதை கண்டு கையாலாகாததனத்தோடு கெளதம் பார்த்துக்கொண்டிருந்தான் கனத்த மனதோடு. அவனுக்கு அபியின் பின்னால் இப்படியொரு சோக கதை இருக்கும்ன்னு கிஞ்சித்தும் நினைத்திருக்கவில்லை.

அவனின் விழிகளிலும் அபியின் நினைவில் வைரத்துளியாய் கண்ணீர். ஹம்ஸினீ அழுது முடிக்கும் வரை கெளதம் மௌனமாய் அமர்ந்திருக்க அவளே தன்னை தேற்றிக் கண்ணை துடைத்து வேதனையை விழுங்கிக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.

“அபியை இப்படியொரு நிலைமையில் சந்திப்பேன்னு நினைக்கவே இல்லை, எனக்கும் அவளுக்கு பெரிசா வயசு வித்யாசம் இல்லை, மாத கணக்கில் தான் அவள் எனக்கு தங்கை முறை. நன்றாக படித்த பெண், புத்திசாலி பெண். பெங்களூரில் தனியாக தங்கி படித்தவள். தன்னம்பிக்கை கொண்ட பெண். அப்படிப்பட்டவளை இன்று தான் யாரென்றே தெரியாமல் சுயநினைவில்லாமல் இருக்குமளவுக்கு என்ன நடந்தது? எப்படி இந்த இடத்துக்கு வந்து சேர்ந்தாள்? உங்களுக்கு அவளை எப்படி தெரியும்? நீங்க தான் அபியை இங்கே சேர்த்து கவனிச்சிக்கிறதா டாக்டர் சொன்னாரே? சொல்லுங்க சார் உங்களுக்கும் அபிக்கும் என்ன சம்மந்தம் …?

படபடவென்று சரவெடி மாதிரி கேள்விகளை கொட்ட கெளதம் இந்த கேள்விகளை எதிர்பார்த்திருந்தவன் போல அமைதியாக அவள் பேசி முடிக்கும் வரை அமர்ந்திருந்தான். ஹம்ஸினீயை ஹாஸ்பிடல் அழைத்துச் செல்லும் பொழுதே இந்த கேள்விகள் எழுமென்று நினைத்திருந்தவன் தான். ஆனால் புது ட்விஸ்ட்டாக ஹம்ஸினீக்கு அவள் உறவுக்கார பெண்ணாக போய்விட அவளை பற்றி ஹம்ஸினீயிடம் கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

சில நொடிகள் கனத்த மௌனத்திற்கு பின் கெளதம் பேச ஆரம்பித்தான்.

“அபியை எனக்கு எப்படி தெரியும்ன்னு சொல்றதுக்கு முந்தி எனக்குள் சில கேள்விகள், அதற்கு பதில் சொல்கிறாயா…?

தொண்டையை நம்பாமல் தலையை உருட்டினாள் சம்மதமாக.

“அபிக்கு நடந்த கொடுமைகள் அவள் அப்பாவுக்கே தெரியாத பொழுது உனக்கு எப்படி தெரிந்திருக்கு, அப்படியென்றால் நீ அவள் சார்பாக உன் சித்தப்பாவிடம் பேசியிருக்கலாமே…?

அவனின் கேள்விக்கு அவளின் இதழோரம் கசப்பான புன்னகை நெளிந்தது.

நான் வேலை விஷயமாக எங்கேயோ வெளியூர் சென்றிருந்தேன், அவள் வீட்டுக்கு வந்து யாரும் இல்லையென்றதும் எனக்கு தான் அழைத்தாள். அப்பொழுது அவளிடம் பேசி தெரிந்துக்கொண்டேன். அதன் பிறகு சித்தப்பா ஊரிலிருந்து வரும் வரை எங்க வீட்டில் தங்குமாறு சொன்னேன். அவளும் சரியென்று தான் சொன்னாள். ஆனால் அவள் என் வீட்டுக்கு வரவில்லையென்று நான் ஊருக்கு வந்து தெரிந்துக்கொண்டேன்…”

“ஓ !ன்சரி அபி நன்றாக படித்திருக்கிறாள், தன்னம்பிக்கை மிகுந்தவள், வேறு ஒரு ஊரில் தனியாக தங்கி படித்தவள்ன்னு சொல்றே, அப்படி வளர்த்த உன் சித்தப்பாவுக்கு தன் மகள் எவ்வித தவறும் செய்திருக்க மாட்டாள் என்ற நம்பிக்கை ஏன் வரவில்லை அவள் மேல். யாரோ ஒருத்தர் சொன்னதை எப்படி அவரால் ஏற்றுக்கொள்ளமுடிந்தது. எந்த விஷயத்திலும் கண்ணை நம்பாதேன்னு சொல்லுவாங்க, கண்ணால் காண்பதும் பொய், காதல் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்ன்னு பெரியவங்க சொல்லி வைச்சதை எப்படி மறந்தார்.

இவர் இத்தனைக்கு மகள் தவறான நடத்தையை நேரில் பார்க்கவில்லை, மகள் சொல்ல வந்த விஷயத்தையும் காது கொடுத்து கேட்கவில்லை, அப்புறம் அடுத்தவர் வாய்மொழியாக சொன்ன குற்றசாட்டை மட்டும் எதற்கு நம்பினாராம். பாசமாக வளர்த்த பெண்ணை இப்படி சந்தர்ப்பம் கிடைத்தால் போதுமென்று தூக்கியெறிந்த மாதிரி இருக்கே. கண்ணையும், காதையும் இறுக்கமாக மூடிக்கொண்டவர் வாயை மட்டும் எதற்கு திறந்து வைத்தாராம். அதையும் மூடி வைத்திருக்கலாமே, அட்லீஸ்ட் அபிக்கு இப்படியொரு நிலைமை வந்திருக்காதே. ஏன் இதை பற்றி நீங்க யாரும் அபியின் வீட்டில் பேசவில்லையா…? எனக்கென்னவோ இதற்கு பின்னால் வேறு ஏதோ விஷயம் இருக்கிற மாதிரி இருக்கு…?

கெளதமின் கேள்விக்கு ஹம்ஸினீயிடம் பதிலில்லை. சில நொடிகள் மௌனமாக யோசித்தவள் கௌதமை நோக்கி நிமிர்ந்தாள்.

“நீங்க கேட்கிற கேள்விகள் சரி தான், கல்யாணம் கூட அவசரசரமாக நடந்த மாதிரி தான் இருந்தது? ஏன்? இதை பற்றி அப்பொழுது யோசிக்க தெரியலை. நல்ல வரன் ப்ரோக்கர் மூலம் வந்ததுன்னு சொல்லி ஒரே மாதத்திற்குள் நிச்சயம், திருமணம் எல்லாம் முடிந்து அபி விமானமேறிவிட்டாள்.

அம்மாகூட கேட்டிருக்காங்க எதற்கு இத்தனை அவசரம்ன்னு, அப்பொழுதும் சித்தப்பா ஏதேதோ காரணம் சொல்லியிருக்கார் போல. அபிக்கு திருமணம் என்பதே எனக்கு சந்தோஷமாக இருந்தது. அதனால் சித்தப்பாவின்…ஆஆ இப்போ நினைவு வருது…”பேசிக்கொண்டே வந்தவள் நிறுத்தினாள்.

“எதற்கு சித்தப்பா அபியை பற்றி அவள் கணவன் வீட்டார் பேசியதை நம்பினார்ன்னு கேட்டீங்களே, அந்த கேள்விக்கு பதில் சொல்றேன். அவள் பெங்களூரில் யுஜி பண்ணிக்கிட்டிருந்த பொழுது அவள் தங்கியிருந்த வீட்டின் பக்கத்து வீட்டிலிருந்த ஒரு பையன் அவளுக்கு லவ் லெட்டர் அனுப்பினான்…”

“என்ன…”என்றான் கெளதம் இடையிட்டு.

“ஆமாம் சார், ஆனால் அவன் பலமுறை அபி கல்லூரிக்கு போகும் பொழுதும் வரும் பொழுது அவனின் காதலை சொல்லியிருக்கான், ஆனால் அபி அதை ஏத்துக்கலை, ஒரு முறை அவள் நடுரோட்டில் வைத்து அவனை செருப்பால் விளாசி தள்ளியிருக்காள், அப்படியும் அவன் தொந்தரவு தாங்கலை என்றதும் அவள் வீட்டில் வந்து சொல்லப்போவதாக மிரட்டியிருக்காள். அதனால் அவன் பயந்து அபியை தொல்லை செய்வதை நிறுத்திக்கொண்டான்.

ஒரு நாள் சித்தப்பாவும், சித்தியும் அவளை பார்க்க பெங்களுர் போயிருந்தாங்க, திரும்பி வந்த பொழுது அபியையும் கூடவே அழைச்சிட்டு வந்துட்டாங்க, ஆனால் அவங்க முகமே சரியில்லை. அபியை அவங்க எங்கேயும் அனுப்பாமல் வீட்டிலேயே வைச்சிருந்தாங்க. நான் கேட்டதற்கு கூட சரியான பதிலில்லை. ஒரு நாள் அப்பாவிடம் அவர் பேசிட்டிருந்தது எனக்கு கேட்டது. சீக்கிரமே அபிக்கு ஒரு வரன் பார்க்கணும், ப்ரோக்கர் யாரையாவது தெரியுமான்னு. ஏனென்று கேட்ட அப்பாவுக்கு , அபிக்கு லவ் லெட்டர் வருது, அவள் பக்கத்து வீட்டு பையனோடு ஊர் சுற்றுகிறாள், அவளை பற்றி அந்த தெருவே தவறாக பேசுது, எனக்கு மானம் போகுது. சீக்கிரமே ஒரு திருமணத்தை செய்து அவளை வெளிநாட்டுக்கு அனுப்பிட்டால் பிரச்சினை தீர்ந்திடும்ன்னு சொன்னார்.

பொதுவாக எங்க வீட்டில் பெரியவங்க என்ன சொல்றாங்களோ அதை தான் பிள்ளைகள் செய்யணும், இல்லையென்றால் பாட்டி திட்டுவாங்க. அப்பாவும், சித்தப்பாவும் ரொம்ப கண்டிப்பானவங்க. அதனால் நானோ, அபியோ பெரியவர்களை எதிர்த்து கேள்விகேட்க மாட்டோம்…”

“ஓ ! சரி பெரியவங்க கண்டிப்பானவங்க, ஆனால் அபி உன்னிடம் எதையும் ஷேர் பண்ணிக்க மாட்டாளா? உங்க சித்தப்பா சொன்ன மாதிரி அவள் காதலித்தாளா, நீ அதை பற்றி அவளிடம் கேட்டாயா …?

கௌதமின் தொடர் கேள்வி அவளை சற்றே களைப்படைய வைத்தது. விழிகளில் அலுப்பும்,சலிப்பும் தோன்றியது.

“ப்ச் உங்களுக்கு என் குடும்ப நிலையை எப்படி புரியவைப்பது. மற்ற குடும்பத்தில் சித்தப்பா, பெரியப்பா பிள்ளைகள் எல்லோரும் அக்கா , தங்கையாக ஒட்டி உறவாடுவாங்க போல. ஆனால் எங்க குடும்பத்தில் அப்படியில்லை. சித்தப்பாவும், அப்பாவுமே அப்படி தான். அண்ணன், தம்பி போல ஒத்துமையா இருந்து நான் பார்த்ததில்லை. அதற்குன்னு சண்டையும் போட்டதில்லை. ஏதோ தூரத்து உறவுக்காரர்கள் போல தாமரை இலை மேல் தண்ணீர் போல நடந்துப்பாங்க. எப்பொழுதாவது வருவாங்க, விசேஷம்ன்னா பத்திரிக்கை வைப்பாங்க, அப்பாவும் எங்களை அழைச்சிட்டு போயிட்டு விசேஷம் முடிந்ததும் உடனே அழைச்சிட்டு வந்திடுவார்.

அப்படியிருக்கும் பொழுது எங்களுக்குள் எப்படி நெருக்கம் வளரும். நானாவது பரவாயில்லை, அப்பா என்னை அங்கே அழைச்சிட்டு போவார். ஆனால் சித்தப்பா ரொம்ப கெடுபிடி, அபியை அதிகம் எங்கேயும் அனுப்பவும் மாட்டார், அழைச்சிட்டு போக மாட்டார். அதனால் என்னவோ எங்களுக்குள் அக்கா, தங்கை என்ற உறவு மட்டும் இருந்ததே தவிர நெருக்கம் இல்லை. என்ன செய்ய சொல்றீங்க ஸார். இப்போ இருக்கிற தெளிவு அப்போ இல்லாமல் போயிடிச்சே … ?

ஆனால் சார் ஒரு முறை சித்தப்பா வீட்டுக்கு போன பொழுது அபி எதையோ பறிகொடுத்த மாதிரி மொட்டை மாடியில் அமர்ந்திருந்தாள். அப்பொழுது அவளிடம் பேசும்பொழுது அவள் தான் முன்னே நான் சொன்ன விஷயத்தை எனக்கு சொன்னாள். அப்பா என் பேச்சை நம்பவில்லை, அந்த பொறுக்கி என்னை பழிவாங்க என்னை பற்றி தப்பும் தவறுமா அந்த தெரு ஆட்களிடம் சொல்லி வைச்சிட்டான்னு. ஆனால் சித்தப்பாவிடம் நியாயம் கேட்க முடியாதே, முடிந்தவரை அபிக்கு ஆறுதல் சொல்லிட்டு நான் வந்துட்டேன்…”

ஹம்ஸினீ பேச பேச கௌதமுக்கு பெரிதாக ஆச்சர்யம் எழவில்லை, அவள் சொன்ன மாதிரி தன் வீட்டில் இல்லையென்றாலும் தாயும் கொஞ்சம் அபியின் தந்தை போல தானே. அப்பா ராம் ப்ரசாத்க்கு இருக்கிற எளிமையான குணமும், தாராள மனதும், எதையும் ஈசியாக எடுத்துக்கொள்கிற குணமும் தாயிடம் இல்லையே, அதுதானே தன்னுடைய இந்த தனிமைக்கும், இறுக்கத்துக்கும் காரணம்.

அவனின் விழிகள் ஹம்ஸினீயை நோக்க அவள் அபியின் நினைவில் ஓய்ந்து போயிருப்பது புரிய நெடிய பெருமூச்சு எழுந்தது, உடனேயே அவள் கேட்ட தொடர் கேள்விகளும் நினைவு வர அதை பற்றி பேச எத்தனிக்கும் முன் அவனின் கைபேசி நாதமாய் சிணுங்கியது.

கைக்கடிகாரத்தை பார்த்துவிட்டு,”ஹம்ஸினீ நாம இதை பற்றி அப்புறம் பேசலாம். ரொம்ப களைப்பா இருக்கே, போய் ரெஸ்ட் எடு. காலையில் ஆபிஸ்க்கு போகணும். குட் நைட் …”

சொல்லிவிட்டு கைபேசியை உயிர்ப்பித்து,”சொல்லுங்கப்பா …”என்று பேசிபடியே படியேறி ரூமை அடைய ஹம்ஸினீக்கும் உடம்பை கொஞ்சம் படுக்கையில் போடேன் என்று மனது கெஞ்சியது. கெளதம் சொன்னபடி எழுந்து தன்னறைக்கு சென்று கதவை மூடிவிட்டு காலையில் எழ அலாரம் வைத்துவிட்டு படுத்தவளை நித்ராதேவி வாரி அணைத்துக்கொண்டாள்.

சட்டென்று விழிப்பு தட்ட, ஒரு நொடி ஹம்ஸினீக்கு தான் எங்கே இருக்கிறோம் என்று புரியவில்லை. அடுத்த நொடி பெங்களூரில் கெளதம் சார் வீட்டில் இருப்பது புரிய தன்னையே தலையில் கொட்டிக்கொண்டாள். இந்த உணர்வு முதல் நாள் வந்திருக்கணும், ஆனால் இரண்டாம் நாள் ஏன் வந்தது என்று யோசித்ததில் அபியை சந்தித்ததில் உடலும், மனதும் அழற்சியாக இருந்தது புரிந்தது. நேரத்தை பார்க்க அலாரம் வைத்த நேரத்தை விட ஒரு மணிநேரம் கடந்திருந்தது. அலாரம் அடித்து ஒளிந்திருப்பது புரிய தன் தலையில் தட்டிக்கொண்டாள்.

கெளதம் சாருக்கும், அபிக்கும் என்ன சம்மந்தம் என்று தெரிந்துக்கொள்ள மனது துடித்தது. அதனால் கடகவென்று எழுந்து குளித்து ரெடியாகி கீழே இறங்கி வர டைனிங் டேபிளில் ஏற்கனவே கெளதம் அமர்ந்து யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தான்.

சிறு குற்ற உணர்வுடன் அவன் எதிரில் அமர்ந்து,காலை வணக்கத்தை சொல்ல அவன் அதை சிறு தலையசைப்போடு ஏற்றுக்கொண்டபடி போனில் பேச்சை தொடர்ந்தான். சரசம்மா அவளுக்கு தட்டை வைத்து இடியாப்பத்தையும், குருமாவையும் பரிமாற அவளின் விழிகள் சிறு தயக்கத்தோடு கௌதமை ஏறிட்டது.

அவளை சாப்பிட சொல்லி சைகை காட்டிவிட்டு, அங்கிருந்து எழுந்துச் செல்ல அவளின் விழிகள் சரசம்மாவை நோக்கியது.

“சார் உனக்காக காத்திருந்தார், நீ வர தாமதம் ஆனதும் அப்போவே சாப்பிட்டாரும்மா, நீ சாப்பிடு…”

பேசியபடி அவர் மீண்டும் சமயலறையில் புகுந்துக்கொள்ள ஹம்ஸினீக்கு தன்னை நினைத்தே கோபம் வந்தது. முதல் நாளே தாமதம் பண்ணிட்டேனே, ச்சே என்ன சொல்ல போறாரோ…வேக வேகமாக அள்ளிப்போட்டுக்கொண்டு எழுந்து கிளம்பி ரெடியாக இருக்க கெளதம் தோளில் மாட்டிய லெதர் பேக்குடன் கீழே இறங்கி வந்தான்.

‘ப்ச் கெளதம் ஜாகிங் சென்றுவிட்டு வந்ததும் அவனிடம் அபியை பற்றி கேட்டு தெரிந்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு தான் படுத்தாள். ஆனால் கும்பகரணியாய் தூங்கிவிட்டேன் ச்சே. எப்படியும் காரில் போகும் பொழுது டைம் கிடைக்கும், அப்பொழுது கேட்கலாம்…’ என்று முடிவு செய்துக்கொண்டாள்.

“போகலாமா, ஆல்ரெடி கெட்டிங் லேட் …” என்றபடி காரை நோக்கி நடக்க ஹம்ஸினீயும் அவனை பின்தொடர்ந்தாள்.

காரில் ஏறி அமர்ந்ததும் அபியை பற்றி கேட்கலாம் என்று யோசித்திருந்தவள் கெளதம் காரை எடுத்ததுமே அவனுக்கு போன் வந்துவிட காதில் ஏர்போட் மாட்டிக்கொண்டு பேசிக்கொண்டே ட்ரைவ் செய்ய ஹம்ஸினீக்கு ஏமாற்றமாக போனது. ஆபிஸ் சென்று இறங்கியதும் மேற்கொண்டு எதை பற்றியும் யோசிக்க விடாமல் வேலை அவர்களை விழுங்கிக்கொண்டது.