UN NESATHTHIL VAAZHVEN NAANAAGAVE …

அத்தியாயம்_ 11

“அபி ….அபி எப்படிம்மா இருக்கிறே? நீ எப்பொழுது என்னை அடையாளம் கண்டு பேசவே, சொல்லு அபி ? இன்னும் எத்தனை நாள் உன்னை சுற்றி என்ன நடக்கிறது என்ற உணர்வே இல்லாமல் இருப்பே…? எப்பொழுது பழைய அபிநயாவை பார்ப்பேன்…?

நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக பேசினாலும் அந்த வார்த்தையிலிருந்து வலியும், வேதனையும் கதறலும் கேட்போர் நெஞ்சை பிழியத்தான் செய்தது. ஆனால் ஹம்ஸினீக்கு கௌதமின் பேச்சோ, அங்கே ஒருத்தன் அவளிடம் பேசிக்கொண்டிருக்கிறான் என்ற நினைவோ சுத்தமாக இல்லை. அவளின் பார்வை ஓர் மூலையில் சின்ன குழந்தை போல கௌதமை பார்த்து விழித்துக்கொண்டிருந்தவள் மேலே அதிர்ச்சியோடு நிலைத்திருந்தது. 

மொட்டையடித்து ஆறுமாதத்தில் வளர்ந்த மாதிரி முடி, அதுவும் கையால் ஆங்காங்கே பிடிங்கின மாதிரி இருக்க, சில இடங்களில் முடியே வளராமல் திட்டு திட்டாக மண்டை தெரிந்தது. முகத்தில் கருமை படர்ந்து அழகான முகத்தை பொலிவற்று காட்டியது. கண்களை சுற்றி கருவளையம். எலும்பும் தோலுமாய் உருவம். காய்ந்து போன உதடுகள். மொத்தத்தில் உருக்குலைந்து போன உருவம். அபிநயாவா இது? என் தங்கை அபிநயாவா ….? 

சராசரி உயரம் ,சந்தனக்கலரில் நிலவு போன்ற வட்ட முகத்தில் தடாகத்தில் நீந்தும் மீன்களாய் கருவண்டு விழிகள் துருதுருக்க, ஆரஞ்சு சுளையை ஒட்டி வைத்த மாதிரியான இயற்கையிலே சிவந்த அதரங்கள், எள்ளு பூ நாசி அதில் எப்பொழுதும் மின்னும் ஒற்றை கல் மூக்குத்தி, நீள கருங்கூந்தல் என ஆளை அசரடிக்கும் அழகில் இருந்தவளா இவள்.

பார்க்க பார்க்க ஹம்ஸினீயின் விழிகளில் கண்ணீர் திரையிட மூளையில் பிரளயம் நடக்க கொஞ்ச கொஞ்சமாக காட்சிகள் மங்கலாக கால்கள் வலுவிழுந்து தொய்ந்து துணியாய் துவள தடாலென்று மரம் போல சாய்ந்தாள்.

“கவலைப்படாதீங்க கெளதம், ஆண்டவன் அபி விஷயத்தில் நிச்சயம் கருணை காட்டுவார் நம்பிக்கையோடு இருங்…”

கௌதமுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த சரத் தடாலென்று சத்தம் கேட்டு பாதி பேச்சிலேயே வேகமாக திரும்ப, கௌதமும் அசுவாரஸ்யமாக திரும்பினான். ஹம்ஸினீ மயங்கி கீழே விழுந்து கிடக்கவும் இரு ஆண்களுமே பதறி அவளை நெருங்கினர். அதற்குள் ஒரு நர்ஸ் ஓடி வந்து அவள் முகத்தில் தண்ணீரை தெளிக்க ஹம்ஸினீயின் விழிகள் மழையில் நனைந்த சிட்டுக்குருவியாய் சிலிர்த்து மெல்ல திறந்தது. 

தன் முகத்தருகே பதட்டத்தோடு கௌதமும், கவலையோடு டாக்டரும் பார்க்க மலங்க விழித்தவளின் பார்வை மேல்நோக்கி சென்றது. சுற்றி மனநலம் பிழறிய பெண்கள் ஏதோ சர்க்கஸை வேடிக்கை பார்ப்பது போல வாயில் விரலை வைத்து கடித்துக்கொண்டும், தலையை சொறிந்துக்கொண்டும், இளித்துக்கொண்டும் பார்க்க ஹம்ஸினீக்கு தானிருந்த இடம் பற்றிய சொரணை வந்தது. 

மெல்ல எழ முயற்சி செய்தவளை கெளதம் கைகொடுத்து எழுப்பி அமரவைத்தான். 

“என்னாச்சு ஹம்ஸினீ, இந்த இடத்தையும் இங்கே இருப்பவர்களையும் பார்த்து பயந்துட்டீங்களா? அதற்கு தான் சொன்னேன் உங்களை இங்கே வரவேண்டாம்ன்னு. எழுந்திருங்க நாம இங்கிருந்து போகலாம்…” 

அவளை எழுப்ப முயற்சிக்க அவளின் கைகள் கௌதமின் கைகளை அனிச்சையாக தள்ளிவிட்டபடி எழுந்து கொஞ்சம் கூட அசையாமல் அங்கேயே அமர்ந்திருந்த அபிநயாவை நோக்கி சென்றாள் கண்ணீருடன். 

எப்படி இருந்தவள் இன்று இப்படி அடையாளம் தெரியாமல் உருத்தெரியாமல் உருக்குலைந்து போயிருக்கிறாளே, கடவுளே எவனோடவோ ஓடி விட்டாளென்று அவளின் புகுந்த வீட்டார் சொல்லி பிறந்த வீடும் இவளை கைவிட்டுவிட்டதே. ஆனால் இப்படி மனநலம் குன்றிய இடத்தில் இவள் இருக்க வேண்டிய அவசியமென்ன? இவளுக்கு என்ன ஆனது? கடவுளே இதென்ன கொடுமை. நெஞ்சம் பதற அவளின் முகத்தை இரு கைகளாலும் ஏந்தினாள். 

“அபி, உனக்கு என்னடி ஆச்சு? நீ ஏன் இங்கே இருக்கிறே? உன்னை பற்றி என்னவெல்லாமோ சொன்னார்களே, இதென்ன கோலம்…” என்று அழுகையுடன் அவளை உலுக்கியவள் அவள் பதில் சொல்லும் நிலையில்லை என்பதை உணர முடியவில்லை. 

“சொல்லு அபி, சொல்லு நீ ஏன் இங்கே இருக்கிறே? உன்னை யார் இந்த நிலைமைக்கு ஆளாக்கியது. ஹையோ உன்னை நான் இந்த நிலைமையில் தான் பார்க்கணுமா …? என்று அவளை அணைத்துக்கொண்டு கதற இரு ஆண்களும் புரியாமல் பார்வை பரிமாற்றம் செய்துக்கொண்டார்கள்.

இதில் சரத் தன்னை சுதாரித்து, ஹம்ஸினீயை நெருங்கினார்.

“மிஸ் ஹம்ஸினீ, இவங்களை உங்களுக்கு தெரியுமா? இவங்க உங்களுக்கு என்ன வேண்டும் …?

டாக்டரின் கேள்விக்கு அவரிடம் திரும்பி,”நா …”என்று ஆரம்பித்தவள் ஏதோ உந்தப்பட்டவளாக எழுந்து கௌதமை நெருங்கினாள். 

“சார் அபியை உங்களுக்கு எப்படி தெரியும்? நீங்க தான் அவளை இங்கே கொண்டு வந்து சேர்த்தீங்களா? சொல்லுங்க சார்…? அவள் ஏன் இப்படி ஒரு கோலத்தில் இருக்கிறாள் …? என்று மெல்ல ஆரம்பித்தவள்  திடீரென்று வெறிக்கொண்டவள் போல அவனின் சட்டையை பிடித்து உலுக்க கெளதம் நிலைதடுமாறி போக சரத் அவளை அவனிடமிருந்து பிரித்தார்.

“ஹம்ஸினீ என்ன பண்றீங்க, இவர் யார் தெரியுமா…? இத்தனை வருஷம் அபிநயாவின் மருத்துவ செலவுகளை பார்த்துக்கிறார். அதுமட்டுமில்லாமல் அடிக்கடி வந்து பார்த்துவிட்டும் செல்வார். கெளதம் அவளின் வெல்விஷர்…”

“சரத் இருங்க நன் பேசிக்கிறேன், அபிநயாவை இவங்களுக்கு தெரிஞ்சிருக்கு. அதனால் தான் கோபபடறாங்க. நீங்க உங்க டூட்டி நர்ஸிடம் சொல்லி அபியை பார்த்துக்க சொல்லுங்க. நான் ஹம்ஸினீயிடம் பேசிட்டு வர்றேன். வாங்க ஹம்ஸினீ…” என்று திரும்ப ஒரு நிமிஷம் என்று நிறுத்தினார் டாக்டர். 

“கெளதம் இப்போதைய விசிட்டர் நேரம் முடிஞ்சி ரொம்ப நேரமாயிடிச்சி. நீங்க இப்போ கிளம்புங்க, வேண்டுமென்றால் நாளை வந்து பாருங்க…”

டாக்டரின் பேச்சை இருவருமே ஒரு வித திக்ப்ரமையோடு நோக்க, தன் வேலை முடிந்தது என்ற ரீதியில் தன் அறைக்கு சென்றுக்கொண்டிருந்த டாக்டரையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். முதலில் சுதாரித்தவன் கெளதம் தான். 

“வாங்க ஹம்ஸினீ, நாம கிளம்பலாம். வீட்டில் போய் பேசிக்கலாம் …” என்று இறுகிய குரலில் சொல்லிவிட்டு வண்டியை நோக்கி நடக்க ஹம்ஸினீயும் அமைதியாக நடந்தாள். ஆனால் அவள் மனதில் ஏகப்பட்ட கேள்விகள், குழப்பங்கள். சித்தப்பாவின் பெண் அபிநயாவை இப்படியொரு இடத்தில் சந்திப்போம் என்று அவள் சற்று எதிர்பாராதவை.

இருவரும் வீடு வந்து சேரும் வரை ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை, பேசிக்கொள்ளவில்லை. இருவர் மனதிலும் இறுக்கம் குடிக்கொண்டிருந்தது. கார் வீட்டை அடைந்ததும் பதுமை போல ஹம்ஸினீ இறங்கி நடக்க காரை பூட்டிவிட்டு கெளதம் அவள் பின்னாலேயே வந்தான்.

கார் வந்த ஓசை கேட்டு சரசம்மா சமையலறையிலிருந்து வெளியே வந்தார் புன்னகை முகத்துடன். 

“வாம்மா , என்ன பெங்களூரை சுற்றி பார்த்தாயா? உனக்கு பிடிச்சிருக்கா …? ஹையோ களைப்பா வந்தவர்களை நிற்க வைச்சி கேள்விகள் கேட்டுக்கிட்டு இருக்கேன் பார். முதலில் ட்ரெஸ்ஸை மாத்திக்கிட்டு வாங்க, நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்…” என்று உள்ளே செல்ல திரும்பியவரை நிறுத்தினான் முதலாளி. 

“எனக்கு சாப்பாடு வேண்டாம், ஹம்ஸினீயை சாப்பிட வையுங்க …” என்று சொல்லிவிட்டு திரும்பி நடந்தவனை ஒரு நிமிஷம் என்று நிறுத்தினாள்.

“அம்மா எனக்கும் சாப்பாடு வேண்டாம்…” என்றவள் கௌதமிடம் திரும்பி அர்த்தத்துடன் நோக்கினாள்.

அவனும் விழிகளால் சைகை காட்டிவிட்டு மாடியேறி செல்ல ஹம்ஸினீ அவனை பின்தொடர்ந்து மாடியேறினாள். சரசம்மாவோ இருவருமே சாப்பாடு வேண்டாம் என்றதும் ஒரு பெருமூச்சுடன் மீண்டும் உள்ளே சென்றார். 

மாடியில் இருந்த ஹால் சோஃபாவில் அவளை அமர சொல்லிவிட்டு எதிரில் அமர்ந்த இருவருக்கும் விஷயத்தை எப்படி ஆரம்பிப்பதென்ற குழப்பம், ஆனால் ஏதோ ஒரு புள்ளியில் ஆரம்பித்து தானே ஆகணும். ஆழ்ந்த யோசனையிலிருந்தவளை உற்று நோக்கிவிட்டு பேச்சை ஆரம்பித்தான். 

“அபிநயாவை உங்களுக்கு முதலிலேயே தெரியுமா ஹம்ஸினீ, அவங்களை பார்த்ததும் அபப்டி பதறினீங்களே, உங்களுக்கு உறவா அவள் …? 

யோசனையில் ஆழ்ந்திருந்தவள் அவன் கேள்வியில் நிமிர்ந்து அவனை நேராக நோக்கினாள். 

“ஆமாம், அவள் என் தங்கை …” 

“சொந்த தங்கச்சியா…? என்றான் சிறு அதிர்ச்சியோடு. அதனால் தான் உங்களை பார்த்ததும் எங்கேயோ பார்த்த மாதிரி இருந்ததா எனக்கு …? என்று தனக்குள் முணுமுணுத்துக்கொண்டான். 

கெளதம் முணுமுணுத்தது ஸ்பஷ்டமாக காதில் விழுந்தாலும் அபிநயாவை ஒரு மனநோயாளியாக சந்தித்த அதிர்ச்சியில் அவளின் கடந்தகாலம் அவள் கண்முன்னே படமாய் விரிந்தது. தன்னையும் மீறி அபிநயாவை பற்றி சொல்ல ஆரம்பித்தாள். 

“அபிநயா உடன்பிறந்தவள் இல்லை, சித்தப்பாவின் மகள். அபிநயா திருமணமாகி அமெரிக்கா சென்றாள், அவளின் கணவனின் பெயர் திலீப். அவன் ஒரு சிஸ்டம் அனலிஸ்ட். நல்ல வசதியானவன், பார்ப்பதற்கும் அழகாக இருப்பான், கிறீன் கார்ட் ஹோல்டர். அவனின் மொத்த குடும்பமும் அங்கு தான் இருந்தது. அதனால் ஒரு ப்ரோக்கர் மூலம் வந்த வரனை நன்றாக விசாரித்து தான் திலீப்பிற்கு திருமணம் செய்து வைத்தார் சித்தப்பா. 

ஆனால் அங்கு அவளுக்கு நிம்மதியான வாழ்க்கை இல்லை. திலீப் ஒரு நாள் கூட அவளுடன் வாழவில்லை. ஆபிஸ் முடிந்து வந்ததும் குளித்து ரெடியாகி வெளியே சென்றுவிடுவான். இரவு வீடு திரும்ப இரண்டு மூன்று மணி ஆயிடும். சில நேரங்களில் காலையில் தான் வருவான். அபிநயா காரணம் கேட்டதற்கு ஆபிஸில் வேலை, நண்பர்களின் பார்ட்டி, க்ளையண்ட் மீட்டிங் என்று விதவிதமான காரணங்களை அடுக்குவான். 

சில சமயங்களில் இரண்டு மூன்று நாள் கூட வீட்டுக்கு வரமாட்டான். இதை பற்றி அவளின் மாமியார் வீட்டில் சொன்னால் அவன் உன் புருஷன், அவனை பற்றி என்னிடம் தவறாக பேசாதே என்று அடக்குவார். சில சமயங்களில் அவரே போன் செய்து மகனை பற்றி விசாரிப்பார், இவள் அவர் எங்கே போகிறார் என்று தெரியவில்லையென்று சொன்னால் அதற்கும் திட்டு விழும். 

புருஷன் எங்கே போகிறான், வருகிறானென்று கூட தெரியாமல் நீ என்ன குடும்பம் நடத்துகிறாய் என்று. ஒரு நாள் அவன் மாலை ப்ரெண்ட்ஸ் பார்ட்டி , பீட்டர் வீட்டுக்கு தான் போறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பியதும் அபி அவள் பீட்டரின் வீட்டுக்கு போன் செய்திருக்கிறாள். திலீப் அங்கில்லை என்றதும் தயக்கத்துடன் அவள் விஷயத்தை கூற பீட்டருக்கு திலீப்பின் ஏமாற்று வேலை புரிந்து போனது. நண்பன் அவன் மனைவியிடம் எந்த உண்மையையும் கூறாமல் ஏமாற்றிவருகிறான் என. ஆனால் எத்தனை காலம் தான் ஏமாற்றுவது, ஒரு நாள் உண்மை தெரிந்ததுதானே ஆகவேண்டும். அவளின் கணவனை பற்றி அந்த பெண் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் சிறு தயக்கத்துடன் சொல்ல ஆரம்பித்தான் பீட்டர்.

“திலீப் அவனுடைய கேர்ள் ப்ரெண்ட் ஒலிவியா வீட்டில் தான் இருப்பான், உன்னிடம் அவன் சொல்லலையா …? 

அதை கேட்டதுமே அபி அதிர்ந்தாலும் கணவனை ஏனோ தவறாக நினைக்க தோன்றவில்லை. அதனால் நிதானமாக விசாரித்திருக்கிறாள். 

“ப்ரெண்ட் என்றால் ஜஸ்ட் ப்ரண்ட் தானே, அதற்கு எதற்கு இரவு நேரம் முழுவதும் அங்கேயே தங்கணும் …? 

அவளின் வெள்ளேந்தியான கேள்விக்கு பீட்டருக்கு அவள் மீது பரிதாபம் உண்டானது. இனியும் மறைப்பது நல்லதில்லை என்று தோன்றியது போலும்.

“சிஸ்டர் நீங்க நினைக்கிற மாதிரி ஒலிவியா வெறும் கேர்ள் ப்ரண்ட் இல்லை திலீப்புக்கு, அவள் தான் அவனுடைய மனைவி. அவனுக்கு பலவருஷமாக அவளுடன் தொடர்பு இருக்கு. அவள் ஒரு டிவோர்ஸி, அவளுக்கு மொத்தம் மூன்று கணவர்கள். ஒவ்வொரு கணவனுக்கும் ஒவ்வொரு பிள்ளைகள் என மூன்று பிள்ளைகள். இப்பொழுது இவன் அவளுக்கு நான்காவது கணவன்…”

பீட்டர் சொல்ல சொல்ல அபிநயாவுக்கு பூமியே தட்டாமாலை சுற்றியது போலிருந்தது. அப்பொழுது தான் திலீப் ஏன் வீட்டில் தங்குவதில்லை என்று புரிய இடிந்துபோனாள்.

“மைகாட் …” என்றான் கெளதம் நெற்றியில் அறைந்துக்கொண்டு.

கெளதம் குறுக்கிட்டதை கந்துகொள்ளாதவள் போல அபிநாயாவின் கதையை தொடர்ந்தாள். அடுத்த நாள் காலையில் வந்த கணவன் குளித்துவிட்டு உடனேயே ஆபிஸ் கிளம்பவும் அவனை நிறுத்தி வைத்து பீட்டர் சொன்னதை கேட்டிருக்கிறாள்; அதை கேட்டதும் அவனுக்கு கோபம் வந்திருக்கிறது. என்னை பற்றி வேவு பார்க்கிறாயா என்று அவளை அடித்துவிட்டு ஆபிஸ்க்கு கிளம்பிவிட்டான். 

அபிநயாவுக்கு அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை, பெற்றவர்களிடம் சொல்லலாம் என்றால் அவர்கள் கஷ்டப்படுவார்களே என்ற பயம். மாமியார் வீட்டில் கணவனை பற்றி சொல்லலாம் என்றால் ஏற்கனவே அவர்கள் மகன் செய்கிற எல்லாவற்றிக்கும் அபியையே திட்டுகிறார்கள். இதற்கு என்ன தான் வழி என்று யோசித்தவளுக்கு ஒரு வழி புலப்பட்டது.

கணவன் சென்று எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தாளோ ஒரு முடிவோடு எழுந்து குளித்துவிட்டு பீட்டர் கொடுத்த முகவரியை எடுத்துக்கொண்டு ஒலிவியாவின் வீட்டிற்கு சென்றாள். தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, தன் கணவனை விட்டு விடுமாறு அவளிடம் அபி கெஞ்சியிருக்கிறாள்.

“ஓ …! என்றான் கெளதம். 

ஆனால் வெள்ளைக்காரியோ அபியை வினோதமாக நோக்கி கேலியாக சிரித்திருக்கிறாள். 

“நான் உன் புருஷனை இங்கே வர சொல்லவில்லை. அவனுக்கு இங்கே வந்து என்னுடன் படுக்கையை ஷேர் செய்துக்க பிடிச்சிருக்கு. உன்னால் முடிந்தால் அவனை இங்கே வரவேண்டாமென்று அவனை தடுத்துக்கொள். ஐ ம் ஹெல்ப்லெஸ்…”

கையை விரித்த வெள்ளைக்காரியிடம் வேறு என்ன பேசுவது. என்ன பேசினாலும் கெஞ்சினாலும் விழலுக்கு இறைத்த நீர் என்று புரிந்துக்கொண்டவள் வீடு திரும்பி அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் தவித்துக்கொண்டிருந்த பொழுது வீடு திரும்பிய திலீப் அவளிடம் சண்டை போட்டிருக்கிறான் ஒலிவியா வீட்டிற்கு போனதிற்க்காக. 

“திலீப்புக்கு தான் வெள்ளைக்காரியை தான் பிடிச்சிருக்கு என்றால் எதற்காக அபியை திருமணம் செய்துக்கொண்டு அழைத்துக்கொண்டு வரவேண்டும். ஒலிவியாவுடனேயே சந்தோஷமாக வாழ்ந்திருக்கிறாளாமே …? 

கௌதமின் கேள்விக்கு ஹம்ஸினீயிடமிருந்து வறண்ட புன்னகை வெளிப்பட்டது.

“விதின்னு ஒன்று இருக்கே, அதை மாற்ற முடியுமா? திலீப்பிடம் சிக்கி அவள் சீரழியணும்னு தலையில் எழுதி இருக்கே…? நீங்க கேட்ட கேள்வியை தான் அவளும் திலீப்பிடம் கேட்டிருக்கிறாள். அதற்கு அவன் சொன்ன பதில் தான் வினோதம். அவன் பெற்றோருக்கு வெள்ளைக்காரி மருமகளாக வருவது பிடிக்கவில்லையாம். அது மட்டுமில்லாமல் வெள்ளைக்காரி கண்டவனுக்கெல்லாம் பிள்ளை பெத்து வைச்சிருக்காள், எங்களுக்கு உனக்கும் இந்திய பெண்ணுக்கும் பிறந்த பேரக்குழந்தை தான் வேண்டும் என்று திலீப்பை இமோஷனலாக லாக் செய்து அபியை திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்…?

“அடப்பாவிகளா …? என்று கொதித்தான்.

“இதை விட கொடுமை அவன் மேற்கொண்டு சொன்னது தான். என்னால் ஒலிவியாவை பிரிந்து வர முடியாது, எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும். நீ வேண்டுமென்றால் உன் இஷ்டத்திற்கு இரு என்றிருக்கிறான். அபிக்கு அவன் பேச்சின் அர்த்தம் புரியாமல் என் இஷடம் என்றால் என்னவென்று கேட்க அடுத்து அவன் சொன்னது தான் கொடுமையின் உச்சக்கட்டம்.

நீ எனக்கு மனைவி வெளி உலகுக்கு தான். உனக்கு இங்கே எவனையெல்லாம் பிடித்திருக்கிறதோ அவனுடன் நீ உல்லாசமாக இருக்கலாம். நானே அதற்கு ஏற்பாடு செய்கிறேன். நீ உன் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவி. அதன் மூலம் குழந்தை பிறந்தாலும் பிரச்சினையில்லை…”

ஹம்ஸினீ ஒரு இயந்திரத்தனமாக சொல்லிக்கொண்டு வர கௌதமின் முகம் சுளித்தது. 

தன் பேச்சை நிறுத்தி அவனை வெற்று பார்வை பார்த்தவள்,”கதையாக கேட்கும் பொழுதே அருவறுப்பா இருக்கில்லையா, அப்போ என் அபியின் நிலைமையை யோசியுங்க  அவள் அந்நேரத்தில் எப்படியெல்லாம் அவமானத்தில் துடித்திருப்பாள் …? என்று கேட்க கௌதமிடம் பதிலில்லை.