UN NESATHTHIL VAAZHVEN NAANAAGAVE …

அத்தியாயம் _ 9

பிரபு வீடு …

காலையில் ஹம்ஸினீ வீட்டிற்கு சென்று அவளை கௌதமுடன் பெங்களுர் அனுப்பி வைத்துவிட்டு வந்தவன் அவசரமாக அள்ளி போட்டுக்கொண்டு பேங்கிற்கு கிளம்பிவிட்டான். பூங்காவனத்திற்கும் பள்ளியில் இன்ஸ்பெக்ஷன் என்பதால் அவரும் சீக்கிரமே கிளம்பிவிட்டார். பிரபுவுக்கு பேங்கில் அதிக வேலையென்று தாமதமாக தான் வீடு திரும்பினான். பூங்காவனமும் மிகவும் களைப்பாக இருந்ததால் இரவு சாப்பிட்டதும் இருவருமே படுத்துவிட்டார்கள். அடுத்த நாள் லீவ் என்பதால் நிதானமாக சமைத்து சாப்பிட்டுவிட்டு மகனின் வருகைக்காக காத்திருந்தவரின் மனதில் எறும்பு ஊர்வலமாய் கேள்விகளின் ஊர்வலம்.

பிரபு எந்தவொரு விஷயத்தை செய்தாலும் அதை காரணமின்றி செய்கிறவன் இல்லை என்பது தாய் அறிந்த ஒன்று. அப்படிப்பட்டவன் தந்தையை இழந்து யாருமற்றவளாக தன்னந்தனியாக நிற்கிறவளுக்கு இப்போதிருக்கிற துணை பிரபுவும் அவரும் தான். ஆனால் அதையும் பிரித்து மீண்டும் அவளை தனியாக அனுப்பி வைத்ததின் காரணம் சுத்தமாக புரியவில்லை.

பாவம் ஹம்ஸினீ, தன் தனிமையை போக்கிக்கொள்ள அடிக்கடி பூங்காவனத்திடம் ஓடி வந்து பேசுகிறாள். இதில் இவன் வேறு. நேற்றே கேட்டிருக்கலாம். ஆனால் கௌதமிடம் அவளை செகரட்டரி என்று அறிமுகப்படுத்திய நாளிலிருந்து பிரபுவுக்கும் நிதானமாக அமர்ந்து பேச நேரமுமில்லை, பேச இடமும் கொடுக்கவில்லை. மகன் ஏதோ ஒரு காரணத்திற்க்காக செய்கிறான் என்று புரிந்துக்கொண்டு ஹம்ஸினீயை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

மதியம் சாப்பிட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்தவர் மாலை வேலைகளை முடித்து மகனுக்கு பிடித்த இனிப்பு போளிக்கு தேவையானதை செய்து வைத்தார் மகன் வந்ததும் சூடாக செய்து கொடுக்க. காஃபிக்கு அடுப்பில் பாலை ஏற்றி, அது கொதி வந்ததும் காலை எடுத்த டிகாஷனில் தனக்கு காஃபியை கலந்துக்கொண்டு மகனுக்காக புதுசாக டிகாஷனுக்கு ரெடி செய்து விட்டு ஹாலுக்கு வந்து டிவியின் முன் அமர்ந்தார்.

டிவியை உயிர்ப்பிக்க அதில் சீரியல் ஓடிக்கொண்டிருந்தது, அதை பார்க்க எரிச்சல் பட்டு ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டிருந்தவரின் கைபேசி சிணுங்கியது. எடுத்து பார்த்தவருக்கு ஹம்ஸினீயின் நம்பரை கண்டதும் முகம் தாமரையாய் மலர்ந்தது. தொடர்பை இணைத்தார்.

“அம்மா, எப்படி இருக்கீங்க? பிரபு எப்படி இருக்கான்…?

அவளின் கேள்விகளுக்கு பதில் சொல்லி நலம் விசாரித்துவிட்டு,”அப்புறம் பெங்களூர் எப்படி இருக்கு ஹம்ஸினீ, உனக்கு வசதியா இருக்கா ? பிடிச்சிருக்கா? உன் செகரட்டரி வேலை ஆரம்பிச்சிடுச்சா …?

படபடவென்று கேள்விகளை கொட்ட எதிர்முனை சிரித்தது.

“நீங்க கேட்ட எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில் சூப்பர், அப்புறம் அம்மா நீங்க தான் கெளதம் ஸாரிடம் அவர் வீட்டிலேயே தங்க வைக்க சொன்னீங்களா …?

“ஆமாம் ஹம்ஸினீ, உன்னை பெங்களூரில் தனியா தங்க வைப்பதில் எங்க இருவருக்குமே விருப்பமில்லை, அதான் கெளதம் தம்பியிடம் ஒரு வேண்டுகோள் மாதிரி வைச்சேன். தம்பிக்கு என் கவலை புரிந்து உடனே சரின்னு சொல்லிட்டார். ரொம்ப நல்ல தம்பி ஹம்ஸினீ அவர்…”

“ஓ ! சரிம்மா பிரபு ஆபிஸிலிருந்து வந்துட்டானா …?

“இன்னும் இல்லைம்மா, அவன் வர்ற நேரம் தான், அவன் வந்ததும் பேச சொல்லவா …?

“இல்லைம்மா, நானே கால் பண்றேன், சரிம்மா நான் அப்புறம் அழைக்கிறேன்…”

தொடர்பை துண்டித்ததும் பூங்காவனத்தின் யோசனை ஹம்ஸினீயின் விசாரிப்பை சுற்றி சுற்றி வந்தது. டிவி ஓடினாலும் மனம் அதில் பதியவில்லை, மனதில் குழப்பம் கரையான் புத்து கட்ட தொடங்கியது.

“அம்மா …அம்மா…”

யாரோ அவரை உலுக்கிக்கொண்டிருக்க சட்டென்று சிந்தனை கலைந்து நிமிர்ந்து பார்த்தார், மகன் தான் சிறு கலக்கத்துடன் உலுக்கி கொண்டிருந்தான்.

“என்னம்மா ஆச்சு, வீட்டை தொறந்துபோட்டுட்டு எதையோ நினைச்சிட்டு உட்கார்ந்திருக்கீங்க…?

“நீ எப்போ கண்ணா வந்தே, பைக் சத்தம் கேட்கலையே …”என்று புருவத்தை சுருக்கினார்.

“அது சரி, நீங்க வேறு ஏதோ உலகத்தில் இருந்திருக்கீங்க, அதான் சுற்றி நடந்த எதுவும் உங்க மனதில் பதியலை. இருங்க முதலில் ரெப்பிரேஷ் செய்துட்டு வர்றேன், பயங்கர டையர்ட் …”

மகன் சென்றதும் எழுந்து சென்று அடுப்பில் கல்லை வைத்து போளியை தட்ட ஆரம்பித்தார். மகன் வருவதற்குள் சிற்றுண்டியையும், நுரை பொங்க காஃபியையும் கொண்டு வர பிரபு கைலியில் மாறி வந்தான்.

“என்னம்மா இன்னிக்கு என்ன ஸ்பெஷல், எனக்கு பிடிச்ச ஐட்டம் செய்திருக்கீங்க …”

ஆவலாய் ஒரு விள்ளையை பிட்டு வாயில் வைத்து சுவைக்க தாயின் முகம் மலர்ந்தது மகன் சுவைத்து உண்பதை. அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்தவர் மகன் கையை கழுவிக்கொண்டு வந்து காஃபியை கையில் எடுத்ததும் தன் குழப்பங்களை கொட்ட எத்தனித்தார். ஆனால் அதற்குள் மகனே அவர் கேட்க நினைத்த விஷயத்தை ஆரம்பித்தான்.

“ஹம்ஸினீ உனக்கு போன் செய்தாளா, எனக்கு இரண்டு மூன்று முறை அழைச்சிருக்கா, ஆனால் வேலை பிசியில் நான் பார்க்கலை. சொல்லும்மா உனக்கு அழைச்சாளா ? எப்படி இருக்காளாம், பெங்களுர் ஓகேவா அவளுக்கு …?

பூங்காவனம் மகனை சற்று அழுத்தமாக பார்த்துவிட்டு,”அவள் ஓகே தான், ஆனால் எனக்குள் தான் நிறைய குழப்பம். சொல்லு பிரபு எதுக்கு அவளை அவசரமாக முடிவு செய்து கௌதமுடன் அனுப்பி வைச்சே. பாவம்டா அவள் இப்போ தான் அப்பாவை இழந்திருக்கிறாள், அவளுக்கென்று ஆதரவு யாரும்மில்லை, நாம தான் துணைன்னு நம்பி வந்த பெண்ணை இப்படி அவளுக்கு பழக்கமில்லாத பையனோடு அனுப்பி வைச்சிருக்கே, வேலை விஷயமாய். இது உனக்கு சரின்னு தோணுதா …?

தாய் படபடவென்று பொரிந்ததை நிதானமாக கேட்டபடி காஃபியை அருந்தி முடித்து டம்ப்ளரை கீழே வைத்தவன் மெலிதாக புன்னகைத்தான்.

“கூல்….கூல்… பூங்காவனம், இப்போ எதுக்கு டென்ஷன். நான் ஒரு காரணமாக தான் அவளை கௌதமுடன் அனுப்பி வைத்தேன். அவள் அப்பாவை இழந்தவள் தான் நான் இல்லைன்னு சொல்லலை, ஆனால் நாம எத்தனை நாளைக்கு அவளை பார்த்துக்க முடியும்? ம்மா அவள் வயசு பெண், அதுவுமில்லாமல் திருமண வயதில் இருக்கிற பெண். அவளுக்கென்று ஒரு வாழ்க்கை துணை வேண்டாமா?

“என்னப்பா சொல்றே…?

“ஆமாம்ம்மா நாம அவளுக்கு ஒரு வாழ்க்கை துணையை பார்த்து ஏற்பாடு செய்வோம் தான், ஆனால் ஹம்ஸினீ அதை இயல்பாக ஏற்றுக்கொள்வாளா?

தாய் யோசனையுடன் ம்ஹீம் என, மகன் தாயின் கையை பிடித்தபடி பேச ஆரம்பித்தான்.

“அதான் இப்படியொரு வேலை செய்தேன். உண்மையில் எனக்கு இரண்டு நாள் முந்தி வரை இப்படி ஒரு யோசனை வரலை. கௌதமுக்கு ஒரு செகரட்டரியை தான் தேடிட்டு இருந்தேன். இரண்டு நாள் முந்தி உங்களிடம் ஹம்ஸினீ வாழ்க்கையே வெறுத்து போன மாதிரி பேசினதை கேட்டதும் தான் எனக்கு அவளை கௌதமுடன் பெங்களுர் அனுப்பற யோசனை உதித்தது.

என்னம்மா அப்படி பார்க்கிறே, கௌதமும் வாழ்க்கையில் பிடிமானம் இல்லாமல் அந்தரத்தில் தொங்கிட்டு இருக்கான். இப்படியே போனால் அவனும் ஹம்ஸினீ மாதிரி வாழ்க்கையை வெறுத்து பிசினெஸ்ஸை விட்டுவிட்டு எங்கேயாவது வெளிநாடு போய்டுவானோன்னு கொஞ்ச நாளா எனக்குள் ஒரு உறுத்தல். அந்த உறுத்தலை கௌதமின் அப்பாவின் பேச்சு உறுதியாக்கிற மாதிரி இருந்தது…”

“கெளதம் அப்பா உன்னிடம் பேசினாரா …?

தாயின் ஆச்சரியத்திற்கு சிரித்து,”ஹ்ம்ம் பாவம்மா அவர், இருதலை கொல்லி எறும்பாய் தவிக்கிறார். ஒரு பக்கம் மனைவியின் ஆற்றாமை, புலம்பல், வேதனை. இன்னொரு பக்கம் மகனின் வெறுப்பு, கோபம், ஒதுக்கம். மனுஷர் யாரைன்னு சப்போர்ட் பண்ணுவார். அப்படியும் அவர் இத்தனை வருஷம் எப்படியோ அதிக உரசல் இல்லாமல் சமாளிச்சிட்டு தான் வந்திருக்கார். ஆனால் கொஞ்ச நாளாக கெளதம் அம்மாவின் புலம்பல்களும், அழுகையும் அதிகரிச்சிட்டே போகுது…”

“பின்னே, எத்தனை வருஷம் தான் அந்தம்மாவும் பிள்ளை கோபத்துடன் ஒதுங்கி செல்வதை தாங்கிப்பாங்க…?

“அதெப்படிம்மா, எல்லாம் தெரிஞ்ச நீயே அவங்களுக்கு ஆதரவா பேசறே? நமக்கே அவ்வளவு ஆத்திரம் வருதே, கௌதமின் நிலைமையை கொஞ்சம் யோசிங்க…”

“கெளதம் அப்பா என்ன சொன்னார், அதை சொல் …? என்று மீண்டும் விஷயத்திற்கு வந்தார்.

“கௌதம் பெங்களுர் போய்ட்டால் நூலியிழையில் ஓட்டிட்டிருக்கிற பந்தமும் அறுந்து போய்டுமோ என்ற பயம் அவருக்கு, அவனும் அப்படி தான் சொல்லியிருக்கான், இனி சென்னை வருவதை பற்றி யோசிக்கணும்னு. அதான் பயந்து போய் நீ என்ன வேண்டுமானாலும் செய்துக்கோ, என் மகன் எனக்கு திரும்பி கிடைக்கணும்ன்னு சொன்னார். மனுஷன் கண்ணில தண்ணீர், பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அதனால் தான் விரக்தியில் இருக்கிற ஹம்ஸினீயும், குடும்பத்தின் மேலிருந்த விரக்தியில் இருக்கிற கௌதமும் ஒன்றாக இருந்தால் நிச்சயம் அவர்களுக்குள் ஏதாவது ரசாயன மாற்றம் உண்டாகும்…”

சொல்லிக்கொண்டிருந்தவனை இடைமறித்தார் தாய் .

“அதாவது இருவரும் காதலிப்பாங்கன்னு சொல்ல வர்றே. ஹ்ம்ம் நல்ல விஷயம் தான், நடந்தால் சந்தோஷம் தான். ஆனால் கண்ணா இந்த வேலைக்கு பேர் என்னவோ சொல்வாங்களே …” என்றார் குறும்பாக.

தாயின் பேச்சை புன்னகையோடு கேட்டுக்கொண்டிருந்தவன் அவர் அவனை கலாய்க்கவும் சிணுங்கினான்.

“ம்மா நீ ரொம்ப யோசிக்கிறே. ஒருத்தன் காதலிச்சா அவன் ப்ரெண்ட் செய்ய கூடாத வேலையெல்லாம் செய்து பேட்ச் அப் செய்ய மாட்டானா? அந்த மாதிரி தான் இது. ஊரார் காதலை ஊட்டி வளர்த்தால் தன் காதல் தானே வளருமாம். யாரோ பெரியவங்க சொன்னாங்க …” என்றான் குறும்பாக கண்ணடித்து.

மகனின் பேச்சிற்கு வாய்விட்டு சிரித்து,”அடப்பாவிகளா உங்க வசதிக்கு பழமொழியையே மாத்திட்டீங்களே. தோசையை பிஸ்ஸாவாக மாத்தின மாதிரி. உன் காதல் வளரணும்ன்னா அதுக்கு காதலிக்கணும், சார் யாரை காதலிக்கிறாராம். பொண்ணுங்களை கண்டால் காத தூரம் ஓடற நீ இதை பற்றி பேசலாமா…? அது மட்டுமா ஊரிலிருக்கிற காதலை ரிங் டோன் வைச்சியே கலைக்கிற ஆளாச்சே நீ …?

தாயின் குறும்பான சிரிப்பில் பிரபுவுக்கு வெட்கம் வந்துவிட கோபமாக பேச முயன்றவனுக்கு ஒரு வார்த்தை கூட கோபமாக பேச வரவில்லை, மாறாக சிரிப்பு வந்து அவனை கவிழ்த்தது.

சிரித்து முடித்து,”இப்படியே என்னை கலாய்க்காதே, ஒரு நாள் உன் மருமகளை இந்த வீட்டுக்கு அழைச்சிட்டு வர்றேன். அப்படி வரலைன்னா, நீ ஒரு கழுதையை காட்டி அது கழுத்துல தாலி கட்ட சொன்னாலும் கட்ட தயார்…”

பூங்காவனம் சிரிப்பை அடக்க முயன்றபடி,”அப்போ உனக்கு கழுதை ஓகே வா, ஆனால் அது எட்டி எட்டி உதைக்குமேடா, உனக்கு பரவாயில்லையா …?

“ம்கூம் பொண்ணுங்க மட்டும் புருஷன்களை உதைக்காம இருக்காங்களா, ரெண்டும் ஒன்னு தான் …”

“அடப்பாவி, உனக்கு நாக்குல கட்டம் சரியில்லை ராசா, இப்படியே சொல்லிட்டிருந்தே, பெண்ணுரிமை சங்கத்தில் கம்பளைண்ட் செய்து உன்னை உள்ளே தூக்கி போட்டுட போறாங்க…” என்று மீண்டும் கேலி செய்ய பிரபு தலையில் அடித்துக்கொண்டான்.

பெங்களூர் …

காலையில் சரசம்மாவிடம் பேசியப்படி தோட்டத்தில் நின்றிருந்த ஹம்ஸினீயை தேடி வந்தான் கெளதம்.

“குட் மார்னிங் சார் …”

காலை வணக்கம் சொன்னவளுக்கு பதில் வணக்கம் கூறியவன்,”நாளையிலிருந்து தான் ஆபிஸ், இன்று ரெஸ்ட் எடுத்துக்கங்க. சரசம்மா இந்த வீட்டை சுற்றி காட்டுங்க ஹம்ஸினீக்கு. பீ கம்பர்ட்டபிள் …”

சொல்லிவிட்டு காரில் ஏறி அதை கிளப்பிக்கொண்டு சென்றுவிட ஹம்ஸினீயின் பார்வை வெளியே சென்ற காரையே பார்த்துக்கொண்டு நிற்க சரசம்மா அவளின் தோளை தொட்டார்.

“என்னம்மா சின்னய்யா போன திக்கையே பார்த்துக்கிட்டு நிக்கறே, வா வீட்டை சுற்றி காட்டறேன் …” என்று நடந்தவரை பின்தொடர்ந்தாள்.

முதலில் தோட்டம் முழுவதையும் சுற்றி காட்டினார். பெங்களுர் என்றால் ரோஜாக்கள் இல்லாமல் இருக்குமா? ஒரு சில வகை ரோஜாக்கள் மட்டும் இருந்தன. பிவோன் எனப்படும் கலர் மாறும் பூக்களும், டாலியாக்களும் மலர்ந்து கண்ணை கவர்ந்தது. வண்ண வண்ண மலர்கள் மனதிற்க்கு சந்தோஷத்தை கொடுத்தாலும் அவளுள் ஏதோ ஒரு சிறு ஏமாற்றம். அந்த தோட்டம் அவளின் மனதை நிறைக்கவில்லை. காரணம் எல்லாமே நறுமணமில்லாத பூக்கள்.

ஹம்ஸினீக்கு பெங்களுர் ரோஜாக்களின் அழகையும், கலரையும் விட மனதை சுண்டி இழுக்கும் நறுமணம் மிக்க பன்னீர் ரோஜாக்கள் தான் அவளின் பேவரைட். மல்லி வகையில் எல்லா மல்லிகளும் அவளுக்கு பிடித்தமானவை. அவளுக்கு கனகாம்பரம் சுத்தமாக பிடிக்காது. அதன் கலர் பிடிக்கும், ஆனால் என்னவோ வாசனை இல்லாததால் அவளின் மனதில் அவை இடம்பிடிக்கவில்லை.

“என்ன ஹம்ஸினீ, உன் முகத்தில் பூக்களை பார்த்த மலர்ச்சியே இல்லையே ஏன் ?

“அதெல்லாம் ஒன்றுமில்லை, வாங்க போகலாம்…” என மேலும் நடந்தார்கள்.

பங்களாவின் பக்கவாட்டில் ஒரு பெரிய மாமரம் வளர்ந்திருந்தது. கெப்பும் கிளையுமாக இருந்த மரத்தில் ஒரு ஊஞ்சல் கட்டி தொங்க விடப்பட்டிருந்தது. சற்று தூரத்தில் ஒரு நீண்ட சிமெண்ட் பென்ச், பக்கவாட்டில் ஒரு ஆள் அமருகிற அளவுக்கு சிமெண்ட் பெஞ்சுகள். ஒவ்வொரு பெஞ்சுக்கு நடுவில் குத்து செடிகள் போல ரோஜா செடிகள். நடுவில் டீபாய் மாதிரி சிமென்டில் செய்திருந்தார்கள்.

ஊஞ்சலை பார்த்ததும் அதுவரை கூம்பியிருந்த முகம் பளிச்சென்று மலர்ந்தது.

“வாவ் எவ்வளவு அழகா இருக்கு, யாரு இங்கே ஊஞ்சலாடுவா …? ஆசையாக ஊஞ்சலில் தாம்பு கயிறை பிடித்தபடி கேட்டாள்.

“ஐஞ்சாறு வருஷத்திற்கு முந்தி பெரியய்யா குடும்பம் இங்கே ஆறுமாசத்திற்கு ஒரு முறை வரும். அப்போ அய்யாவின் பெண் ரித்யா அம்மாவுக்காக கட்டினது. முதலில் அவங்க இந்த மரத்தை வெட்டிட்டு ஊஞ்சல் கட்டித்தர சொன்னாங்க. ஆனால் பெரியய்யா அதற்கு ஒத்துக்கலை. இந்த மாமரம் அவங்கப்பா வைச்சதாம். அந்த நினைவு சின்னமாக அப்படியே விட்டு அதிலேயே மகளுக்காக ஊஞ்சல் கட்டி கொடுத்திட்டாங்க. அப்புறம் மரத்தின் நிழலிலேயே ஊஞ்சலாடுவதும் வசதியா இருக்க அவங்களும் அப்படியே விட்டுட்டாங்க. சில சமயம் பெரியம்மா அதான் உங்க முதலாளி கெளதம் சாரின் அம்மாவும் ஊஞ்சலாடுவாங்க.

மாலை நேரங்களில் குடும்பமே மொத்தமா இங்கே உட்கார்ந்து கார்ட்ஸ் விளையாடுவாங்க, பிள்ளைங்க இந்த தோட்டத்தை சைக்கிளில் சுத்தி வருவாங்க. பேர பசங்க விளையாடவேண்டி இந்த தோட்டத்தை பெரியய்யாவின் அப்பா அமைச்சதா சொல்வார். ப்ச் ஆனால் இப்போ கொஞ்ச வருஷமா யாருமே இங்கே வரலை. எப்போவாவது பெரியய்யா மட்டும் வந்துட்டு உடனே கிளம்பிடுவார். சின்னய்யா கூட பல வருஷத்திற்கு அப்புறம் கொஞ்ச மாசம் முந்தி வந்தார். இதோ இப்போ வந்திருக்கார்…”என்று முடித்தாள்.

சராசம்மா பேசுவதை குறுக்கிடாமல் கேட்டுக்கொண்டிருந்தவளுக்குள் ஆயிரம் கேள்விகள் படையெடுத்தது. ஏன் சமீப காலமாக யாரும் வரவில்லை, என்ன பிரச்சினையாக இருக்கும். இங்கே இவ்வளவு பெரிய வீட்டை வைத்துக்கொண்டு ஐஞ்சாறு வருஷமாக வரவில்லை என்றால் என்ன அர்த்தம். கெளதம் சாரின் முகம் கூட சரியில்லையே. அதில் மலர்ந்த புன்னகையோ, விழிகளில் ஜீவனோ இல்லையே.

பொதுவாக ஒரு சக்ஸஸ்புல் தொழிலதிபனாக இருக்கும் ஒருவனின் முகத்தில் கர்வமும், புன்னகையும் கலந்தே இருக்கும். யாரையும் அலட்சியமாக அளவிடும் பார்வையும் அவர்களின் சொத்து என்று தான் சொல்லணும். தன்னை பளிச்சென்று வைத்துக்கொள்வதில் முன்னுரிமை அதிகம் இருக்கும். ஆனால் கெளதம் சார் அதற்கு நேர்மாறு.

முகத்தில் மழிக்கப்படாத தாடியும், மீசையும் அவரின் முகத்தையே மறைத்திருந்தது. கண்ணில் எப்பொழுதும் ஒரு கடுமை, முகத்தில் ஓர் இறுக்கம். சிரிப்பு என்பதையே அவர் மறந்து பலவருடங்கள் ஆகின மாதிரி ஒரு தோற்றம். உடைகள் திருத்தமாக இருந்தாலும் தாடி, மீசை, இறுக்கம், கடுமை இதெல்லாம் அவனின் அழகை மறைக்க முயன்றுக்கொண்டிருந்தன. ஆயினும் அவனின் வசீகர முகம் அவனின் அழகை நானிருக்கிறேன் என்று அம்பலப்படுத்திக்கொண்டு தானிருந்தது.

இவர் மட்டும் தாடி, மீசையை அழகாக ட்ரிம் செய்தால் நிச்சயம் ஆளை அசரடிக்கும் அழகோடு தான் இருப்பார். அப்படியே கொஞ்சம் சிரிப்பும் இருந்தால் இன்னும் அழகு தூக்கிவிடும்.

எண்ணம் போகும் பாதையை நினைத்து தன்னையே கொட்டிக்கொண்டாள். இதென்ன தேவையில்லாத எண்ணங்கள், யார் எப்படியிருந்தால் எனக்கென்ன ? நான் வந்த வேலையை பார்த்துக்கொண்டு போவது தான் எனக்கு நல்லது.

“என்ன இங்கேயே நின்னுட்டே, வாம்மா இன்னும் இருக்கு சுற்றி பார்க்க. பின்னாலேயும் தோட்டம் இருக்கு. ஆனால் அங்கே அதிக பூச்செடிகள் இருக்காது. நிறைய பழ மரங்கள் தான் இருக்கும் …”

விளக்கம் கொடுத்தபடி அவளை அழைத்துச் சென்றாள். ஊட்டியில் என்னென்ன பழங்கள் கிடைக்குமோ அத்தனை பழங்களும் பின் பிற தோட்டத்தில் மரங்களாக பயிரிடபட்டிருந்தது.

“தோட்டக்காரர் யாராவது இருக்காங்களா சரசம்மா …?

“ஹ்ம்ம் இருந்தாங்க முதலில், அப்போ நிறைய பூச்செடிகள் இருக்கும். ஆனால் இப்போ கொஞ்சம் வருஷமா யாரும் இல்லை. நானும் டிரைவரும், என் புருஷனும் மட்டும் தான் இருக்கோம். நாங்களே செடிக்கு தண்ணீர் ஊற்றிடுவோம். நிறைய செடிகளும் வாடிடுச்சி, மீண்டும் வாங்கி வைக்க யாருக்கும் விருப்பமில்லை. இந்த ரோஜாக்கள், இந்த சைனா ரோஸ் இதெல்லாம் அதிக தண்ணீர் தேவைப்படாது. வருஷாவருஷம் அது தொடர்ந்து பூக்கும். அதனால் பிழைச்சி கிடக்குது. முதலில் பெரியம்மா மேற்பார்வையில் இருந்தது இந்த வீடு. அவங்க சொல்லி நிறைய செடிகள் வாங்கி வந்து தோட்டக்காரன் வைப்பான். இனி யார் அந்த வேலையை செய்வார்களோ…? என்றார் பெருமூச்சுடன்.

‘அப்படி என்னதான் நடந்திருக்கும், இவரும் பூடகமாக பேசுகிறாரே தவிர விஷயத்தை உடைச்சி சொல்ல மாட்டேன்கிறார்…’ ஹம்ஸினீக்கு அவளின் இயல்பாய் மீறிய ஆர்வம் தலைதூக்கியது. ஆனால் அந்த ஆர்வம் காரில் வந்திறங்கிய கௌதமின் தோற்றத்தில் சுத்தமாக மறைந்து போக விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தது.