UN NESATHTHIL VAAZHVEN NAANAAGAVE …

அத்தியாயம்_8

மாலை மயங்கி, தெருவிளக்குகள் உயிர்பெற்றிருக்க, சென்னை புறநகர் பகுதியில் அமைந்திருந்த ஒரு வீட்டின் முன் கூட்டம் முண்டியடித்துக்கொண்டிருந்தது. உள்ளேயும் ஏகப்பட்ட மனித தலைகள். போலீஸ் ஜீப்பின் சைரன் சத்தம் கேட்டதும் அவசரசரமாக கூட்டம் இரண்டாக பிளந்து வழிவிட்டது.

அது ஒரு ஒற்றை மாடி வீடு, இரண்டாம் தளம் அமைப்பதற்காக வேலைகள் நடந்துக்கொண்டிருந்ததால் வாசற்படியின் ஓர் ஓரமாக ஆற்று மணலும், செங்கல்லும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதை மிதித்துக்கொண்டு சென்ற மக்களால் வீட்டின் உள்ளே வரை மணல் பரவிக்கிடந்தது.

ஜீப்பிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் உள்ளே போக கூட முடியாமல் வழியை அடைத்துக்கொண்டிருந்த கூட்டத்தை கண்டு எரிச்சலானார்.

“யோவ் ரத்தினம் முதலில் உள்ளே இருக்கிற கூட்டத்தை வெளியே விரட்டு …” என ரத்தினம் மேலதிகாரியின் கட்டளையை சிரமேற்கொண்டு விடுவிடுவென்று உள்ளே சென்று விரட்ட வேல்ராஜ் உள்ளே வந்தார்.

சோபாவில் படுத்தபடி வாயை பிளந்து கழுத்து அறுபட்டு இறந்துகிடந்த தாசில்தார் சந்தானத்தை கண்டு பெருமூச்சு தான் வந்தது இன்ஸ்பெக்டருக்கு. சற்று தூரத்தில் அவரின் மனைவி, மகள் மற்றும் மகன்கள் அழுகை மற்றும் பயத்துடன் இறந்துகிடந்தவரையே வைத்த விழி எடுக்காமல் பார்த்துக்கொண்டிருக்க வேல்ராஜின் விழிகள் அவர்களை தடவியது.

எங்கேயோ வெளியே போய்விட்டு வந்த உடையுடன் இருந்தார்கள், பெண் தான் மூத்தவள் போல. இரண்டு மகன்களும் கல்லூரி வாசலை தொட்டிராதவர்கள்.

“சொல்லுங்கம்மா எப்படி இறந்து போனார்? யார் செய்தது இதை…”என்று பிணத்தை காட்டி கேட்டார்.

அந்தம்மா அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை போல. அழுதழுது முகம் வீங்கி, இனி கண்ணீர் ஸ்டாக் இல்லை என்ற மாதிரி விழிகள் காய்ந்து போயிருந்த தாயை நோக்கிவிட்டு அவசரமாக முன் வந்தாள் அவரின் பெண்.

“சார் நான் சொல்றேன், அவங்களை தொல்லை செய்யாதீங்க. நான், அம்மா, என் தம்பிங்க இரண்டு பேரும் ஷாப்பிங் போயிட்டு அப்படியே சினிமா பார்த்திட்டு வீட்டுக்கு வந்த பொழுது கதவு திறந்து கிடந்தது. வந்து பார்த்தால் அப்பா இப்படி கோரமாக …”என்னும் பொழுதே அவளின் விழிகளில் நீர் கோர்த்துக்கொண்டது.

“சரி நீங்க வெளியே போகும் பொழுது சந்தானம் வீட்டில் தான் இருந்தாரா…?

“நோ சார், அப்பா காலையிலே ஒரு முக்கியமான வேலை இருக்குன்னு கிளம்பிட்டார். வர நைட் ஆயிடும்ன்னு சொல்லிட்டு போனதால் தான் நாங்களும் ஷாப்பிங், சினிமான்னு பிளான் செய்து கிளம்பினோம். ஆனால் இப்படியெல்லாம் நடக்கும்ன்னு கற்பனை செய்துக்கூட பார்க்கலை…” அழுகையில் அவளுக்கு தொண்டை அடைத்தது.

“ஓ , மேலே வீட்டு வேலை நடக்குது போல. வெளியே மணலும், செங்கல்லும் இருக்கு …? இன்னைக்கு வேலை நடந்ததா …?

பொங்கி வந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு,”இன்று வேலை இல்லை சார், மேலே தளம் போட்டிருப்பதால் இரண்டு நாளாக வேலை இல்லை. காலையில் வந்து தண்ணீர் ஊற்றிவிட்டு அவங்க கிளம்பிய பிறகு தான் நாங்க வெளியே போனோம்…” என்றாள் தட்டு தடங்கல் இல்லாமல்.

விசாரணையிலும் எந்த பிடியும் கிடைக்காததால் வழக்கமான சம்பிரதாய வேலைகளை செய்ய ஆட்களை அழைத்துவிட்டு பொறுப்புகளை கான்ஸ்டபிளிடம் ஒப்படைத்துவிட்டு வெளியே வந்து ஜீப்பில் அமர்ந்தவருக்கு ஒரே குழப்பமாக இருந்தது. இந்த ஒரு மாதத்தில் வெவ்வேறு இடத்தில் ஒரே பேட்டர்னில் கொலைகள். யாருமே பணம் கொழுத்தவர்களில்லை. அப்புறம் ஏன் இந்த கொலைகள் நடக்குது…”

வேல்ராஜ்க்கு மண்டை காய்ந்தது. சவரி முத்துவின் கேஸை விசாரிக்கிற ராஜேந்திரனை கேட்டால் ஏதாவது க்ளூ கிடைக்கலாம் என்று முடிவு செய்தவராக ராஜேந்திரனுக்கு போன் செய்துவிட்டு அவரை சந்திக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். வேல்ராஜ்க்காக ரெடியாக கேஸ் பைலை எடுத்து வைத்து காத்திருக்க இருவரின் நல விசாரிப்புக்கு பிறகு கேஸை பற்றி பேச ஆரம்பித்தார்கள்.

“சவரி முத்து கேஸில் ஏதாவது முன்னேற்றம் இருக்கா ராஜேந்திரன், அவரை கொலை செய்த அதே வகையில் இன்று ஒரு கொலை மடிப்பாக்கத்தில். நீங்க விசாரிக்கிற கொலை நடந்தது வேளச்சேரியில். போன வாரத்தில் நடந்த கொலை ஆதம்பாக்கத்தில்…”

“யாரை சொல்றீங்க முன்னுஸுபாலிட்டி ஆபிஸில் வேலை செய்த தலைமை கணக்காளர் சிவகுருவையா…?

“ஹ்ம்ம் அந்த கேஸை யார் டீல் பண்றது ராஜேந்திரன்…?

“நம்ம பேட்ச் விசுவநாதன் தான், அவரும் உங்களை மாதிரி குழம்பி எனக்கு போன் செய்தார், ரெண்டு கொலையில் ஏதாவது ஒற்றுமை இருக்கான்னு. இருக்கிற ஒற்றுமை என்னவோ கொலை செய்த பேட்டர்ன். ஆனால் இறந்து போனவர்களுக்கு மத்தியில் எவ்வித தொடர்பும் இல்லை. அதுவும் எல்லோருமே கிட்டத்தட்ட நடுத்தர வயதானவர்கள். எப்படி வேல்ராஜ் ஒத்து போகும். ஒரு வேளை நாம தப்பான வழியில் யோசிக்கிறோமோ. இதெல்லாம் வெவ்வேறு ஆட்கள் செய்த கொலையாக கூட இருக்கலாம் இல்லையா…?

ராஜேந்திரன் பேசுவதை தாடையை தடவியபடி யோசித்துக்கொண்டிருந்தவர் தலையை பலமாக ஆட்டி மறுத்தார்.

“ம்ஹீம் எனக்கு அப்படி தோணலை, ஆட்கள், இடம் வேண்டுமென்றால் வேற வேறாக இருக்கலாம். ஆனால் ஒரே மாதிரி கழுத்தை அறுத்து தான் கொலை செய்யணுமா? அதை விட நீங்க இன்னொன்றை கவனிச்சீங்களா? நாக்கிலும் பிளவு இருக்கு, கொலைகாரன் ஆத்திரத்தில் அவசரமாக இந்த கொலைகளை செய்யலை. நிதானமாக நன்றாக யோசித்து எப்படி கொலை செய்யணும்னு முன்னாடியே பிளான் செய்த மாதிரி இருக்கு. இந்த கொலைகளுக்கு பின்னால் ஏதோ பலமான காரணம் இருக்கு…”

“இருக்கலாம் …” என்றார் யோசனையாக.

கெளதம் வீடு…

வேலைக்காரன் பெட்டிகளை வண்டியில் ஏற்றிக்கொண்டிருக்க நித்யா கவலை வழியும் விழிகளோடு கணவரை நோக்கினார்.

“கொஞ்சம் பொறு நித்யா, அவன் ஊருக்கு கிளம்பிட்டிருக்கான், இந்த நேரத்தில் போய் நியாயம் கேட்பதோ, பஞ்சாயத்தோ வைப்பதோ சரி வராது…”

“ஆனால் கெளதம் கிளம்பறானே ராம் ….”

“கமான் நித்யா, அவன் என்ன வெளிநாட்டுக்கா போறான், இதோ இருக்கிற பெங்களூருக்கு தானே. அவன் கிளம்பும் பொழுது அவனை மூட் ஆப் செய்ய வேண்டாம். அவன் இஷ்டப்படி கிளம்பட்டும்…”

“என் கஷ்டம் உங்களுக்கு புரியலை ராம், அதனால் தான் மிக சுலபமா சொல்றீங்க …”என்றவர் அழுதுக்கொண்டே உள்ளே செல்ல ராம்ப்ரசாத் தலையை குலுக்கிக்கொண்டார் சலிப்பாக.

கெளதம் கையில் சிறு பெட்டி மற்றும் பேக்குடன் வர தந்தை அவனை நெருங்கினார்.

அவரை கண்டதும் முகம் மலர,”சரிப்பா நான் கிளம்பறேன், நீங்க எல்லோரும் ஜாக்கிரதையா இருங்க. ஏதாவது ஒன்று என்றால் போன் செய்யுங்க. என்னை ஆசிர்வாதம் செய்யுங்க … “என்றவன் சட்டென்று அவரின் பாதங்களை தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டான்.

“உனக்கு எல்லாமே நல்லதா நடக்கணும் மை சன், உனக்கு அதிகம் நான் சொல்ல தேவையில்லை. எல்லாம் தெரிஞ்சவன் நீ. ஆனாலும் நான் சொல்ல வேண்டியது ஒன்று இருக்கு. இங்கே உனக்காக நாங்க எல்லோரும் இருக்கோம் என்பதை மட்டும் மறந்திடாதே …”

தந்தையின் பேச்சிற்கு வெறுமே புன்னகையை கொடுத்துவிட்டு கிளம்ப ராம் பிரசாத் பெருமூச்சுடன் மனைவியை தேடிச் சென்றார்.

கடந்த இரண்டு நாளாக பிரபு லீவ் போட்டுவிட்டு ஹம்ஸினீ பெங்களுர் போக ஷாப்பிங் செய்வது, பேக்கிங் செய்ய என்று அவளுக்கு உதவியாக உதவி செய்தவன் ஹம்ஸினீ ஊருக்கு கிளம்பும் அன்று சீக்கிரமே அவள் வீட்டுக்கு வந்துவிட்டான். வீட்டை ஒதுக்கி ரெடி செய்து வைத்திருக்க கெளதம் வந்ததும் அவளின் பெட்டிகளை வண்டியில் ஏற்றி வீட்டை பூட்டினான்.

“ஓகே ஹம்ஸினீ, தினமும் போன் செய்திடு. எனக்கு பண்ணலைன்னாலும் அம்மாவுக்கு செய்திடு. கெளதம் பத்திரமா பார்த்துக்கடா. உன்னை நம்பி தான் அனுப்பறேன். பெங்களூர் போனதும் கால் பண்ணுங்க…”

“போகலாமா ஹம்ஸினீ, நான் அப்படி அழைக்கலாம் இல்லையா…?

” நோ இஷ்யூஸ், போகலாம் சார் …”

கெளதம் நண்பனை கட்டிப்பிடித்து விடைபெற, ஹம்ஸினீ அவன் கையை பிடித்து விழிகளாலே விடைபெற்றாள். பிரபுவுக்கும் அவளை தனியாக அனுப்புவது கஷ்டமாக தான் இருந்தது, ஆயினும் எத்தனை நாள் அவளை கோழி குஞ்சு அடைகாப்பது போல காக்க முடியும், இது அவள் லைஃப் , எதிர்காலத்தை துணிச்சலாக எதிர்க்கொண்டே ஆகவேண்டும். விழிகளில் துளிர்த்த நீரை சுண்டி விட்டபடி கிளம்பிய கௌதமின் காரை பார்த்தபடி தன் பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

இருவரும் பெங்களுர் அடையும் வரை கொஞ்சம் பேசினார்கள், அவ்வப்பொழுது மௌனமாக பயணித்தார்கள். நடுவில் இறங்கி மதிய உணவை முடித்துக்கொண்டு மீண்டும் பயணத்தை தொடர்ந்தார்கள். கெளதம் தன் ஆபிஸை பற்றிய யோசனையிலும், ஹம்ஸினீ பற்றிய யோசனையிலும் வண்டியை கையாண்டுக்கொண்டிருக்க, ஹம்ஸினீ ஓய்ந்து போன மாதிரி சீட்டில் தலை சாய்த்து விழி மூடிக்கொள்ள அவளின் மனதில் நிறைய போராட்டங்கள்.

அடிக்கடி அவளை திரும்பி பார்த்தாலும், அவள் மனதளவில் சோர்ந்து போயிருப்பது புரிய அவனும் தொல்லை செய்யவில்லை. பெங்களுர் போய் சேர இரவாகிவிட வண்டி ஒரு பெரிய பங்களா முன் நின்றது. வேலையாள் ஓடி வந்து கதவை திறந்துவிட வண்டி போர்டிகோவில் போய் நின்றது.

வண்டியிலிருந்து லக்கேஜை இறக்கியவனிடமிருந்து ஹம்ஸினீ பெட்டிகளை மட்டும் எடுத்து வர சொல்லிவிட்டு தன் பெட்டியை வாங்கிக்கொண்டு அவளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

இரவு நேரம் என்பதால் வெளியே டிம் லைட் எரிந்தது, ஆனால் உள்ளே பகல் வெளிச்சம் போல லஸ்தர் விளக்கு வெளிச்சத்தை உமிழ்ந்தது.

“பழனி மேடம் லக்கேஜை என் ரூம்க்கு எதிர் ரூமில் வைச்சிடு, வீட்டில் சமையல் அம்மா இருக்காங்களா…?

“அய்யா காலையில் போன் செய்து சொல்லிட்டாருங்கய்யா நீங்க வர்றீங்கன்னு, சாப்பாடு ரெடியா இருக்கு. எடுத்து வைக்க சொல்லட்டுங்களா…?

“சரி, நாங்க ரெப்பிரேஷ் செய்துகிட்டு வந்துடுறோம், ஹம்ஸினீ வாங்க நான் உங்க ரூமை காட்டறேன்…”என்று அவளை தன்னோடு அழைத்துச் சென்று அவனின் எதிர்ரூமை காட்டினான்.

“உங்களுக்கு ஏதாவது தேவையென்றால் தயங்காமல் சொல்லுங்க…” என்று விட்டு திரும்பியவனை அழைத்தாள் தயக்கத்துடன்.

“சார், நான் …”என்றவளை கையமர்த்தினான்.

“உங்களுக்கு தனி பிளாட் அலாட் பண்றேன்ன்னு சொல்லியிருந்தீங்க , அது எங்கேன்னு கேட்கறீங்க அதானே, அப்படி தான் ஏற்பாடு செய்தேன். ஆனால் பிரபும், ஆன்ட்டியும் உங்களை தனியா தங்க வைக்க வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க. இந்த வீட்டில் நீங்க தங்கறது அவங்க ஏற்பாடு, டோன்ட் ஒர்ரி என்னால் உங்களுக்கு எவ்வித தொல்லையும் இருக்காது. பீல் ப்ரீ , ஓகே ரெப்பிரேஷ் ஆயிட்டு வாங்க சாப்பிடலாம். சரசம்மா சமையல் அல்டிமேட்டா இருக்கும்…”

புன்னகைத்துவிட்டு அவன் ரூமிற்குள் நுழைந்துவிட ஹம்ஸினீ யோசனையுடன் தனக்கு கொடுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்து கதவை மூடிவிட்டு அந்த அறையை விழிகளால் அலச ஆரம்பித்தாள்.

அடுத்த அரை மணி நேரத்தில் அவள் சிறு குளியலை போட்டு உடைமாற்றிக்கொண்டு கீழே இரங்கி வர ஏற்கனவே டைனிங் டேபிளில் அமர்ந்து சமையல்கார அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தான். அவளை கண்டதும் அழைத்து அமர வைத்துவிட்டு சரசம்மாவுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

“உனக்கு என்ன தேவைன்னாலும் தயக்கமில்லாமல் என்னிடம் கேளும்மா, உன் வீடு மாதிரி நினைச்சிக்கோ…”என்றபடி இருவருக்கும் தட்டை வைத்து இட்லி, புதினா சட்னியை பரிமாறினார்.

“தப்பா நினைச்சிக்காதீங்க தம்பி, இரவு நேரத்தில் ஹெவியா சாப்பாடு வேண்டாம்ன்னு தான் லைட்டா இருக்கட்டும்ன்னு இட்லி செய்தேன். நாளையிலிருந்து உங்களுக்கு என்ன வேண்டுமோ சொல்லிடுங்க தம்பி, ஹம்ஸினீ உனக்கும் தான்மா…”என அவள் புன்னகையுடன் தலையாட்டினாள்.

காலையிலிருந்து அவள் ஒரு பக்கம் அளவுக்கு தான் பேசியிருப்பாள். அதிகம் பேச வேண்டிய சூழ்நிலையை கௌதமும் உருவாக்கவில்லை, அவளும் முயற்சிக்கவில்லை.

இப்பொழுதும் மௌனமாகவே சாப்பிட்டு முடித்து எழ, கெளதம் அவளை எந்த கேள்வியும் கேட்கவில்லை.

“நாளைக்கு எத்தனை மணிக்கு ஆபிஸ் போகணும் ஸார்…?

“ஒன்பது மணிக்கு கிளம்பினால் போதும், நீங்க போய் ரெஸ்ட் எடுங்க, குட் நைட் …”

தன் ஹால் சோபாவில் அமர்ந்தபடி போனில் தலையை புதைத்துக்கொள்ள ஹம்ஸினீ சற்று தயங்கி நின்றுவிட்டு மாடியேறி தன் அறைக்கு சென்றுவிட்டாள். களைப்பாக இருந்தாலும் புது இடம் என்பதால் பயமும், கலவரமும் கலந்தடிக்க உறக்கம் அவளை நெருங்கவில்லை. ஒரு வழியாக முயற்சி செய்து தூக்கமும் விழிப்புமாக இருந்தவள் விடியற்காலையிலே எழுந்துவிட குளித்து ரெடியாகி கீழே வந்தாள்.

இரவு வரும் பொழுது முன் பக்கம் பெரிய தோட்டம் இருந்த மாதிரி இரவு விளக்கில் தெரிய, அதை பார்க்க வெளிப்பக்கம் காலடி எடுத்து வைக்க சரசம்மா அவளை அழைத்து நிறுத்தினார்.

“என்னம்மா சரியா தூங்கலையா? இந்தம்மா பில்டர் காஃபி…” என்று அவளின் கையில் கொடுத்தார்.

காஃபியின் மணம் அவள் நெஞ்சை நிறைக்க அதன் மணத்தை ஆழ இழுத்து ஒரு சிப் செய்தாள்.

“தேங்க்ஸ்ம்மா, உண்மையை சொல்லணும்ன்னா எனக்கு காலையில் எழுந்ததும் காஃபி குடிக்கணும், அப்பொழுது தான் நாளே நல்லபடியா தொடங்கிற மாதிரி இருக்கும். காஃபி சூப்பரா இருக்கும்மா…” என்றாள் பாராட்டுதலாக.

“இந்த காஃபி நம்ம தோட்டத்தில் விளைகின்ற காஃபி. அதை பறிச்சதும் அரைச்சி இங்கே தேவையானதை கொடுத்து விட்ருவாங்க, ஒரு நாள் நேரமிருந்தால் நம்ம தோட்டத்துக்கு போயிட்டு வாங்க…”என்றார் வாஞ்சையுடன்.