UN NESATHTHIL VAAZHVEN NAANAAGAVE …

அத்தியாயம் _7

பிரபுவோடு வந்த பெண்ணை கண்டதும் கெளதம் அவனையுமறியாமல் எழுந்தான் குழப்பத்தோடு.

“கெளதம் நான் சொன்ன பெண் இவங்க தான், என் ப்ரெண்ட், ஹம்ஸினீ இவர் தான் உன் எதிர்கால பாஸ் கெளதம் …”

“என்ன …? என்றாள் ஓர் அவசரத்துடன்.

“அதாவது உன் ஆபிஸ் பாஸ், நீ செகரெட்டரியா வேலை செய்ய போறே இல்லையா, அதான் அப்படி சொன்னான். கெளதம் நீ கேட்க வேண்டிய கேள்விகளை கேளு. ம்மா உள்ளே வா அவங்க பேசிக்கட்டும்…”

தாயை அழைக்க, அவரும் சரி தான் என்று எழ, கெளதம் வேகமாக தடுத்தான்.

“அவசியமிருக்காது பிரபு, ஆன்ட்டி நீங்க இங்கேயே இருங்க…” என்றவன் ஹம்சினியிடம் திரும்பினான்.

“உங்களிடம் பிரபு எல்லாவற்றையும் சொல்லியிருப்பான்னு நினைக்கிறன், ஐ மீன் உங்க வேலையின் நேச்சர், சேலரி பெர்க்ஸ், லீவ் எல்லாமே. உங்களுக்கு ஓகே தானே, ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கலாம். பிகாஸ் நாம இன்னும் இரண்டு நாளில் கிளம்பணும்…”

“எனக்கு ஓகே தான், பிரபு எல்லாத்தையும் சொல்லிட்டார், சோ நோ டௌட்ஸ். அண்ட் எனிதிங் எல்ஸ் …?

“நத்திங் மிஸ் ஹம்ஸினீ, நாம பெங்களுர் போன பிறகு தான் ஆபிஸ் வேலையை தொடங்கணும். சோ காங்கிராட்ஸ் …” என்று கையை நீட்டினான்.

அவளும் கைகுலுக்கிவிட்டு, பிரபுவிடம் பேச சொல்லிவிட்டு உள்ளே செல்ல அவளை பின்தொடர்ந்தார் பூங்காவனம்.

அறைக்குள் சென்றதும் கதவை லேசாக ஒருக்களித்து மூடியவர் கட்டிலில் சோர்வாக அமர்ந்த ஹம்ஸினீயை நெருங்கினார். அவளருகில் அமர்ந்து அவளின் கூந்தலை வாஞ்சையுடன் கோதினார்.

“என்னாச்சும்மா, உன் முகத்தில் சுரத்தே இல்லை, ஏன் கெளதம் தம்பியிடம் வேலை செய்ய உனக்கு பிடிக்கலையா? பிடிக்கலைன்னா சொல்லிடு, பிரபு பார்த்துக்குவான்…”

அவசரத்துடன் தலையை உருட்டி மறுத்தாள்.

“அதில்லைம்மா உங்களையெல்லாம் விட்டுட்டு பிரிஞ்சி போகணுமேன்ற கவலை தான். அப்பா இறந்த பிறகு உங்களால் நான் தனியாள் இல்லை என்ற உணர்வே இல்லாமல் இருந்தது, ஆனால் பெங்களுர் போனால் மீண்டும் தனி மரமா ஆயிடுவேனோ என்ற பயம் தான். ப்ச் ஆனால் இதையும் எதிர்க்கொண்டு தானே ஆகணும்…”

சட்டென்று தன்னை சமாளித்துக்கொண்டவளை கண்டு மனம் கனிந்தது.

“ஹ்ம்ம் குட் கேர்ள், இப்படி தான் எல்லாவற்றையும் பாசிட்டிவ்வா யோசிக்கணும். அப்புறம் பெங்களுர் போய்ட்டால் நாங்க உன் வாழ்க்கையில் இல்லாமல் போய்டுவோமா என்ன? உலகம் கையளவு ஹம்சூ, நினைச்சா வீடியோ காலில் பார்த்து பேசிக்கலாம், நைட் ட்ரைனில் ஏறினால் காலையில் பெங்களூரு வந்திடலாம். வெளிநாடே இப்பொழுதெல்லாம் எட்டாத தூரமில்லை என்கிற பொழுது இதோ இருக்கிற பெங்களூர் போக நீ வயலின் வாசிக்கிறே…”

அவரின் பேச்சில் அதுவரை உள்ளுக்குள் சூழ்ந்திருந்த தனிமை ஒரே ஓட்டம் பிடிக்க அவளின் முகம் வியப்பில் மலர்ந்தது.

“வாவ் சான்ஸே இல்லைம்மா, எனக்கு இப்போ தான் புரியுது பிரபு எப்படி எல்லாவற்றையும் மிக ஈசியாக எடுத்துக்கிறான், எல்லாவற்றையும் பாஸிட்டிவ்வா யோசிக்கிறான்னு. கிரேட் மம்மி இல்லையில்லை சூப்பர் அம்மா. பிரபுவுக்கு மம்மின்னு கூப்பிட்டால் பிடிக்காது…”

ஹம்ஸினீயின் பேச்சில் முகம் மலர்ந்துவிட, அவளின் கன்னத்தை வருடினார்.

“கெளதம் கூட அவங்க அம்மா, அப்பாவை மம்மி, டாடின்னு அழைக்க மாட்டான். அவனும் தமிழில் தான் அழைப்பான். அப்புறம் கௌதமுடன் தனியா போறேன்னு பயப்படாதே, அவன் ரொம்ப ரொம்ப நல்ல பையன். அவனும் என் மகன் மாதிரி தான். இல்லையென்றால் பிரபு உன்னை அனுப்பிவைப்பானா சொல்…”

“நீ யாரென்று சொல் உன் நண்பனை பற்றி சொல்கிறேன்ன்னு ஒரு பழமொழி இருக்கு. பிரபு எப்படிப்பட்டவன்னு எனக்கு நல்லா தெரியும், அப்போ அவனோடு நண்பர் நிச்சயம் நல்லவராக தான் இருக்க முடியும். அமெரிக்காவிலிருந்து திரும்பி வரும் பொழுது என் வாழ்க்கையே அஸ்தமனமாயிடிச்சின்னு நினைச்சேன்ம்மா. அப்படி எதுவும் ஆகாமல் பிரபு மூலம் கடவுள் என் வாழ்க்கையை மீண்டும் துளிர்க்க வைச்சிருக்கார்…”

“அதென்ன துளிர்க்க வைப்பது, நீயே பாரேன் உன் வாழ்க்கை மலர்ந்து எப்படி பூத்து குலுங்க போகுது…” என்று சிரிக்க பிரபு அழைக்கும் குரல் கேட்டது.

“ம்மா நாங்க வெளியே கிளம்பறோம்…” வெளியே வந்து தாயிடம் சொல்லிவிட்டு இருவரும் வெளியே வந்து காரில் ஏறினார்கள்.

கார் பீச்சை நோக்கி செல்ல இருவருமே மௌனமாக பயணிக்க இருவர் மனதிலும் ஒரே கேள்வி தான் ஓடிக்கொண்டிருந்தது. கௌதமுக்கு ஹம்ஸினீயை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்க பிரபுவுக்கோ அவன் ஏன் ஹம்ஸினீயை பார்த்ததும் முகம் மாறினான் என.

வண்டி கடற்கரையை அடைந்து இளைப்பாறியது. மெரினா கடற்கரை மிகவும் பிசியாக இருந்தது. புதிதாக அமைக்கப்பட்டிருந்த ஊனமுற்றோர்க்கான மரப்பாலத்தில் வீல் சேரில் அமர வைத்தபடி முதியவர்களையும், உடல் ஊனமுற்றவர்களை உறவினர்களும், உதவியாளர்களும் அழைத்து வர அவர்களின் முகத்தில் அப்படியொரு மலர்ச்சி.

நடக்க முடியாமல், கடற்கரை பக்கம் இத்தனை நாள் வர முடியாமல் தவித்தவர்களுக்கும், கடல் எப்படியிருக்கும் என்றறியாதவர்களுக்கும் இந்த மரபாலம் அவர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. இன்னொரு பக்கம் கடற்கரை மணலில் கடை போட்டிருக்கும் விற்பனையாளர்கள், அதை வாங்க வந்திருக்கும் மக்கள். அலையில் விளையாடி கொண்டிருக்கும் இளசுகள் முதல் பெரிசுகள் வரை. வீட்டுக்கு தெரியாமல் காதலிக்க கடற்கரைக்கு வந்திருக்கும் காதலர்கள் என ஜெ ஜெ என்றிருந்தது. குழந்தைகள் ஓடியாடி விளையாடிக்கொண்டிருக்க, அவர்களுக்கு நிகராக பெற்றவர்களும் ஈடுகொடுத்துக்கொண்டிருந்தனர். சில இளசுகள் மணலில் தங்கள் கற்பனை கோட்டைகளை கட்டிக்கொண்டிருந்தனர்.

இதெல்லாம் பார்க்க பார்க்க தெவிட்டாத காட்சிகள் கௌதமுக்கு. அவனின் வாழ்க்கையின் பாதி இங்கே தானே கழிகிறது. அதனால் என்னவோ எல்லாவற்றையுமே ரசிக்க கற்றுக்கொண்டான். வீட்டில் கிடைக்காத அமைதியும், சந்தோஷமும் கடற்கரை காட்சிகளில் கிடைப்பதாக அவனின் எண்ணம்.

ஆனால் பிரபு அவனுக்கு எதிர்மாறு. அவனுக்கு வீடு தான் உலகமே. ஆபிஸ் முடிந்ததும் முதலில் வீட்டுக்கு சென்று தாயின் கையால் காஃபி குடித்துக்கொண்டே அவரிடம் அன்று நடந்த அத்தனை விஷயங்களையும் கொட்டிவிட வேண்டும். இல்லையென்றால் அன்றைய பொழுதே ஒரு இன்ச் கூட நகராத மாதிரி ஓர் உணர்வு வந்துவிடும்.

“ஹம்ஸினீயை பார்த்ததும் ஏண்டா உன் முகம் மாறியது? அவளை ஏற்கனவே பார்த்திருக்கியா …?

கடற்கரை காட்சிகளில் லயித்து போயிருந்தவன் பிரபுவின் திடீர் கேள்வியில் ஈர்க்கப்பட்டு அவன் பக்கம் திரும்பினான்.

“ஹ்ம்ம் என்ன கேட்டே…?

பிரபு முன்பு கேட்ட கேள்வியையே அட்சரம் பிசகாமல் கேட்க கௌதமின் முகத்தில் சிறு புன்னகை.

“ஹேய் நத்திங், நீ ஒரு செகரட்டரி இருக்கிறாள் என்று சொன்னதே எனக்கு கொஞ்சம் ஷாக், போதாதென்று அவங்களை உள்ளிருந்து அழைத்தது வரவும் கொஞ்சம் குழம்பிட்டேன். ஹம்ஸினீ வீட்டில் ஒத்துக்கிட்டாங்களா? நீ தான் பேசி ஒத்துக்க வைச்சியா…? என்றான் சாதாரணமாக.

மனதில் குழப்பம் இருந்தாலும் ஏனோ அதை இந்த நேரத்தில் வெளிப்படுத்துவது சரியல்ல என்று தோன்ற மனதை மறைத்து வேறு பேசினான். ஆனால் அதை கேட்டதும் பிரபுவின் முகம் மாறியது.

“இப்போதைய நிலைமைக்கு அவளுக்கு நானும், அம்மாவும் தான் உறவுகள். அப்பா, அம்மா இரண்டு பேருமே இறந்துட்டாங்க. சமீபத்தில் தான் அவளுடைய அப்பா இறந்தார். ப்ச் பாவம்டா அவள்…”

கெளதம் அதிர்ச்சியாக நோக்க, பிரபு பெருமூச்செறிந்தான்.

“நீ உனக்கு மட்டும் தான் வாழ்க்கையில் நடக்க கூடாத விஷயங்கள் நடக்குதுன்னு வீட்டில் உள்ளவர்கள் மீது கோபமாக, அவர்களிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருக்கே? ஆனால் உனக்கு நடந்ததை விட கோரமான விஷயங்கள் ஹம்ஸினீ வாழ்க்கையில் நடந்திருக்கு. ஆனாலும் அவள் கடந்தகாலத்தை தூக்கிப்போட்டுட்டு இப்போதிருக்கிற வாழ்க்கையை எவ்வித சுணக்கமும் இல்லாமல் வாழ்ந்திட்டிருக்காள்.

எதுக்கு சுத்தி வளைச்சிட்டு பேசணும், நான் நேரடியாகவே விஷயத்திற்கு வர்றேன். இன்னும் எத்தனை நாளைக்கு அம்மா, தங்கை, அப்பா என்று எல்லோரையும் கஷ்டப்படுத்த போறே. பாவம்டா அவங்க, நீ அவங்களை ரொம்ப கஷ்டப்படுத்தறே. இந்த பெங்களுர் ப்ராஜெக்ட்டை நீ நினைச்சா இங்கிருந்தே முடிச்சி கொடுக்க முடியும். ஆனால் அவர்களை பழி வாங்கறேன்னு நீ உன்னையே தனிமை குழியில் தள்ளிக்கிறே. நான் சொ …”

“போதும் …” என்று முகம் இறுக அழுத்தமாக கையை உயர்த்தி தடுத்தான் கோபத்த்துடன்.

“அதில்லை கெளதம் …நா…”

பாதியிலே இடையிட்டு,”அட்வைசுக்கு எந்த விலையுமில்லை, மதிப்புமில்லை. அதனால் மிக சுலபமாக வள்ளல் மாதிரி வாரி வழங்கிடலாம். ஆனால் வலியை அனுபவிக்கிறவங்களுக்கு தான் அதன் வேதனை புரியும். முட்டையிடுகிற கோழிக்கு தான் வலி தெரியும். நீ சொன்னியே அவங்க பாவம்ன்னு, ம்ஹீம் நான் தான் பாவம். இவ்வளவு நாள் அந்த வீட்டில் நான் சகித்துக்கொண்டு இருந்ததே பெரிய விஷயம். இனியும் அங்கே இருந்தால் மூச்சு முட்டி இறந்து போனாலும் போய்டுவேன்…” என்றவனின் வாயை பதறி மூடினான் மற்றவன்.

“லூசு மாதிரி பேசாதே கெளதம், எப்பேர்ப்பட்ட ஸ்ட்ராங் பெர்சனலிட்டி நீ, உன்னை பார்த்து எத்தனை நாள் நான் பெருமையா நினைச்சிருக்கேன். நீ என்னடான்னா இந்த விஷயத்திற்க்கெல்லாம் இற ….ச்சே ச்சே இனியொருமுறை இப்படி பேசாதே. சொல்லிட்டேன்…” என்றான் கோபத்துடன்.

“லீவ் இட், தேவையில்லாத விஷயங்களை பற்றி பேசினால் நம்ம இரண்டு பேர் நிம்மதியும், சந்தோஷமும் கெட்டு போய்டும். சரி ஹம்ஸினீக்கு ஏதோ பிரச்சினைன்னு சொன்னியே, என்னது…?

“அது …” என்று தொடங்கியவன் ஹம்ஸினீ தன் விஷயங்களை யாரிடமும் சொல்ல கூடாது என்று சத்தியம் வாங்கியது நினைவில் வர சட்டென்று பேச்சை மாற்றினான்.

“ப்ச் அவள் அம்மா இறந்து ஆறு மாசமாக நோயாளி அப்பாவோடு தனியாக போராடி ஒரு நாள் அவர் இறந்து போய் ஒரு இளம் பெண் யாருமற்ற அனாதையாக நின்றால் எப்படி இருக்கும் அவள் மனநிலை. கொஞ்சம் யோசித்து பார். அதை தான் சொன்னேன். அவளுக்கு நிறைய சொந்தங்கள் இருக்கு, ஆனால் எல்லாமே இருக்கு ஆனால் இல்லைன்ற ரகம். சரி கெளதம் ஹம்ஸினீ வீட்டில் எனக்காக காத்துக்கிட்டு இருப்பாள். அவளை வீட்டில் கொண்டு போய் விடணும். இரண்டு நாளைக்குள் அவள் உன்னுடன் வர ஏற்பாடுகளை செய்யணுமே. என்னை வீட்டில் டிராப் செய்திடு…”

கெளதம் வெறுமே தலையை உருட்டிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான். பிரபுவை அவன் வீட்டில் விட்டுட்டு மீண்டும் வன் வீட்டுக்கு சென்ற பொழுது அதுவரை பிரபுவுடன் இருந்த இதம் தொலைந்து வெறுமை குடிக்கொள்ள அவனுள் ஒரு அலுப்பு தோன்றியது இதென்ன வாழ்க்கை என.

பிரபுவின் வீடு…

உள்ளே நுழைந்த பிரபுவை கண்டதும், ஹம்ஸினீ தன் பேகை எடுத்துக்கொண்டு செருப்பை மாட்டியபடி பூங்காவனத்திடம் விடைபெற்று வெளியே வந்தாள்.

“கிளம்பலாமா பிரபு…?

“இப்போ நைட் பத்து ஆயிடிச்சு. நீ இங்கேயே தங்கிடேன். நாளை காலையில் உன் வீட்டுக்கு அழைச்சிட்டு போறேன், நீ என்னம்மா சொல்றே…?

“எனக்கும் ஓகே தான், ஆனால் ஹம்ஸினீயின் வசதியை பற்றி கேள்…”

“இல்லைம்மா, எனக்கு அவசர வேலை ஒன்று இருக்கு, ஊருக்கு போவதற்குள் அதை முடிச்சாகணும். இல்லையென்றால் மாசக்கணக்கில் தள்ளி போய்டும். உனக்கு களைப்பா இருந்தால் எனக்கு டாக்சி புக் பண்ணி கொடு. நான் போய்க்கிறேன்…”

“அதெல்லாம் வேண்டாம், நானே டிராப் பண்றேன். நீ என்ன விஜய் ரசிகையா ஹம்ஸினீ, ஒரு தடவை முடிவு பண்ணிட்டா அப்புறம் உன் பேச்சை நீயே கேட்க மாட்டியா…? ஓவர் பிடிவாதம் நல்லதில்லை…”

அவனின் கேலிக்கு இளம் புன்னகையை சிந்த, பூங்காவனம் சிரித்தார்.

“அடேய் மக்கு பயலே, இதுக்கு பேர் பிடிவாதம் இல்லை. ஒரு முடிவை எடுத்த பிறகு அதை பற்றி சிந்திக்க கூடாது, அதில் உறுதியா இருக்கணும். பெண்களிடம் அடிக்கடி மனசை மாத்திக்கிற குணம் இருக்க கூடாது, அவர்களுள் வைராக்கியம் இருக்கணும், அப்பொழுது தான் வாழ்க்கையில் உயரத்திற்கு போக முடியும்…”

“எது எல். ஐ.சி பில்டிங் உயரத்திற்கு போனால் போதுமா…? போம்மா அவளே பிடிவாதம் பிடிக்கிறா, நீ அவளுக்கு மகுடி வாசிக்கிறே. ஒரே இனமல்லவா…?

“அடடடா என்னே கண்டுபிடிப்பு, நீ கொலம்பஸ் கண்ணா, முதலில் அவளை வீட்டில் டிராப் பண்ணிட்டு வா, நாளைக்கு ஆபிஸ் போகவேண்டாமா…?

“என்னமோ செய்ங்க, இந்த பெண்கள் எங்க பேச்சையே கேட்கமாட்டேங்கிறாங்களே , அப்புறம் ஏன் கடவுளே ஆண்களை படைச்சே…?

மேல் நோக்கி கையை தூக்கி கேள்வி கேட்க ஹம்ஸினீ அவன் முதுகில் ஒன்று வைத்தாள்.

“ஹ்ம்ம் இந்த மாதிரி பெண்களை பைக்கில் டிராப் செய்யத்தான், வண்டியை எடு, மொக்கை போட்டுக்கிட்டு நேரம்கெட்ட நேரத்தில்…” என்றபடி பில்லியனில் அமர்ந்து பூங்காவனத்திற்கு கையை ஆட்டி விடை பெற பைக் சீறி பாய்ந்தது.