TTY 2

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

தேன் 2

விமானத்தில் ஏறியதும் இருவரும் அவர்களுக்குரிய இடத்தில் அமர்ந்தனர். அங்கேயும் மூன்று இருக்கைகள் ஒன்றாக இணைந்தது போல் தான் அமைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் கூட்டம் குறைவாக இருந்ததால், இவர்களோடு இணைந்த இருக்கையை வேறு யாருக்கும் ஒதுக்கவில்லை என்பதால் இருவர் மட்டுமே அமர்ந்தனர்.

ரித்துவை ஜன்னல் புறமாக இருந்த இருக்கையில் அமர சொல்லிவிட்டு, அவள் அமர்ந்ததும், நடு இருக்கையை விடுத்து நுனி இருக்கையில் அமரலாமா? என்று யோசித்த யாஷ், பார்ப்பவர்களுக்கு கேலிப் பொருளாக இந்த காட்சி இருக்கக் கூடாது என்று தோன்றியதால், அவளுக்கு அருகிலேயே அமர்ந்துக் கொண்டான்.

அதன்பின் விமானம் புறப்படுவதற்கு முன் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை விமானத்தில் பணிபுரியும் பெண் சொல்லிக் கொடுத்ததையும், விமான ஓட்டுனர் சொல்லிய குறிப்புகளையும் அவன் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தான். காரணம் அவனுக்கு அதுதான் விமானத்தில் செல்லும் முதல் பயணம், இந்தியா முழுக்க ரயில், பேருந்து, கார் இப்படி தான் பயணித்திருக்கிறான். வெளிநாடு சென்ற அனுபவமும் இல்லை. அதனால் விதிமுறைகளை அவன் கவனமாக கேட்டுக் கொண்டிருக்க ரித்துவோ காதில் ஹெட் போனை மாட்டிக் கொண்டு பாட்டுக் கேட்க தயாரானாள். 

அனைத்தும் முடிந்து சீட் பெல்ட் அணிய சொல்லி அறிவிப்பு வர, எல்லாம் கவனமாக கேட்டும் சீட் பெல்ட் அணிய அவன் தடுமாறினான். அருகில் மனைவியும் இப்படி திணருகிறாளா? அவளுக்கும் இது முதல் பயணமா? என்ற கேள்வியோடு ரித்துவை நோட்டம் விட, அவளோ சர்வ சாதாரணமாக சீட் பெல்ட்டை மாட்டியவள், அவன் தன்னை பார்ப்பதை கவனித்து அவனுக்கும் அவளே மாட்டிவிட,

“உன்கிட்ட கேட்டேனா? எனக்கு மாட்டிக்க தெரியாதா? என்னமோ எனக்கு தெரியாதது போல மாட்டி விட்ற?” என்று அவளிடம் கோபம் கொண்டான்.

“இல்ல உங்களுக்கு மாட்ட தெரியாம தான் நான் எப்படி மாட்றேன்னு பார்த்தீங்களோன்னு மாட்டினேன்.” என்று அவள் தயக்கத்தோடு சொல்ல,

“அதெல்லாம் எனக்கு மாட்ட தெரியும், உனக்கு தெரியுமான்னு தான் பார்த்தேன்.” என்று தனக்கு தெரியும் என்பது போல் அவளிடம் காட்டிக் கொண்டவன்,

“ஆமாம் நீ ஏற்கனவே ஃப்ளைட்ல போயிருக்கியா?” என்றுக் கேட்டான்.

“ம்ம் நிறைய முறை போயிருக்கேன். நான் ஸ்கூல் வரைக்கும் தான் இங்க படிச்சிருக்கேன். அதுக்குப்பிறகு ஆஸ்திரேலியால தான் படிச்சேன்.” என்று அவன் பேச்சுக் கொடுக்கவும் அவளே ஆர்வமாக அவனக்கு பதில் கூறினாள்.

அதைக்கேட்டுக் கொண்டிருந்தவனோ, ‘வெளிநாடெல்லாம் போய் படிச்சிருக்கா, மணீஷ் சொன்னது போல பெரிய வசதியான வீட்டு பெண்ணாக தான் இருப்பாளோ?’ என்று மனதில் நினைத்தவன்,

“இப்படி எத்தனை ரகசியம் தான் நீ வச்சிருக்க, உன்னைப்பத்தி எப்போ தான் முழுசா சொல்லப் போற,” என்று கடுப்போடு கேட்டான்.

அப்போதுதான் தான் உளறியதை உணர்ந்தவள், “ம்ம் நேரம் வரும்போது கண்டிப்பா சொல்லுவேன்.” என்று பொறுமையாக பதில் கூற,

“கல்யாணமாகி இப்போ ஹனிமூனுக்கும் கிளம்பிட்டோம், ஆனா உன்னைப்பத்தி எதுவும் சொல்ல மாட்டல்ல, பார்க்கிறேன் எத்தனை நாள் இப்படி இருக்கேன்னு, நல்ல இளிச்சவாயன்னு என்னோட நெத்தியில் எழுதி ஒட்டிருக்கு போல, அதான் என்னை இப்படி படுத்துற,” என்று கோபம் கொண்டான்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

அவன் கோபம் அவளை பாதிக்கிறது என்பது போல் அவள் முகம் வாடிப் போக, “க்கூம் இப்படி ஆனா ஊனா முகத்தை சுருக்கிக்க,” என்று அதற்கும் கோபம் கொண்டவன், 

“சரி அதான் நீ நிறைய முறை ஃப்ளைட்ல போயிருக்கல்ல, எனக்கு இதுதான் ஃபர்ஸ்ட் டைம், ஃப்ளைட் கீழே இருந்து மேல பறக்கறத பார்க்கணும், அதனால என்னை ஜன்னல்பக்கம் விடு,” என்றான்.

“இங்க இருந்து பார்த்தாலே அது தெரியும் யாஷ்,” என்று அவள் சொல்ல,

“எனக்கு அதை வீடியோ எடுக்கணும், அதுக்கு தான் சொல்றேன். இங்க வா,” என்று சொல்லி சீட் பெல்ட்டை கழட்டிவிட்டு எழுந்திருக்க, அவளும் எழுந்தாள்.

அனைவரும் சீட் பெட் அணிந்தார்களா? இருக்கையெல்லாம் சரியான முறையில் இருக்கிறதா? என்று அப்போது தான் சரிப்பார்த்துவிட்டு சென்ற விமான பணிப்பெண்ணோ, விமானம் கிளம்ப தயாரான நேரத்தில் இருவரும் எழுந்ததை பார்த்து பதட்டத்தோடு அவர்கள் அருகில் வந்து என்னவென்று கேட்க,

“சும்மா இடம் மாத்தி உட்கார தான்,” என்று யாஷ் கூறவும்,

“சீக்கிரம் உட்காருங்க, ஃப்ளைட் கிளம்ப போகுது.” என்று அந்தப் பெண் ஆங்கிலத்தில் கூறிவிட்டுச் சென்றாள்.

தனது சீட் பெல்ட்டை போட்டுக் கொண்டவள், “போட்டு விடவா?” என்று அவனிடம் கேட்க,
ஏற்கனவே அவள் போடும்போது பார்த்ததால், “நான்தான் சொன்னேனே எனக்கு போட தெரியும்னு, நானே போட்டுப்பேன்.” என்று சொல்லி சீட் பெல்ட்டை அவனே மாட்டிக் கொண்டான்.

விமானம் கிளம்பியதிலிருந்து அது மேலே ஏறியதையும், மேல ஏற ஏற கீழிருக்கும் பகுதி சிறியதாக தெரிந்தது வரை பார்த்துக் கொண்டே வந்தவன், பின் மேக கூட்டங்கள் தெரியவும் அதையும் சிறிது நேரம் ரசித்துவிட்டு, அதன்பின் சரியாக இருக்கையில் அமர்ந்தவன், மனைவியை திரும்பிப் பார்க்க அவளோ காதில் பாட்டுக் கேட்டப்படி கண்மூடி இருக்கையில் சாய்ந்திருந்தாள்.

‘ஒருவேளை தூங்கிட்டாளோ?’ என்று நினைத்து அவள் முகத்தை சிறிது நேரம் பார்த்திருந்தவன், பின் அவளை ரசிக்க ஆரம்பித்துவிட்டான். அவளைப் பற்றிய குழப்பங்கள் ஆயிரம் இருந்தாலும் இன்று இவள் தன் மனைவி என்ற நினைப்பே ஏதோ இனிப்பாக இருந்தது.

விதிப்படித்தான் அனைத்தும் நடக்கும் என்பதில் எப்போதும் அவனுக்கு நம்பிக்கையே இருந்ததில்லை. ஆனால் இப்போது நடப்பதை பார்த்தால்  நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பு வரை முக்தா தான் அவனது மனைவியாக வரப் போகிறாள் என்ற நிலை மாறி, இன்று அவனது மனைவியாக தேனிலவுக்கு இவள் உடன்வருவதை விதி என்று சொல்லாமல், வேறு என்னவென்று சொல்வதாம்?

ஒருவேளை முக்தா அவனது மனைவியாகியிருந்தால், இப்போது மனதில் பரவியிருக்கும் இதம் அப்போது இருந்திருக்குமா? இப்போது யோசித்தாலும் அப்படி இல்லை என்று தான் தோன்றுகிறது. இதற்கும் முக்தா அவனக்கு அத்தைப் பெண். சிறுவயதிலிருந்து பார்த்து வளர்ந்தவள், ஆனாலும் அவளுடன் திருமணத்தை மனம் விரும்பவில்லை. அதற்கு சில மனதிற்கு ஒப்பாத அனுபவங்கள் காரணம் என்றாலும், ஏனோ முக்தாவை தன் மனைவியாக வைத்து பார்க்க முடியாததும் ஒரு காரணம்.

யாஷ் நான்கு வயது சிறுவனாக இருக்கும்போதே அவனது அன்னை இறந்துவிட, அவனை விட இரண்டு வயது பெரியவன் மணிஷ் இருக்க, இரண்டும் ஆண் பிள்ளைகள் தானே, எப்படியும் அவர்கள் வளர்ந்துவிடுவார்கள். அதனால் இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ளுங்கள் என்று கிஷனிடம் உறவுக்காரர்கள் எவ்வளவு எடுத்து சொல்லியும், அதை அவர் ஒரேடியாக மறுத்தவர், மத்திய அரசு வேலை என்பதால், மனைவியின் ஞாபகத்திலிருந்து வெளிவர ஒரு மாற்றம் தேவைப்படவே வேலையில் மாற்றம் வாங்கிக் கொண்டு இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்துவிட்டார்.

பள்ளிப் பருவத்திலிருந்தே சகோதரர்கள் இருவரும் சென்னையில் தான் இருந்தார்கள் என்பதால் நன்கு தமிழ் எழுத, படிக்க, பேச என்று கற்றுக் கொண்டனர். பள்ளியில் நண்பர்களோடு பேசி பேசி வீட்டிலும் தமிழில் தான் சகோதரர்கள் இருவரும் பேசிக் கொள்வர். கிஷனும் இங்கு வந்து ஓரளவிற்கு தமிழ் கற்றுக் கொண்டு கொச்சையாக தமிழ் பேசுவார். ஆனால் வீட்டில் இந்தியில் பேச, தந்தையிடம் மட்டுமே இருவரும் இந்தியில் பேசுவார்கள்.

ஒரு தாய் எப்படி இருந்து பிள்ளைகளை கவனித்துக் கொள்வாரோ, அதேபோல் கிஷனும் தன் இருப் பிள்ளைகளையும் கவனித்துக் கொண்டார். சமைப்பதிலிருந்து வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் அவரே செய்துவிடுவார். தாயில்லாத பிள்ளைகள் என்ற குறையே தெரியாமல் இரு பிள்ளைகளையும் வளர்த்தார். 

அதனாலேயே மகன்கள் இருவருக்கும் தந்தை மீது அளவுக்கடந்த பாசம் உண்டு. அதிலும் யாஷ் கிஷனுக்கு செல்லப்பிள்ளை. மணீஷ் அமைதியான குணம் கொண்டவன், ஆனால் யாஷ் மிகவும் கலகலப்பானவன், அதேசமயம் பொறுப்பானவன், அடுத்தவர் மீது மிகவும் அக்கறையானவன்.
மத்திய அரசு வேலை, நல்ல ஊதியம், அதனால் எந்தவித குறையும் இல்லாமல் கிஷன் பிள்ளைகளை நன்றாகவே வளர்த்தார். அதனால் யாஷ் கல்லூரி படிப்பை முடிக்கும்வரை எந்தவித கவலையுமில்லாமல்  வளர்ந்தான். படித்து முடித்ததும் நல்ல வேலையும் கிடைக்க எல்லாம் நல்லவிதமாக தான் சென்றுக் கொண்டிருந்தது. அதன்பின் மணீஷ் திருமணம் தான் குடும்பத்தில் சங்கடங்களையும் கொடுத்தது.

மணீஷிற்கு அவனுடைய அத்தை பெண் சோனாவின் மீது அளவுக்கடந்த காதல். கிஷன் சென்னைக்கு வந்த கொஞ்ச காலத்திலேயே அவரின் இரு தங்கைகளும் அவர்களின் குடும்பத்தோடு சென்னைக்கே வந்துவிட்டனர். அதன்மூலம் அடிக்கடி சோனாவை சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்க அவன் அவள் மேல் காதலை வளர்த்துக் கொண்டான்.

ஆனால் சோனாவிற்கு மணீஷ் மீது அப்படி ஒரு எண்ணமே இல்லை. அதுமட்டுமல்லாமல் அவள் வேறொருவனை காதலித்துக் கொண்டிருந்தாள். அந்த விஷயம் தெரிந்து மணீஷ் தற்கொலை முயற்சியில் ஈடுபட, யாஷ் தான் அந்தநேரம் அவனை கண்டு காப்பாற்றினான்.

சோனா வேறொருவனை காதலிப்பதால் அவளை மறக்க முயற்சி செய்ய சொல்லி கிஷனும் யாஷும் மணீஷின் மனதை மாற்ற முயற்சித்தனர். ஆனால் மணீஷால் அது முடியாத காரியமாக இருக்க, அவன் ஒரு நடைபிணம் போல் நடமாடிக் கொண்டிருந்தான். அவனை நினைத்து கிஷன் மிகவும் கவலையில் இருந்தார்.

இந்த நேரத்தில் தான் சோனாவை காதலித்தவன் நல்லவன் இல்லை என்பது யாஷ்க்கு தெரிய வந்தது. அதை சோனாவின் குடும்பத்திற்கு யாஷ் ஆதாரத்தோடு நிரூபித்தான். இந்த விஷயம் கேள்விப்பட்ட கிஷன் மகனுக்காக சோனாவை பெண் கேட்டார். மகள் காதலுக்கு ஒத்துக் கொண்ட சோனாவின் தந்தை, அவன் சரியில்லாத வேதனையில் இருந்தவர், கிஷன் வந்து கேட்கவும் சரியென்று சம்மதித்து விட்டார். 
அவரது முடிவை சோனாவும் அவளது அன்னையும் ஒத்துக் கொள்ள வேண்டிததாயிற்று. ஆனால் சோனாவோ தன் தன் அண்ணனுக்கு அவளை திருமணம் செய்து வைக்க தான், அவளது காதலனை திட்டமிட்டு நல்லவன் இல்லையென்று யாஷ் மற்றவர்களுக்கு காட்டியிருக்கிறான் என்ற புரிதலில் யாஷ் மீது தேவையில்லாத வன்மத்தை வளர்த்துக் கொண்டாள்.

சோனாவின் அன்னைக்கோ மகள் காதலித்தவனையும் பிடிக்கவில்லை. மணீஷையும் பிடிக்கவில்லை. அவருக்கு யாஷ்க்கு தன் மகளை கட்டிக் கொடுக்க வேண்டுமென்பது தான் விருப்பம். மணீஷிற்கு யாஷ் அளவுக்கு திறமை பத்தாது என்ற எண்ணம் எப்போதும் இருக்கும், கணவனிடம் மணீஷிற்கு தன் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டாமென்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்.

ஆனால் தன் மகளுக்காக உயிரை கொடுக்க முடிவெடுத்தவன் அவளை நன்றாக பார்த்துக் கொள்வான் என்று ஒரே நிலையாக நின்று மணீஷிற்கு சோனாவை மணம் முடித்தார். அவர் நினைப்பை பொய்யாக்காமல் மணீஷும் சோனாவை தன் உள்ளங்கையில் வைத்துப் பார்த்துக் கொண்டான்.

ஆனால் அந்த காதலை தன் ஆயுதமாக மாற்றி சோனா புகுந்த வீட்டில் பிரச்சனைகள் செய்ய ஆரம்பித்தாள். கிஷனிடம் மரியாதை இல்லாமல் நடந்துக் கொள்வது. எந்த ஒரு விஷயத்திற்கும் குடும்பத்திற்கு எதிராக செயல்படுவது என அவள் அப்படி நடந்துக் கொள்ளும் போது மணீஷ் அவளுக்கு எதிராக நடந்துக் கொள்ளவும் முடியாமல், அதேசமயம் அவளுக்கு ஆதரவாக பேசவும் முடியாமல் மிகவுமே தவித்துப் போவான்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

இப்படி சின்ன சின்ன பிரச்சனைகளை கிஷனும் யாஷும் மணீஷ்க்காக பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்க பழகிக் கொண்டனர். அந்தநேரத்தில் சொந்த ஊரிலிருந்த பூர்விக சொத்தை விற்று தங்கைகளுக்கு சேர வேண்டிய பங்கை கொடுத்துவிட்டு தனக்கு வந்த பணத்திலும் தனக்கு கிடைத்த ரிடையர்ன்மெண்ட் பணத்திலும் கிஷன் வீடுகட்ட நிலம் வாங்கினார்.

வாங்கிய நிலத்தில் உடனே வீடுகட்ட வேண்டுமென்று மகன்கள் இருவருமே கூறினர். அவர்களிடத்திலிருந்த சேமிப்போடு இன்னும் கொஞ்சம் பணம் தேவைப்பட்டதால் வீட்டுக்கடன் வாங்க முடிவு செய்தனர். அந்தநேரம் மணீஷிற்கு வீட்டுக்கடன் வாங்குவது சுலபம் என்பதால் நிலத்தை அவன் பெயரிலேயே பத்திர பதிவு செய்து, கடன் வாங்கி சில மாதங்களில் வீடுகட்டி முடித்தும் விட்டனர். 

அதுவரை பொறுமையாக இருந்த சோனா, வீடு மணீஷின் பெயரில் இருந்ததால், கணவன், மனைவி இருவர் மட்டுமே அந்த வீட்டில் தனிக்குடித்தனம் செய்ய வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தாள். சொந்த வீட்டிற்கு செல்ல வேண்டுமென்று நினைத்த கிஷனுக்கு அது ஒரு பெரிய இடியாக இருந்தது.

அந்தநேரத்திலும் சோனாவிற்கு எதிராக பேச முடியாமல் மணீஷ் தடுமாற, மகனது வாழ்வுக்காக தன் ஆசையை மறைத்துக் கொண்டு அவர்களை மட்டும் அந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தார். ஆனாலும் அவரின் கவலைக் கொண்ட முகத்தைப் பார்த்த யாஷோ, 

“ஒருவிதத்தில் ரெண்டுப்பேரும் தனியா போனது தான் நல்லது பப்பா. சோனா உங்களை மரியாதை குறைவா நடத்துவது எனக்கு பிடிக்கவேயில்லை. இப்போதாவது மணீஷ் கொஞ்சமாவது நிம்மதியா இருக்கானான்னு பார்ப்போம், நீங்க கவலைப்படாதீங்க,” என்று ஆறுதல் வார்த்தைகள் கூறினான்.

மணீஷ் இல்லாததால் ஒரு படுக்கயறைக் கொண்ட வீட்டிற்கு இருவரும் குடி பெயர்ந்தனர். தன் சேமிப்பு பணத்தையெல்லாம் வீடு கட்டுவதற்கு கொடுத்துவிட்டு இப்போது ஒன்றுமில்லாமல் நிற்கும் தன் இளைய மகனை நினைத்து கிஷன் கவலைக் கொள்வார் என்றால்,

தன் தந்தையை மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்ள வேண்டுமென்று யாஷ் நினைத்தான். தான் வேலை செய்த நிறுவனத்திலேயே ஆன்சைட்க்கு செல்ல கிடைத்த வாய்ப்பை கூட தந்தைக்காக விட்டுக் கொடுத்தான். தனியாக வெளிநாட்டில் வேலை செய்ய கிடைத்த வாய்ப்பையும் தந்தையை தனியாக விட்டு செல்ல முடியாது என்பதால் தட்டிக் கழித்தான். கிஷனின் பென்ஷன் பணம், அவனது மாத வருமானம் இருவருக்கும் போதுமானதாக இருக்க அவர்கள் வாழ்க்கையும் நல்லவிதமாகவே சென்றுக் கொண்டிருந்தது.

இந்த நேரத்தில் தான் கிஷனின் இரண்டாவது தங்கையின் பெண் முக்தாவை யாஷிற்கு திருமணம் செய்துக் கொடுக்க அவள் பெற்றோர் விரும்பினர். மகளை செல்லம் கொடுத்து பொத்தி பொத்தி வளர்த்ததால், அவளுக்கு திருமணம் செய்து தங்களோடு வைத்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில் யாஷிற்கு திருமணம் செய்து வைத்து அவனை வீட்டோடு மாப்பிள்ளையாக ஆக்கிக் கொள்ள நினைத்தனர்.

அதை மட்டும் மறைத்து கிஷனிடம் திருமணத்தை பற்றி பேச, அவரோ யாஷிடம் அதை பகிர்ந்துக் கொண்டார். “ஏற்கனவே நம்ம வீட்டுக்கு ஒரு சோனா போதாதா பப்பா, இப்போ இன்னொரு முக்தா வேற வீட்டுக்கு வரணுமா? எனக்கு இப்போ கல்யாணத்திலேயே இன்ட்ரஸ்ட் இல்ல, அப்படியே என்றாலும் முக்தா வேண்டேவே வேண்டாம் பப்பா.” என்று தீர்மானமாக கூற, கிஷனுக்குமே இந்த திருமண பேச்சில் அதிக ஆர்வம் இல்லாததால் முக்தாவின் பெற்றோரிடம் வேண்டாமென்று தெளிவாக கூறிவிட்டார்.

இப்படியே சில மாதங்கள் கடந்த சூழலில் யாஷ் அலுவலக நண்பர்களோடு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய வேலையில் அவர்கள் வந்த வாகனம் விபத்துக்குள்ளாகி அதில் யாஷிற்கும் இன்னொரு நண்பணுக்கும் நல்ல அடி. அதிலும் யாஷ் இரண்டு மாதங்களுக்கு மருத்துவமனையிலேயே இருக்க வேண்டியதாகிவிட்டது.

அவன் செய்யும் வேலையிலும் சில விதிமுறைகள் இருக்க, அதனால் அவனுக்கு அந்தநேரம் வேலையும் போய்விட்டது. கிஷன் தான் உடனிருந்து அவனை நன்றாக கவனித்துக் கொண்டார். இந்த நேரத்தில் முக்தாவின் பெற்றோர் மிண்டும் கிஷனிடம் திருமணத்தை பற்றி பேசினர். வேலையில்லாமல் இருக்கும் யாஷிற்கு புதியதாக தொழில் ஆரம்பிக்க உதவுவதாக முக்தாவின் தந்தை கூறினார்.
மகனது வாழ்க்கை நல்லப்படியாக அமைய வேண்டுமென்று கிஷன் இந்த திருமணத்திற்கு சம்மதித்தார். மகனிடமும் பேசி அவன் மனதை மாற்ற முயற்சித்தார். முக்தாவை மணக்க விருப்பமில்லை. வேலையில்லாத இந்த நேரத்தில் எதற்கு திருமணம்? என்று முதலில் மறுப்பதற்கு யாஷும் பல காரணங்கள் கூறினான். ஆனால் கிஷன் அவனை திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பதிலேயே குறியாக இருக்க, தந்தைக்காக அவன் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது.

முக்தாவிற்கும் யாஷை திருமணம் செய்துக் கொள்வதில் பெரிதாக ஆர்வம் இல்லை. திருமணத்திற்கு பிறகு பிறந்த வீட்டிலேயே இருக்கலாம் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே அந்த திருமணத்திற்கு சம்மதித்தாள்.
யாஷின் திருமணம். அதுவும் தன் சிற்றன்னையின் மகளோடு நடக்கப் போகிறது என்பதை சோனாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. யாஷ் மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது என்பதை மனதில் ஒரு வன்மமாக அவள் வளர்த்துக் கொண்டு வந்தாள்.
அந்த திருமண பேச்சை நிறுத்த அவளும் அவள் அன்னையும் சில முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் முக்தாவின் பெற்றோரின் மனதை அவர்களால் மாற்ற முடியவில்லை. அதற்கு பதிலாக முக்தாவை மாற்ற நினைத்தனர்.
முக்தாவும் பெற்றவர்களுக்காக தான் யாஷை மணக்க சம்மதம் தெரிவித்தாள் என்பதையும், யாஷ் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கப் போவதாகவும் அவள் சோனாவிடமும் தன் பெரியன்னையிடமும் கூற, அது அவர்களுக்கு புது செய்தி என்பதால், அதைக் கொண்டே அவளின் மனதை கலைக்க முயற்சி செய்தனர்.

மணீஷ் போல் அல்ல யாஷ், அவன் தந்தையின் மீது அதிக பாசம் கொண்டவன், வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க அவன் ஒருபோதும் சம்மதிக்க மாட்டான். தந்தையை விட்டுக் கொடுக்க மாட்டான். இப்போதைக்கு அவனுக்கு நல்ல வேலையும் இல்லை என்பதால், அவனுடன் அந்த ஒரு படுக்கையறை கொண்ட வீட்டில் நீ கஷ்டப்பட வேண்டும், அந்த வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது என்று எத்தனையோ அவளுக்கு சொல்லிக் கொடுக்க, அதில் குழம்பியவள், தந்தையிடம் சென்று இந்த திருமணம் வேண்டாமென்று கூறினாள்.

ஆனால் அவர்கள் அவளுக்கு சமாதான வார்த்தைகள் கூறி, இந்த திருமணம் நடக்கும் என்று உறுதியாக கூறிவிட, என்ன செய்வது? என்று அவள் சோனாவிடமும் பெரியன்னையிடமும் ஆலோசனை கேட்க, திருமணத்தன்று அவள் வீட்டை விட்டு செல்ல வேண்டுமென்ற தவறான யோசனையை அவளுக்கு கூறினர்.

அதேபோல் திருமணத்தன்று அழகு நிலையத்தில் இருந்து அவள் வெளியேறுவதற்கு சோனா திட்டம் போட்டுக் கொடுக்க, அவளும் அதை சரியாக செய்தாள். இது எதுவும் தெரியாத யாஷோ மனதிற்கு பிடிக்கவில்லையென்றாலும் தந்தைக்காக மணமகனாக தயாராகி நின்றான்.

இன்னும் அரைமணி  நேரத்தில் விமானம் அந்தமானை சென்றடையும் என்று விமான ஓட்டியின் அறிவிப்பில் சிந்தனையிலிருந்து விடுபட்டு ரித்துவை பார்க்க, இந்தமுறை அவள் நன்றாக உறங்குவதை அவனால் உணர முடிந்தது. மீதி பயணத்தை அவள் முகம் பார்த்தப்படியே அவன் கழிக்க, விமானம் அந்தமானின் தலைநகரமான போர்ட் பிளேயர் விமானநிலையத்தில் தரையிறங்கியது.

தேனன்பு தித்திக்கும்..