TTA 9

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

தேன் 9
 
மறுநாள் காலையும் அதேபோல் கடற்கரையை சுற்றிப் பார்ப்பது தான் யாஷ், ரித்துவின் திட்டம், அதனால் அன்றும் காலையே எழுந்து குளித்து தயாராகினர். ரித்து குளித்துவிட்டு குளியறையிலிருந்து வரும்போது அவள் என்ன உடை உடுத்தியிருக்கிறாள் என்று தான் யாஷ் ஆராய்ந்தான்.
 
இன்று இடையை விட்டு இறங்கியிருந்த மேல் சட்டையும், பலோசா பேண்டும் அணிந்திருந்தாள். அவனது பார்வை தன் உடலை ஆராய்ந்ததில் அவளுக்கு சுகமான அவஸ்தையாக இருக்க, அவனை நேருக்கு நேராக பார்க்க முடியாமல் வெட்கத்தில் அவள் தலை குனிய அதை புரிந்தவனாக, “உனக்கு எந்த ட்ரஸ் போட்டாலும் அழகா இருக்கு ரித்து,” என்று கூறினான். உண்மையிலேயே அந்த கணம் அவளைப் பார்த்த போது தோன்றியதும் அதுதான்,
 
“தேங்க்ஸ் யாஷ்,” என்று அவனது பாராட்டுக் குறித்து கூறியவள், அவனது பார்வை இன்னும் தன் மீதிருந்து விலகாததில் அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. அதனால், “டிரைவருக்கு போன் போட்டீங்களா?” என்றுக் கேட்டு பேச்சை மாற்ற,
 
“ம்ம் நீ ரெடியாகிட்டா அவரை கூப்பிட வேண்டியது தான்,” என்று கூறினான். 
 
“இதோ பத்து நிமிஷத்தில் நான் ரெடியாகிடுவேன், நீங்க போன் போடுங்க யாஷ்,” என்று அவள் கூறவும்,
 
“இதோ போட்றேன்.” என்று சொல்லி அவன் அலைபேசியை எடுக்கும்போதே, அவர்கள் அறையிலிருந்த இண்டர்காம் ஒலியெழுப்ப, யாஷ் அதை எடுத்து பேசினான்.
 
அவன் பேசி முடித்தபின், “என்ன யாஷ்?” என்று ரித்து கேட்கவும்,
 
“நாம வெளிய போறதுக்கு முன்ன ரிஸப்ஷன்க்கு வந்துட்டு போகச் சொன்னாங்க, வா அப்படியே போய்க்கிட்டே ட்ரைவர்க்கு போன் போடுவோம், அப்படியே ரிஸப்ஷன்ல என்ன விஷயம்னு கேட்போம்,” என்று யாஷ் கூறவும், சில நிமிடங்களில் தயாராகி இருவரும் தங்களது அறையை பூட்டிக் கொண்டு கிளம்பினர்.
 
அங்கே வரவேற்பறையில் சென்று இருவரும் என்னவென்று விசாரிக்க, “சார் நீங்க ஹனிமூன் கப்பிள்ஸ் தானே, இன்னைக்கு நைட் ரெசார்ட் பீச்ல உங்களுக்கு கேண்டில் லைட் டின்னர் அரேஞ்ச் செய்திருக்கோம், அதை சொல்லத்தான் கூப்பிட்டோம், 8 மணிக்கு தயாராகி வந்துடுங்க,” என்று அங்கே வரவேற்பறையில் இருப்பவர் சொல்லவும்,
 
என்னவோ நேற்றிலிருந்து கடற்கரைக்கும் அவர்களுக்கும் ஒரு பிணைப்பு இருப்பதாக தோன்ற, இந்த ஏற்பாடு அவர்கள் இருவருக்கும் பிடிக்காமலா போகும், எனவே சரியென்று தலையசைத்தவர்கள் அங்கிருந்து வெளியே வந்ததும், “நாளைக்கு நாம ரூமை வெக்கேட் செய்யணுமில்ல யாஷ், இன்னைக்கு இந்த கேண்டில் லைட் டின்னர் அரேஞ் செய்திருக்காங்க, ஒருவேளை இந்த ரெசார்ட்டில் இப்படி ஒரு வழக்கம் இருக்கோ,” என்று ரித்து தன் சந்தேகத்தை கேட்டாள்.
 
“ம்ம் அப்படி தான் இருக்கும் போல, பீச்ல கேண்டில் லைட் டின்னர், சூப்பரா தான் இருக்கும், எஞ்சாய் பண்ணுவோம், இப்போ கிளம்புவோம்,” என்றப்படி ஓட்டுனருக்காக இருவரும் காத்திருக்க ஆரம்பித்தனர்.
 
அன்றைய பொழுதும் சுற்றிப் பார்த்த இடங்களில் இருவருக்கும் மகிழ்ச்சியான சூழலே அமைய மாலையே அறைக்கு வந்துவிட்டனர். பின் அறையிலேயே பேசியப்படி நேரத்தை கடத்தியவர்கள், கேண்டில் லைட் டின்னருக்காக தயாராக ஆரம்பித்தனர்.
 
முதலில் யாஷ் தான் தயாராகினான். ஜீன்ஸ் பேன்டும் டீ ஷர்ட்டும் அணிந்து அவன் தயாராக கிஷனிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. அப்போது தான் ரித்துவும் குளித்துவிட்டு வெளியே வந்தாள். இரண்டு நாளாக கடல் நீரில் குளித்ததால் தலை அழுக்காக இருக்கவே தலை குளித்திருந்தாள். என்ன உடை அணிவது என்ற குழப்பத்தில் நைட்டி அணிந்துக் கொண்டு வந்தவள், தனது பெட்டியை ஆராய்ந்துக் கொண்டிருக்க, அதை புரிந்தவனாக, “ரித்து, பப்பா தான் போன்ல, நான் பேசிட்டு வரேன், நீ ரெடியா இரு,” என்று சொல்லிவிட்டு அவன் அறையை விட்டு வெளியே சென்ற நேரம், ரித்துவின் அலைபேசிக்கும் அழைப்பு வந்தது. அதுவும் பெயரில்லாமல் வெறும் எண்கள் மட்டும் மிளிரவும், இந்த புது  நம்பர்க்கு யார் அழைப்பது?’ என்ற சிந்தனையோடு அவள் அலைபேசி அழைப்பை ஏற்க, பக்கத்து வீட்டு பெண்மணி தான் பேசினார்.
 
“ஹாய் ஆன்ட்டி நீங்களா? சொல்லுங்க,” என்று அவள் கூறவும்,
 
“ரித்து நாம கடையில் எடுத்தோமே அந்த லாங் கவுன், அதை இப்போ டின்னர்க்கு போட்டுக்கோ,” என்று அவர் இந்தியில் கூறினார்.
 
‘இங்க நாங்க டின்னர்க்கு போகறது இவங்களுக்கு எப்படி தெரியும்?’ என்று ரித்து குழம்பினாள்.
 
கடையில் வைத்து அந்த உடையை அவர் எடுக்கும்போதே, “அய்யோ எதுக்கு ஆன்ட்டி ஹனிமுன் போற இடத்தில் இந்த ட்ரஸ், இது பார்ட்டி, பங்க்‌ஷன்க்கு தான் போடணும்,” என்று அவள் சொல்ல, 
 
“நீங்க போறது ஹனிமூன், முக்கியமா இது தேவைப்படும்,” என்று அவர் சூசகமாக கூறினார்.
 
‘அந்தமான்ல சுத்திப் பார்க்க தானே போறோம், இது எதுக்கு தேவைப்படும்’ என்று அவள் நினைத்தப்படி விழிக்க,
 
“உங்க ஃபர்ஸ்ட் நைட் எப்படியோ அங்க ஹனிமூன் போற இடத்தில் தானே நடக்கும், அப்போ இதை போட்டுக்க,” என்று அவர் சிரித்தப்படியே கூறினார்.
 
‘அய்யோ ஆன்ட்டி என்ன இப்படியெல்லாம் பேசறாங்க?’ என்று நினைத்து அவள் சங்கடத்தோடு அவர்களுக்கு மறுப்பு கூறாமல் அந்த உடையை எடுத்துக் கொண்டாள்.
 
ஆனால் அதை அணியும் சந்தர்ப்பம் எப்போது? என்று அவளுக்கு உண்மையிலேயே தெரியவில்லை. அதனால் அதை அப்படியே வைத்திருந்தாள். இப்போது அவர் அதை உடுத்த சொல்வதைப் பார்த்தால், இந்த டின்னர் ஏற்பாடு ரெசார்டில் செய்யவில்லை என்பது அவளுக்கு புரிந்தது.
 
இது கபிலன் மற்றும் கிஷன் நெஹ்ராவின் ஏற்பாடாக இருக்கலாம், அதுவும் வெறும் டின்னருக்கான ஏற்பாடாக  மட்டும் இது இருக்காது. பக்கத்து வீட்டு பெண்மணி அன்று சொன்னது போல் இது அதற்கான ஏற்பாடு தான், ஆணாக இருவரும் தன்னிடம் சொல்ல முடியாது என்பதால் தான் பக்கத்து வீட்டு பெண்மணியிடம் சொல்ல சொல்லியிருக்கிறார்கள். அவர் ஏற்கனவே எதை நினைத்து அந்த உடையை வாங்க வற்புறுத்தினாரோ, அதுப்பற்றிய விஷயம் என்பதால் இப்போது அந்த உடையை உடுத்த சொல்கிறார். அதன்மூலம் அவள் புரிந்துக் கொள்வாள் என்று அவர் நினைத்திருப்பார். என்பதை சரியாக யூகித்துக் கொண்டாள்.
 
“என்ன ரித்து அந்த ட்ரஸ் போட்டுக்கிறீயா? அப்படியே கொஞ்சம் மேக்கப் போட்டுக்கோ, நான் அங்க இருந்தா போட்டிருப்பேன். உன்னோட மாமனார் நீங்க ஹனிமூன்ல எடுத்த போட்டோ காட்டினார். அதில் மேக்கப் போடாத மாதிரி இருந்துச்சு, நீ நல்ல கலர் தான், ஆனாலும் கொஞ்சம் மேக்கப் போட்டுக்கோ, அதான் ஷாப்பிங் போன போது வாங்கினோமே, அதை சும்மா வச்சிருக்கவா எடுத்துட்டு போன, சரி மணியாகுது பாரு, சீக்கிரம் ரெடியாகி டின்னர்க்கு போ. சொன்னது புரிஞ்சுதுல்ல,” என்று இந்தியில் மூச்சு விடாமல் பேசிவிட்டு அழைப்பை அணைத்தார்.
 
‘என்கிட்ட இதெல்லாம் சொல்ல இவங்க தான் பப்பாக்கு கிடைச்சாங்களா? எங்களுக்கு ஃபர்ஸ்ட் நைட் நடப்பதில் இவங்களுக்கு அப்படி என்ன சந்தோஷமோ,’ என்று நினைத்தப்படியே தயாராகினாள்.
 
அவர் சொன்னது போல் இந்த உடைய அணிந்துக் கொண்டு சாதாரணமாக செல்ல முடியாது என்பதால் அந்த நீள கவுனை உடுத்திக் கொண்டு தலையை காய வைத்து வாரி புதுவிதமான கொண்டை போட்டுக் கொண்டவள், கழுத்திலும் காதிலும் கற்கள் பதித்த நெக்லஸையும் தோடையும் அணிந்துக் கொண்டாள். ஏற்கனவே கைகளில் திருமணத்தன்று அணிந்த வளையல்கள் இருந்தது. முகத்திலும் எப்போதையும் விட கொஞ்சம் அதிகம் மேக்கப் போட்டுக் கொண்டவள்,  தன்னை ஒருமுறை சரிப்பார்த்துக் கொண்டாள்.
 
‘இன்னுமா யாஷ் போன் பேசறாங்க?’ என்று அவள் நினைத்த நேரம், யாஷ் அவளை அலைபேசியில் அழைத்திருந்தான்.
 
” சொல்லுங்க யாஷ்,”
 
“ரித்து பப்பாட்ட பேசிக்கிட்டே இங்க டின்னர் அரேஞ்ச்மெண்ட்ஸ் எல்லாம் சரியா இருக்கான்னு பார்க்க சொன்னாங்கன்னு நான் இங்க டின்னர் சாப்பிடும் இடத்துக்கு வந்துட்டேன். நீ தயாராகி நேரா இங்க வந்துடு, நான்  உனக்காக இங்கேயே காத்திருக்கேன். நீ வந்துடுவ இல்ல, இல்ல நான் அங்க வரட்டுமா?”
 
“இல்ல யாஷ் நானே வந்துடுவேன்.  நீங்க வரவேண்டாம்,” என்றவள் அழைப்பை அணைத்தாள். அவன் இங்கு வராததும் ஒருவிதத்தில் நல்லதாகவே அவளுக்கு தோன்றியது அவன் வந்து தன்னைப் பார்க்கும் பார்வையை நினைத்துப் பார்த்தவளுக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது. ஆனால் இன்னும் சில நிமிடங்களில் அவனை நேரில் சந்திக்க தானே வேண்டும், அதை நினைத்து ஒருவித பரவசத்தோடு அறையை பூட்டிக் கொண்டு கிளம்பினாள். 
 
சிறிது தூரம் நடந்ததுமே அவளை அழைத்துப் போக அங்கு பணி செய்யும் ஒரு பெண்மணி அவளுக்கு வழிக்காட்ட வந்தார்.  வழக்கமாக அவர்கள் செல்லும் பாதை வழியாக இல்லாமல், கொஞ்சம் தள்ளி வேறொரு இடத்தில் அவளை அந்த பெண்மணி அழைத்துச் சென்றார். ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் இங்கு தான் போக வேண்டும் என்று அந்த பெண்மணி சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
 
‘எவ்வளவு ரொமான்டிக்கான இடம்,’ அந்தப் பகுதியை பார்த்தபோது யாஷிற்கு அப்படி தான் தோன்றியது. சுற்றிலும் இருட்டு, நிலா வெளிச்சம், நிசப்தமான சூழலில் கடலலைகளின் சத்தம் மட்டுமே,   கடற்கரை அருகில் மணல் பரப்பில் மேசை, அதில் உணவுகள் அடங்கிய பாத்திரங்கள், நடுவே மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு இருந்தது. எதிரெதிரே தம்பதிகள் அமர நாற்காலிகள். சுற்றிலும் கம்பங்கள் அமைத்து  அதில் கடல் நீல நிறத்தில் சாட்டின் துணிகளை வைத்து இணைத்திருந்தனர். அதன் அருகிலும் அங்கங்கே மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்திருந்தனர். அந்த அலங்காரம் அழகாக இருந்தது.
 
அதையெல்லாம் ரசித்தப்படி இருந்தவன், ‘என்ன இன்னும் ரித்து வரல?” என்று நினைத்தப்படி அவளுக்காக காத்திருக்க, அவளின் வருகையை அவள் கையில் இருக்கும் வளையல்களின் மெல்லிய ஓசை வைத்தே தெரிந்துக் கொண்டவன், அவள் வந்த திசைப் பக்கம் திரும்பிப் பார்க்க, அசந்து தான் போனான். வைன் நிறத்தில் அந்த நீள கவுன் அணிந்து நடந்து வந்துக் கொண்டிருந்தவளை நிலா வெளிச்சத்தில் பார்க்கும்போது, தேவதையே மண்ணில் இறங்கி வந்தது போல் அவனுக்கு தோன்றியது. அவளை விட்டு கண்ணை அகற்றாமல் அப்படியே மெய்மறந்து பார்த்தப்படி நின்றிருந்தான். 
 
அந்த பார்வை வீச்சை தாங்க முடியாதவளாக, “என்ன யாஷ் ஏன் எப்போதும் இப்படி கண் கொட்டாம பார்க்கிறீங்க?” என்று ரித்து கேட்க,
 
“அவ்வளவு அழகா இருந்தா பின்ன அப்படித்தான் பார்க்கணும், வெள்ளை உடை இல்லாதது மட்டும் தான் குறை. மற்றப்படி நீ வானத்திலிருந்து இறங்கி வந்த தேவதையே தான்,” என்று மனதில் நினைத்ததை அப்படியே கூறியவன்,
 
இப்படியே உன்னை பார்த்துட்டு இருந்தா சாப்பாடு கூட வேணாம்,” என்று கிறக்கத்தோடு கூறினான். அதுவும் ரசனை பார்வை மாறாமல் அவளையே பார்த்தப்படி இருந்தது.
 
தன்னை குறித்து அவன் பேசியதும், பார்வையும் அவளுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், “நாம இப்போ வந்தது டின்னர் சாப்பிட யாஷ், நமக்காக இத்தனை அரேஞ்ச்மெண்ட் செய்து வச்சிருக்காங்க, நீங்க என்னடான்னா சாப்பாடு வேண்டாம்னு சொல்றீங்க, எனக்கு பசிக்குது யாஷ்.” என்று கேலியாக கூறினாள்.
 
“ம்ம் உனக்கு பசிக்குதுன்னா நீ சாப்பிடு, நான் உன்னை சாப்பிட்றேன்.” என்று அவன் கூற,
 
அவனது இரட்டை அர்த்த பேச்சில் முகம் சிவந்து அவனைப் பார்க்க, “அதாவது பார்வையாலேயே சாப்பிட்றேன்னு சொன்னேன்.” என்று கிறக்கத்தோடு கூறினான்.
 
அவனது பார்வை வீச்சை அதற்கு மேலும் தாங்க முடியாதவளாக, “போதும் யாஷ், வாங்க சாப்பிடலாம்,” என்று அவனை கைப்பிடித்து அழைத்துச் சென்றவளும் அந்த இடத்தின் அழகை பார்த்து பிரமித்து போனவள்,  ‘இப்படி ஒரு இடத்தில் இருந்தா இதைவிட அதிகமாகவே ரொமாண்டிக்கா பேச்சு வரும்போல,’ என்று யாஷின் பேச்சை நினைத்து புன்னகைத்தப்படியே அவனுக்கு அருகில் நின்றிருந்தவள், இன்னும் கொஞ்சம் முன்னேறி கடலின் அழகை பார்க்க, 
 
அவளது மேனியை அந்த ஆடை முழுதாக மறைத்திருந்தாலும், அவளது முதுகு பிரதேசத்தில் மட்டும் இன்றைய நாகரீகம் என்ற பெயரில் சற்று கீழிறக்கி தைத்திருந்ததில் அவளது வெண்ணிற மேனி பளிச்சென்று தெரிய, நேற்றைய பொழுதை விட  இன்றுதான் அதிக சோதனை காலம் போல என்று யாஷ் நினைத்துக் கொண்டான்.
 
பின் அவளிடம் பணியாட்கள் போல் தன்னை தாழ்த்தி “சாப்பிட போகலாமா ரித்து,” என்றுக் கேட்டவன், அவளை கைப்பிடித்து அழைத்துச் சென்று நாற்காலியில் அமர வைத்து அவனே சாப்பாடை எடுத்து அவளுக்கு பரிமாற, “அய்யோ என்ன யாஷ், நானே போட்டுக்கறேன்.” என்று அவள் மறுத்ததும், 
 
“ஷ்ஷ்” என்று வாயில் விரல் வைத்து அவளிடம் ஒன்றும் பேசாதே என்பது போல் சைகை செய்தவன், அவளுக்கு உணவு பரிமாறியதும் சிறிது எடுத்து ஊட்டி விட, அதை சற்றும் எதிர்பார்க்காதவள், பின் வாயை திறந்து அவன் ஊட்டியதை வாங்கி சாப்பிட்டவள், எத்தனை மகிழ்ச்சியடைந்தாள் என்பது அவளுக்கே தெரியாது. மகிழ்ச்சியில் அவள் கண்கள் கலங்க,
 
“ஹே எதுக்கு இப்போ அழற, ஊட்டினது பிடிக்கலையா?” என்று யாஷ் கேட்க,
 
“ரொம்ப பிடிச்சிருக்கு,” என்றாள்.
 
“இந்த ஸ்பெஷல் கேண்டில் லைட் டின்னரை இப்படியெல்லாம் ஊட்டி இன்னும் கொஞ்சம்  ஸ்பெஷலா மாத்த நினைச்சா, நீ அழுது வேற மூட்க்கு கொண்டு வந்துடுவ போல, இப்போ நான் ஊட்டினேன் இல்ல, அதேபோல நீ ஊட்டு,” என்று அவன் கூற,
 
“அய்யோ யாஷ் போங்க நான் மாட்டேன்.” என்று அவள் வெட்கப்பட,
 
“இதில் என்ன வெட்கம், நாம கணவன், மனைவி தானே, அதுவும் ஹனிமூன் வந்த இடத்தில் இப்படி வெட்கப்பட்டா எப்படி?” என்று அவன் கேட்கவும், அவளும் அவனுக்கு ஊட்டிவிட்டாள். இப்படியே இருவரும் பேசியப்படியே சாப்பிட்டு முடித்தனர். 
 
பின் சிறிது நேரம் கடலலையை இருவரும் ரசித்துக் கொண்டிருக்க, “யாஷ் கடலில் குளிப்போமா?” என்று ரித்து கேட்க,
 
“வேண்டாம் இப்படியே பார்த்துட்டு இருப்போம்,” என்று இந்தமுறை அவன் கூறினான்.
 
அவனது பதிலில் அவனை வியப்போடு அவள் பார்க்க, “இந்த ட்ரஸ்ல நீ அழகா இருக்க ரித்து, கடலில் நனைஞ்சா இந்த ட்ரஸ்ஸ மாத்தணும், அதனால வேண்டாம்,” என்று அவன் விளக்கத்தை கூற,
 
“எப்படியோ தூங்க தானே போறோம் யாஷ், அப்போ இந்த ட்ரஸ்ஸை மாத்தி தானே ஆகணும்,” என்று அவள் பதில் கூறினாள்.
 
“இன்னைக்கும் தூங்கத் தான் வேணுமா?” என்று அவன் மனசாட்சி சுணங்கியது.
 
“கொஞ்ச நேரம் காலையாவது நனைக்கலாம் யாஷ்,” என்று சொல்லியப்படி அவள் எழுந்து கடலுக்கு அருகில் செல்ல, அவனுமே அவள் பின்னாலேயே சென்றான்.
 
திடீரென அவள் ஆடை தடுக்கி விழப்போனவளை பின்னாலிருந்து யாஷ் தாங்கிப் பிடித்தான். அதுவும் அவளது வெற்று முதுகில் அவன் கைகள் இருக்க அதற்கு மேல் அவனது கட்டுப்பாடுகள் தகர்ந்துப் போக அவனது கைகள் மட்டுமல்ல, உதடுகளும் அவள் மேனியில் ஊர்வலம் வர ஆரம்பித்தது.
 
அவனது செய்கையில் அவளுக்குமே ஹார்மோன் மாற்றங்கள். அதனால் அதை அனுமதித்தவளாக அவள் நின்றிருக்க, ஆனாலும் யாருமே இல்லாத தனிமையான இடமாக இருந்தாலும் அவர்கள் இருப்பது வெளியே என்பதால், “யாஷ் வேண்டாம், நாம இப்போ பீச்ல இருக்கோம்,” என்று கூறினாள்.
 
ஆனால் அவள் கூறியது அவளுக்கே கேட்டிருக்குமா? என்பதே சந்தேகம் தான், அதனால் அதை காதில் வாங்காதவனாக யாஷ் அவனது வேலையில் தீவிரமாக இருக்க,
 
“யாஷ் ப்ளீஸ் இங்க வேண்டாம்,” என்று இந்தமுறை அவள் சத்தமாக கூறியது மட்டுமில்லாமல் கொஞ்சம் அவனை விலக்க முயற்சிக்க, அதில் அவனது மோகநிலை கலையவும், அப்போது அவன் செய்துக் கொண்டிருந்த காரியமே அவனுக்கு உரைத்தது.
 
‘என்னடா செய்ற யாஷ். இப்போதைக்கு அவளைப்பத்தி தெரிஞ்சிக்காம எதுவும் வேண்டாம்னு தானே சொல்லிட்டு இருந்த, இப்போ கட்டுப்பாட்டை மீறி இப்படி செய்யலாமா?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டவன்,
 
“சரி வா ரித்து, ரூம்க்கு போகலாம், தூங்கணும்னு சொன்னல்ல,” என்று தனக்கு தானே சொல்லியவன் போல அங்கிருந்து செல்ல,
 
‘இங்க வேண்டாம்னு தானே சொன்னோம், அப்புறம் எதுக்காக இப்படி சொல்றாங்க,’ என்று குழம்பியப்படியே ரித்துவும் அவள் பின்னால் சென்றான்.
 
‘இன்னும் எத்தனை சோதனைகளை கடக்க வேண்டுமோ? அவளைப்பத்தி ஏன் சொல்ல தயங்கறா? அப்படி என்கிட்ட சொல்லக் கூடாத அளவுக்கு என்ன இருக்கு? ஒருவேளை எங்க ரெண்டுப்பேருக்குள்ள எல்லாம் பேசி தெளிவாயிருந்திருந்தா இந்த ஹனிமூன் எவ்வளவு ரொமாண்டிக்கா இருந்திருக்கும்?’ இப்படி பல கேள்விகள் மனதில் ஓட, ஒரு நீள பெருமூச்சை இழுத்துவிட்டவன், நேற்றுப் போலவே போர்வையில் தன்னை மறைத்து தூங்க முயற்சிக்கும் எண்ணத்தோடு சென்று அறை கதவை திறக்க, கதவை திறந்ததுமே ஒரு நல்ல நறுமணம் வீச, ‘இது தங்களது அறையா?’ என்ற சந்தேகத்தோடு அறைக்குள் நுழைய, அறை முழுவதும் ரோஜாக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.
 
இப்படி ஒரு ஏற்பாட்டை எதிர்பார்க்கதவனாக யாஷ் வியந்துப் போக, ரித்துவிற்கு முன்பே இப்படி ஒரு சந்தேகம் இருந்திருந்தாலும் தன்னவனோடு இருந்த இனிமை பொழுதில் அதெல்லாம் ஞாபகத்தில் இல்லை. அதிலும் இப்படியெல்லாம் அறையை அலங்கரித்திருப்பார்கள் என்று அவள் கற்பனை செய்து பார்க்கவுமில்லை. அதனால் அவளுக்குமே இந்த ஏற்பாடை பார்த்து வியப்பில் பேச்சு வரவில்லை.
 
யாஷ் இப்போது என்ன மனநிலையில் இருக்கிறான் என்பதும் அவளுக்கும் தெரியவில்லை, அவளே எதிர்பார்க்காத போது அவளை நெருங்கியவன், அடுத்து ஏதோ தவறு செய்தது போல் தப்பித்து இங்கு வந்தான். இப்போது இந்த ஏற்பாடு குறித்து என்ன சொல்வான் என்பதும் தெரியவில்லை. பேசாமல் அமைதியாக சென்று படுத்துவிடலாம் என்று பார்த்தால், மெத்தையின் நடுவே இதய வடிவில் சிகப்பு ரோஜாக்கள் கொண்டு அலங்கரித்திருக்க, எப்படி படுக்க முடியுமாம்?
 
ஆனால் இப்படியே இரவு முழுக்க நின்றிருக்கவா முடியும்? அதனால், “யாஷ், இப்படி ஒரு ஏற்பாடு இருக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை, இப்போ எப்படி நாம தூங்கறதுன்னு தெரியல, இருங்க கொஞ்ச நேரத்தில் அந்த ரோஜாப்பூக்களை எடுத்துட்றேன்,” என்று சொல்லியப்படி கட்டிலின் அருகில் சென்றவளை கைப்பிடித்து இழுத்து தன் அணைப்பிற்குள் கொண்டு வந்தவன், கைகளால் அவள் முதுகில் கோலம் வரைந்தப்படியே,
 
“என்னால முடியல ரித்து, நீதான் என்னை ரொம்ப சோதிக்கிறேன்னு பார்த்தா, கூட இந்த ரெசார்ட் ஆளுங்களும் என்னை ரொம்ப சோதனைக்கு உள்ளாக்குறாங்க, இதுக்கு மேலேயும் என்னால பொறுமையா இருக்க முடியாது, நீ எனக்கு முழுசா வேணும் ரித்து, நான் உன்னோட கணவன் என்ற உரிமையை முழுசா எடுத்துக்கணும், ப்ளீஸ்.” என்று கிறக்கத்தோடு அவளிடம் அவன் கெஞ்ச,
 
“எப்போ யாஷ் நான் வேண்டாம்னு சொன்னேன். எனக்குமே இதில் சம்மதம் தான்,” என்று அவள் தன் சம்மத்தத்தை தெரிவித்த அடுத்த நொடி, மறுவார்த்தை பேசவிடாமல் அவளின் இதழை தன் இதழ் கொண்டு மூடினான். அடுத்து நடந்தவைகள் இருவரின் விருப்பத்தோடு நடக்க, அங்கே ஒரு அழகிய தாம்பத்யம் நடந்தேறியது.
 
மறுநாள் காலை முன்னதாகவே எழுந்த ரித்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்த யாஷை எழுப்பினாள். ஏனென்றால் இன்று காலை அறையை காலி செய்துக் கொண்டு இருவரும் நீல் தீவிற்கு செல்ல வேண்டும், பதினொரு மணிக்கு கப்பல் புறப்படுகிறது. ஒருமணி நேர பயணமாக நீல் தீவிற்கு செல்பவர்கள் அங்கு சுத்திப் பார்த்துவிட்டு, அடுத்து மாலையே கப்பல் ஏறி போர்ட்பிளேயர் தீவிற்கு செல்ல வேண்டும், அதனாலேயே அவள் யாஷை எழுப்பினாள்.
 
ஆனால் அவனோ அவளது குரலுக்கு கண்விழித்தாலும், இன்னும் உறக்கத்தை தொடரும் முயற்சியில் இருக்க, “அய்யோ யாஷ், நாம இன்னைக்கு ரூம் வெக்கேட் செய்யணும், ஞாபகம் இருக்கா? இல்லையா? என்று கேட்க, அவள் எதிர்பார்க்காத நேரம் பார்த்து அவளை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டவன், 
 
“இன்னைக்கே போகணுமா ரித்து, இன்னும் 2 நாள் இங்கேயே இருக்கலாமே,” என்று சொல்ல,
 
“இது முன்னமே ஏற்பாடு செய்து வைத்த ப்ளான் யாஷ், அதுப்படி இன்னைக்கு இங்க இருந்து நாம போகணும்,” என்று அவள் கூறினாள்.
 
“ம்ம் ஆமாம் போய்த்தானே ஆகணும், ஆனா இங்க தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, போர்ட்பிளேயர் அவ்வளவா ரொமான்டிக் ப்ளேஸ் இல்லல்ல, ச்சே ரெண்டு நைட்டை தேவையில்லாம வேஸ்ட் செஞ்சுட்டோமே,” என்று அவன் வருத்தப்பட,
 
“என்ன வேஸ்ட், உங்களோட கைக்கோர்த்துக்கிட்டு பீச்ல நடந்தது, குளிச்சது, பேசிக்கிட்டே சாப்பிட்டது, இது எல்லாமே எனக்கு ரொம்ப முக்கியமான நேரம் யாஷ்,” என்று அவளது பதிலில்,
 
“எனக்குமே அப்படித்தான், அப்படியெல்லாம் சொல்லவே மாட்டேன். அப்பா மனுஷனை எப்படியெல்லாம் நீ சோதிக்கிற, முடியல என்னால, இதுல நேத்து சொன்னது போல இந்த ரெசார்ட் ஆளுங்க வேற, ஆனா இப்படி ஒரு ஏற்பாடை வந்த முதல் நாளே செய்யாம, கிளம்ப இருந்த நைட் செய்தானே, அவன் அறிவைப் பாராட்டியே ஆகணும்,” என்று அவன் சொல்லிக் கொண்டிருந்தான்.
 
அந்த நேரம் கபிலனிடம் அழைப்பு வர, ‘ம்ம் பாராட்டுங்க பாராட்டுங்க,’ என்று மனதில் நினைத்துக் கொண்டவள்,
 
“சரி நீங்க கபில் பய்யாக்கிட்ட பேசிட்டு குளிக்கப் போங்க, நான் துணியெல்லாம் எடுத்து வைக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு அவள் பால்கனிக்குச் சென்றாள். அங்கே கடலில் குளித்துவிட்டு வந்து ஈரமாகியிருந்த துணிகளை காய வைத்திருந்தாள். அதை மடிப்பதற்காக சென்றவள், யாஷ் நண்பனோடு சகஜமாக உரையாடுவதற்கு ஏதுவாக பால்கனி கதவை மூடினாள்.
 
அவனும் படுக்கையிலிருந்து எழுந்து வெற்றுடம்போடு சாய்ந்து அமர்ந்தவன் கபிலனிடம் பேச ஆரம்பித்தான்.
 
“என்ன யாஷ், நேத்து எப்படி இருந்து கேண்டில் லைட் டின்னர், அப்புறம் அதுக்குப்பிறகான ஏற்பாடெல்லாம்,”
 
“அடப்பாவி இதெல்லாம் உன்னோட ஏற்பாடு தானா? அதான ஹோட்டல்காரனுக்கு என்னடா நம்ம மேல இத்தனை அக்கறைன்னு நினைச்சேன்.”
 
“ஹே நமக்கு வேணும்னு சொன்னா ஏற்பாடு செய்வாங்கடா, சரி நீ சொல்லு, ஏற்பாடு பிடிச்சுதா? பிரம்மச்சாரியா இருந்தவன் குடும்பஸ்தனா மாறீனியா?”
 
“போடா அதை உன்கிட்ட சொல்வாங்களாக்கும்,”
 
“ம்ம் இந்த பதிலே எல்லாம் சுமூகமா முடிஞ்சுதுன்னு சொல்லுதே, செம டா,”
 
“செம தான், ஆனா ஹனிமூன் வந்த நாளை விட்டு 3 வது நாள் இதெல்லாம் ஏற்பாடு செய்திருக்கீயே உன்னோட அறிவை மியூசியம்ல தான் கொண்டு போய் வைக்கணும்,”
 
“ம்ம் ஆமாம், ஏன் டா சொல்ல மாட்ட, ஐயா இங்க இருந்து கிளம்பும்போது ஹனிமூன் மூடோடவா கிளம்பினீங்க, உங்களை அனுப்பி வைக்கறதுக்குள்ள தலையால தண்ணீ குடிச்சோமே, இதில் அன்னைக்கே இந்த ஏற்பாடு செய்திருந்தா, சென்னை வந்ததும் என்னை ஓட ஓட விரட்டி அடிச்சிருக்க மாட்ட, என்னை விடு, பாவம் ரித்து, உன்னோட கோபத்துக்கு அந்த பொண்ணு தானே ஆளாகணும்,”
 
“ம்ம் உண்மை தான், அங்க இருந்த வரைக்கும் ரொம்ப கோபமும் எரிச்சலுமா தான் இருந்தேன். ஆனா அவளோட முதல்நாள் பயணமே, என்னமோ நானா தான் கோபத்தை இழுத்துப் பிடிக்க வேண்டியதா இருந்துச்சு, ஆனா அதுகூட அவளோட வாட்டமான முகத்தை பார்த்தா உடனே மறைஞ்சு போகுது, அவளை சமாதானப்படுத்த தான் தோனுது, அன்னைக்கு நைட் வரைக்கும் கூட கோபத்தை காட்டணும்னு நினைச்சு கூட என்னால முடியல, இது என்ன மேஜிக்னே தெரியல கபில்,”
 
“ஹே இது தான் நம்ம நாட்டு கல்யாணத்தோட மேஜிக், நாங்கல்லாம் இதை மஞ்சள் கயிறு செய்யும் மேஜிக்னு சொல்வோம், உங்க ரெண்டுப்பேரும் சொல்லணும்னா கருப்பு மணி செய்த மேஜிக்னு தான் சொல்லணும், நீ இப்படி ஒருநாளிலேயே மாறுவேன்னு தெரிஞ்சிருந்தா, நான் அன்னைக்கே இந்த ஏற்பாட்டை செய்திருப்பேனே டா.”
 
“நீ வேற, அவளைப்பத்தி முழுசா தெரிஞ்சப்பிறகு தான் எல்லாம்னு கட்டுப்பாட்டோட இருந்தேன். ஆனா ரெண்டு நாளுக்கு மேல முடியல,”
 
“என்னடா ரித்து இன்னுமா உன்கிட்ட வெளிப்படையா தன்னைப்பத்தி சொல்லல?”
 
“இல்லடா, கேட்டாலும் சொல்ல மாட்டேங்குறா? ஏன்னு தான் தெரியல, என்னவா இருக்கும்னு தெரியல?” என்றவன், ரித்து என்ன செய்கிறாள்? என்பது போல் அவளைப் பார்க்க, அவள் கடலைப் பார்த்தப்படி நின்றிருப்பதை பார்த்தவன், கொஞ்சம் மெதுவான குரலில்,
 
“எனக்கும் ரித்துக்கும் முன்னமே அறிமுகம்னு எனக்கு தோனுதுடா, அவளோட ஏற்கனவே பேசி பழகியிருக்கேன்னு நினைக்கிறேன்.” என்று யாஷ் கபிலனிடம் சோட்டீயைப் பற்றி சொல்ல,
 
“என்னடா சொல்ற? ரித்துவை உனக்கு முன்னமே தெரியுமா? அப்புறம் உனக்கு அவளை அடையாளம் தெரியலையா?” என்று அவன் தனது சந்தேகத்தை கேட்டான்.
 
“அதுதான் டா குழப்பமா இருக்கு? அந்த பொண்ணு தானா இவன்னு சந்தேகமாகவே இருக்கு, சுத்தமா அடையாளமே தெரியல, இன்னமுமே அவளா இவன்னு குழப்பமாகவே இருக்கு, அதுவும் கல்யாணம் அப்போ நான் இருந்த மூடுக்கு எதையும் ஆராய்ந்து பார்க்கல, ஆனா இப்போ சோட்டீயோட சாயல் கொஞ்சமா சில சமயம் தெரியுது. ஆனாலும் ரெண்டுப்பேரும் ஒரே ஆள் தானான்னு குழப்பமாகவே இருக்கு, அவக்கிட்ட இதைப்பத்தி கேட்கலாம்னு பார்த்தா, அவ தான் சோட்டீன்னா என்கிட்ட சொல்ல என்ன தயக்கம்? எனக்கு அதுதான் புரியல,”
 
“சரி டா, எப்படி உன்னோட சந்தேகத்தை தெளிவாக்கிக்கப் போற?”
 
“அதுப்பத்தி பிரச்சனை இல்லடா, சுஷாந்த் இருக்கான், அவன்கிட்ட சோட்டீயை பத்தி கேட்டு தெரிஞ்சிக்கலாம், அது சென்னை போனதும் அவன்க்கிட்ட பேசிப்பேன். அதுக்குள்ள இன்னும் 3 நாள் இங்க தானே இருக்கப் போறோம், தன்னைப்பத்தி ரித்துவே சொல்றாளான்னு பார்ப்போம்,”
 
“சரி நீ சொல்றது போல ரித்துவும் சோட்டீயும் ஒரே ஆள்னா பெருசா பிரச்சனை இருக்காது, சரி மீதி நாளை நல்லா எஞ்சாய் பண்ணுங்க, அப்புறம் அப்பாக்கிட்ட பேசு, உங்களுக்குள்ள எல்லாம் சரியாகிடுச்சுன்னு தெரிஞ்சா அப்பா சந்தோஷப்படுவார். ஆனா என்கிட்டயே இதைப்பத்தி பேச தயங்குற, இதுல அப்பாக்கிட்ட எப்படி சொல்வ,”
 
“டேய் ஒரு ஃப்ரண்டா நீயே என்னோட மனநிலையை நல்லா புரிஞ்சு வச்சிருக்க, அவர் என்னோட பப்பா டா, நான் சொல்லணும்னு இல்ல, நான் பேசறதே வச்சே தெரிஞ்சிப்பார். என்னோட உணர்வுகளை அப்படியே புரிஞ்சிப்பார்.”
 
“உண்மை தான், இருந்தாலும் நேத்து இப்படி ஒரு ஏற்பாடு செய்ததை பத்தி அவர்க்கிட்ட சொல்லியிருந்தேன். அதனால நான் அப்பாக்கிட்ட இதைப்பத்தி சொல்வேன். நீயும் பேசு, சரி நீங்க இங்க இருந்து நீல் தீவுக்குப் போகணுமில்ல, நல்லா எஞ்சாய் செய்ங்க,” என்று சொல்லி அலைபேசி அழைப்பை அணைத்தான்.
 
அவர்கள் பேசி முடிந்ததை உணர்ந்தது போல் ரித்து பால்கனி கதவை திறந்துக் கொண்டு வந்தவள், அங்கிருந்த மேசை மீது மடித்து வைத்த துணிகளை வைக்கவும், “ரித்து இங்க வாயேன்,” என்று அவளை அருகில் அழைத்தவன்,
 
“நேத்து இந்த ஏற்பாடெல்லாம் கபிலன் தான் செய்தது தெரியுமா?” என்று சொல்ல,
 
“எனக்கு தெரியுமே,” என்று சொல்லி அவனை அவள் வியப்படைய வைத்தாள்.
 
“எப்படி தெரியும்?”
 
“நேத்து பக்கத்து வீட்டு ஆன்ட்டி போன் போட்டு டின்னர்க்கு அந்த கவுனை போடச் சொன்னாங்க, அப்பவே அதெல்லாம் கபில் பய்யா ப்ளானா இருக்கும்னு யூகிச்சேன். பப்பா உங்கக்கிட்ட பேசினாரே, அவர் உங்கக்கிட்ட இதைப்பத்தி சொல்லியிருப்பார்னு நினைச்சேன்.”
 
“அவர் என்கிட்ட சொல்லல, உண்மையிலேயே நேத்து நடந்தது எனக்கு ஒரு சர்ப்ரைஸ் தான், உனக்கு தெரிஞ்சே சொல்லாம விட்டுட்ட பார்த்தீயா?”
 
“ம்ம் இதெல்லாம் வெளிப்படையா சொல்வாங்களா?” என்று அவள் வெட்கப்பட,
 
“இதுக்கு மேல என்கிட்ட உனக்கென்ன வெட்கம்,” என்றவன்,
 
“ரித்து நேத்து நடந்ததில் உனக்கேதும் சங்கடம் இல்லையே?” என்றுக் கேட்டான்.
 
காலையில் எழுந்ததும் சரசமாக பேசியவன், இப்போது இப்படி கேட்கவும், “ஏன் யாஷ்? எதுக்கு இப்படி கேட்கறீங்க? உங்கக்கூட இருக்கறதே சந்தோஷம்னு சொல்றவ, இதை விரும்பாம இருப்பேனா?” என்றுக் கேட்க,
 
நொடியில் அவள் முகம் வாடியதை கண்டவன், நேற்றுவரை அவனது எண்ணம் என்னவாக இருந்தது என்பதை கபிலனிடம் கூறியது போல் அவளிடமும் கூறியவன், “இனி உன்னோட கடந்தக்கால விஷயங்கள் எனக்கு ஒரு நியூஸ் போல தான், நம்ம சந்தோஷமான வாழ்க்கைக்கு அது எந்தவொரு பிரச்சனையையும் உண்டாக்காது.
 
ஆனாலும் மணீஷ் நீ வசதியான வீட்டு பொண்ணா இருப்பன்னு சொன்னான். உன்னோட பேச்சு, உன்னோட நடவடிக்கை எல்லாம் அதைத்தான் தெரியப்படுத்துது. ஒருவேளை என்னால போராட முடியாத அளவுக்கு ஏதாவது பிரச்சனை வந்தா என்ன செய்றது? நேத்துவரைக்கும் அப்படி எதுவும் யோசிக்கல, ஆனா இப்போ நாம வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சதும் எனக்கு இப்படியெல்லாம் தோனுது,” என்று உண்மையிலேயே மனதில் தோன்றிய புதிய கவலையை அவளிடம் கூறினான்.
 
“நீங்க பயப்பட்ற அளவுக்கு எந்த பெரிய பிரச்சனையுமில்ல யாஷ், உங்கக்கிட்ட இருந்து என்னை யாராலும் பிரிக்க முடியாது. இப்போதைக்கு எனக்கு இருக்க நிரந்தர சொந்தம் நீங்க தான், உங்களை தான் நான் கல்யாணம் செய்துப்பேன்னு நினைச்சே பார்க்கல தெரியுமா? கடவுள் கிருபை அது தானா நடந்திருக்கு, அதை எப்போதும் நான் இழக்க தயாரா இல்லை.” என்றவள் அவனது அருகே சென்று அவனது வெற்று மார்பில் சாய்ந்துக் கொள்ள,
 
அவள் பேசும்போது கூறிய உங்களை தான் என்ற வார்த்தையை மனதில் குறித்துக் கொண்டவன், சென்னை சென்றதும் சுஷாந்திடம் கண்டிப்பாக பேச வேண்டுமென்பதை மீண்டும் ஒருமுறை மனதோடு சொல்லிக் கொண்டான்.
 
தேனன்பு தித்திக்கும்..