TTA 14
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
தேன் 14
பிறந்த வீட்டில் திருமணம் என்று ஸ்வராகிணி ஊருக்கு போயிருந்தார். வர பத்து நாளாகும், அந்த பத்து நாளும் வேலை முடித்து வந்ததும், மகளுடன் பொழுதை கழிக்க வேண்டுமென்று ரிஷிவர்த் நினைத்திருந்தார்.
லக்னோவிலிருந்து மகளை அழைத்து வந்ததிலிருந்து அவரும் கவனித்துக் கொண்டுதானிருக்கிறார். ரித்து எப்போதுமே அறைக்குள்ளேயே அடைந்துக் கிடக்கிறாள். ஏதோ அவள் பார்ப்பதற்கே சோர்வாக தெரிகிறாள். அதனால் மகளிடம் மனம் விட்டு பேச வேண்டுமென்று நினைத்தப்படி வீட்டிற்கு வந்ததும் நேராக மகளது அறைக்குச் சென்று பார்த்தவருக்கு அதிர்ச்சி.
கை நாடி நரம்பு வெட்டப்பட்டு ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்க, ரித்துவோ மயக்கத்திலிருந்தாள். உடனே பதறி மகளின் அருகே சென்றவர், அவளை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார்.
இது போலீஸ் கேஸ் என்று மருத்துவர்கள் சொன்ன போது, தன் செல்வாக்கு மூலம் ரிஷிவர்த் அதை சரி செய்து உடனே சிகிச்சை அளிக்கப்படவே ரித்து காப்பாற்றப்பட்டாள்.
கண் விழித்ததும் அவள் இருந்த நிலையில் அவளிடம் எதுவுமே கேட்க முடியவில்லை. பின் அவள் சிறிது சரியானதும் அவள் தற்கொலை செய்ய காரணம் என்ன? என்று கேட்டபோது அவள் மௌனத்தையே பதிலாக கூறினாள்.
ரிஷ்வர்த்தோ மகளை அந்த நிலையில் பார்த்து குற்ற உணர்வில் தவித்தார். அவளை தன் கண்ணுக்குள் பார்த்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசை அவருக்கு எப்போதும் இருக்கிறது. ஆனால் ஸ்வராகிணிக்காக பார்க்கும்போது அவளை விட்டு தள்ளி நிற்க வேண்டியதாக உள்ளது.
அவள் குழந்தையாக இருக்கும்போது பெற்றவர்களின் ஒதுக்கத்தை புரிந்துக் கொள்ள முடியாது. ஆனால் இப்போது அப்படி இல்லையே, அவளாக கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது? என்று நினைத்து மருகிக் கொண்டிருப்பவருக்கு, இப்போது அவள் தற்கொலை செய்தது வேறு உறுத்தலாக இருக்க மிகவுமே குற்ற உணர்ச்சிக்கு ஆளானார். அவள் தற்கொலைக்கு முயன்றதற்கு காரணம் தெரியாததால் ஸ்வராகிணி, கலாவதி யாருக்குமே அவர் இந்த விஷயத்தை சொல்லவில்லை.
தற்கொலைக்கு முயன்றதால் அந்த மருத்துவமனையிலேயே மனநல ஆலோசகரை வரவைத்து அவளிடம் பேசவைத்தார்கள். அவளுக்கென்று தனியறை கொடுக்கப்பட்டிருந்ததால் அங்கேயே சென்று மருத்துவர் அவளிடம் தற்கொலைக்கு முயன்றதற்கான காரணத்தை கேட்டார். ஆனால் அவரிடம் கூட ரித்து தன் மன வருத்தங்களை பகிர்ந்துக் கொள்ள தயங்கினாள்.
“யார்க்கிட்டாயவது நம்ம மனசுல இருப்பதை ஷேர் செய்தா மனதிலிருக்கும் பாரம் குறைஞ்சு கொஞ்சம் மனசுக்கு ரிலீஃப் கிடைக்கும், இதை சொன்னா நம்மள திட்டுவாங்க, அடிப்பாங்க அப்படியெல்லாம் பயமா இருந்தா, நீ தைரியமா என்கிட்ட சொல்லலாம், நான் டாக்டர், நீ பேஷண்ட், அதோட நம்ம உறவு முடிஞ்சுது, இந்த ட்ரீட்மெண்ட் முடிஞ்சா அதுக்குப்பிறகு நாம பார்த்துக்குவோமான்னு கூட தெரியாது. நான் யார்க்கிட்டேயும் நீ சொன்னதை சொல்லமாட்டேன். நீ என்னை நம்பினா சொல்லலாம், என்னால அதுக்கு ஏதாவது சொல்யூஷன் கூட கொடுக்க முடியலாம், அது உன்ன அந்த பிரச்சனையிலிருந்து வெளியே வரவைக்க உதவியா இருக்கும், நான் வேணும்னா உனக்கு சத்தியம் செய்து கொடுக்கிறேன். யார்க்கிட்டேயும் சொல்ல மாட்டேன்னு,” என்று அவர் ரித்துவிடம் பேசும் விதத்தில் பேசவும்,
“நிஜமா சொல்ல மாட்டீங்க தானே,” என்றவள், சென்னையில் நடந்ததை மேலோட்டமக அவரிடம் பகிர்ந்துக் கொண்டாள்.
அனைத்தையும் கேட்டுக் கொண்டவர், “சரி நீ தூங்கு, நாம நாளைக்கு இதைப்பத்தி பேசலாம்,” என்று அவளிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தார்.
வெளியில் ரிஷிவர்த் படப்படப்போடு காத்திருக்க, அவருக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு ரிஷிவர்த்தை வரச் சொன்னவர், “மிஸ்டர் ரிஷிவர்த், உங்க பொண்ணு எதனால் தற்கொலைக்கு முயற்சி செய்தான்னு என்கிட்ட சொல்லிட்டா, யார்க்கிட்டேயும் சொல்லக் கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டு தான் சொன்னா, ஆனா அதை உங்கக்கிட்ட ஷேர் செய்துக்கறதில் தப்பில்லன்னு நினைக்கிறேன். ஏன்னா உங்க பொண்ணை பத்தி நீங்க தெரிஞ்சிக்கணும் தானே, ஆனா விஷயம் கேள்விப்பட்டு அவளை நீங்க அடிக்கவோ திட்டவோ கூடாது. அப்படி செய்தா அவ திரும்பவும் இப்படி தற்கொலைக்கு முயற்சி செய்யவும் வாய்ப்பிருக்கு,” என்று சொல்லவும்,
“அய்யோ அப்படியெல்லாம் நான் செய்ய மாட்டேன் டாக்டர், அவ இதிலிருந்து வெளியே வந்தா போதும், அதனால் நீங்க என் கிட்ட சொல்லலாம்,” என்று ரிஷிவர்த்தும் கூறினார்.
“சரி சொல்றேன், ஆனா உங்கக்கிட்ட சொல்றதை விட, உங்க மனைவிக்கிட்ட சொன்னா இன்னும் நல்லா இருக்கும், அவங்க எங்க?” என்று அவர் கேட்க,
“அவ இப்போ ஊரில் இல்லை டாக்டர், சொன்னா அவ பதட்டப்படுவான்னு நான் எதுவும் அவக்கிட்ட சொல்லல, என்கிட்ட சொல்லுங்க, நான் கண்டிப்பா என்னோட பொண்ணை புரிஞ்சிப்பேன்.” என்று அவர் கூறினார்.
“சரி சொல்றேன்,” என்று கூறிய மருத்துவர், “உங்க பொண்ணு சென்னைக்கு போன இடத்தில் ஒரு பையனை காதலிச்சிருக்கா, ஆனா அந்த பையன் உங்க பொண்ணை காதலிக்கல, அவனுக்கு வேற ஒரு பொண்ணை தான் பிடிச்சிருக்குன்னு தெரிஞ்ச உங்க பொண்ணுக்கு அது ஒரு பெரிய அதிர்ச்சி. அந்த பையனுக்கு ஏன் தன்னை பிடிக்கல, அது தான் அவ மனசுல ஓடிட்டு இருக்கு, அவளால அந்த ஏமாற்றத்தை தாங்கிக்க முடியவே இல்லை. பிறந்ததிலிருந்து எல்லாமே கேட்காம கிடைத்திருக்கும் இல்லையா? அதனால் இந்த புறக்கணிப்பு அவளுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கு, அதுதான் அவ இப்படி ஒரு முடிவுக்கு போயிருக்கா,” என்று அவர் விஷயத்தை சொல்லவும்,
“அந்த பையன் யாருன்னு ஏதாவது சொன்னாளா?” என்று ரிஷிவர்த் கேட்டார்.
“அதை மட்டும் அவ சொல்ல மறுத்துட்டா, ஒருவேளை அதை அவளே மறக்க நினைக்கலாம், இல்லை அவன் பேரை சொன்னா அந்த பையனுக்கு ஏதாவது பிரச்சனை வருமோன்னு பயப்படலாம், என்னை கேட்டா நீங்களும் அதை என்ன ஏதுன்னு ஆராயாம உங்க மகளை இதிலிருந்து கொண்டு வர முயற்சி செய்ங்க, அவ கூட நேரத்தை செலவிடுங்க, நானும் அவக்கிட்ட பேசறேன். அப்படியெல்லாம் செய்த கண்டிப்பா இதிலிருந்து அவ வெளிய வந்துடுவா, ஆனா உங்க பொண்ணு ஒரு பையனை காதலிச்ச விஷயம் உங்களுக்கு தெரியும்னு அவளுக்கு காட்டிக்காதீங்க, என்று மருத்துவர் சொல்லவும், ரிஷிவர்த்தும் அதை கேட்டுக் கொண்டார்.
மருத்துவர் சொன்னது போலவே மகளுடன் இந்த பத்து நாளும் அதிக நேரத்தை செலவழித்தார். நிறைய பேசினார். ஆனால் மறந்தும் கூட சென்னையில் நடந்ததை பற்றி அவளிடம் அவர் கேட்கவில்லை. ஆனால் ” இனி எவ்வளவு கஷ்டமான சூழ்நிலை வந்தாலும் தற்கொலை செய்துக்கணும்னு மட்டும் உனக்கு தோன கூடாது, சத்தியம் செய்து கொடும்மா,” என்று அவர் கேட்கவும், அவளும் சத்தியம் செய்துக் கொடுத்தாள்.
இப்படியே மகளுடன் பொழுதை கழிப்பது அவர் மனதிற்கும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒருவேளை முன்பே இப்படியெல்லாம் இருந்திருந்தால் மகள் மனதில் இப்படியான சலனங்கள் ஏற்பட்டிருக்காதோ? என்றெல்லாம் கூட யோசித்துப் பார்த்தார். இருந்தும் கூடவே ‘நல்லவேளை இந்த நேரம் ஸ்வராகிணி வீட்டில் இல்லாததே நல்லது. இருந்திருந்தால் இப்படியான மகிழ்ச்சி கிடைத்திருக்குமா?” என்றும் நினைத்துக் கொண்டார்.
அப்படி ஒரு நினைப்பு இருக்கும்போது அவரால் எப்படி நிலைமையை சரி செய்ய முடியும்? அதனால் இந்த பத்து நாள் தான் அவரால் மகளுடன் நேரத்தை செலவழிக்க முடிந்தது. ஸ்வராகிணி வந்ததும் மீண்டும் பழைய நிலை தான்,
ஆனால் மருத்துவரின் ஆலோசனைகள் ரித்துவிடம் சிறிது மாற்றத்தை கொண்டு வந்திருந்தது.
“இந்த வயதில் அந்த பையன் மீது ஏற்பட்டது காதலே இல்லை, அது ஈர்ப்பு. அதை நீ காதலென்று நினைத்து கொண்டாய், ஆனா அவன் உன்னை அப்படி பார்த்திருக்க மாட்டான். நீ சின்னப் பெண்ணாக தான் அவனுக்கு தெரிஞ்சிருப்ப,
நீ குண்டாக இருப்பதால் தான் அவனுக்கு உன்னை பிடிக்கலன்னு நீயாக நினைச்சிருக்க, எல்லாருக்குமே ஒல்லியா இருந்தா தான் பிடிக்கும்னு இல்ல, சிலபேர் குண்டாக இருப்பவங்களையும் விரும்புவாங்க,
அப்படியே நீ குண்டாக இருந்தாலும் உன்னால ஒல்லி ஆக முடியாதா என்ன? ஆனா யாருக்காகவோ உன்னை ஏன் நீ மாத்திக்கணும்னு நினைக்கிற? நீ நீயாகவே இரு. குண்டாக இருப்பது உன் ஆரோக்கியத்திற்கு இடையூறா இருக்கும்னு நினைச்சா ஒல்லி ஆக முயற்சி செய் தப்பேயில்லை.
அப்புறம் இப்போ தான் ஸ்கூல் படிக்கிற, இதுக்குள்ள காதல் கல்யாணம் என்று ஏன் ஒரு சின்ன கூட்டுக்குள்ளேயே அடைஞ்சுக்க விரும்புற. இப்போல்லாம் பொண்ணுங்க எல்லா துறையிலும் சாதனை புரிய ஆரம்பிச்சிட்டாங்க, அப்படி உனக்கென்று ஒரு பாதையை தேர்ந்தெடுத்து சாதிச்சு காட்டு,
அப்போ அந்த பையன் உன்னோட ஞாபகத்தில் கூட இருக்க மாட்டான். அந்த பையனுக்காக நீ செய்ததெல்லாம் உனக்கு அப்போ காமெடியா தெரியும், உனக்கு அந்த பையன் மீது வந்தது காதலே இல்லை, அந்த பையனும் உன்னை காதலிக்கவேயில்லை அதை மனதில் பதிய வைத்துக் கொள். எல்லாமே மாறும்,” என்று கிட்டத்தட்ட தினமும் நிறைய பேசி அவளை மாற்றியிருந்தார்.
அவர் சொன்னது போல், யாஷிடம் எனக்கு உருவானது காதல் இல்லை. யாஷும் என்னை காதலிக்கவில்லை. என்பதை மனதில் பதிய வைத்துக் கொண்டாள். யாஷை மறக்க முயற்சி செய்ததை விட, அவனை ஞாபகப்படுத்திக் கொள்ளாமல் இருக்க முயற்சி செய்தாள்.
அதற்காகவே அடுத்து பண்டிகை, விடுமுறை என்று கலாவதி அழைத்த போதெல்லாம் அவள் போக மறுத்தாள். எங்கே ரித்விகாவை பார்த்தால் யாஷிற்கு அவளை தான் பிடித்தது என்பது ஞாபகம் வருமோ, ரிதன்யாவை பார்த்தால் அவள் யாஷை பற்றி பேசுவாளோ, திரும்ப பாட்டி சென்னைக்கு அழைத்துப் போனாள் அங்கே மீண்டும் யாஷை சந்திக்க வேண்டி வருமோ, இப்படியெல்லாம் யோசித்து பயந்தவள், பள்ளிப்படிப்பை முடிக்கும் வரையிலும் பூனாவை விட்டு எங்கேயும் போகவில்லை. எவ்வளவோ கூப்பிட்டு பார்த்துவிட்டு கலாவதி தான் அவளை வந்து பார்க்கும்படி ஆகிற்று.
வீடு விட்டால் பள்ளி என்று இரண்டு இடத்தை தவிர எங்கும் செல்லாதவள் பள்ளிப் படிப்பு முடிந்ததும் நேராக தந்தையின் முன் நின்றவள், “பப்பா நான் வெளிநாட்டில் போய் படிக்க நினைக்கிறேன்.” என்று கூறினாள்.
ரிஷிவர்த்திற்கும் அதுதான் சரியாகப்பட்டது. மகளுக்கு இது ஒரு மாற்றமாக இருக்குமென்று நினைத்தார். உடனே அவள் ஆஸ்திரேலியாவில் சென்று படிப்பதற்கான வேலையில் இறங்கினார்.
பூனாவில் தனக்கு தெரிந்த தமிழ் குடும்பத்தின் உறவினர்கள் அங்கிருக்க, அவர்கள் வீட்டில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்து அவளை ஆஸ்திரிலேயாவிற்கு அனுப்பி வைத்தார்.
வெளிநாட்டில் இருந்த இந்த ஐந்து வருடத்தில் அவளும் நடந்ததை முற்றிலும் மறந்து வாழ பழகிக் கொண்டாள். மருத்துவர் சொன்னது போல் தன் ஆரோக்கியத்திற்காக என்று உணவு முறையில் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்று இளைத்து உடலை ஒல்லியாக வைத்துக் கொண்டாள்.
படிப்பை முடித்த பின்பும் அவளுக்கு இந்தியாவிற்கு வருவதற்கு சுத்தமாக விருப்பமில்லை. கலாவதியை தவிர அவள் வரவை இங்கு யார் எதிர்பார்த்து இருக்கிறார்கள். அவ்வப்போது கலாவதியுடன் வீடியோ கால் போட்டு பேசிவிடுவதால், ஆஸ்திரிலேயாவிலேயே ஒரு வேலையை தேடிக் கொண்டு அங்கேயே இருந்திட வேண்டுமென்பது தான் அவளது எண்ணமாக இருந்தது.
ஆனால் கலாவதி உயிருக்கு போராடிக் கொண்டு மருத்துவமனையில் இருக்கிறார் என்ற செய்தி தான் அவளை இந்தியாவிற்கு வரவைத்தது.
உண்மையிலேயே கலாவதியின் உடல்நிலை மோசமானது ரித்துவை குறித்து தான், படிக்கவென சென்றவள், “எனக்கு இங்கேயே செட்டில் ஆகிட தோனுது தாதி. என்னை இந்தியாக்கு கூப்பிடாதீங்க,” என்று ஒருமுறை சொல்லியிருந்தாள்.
“இந்த தாதிக்காக கூட வர மாட்டீயா?” என்று அவர் கேட்க,
“நீங்க இங்க என்னோட வந்திடுங்க தாதி. நான் உங்களை சூப்பரா பார்த்துப்பேன்.” என்று கூறினாள்.
அதை சிரிப்போடு கேட்டுக் கொண்டவரோ மனதில் யோசித்துக் கொண்டிருந்தார். பேத்தி இப்படி சொல்வதிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது. போனவள் போகட்டும் என்று பெற்றவர்கள் இருவரும் அதைப்பற்றிய துளி கூட கவலையில்லாமல் இருக்கிறார்களே, மகனாவது தொழிலில் மூழ்கிப் போயிருக்கிறான் சரி. ஆனால் மருமகளும் மகளைப் பற்றிய கவலையில்லாமல் இருப்பது அவருக்கு பெருத்த சந்தேகத்தை வரவைத்தது.
ஆரம்பத்தில் ஸ்வராகிணியின் ஒதுக்கத்தை அவரது இயல்பு என்று நினைத்தார். ஆனாலும் இப்போது அப்படி நினைக்க முடியவில்லை. மகள் மீது ஒட்டுதல் இல்லாமல் ஸ்வராகிணி இருப்பது அவருக்கு சந்தேகத்தை வரவழைத்தது.
உடனே மகனை அழைத்து பேசவும், ஏற்கனவே குற்ற உணர்வில் இருக்கும் ரிஷிவர்த் அன்னையிடம் நடந்ததை மறைக்காமல் கூறிவிட்டார். அதைக்கேட்டு கலாவதி எப்படி உணர்ந்தார் என்று அவருக்கே தெரியவில்லை.
முதலானால் செயற்கை முறை கருத்தரிப்பு பற்றி அவரிடம் கூறியிருந்தால் என்னவென்றே புரிந்திருக்காது. வாடகைத்தாய் பற்றி கூறியிருந்தால் கண்டிப்பாக மறுத்திருப்பார். ஆனால் இப்போது திரைப்படங்களிலும் நாடகங்களிலும் அதைக் காட்டுவதால் அவருக்கும் அதைப்பற்றி தெரிந்திருந்தது.
ஆனால் ரித்துவின் பிறப்பு பற்றி தெரிந்த போது மகன் மீது அவருக்கு கோபம் தான் வந்தது. “நான் தான் அப்போ முட்டாள்த்தனமா உன்னை ரெண்டாவது கல்யாணம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தினேன்னா, நீ முடியாதுன்னு உறுதியா இருந்திருக்கலாமே, என்னை சமாதானப்படுத்த இப்படி ஒரு காரியம் செய்து, என் பேத்திக்கு அநியாயம் செய்துட்டியேடா? இத்தனை நாள் வரை அம்மா ஏன் இப்படி இருக்காங்கன்னு மனசளவில் கேட்டுட்டு இருந்திருப்பா, இப்போ ஸ்வரா தன்னோட அம்மாவே இல்லன்னு தெரிஞ்சா எப்படி தாங்கிப்பாளோ? அய்யோ தெரிஞ்சோ தெரியாமலோ என்னோட பேத்தியோட நிலைமைக்கு நானே காரணம் ஆயிட்டேனே, இதை எப்படி நான் சரி செய்ய போறேன். என்னோட முகத்தில் கூட முழிக்காதடா,” என்று மகனிடம் கோபமாக கூறி ரிஷிவர்த்தை வெளியே அனுப்பினார்.
அதிலிருந்து பேத்தியை பற்றிய கவலை தான் அவரை வாட்டியது. தன் காலத்திற்கு பின் பேத்தியின் நிலைமை என்ன என்ற கேள்வி பெரிதாக தெரிந்தது. மகனும் மருமகளும் அவளை விட்டுவிடுவார்களோ? என்ற பயம் பிறந்தது. ஏற்கனவே சொத்துக்களை பிரித்து உயில் எழுதி வைத்திருந்தார். அதில் ரிஷிவர்த்திற்கு சேர வேண்டிய சொத்துக்களில் சிலதை ரிதுபர்ணாவின் பேரில் மாற்றி எழுதியவர், அதில் அவள் திருமணத்திற்கு பிறகு தான் உரிமை கோர முடியும் என்பது போல் சொல்லியிருந்தார். விரைவில் ஒரு நல்ல வரனாக பார்த்து பேத்திக்கு திருமணம் முடிக்க வேண்டுமென்று நினைத்தார்.
ஆனால் அதற்குள் அவருக்கு உடல்நிலை கவலைக்கிடமாக ஆகிவிட்டது. பேத்திக்கு நன்மை செய்வதாக நினைத்து செய்த காரியம் அவளுக்கு வினையாக முடியப்போவதை அவர் அறியவில்லை. இப்போதோ அப்போதோ என்றிருந்தவர், ரித்து வந்து அவரை பார்த்தப்பின்பு தான் உயிர் துறந்தார்.
அவர் மறைவுக்குப் பின் உயில் பற்றி பிள்ளைகளுக்கு தெரிய வந்தபோது, ஏன் ரிதுபர்ணாவிற்கு மட்டும் இப்போதே சொத்து சேரும்படி தன் அன்னை எழுதினார். ரிஷிவர்த்தின் ஒரே வாரிசு தானே அவள், அவரின் காலத்திற்குப் பின் அனைத்தும் அவளுக்கு தானே போகும், பிறகேன் இப்படி? என்ற கேள்வி அனைவருக்கும் தோன்றியது.
ஆனால் அதற்கு விடை தெரிந்த ரிஷிவர்த்தோ மௌனமாக இருந்தார். அவரவருக்கு சேர வேண்டிய சொத்துக்கள் சரியாக அவர்களுக்கு சேர்ந்ததால், தன் அன்னை ஏதாவது காரணத்தோடு தான் செய்திருப்பார் என்று அமைதியாகிவிட்டனர்.
ஸ்வராகிணிக்கோ இந்த சொத்து விஷயத்தை தெரிந்து ஆத்திரத்தில் இருந்தார். கலாவதி இப்படி ஒரு உயில் எழுதியிருக்கிறார் என்றால், அவருக்கு உண்மை தெரிந்து விட்டது என்பதை புரிந்துக் கொண்டார். அன்னையிடம் மறைக்காமல் அனைத்தையும் கூறிவிடும் ரிஷிவர்த் மீது கோபம் வந்தது.
அவரால் ரித்துவிடம் இயல்பாக ஒன்ற முடியவில்லை தான், ஆனால் அவளை தங்கள் வாழ்க்கையிலிருந்து விலக்க வேண்டுமென்று அவர் இதுவரையில் நினைத்ததில்லை. என்ன இருந்தாலும் தனக்கு கிடைக்க இருந்த மலடி என்ற பட்டத்தை கிடைக்க பெறாமல் செய்தது ரித்து தானே, அந்த ஒருவிஷயத்தை எப்போதும் நினைத்துப் பார்த்து கொள்வார்.
இப்போதோ என்ன இருந்தாலும் ரிதுபர்ணா அவர்களின் வாரிசு என்பதை உணர்த்துவது போல் இப்படி கலாவதி சொத்து எழுதி வைத்துவிட்டார் என்பது போல் நினைத்துக் கொண்ட ஸ்வராகிணிக்கு சிறிதாக ரிதுபர்ணா மீது வெறுப்பு உருவானது.
அதிலும் அன்னை மறைவிற்கு பின் தன் உறுத்தல் அதிகமாகி ரிஷிவர்த் மகளிடம் அதிக அக்கறை காட்டினார். “நீ திரும்ப ஆஸ்திரிலேயாவிற்கெல்லாம் போக வேண்டா ம்மா, இங்கேயே நம்ம ஆஃபிஸ் பொறுப்பை ஏத்துக்கோ,” என்று ரித்துவிடம் கூற,
அவளுக்கு இந்த உயில் பற்றியெல்லாம் இதுவரை ஒன்றும் தெரியாததால், தனக்கென ஆதரவாக இருந்த பாட்டியும் இப்போது இல்லாததை ஏற்றுக் கொள்ளவே அவளால் முடியவில்லை. இனி இங்கேயே இருக்கலாமா? இல்லை ஆஸ்திரிலேயாவிற்கே செல்லலாமா? என்று ஏற்கனவே யோசனையில் இருந்தவள்,
“நான் யோசிச்சு சொல்றேன், டைம் கொடுங்க பப்பா,” என்று ரிஷிவர்த்திடம் கூறினாள்.
ரிஷிவர்த்தின் மாற்றம் ஸ்வராகிணிக்கு இன்னும் கோபத்தை வரவழைத்து அது ரித்துவின் மீது வன்மமாக மாறிக் கொண்டிருந்தது.
படிப்பும் முடிந்துவிட்டதால், வீட்டிலேயே இருப்பது கஷ்டமாக இருந்ததால், ஏற்கனவே பள்ளிக் காலத்திலேயே தையல் வேலை குறித்த சில சிறப்பு பயிற்சி வகுப்புகளில் அவளுக்கு கொஞ்சம் பயிற்சி இருந்ததால் அதை முழுதாக கற்றுக் கொள்ள என்று சில வகுப்புகளுக்கு சென்றாள். இப்படியே இரண்டு மாதங்கள் கழிய, அலுவலக சம்பந்தமாக ரிஷ்வர்த் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்திருக்க, அதில் ரித்துவும் கலந்துக் கொண்டாள். அந்த பார்ட்டிக்கு சுதன் லாலும் வந்திருந்தான். அவன் ரிஷிவர்த்தோடு வியாபாரத்தில் இணைந்திருப்பவன். வயது நாற்பதுக்கு மேலாகியும் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. ஆனால் திருமணத்திற்கு அவசியமே இல்லை என்பது போல் எல்லாமே ஆண்டு அனுபவித்து விட்டான். அவனிடம் இல்லாத கெட்டப் பழக்கங்களே இல்லை. அப்படிப்பட்டவன் பார்வையில் ரிதுபர்ணா விழுந்தாள்.
அவள் அழகு மட்டுமில்லாமல், ரிஷிவர்த்தின் ஒரே வாரிசு என்பதும் அவனை ஈர்த்ததால் அவன் அவளை திருமணம் செய்துக் கொள்ள நினைத்தான். அதுபற்றி ரிஷிவர்த்திடம் பேசினால் அவர் ஒத்துக் கொள்ள மாட்டார் என்பதால், அவன் ஸ்வராகிணியிடம் பேசினான். ஸ்வராகிணிக்கும் சுதன் லால் பற்றி ஓரளவிற்கு தெரியும், ஆனாலும் ரித்துவை தங்கள் வாழ்விலிருந்து அகற்ற அவருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகப்பட்டது.
அவளை திருமணம் செய்துக் கொள்ள வேண்டுமென்றால் திருமணத்திற்கு பிறகு ரித்துவிற்கு சேரும் சொத்தை தன் பெயரில் மாற்றிக் கொடுத்தால் ரித்துவை திருமணம் செய்துக் கொடுப்பதாக சுதன்லாலிடம் ஒப்பந்தம் பேசினார்.
வாரிசு இல்லையென்றாலும் பரவாயில்லை. சொத்தை யாராவது அனுபவிக்கட்டும் என்று ஒரு காலத்தில் நினைத்தவரா அவர்? என்று தான் இப்போது நினைக்க தோன்றியது. பிறந்ததிலிருந்தே வசதியை பார்த்தவர் தான், அவருக்கு இப்போதும் பணம் பெரிதாக தெரிவதில்லை. ஆனாலும் கலாவதி அவரை நம்பாமல் செய்த ஒரு காரியம் அவரை இப்படி மாற்றியது.
ஏற்கனவே இவர்களின் ஒரே வாரிசு என்பதால் தான் சுதன்லால் ரிதுபர்ணாவை திருமணம் செய்துக் கொள்ளவே நினைத்தான். இப்போது அவள் பேரிலேயே சொத்து இருப்பதை அறியும்போது அவளை திருமணம் செய்தால் கிடைக்கும் சொத்தை எப்படி தூக்கி கொடுத்துவிடுவான். ஆனால் இப்போது ஸ்வராகிணியின் ஒப்பந்தத்திற்கு சம்மதிப்பது போல் நடித்தான்.
சுதன்லாலுக்கு ரிதுபர்ணாவை திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று மனைவி சொன்னதை கேட்ட ரிஷிவர்த் கொதித்தார். “என்ன பேசற ஸ்வரா, போயும் போயும் சுதன்லாலுக்கு சோட்டீயை கல்யாணம் செய்துக் கொடுக்கணும்னு சொல்ற, அவன் எப்படிப்பட்டவன்னு உனக்கு தெரியுமில்ல, அப்படியிருந்தும் எப்படி இப்படி உன்னால் இப்படி நினைக்க முடியுது.
நீ அவளை விட்டு விலகியிருந்தப்ப உன்னை நான் கட்டாயப்படுத்தினது இல்லையே, இப்போதும் அப்படியே இருக்க வேண்டியது தானே,” என்று அவர் கோபமாக பேச,
“ஓ அவ மேல உனக்கு என்ன உரிமை இருக்கு, அவளை என்ன நீயா பெத்த, அவ என்னோட வாரிசு, நீ அவ விஷயத்தில் தலையிடாதன்னு சொல்ல வரீங்க, அப்படித்தானே?” என்று ஸ்வராகிணி கண்களில் கண்ணீரோடு கேட்க,
இந்த வார்த்தையும் அதனோடு வரும் இந்த கண்ணீரும் தான் எப்போதும் அவரை பலவீனமாக்கி மௌனமாகவும் செய்துவிடுகிறது.
“நான் அப்படி சொல்லல ஸ்வரா, நம்ம சோட்டீக்கு 22 வயசு தான் ஆகுது, சுதன் லாலுக்கோ 42 இல்ல 43 இருக்கும், அவனுக்கு நம்ம பொண்ணை கல்யாணம் செய்துக் கொடுத்தா, மத்தவங்கல்லாம் என்ன நினைப்பாங்க, ஏற்கனவே அம்மா இப்போதே அவளுக்கு சொத்து எழுதி வச்சதை எதுக்குன்னு கேள்விக் கேட்கிறாங்க, என் தம்பிங்க மாப்பிள்ளை ஏன் அவங்க பசங்களுக்கு கூட சுதன் லாலைப் பற்றி தெரியும், அப்படியிருக்க இப்படி ஒருவனுக்கு சோட்டீயை கல்யாணம் செய்து வைத்தால் அம்மாக்கு சந்தேகம் வந்தது போல அவங்களுக்கும் சந்தேகம் வராதா? சோட்டீக்கு கல்யாணம் செய்யணும்னு நினைச்சா அவளுக்கேத்த ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் முடிப்போமே?” என்று அவர் பொறுமையாக எடுத்துரைக்க,
வேறு ஒருவரை திருமணம் செய்தால் சொத்து ரித்துவிற்கு போய்விடுமே என்று நினைத்த ஸ்வராகிணி, “உங்கப் பொண்ணுக்கு,” என்று அதில் அழுத்தம் வைத்து கூறியவர், “எப்படி கல்யாணம் செய்யணுமோ செய்ங்க, ஆனா அதோட இந்த ஸ்வராகிணியை மறந்துடுங்க, எனக்குன்னு நீங்க மட்டும் தான்னு நான் நினைச்சேன். ஆனா உங்களுக்கு உங்க பொண்ணு தான் முக்கியம்னு காமிச்சிட்டீங்கல்ல,” என்று உருக்கமாக பேசினார். கிட்டத்தட்ட அவரை மிரட்டினார்.
“அய்யோ ஏன் ஸ்வரா இப்படியெல்லாம் பேசற?” என்று ரிஷிவர்த் என்ன செய்வதென்று புரியாமல் கூற,
“நான் என்னமோ சோட்டீக்கு கெடுதல் செய்வது போல பேசறீங்க, சுதன்லாலுக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்லி தான் பொண்ணு கேட்டான். அந்த அளவுக்கு காதலிக்கிறான். அப்போ அவளை நல்லா பார்த்துக்க மாட்டானா? அதை கூட உங்களால புரிஞ்சுக்க முடியலன்னா, நீங்களாச்சு, உங்க பொண்ணச்சு, என்னை விட்டுடுங்க, நான் போறேன், ஒரேடியா போறேன்,” என்று மீண்டும் உருக்கமாக பேச, ரிஷிவர்த் அவரது முடிவிற்கு தலையசைப்பதை தவிர வேறு வழியில்லாமல் போனது.
ஸ்வராகிணியே ரித்துவிடம் திருமணத்தை பற்றி பேசினார். திருமணம் என்ற வார்த்தை அவள் மனதை ஏதோ செய்தது. என்னவோ பிடித்தமில்லாத ஒரு உணர்வு. “எனக்கெதுக்கு இப்போ கல்யாணம், நான் பப்பாவோட ஆஃபீஸ்க்கு போலாம்னு முடிவு செய்திருக்கேன் மா,” என்று அவள் சொல்ல, ஸ்வராகிணிக்கு ஏனோ அவளின் முடிவு பிடிக்காமல் போனது. ஒருவேளை ஆஸ்திரிலேயாவிற்கே செல்வதாக அவள் கூறியிருந்தால் கூட அவரது வன்மம் கொஞ்சம் குறைந்திருக்குமோ என்னவோ, இப்போதோ அவளுக்கான உரிமையை அவள் எடுத்துக் கொள்வது அவருக்கு பிடிக்காததால்,
“இது கல்யாணம் செய்ற வயசு தானே, கல்யாணம் எல்லாம் பேசி முடிச்சாச்சு, இன்னும் ஒருவாரத்தில் கல்யாணம், நாம இன்னைக்கே சென்னைக்கு போகணும்,” என்று அவரது உறுதியாக கூற, அவளோ அவரது பேச்சில் அதிர்ந்தாள்.
திருமணம் என்ற போது கூட அவளுக்கு என்ன ஆனது? என்று அவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் சென்னைக்கு போக வேண்டுமென்றதுமே அவளது கண் முன் யாஷ் தான் வந்து சென்றான். இத்தனை வருடத்தில் அவனை மறந்ததாக நினைத்திருக்க இப்போது அவன் முகம் கண் முன் வந்து போனதே ஒரு அதிர்ச்சி என்றால்,
இவளிடம் மாப்பிள்ளை பிடித்திருக்கிறதா? என்று கூட கேட்காமல் திருமணத்தை முடிவு செய்ததாக சொன்ன அன்னையின் வார்த்தை இன்னுமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் கொஞ்சம் பொறுமையாக சிந்தித்ததில் தன் அன்னை தனக்காக செய்யும் முதல் விஷயம் என்பதால் திருமணத்தை ஏற்றுக் கொள்ளும் முடிவிற்கு வந்தாள். உடன் வந்த யாஷின் நினைவுகளை அகற்றுவது அவளுக்கு பெரும்பாடாக இருந்தது.
சென்னைக்கு செல்வதற்காக தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். மீண்டும் இந்த வீட்டிற்கு வருவோமா என்று தெரியவில்லை. ஆனால் இங்கிருந்து செல்வதிலும் அவளுக்கு பெரிய வருத்தம் இல்லை.
ஆதார் கார்ட், பாஸ்போர்ட், இன்னும் தேவையானதை கைப்பையில் எடுத்து வைத்துக் கொண்டவள், வேறெதும் எடுக்க வேண்டுமா? என்று ஆராய்ந்துக் கொண்டிருந்த போது தான் அந்த வெள்ளை காகிதம் கீழே விழுந்தது. அது என்னவென்று பார்க்க அவசியமில்லை. யாஷ் கொடுத்த கடிதம் தான், அப்போது அதை கிழித்து போடவும் மனது வரவில்லை. அதை பார்த்தாலும் யாஷ் ஞாபகம் வருமென்று அப்போது துணிகளுக்கு நடுவில் மறைத்து வைத்திருந்தாள்.
இப்போது அதை இங்கு விட்டு போகவும் மனமில்லை. திருமணம் நிச்சயம் ஆனதில் அதை கையோடு கொண்டு போவதும் தவறு. ஆனால் இன்னமும் அதை கிழித்து போட மனமில்லாமல் அந்தநேரம் அதை கைப்பையில் வைத்துக் கொண்டாள்.
சென்னைக்கு போய் சேர்ந்ததும் மாப்பிள்ளை வீட்டினர் இவர்களை பார்க்க வர, உடன் வந்த மாப்பிள்ளை சுதன்லாலை பார்த்து உச்சக்கட்ட அதிர்ச்சியானாள். பார்ட்டியில் அவளை துகிலுரிப்பதை போல் பார்த்ததே அவளுக்கு அருவருப்பாக இருந்தது. இதில் அவனது தோற்றத்திலேயே முதிர்ச்சி தெரிய, கண்டிப்பாக தன்னைவிட அதிக வயதுடையவனாக இருப்பான் என்பது உறுதி. அப்படியிருக்க இவனையா தனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்கள் தன் பெற்றோர்கள் என்று நினைக்கும்போதே, எப்போதும் மனதில் தோன்றும் அந்த கேள்வி இப்போதும் தோன்றியது. நான் இவர்களது மகள் இல்லையோ?
அதற்காக இப்படி ஒரு பாழுங்கிணற்றில் விழ முடியாது என்று முடிவெடுத்தவள், ஸ்வராகிணியிடம் விஷயத்தை கூற, “பேசி முடித்த திருமணத்தை நிறுத்த முடியாது. நீ இந்த திருமணத்தை செய்து கொள்ள தான் வேண்டுமென்று கட்டாயப்படுத்தினார். உடனிருந்த தந்தையை பார்க்க, அவர் தலைகுனிந்ததிலிருந்தே அன்னையை மீறி எதுவும் செய்யமாட்டார் என்பது தெளிவாக புரிந்தது.
பேசாமல் சுதன்லாலிடம் சென்று தன் விருப்பத்தை அவள் சொல்ல, அவனோ விகாரமாக சிரித்தான். ” உன்னை கல்யாணம் செய்துக்க இவ்வளவு ஏற்பாடு செய்தவன், உன்னை அவ்வளவு ஈஸியா விட்டுவிடுவேனா? நீயே நினைத்தால் கூட உன்னை விடமாட்டேன். இந்த திருமணம் கண்டிப்பாக நடக்குமென்று அவளை மிரட்டினான்.
என்னத்தான் இப்போது அவள் கொஞ்சம் மாறியிருந்தாலும் இயல்பிலேயே பயந்த சுபாவம் கொண்டவள் சுதன்லாலின் மிரட்டலில் பயந்து போனாள். என்ன செய்வது என்று புரியாமல் அவள் இரவில் உறங்காமல் யோசித்தப்படி இருக்க, ரிஷிவர்த் அவளை காண வந்தார்.
“எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல சோட்டீ, ஸ்வரா இப்படி ஒரு முடிவெடுப்பான்னு நான் நினைக்கல, என்னைக்குமே அவ விருப்பத்துக்கு எதிர் நான் எதுவும் செய்ததில்லை. ஆனா ஒரு விஷயத்தில் மட்டும் அவளுக்கு எதிரா நான் நடந்துக்கிட்டேன். அதனால தான் இப்போ அவள் எது செய்தாலும் அவளை எதிர்த்து என்னால் பேச முடிவதில்லை. அதனால உன்னோட வாழ்க்கை பாதிக்கப்படுவதை நினைத்தா தான் எனக்கு கஷ்டமா இருக்கு,” என்று அவர் பேச,
அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை, “எனக்கு ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க பப்பா, நான் உங்களோட மகள் கிடையாதா?” என்று இத்தனை நாள் கேட்க நினைத்து கேட்காமல் விட்டதை இப்போது அவள் கேட்க,
“நீ என்னோட மகள் தான்ம்மா, அதில் எந்த சந்தேகமும் வேண்டாம், ஆனால் அதில் தான் இப்போது பிரச்சனையே, நீ எனக்கு மட்டும் தான் மகள். ஸ்வராகிணி உன் அன்னை கிடையாது.” என்று அவர் கூறவும், அவள் புரியாமல் பார்க்க,
“நீ ஒரு வாடகை தாய் மூலமாக பிறந்த குழந்தை ம்மா,” என்ற உண்மையை சொல்லிவிட,
அவள் ஸ்வராகிணி வயிற்றில் பிறக்கவில்லை என்ற போதே ஏதேதோ கற்பனை செய்துக் கொண்டவளுக்கு இப்படி ஒரு விஷயம் இருக்கும் என்று தெரிந்ததுமே அதிர்ச்சி. அவளால் நம்பவே முடியவில்லை. இதில் அப்போதைய கலாவதியின் முடிவிலிருந்து இப்போது அவள் பெயரில் சொத்து எழுதி வைத்தது வரை ரிஷிவர்த் சொல்லி முடிக்க அவள் அவளாகவே இல்லை.
அந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவருவதற்குள் திருமண சடங்குகள் ஒவ்வொன்றாக நடக்க, அவளோ தனக்குள்ளேயே இறுகிப் போனாள். ஆனால் திருமணம் நெருங்க நெருங்க அவள் மனதில் அச்சம் சூழ்ந்தது. இதிலிருந்து தப்பிக்க நினைத்தாலோ சுதன்லால் அடியாட்கள் மூலம் அவளையும் அவள் பெற்றோரையும் கவனித்துக் கொண்டே இருந்தான்.
அழகு நிலையத்திற்கும் அடியாட்கள் துணையோடு தான் அவள் சென்றாள். ஆனால் மனம் முழுக்க நடக்கப்போகும் திருமணத்தை பற்றிய பயம் தான், அந்த கவலையில் இருந்தவளுக்கு முக்தாவின் ஆடை மற்றும் அணிகலன்களை அணிவித்த போது கூட அதை கவனிக்காமல் அமர்ந்திருந்தாள்.
இங்கிருந்து சென்றதும் அடுத்து திருமணம் தான் என்ற போதுதான் அவள் தந்தைக்கு கொடுத்திருந்த வாக்கையும் மீறி தற்கொலை செய்துக் கொள்ளலாமா? என்று நினைக்க, அப்போது கிஷன் வந்தார். அடுத்து நடந்ததெல்லாம் அவள் கனவிலும் நினைத்துப் பார்க்காதது.
இப்போதுமே யாஷை அவள் காதலித்தாளா? இல்லை மருத்துவர் சொன்னது போல் அது ஈர்ப்பா? இல்லை அந்த வயதுக்குரிய சலனமா? எதுவென்று தெரியவில்லை. ஆனால் யாஷ் அவள் மனதை அவன் அறியாமலேயே கீறிச் சென்றிருந்தான். அந்த காயம் இப்போது முற்றிலும் ஆறிவிட்டாலும் அந்த வடு இன்னமும் மறையாமல் தான் இருக்கிறது.
யாஷை மறக்க நினைத்தவள் அதற்குப்பிறகு அவனை திருமணம் செய்துக் கொள்ள நினைத்ததில்லை. ஆனால் அதுவும் தானாகவே நடந்துவிட்டது. எனினும் முன்பு நடந்ததெல்லாம் மனதில் வடுவாக இருக்க, அப்படி ஒன்றுமே நடக்காதது போல், “யாஷ், நான் தான் சோட்டீ, சுஷாந்தோட கசின், சென்னையில் சந்திச்சோமே ஞாபகம் இருக்கா?” என்று சாதாரணமாக எப்படி அவனிடம் கேட்க முடியும்? அதிலும் அவளை சுத்தமாக அவனுக்கு ஞாபகமில்லை என்று தான் முதலில் நினைத்தாள்.
ஆனால் விமான நிலையத்தில் அந்த குழந்தையிடம் பேசியதை வைத்து தான் அவனுக்கு இன்னும் தன்னை நினைவில் உள்ளது என்று மகிழ்ந்தாள். ஆனாலும் அவனிடம் நடந்ததையெல்லாம் மறந்து மறைத்து பேச அவளால் முடியவில்லை.
இறுதி வரைக்குமே யாஷ் குறித்து தன் மனதில் தோன்றிய உணர்வுகள் அவனுக்கு தெரியக் கூடாது என்று நினைத்தாள். அவனுக்காக தற்கொலை வரை போனதெல்லாம் அவன் அறியவே கூடாது.
கிஷனிடம் கூட சுஷாந்தின் மாமன் மகள் என்று மட்டும் தான் சொல்லியிருந்தாள். சென்னையில் பார்த்துக் கொண்டார்கள் என்பது மட்டும் தான் அவருக்கு தெரியும், ஆனாலும் யாஷ்க்காக யோசித்து அவனை திருமணம் செய்ய துணிந்ததை பார்த்த போது அவளுக்கு யாஷ் மீது விருப்பம் இருக்கலாம் என்று யூகித்து தான் நடந்த திருமணத்தை அவர் ஏற்றுக் கொண்டார்.
அதனால் யாஷ் குறித்த அவளின் மன உணர்வுகள் ரிதன்யாவையும் சேர்த்து யாருக்கும் தெரியாது. அது தெரிந்த ஒரே நபர் மருத்துவர் தான், அவர் இப்போது எங்கிருக்கிறார் என்பது தெரியாது. அதனால் யாஷிற்கு இந்த விஷயம் தெரியாமலே போகட்டுமென்று நினைத்தவள்,
சுஷாந்திடம் யாஷ் பேசினால் கண்டிப்பாக அவள் தான் சோட்டீ என்று அறிந்துக் கொள்வான். அப்போது அவன் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் கூறுவது? என்பதை தான் யோசித்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு தெரியாத விஷயம் ஒன்று, மருத்துவருக்கு மட்டுமே தெரியும் என்று நினைத்த விஷயம் அவளது தந்தை ரிஷிவர்த்திற்கும் தெரியும், அதேபோல் அவள் தான் சோட்டீ என்று யாஷ் அறிந்துக் கொண்ட பின், அவளிடம் வந்து ஏன் சொல்ல மறுத்தாய்? என்ற கேள்வியை கேட்கும் சூழ்நிலை வரவே வராது. அவனாகவே தெரிந்துக் கொள்வான்.
தேனன்பு தித்திக்கும்..