Nenjil Therikuthu Panithuli -9

அத்தியாயம் -9

கார்த்திக்கிற்கு அதிர்ச்சியில் வார்த்தைகள் வரவில்லையென்றால் மதுவிற்கு தமையனை வருத்தப்படுத்திவிட்டோமே என்ற கவலையில் மௌனத்தில் முக்குளித்தாள்.

எவ்வளவு நேரம் தான் அமைதியாக இருக்க முடியும், தான் உருவாக்கிய மௌனத்தை அவளே உடைத்தாள். 

“ஐ ம் சாரிண்ணா, நான் செய்தது தப்பு தான். ஆனால் அந்த நேரத்தில் உங்க எல்லோரிடமும் உண்மையை சொல்ல துளியளவு கூட தைரியமில்லை. அதுமட்டுமில்லை ஏற்கனவே ஈஷா அம்மாவையும், அப்பாவையும் தேவையில்லாமல் கரிச்சி கொட்டுவா. என்னையும் அடிக்கடி சீண்டி வெறுப்பேத்துவா. நான் இந்த மாதிரி நிலைமையில் வந்து நின்று உங்களையும், அப்பா, அம்மாவையும் அவள் முன் தலைகுனிய வைக்க என் மனசாட்சி இடம் கொடுக்கலை. அதனால் தான் ஆண்ட்ருவின் தங்கை சொன்ன யோசனைக்கு உட்பட்டேன். 

ஆண்ட்ருவுக்கு ஹெல்ப் செய்ய தான் அவர் தங்கை சூசான் அங்கு வந்தாள், அவங்களால் எப்படி மாத கணக்கில் ஆஸ்திரேலியாவில் தங்கி என்னை கவனித்துக்கொள்ள முடியும். அதனால் என்னை இந்தியாவுக்கு அழைத்து வந்து ஒரு தனி வீட்டில் தங்க வைத்து பிரசவம் பார்த்தார்கள். என் உடல் நிலை தேறும் வரை என்னுடனேயே இருந்து என்னை சரி செய்த பிறகு நம் வீட்டிற்கு அனுப்பி வைச்சாங்க.  

அந்த நேரத்தில் தான் அப்பா உங்களுக்கு திருமணம் செய்ய பேசிட்டிருந்தார். எல்லா உண்மைகளையும் சொல்ல இது சரியான நேரமில்லை, திருமணம் முடிந்த பிறகு சொல்லிக்கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் திருமணமான ஒரே வாரத்தில் நீ அண்ணியிடம் ரொம்ப கஷ்டப்பட்டே. உனக்கு ஞாபகம் இருக்காண்ணா, ஒரு நாள் நீ என்னிடம் ஏதோ சொல்லி தலையை அன்பாக வருடினாயே, அதை பார்த்திட்டு அண்ணி உன்னை வறுத்தெடுத்தாங்களே …”

மன வருத்தத்துடன் தங்கை சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தவன் அவள் சொன்ன சம்பவம் நினைவு வர அவனின் உடல் பயத்தில் சிலிர்த்தது. 

‘ச்சே தங்கையிடம் பேசியதை கூட இவ்வளவு அருவருக்கத்தனமா பேச முடியுமா என்று அன்றய சம்பவத்தின் பிறகு பலமுறை நினைத்திருக்கிறான். தங்கை சொல்ல சொல்ல அவள் உண்மையை சொல்ல முடியாமல் தடுத்தது தன் திருமணமும், அதை தொடர்ந்து வந்த பிரச்சினைகளும் தான் காரணம் என்று புரிய தன்னையே நொந்துக்கொண்டான். தானிருந்த மனநிலையில் தங்கையின் கவலைகளையும், பயத்தையும் அறிந்துக்கொள்ளாமல் போய்விட்டேனே…

வெறுமே ஹ்ம்ம் கொட்டினான் கையாலாகாத தனத்துடன். 

“அதன் பிறகு உங்களின் மணமுறிவு, நீங்க ஒரு பக்கம் வாழ்க்கையே வெறுத்து அரை உயிரா இருந்தீங்க, அம்மாவும், அப்பாவும் குற்ற உணர்ச்சியில் தத்தளிச்சிட்டிருந்தாங்க. இதையெல்லாம் பார்த்த பிறகு என்னால் எப்படிண்ணா என்னை பற்றிய உண்மைகளை உங்களிடம் சொல்ல முடியும் ? அதனால் தான் என் மனதிலிருந்த உண்மைகளை எனக்குளேயே புதைச்சிக்கிட்டேன். அதன் பிறகு நீங்களும் எனக்கு திருமண ஏற்பாடு செய்தீங்க, நான் வேண்டாம்னு சொன்னால் உங்க மனது கஷ்டப்படும்ன்னு உங்க ஆசைக்கு சம்மதித்தேன்…”

“ஒரு நிமிஷம் மது…”என்று இடையிட தங்கை பேச்சை நிறுத்தி, தமையனை கேள்வியாக நோக்கினாள்.

“எங்க ஆசைக்கு நீ திருமணத்திற்கு சம்மதிக்கலாம், ஆனால் மாப்பிள்ளை … ? என்றவனுக்கு எப்படி சொல்வதென்ற தயக்கம் மேலிட்டது.

தமையனின் தயக்கம் புரிந்து, கசப்பாக புன்னகைத்தாள்.

“ராஜீவ்க்கு அதான் உங்க மாப்பிள்ளைக்கு தெரியும்ண்ணா, பெண் பார்க்க வந்த அன்று தனியாக பேச அனுப்பினீங்களே, அன்றே நான் எல்லா உண்மைகளை சொல்லி இந்த திருமணத்தை நிறுத்த சொல்லி கேட்டுக்கிட்டேன். ஆனால் அவரோ இந்த காலத்தில் இதெல்லாம் சகஜம், மறைக்காமல் உண்மையை சொன்னதற்காகவே என்னை அவருக்கு பிடிச்சி போச்சாம். ரொம்ப ப்ராட் மைண்டட், இதுவரை ஒரு நாள் கூட அவர் சொல்லி காட்டியதில்லை. அவ்வளவு ஏன் என் குழந்தையை தேடி அழைச்சிட்டு வர சொல்லி அனுப்பியதே அவர் தான். அவர் சப்போர்ட் இல்லாமல் நானெப்படி இந்த விஷயத்தை உங்களிடம் இவ்வளவு தைரியமாக சொல்ல முடியும்… ?

இத்தனை நேரம் மனதிற்கு விரும்பாத விஷயங்களை கேட்டுக்கொண்டிருந்தவன், தங்களுக்கு வாய்த்த மாப்பிள்ளையின் உயர்ந்த உள்ளத்தை பற்றி தங்கை கூறவும் அவனுக்கு மற்றதெல்லாம் மறந்தே போக, அவனுள்ளும் ஒரு உத்வேகம் உண்டானது. வயசு கோளாறில் ஏதோ தவறு செய்து, அதன் மூலம் குழந்தையும் பிறந்தாச்சு. போதாததிற்கு அவளுக்கு திருமணமும் ஆகி அவளின் கணவனே குழந்தையை தேட உதவும் பொழுது கூட பிறந்த நானெப்படி என் தங்கையை வருத்தப்பட வைக்க முடியும். நிச்சயம் மதுவுக்கு உதவி செய்தே ஆகணும் என்ற எண்ணமெழ குழந்தையை பற்றிய தகவல்களை விசாரிக்க ஆரம்பித்தான்.

“சரி குழந்தை பிறந்தது, அதை என்ன செய்தீங்க ? அதெப்படி உனக்கு பிறந்த குழந்தை ஆணா, பெண்ணான்னு தெரியாம போச்சு. ஐ காண்ட் கெட் இட் மதும்மா…”

“சாரிண்ணா நான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்னா…” என்றவள் தமையனின் கையை பிடித்துக்கொள்ள கார்த்திக் அன்புடன் தங்கையின் கன்னத்தை தட்டினான்.

“லீவ் இட் நடந்து முடிந்து போன விஷயத்திற்காக வருத்தபடுவதோ, கோபப்படுவதோ இறந்த குழந்தைக்கு ஜாதகம் பார்ப்பது போலத்தான். சரி குழந்தையை வாங்கி கொடுன்னு பேச்சு ஆரம்பத்தில் நீ கேட்டதா ஞாபகம், ஆனால் குழந்தை என்ன ஜெண்டர்ன்னு கூட தெரியாது, இப்பொழுது அந்த குழந்தை எங்கே வளருதுன்னு தெரியாதுங்கிறே. தென் ஹவ் இஸ் பாஸிபிள் ? நானெப்படி அந்த குழந்தையை தேடி தருவது… ? 

“உண்மைதாண்ணா குழந்தையை பற்றி தெரியாது, எனக்கு மயக்கம் தெளியும் முன்னரே குழந்தையை அப்புற படுத்திட்டாங்க. நான் கேட்டதிற்கு வீட்டிற்கு தெரியாமல் குழந்தையை பெத்தெடுத்து இருக்கீங்க. அண்ணா உயிரோடு இருந்தாலாவது குழந்தையை காரணம் காட்டி திருமணத்திற்கு சம்மதம் கேட்கலாம். ஆனால் அண்ணா இல்லாமல் கையில் குழந்தையுடன் செல்வது உங்களுக்கும், உங்கள் வீட்டினருக்குமே நல்லதில்லை. நிறைய பின்விளைவுகளை சந்திப்பீங்க. அதனால் தான் குழந்தையின் முகத்தை நீங்க பார்க்கும் முன்னே அதை வேறு இடத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டேன். 

ஒன்ஸ் நீங்க குழந்தையை பார்த்துவிட்டால் உங்களால் குழந்தையை பிரிய முடியாது. டோன்ட் ஒர்ரி குழந்தை பாதுகாப்பாக தான் இருக்கும். முடிந்தவரை அண்ணனையும், கடந்தகால வாழ்க்கையையும் மறந்துட்டு திருமணம் செய்துக்கிட்டு உங்களுக்கென்று ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக்கங்கன்னு அறிவுரை சொன்னாங்க. அதுமட்டுமில்லைண்ணா நீங்க எப்போ குழந்தையை தேடறீங்களோ அப்போ இந்த முகவரிக்கு வாங்க, கண்டிப்பா உங்க குழந்தை உங்களுக்கு கிடைக்கும்ன்னு முகவரியையும் கொடுத்தாங்க.

அவங்க பெயர் சூசான், அவங்களும் சென்னையில் தான் இருக்காங்க. அவங்க கணவரின் வீடு கூட சாலிகிராமத்தில் இருக்கு. அட்ரஸ் வீட்டில் இருக்கு எடுத்து தரேன், அவங்க புகைப்படம் கூட என்னிடம் இருக்கு. அவங்களை பிடிச்சா என் குழந்தையின் மொத்த விவரமும் கிடைச்சுடும்…”

“ஓ குட், சரி இப்போ இந்த விஷயத்தை வீட்டில் சொல்லலாமா, வேண்டாமா … ? 

“ஹையோ இப்போ வேண்டாம்ண்ணா, குழந்தை கிடைக்கட்டும், அதன் பிறகு ராஜீவ்வை வரவழைத்து எல்லா உண்மைகளும் சொல்லிக்கலாம். இப்போ தெரிந்தால் ரொம்ப சங்கடப்படுவாங்க, அண்ட் தேங்க்ஸ் எ டன் அண்ணா. நான் சொன்னதை கேட்டு என் தப்புக்களை மன்னித்து எனக்கு ஹெல்ப் செய்யறேன்னு சொன்னீங்களே. இதுவே என் குழந்தை எனக்கு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையை கொடுக்குது. சரிண்ணா நாம கிளம்பலாமா, ரொம்ப நேரம் ஆச்சு நாம பீச்சுக்கு வந்து. நீங்களும் டூட்டிக்கு போகணுமே …”

அவளின் அக்கறையான பேச்சுக்கு சிரித்து,”பரவாயில்லையே இந்த அண்ணனுக்கு வேலைன்னு ஒன்று இருக்கு ஞாபகம் வந்திடிச்சே என் தங்கைக்கு. கோடானு கோடி நன்றிகள்… “

தங்கையின் தலையில் செல்லமாக தட்டிவிட்டு பேண்டிலிருந்த மணலை தட்டிக்கொண்டு எழ, மதுவும் எழுந்தாள். 

தங்கையை வீட்டில் கொண்டுவிட்டு, கார்த்திக் தன் ஆபிஸை நோக்கி சென்றான் அவன் மனம் முழுவதும் தங்கை பேசியதே நிறைந்திருந்தது. தங்கையின் ஆசைப்படி அவளின் குழந்தையை தேடி கொடுக்க வேண்டும். ஆண்ட்ருவின் தங்கை சூசான் சென்னையில் தான் இருக்காங்க என்பதால் வேலை மிக சுலபமாக முடிந்துவிடும் என்று நினைத்தவனுக்கு அது அவ்வளவு சுலபமில்லை என்று அப்பொழுது தெரியவில்லை. 

தங்கையின் பிரச்சினைக்கு ஒரு முடிவு கிடைத்த தெளிவில் அவனின் யோசனை பாவ்னாவின் கொலை கேஸிற்கு தாவியது. இன்று பாவ்னாவின் தாயை சந்திக்க வேண்டும் என்ற முடிவு செய்தவன், தீர்மானித்த விஷயத்தை உடனே செயல்படுத்த எண்ணி பாவ்னாவின் வீட்டு பக்கம் வண்டியை திருப்பினான்.

பாவ்னாவின் வீட்டின் முன் வண்டியை நிறுத்தி இறங்கிய கார்த்திக்கிற்கு அந்த வீடே களையிழந்து இருப்பதை புரிந்துக்கொள்ள முடிந்தது.

உள்ளே சென்று பாவ்னாவின் தாய் அலிஷாவை விசாரித்ததில் ஸ்டிரீயோ டைப் பதில் தான் கிடைத்தது, மாப்பிள்ளை நல்லவன், வல்லவன் அவனை மாதிரி ஒருத்தனை இந்த உலகத்தில் பார்க்கவே முடியாது. என் பெண்ணை இழந்து மாப்பிள்ளை வாடுகிறார், மகள் இழந்த துக்கத்தை விட மாப்பிள்ளை படும் துன்பம் தான் என்னை வாட்டுகிறது ப்ளா…ப்ளா … என கார்த்திக்கிற்கு ஓவென்று கத்த வேண்டும் போலிருந்தது. 

காரணம் ஒருத்தனை பற்றி சுற்றி இருக்கிறவர்கள் ஆஹா ஓவென்று புகழ்ந்தால் நிச்சம் அவன் நல்லவனாக இருக்க வாய்ப்பே இல்லை. மற்றவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காகவே அவன் நல்லவனாக கூட நடிக்க வாய்ப்பிருக்கு தானே. அவன் போலீஸ் மூளை அதை தான் சொன்னது. அவனுக்கு அவினாஷ் மீது சுத்தமாக நம்பிக்கையில்லை. அவனிடம் ஏதோ ஒரு தவறு இருக்கு, அதை பாவ்னா கண்டுகொண்டிருக்க வேண்டும். அதனால் அவன் தன் மனைவியையே கொலை செய்திருக்கவேண்டும் அவனாகவோ, அல்லது ஆள் வைத்தோ. 

ஏதோ ஒன்று இடித்தது. அது தான் என்னவென்று புரியவில்லை. அவனை தவிர மற்ற எல்லோரும் ஈவன் எஸ்.ஐ தனபால் கூட அவினாஷ் நல்லவன் என்கிறார். அவனை கைது செய்து அடித்து விசாரிக்கலாம் என்றால் எந்த அடிப்படையில் கைது செய்வது ?  அவினாஷுக்கு எதிராக ஒரு ஆதாரம் கூட கிடைக்கவில்லை. அப்படி ஒரு துணுக்கு கிடைத்தால் கூட அவன் குடுமி என் கையில் இருந்திருக்கும். ச்சே… காரின் பானெட்டின் மீது ஓங்கி குத்தினான் ஆத்திரத்தோடு. 

பாவ்னா கேஸ் சுற்றி சுற்றி முட்டு சந்திலேயே நிற்க கார்த்திக்கிற்கு எரிச்சல் மூள வீட்டிற்கு சென்றான். மதியம் தங்கை, மற்றும் தாய் தந்தையுடன் கொலை கேஸை சுத்தமாக மறந்துவிட்டு சந்தோஷமாக அரட்டை அடித்தபடி சாப்பிட்டு முடித்தான். மதுவின் மனதிலிருந்த கவலைகளை தமையனிடம் ஷேர் செய்துக்கொண்டதால் என்னவோ அவளாலும் சிரித்து பேச முடிந்தது.

சாப்பிட்டு முடித்து சற்று ரெஸ்ட் எடுக்க தன் அறைக்கு சென்றவனை நிறுத்தி, மது ஒரு போட்டோவை நீட்டினாள் இவள் தான் சூசான் என்று.  போட்டோவை திருப்பி பார்க்க, தங்கை சொன்ன சாலிகிராமம் முகவரி அதில் எழுதப்பட்டிருந்தது. மீண்டும் புகைப்படத்தை திருப்பி பார்த்தவனுக்கு ஏதோ நெருடியது. அந்த சூசானின் முகம் பரியச்சமானதாக இருந்தது. ஆனால் எங்கேயென்று தான் தெரியவில்லை. அவன் ஞாபக செல்களில் துழாவி பார்த்தும் பலனில்லை.

“என்னண்ணா ரொம்ப நேரம் போட்டோவையே பார்த்துட்டிருக்கீங்க, உங்களுக்கு இவங்களை தெரியுமா… ? 

“ஹ்ம்ம் எங்கேயோ பார்த்திருக்கேன், ஆனால் எங்கேயென்று தான் தெரியவில்லை. ஓகே மது, இந்த விஷயத்தை நான் பார்த்துக்கிறேன். நீ ரிலாக்ஸ்சா இரு…” என்று தங்கையின் தலையில் செல்லமாக அழுத்திவிட்டு தன் அறைக்கு சென்றவன் தங்கை கொடுத்த முகவரியை பத்திரப்படுத்தினான்.

தன் கட்டிலில் அமர்ந்து மீண்டும் கஜினி முகம்மதுவின் அண்ணன் மகன் போல பாவ்னாவின் கொலை கேஸ் பைலை திறக்க எத்தனித்தவனுக்கு பாவ்னாவின் கைபேசி ஞாபகம் வந்தது. அதை முழுவதும் பார்க்கவில்லையே என்று தோன்ற அதை டேபிள் டிராவிலிருந்து எடுத்து ஓபன் செய்தான். 

ஏற்கனவே சோஷியல் மீடியாக்கள், சேட்டர் பாக்ஸை பார்த்துவிட்டதால் இன்று கால் ஹிஸ்டரியை சோதித்தான். கடைசி அழைப்பாக அவினாஷுக்கு அழைத்தது இருக்க மனது சோர்ந்து போனது. 

“சேச்சே இதிலேயும் எதுவுமில்லை. ஒருவேளை நான் தான் அவனை வில்லனாக பார்க்கிறேனா … ? என்று வாய்விட்டே புலம்பினான்.

“யாரை அண்ணா வில்லனாக பார்க்கறீங்க … ? என்ற சத்தம் கேட்டு திரும்ப மது தான் உள்ளே வந்துக்கொண்டிருந்தாள்.

அவளை அமர சொல்லியவன், பாவ்னா கொலை கேஸை பற்றி கூறி,”எனக்கென்னவோ அந்த அவினாஷ் மேலே சுத்தமாக நம்பிக்கையில்லை. அவன் தான் அவன் மனைவியை என்னவோ செய்திருக்கணும். என் உள்மனசு அதை தான் சொல்லுது. ஆனால் அதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. ப்ச் எப்படி இந்த கேஸை முடிக்க போறேன்னு தெரியலை…” என்றான் சற்று அலுப்புடன்.

அவனை ஆச்சர்யமாக பார்த்து,”நீங்களா சலிப்பா பேசறீங்க, ஐ காண்ட் பிலீவ் இட். உங்க ஸ்டேட்மென்ட் படி பார்த்தால் நிச்சயம் அவன் தான் கொலையாளின்னு எனக்கு தோணுது. ஆனால் அண்ணா பொதுவா க்ரிமானாலஜியில் எந்தவொரு குற்றவாளியும் குற்றங்களை பஃபெர்பெக்ட்டா செய்ய மாட்டாங்க, நிச்சயம் ஏதோ ஒரு தடயத்தை விட்டுட்டு போவாங்கன்னு படிச்சிருக்கேன். ஐ திங் இந்த கேஸிலும் அது அப்ளை ஆகும் தானே…”

தங்கை பேச பேச அவளை ஆச்சர்யமாக நோக்கி,”ஏதேது இந்த வீட்டில் இன்னொரு ஐபிஎஸ் உருவாகிடுவாங்க போலவே. பேசாமல் உன்னை கிரிமினாலஜி படிக்க வைச்சிருக்கணுமோ, எனக்கு உதவியா இருந்திருப்பே…”என்று சிரித்தான்.

“போங்கண்ணா என்னை கிண்டல் செய்யாதீங்க, நான் சொன்னது ரொம்ப சின்ன விஷயம். நீங்களே யோசிச்சி பாருங்க, அவினாஷ் ஒரு சாதாரண ஐ.டி எம்பிளாய். நீங்க ஒரு ஐபிஎஸ். அவன் உங்களை விடவா யோசிச்சிட போறான். உங்களுக்கு நான் சொல்லணும்னு அவசியமே இல்லை. சரிண்ணா நீங்க உங்க வேலையை பாருங்க. நான் அப்புறம் வந்து பேசறேன்…” என்று மது எழுந்துச் செல்ல கார்த்திக் யோசனையுடன் அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தான்.

‘மது சொல்றதும் சரி தான், அவினாஷ் எங்கேயோ ஒரு தடயத்தை விட்டுட்டு தான் போயிருக்கான், அது எங்கே என்று நுணுக்கமான தேடணும்…” என்று மீண்டும் பாவ்னாவின் போனை குடைய ஆரம்பிக்க கீழே காலிங் பெல் சத்தம் கேட்டது.

அம்மா கதவை திறப்பதும், பேசுவதும் தெளிவில்லாமல் கேட்க சற்று நேரத்தில் தாயின் குரல் கேட்டது அவனை கீழே வரச் சொல்லி. 

மடியிலிருந்த பைலை மூடி வைத்துவிட்டு கீழே வர எஸ்.ஐ. தனபால் தான் அமர்ந்திருந்தார் ஹாலில். கார்த்திக்கை கண்டதும் அவசரமாக எழ அவரை அமர சொல்லிவிட்டு அவர் எதிரில் அமர்ந்தான். 

“சொல்லுங்க தனபால்…”

“சார் நீங்க கேட்ட பாவ்னாவின் அட்டாப்ஸி ரிப்போர்ட்.  இதை கொடுத்திட்டு போகலாம்னு தான் வந்தேன்…” என வேலைக்காரன் ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தான் வந்தவருக்கு.

அவர் தயங்க,”எடுத்துக்கங்க தனபால்…” என்றவன் அட்டாப்ஸி ரிப்போர்ட்டில் விழிகளை மேயவிட்டான்.

ரிப்போர்ட்டில் மண்டையில் அடித்தது, கழுத்தை அறுத்தது தவிர புதிதாக எதுவுமில்லை. கொலை செய்யப்பட்ட நேரமும் பதிவு செய்யப்பட்டிருக்க சற்று அலுப்புடன் ரிப்போர்ட்டை மூடி வைக்க எத்தனித்தவனின் விழிகள் பளிச்சிட்டது. 

‘வார்ரே வாவ் இதை எப்படி மிஸ் பண்ணேன்… !