Nenjil Therikuthu Panithuli -8

அத்தியாயம் -8

குழந்தை வேண்டுமென்ற தங்கையின் பேச்சு கார்த்திக்கிற்கு இம்மியளவும் புரியவில்லை. இதென்ன பொம்மையா கடையிலிருந்து வாங்கி கொடுப்பதற்கு. இவள் ஒன்றும் மக்கு பெண்ணில்லையே. எந்த ஒரு விஷயத்தையும் ஈஷா மாதிரி எடுத்தேன் கவிழ்த்தேனென்று பேசுகிறவளில்லை. அப்படியிருக்க குழந்தை வேண்டுமென்று எப்படி ஒருத்தியால் மிக சாதாரணமாக சொல்லிவிட முடியும்.

“மது நீ என்ன பேசறேன்னு உனக்கு புரியுதா? பிகாஸ் என் சிறு மூளைக்கு நீ சொல்ற விஷயங்கள் புரிய மறுக்குது. குழந்தை வேண்டுமென்று எந்த அர்த்தத்தில் சொல்றே…? ஆர் யூ கிட்டிங் மது…?

அவனின் சந்தேகமான கேள்வியில் மது வன்மையாக தலையை இடம் வலமாக அசைத்து மறுத்தாள்.

“ஹையோ அண்ணா, நீங்க எவ்வளவு பிஸியா ஓடிட்டு இருக்கீங்கன்னு தெரியும். உங்களின் பொன்னான நேரத்தை நான் வீணாக்குவேனா? அதுவும் சிங்கப்பூரிலிருந்து உங்களிடம் பேசணுமென்றே வந்தவள், நான் ஏன் இந்த விஷயத்தில் விளையாட போறேன். நான் சொன்னது, நீங்க காதால் கேட்டது எல்லாமே அக்மார்க் நிஜம். ஆமாம்ண்ணா எனக்கு ஒரு குழந்தை இருக்கு, இப்பொழுது அது எனக்கு வேண்டும். அந்த குழந்தை இல்லாமல் என்னால் வாழ முடியாது…”

இப்பொழுது அவள் உணர்ச்சி பூர்வமாக பேச கார்த்திக் முடியை பிய்த்துக்கொள்ளாத குறை.

‘ஒரு வேளை இவளுக்கு திருமணமாகி குழந்தை பிறந்திருக்குமோ, ஆனால் ஏன் எங்களிடம் சொல்லவே இல்லை. அதனால் தான் குழந்தையை வாங்கி தர சொல்கிறாளே…?

முகத்தை மூடிக்கொண்டு மது அழவும் கார்த்திக் அவளை குழப்பத்துடன் நோக்கினான். ஒரு முடிவுக்கு வந்தவனாக தங்கையின் கைகளை முகத்திலிருந்து பிரித்து அவள் விழிகளை துடைத்தவன், மீண்டும் அவளை அமர்த்தி, தானும் அமர்ந்தான்.

“லுக் மது, நீ என்ன சொல்ல வர்றேன்னு எனக்கு சரியா புரியலை, ஐ மீன் நீ விஷயத்தை சரியா கன்வே பண்ணலை. நீ சொல்ல வந்த விஷயத்தை தெளிவு செய்தால் மட்டுமே என்னால் உனக்கு உதவ முடியும். ஏதோ குழந்தைன்னு சொல்றே, சரி அது உனக்கும், மாப்பிள்ளைக்கும் பிறந்ததா? ஆனால் ஏன் எங்களிடம் தெரியப்படுத்தலை. குழந்தை இப்போ எங்கே இருக்கு? மாப்பிள்ளைக்கும், உனக்கும் ஏதும் தகராறா? அதனால் தான் நீ மட்டும் இந்தியா வந்திருக்கியா …?

கார்த்திக்கின் மொத்த கேள்விகளுக்கும் ஒரே பதிலாக இல்லையென்று மட்டும் தலையசைத்தவள் சிறு மௌனத்திற்கு பிறகு,”என் கர்ப்பப்பை குழந்தையை தாங்கற அளவுக்கு பலமில்லைன்னு சிங்கப்பூரில் டாக்டர் சொல்லிட்டாங்க. அதனால் என்னால் குழந்தை பெத்துக்க முடியாது…”

“ஹையோ, அதான் மனசு உடைஞ்சி போய் பேசறியா? மாப்பிள்ளை என்ன சொன்னார். உன் மேல் கோபப்படறாரா, நான் வேண்டுமானால் மாப்பிள்ளையிடம் பேசட்டுமா…? என்று பதறினான்.

தங்கையின் வாழ்வு குழந்தையின்மையால் சிதைந்துவிடுமோ என்ற பயம் அவனுக்கு. பெற்றோர்க்கு தெரிந்தால் நொந்து போவார்களே என்ற வேதனையும் கூட. தன் வாழ்வு தான் வீணாகி போனது என்றால் தங்கையின் வாழ்வும் வீணாவதா? நோ நெவெர்…

“என்னண்ணா சொல்றீங்க…? என்றாள் மது அழுகையுடன்.

அப்பொழுது தான் மனதிற்குள் நினைத்ததை அப்படியே வெளியில் சொல்லியது புரிய, வேகமாக தலையை அசைத்து மறுத்தான்.

“அதை விடு, நாம இங்கே ஒரு நல்ல டாக்டரை பார்க்கலாம். இந்த காலத்தில் எல்லாவற்றிக்கும் ஒரு தீர்வு உண்டு மது. நீ குழந்தை இல்லைன்னு வருத்தப்படாதே. நல்ல சிகிச்சை எடுத்துக்கிட்டால் உன் உடல்நிலை சரியாகி உன்னால் குழந்தை பெத்துக்க முடியும். அதுவும் இல்லையென்றால் சார்ரோகேட் மதர் மூலம் குழந்தையை பெத்துக்கலாம். இப்பொழுதெல்லாம் இதெல்லாம் பெரிய விஷயமே இல்லைடா. இதற்காக உன் மனதை தளரவிடாதே…”

தங்கையின் சிகையை ஆதரவாக கோதியபடி தமையன் பேச பேச மதுவின் விழிகளில் நீர் தளும்பியது. தன் சிகையை வருடிய அவனின் கைகளை தன் கைகளுக்குள் அடக்கி அதில் முகத்தை பதித்து கண்ணீர் உகுத்தாள்.

“கமான் மது, விஷயத்தை சொல்லிட்டே இல்லே, நான் பார்த்துக்கிறேன், நீ கவலைப்படாதே. மாப்பிள்ளையிடமும் நான் பேசறேன்…”என்று அவளுக்கு தைரியமளித்தான்.

ஆனால் பாவம் தங்கை சொன்ன விஷயத்தை வேறு மாதிரி புரிந்துகொண்டிருந்த அவனுக்கு தான் தைரியமளிக்க யாருமில்லை.

அவன் கைகளில் முகத்தை பதித்தபடியே,”எனக்கு திருமணத்திற்கு முன்பே ஒரு குழந்தை பிறந்துச்சுண்ணா …” என்றாள் விம்மலுடையே.

தங்கையின் பேச்சில் ஷாக் அடித்தவன் போல அவளிடமிருந்து கையை உருவிக்கொண்டான் கார்த்திக்.

“நீ …நீ …இப்போ என்ன சொன்னே … ? குரல் பிசிறடித்தது.

விழிகளை துடைத்துக்கொண்டு நிமிர்ந்து,”என்னை மன்னிச்சிடுண்ணா, எனக்கு ஏற்கனவே ஒரு குழந்தை பிறந்தது. அது ஆணா, பெண்ணா என்று தெரியாது…”

“ஸ்டாப்…ஸ்டாப்…கிவ் மீ எ பிரேக். முதலில் நான் என் கேள்விகளுக்கு பதில் சொல். யாரவன், அவன் உன்னிடம் பழகி ஏமாத்திட்டானா … ? எங்கே இருக்கான்னு சொல் …”என்றான் இறுகிய குரலில்.

“ஹையோ அண்ணா நீங்க நினைக்கிற மாதிரி அவர் ஏமாத்தலை, நான் தான் ஏமாந்து போய்ட்டேன்…” என்றவளின் விழிகளில் மீண்டும் கண்ணீர் ஊற்றெடுத்தது.

தங்கையின் புரியாத பேச்சில் கார்த்திக்கின் பொறுமை அவனை நட்டாற்றில் விட்டது.

“ஸ்டாப் க்ரைங் மது, இந்த மாதிரி மொட்டை மொட்டையா சொல்லாமல், என்ன நடந்ததுன்னு தெளிவா சொல்…”

தமையனின் குரலிலிருந்த கோபமும், இறுக்கமும் அவளுக்கு புதிது. அதுவே அவளை மிரட்டியது. முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு ? இனி எதையும் மறைத்து பலனில்லை. அண்ணன் நினைத்தால் மட்டுமே என் குழந்தை என் கைவந்து சேரும். செய்த தவறை இத்தனை வருடம் மறைத்ததே பெரிய விஷயம். அது மட்டுமில்லாமல் பெற்ற குழந்தையை அனாதையாக விட்ட பாவத்திற்கு தான் ஆண்டவன் இப்பொழுது பழி தீர்த்துக்கிட்டான்.

விழிகளை மூடி சில நொடிகள் நிதானித்து தன்னை எதற்கோ தயார்படுத்திக்கொண்டவள் போல நிமிர்ந்து அமர்ந்தாலும் அவளின் விழிகள் மடியில் கோர்த்திருந்த விரல்களில் மட்டுமே நிலைத்திருந்தது. மனத்திரை விலகி அவளின் கடந்த காலத்தை சொல்ல ஆரம்பித்தாள்.

“நான் ஆஸ்திரேலியாவில் வேலைக்கு சேர்ந்த புதிது, நான் வேலை செய்த ஹோட்டல் ஸ்டார் அந்தஸ்து பெற்ற பெரிய ஹோட்டல். அங்கு தங்க வருகிறவர்கள் ஓரளவுக்கு எல்லோருமே வாடிக்கையாளர்கள் தான். ஒரு சிலர் தான் எப்பொழுதாவது தங்க வருவார்கள். ஹோட்டல் ரூமிலிருந்து, சூட்ஸ் வரை என் மேற்பார்வையில் தான் சரி பார்க்கப்படும். ரூம் க்ளீனிங், பெட் கவர், ஸ்க்ரீன், பாத்ரூமில் சோப், டவல் வைப்பது, வாடிக்கையாளர் கேட்பதை செய்து தருவது இப்படி எல்லாமே.

நான் அங்கு சென்று ஒரு பத்து மாசம் எல்லாமே சரியாக சென்றது. வேலைக்கு செல்வது, முடிந்து ரூம்க்கு வந்தால் வெளியில் செல்ல மாட்டேன். என்னுடன் இன்னொருத்தியும் தங்கியிருந்தாள். அவள் பெயர் சிக், அவள் மலேசியாவை சேர்ந்தவள். இருவரும் லீவ் நாட்களில் மட்டும் ஷாப்பிங் செல்வோம். அப்படி ஒரு நாள் செல்லும் பொழுது தான் ஆண்ட்ருவை சந்தித்தேன். ஒரு கடையில் பொருளை வாங்கிவிட்டு பேசியப்படியே நானும்,சிக்கும் வெளியே வந்துவிட்டோம், அப்பொழுது யாரோ எங்களை மிஸ் மிஸ் என்று அழைக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தோம்.

ஆண்ட்ரு தான் எங்களை நோக்கி வேகமாக வந்துக்கொண்டிருந்தார். அப்பொழுது தான் அவரை முதன் முதலில் பார்த்தேன். அவர் கையில் சிக்கின் கைபேசி இருந்தது. ஷாப்பிங் செய்யும் பொழுது பேசிக்கொண்டிருந்தவள் ஏதோ ஒரு பொருளை எடுப்பதற்காக கைபேசியை கீழே வைத்துவிட்டு பொருளை எடுத்தவள் போனை மறந்துவிட்டிருந்தாள். அதை தான் ஆண்ட்ரு கொண்டு வந்து கொடுத்தார்.

அவர் இந்தியாவிலிருந்து வேலைக்கு வந்திருப்பதாக சொல்லி அறிமுகமானார். இருவரும் நன்றி சொல்லிவிட்டு கிளம்பிவிட்டோம். அப்பொழுது அவரை பற்றி எனக்கு பெரிதாக எந்த அபிப்பிராயமும் இல்லை. ஆனால் அடுத்த நாள் நான் வேலை செய்த ஹோட்டலுக்கு சைனீஸ்காரனுடன் வந்தார்.

வந்தவர் அவங்க ஆபிஸ் டெலிகேட்ஸ், அவரை தங்க வைப்பதற்காக உடன் வந்திருந்தார். நான் தான் ரூமில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று செக் செய்து அவரை தங்க வைத்தேன். சைனாக்காரனிடம் விடைபெற்று வந்த ஆண்ட்ரு என்னிடம் பேச ஆரம்பித்தார். இரண்டாம் சந்திப்பு, அதுவும் ஒரே நாட்டை சேர்ந்தவங்க, இருவரும் குடும்பமில்லாமல் தனியாக இருக்கிற அந்த தனிமை உணர்வு எங்க இருவருக்கும் ஒத்து போக இருவரின் மனத்தடைகளும் அகன்று சகஜமாக பேச ஆரம்பித்தோம்.

அதன் பிறகு ஆண்ட்ரு அடிக்கடி சைனாக்காரனை பார்க்கவோ, அவருடன் வெளியில் செல்லவோ வந்து போக ஆரம்பித்தார். அப்படியே எங்கள் நட்பும் வலுப்பெற்றது. அது எந்த அளவு என்றால் ஆண்ட்ருவுடன் வீக்கெண்டில் வெளியே செல்வது வரை போனது. மிகவும் நல்லவர், அவர் குடும்பத்தை பற்றி நிறைய சொல்வார். அவரின் பெற்றோர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அவரின் வீட்டிற்கு என்னையும், சிக்கையும் அழைத்துச் சென்று சமைத்து கொடுப்பார்.

இந்த இடத்தில் பொறுமையின்றி கார்த்திக் இடையிட்டான் உனக்கு தான் நன்றாக சமைக்க வருமே, இதிலென்ன அதிசயம் இருக்குன்னு.

“உண்மைதாண்ணா, ஆனால் நம் நாட்டு உணவை, நம் நாட்டு ஆட்கள் செய்து தரும் பொழுது அதன் ருசியே அலாதி தான். இருந்தாலும் என் மனது அவரின் சாப்பாட்டிற்காக ஏங்கவில்லை, அவருக்காக ஏங்கியது. ஆமாம் நான் அவரை நேசிக்க ஆரம்பித்திருந்தேன். அவரும் என்னை நேசித்தார். இருவரும் ஏகாந்தமாக சுற்றி திரிந்தோம், நிறைய பேசினோம், நிறைய காதலித்தோம். அந்த சமயத்தில் எனக்கு வருடாந்திர ஹாலிடேஸ் கிடைத்தது, ஊருக்கு வந்து நம் வீட்டில் என் காதலை சொல்லி உங்கள் எல்லோரிடமும் சம்மதம் வாங்கலாம் என்று முடிவு செய்து டிக்கெட் பதிவு செய்தேன். என்னுடன் ஆண்ட்ருவும் இந்தியாவுக்கு வந்து அவரின் பெற்றோரை நம் வீட்டிற்கு பெண் கேட்க அழைத்து வருகிறேன் என்று என்னுடனே டிக்கெட்டும் பதிவு செய்தார். இருவரும் ரொம்ப சந்தோஷமா இந்தியா வருவதற்கு ரெடியான சமயத்தில்… “என்று சொல்லிக்கொண்டே வந்தவள் சட்டென்று நிறுத்தினாள்.

தங்கை பேச்சை நிறுத்தவும்,கலவையான உணர்வுகளுடன் கேட்டுக்கொண்டு வந்தவன்,”ஏன் என்னாச்சு அந்த சமயத்தில்….? தனக்கே புரியாத உணர்வுடன்.

உடனே பதில் சொல்லாமல் தலையை மேலும் தாழ்த்திக்கொண்டாள் தன் அழுகையை மறைக்க.

“ஏர்போர்ட்டுக்கு கிளம்பிக்கொண்டிருந்த பொழுது தீடிர்ன்னு மயங்கி விழுந்துட்டேன், ஆண்ட்ரு தான் என்னமோ ஏதோன்னு பயந்து என்னை ஹாஸ்பிடலில் சேர்த்தார். அங்கு தான் தெரிந்தது நான் தாயாக போகிறேன்னு …” என கார்த்திக்கின் கைமுஷ்டிகள் இறுகியது.

முகத்தில் இருள் படர, சலனமின்றி அமர்ந்திருந்தான். அவனை பயத்தோடு பார்த்துவிட்டு தன் கதையை தொடர்ந்தாள்.

“எனக்கு அப்பொழுது என்ன செய்வதென்று தெரியலை, ஊருக்கு வந்தால் நிச்சயம் அம்மா கண்டுகொள்வார்கள் என் முகத்தை பார்த்தே. அதற்காகவே என் பயணத்தை ரத்து செய்தேன். ஒரு நாள் எங்களையும் மீறி வயது கோளாறு, மற்றும் தனிமை கொடுத்த தைரியத்தில் செய்த தவறு அன்று எங்களை இருட்டில் தள்ளி விட்டது. ஆண்ட்ரு சொன்னார் தான் நான் என் பெற்றோரிடம் பேசி திருமணத்திற்க்கு ஏற்பாடு செய்கிறேன் என்று.

ஆண்ட்ரு சொன்னபடி செய்பவர் தான், ஆனால் எனக்கு தான் பயமாக இருந்தது. எப்படி பார்த்தாலும் என் கர்ப்பம் உங்கள் எல்லோருக்கும் தெரிந்துவிடுமே என்ற பயம் என்னுள் சுனை நீராய் பொங்கியது. ஆண்ட்ருவும், சிக்கியும் பேசி பேசி என் பயத்தை போக்கினார்கள். ஆண்ட்ரு மட்டும் இந்தியா சென்றார் திருமணத்தை பற்றி பேசி சம்மதம் வாங்கிக்கொண்டு வருவதாக. ஆனால் … “

மது மீண்டும் மேற்கொண்டு பேச முடியாமல் வார்த்தைகள் தொண்டைக்குழியில் சமாதி அடைய, விம்மல் வெடித்துக்கொண்டு வர முகத்தை பொத்திக்கொண்டு அழலானாள். திடீரென்று தங்கை அழவும் கார்த்திக்கிற்கு ஏனென்று காரணம் புரியவில்லை. ஏற்கனவே தங்கை திருமணமாகாமலே கர்ப்பவதியான செய்தியில் நிலைகுலைந்து போயிருந்தான். இதில் அவள் திடீரென்று அழ தொடங்கவும் தன்னை நிதானித்து அவளை பற்றி உலுக்கினான்.

“என்னாச்சு மது, உன் ஆண்ட்ரு உன்னை ஏமாத்திட்டு ஊரை விட்டே போய்ட்டானா…? என்றான் தன்னையும் மீறிய கோபத்தில்.

தமையன் கேட்ட கேள்வியில் விலுக்கென்று நிமிர்ந்து,”அவர் அப்படிப்பட்டவர் இல்லைண்ணா…”என்று ரோஷத்தோடு கூறியவளின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கி,”ஊருக்கு போனால் தானே திரும்பி வருவதற்கு, அவர் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி நடு வானிலேயே அவர் உயிர் என்னை விட்டு பறந்தி…”

அதற்கும் மேல் பேச முடியாமல் தலைகுனிந்து அமர்ந்திருக்க, கண்ணீர் மட்டும் தாரை தாரையாக வழிந்துக்கொண்டிருந்தது. கார்த்திக்கோ தங்கை சொன்னதை ஜீரணிக்க முடியாமல் சிலை போல அமர்ந்திருந்தான். அவனுக்கு என்னமோ தங்கை சொன்னதெல்லாம் கிமு, கிபியில் நடந்த மாதிரி ஒரு உணர்வு உண்டாவதை தடுக்க முடியவில்லை.

ஆனால் எல்லாமே நடந்து மூன்று வருடங்கள் தான் ஆகிறது என்பதை நம்ப முடியவில்லை. அந்த சமயத்தில் தானே ஈஷாவின் தொல்லைகளை அவன் அனுபவித்துக்கொண்டிருந்தான்.

அவன் விழிகள் தங்கையின் பக்கம் திரும்பியது. அவள் இன்னும் அதே நிலையில் தான் அமர்ந்திருந்தாள். பழைய நினைவில் கரைகிறாள் என்று புரிய அவளை நெருங்கி அமர்ந்து அவளின் தலையை தன் தோளில் சாய்த்துக்கொண்டான். தமையனின் ஆதரவில் அழுகை வெடித்துக்கொண்டு வந்தது.

அவளின் முதுகை வருடி சமாதானம் செய்ய சில நொடிகளில் மது தன்னை சமாளித்துக்கொண்டு கதையை தொடர்ந்தாள்.

“ஆண்ட்ரு இறந்ததும் என் மூளை செயலிழந்து போய்டிச்சி. ஊருக்கு வரவும் பயம், குழந்தையை கலைக்கவும் மனதில்லை. ஆனால் கரு மட்டும் எவ்வித கவலையுமில்லாமல் வளர்ந்துக்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் சூசான் வந்து என்னை சந்தித்தாள். அவளால் தான் இன்று நான் உயிரோடு உங்கள் முன் இருக்கிறேன். இல்லையென்றால் எப்பொழுதோ என் உயிரை விட்டிருப்பேன்…”

“புல்ஷிட், என்ன பேசறே மது. சரி அதிருக்கட்டும் யார் அந்த சூசான், அவள் வந்தது உனக்கு எந்த விதத்தில் உதவியாக இருந்தது… ? என்றான் கேள்வியாக.

“அவ வேற யாருமில்லைண்ணா ஆண்ட்ருவின் தங்கை. ஆண்ட்ரு இறந்ததும் என் நிலைமை புரிந்து அவள் ஆஸ்திரேலியாவுக்கு வந்து என்னை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்து ஒரு தனி வீட்டில் தங்க வைத்தாள்…”

“ஹேய் இரு, இரு… நீ வேலை பிடிக்கவில்லை என்று வந்தாயே, அப்போ நான் தானே உன்னை ஏர்போர்ட்டில் பிக் அப் பண்ணிக்கிட்டு வந்தேன். அதுவுமில்லாமல் நீ சென்னையில் இருந்துக்கிட்டே எங்களை பார்க்காமல் இருந்தாயா… ? என்ன மது, அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தர்றே… ?

தமையனின் அதிர்ச்சி அவளுக்கு வருத்தமாக தான் இருந்தது, ஆனால் விதி வலியது இதை எப்படி சொல்லி இவருக்கு புரியவைக்க முடியும்…