Nenjil Therikuthu Panithuli -5

அத்தியாயம் -5

வேலை முடிந்து எல்லோரிடமும் விடைபெற்று ஸ்கூலுக்கு செல்ல, ரித்திகாவை கண்டதும் விளையாடிக்கொண்டிருந்த அனாயா ஓடிவந்து தாயை கட்டிக்கொண்டாள்.

குழந்தையை வாரி அணைத்து முத்தமிட்டு ,”கோமோன் து வா ஷெரி (ஹவ் ஆர் யூ டார்லிங் ) ஆ து பியன் மோஞ்சே (டிட் யூ ஈட் வெல் )

“ஹ்ம்ம் பாப்பா சமர்த்தா சாப்பிட்டேன், மம்மா இது நான் வரைஞ்சேன், நல்லா இருக்கா …” 

தன் கையில் வைத்திருந்த ஒரு பேப்பரை காட்ட ரித்திகா ஆசையோடு பார்த்துவிட்டு குழந்தையை அழுந்த முத்தமிட்டாள். 

“என் சமர்த்து குட்டி, ரொம்ப அழகா இருக்குடா செல்லம்…” என்றவள் குழந்தையின் ஷூவை மாட்டி, குளிர்கால ஜெர்கினை அணிவித்து தலைக்கு குளிரிலிருந்து பாதுகாக்க கம்பளி தொப்பியை மாட்டிவிட்டு நிமிர அனாயாவின் டீச்சர் தன்னிடம் ஏதோ பேச காத்திருப்பது போல தோன்றியது. 

குழந்தையின் கையை பிடித்தபடி,”சொல்லுங்க கிளாரா, ஏதாவது சொல்லணுமா… ? அனாயா ஏதேனும் தொல்லை கொடுத்தாளா… ? 

“ஹேய் நோ நோ, அனாயா எலே த்ரே அந்தலிஜான் (ஷி இஸ் வெரி இன்டெலிஜெண்ட் ), ஆனால் இது வேற …” 

கிளாரா தயங்கி நிறுத்தவும், ரித்திகாவின் புருவங்கள் கேள்வியாக உயர்ந்தது. 

“அனாயா அவ அப்பாவை ரொம்ப தேடறாள், எனக்கு தெரியும் நீங்க சிங்கிள் மதர்ன்னு. ஆனால் குழந்தைக்கு அது தெரியாதே…”

இந்த செய்தி ரித்திகாவிற்கு புதிதாக இருக்க, அவளின் வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது.  அனாயா வளர வளர இந்த கேள்வி எழும் என்று தெரிந்தது தான். காலம் இருக்கிறது அதற்குள் அவளுக்கு தேவையான பதிலை ரெடி செய்யவேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தாள். ஆனால் இவ்வளவு சீக்கிரம் எழும் என்று தெரியாததால் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்துப் போனாள். 

இந்த கால பிள்ளைகள் உடலளவிலும், மனதளவிலும் எவ்வளவு சீக்கிரம் வளர்கிறார்கள் என்ற ஆயாசம் எழுந்தது. இன்று பள்ளியில் தந்தையை பற்றி கேட்டவள் நாளை தன்னிடமே நேராக கேட்கமாட்டாளென்று என்ன நிச்சயம். கடவுளே அவளுக்கு என்ன பதில் சொல்வது? அவள் கேட்காமல் நான் சொல்லியிருந்தால் கூட பிரச்சினை இராது. ஆனால்…

“என்ன ரித்திகா யோசிக்கறீங்க? நீங்க சீக்கிரமே அவளுக்கு ஒரு நல்ல பதிலை  ரெடி செய்யணும், இல்லையென்றால் உங்களுக்கென்று ஒரு கொப்பனை (பாய் ப்ரெண்ட் ) தேடிக்கணும். அது தான் பெட்டர். யோசிச்சி ஒரு நல்ல முடிவா எடுங்க…”

“மெர்ஸி கிளாரா, ரவ்வார் … (தேங்க்ஸ், பை )

குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வர அனாயா தான் வளவளவென்று பேசிக்கொண்டு வந்தாள் காரில். அவளுக்கு குத்துமதிப்பாக பதில் சொல்லிக்கொண்டு வந்தவளுக்கு கிளாரா சொன்னதை பற்றி யோசிக்க தனிமை தேவைப்பட்டது. குழந்தையின் வழக்கமான வேலைகளை முடித்துவிட்டு, அவளை உறங்க வைத்தவள் கட்டிலில் அப்படியே சாய்ந்து அமர்ந்து விழிகளை மூடிக்கொண்டாள். 

இது நாள் வரையில் அதாவது அனாயா பிறந்ததிலிருந்து தனக்கு இப்படியொரு சிட்டுவேஷன் அமையுமென்று அவள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. காரணம் அவள் வாழ்க்கையில் புயல் அடித்து ஓய்ந்துக்கொண்டிருந்தது. பார்த்த கணத்தில் கொண்ட காதல் என்பதினால் என்னவோ அவனை பற்றி அவள் சரியாக தெரிந்துக்கொள்ளவில்லை. புடவை கடைக்கு அழைத்து வந்தவன் தங்கை இல்லை, காதலி என்று கழுத்தில் தாலி ஏறிய பிறகு தான் தெரிந்தது. 

பெற்ற மகளின் வாழ்க்கை சின்னாபின்னமாகி போனதில் பெற்ற தாயின் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது. மகள் கண்டதும் காதல் கொண்டு மணந்த கணவனுடனான வாழ்க்கை நந்தவனமில்லை, அவள் வாழ்க்கையில் மயிலும், குயிலும் கூவவில்லை, வெறும் கோட்டானும், சிங்கமும், புலியும் மட்டுமே உறுமுகின்ற காடு என்பதை ஒரு நாள் மகளும், மருமகனும் பேசிய பேச்சிலிருந்தே புரிந்து போனது. அதன் பிறகு ஒரு வாரம் கூட அவர் உயிரோடு இல்லை. 

கணவனின் மறைவிற்கு பிறகு லிஸாவின் மனதும், உடலும் பலமிழந்து போக படுத்த படுக்கையானார். கணவனை விட்டு பிரிந்து வந்தவள் தாயை கவனித்துக்கொண்டாலும் அவர் உடல்நிலையில் முன்னேற்றமில்லை. மகளுக்கு விவாகரத்து நோட்டீஸ் வர முற்றிலும் உடைந்து போனார். மகளின் டிவோர்ஸ் கேஸ் கோர்ட்டுக்கு வரும் முன்னே அவரும் இந்த பூவுலகை விட்டு மறைந்திருந்தார். 

ரித்திகாவும் டிவோர்ஸ் கிடைத்ததும் தான் பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு, நாட்டை விட்டே குழந்தையுடன் வந்துவிட்டாள். ஆரம்பத்தில் குழந்தையின் தந்தை எங்கேயென்று பலர் கேட்ட கேள்வியில் நொந்து போனாள். நல்லவேளை பிரான்சில் கணவன் என்ற உறவுக்கு அதிக முக்கியத்துவம் இல்லையென்பதினால் ரித்திகாவின் கணவன் எங்கே, அனாயாவின் அப்பா எங்கே என்ற கேள்விகளும் கூடிய விரைவிலேயே நின்றும் போனது. 

ஆனால் இன்று….

ரித்திகாவின் விழிகள் தன் பக்கத்தில் ஒரு பொம்மை போல உறங்கிக்கொண்டிருந்த குழந்தையின் பக்கம் திரும்ப, அவளின் கைகள் குழந்தையின் பட்டு கேசத்தை மென்மையாக வருடி அனாயாவின் நெற்றியில் இதழ்களை பதித்தாள். 

இவளாகவே என்னிடம் அப்பா எங்கே என்று கேட்பதற்குள் நானே சீக்கிரம் சொல்லிடனும். இல்லையென்றால் குழந்தையின் மனது ரணமாகிவிடும்…

கடந்த காலத்தை அசைபோட்டதில் மனதில் தாங்க முடியாத பாரம் ஏறியிருக்க விழிகளும் உறக்கத்தில் அழுத்தியது. அப்படியே சரிந்து மகளை ஒரு கையால் அணைத்தபடி உறங்கிப்போனாள். மன ரணத்திற்கு குழந்தையின் ஸ்பரிசம் அருமருந்தாக இருந்தது. அடுத்த நாள் காலையில் எழுந்தபொழுது முதல் நாள் வலி ஏதுமில்லை. நினைப்பதற்கும், அசைபோடுவதற்கும் மதிப்பில்லாத ஒன்றாச்சே அவளின் வாழ்க்கை. அதை தொடர்ந்து வந்த நாட்களில் மகளுக்கு சொல்வதற்கு தேவையான பதிலையும் ரெடி செய்து வைத்தாள். 

சென்னை…

தனபால் மீட்டிங் ஏற்பாடு செய்து வைத்திருந்த தீபேஷ் சந்திப்பை அவன் வீட்டிலேயே வைத்துக்கொண்டான்.

“பாவம் ஸார் அவினாஷ், எவ்வளவு ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்துக்கொண்டான் தெரியுமா, ப்ச் இப்படி அல்பாயுசில் சிஸ்டர் இறந்து போகவா. பாவ்னா சிஸ்டர் கொலையான அன்று காலையில் ஜாகிங் செல்லும் பொழுது கூட சிஸ்டர் கமல்ஹாசனின் ரசிகை, அவங்களை விக்ரம் படத்திற்க்கு அழைச்சிட்டு போகணும்னு சொல்லிட்டிருந்தான்…”

சற்று நேரம் அங்கு அமைதி நிலவியது. தீபேஷின் மனைவி ரேகாவும் மௌனமாக அமர்ந்திருந்தாள். அவர்கள் எதிர் சோஃபாவில் அமர்ந்திருந்த கார்த்திக்கின் டீப்பாயின் முன் ஒரு காஃபி கப் இருந்தது. தீபேஷ் பேசுவதை மௌனமாக கேட்டுக்கொண்டிருந்தவன் அவன் பேசுவதை நிறுத்தவும், அவனே பேசட்டும் என்று அமைதி காத்தான். 

தன்னை நிதானித்து,”அன்றும் வழக்கம் போல பார்க்குக்கு வந்து சந்தோஷமா பேசினான். எங்களையும் வீட்டுக்கு வரச்சொல்லி அழைத்தான். நாங்களும் அவங்களை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுக்கணும்னு ஆசைப்பட்டோம். எல்லாமே வீணாகி போச்சு…”

“இப்போ உங்க ப்ரெண்ட் எப்படி இருக்கார்… ? 

“ப்ச் எங்கே சார், எப்பொழுதும் விட்டத்தை வெறிச்சிட்டு இருக்கான். ஆபிஸில் கூட அவன் சரியா வேலை செய்யலைன்னு அடிக்கடி கம்பளைண்ட் வருது. பாவம் எப்படி சார் அவனால் முடியும். ஒரு ப்ராஜெக்ட்டை கொடுத்தால் சூப்பரா முடிச்சி கொடுப்பான். அதே போல் டீம் லீடரா இருந்தாலும் அழகாக எல்லோரையும் தட்டி கொடுத்து வேலை வாங்குவான். அவன் லீடர் என்றால் அவன் டீமில் சேர அவ்வளவு ஆர்வமா இருப்பாங்க. இப்போ அவன் வேலைக்கே பிரச்சினையாயிடும் போல…”

“சரி இரண்டு பேர் வந்தாங்கன்னு அவினாஷ் சொன்னாரே, அவங்க யாராக இருக்கும்ன்னு நினைக்கறீங்க தீபேஷ் …” 

மெலிதாக தூண்டில் போட்டான். 

“எனக்கெப்படி தெரியும் ஸார், ஆனால் எனக்குள் ஒரு சந்தேகம்…”

கார்த்திக்கின் அனுமதியான தலையசைப்பில் தொடர்ந்தான் தீபேஷ். 

“சார் வந்தவங்க ஒரு வேளை பீஹாரியோ இருப்பாங்களோ. பிகாஸ் கொஞ்ச நாளைக்கு முன்பு பெட்ஷீட் விற்கிற மாதிரியும், அத்தியாவசிய பொருட்கள் விற்கிற மாதிரியும் உள்ளே வந்து பெண்களின் நகைகளை திருடிக்கொண்டு கொலை செய்துட்டு போனாங்களே. அந்த மாதிரி இருக்கலாமே…”

“ஆனால் எதையும் திருடிட்டு போகலையே…”

“அட ஆமாமில்லே, ஹையோ ஸார் எனக்கு யோசிச்சு யோசிச்சு மண்டை குழம்புது. நீங்க தான் அந்த கொலைகாரனை கண்டுபிடிக்கணும். பாவம் அவினாஷ் ஒவ்வொரு நாளும் மனைவியை இழந்து தரையில் போட்ட மீனாய் துடியாய் துடிக்கிறான். அவனின் இழப்பிற்கு நீதி கிடைக்கணும். அப்பொழுது தான் அவனின் கண்ணீர் நிற்கும்…”

“கண்டிப்பா கண்டுபிடிச்சிடலாம்…” என்று புன்னகையுடன் எழுந்தான்.

கார்த்திக்கின் வீடு…

அவனின் கார் ஓடு பாதையில் ஓடி போர்டிகோவில் இளைப்பாறியது. சத்தம் கேட்டு உள்ளிருந்து வந்த பாக்கியம் மகனை எதிர்க்கொண்டார். 

“மதியம் சாப்பிட கூட வரலையேப்பா, காஃபி கொண்டு வரட்டுமா…”

“நோம்மா, இப்போ விசாரணைக்கு சென்ற இடத்தில் குடிச்சிட்டு வர்றேன். நான் என் ரூம்க்கு போறேன்மா, ரொம்ப களைப்பா இருக்கு…”என்றபடி படியேறிய மகனை நிறுத்தினார்.

“ஈஷா வந்திருந்தா, நீ அவளை பார்த்தாயா… ? 

“இல்லையே ஏன் ? 

“இன்று தான் சிங்கப்பூரிலிருந்து வந்தாளாம், நீ போலீஸ் ஜீப்பில் போனதை பார்த்திட்டு வந்து இங்கே அதிகமா பேசினாள். நீ போலீஸ் வேலைக்கு போறது அவளுக்கு பிடிக்கலையாம்…”

“வாட் நான்சென்ஸ், அவளுக்கு பிடிச்சா என்ன பிடிக்கலைன்னா என்ன ? லீவ் இட்…” என்று படியேற எத்தனித்தவனை மீண்டும் நிறுத்தினார்.

“ஆமாம் நீ காரில் தானே போனே, ஈஷா உன்னை ஜீப்பில் பார்த்ததா சொன்னாள் … ? 

“அவளுக்கு போலீஸ் என்றாலே ஜீப் தான், ஜஸ்ட் பர்கெட் இட் …” என்றவனுக்கு ஈஷாவின் அடாவடி தனத்தில் அவனின் நினைவில் முன்னாள் மனைவி பூஜா வந்து போனாள்.

அறைக்கு சென்று களைப்பு தீர குளித்து விட்டு முகத்தை துடைத்துக்கொண்டு பாத்ரூமிலிருந்து வெளிப்பட்டவனின் விழிகளில் பாவ்னா கொலை கேஸ் பைல் பட சற்று நேரம் யோசனையுடன் பார்த்துவிட்டு அதை எடுத்துக்கொண்டு பால்கனி சேரில் அமர்ந்து மோடாவின் மீது காலை போட்டபடி பைலை பிரித்தான்.

ஒவ்வொரு பக்கமாக புரட்டிய படி மிகவும் நுணுக்கமாக படிக்க, அவனின் அறை கதவு தட்டப்பட்டது. 

“உள்ளே வாங்க …”என்று குரல் கொடுத்துவிட்டு மீண்டும் பைலில் விழிகளை புதைத்தான். 

அவன் முன்னே ஜூஸ் டம்பளர் வைக்கப்பட கார்த்திக்கின் விழிகள் உயர்ந்தது. தாயை கண்டதும் அவனின் புருவங்கள் ஆச்சர்யத்துடன் உச்சி மேட்டுக்கே உயர்ந்தது.

“ம்மா நீங்களா, முத்துவிடம் கொடுத்தனுப்ப வேண்டியது தானே…” என்றபடி ஒரு ஜூஸை எடுத்து ஒரு சிப் பருகினான்.

“உன்னிடம் ஒரு விஷயத்தை சொல்லணும்ப்பா, அதான் நானே வந்தேன். நீ ஏதோ முக்கியமான வேலையா இருக்கே போல. சரி வந்த விஷயத்தை சொல்லிட்டு போய்டறேன். மது போன் செய்தாள். உனக்கும் போன் செய்தாளாம். நாளைக்கு வர்றாளாம்…”

“இதில் என்ன விஷயம் இருக்கு. மது இந்த வீட்டு பெண், புகுந்த வீட்டுக்கு போன பெண் சீராட தாய் வீட்டுக்கு வர்றதில் என்ன விசேஷம் இருக்கு. அதுவுமில்லாமல் வெளிநாட்டில் இருக்கிறாள். வரட்டும் அவள் ஆசைப்படி எத்தனை நாள் வேண்டுமானாலும் தங்கட்டுமே…” என்றான் பைலில் விழிகளை பதித்தபடி. 

“சரிப்பா, இப்போ நான் என்ன பேசினாலும் உன் மண்டையில் ஏறாது. இன்னும் ரெண்டு நாளில் உன் தங்கை வரும் பொழுது என்ன விசேஷம்னு தெரிஞ்சிக்கோ. நாளை அவளை ஏர்போர்ட்டுக்கு போய் அழைச்சிட்டு வந்திடு…”

பாக்கியம் எழுந்து வெளியே செல்ல கார்த்திக் தன் கைபேசியை எடுத்து தங்கையின் அழைப்பு வந்திருக்கா என்று சோதித்தான். தாய் சொன்னபடி அவள் அழைத்திருக்கவும் சிங்கப்பூரில் இருக்கிற தங்கைக்கு அழைத்து பேசிவிட்டு வைத்தவனின் புருவங்கள் நெரிந்தது யோசனையாக. 

என்னிடம் பேச என்ன இருக்குமென்று இதற்காக சிங்கப்பூரிலிருந்து வருகிறாள்…!