Nenjil Therikuthu Panithuli -4

அத்தியாயம் -4

ஐபிஎஸ் கார்த்திக்கை கண்டதும் விறைப்பான சல்யூட் ஒன்றை விநியோகித்தார் தனபால்.

அவரின் மரியாதையை இளம்புன்னகையுடன் சிறு தலையசைப்பில் ஏற்றுக்கொண்டவனிடம்,”வெல்கம் ஸார், நீங்க தான் ஆதம்பாக்கம் கொலை கேஸை இனி டீல் பண்ண போறதா கமிஷனர் சொன்னார். அதான் உங்களை பார்த்து எனக்கு தெரிஞ்ச சில விஷயங்களை சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்…”

அவர் பேச்சிலிருந்து பணிவிற்கு மெலிதாக புன்னகைத்து,”வாங்க தனபால், ஸ்டேஷனில் போய் பேசலாம்…” என்றவன் தன்னுடைய காரிலேற, தனபால் தான் வந்த ஜீப்பை டிரைவரிடம் ஸ்டேஷனுக்கு கொண்டு வர சொல்லிவிட்டு கார்த்திக்கின் வண்டியில் ஏறினார். இருவரும் ஸ்டேஷன் அடையும் வரை எதுவும் பேசிக்கொள்ளவில்லை. 

கார்த்திக்கின் விழிகள் கமிஷனர் கொடுத்திருந்த பைலில் தான் பதிந்திருந்தது. கேஸை நிதானமாக, அதே சமயம் ஆழமாக படித்துக்கொண்டு வர தனபால் அவனை தொல்லை செய்யவில்லை. இருவரும் ஸ்டேஷனில் இறங்கியதும் உள்ளே செல்ல, ஏட்டு, கான்ஸ்டபிள்ஸ் எல்லோரும் விரைத்துக்கொண்டு நின்று சல்யூட்டை வழங்கினார்கள்.

சிறு புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு  தனபாலனின் இருக்கையில் அமர்ந்த கார்த்திக் அவரை எதிரிலிருந்த இருக்கையில் அமருமாறு கையை காட்டினான். 

அவர் அமர்ந்ததும்,”ஹ்ம்ம் இப்போ சொல்லுங்க தனபால், எதுவரைக்கும் நீங்க இன்வெஸ்டிகேட் செய்த்திருக்கீங்கன்னு இதில் இருக்கு, இருந்தாலும் நீங்க உங்க வாய்மொழியாகவே சொல்லுங்க…”என்றபடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.

“சார் எங்களுக்கு முதலில் தகவல் கொடுத்தது பக்கத்து வீட்டு ஆட்கள் தான். அவர் பெயர் பத்பநாபன். அவரின் மனைவி சிவகாமி ஏதோ கேட்பதற்காக பாவ்னா வீட்டு கதவை தட்டியிருக்காங்க. ஆனால் கதவு யாரும் திறக்காமலே உள் வாங்கிக்கவும் பாவ்னாவை அழைச்சிக்கிட்டே உள்ளே போனவங்க பாவ்னா கொலையுண்டு கிடந்ததை பார்த்ததும் அலறி அடிச்சிட்டு ஓடி வந்து கணவரிடம் விஷயத்தை சொல்லியிருக்காங்க.

“ஒ… ! யார் கொலை செய்திருப்பாங்கன்னு நினைக்கறீங்க ? எனி மோட்டிவ் … ?

“என்ன மோட்டிவ்ன்னு சரியா புரியலை, பிகாஸ் அங்கு எதுவும் திருட்டு போகலை. அந்த பெண்ணையும் பலாத்காரம் செய்யவில்லை. ஆனால் பெண்ணை மட்டும் கொலை, அதுவும் கொடூரமா கொலை செய்திருக்காங்க. பக்கத்து வீட்டு சிவகாமி செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்பு யாரோ இரண்டு பேர் அந்த வீட்டுக்கு வந்துட்டு போனதா சபரிநாதன் சொல்றார். அவரும் ஒரு நெய்பர் அவினாஷுக்கு.

“அவர் எப்போ பார்த்தாராம் வந்தவர்களை, எத்தனை மணி இருக்கும்… ? 

கேள்வி சுருக்கமாகவே வந்தது. 

“காலையில் நடைப்பயிற்சி முடிச்சிட்டு வீட்டுக்கு வந்துக்கிட்டிருக்கும் பொழுது அவினாஷ் வீட்டுக்குள் இருவர் போவதை பார்த்திருக்கார். ஆனால் யாரோ தெரிஞ்சவங்க வந்திருக்காங்கன்னு நினைச்சி கண்டுக்காம தன் வீட்டுக்குள்ளே போனதாக சொன்னார். இருவரும் வந்த நேரம் பற்றி சரியா சொல்லலை. ஆனால் அவினாஷ் வாக்குமூலம் படி பார்த்தால் அவர் ஜாகிங் சென்ற அரைமணிநேரத்தில் இருக்கும்…”

தனபால் சொன்னதை தனக்குள் கிரஹித்துக்கொண்டிருந்துவிட்டு நிமிர்ந்து,”அவினாஷின் வாக்கு மூலம்… ? அவர் மேலே உங்களுக்கு சந்தேகம் இருக்கா … ? 

“ஸாரி சார், அவரை சஸ்பெக்ட் பண்ண முடியாது. காரணம் அவரின் வாக்குமூலம் க்ளீன் ஷிட்டாக இருக்கு. இருவருக்கும் திருமணமாகி ஆறுமாதம் தான் ஆகிறது. காதல் திருமணம், சில மாதங்கள் அவினாஷின் குடும்பத்தோடு வாழ்ந்திருக்கிறார்கள். அதன் பிறகு அவினாஷின் தாயே அவர்களை தனிக்குடித்தனம் வைத்திருக்கிறார். இருவரும் ஆதர்ச தம்பதிகள்ன்னு தெரிஞ்சவங்க சில பேர் சொல்றாங்க. 

அவினாஷ் தினமும் காலையில் ஜாகிங் செல்வதை பார்த்திருக்கிறார்கள். அதன் பிறகு புருஷனும், மனைவியும் ஒன்றாக ஆபிஸ் சென்று ஒன்றாகவே திரும்பி வருவார்களாம். வீக்கெண்டில் வெளியில் கிளம்புவதும், ஊர் சுற்றுவதும் என்று சந்தோஷமாக தான் இருந்திருக்கிறார்கள். சம்பவம் நடந்த அன்றும் அவினாஷ் ஜாகிங் சென்றிருக்கிறார். 

அப்பொழுது பாவ்னா யாரோ இரண்டு பேர் அவினாஷை தேடி வந்திருப்பதாக போன் செய்திருக்காங்க. அவினாஷ் அப்படி யாரையும் வர சொல்லவில்லையேன்னு சொல்லி, அவர்களை அனுப்பிவிட்டு கதவை மூடிக்கொள்ள சொல்லிவிட்டு இணைப்பை துண்டிச்சிருக்கார். அதன் பிறகு வீட்டுக்கு திரும்பிய பொழுது தான் மனைவி கொலையான செய்தி தெரியும்…” 

கார்த்திக் பதில் சொல்லாமல் தனபாலையே ஊன்றி கவனித்தாலும், அவனின் சிந்தனைகள் அவினாஷையே சுற்றி வந்தது. 

“பாவம் சார் அவினாஷ், காதல் மனைவியை கொலை செய்திருந்த கோரத்தை பார்த்து மனுஷன் அப்படியே மயங்கி விழுந்துட்டார். அவினாஷ் வீட்டிலேயும் விசாரிச்சிட்டோம். அவங்களுக்கும் ஒன்றும் தெரியவில்லை. மருமகள் அநியாயமாக கொல்லப்பட்டத்தை நினைச்சி நினைச்சி கதறி அழறாங்க. பாவ்னாவுக்கு அப்பா இல்லை, அம்மா மட்டுமே. ஒரு அண்ணன். அவன் இப்போதைக்கு வெளிநாட்டில் இருக்கான்…”

“சரி அவினாஷுக்கு எத்தனை மணிக்கு பாவ்னாவிடமிருந்து அழைப்பு வந்தது… ? 

“ஆறு மணிக்கு. அவினாஷின் நண்பன் தீபேஷும் அதையே தான் சொன்னார்…”

“இது யார் புது கேரக்டர்… ? 

“அவினாஷின் நண்பன் தீபேஷ். இருவரும் ஒரே கம்பெனியில் தான் வேலை செய்யறாங்க. அது மட்டுமில்லை சார், இருவரும் ஒன்றாக தான் ஜாகிங் போவாங்க. இருவரும் பைக்கில் பார்க்குக்கு வந்துட்டு அங்கு ஜாகிங்கை முடிச்சிட்டு பைக்கில் வீடு திரும்பிடுவாங்களாம். சம்பவத்தன்று ஜாகிங் போன பொழுது தான் அவினாஷுக்கு பாவ்னா அழைத்தது.

இந்த கேஸ் ரொம்ப குழப்பமா இருக்கு ஸார், எல்லோரின் வாக்குமூலம் ரொம்ப சுத்தமா இருக்கு. எங்கேயும் பிசிர் தட்டலை. அதான் மேற்கொண்டு எப்படி மூவ் செய்யறதுன்னு தெரியவில்லை…” 

தனபாலின் சற்று எரிச்சலான பேச்சு கார்த்திக்கிற்கு புரிந்தது. சற்று அமைதி காத்தவன், ஏதோ தோன்ற தனபாலை நோக்கினான்.

“அந்த தெருவில் சிசிடிவி கேமிரா ஏதும் இருக்கா… ?

“நோ சார், அது ஒரு மிடில் க்ளாஸ் மக்கள் வாழும் ஏரியா, ஏதாவது பெரிய பங்களா, அல்லது கடைகள் இருந்திருந்தால் கூட சிசிடிவி மூலம் நமக்கு ஆதாரங்கள் கிடைச்சிருக்கு வாய்ப்புண்டு…”

“ஓகே தனபாலன், சபரிநாதன் சொன்ன அந்த இரண்டு பேரை தவிர வேறு யாரும் வந்திருந்தால்… ? என்ற கேள்வியெழுப்ப தனபாலன் அமைதிகாத்தார். 

“ஆனால் அப்படி யாரும் வந்ததாக தகவல் கிடைக்கலையே விசாரணையில். அப்புறம் எப்படி சார் இந்த கேஸை மேற்கொண்டு நடத்தறது… ? 

“இட்ஸ் ஓகே, நான் பார்த்துக்கிறேன். அதற்கு முன்னால் எனக்கு தீபேஷை சந்திக்கணும், அதற்கு ஏற்பாடு செய்யுங்க. அப்புறம் கொலை செய்யப்பட்ட பாவ்னாவின் பிளாங்கிங்ஸ் கலெக்ட் செய்து வைச்சிருக்கீங்க தானே, அதையும் பார்க்கணும்…” என தனபாலன் தலையை உருட்டிவிட்டு ரெகார்ட் ரூமினுள் சென்று ஒரு பிளாஸ்டிக் கவரை கொண்டு வந்து கொடுத்தார். 

அந்த கவரில் பாவ்னா அவினாஷ் என்று பிரிண்ட் செய்யப்பட்ட பேப்பர் பின் செய்யப்பட்டிருக்க கார்த்திக் அதை டேபிளில் கொட்டி ஒரு குச்சி மூலம் அதில் ஏதாவது கிடைக்கிறதா என்று தேடினான். அவன் நினைச்ச மாதிரி எதுவும் இல்லையென்றதும் அதிலிருந்த கைபேசியை கையில் எடுத்தான். 

லேட்டஸ்ட் வகை ஆப்பிள் போன். அதை கையில் எடுத்தது அப்படியும் இப்படியும் திருப்பி திருப்பி பார்த்துவிட்டு அதை மட்டும் தனியே எடுத்து வைத்தவன் மீதி பொருட்களை மீண்டும் கவரில் போட்டு மீண்டும் பின் செய்து தனபாலிடம் கொடுத்துவிட்டு எழுந்தான்.

பிரான்ஸ்…

இன்னும் நாலைந்து மாதங்களில் வருமான வரி டிக்ளேர் செய்வதற்கான படிவங்களை தயார் செய்யவேண்டும். அது சாதாரண பணி அல்ல. மிகவும் சிக்கல் நிறைந்த வேலை. ஒவ்வொரு தனி மனிதனின் வருமானத்தை அவர்களின் படிவத்தில் நிரப்பி அவர்களின் பிள்ளைகள் விவரத்தையும் சரியாக குறிப்பிட வேண்டும். 

இந்த படிவத்தில் இருக்கும் வருமானத்தை அவன் வேறு எதற்க்கெல்லாம் நியாயமாக செலவு செய்தானென்று கணக்கு கொடுப்பான். அதை பொறுத்து எவ்வளவு வரி கட்டவேண்டும், அல்லது அவர்களுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை அரசு நிர்ணயிக்கும். இந்த பணியில் கண்ணை விளக்கெண்ணெய் ஊற்றி கொண்டு செய்தாலும் சில தவறுகள் நேருவதுண்டு. அப்படி நேரும் பொழுது படிவத்தை தயாரித்தவர்களுக்கு மண்டகப்படி கிடைக்கும். 

இதுவரை ரித்திகாவிற்கு அப்படியொரு பிரச்சினை ஏற்பட்டதில்லை. மிகவும் கவனமாக படிவத்தை தயாரிப்பாள். அந்த அலுவலுகத்தை பொறுத்தவரை அரட்டை அடிப்பது, ஓபி அடிப்பது முடியாது. வருடம் முழுவதும் வேலை இருந்துக்கொண்டே இருக்கும். டிசம்பர் மாததிலிருந்து படிவம் தயாரிக்க தொடங்கி அதை மே மாதம் பயனாளர்களுக்கு அதாவது மக்களுக்கு அவர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். அதன் பிறகு ஒவ்வொருத்தரிடமிருந்தும் வரும் கணக்கு காட்டப்பட்ட படிவம் வரும் பொழுது அதை சரி பார்த்து மீண்டும் டிக்ளரேஷன் பேப்பரை அனுப்பவேண்டும். இது மூன்று மாதம், நான்கு மாதம் போகும். அது முடிந்ததும் வீட்டு வரிக்கு படிவம் தயார் செய்யவேண்டும். இப்படியே நாட்கள் வேலையிலே ஓடும்.

இன்றும் அந்த வேலையில் தான் மூழ்கி இருந்தாள் கவனத்துடன். மதியம் காண்டீனில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் தன் சீட்டில் வந்தமர, அனாயாவின் நினைவு வந்தது. குழந்தை சாப்பிட்டாளா ? நான் சொன்னபடி கொடுத்ததை ஒழுங்காக சாப்பிட்டிருப்பாளா… ? என்று நினைக்கும் பொழுதே அவளின் திருமண வாழ்க்கையின் நினைவுகள் சம்மன் இல்லாமல் ஆஜரானது.

இதே மாதிரி தானே தனக்கு கணவனாக வந்தவன் மதியம் சாப்பிட்டானா இல்லையா என்று கவலைப்படுவேன். ஹ்ம்ம் இப்போ என்ன செய்துக்கொண்டிருப்பான். என் நினைவு அவனுக்கு இருக்குமா ? இல்லை அவன் சொன்ன மாதிரி வேறு ஒரு திருமணம் செய்திருப்பானா… ? 

சட் ! என்ன மாதிரி யோசனை இது ? நான் ஏன் தேவையில்லாமல் இதையெல்லாம் யோசிக்கிறேன். யார் எப்படி போனால் எனக்கென்ன ? நான் தேவையில்லை என்று குப்பை தூக்கியெறிந்தவனை பற்றி ஏன் கவலைப்படணும். தலையை குலுக்கிக்கொண்டவளாக சிஸ்டத்தை ஆன் செய்து அதில் தன்னை மூழ்கடித்துக்கொண்டாள். 

ஆனால் இப்பொழுது போல எப்பொழுதும் அப்படியே இருந்துவிட முடியாதே… !