Nenjil Therikuthu Panithuli -3

அத்தியாயம் -3

சென்னை …

அந்த பெரிய பங்களாவின் போர்டிகோவில் சீறலுடன் ஓர் கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய மாடர்ன் யுவதி பாய்ண்ட்டட் ஹீல்ஸ் சப்திக்க ஒயிலாக உள்ளே சென்றாள் மினி ஸ்கர்ட், இடுப்போடு அடம்பிடித்து நின்றுவிட்ட ஸ்லீவ்லெஸ் ஷர்ட் என. அவள் தோற்றமே அவளின் குணத்தையும் பறைசாற்றியது.

பெரிய ஹாலில் அரையடி அமுங்கும் சோபாவில் புதைந்திருந்த நடுத்தர வயது பெண்மணி பாக்கியலக்ஷ்மி என்கிற பாக்கியம் எதையோ மும்மரமாக படித்துக்கொண்டிருந்தார்.

சத்தம் கேட்டும் நிமிராமல்,”வாம்மா ஈஷா…” என்று வரவேற்றார்.

ஈஷா என்று அழைக்கப்பட்டவள் சற்று வியந்து,”எப்படி ஆன்ட்டி நிமிர்ந்து பார்க்காமலே நான் தான்னு கண்டுபிடிச்சீங்க…?

அவசரமே இல்லாமல் நிமிர்ந்து சற்று கேலியாக புன்னகைத்து,”யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னேன்னு சின்ன வயசில் படிச்சதில்லையா? ஓ ஸாரி நீ கான்வென்ட்ல படிச்சவ இல்லையா? நீ வர்றதுக்கு முந்தி தான் நீ போட்டிருக்கிற …ம்ம்ம் இல்லையில்லை நீ குளிச்சிட்டு வந்தேன்னு சொல்லணுமா, அந்த பெர்ப்யூம் வாசனை வருதே…”

அவரின் பேச்சில் கேலியும், நக்கலும் ஏகமாய் துள்ளி விளையாடியது.

ஈஷா அவர் கணவர் தேவராஜனின் நண்பர் சிவநாதனின் மகள். தேவராஜனும், சிவநாதனும் சிறு வயதிலிருந்து ஒன்றாக படித்து முடித்து வேலைக்கு செல்லாமல் இருவரும் சிறிய முதல் போட்டு ஒரு லேத் பட்டறையை ஆரம்பித்தார்கள்.

படித்தது எலெக்ட்ரிக்கல் இன்ஜினியர் என்றாலும் அப்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப அந்த தொழிலில் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையில் ஆரம்பித்தது தான். இருவரின் கடின உழைப்பும் அவர்களின் நம்பிக்கையை உண்மையாக்கியது. ஐந்து வருட கடின உழைப்பிற்கு பிறகு அவர்களின் பட்டறை கொஞ்ச கொஞ்சமாக தொழிற்சாலையாக மாற ஆரம்பித்தது. அதற்கு டி அண்ட் எஸ் என்று பெயரிட்டார்கள்.

பத்து பேர் வேலை செய்த இடத்தில் நூறு பேர், இருநூறு பேர் என்று வேலையாட்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே சென்றது. அந்த சமயத்தில் அவர்களுக்கு ஒரு புகழ்பெற்ற கார் கம்பெனி அவர்களுக்கு தேவையான உதிரி பாகங்களை செய்ய சொல்லி டி அண்ட் எஸ் கம்பனிக்கு ஒப்பந்தம் போட்டது. கார் கம்பெனி கொடுத்த கால கெடுவில் அவர்கள் எதிர்பார்த்த தரத்தில் டி அண்ட் எஸ் கம்பெனி அவர்களின் ஆர்டரை செய்து கொடுக்க பணம் கொட்டியது. அப்புறம் என்ன தொழிலில் ஏறு முகம் தான்.

அதன் பிறகு பல கார் கம்பெனிகளுக்கு இவர்களிடமிருந்து உதிரி பாகங்கள் செல்லும், அதே போல விமானத்திற்கு தேவையான சில பாகங்களும் இவர்கள் செய்து கொடுத்து தங்கள் சாம்ராஜ்ஜயத்தை விரிவு படுத்திக்கொண்டார்கள். தங்களை யாரும் அசைக்க முடியாது என்ற ஓர் நிலை வந்ததும் இருவரும் வீட்டில் பார்த்த பெண்களை திருமணம் செய்துக்கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆனார்கள்.

திருமணத்திற்கு பிறகு, தேவராஜன், சிவநாதனை போல அவர்களின் மனைவிகளான பாக்கியமும், ஜானகியும் நெருங்கிய தோழிகளாக மாற, ரத்த சொந்தம் இல்லாமலே நெருங்கிய உறவினர்கள் ஆனார்கள். தேவாவுக்கு ஒரு மகன் மற்றும் மகள். சிவாவுக்கு இரண்டும் பெண்கள். இரண்டாம் தலைமுறையும் முதல் தலைமுறையை போலவே நெருங்கி பழகினார்கள். அவர்களிடம் எவ்வித பாகுபாடும் இல்லை. மொத்தத்தில் தேவா-சிவா வீட்டில் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்று பாடாத குறை தான்.

மகன் கார்த்திகேயன் படிப்பில் தான் அந்த குடும்பத்தில் முதல் பிரச்சினை உண்டானது. அவனுக்கு ஐ.பி.எஸ் படித்துவிட்டு மக்களுக்கு சேவை செய்யவேண்டுமென்ற ஆசை. ஆனால் தேவராஜனோ பிசினெஸ் மேனேஜ்மென்ட் படி என்றார். மகனோ பிடிவாதமாக இருந்ததில் கடைசியில் இளைய தலைமுறை வென்றது. மகள் மதுரிகா அவளுக்கு பிடித்த துறையான கேட்டரிங்கை தேர்ந்தெடுத்தாள்.

கார்த்திகேயன் நேர்மையும், பிடிவாதமும் ஒருங்கே பெற்றவன், தங்கையோ மிகவும் மென்மையானவள். யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்வாள். எதற்கும் வாக்குவாதம் என்ற ஒன்று அவளிடம் கிடையாது.

சிவாவின் பெரிய பெண் ஆதிரா தந்தையின் ஆசைப்படி பிசினெஸ் பற்றிய படிப்பை தேர்ந்தெடுக்க சிறியவள் ஈஷா பேஷன் டிஸைனிங் எடுத்தாள்.

ஆதிரா அமைதியானவள் என்றால் சிறியவள் அவளுக்கு நேரெதிர். பந்தாவிலும், அலட்டலிலும் பிஎச்டி வாங்கியவள். அதனால் என்னவோ எல்லாவற்றிக்கும் பணிந்து போகிற மதுரிகாவை சற்று ஏளனமாக பார்ப்பாள். அதே போல அவளின் படிப்பான கேட்டரிங்கை சமையல் தொழில் என்று கேலி செய்வாள்.

“எப்படி தான் அடுப்பில் நின்று இதையெல்லாம் கத்துக்கறியோ, காய் வெட்டணும், கறி வெட்டணும், பாத்திரம் கழுவணும், ஒ நோ இதையெல்லாம் நினைச்சாலே என் உடம்பு சிலிர்க்குது. மெனிகியூர் செய்த நகங்கள் உடைந்து அலங்கோலமாகும்…” என்று தேகத்தை சிலிர்த்து காட்டுவாள்.

ஆனால் மதுவோ மென் புன்னகை செய்து,”இதில் கஷ்டப்படவோ, சிலிர்க்கவோ என்ன இருக்கு ஈஷா. உணவு என்பது மனிதனுக்கும் தன் கடைசி காலம் வரை தேவையான ஒன்று. அதை தயாரித்து வழங்குவது எவ்வளவு புண்ணியம் தெரியுமா? சாப்பாடு கொடுக்கிறவர்களை தான் அன்னபூரணின்னு சொல்வாங்க. அப்புறம் பார் யுவர் இன்பர்மேஷன் நான் படிப்பது கேட்டரிங் தான். ஆனால் கல்யாண வீடுகளில் சமைப்பது போல பெரிய பெரிய அண்டாக்களில், கரி அடுப்புகளில் சமைக்க மாட்டோம்.

அதற்கென இருக்கிற மாடர்ன் அடுப்பில் சிறிய அளவு தான் செய்வோம். சில சமயங்களில் ஹோட்டலுக்கு கூட சேம்பிள் செய்வோம். நிறைய பேஸ்ட்ரி, பேக்கிங் ஐடெம்ஸ், காய்கறி டேகேரேஷன்ஸ் , ஜூஸ் வகைகள் இதெல்லாம் நிறைய செய்வோம். ஆனால் எதுவுமே நீ நினைக்கிற மாதிரி இல்லை. இது நான் விரும்பி எடுத்த துறை. எனக்கு இதில் எவ்வித சிரமமும் இல்லை, சந்தோஷம் தான். அதனால் தேவையில்லாமல் உன் மனதையோ, உடம்பையோ அலட்டிக்காதே…”

ஒரு நாள் ஈஷாவுக்கு பதிலடி கொடுத்த தங்கையின் பதிலில் அசந்து போனான் கார்த்திக். தங்கை மேல் அவனுக்கு அளவுகடந்த பாசம். அவளுக்காக மலையையே புரட்டிக்கொண்டு வரச்சொன்னாலும் செய்யக்கூடியவன் தான். ஈஷா அடிக்கடி தங்கையை சீண்டும் பொழுது எரிச்சல் தலைதூக்கும். ஆனால் மூத்த தலைமுறையை நினைத்து தன் கோபத்தை அடக்கிக்கொள்வான். அன்று தங்கையையே ஈஷாவின் மூக்கு அறுபடுகிற மாதிரி பேசவும் கைதட்ட தோன்றியது.

தேவையில்லாமல் அலட்டிக்கொண்ட ஈஷாவின் முகம் போன போக்கை கண்டு சிரிப்பு வந்தது. அவனுக்கு ஆதிராவை பிடிக்கும். ஆனால் தங்கை எப்படியோ அதே நிலையில் தான் அவளிடம் பழகினான். ஆனால் ஈஷாவுக்கோ கார்த்திக் மீது ஒரு கண்.

பெரியவரின் கேலியில் ஈஷாவின் முகம் சுட்ட கத்திரிக்காயாய் சுருங்கியது. கிழவிக்கு திமிர் அதிகம் தான், இந்த வீட்டுக்கு மருமகளாக வந்த பிறகு உன் மகன் மூலம் உன்னை அடக்கி வைக்கிறேன் என்று டிபிக்கல் வில்லியாக கருவிக்கொண்டாள்.

“கார்த்திக் ஏன் இப்படியெல்லாம் செய்துட்டு இருக்கார். ஒரு மாசம் சிங்கப்பூர் போயிட்டு வர்றதுக்குள் எனக்கு தெரியாமல் என்னென்னவோ நடந்திருக்கு ? ஏன் ஆன்ட்டி என்னிடம் நீங்க சொல்லலை… ?

யாரும் பேச இடம் கொடாமல் கடுகாய் பொரிந்தவளை பாக்கியம் யோசனையுடன் பார்த்துவிட்டு மீண்டும் தன் கையில் வைத்திருந்த புத்தகத்தில் பார்வையை புதைத்துக்கொண்டார்.

“சொல்லுங்க ஆன்ட்டி, இங்கே நான் கழுதையாய் கத்தறேன், நீங்க உங்க வேலையை பார்த்துக்கிட்டு இருக்கீங்க ? அங்கிள் எங்கே ?

மீண்டும் பட்டாசாய் வெடிக்க, அதே நிதானத்துடன் நிமிர்ந்தார் பாக்கியம்.

“முதலில் உட்கார், நீ கேள்வி கேட்டு அதற்கு பதில் எதிர்பார்த்தால் அதற்கு மற்றவர்கள் பேசவும் நீ இடம் கொடுக்கணும். அதை விட்டு நீ மட்டுமே மூச்சு விடாமல் பேசினால் நானெப்படி பதில் சொல்ல முடியும்… ? நீ சொன்னபடி எனக்கு கழுதை தான் கத்துதோன்னு தோணிச்சிடிச்சி…” என்று மீண்டும் ஒரு கொட்டு வைத்தார்.

ஈஷாவுக்கு அவரின் கேலியில் எரிச்சல் குமிழியிட்டது உள்ளுக்குள். நான் கழுதையா என. ஆனால் தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் முக்கியமாக இருந்ததால் எரிச்சலை கட்டுப்படுத்திக்கொண்டவள் போல காட்டிக்கொண்டாள்.

“சரி வந்ததும் ஏதோ கார்த்திக்கை பற்றி புகார் செய்தியே? என்ன விஷயம் …?

“நான் சிங்கப்பூர் போவதற்கு முன் அவர் அங்கிளின் பிஸினெஸ்ஸை தானே பார்த்துக்கிட்டார், ஆனால் இப்போ பார்த்தால் போலீஸ் யூனிபார்மில் போலீஸ் ஜீப்பில் போயிட்டு இருக்கார். ஏன் திடீர்னு அந்த வேலைக்கு போய்ட்டார்…?

“ஓ ! இதானா விஷயம்…? அவன் ஐபிஎஸ் பாஸ் செய்தவன் தானே, உன் அங்கிளுக்கு உடல் நிலை பின்தங்கி இருந்தப்போ அவரின் சொல்படி பிசினஸை பார்த்துக்கிட்டான். இப்போ தான் அங்கிள் சரியாகிட்டாரே. அதனால் அவனின் கனவு வேலைக்கு போய்ட்டான். இதில் என்ன குற்றத்தை கண்டுபிடிச்சிட்டேன்னு வந்து தாம் தூம்னு குதிக்கிறே?

‘என்ன தாம்தூம்னு குதிக்கிறேன்னா, என்ன பெரிய ஐபிஎஸ். வருஷம் முழுக்க நாயாய் உழைச்சாலும் பிசாத்து சம்பளம் தானே. இதை எப்படி இந்த பெரிசுக்கு புரிய வைப்பது. பிசினெஸ் மேக்னெட் கார்த்திக்கின் மனைவின்னு சொல்றதுக்கு கெத்தா இருக்கும். அதை விட்டு ஐபிஎஸ் கார்த்திக்கின் மனைவின்னு சொன்னால் பத்தோடு பதினொன்று போல தான் இருக்கும். இதை எப்படி இந்த வீட்டு முட்டாளுங்களுக்கு புரிய வைப்பது…?

“என்ன ஆன்ட்டி இப்படி சொல்லிட்டீங்க? ஐபிஎஸ் வேலையில் அப்படி என்ன வருமானம் வந்துட போகுது. இதுவே கம்பெனியை பார்த்துக்கிட்டால் கார்த்திக்கின் திறமைக்கு இன்னும் கூட கம்பெனியை உயரத்திற்கு கொண்டு போகலாம். இதை நீங்க அவருக்கு எடுத்து சொல்லலாமே…?

பாக்கியத்திற்கு சின்னவளின் பேச்சு அர்த்தமற்றதாக தோன்றியது. இது கார்த்திக்கின் வாழ்க்கை, அவன் விருப்பம். அதில் தலையிட தாயாகிய எனக்கே உரிமையில்லை என்னும் பொழுது இவள் யார்? ஏற்கனவே திருமணம் தோல்வியில் முடிந்த வருத்தத்திலும், ஏமாற்றத்திலும் இருக்கிறவன். அவனை கட்டுப்படுத்த இவள் யார்?

அவருக்கு உள்ளுக்குள் ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது. சரியான மேனாமினுக்கி. விரலில் அழுக்கு கூட படாமல் வாழணும். வேலையாட்கள் இவளின் அடிமைகள், கணவனாய் வர போகிறவன் கூட இவளிடம் கைகட்டி சேவகம் செய்யவேண்டும் என்ற எண்ணமுடையவள். இவளின் எண்ணங்கள் என்னவென்று பாக்கியத்திற்கும், அவளின் குடும்பத்தாருக்கும் நன்றாக தெரிந்திருந்தாலும் சிவா அண்ணன் மற்றும் ஜானகி அண்ணியின் முகத்திற்க்காக ஈஷாவை பொறுத்துக்கொள்கிறார்கள்.

அது புரியாமல் இவள் இங்கே வந்து எல்லோரையும் தன் கைக்குள் கட்டுப்படுத்த முயற்சிக்கிறாள் என்று நினைக்கும் பொழுதே கோபமும், ஏளனமும் உண்டாகியது. இவள் ஏன் ஆதிரா மாதிரி அமைதியான, மரியாதை மிக்கவளாக இல்லை. இவளிடம் இருப்பது குணத்திற்கு ஏற்ற படிப்பா, இல்லை படிப்புக்கு ஏற்ற குணமா?

“என்ன ஆன்ட்டி மறுபடியும் அமைதியாயிட்டீங்க, அங்கிள் எங்கேன்னு சொல்லுங்க, நான் அவரிடம் பேசிக்கிறேன்…”

மீண்டும் நச்சரிக்க இம்முறை அவரின் கோபம் குரலில் தொனித்தது.

“இதோ பார் ஈஷா, அங்கிள் மாடியில் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்கார். ஐபிஎஸ் கார்த்திக்கின் கனவு வேலை. அதில் தலையிட உனக்கு துளியேனும் உரிமையில்லை. அண்ட் மோர் ஓவர் இப்போதைக்கு எங்களுக்கு இருப்பது கார்த்திக் மட்டுமே. அவன் விருப்பத்தை தடை செய்ய எங்களுக்கு விருப்பமில்லை.

மது மாதிரி நீயும் ஒருத்தனை திருமணம் செய்துக்கொண்டு சந்தோஷமாக வாழ முயற்சி செய். கார்த்திக்கின் பின்னால் சுற்றுவதை நிறுத்து. அவனுக்கு இதிலெல்லாம் இஷ்டமில்லை…” என்றார் தீர்மானமாக அதே சமயம் அழுத்தத்துடன்.

பெரியவரின் பேச்சில் ஈஷாவின் முகம் கன்றியது. எவ்வளவு திமிர் இருந்தால் நான் இந்த வீட்டு மருமகளாக கூடாதென்று நேரடியாகவே சொல்லும் இந்த கிழம் என்று பொருமினாள்.

பேஷன் டிசைனிங் கோர்ஸ் படிக்க வீட்டில் அடம் பிடித்து யு எஸ் சென்ற பொழுது கார்த்திக் ஒரு பெண்ணை விரும்பி மணந்துக்கொண்டான் என்ற விஷயம் கேள்விப்பட்டு கொதித்து போனாள். அவசரமாக விடுப்பு எடுத்துக்கொண்டு இந்தியா திரும்பியவள் பெற்றவர்களிடம் ஒரு மூச்சு சண்டை போட்டுவிட்டு கார்த்திக்கிடம் நியாயம் கேட்க வர, அவனோ புது மனைவியின் மோகத்தில் இருக்கவும் ஈஷாவுக்கு பற்றிக்கொண்டு வந்தது.

இப்போது அவனிடம் நியாயம் கேட்டால் கேலிக்கூத்தாகிவிடும், அதுவுமில்லாமல் தேவநாதன் அங்கிளும், தந்தையும் தன்னையே கடிந்துக்கொள்ள கூடும் என்பதால் கார்த்திக்கின் மனைவியை வார்த்தையால் குத்தி குதறிவிட்டு மீண்டும் விமானம் ஏறிவிட்டாள். இதற்கு நடுவில் மதுரிகாவுக்கு திருமணம் நடந்தது. அதற்கு தன்னால் வரமுடியாது என்றாள் வீட்டேற்றியாக. படித்து முடித்து மீண்டும் தாயகம் திரும்பியபொழுது கார்த்திக்கை வெறுப்பேற்ற ஒரு வெள்ளைக்கார காதலனையும் அழைத்து வந்தாள்.

ஆனால் அவள் நினைத்ததற்கு மாறாக கார்த்திக் மனைவியை விட்டு பிரிந்துவிட்டான் என்ற செய்தி கிடைத்ததும் மீண்டும் மது உண்ட மந்தியானாள். கார்த்திக் தனக்கென பிறந்தவன், அவனை யாராலேயும் தன்னிடமிருந்து பிரிக்க முடியாதென அவளே ஒரு நியாயத்தை கற்பித்துக்கொண்டு அழைத்து வந்தவனை ஏதேதோ காரணம் சொல்லி விரட்டியடித்து விட்டாள். இன்று வரை கார்த்திக்கின் மனமாற்றத்துக்காக காத்துக்கொண்டிருக்கிறாள். அடிக்கடி கார்த்திக்கின் வீட்டிற்கு வந்து தரிசனம் கொடுத்து எல்லோரிடமும் மிகவும் அக்கறை போல காட்டிக்கொண்டாள். ஆனால் அத்தனையும் விழலுக்கு இறைத்த நீராயிற்று.

இன்றோ கெழவி வெளிப்படையாகவே சொல்லிவிட்டாளே என்று விக்கித்து போனாள். உள்ளுக்குள் கோபம் சுனாமியாய் சுழன்றடித்தது அப்படியே கிழவியின் கழுத்தை நெறித்து விட கைகள் பரபரத்தது. ம்ஹீம் இந்த நேரத்தில் நிதானத்தை இழக்க கூடாது. இல்லையென்றால் உள்ளதும் போச்சு நொள்ளக்கண்ணா கதையாகிவிடும். இன்னும் கொஞ்ச நாளைக்கு நல்லவள் போல நடித்து கார்த்திக்கை மடக்கிவிட்டால் அப்புறம் இந்த கெழவி ஒரு தூசு தான்…

“சரி ஆன்ட்டி உங்களுக்கு மூடு சரியில்லை, நான் அப்புறம் வர்றேன் …”என்று எழுந்து வெளியில் செல்ல பாக்கியத்திற்கு முணுமுணுன்னு தலை வலித்தது ஈஷாவின் செண்ட் உபயத்தில்.

கமிஷனர் ஆபிஸ்…

கமிஷனர் அர்ஜுன் ராவ் …

தன் முன்னே ஒற்றை காலை வேகமாக தூக்கி அடித்து அட்டென்ஷனில் நின்று விறைப்பாக சல்யூட் ஒன்றை விநியோகித்தவனை புன்னகையுடன் நோக்கினார் கமிஷனர்.

“வாங்க மிஸ்டர் கார்த்திகேயன். நீங்க டூட்டியில் சேர்ந்த சில நாட்களிலேயே ஒரு கொலை கேஸை அனாயசமாக கையாண்டு கல்ப்ரிட்டை கண்டுபிடிச்சிருக்கீங்க. அந்த நம்பிக்கையில் தான் இந்த கேஸை உங்களிடம் ஒப்படைக்கிறேன். இன்றிலிருந்து நீங்க தான் இந்த கேஸின் இன்வெஸ்டிகஷன் ஆபிஸர். இதோ முதல் தகவல் அறிக்கை. இதை படிச்சிட்டு ஏதேனும் சந்தேகம் இருந்தால் இதை முதலில் டீல் செய்த தனபாலிடம் கேளுங்க…”

மேஜை மேலிருந்த பைலை கையில் எடுத்து முதல் பக்கத்தை புரட்டியவன் மீண்டும் மூடிவிட்டு,”ஷ்யூர் ஸார், நிச்சயம் உங்க நம்பிக்கையை காப்பாற்றுவேன்…”என்றவனுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

“உங்களுக்கென்று சில பேரை நான் தேர்ந்தெடுத்து வைச்சிருக்கேன். இதில் உங்களுக்கு யாரை வேண்டுமோ அவங்களை உதவிக்கு வைச்சிக்கங்க…”என்று அங்கிருந்த சில பேரை காட்டினார்.

அவருக்கு நன்றி சொல்லிவிட்டு மீண்டும் விறைப்பான சல்யூட்டுடன் விடைபெற்று வெளியில் வர தனபால் அவனை எதிர்க்கொண்டார்.