Nenjil Therikuthu Panithuli -25

அத்தியாயம் -25

கார்த்திக் ஐடியா என்றதும் ரித்திகாவினுள் ஆர்வம் குமிழியிட்டது. அவளுக்கும் பொட்டிக்கை விற்க விருப்பமில்லை தான். ஆனால் வெளிநாட்டில் குழந்தையுடன் இருந்துக்கொண்டு இந்தியாவில் எப்படி பிசினெஸ்ஸை கவனித்துக்கொள்ள முடியும். இவன் ஐடியா என்னவாக இருக்கும்ன்னு கேட்டு பார்க்கலாமே…? 

என்ன ஐடியா என்று கேட்டதற்கு கார்த்திக் பதில் சொல்லாமல் குழந்தைக்கு ரசமலாயை சிரத்தையாக எடுத்து ஊட்டிவிட, ரித்திகா அவனின் பதிலுக்காக காத்திருந்தாள். அவளின் பார்வை தன்னை மொய்ப்பதை அறிந்து உள்ளுக்குள் சத்தமாக சிரித்துக்கொண்டு நிதானமாக குழந்தையிடம் பேசி விளையாடிவிட்டு அவள் பக்கம் நிமிர்ந்தான். 

“என்ன ரித்திகா இப்பொழுது தான் என்னை புதுசா பார்க்கிற மாதிரி பார்த்திட்டிருக்கே… ? காலேஜில் பார்த்ததை விட இப்போ ஸ்மார்ட்டா இருக்கேனா … ? என்று குறும்புடன் கண்ணடித்தான்.

‘அடப்பாவி ஐடியா சொல்றேன்னு சொல்லிட்டு, இந்த மாதிரி பேசறான்…’ என்று பல்லை கடித்தாள்.

நர நர சத்தம் கேட்டு கார்த்திக்கிற்கு சிரிப்பு வெடித்துக்கொண்டு வர அதை கட்டுப்படுத்தி,” என் ஐடியாவை அப்புறம் சொல்றேன், இப்போதைக்கு நீ இந்த கடையை விற்கிற நினைப்பை கொஞ்சம் தள்ளி போடு. இப்பொழுதைக்கு வேறு வேலைகள் இருந்தால் அதை முதலில் முடி…”

“ஏன் ? 

“இந்த கடையை அனலைஸ் செய்ய ஒன்றுமில்லை, நான் தினமும் என் ஆபிஸ்க்கு இந்த பக்கம் தான் போயாகணும். நானே பார்த்திருக்கிறேன், நல்ல பிசினெஸ், நல்ல ஏரியா வேறு. சோ நீ சொல்றது தான் விலை. அதை நானே முன்னின்று முடிச்சி கொடுக்கிறேன் தேவைப்பட்டால். நீ மற்ற வேலைகளை கவனி…” 

கார்த்திக்கின் பேச்சிற்கு எரிச்சல் வந்தாலும், கடையை விற்பதில் அவசரம் காட்டாமல் இருப்பதும் நல்லது தானோ. அப்படியென்றால் நில குத்தகையை பற்றிய விஷயத்தை தான் கவனிக்க வேண்டும். ஆனால் விஷால் இல்லையே என்று இதழை கடித்தபடி யோசனையில் ஆழ்ந்திருக்க அவள் முன் சொடக்கு போட்டான் மற்றவன். 

“என்ன தீவிர யோசனை ? உன் மனதில் என்ன ஓடுதுன்னு சொன்னால் தானே என்னால் தீர்வு சொல்ல முடியும் ? இந்த கடையை விற்க நான் உனக்கு உதவி செய்யறேன். வேறேதும் பிரச்சினையில்லையே இதை தவிர்த்து…”

சில வினாடி யோசனைக்கு பிறகு,”இருக்கு, ஆனால் விஷால் இந்த வாரம் பிஸி. அதனால் தான் பொட்டிக் வேலையை முடிச்சிடலாம்ன்னு வந்தேன்…”என்றவள் கார்த்திக்கின் புரியாத பாவனைக்கு நில குத்தகை பற்றி கூற அமைதியாக உள்வாங்கிக்கொண்டான்.

“ஓ இவ்வளவு தானா ? உனக்கு பெட்டர்மாக்ஸ் லைட்டே தான் வேண்டுமா… ? எல்ஈடி வேண்டாமா… ?

“ஆஹான், வாட் டூ யூ மீன்… ? 

“உன் நில பிரச்சினையை தீர்க்க விஷால் தான் வந்தாகணுமா ? நான் வரக்கூடாதா ? அடடடா சரியான ட்யூப் லைட்டே தானோ நீ … ? 

அவன் விழிகளில் மின்னிய எதிர்பார்ப்பும், ஆர்வமும் அவளுள் சந்தோஷத்தை உற்பத்தி செய்தது. அதனால் அவன் கேலி செய்தது கூட அவளுக்கு உரைக்கவில்லை. கார்த்திக்கின் அருகாமையை யார் தான் வேண்டாமென்று சொல்வார்கள். இதனால் வேறெந்த பிரச்சினையும் வராமல் இருக்கணுமே என்ற சிறு பயமும் எழுந்தது.

“சொல்லு ரித்திகா, நான் வரலாம் தானே… ? 

இனியும் பதில் சொல்லாமல் மௌனிக்க முடியாதென்று தீர்மானித்தவள் ஒரு பெருமூச்சை விடுத்து,”உங்களுக்கு ஏன் சிரமம் கார்த்திக், விஷாலை வைச்சுக்கிட்டு அந்த வேலையை முடிச்சிக்கிறேன். உங்களுக்கு ஏற்கனவே நிறைய வேலைகள் இருக்கும். நீங்க தேவையில்லாமல் கமிட் பண்ணிக்காதீங்க…”

“ஹ்ம்ம் என்னை தூரத்தில் நிக்க வைச்சி பேசறேன்னு புரியுது. ஆனாலும் எனக்கு சிரமம் இல்லை, நானே உன்னுடன் வர்றேன். சொல்லு எப்போ கிளம்பணும் கிராமத்திற்கு…? 

“இல்லை கார்த்திக் …வந்து…”என்றவளை கையமர்த்தினான்.

“நாம நாளை கிளம்பறோம், நீ வந்து போய்ன்னு நிதானமா இழுத்துக்கோ…” என்றவன் குழந்தை ரசமலாய்யை சாப்பிட்டு முடித்திருக்க, பில் கட்டிவிட்டு இருவருடன் வெளியே வந்தான்.  

“சரி நான் கிளம்பறேன். நாளைக்கு மார்னிங் நான் வீட்டுக்கு வர்றேன்…”என்றவனை நிறுத்தினாள். 

“நீங்க ஒரு ஐபிஸ், உங்களுக்கு ஏகப்பட்ட வேலை இருக்கும், என்னால் உங்கள் வேலை பாதிக்கப்பட கூடாதுன்னு தான் யோசிக்கிறேன்…”

“உன் யோசனையை நீ பத்திரமா வைச்சிக்கோ. நாளை நில விஷயத்தை முடிச்சிடலாம்…” என்றவன் குழந்தைக்கு முத்தமிட்டுவிட்டு அவளை காரில் அமர வைத்து, ரித்திகாவிற்கு கையாட்டிவிட்டு தன் காரை நோக்கி சென்றான். 

இனி வேலை இல்லை என்று தோன்ற குழந்தையை அழைத்துக்கொண்டு படத்திற்க்கு சென்றாள். சில மணித்துளிகள் தியேட்டரில் கழிய கொஞ்ச நேரம் மாலில் சுற்றிவிட்டு அங்கேயே சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு திரும்ப வாசலில் ஆனந்த் காத்திருந்தான்.

அவனை கண்டதும் ரித்திகாவின் முகம் மலர அவனை வரவேற்று அமர வைத்தாள். 

“சாரி ரித்திகா, நேற்று அம்மா ரொம்ப பிரச்சினை பண்ணிட்டாங்க. அதனால் தான் விஷாலால் வரமுடியாமல் போய்டிச்சி. நீ தப்பா நினைச்சிக்காதே…”

“அதை விடு, ஏன் என்ன பிரச்சினை வீட்டில், நேற்று கோவிலுக்கு போகணும்னு விஷால் சொன்னானே… ? 

“ஆமாம் கோவிலுக்கு தான் போனோம், வீட்டுக்கு வந்ததும் அம்மா வழக்கம் போல திருமண பேச்சை எடுத்தாங்க. இம்முறை சித்தியும், சித்தப்பாவும் கூட்டு சேர்ந்த்துட்டாங்க. அண்ணன் திருமணம் வேண்டாமென்று சொல்ல, அதற்கு காரணம் நீதானென்று அம்மாவும், சித்தியும் வசைபாட ஒரே களோபரமாயிடிச்சி. அப்புறம் அண்ணன் திருமணத்திற்கு சம்மதிச்ச பிறகு தான் பெரியவங்க அடங்கினாங்க. பாவம் விஷால், அவனால் எதையும் பேச முடியாமல் தவிச்சதை நினைச்சாலே கவலையா இருக்கு. ப்ச் இந்த பெரியவங்களுக்கு ஏன் தான் புத்தி இப்படி போகுதோ… ? என்றான் மூச்சு விடாமல். 

ஆனந்த் சொன்னதை கேட்டு ரித்திகாவிற்கு வருத்தமாக இருந்தது, ஆனாலும் பிள்ளைகள் பெரியவர்களை குற்றம் சொல்வதில் எந்தவொரு நியாயமுமில்லை என்பது அவள் கருத்து.  தங்கள் குடும்பத்திலிருந்து ஒதுக்கி வைத்த மாமன் மகளை காதலிப்பதே தவறு. அவளும் திருமணமாகி ஒரு குழந்தையுடன் வெளிநாட்டுக்கு சென்றபிறகாவது பெற்றவர்கள் விருப்பப்படி திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகியிருக்கலாம். அதை விட்டு திருமணமான பெண்ணை நினைத்துக்கொண்டு கன்னி பையனாகவே இருந்தால் பெரியவர்கள் கோபப்பட தான் செய்வார்கள். போதாதிற்க்கு எதிரி வீட்டு பெண்ணுக்காக ஏன் வக்காலத்து வாங்கணும். இது எல்லாமே தவறு  தானே . ஆனந்த் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.

“அநேகமா அடுத்த வாரமே விஷாலுக்கு நிச்சயதார்த்தம் நடக்கும்னு எதிர்பார்க்கிறோம், ஏற்கனவே பெண்ணை பார்த்து வைச்சிருக்காங்க. இவனும் அந்த பெண்ணை பார்க்காமலே திருமணத்திற்கு தலையாட்டிட்டான். ஹ்ம்ம் என்ன சொல்றதுன்னே தெரியலை…”என்று பெருமூச்சு விட ரித்திகா சிறியவனை கனிவோடு நோக்கினாள். 

” நான் சொல்றேன்னு கோபிக்காதே ஆனந்த், விஷால் இத்தனை வருடம் திருமணத்தை மறுத்து வந்தது அவன் தவறு. அப்பா, அம்மா ஒதுக்கி வைத்த குடும்பத்து பெண்ணை காதலித்ததே தவறு. சரி, நான் திருமணமாகி போன பிறகாவது இவன் திருமணத்திற்கு சம்மதம் சொல்லியிருக்கலாமே. அதை விட்டு மறுத்து பேச பேச பெரியவர்கள் மூர்க்கமாயிட்டாங்க. அதான் எங்கு தட்டினால் விஷாலுக்கு வலிக்கும்னு தெரிஞ்சி என்னை திட்டியிருக்காங்க…”

“உன் மேலே வைத்திருக்கிற அன்பை அவங்க எப்படி தப்பா பேசலாம் …”என்றான் சிறியவன் கோபத்தோடு இடையிட்டு. 

“இல்லை ஆனந்த், பெரியவங்க தப்பா பேசலை என்னை, நீங்க எல்லோரும் பேச வைச்சிருக்கீங்க. அன்பா இருக்கீங்கன்னு சொல்லி என்னை பெரியவங்க கிட்டே திட்டு வாங்க வைச்சிருக்கீங்க. அவங்க பிள்ளைக்கு திருமணமாகாமல் நான் தடையா இருக்கிறேன்னு அவங்க நினைக்கறதில் தப்பில்லையே. அந்த மாதிரி தானே நீங்க பிகர் அவுட் செய்து வைச்சிருக்கீங்க. எனி ஹவ் ஆனந்த், விஷால் திருமணம் முடிஞ்சா அவங்க கூலாயிடுவாங்க…”

“என்னவோ போ, எனக்கு சுத்தமா பிடிக்கலை…” என்றான் சிறியவன் அலுப்பாக. 

ரித்திகா அவனுக்கு காஃபி கொண்டு வர உள்ளே செல்ல அனாயவுடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு ரித்திகா கொடுத்த காஃபியை குடித்துவிட்டு கிளம்ப, வாசல் வரை அவனுடன் சென்றாள். 

“சரி ரித்திகா நான் கிளம்பறேன்…” என்றபடி பைக்கில் ஏறி அமர்ந்து பைக்கை கிளப்ப முற்பட்டவனை ஒரு நிமிஷம் என்று நிறுத்தினாள்.

“நான் சொல்றதை கோபப்படாமல் கேளு ஆனந்த், மரங்கள் பறவைகளை என்றுமே சுமையாக நினைக்காது தான், அதற்காக எப்பொழுதும் பறவைகள் மரங்களையே சார்ந்திருப்பதில்லை…”

“சாரி நீ என்ன சொல்ல வர்றேன்னு புரியலை…”

“இனிமேல் யாரும் என்னை பார்க்க வராதீங்க. என்னால் உங்களுக்கு என்றுமே பிரச்சினை தான். இதை விஷால், நிவியிடம் சொல்லிடு.  நீங்க இல்லாமலும் என்னால் தனியாக வாழ முடியும், பிரான்சில் தனியாக தானே இருக்கேன். இனி என்னால் உங்களுக்கு தொல்லைகள் இருக்காது…”என்று நிறுத்தி நிதானமாக மனதை கல்லாக்கிக்கொண்டு கூற என ஆனந்த் அதிர்ச்சியில் உறைந்து போனான்.

“கிளம்பு, வீட்டில் போய் நிதானமா யோசிச்சி பார் புரியும். குட் பை…”என்றவள் உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டாள். 

அவளுக்கு ஆனந்தின் அதிர்ச்சி முகத்தை காண வருத்தமாக தான் இருந்தது.  கசின்ஸ் துணை சுகமாக தான் இருக்கிறது. ஆனால் என்னால் அவர்களுக்கு பிரச்சினை என்னும் பொழுது நான் தள்ளி இருப்பது தானே சரி. விஷாலுக்கும், நிவிக்கும் என் முடிவை ஏற்றுக்கொள்ள வருத்தமாக தான் இருக்கும். ஜஸ்ட் இரண்டு மாசம் தானே. அப்புறம் நான் பிரான்ஸ்க்கு பிளைட் ஏறிட போறேன். விஷாலுக்கு திருமணமாகிவிட்டால் அவன் மனைவியுடன் நேரம் செலவழிக்கவே நேரம் சரியா இருக்கும். அப்பொழுது நான் எடுத்த முடிவை பற்றி யோசிக்க கூட அவனுக்கு நேரமிருக்காது. 

“மம்மா ஜெ வே தொர்மி… (ஐ வாண்ட் ஸ்லீப் ) 

குழந்தையின் குரலில் சிந்தனை கலைந்து, அனாயாவின் உடையை மாற்றி, பல் துலக்கி படுக்க வைத்து விட்டு அடுத்த நாள் கிராமத்திற்கு செல்ல குழந்தைக்கும், தனக்கும் உடைகளை ரெடி செய்து, அப்படியே நிலங்களின் பத்திரங்களையும், குத்தகை பத்திரத்தையும் எடுத்து வைத்துவிட்டு உடம்பு கழுவிக்கொண்டு படுத்தவளுக்கு ஆதங்கம் தாளவில்லை. 

இந்த விஷால் செய்த முட்டாள்தனத்திற்கு இன்றும் இறந்து போன தன் பெற்றோரையும், சொந்தபந்தங்கள் யாருமின்றி தனியாக இருக்கும் அவர்களின் பெண்ணையும் திட்டிக்கொண்டிருக்கிறார்கள். இனியாவது இது ஒரு முடிவுக்கு வரட்டும். கோபத்திற்கு நடுவே அவளின் கைபேசி கார்த்திக்கின் அழைப்பில் சிணுங்கியது. 

“சொல்லுங்க கார்த்திக்…”என்றாள் அமைதியாக.

“ஹேய் என்னாச்சு குரல் டல்லடிக்குது. எனி ப்ராப்லம்…”

“அதெல்லாம் ஒன்றுமில்லை, நீங்க எதுக்கு போன் செய்தீங்க… ? 

கிராமத்தில் தங்கற மாதிரி வருமா என்று கேட்டு அதற்குண்டான பதிலை பெற்றுக்கொண்டு இணைப்பை துண்டிக்க ரித்திகாவிற்கு நெடு நேரமாகியும் உறக்கம் வர மறுத்தது. எப்பொழுது உறங்கினாளோ வைத்த  அலாரத்தின்  உதவியால் எழுந்து குளித்து ரெடியாகி குழந்தையை ரெடி செய்துக்கொண்டிருக்க வாசலில் கார்த்திக்கின் கார் ஹார்ன் சத்தம் கேட்டது. 

குழந்தைக்கு ஹாட் சாக்லேட்டையும், குக்கீஸையும் வைத்துவிட்டு கதவை திறக்க கார்த்திக் ட்ரேட் மார்க் புன்னகையுடன் நின்றிருந்தான். அவனை கண்டதுமே அதுவரை மனதை அழுத்திக்கொண்டிருந்த பாரம் சற்று இறங்கியது போல தோன்ற அவனை உள்ள வர சொல்லி உபசரித்தாள். 

கார்த்திக்கை கண்டதுமே அனாயா ஓடி வர அவளை அள்ளி அணைத்துக்கொள்ள காஃபி தயாரிக்க சமயலறைக்கு சென்றவளுக்கு கண்கள் பணித்தது அவர்களின் பாச பிணைப்பை கண்டு. நேற்று வரை தான் பலமாக நினைத்த விஷால், நிவி, ஆனந்த் மூவரையும் ஒதுக்கி தள்ளியதும் இனி தான் யாருமற்ற அனாதையாக இந்த சென்னை மாநகரில் இரண்டு மாதம் இருக்க போகிறோம் என்பதே அவளை அரித்துக்கொண்டிருந்தது. ஆனால் கார்த்திக்கும், அநாயாவும் கொண்டுள்ள பரஸ்பர அன்பு அவளுள் நெகிழ்ச்சியை உண்டு பண்ணியிருந்தது. 

கார்த்திக்கிடம் ஒரு கப் காஃபியை நீட்டிவிட்டு, தனக்கும் ஒரு கப்பை எடுத்துக்கொண்டவள் ஒரு தட்டில் அவள் செய்த குக்கீஸ் வைத்து நீட்ட ஒன்றை எடுத்துக்கொண்டான்.

கிராமத்திற்கு சென்று நிலத்தை விற்பதா, குத்தகைக்கு விடுவதா என்ற விஷயங்களை இருவரும் பேச, ரித்திகா சொல்வது போல விற்பதை விட குத்தகை தான் லாபம் என்று அவளுக்கு புரியவைத்தான். விற்றால் அத்தோடு அந்த நிலத்திற்கும் உனக்குமுண்டான தொடர்பு விட்டு போய்டும். பணமும் சீக்கிரம் செலவழிந்து விடும். இதுவே நிலத்தை குத்தகை விட்டால் நிலம் எப்பொழுது உன்னுடையதாக இருக்கும், பணமும் வருஷா வருஷம் வந்துக்கொண்டே இருக்கும் என்று எடுத்துரைக்க ரித்தியும் யோசித்துவிட்டு குத்தகைக்கே விட்டு விடலாம் என்ற முடிவுக்கு வந்தாள். 

மூவரும் கிளம்பி,வீட்டை பூட்டிக்கொண்டு காரிலேற குழந்தையை பின்னால் அமரவைத்து, அவள் கையில் பெரிய பொம்மையை கொடுத்து, கையில் ஒரு பிரென்ச் பட புத்தகத்தையும் கொடுக்க ரித்திக்காவின் விழிகள் விரிந்தது. அனாயாவுக்காக கார்த்திக் ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்தது அவள் மனதை தொட, நன்றியுடன் அவனை நோக்கினாள்.

அவளை முன் சீட்டில் அமர சொல்ல, முதலில் தயக்கத்துடன் தான் அமர்ந்தாள். கார்த்திக் பக்கம் திரும்பாமல் காரின் வெளியே பிடிவாதமாக பார்வையை திருப்பி வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தவளிடம் அவளின் கிராமத்தை பற்றி விவரங்களை கேட்க ஒன்றிரண்டு வார்த்தைகளில் தான் பதில் வந்தது. ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே அவளின் வாய் பூட்டு கழன்றுக் கொண்டது கார்த்திக்கின் கலகல பேச்சிலும், சிரிப்பிலும். 

“தீடிர்ன்னு எங்கே ரிது காணாம போயிட்டே… ? 

அவன் தன் பெயரை சுருக்கி அழைத்தது கூட கருத்தில் படவில்லை. கார்த்திக்கின் குரலிலிருந்த ஏதோ ஒன்று அவளை ஏதோ செய்தது.

“ஹெய்ன்… !!

“உன் பைனல் இயர்ன்னு நினைக்கிறேன், உன்னை பார்க்க வந்தேன் கல்லூரிக்கு, ஆனால் நீ அங்கில்லை. உன்னை பார்க்க முடியாமல் எவ்வளவு வருத்தப்பட்டேன் தெரியுமா…” என ரித்திக்காவின் இதயம் இனிதாக அதிர்ந்தது கார்த்திக் தன்னை தேடி வந்ததை கேட்டு. 

“கா…ர்…த்…தி…க்…” குரல் நடுங்கியது.

சாலையில் விழிகளை பதித்தபடி,”ஹ்ம்ம் நான் எம்ஐடியில் படிச்சிட்டிருந்தேன். அங்கு நான் ஹாஸ்டலில் தங்கி படிச்சதால் என்னால் நினைச்ச நேரத்திற்க்கு நினைச்ச இடத்திற்கு போக முடியலை. அதன் பிறகு மேல் படிப்பிற்காக நான் லண்டன் செல்வதற்கு முன் உன்னை பார்க்க கல்லூரிக்கு வந்தேன். ஆனால் நீ இரண்டாம் வருடத்திலேயே வேறு கல்லூரிக்கு போய்ட்டேன்னு கல்லூரி பிரின்சிபால் சொன்னார். எனக்கு ஏமாற்றமா போய்டிச்சி. என்னை தேடி நிறைய காதல் வந்தது, ஆனால் யாரிடமும் என் மனசு லயிக்கவில்லை. என் மனது தேடியது உன்னை மட்டுமே… “

கார்த்திக்கின் வாழ்க்கையில் வேறு ஒரு பெண் என்றதும் அதை ஜீரணித்துக்கொள்ள அவளால் முடியவில்லை. இருந்தும் அவன் மீது தான் வைத்திருந்தது காதல் தானா என்று தெரியாத நிலையில் அவன் நினைவில் தன்னை மூழ்கடித்துக்கொள்ள விரும்பாமல் படிப்பில் கவனம் செலுத்தலானாள். ஆனால் ஆறு மாதத்தையே நெட்டி தள்ள வேண்டி இருந்ததது. கல்லூரியில் எங்கு பார்த்தாலும் கார்த்திக் நிற்பது போலவே தோன்றும். அவளின் ஸ்கூட்டியை எடுக்க வந்தால் அங்கும் கார்த்திக் பைக் அருகில் நிற்பது போல தோன்ற பெரும் சித்ரவதையாக இருக்கும். இனியும் இந்த கொடுமைகளை அனுபவிக்க முடியாது என்று முடிவெடுத்தவள் தந்தையிடம் சொல்லி வேறு கல்லூரிக்கு மாறிவிட்டாள். 

ஆனால் அவன் தன்னை தேடி வந்திருக்கிறான் என்பதே அவளுள் ஓர் சிலிர்ப்பை உண்டு பண்ணியது. ச்சே அந்த சமயம் நானில்லாமல் போய்விட்டேனே என்று தன் மீதே சிறு கோபமும் எழுந்தது. முந்திரிக்கொட்டை என்று திட்டியும் கொண்டது ஆசை கொண்ட மனது. கார்த்திக்கும், அவளால் சந்திக்க விடாமல் செய்த விதியை என்னவென்று நொந்துக்கொள்வது….?

இருவரிடையே கனமான அமைதி நிலவ, மீண்டும் கார்த்திக் தான் அதை கலைத்தான்.

“சரி அதை பற்றி அப்புறம் பேசலாம், நேற்றிலிருந்து உன் குரலும் சரியில்லை, முகமும் சரியில்லையே ஏன்… ? என்றவனின் விழிகள் ரிவேர்வியு மிர்ரர் வழியாக புத்தகத்தில் ஆழ்ந்திருந்த அநாயாவை நோக்கிவிட்டு ரித்திக்காவிடம் திரும்பியது.

சில நொடிகள் மௌனித்தவள், தன் மனதிலிருந்ததை கடகடவென அவனிடம் கொட்ட ஆரம்பித்தாள்.  விஷால் வீட்டில் நடந்தது, ஆனந்த் வந்து பேசியது, தான் ஆனந்திடம் பேசியது என்று எல்லாம் சொல்ல சொல்ல, அவளின் குரல் தழுக்க தழுக்க விழிகளில் கண்ணீர் துளிர்த்தது.  

மடியில் கோர்த்திருந்த விழிகளையே பார்த்தபடி சில நொடிகள் மௌனித்தவள், தன் வேதனையை விழுங்கி,”என் அப்பா, அம்மாவுக்கு பிறகு எனக்கென்று இருந்தது என் கசின்ஸ் தான். ஆனால் இப்போ … ? என்றவளுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வர மறுக்க கழிவிரக்கத்தில் அழுகை வெடித்துக்கொண்டு வர இதழை கடித்து பார்வையை வெளிப்பக்கம் பார்வையை திருப்பிக்கொண்டாள் வலுக்கட்டாயமாக. 

அவளின் தோளின் மீது கார்த்திக்கின் கரங்கள் மென்மையாக படிய, கன்னங்களில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டு தன்னை சமன்படுத்திக்கொண்டு கார்த்திக் பக்கம் திரும்பி மெலிதாக புன்னகைத்தாள்.

“உன் கஷ்டம் எனக்கு புரியுது, பெரியவர்களின் பேச்சுக்கு உன் மீது பாசம் வைத்திருக்கிற உன் கசின்ஸ் என்ன செய்வாங்க. அன்பு, நேசம், காதல் என்பதெல்லாம் மற்றவர்கள் வற்புறுத்தி வருவதில்லை. அதுவாகவே இயல்பாக வருவது. உன் கசின்ஸ் பாசமும், நீ அவர்கள் மேல் கொண்டுள்ள நேசமும் இயல்பானதே. அதை பெரியவர்கள் புரிந்துக்கொள்ளாமல் பேசினால் பாவம் அவர்கள் என்ன செய்வார்கள். எப்படியோ பேசினது பேசியதாகவே இருக்கட்டும். இனி அதை பற்றி மனதை வருத்திக்கொள்வது வேஸ்ட், அடுத்த வேலையில் கவனம் செலுத்து…”

“ஹ்ம்ம்…”என்றவள் கண்ணீரை டிஷ்யூ பேப்பரால் ஒற்றிக்கொண்டு,”தேனுர் போக இன்னும் எவ்வளவு நேரமாகும்…” என்று விசாரித்தாள்.

“இப்போ தான் விழுப்புரம் வந்திருக்கோம். எப்படியும் கிராமத்தை போய் சேர மூன்று மணி கூட ஆயிடும். பெரம்பலூரில் மதியம் லன்ச் முடிச்சிட்டு போய்டலாம்…” என ரித்திகா சீட்டில் சாய்ந்து விழிகளை மூடிக்கொண்டாள். அவள் மனம் முழுவதும் ஆனந்திடம் பேசியதே ஓடிக்கொண்டிருந்தது. விஷாலும், நிவியும் எந்தளவு மன வேதனை அடைவார்கள் என்று நினைத்தாலே அவளுக்கு துடித்தது.

வண்டி திடீரென்று நிற்க, ரித்திக்காவின் விழிகளை மலர்த்தினாள்.

“நான் போய் ஜூஸ் வாங்கிட்டு வந்துடறேன் குழந்தைக்கு…” என ரித்திகா மறுக்கவில்லை. 

மூவருக்கும் பிரெஷ் ஜூஸ் வாங்கிக்கொண்டு பக்கத்தில் இருந்த பேக்கரியில் பிஸ்கஸ்ட்ஸ் வாங்கிக்கொண்டு வந்தவன் ரித்திகாவிடம் ஜூஸை கொடுத்துவிட்டு தன்னுடையதை வைத்துவிட்டு, அனாயாவுக்கு ஜூஸை புகட்டிவிட்டான். ரித்திகா தான் செய்கிறேன் என்று சொல்லியும் விடாமல் அவனே செய்ய சற்று முன்னிருந்த கவலையெல்லாம் பஞ்சாய் பறந்து போக இருவரையும் வாஞ்சையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். 

மூவரும் ஜூஸ் குடித்து முடித்ததும் குழந்தை படுக்க ரெடி செய்து கொடுத்துவிட்டு மீண்டும் வண்டியை எடுக்க அனாயா வண்டியின் சுகமான பயணத்தில் மெதுமெதுவென்று போடப்பட்டிருந்த மெத்தையில் கண்ணயர அவளுக்கு பாதுகாப்பாய் இரண்டு பக்கமும் பெரிய பொம்மைகளை அடப்பு கொடுத்திருந்தான்.

குழந்தை நிம்மதியாக உறங்குவதை திருப்தியாக பார்த்துவிட்டு,”மதுவின் குழந்தையை பற்றி பேசலாமா கார்த்திக்…”என அவனோ ஆச்சர்யமாக பார்த்தான் அவளை.