Nenjil Therikuthu Panithuli -24

அத்தியாயம் -24

கார்த்திக்கின் குறுந்செய்திக்கு முதலில் அதிர்ந்ததென்னவோ ஒருசில நொடிகள் தான். அவன் தன்னை பற்றி கண்டுபிடித்தது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அவனுடைய அம்மாவிடம் சொல்லியிருக்கிறாளே கணவனை பிரிந்து வாழ்வதாக. அவர் சொல்லியிருப்பார், ஆனால் நான் இருப்பதாக பொய் சொன்ன கணவன் இன்று இந்த பூவுலகிலேயே இல்லையே. இதை கண்டுபிடிக்கட்டும் இவன் என்று சிரிப்பு எழ வேண்டுமென்றே சோக ஸ்மைலி போட்டுவிட்டு கைபேசியை அணைத்து டேபிளில் வைத்துவிட்டு உறங்க முயற்சித்தாள்.

ஆனால் உறக்கம் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டியது. இன்று காலையில் எதிர்பாராமல் சந்தித்தது, மீண்டும் அவன் மதிய வேளையில் வந்து பேசியது, திரும்பவும் மாலையில் வந்து அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டு வீட்டில் கொண்டு வந்து விட்டது. அவன் பேசிய பேச்சுக்கள் ஆகியவையே அவள் மூளையில் உலா வந்துக்கொண்டிருந்தது. ஒரே நாளில் மூன்று முறை அவனை சந்தித்தது அவளுக்கு நம்ப சிரமமாக இருந்தது; ஆயினும் உண்மை அதானே.

ஒவ்வொன்றையும் நினைக்க நினைக்க இதழில் கசியும் சிரிப்பை தடுத்து நிறுத்த முடியவில்லை. தன்னை போலவே அனாயாவும் அவனின் பேச்சில் மயங்கி போயிருக்கிறாள், அதனால் தான் யாரிடமும் சட்டென்று ஒட்டிக்கொள்ளாதவள் முதல் நாளிலேயே அவனுடன் வெளியே செல்கிற அளவுக்கு வந்திருக்கிறாள். கார்த்திக் அழைத்தவுடன் கொஞ்சம் கூட மறுக்காமல் உடனேயே அவனுடன் சென்றுவிட்டாள். சுகமான சிந்த்னைகளிடையே விழிகள் உறக்கத்தில் செருக கைபேசியில் டெக்ஸ்ட் வரும் சத்தம் கேட்டது.

அது கார்த்திக்கின் டெக்ஸ்ட் என்று தெரிந்தும் இதழ்களில் புன்னகை உறைய உறங்கிப்போனாள் அவனின் நினைவுகளோடு.

விஷால் வீடு…

நிவேதாவின் குடும்பமும், விஷாலின் குடும்பமும் ரெடியாகி விஷால் வருகைக்காக காத்திருந்தது. கோவிலுக்கு செல்ல எல்லாவற்றையும் ரெடி செய்துவிட்டு மகனின் வருகைக்காக காத்திருந்த சிவகாமிக்கு எரிச்சல் பிறக்க தொடங்கியிருந்தது. கோவிலுக்கு செல்லும் சமயம் கோபப்படக்கூடாதென்று நினைத்தாலும் விஷாலின் செய்கையில் கோபம் எழுந்தது அவருக்கு.

“அமைதியா இரு சிவா, பையனுக்கு என்ன வேலையோ…? என்று சமாதானித்தார் புருஷோத்.

“ம்கூம் அப்படின்னு நீங்க சொல்றீங்க ஆனால் அவன் ஊரிலிருந்து வந்திருக்கிறாளே அந்த மேனாமினுக்கிக்கு சேவை செய்ய போயிருப்பானுங்க. இதோ இந்த கூட்டு களவாணிங்களை கேட்டால் தெரியும்…”என்றவர் நிவியை ஒரு முறை முறைத்துவிட்டு, மகன் ஆனந்திடம் திரும்பினார்.

“உன் அண்ணன் அவளை பார்க்கத்தானே போயிருக்கான், அவளுக்காக தானே கல்யாணமே வேண்டாம்ன்னு தனி மரமா வாழ்ந்திட்டிருக்கான். இவனுக்கு ஒரு நல்ல பொண்ணு அமையாதான்னு நான் ஊரிலிருக்கிற எல்லா கோவில்களுக்கும் போயிட்டு வர்றேன்….”

சிறிய மகனிடம் கேள்வியை கேட்டுவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் அவர் பாட்டுக்கு புலம்பிக்கொண்டிருக்க, நிவியின் விழிகள் ஆனந்தை எச்சரித்தது.

நிவியின் தாய் லட்சுமிக்கு அண்ணன் பெண் மேல் அவ்வளவு கோபம் இல்லையென்றாலும் தந்தை வெறுத்த ஒரே காரணத்திற்க்காக அதையே கெட்டியாக பிடித்துக்கொண்டிருந்தார். பெற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாத ஒரு பெண்ணை வீட்டு பிள்ளை எல்லோரையும் எதிர்த்துக்கொண்டு மருமகளாக கொண்டு வர வாய்ப்பில்லை என்று அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால் தமக்கை சிவகாமியின் கோபம் அர்த்தமற்றதாக தோன்றியது.

“அக்கா விஷாலுக்கு உண்மையில் வேலை இருந்ததோ என்னவோ ? அதான் நிவி சொன்னாளே, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க வந்திடுவான்…”என்று சொல்லி முடிப்பதற்குள் அவனின் கார் போர்டிகோவில் வந்து இளைப்பாறியது.

“ஹ்ம்ம் இதோ வந்திட்டான், நீங்க எதுவும் பேசாதீங்க. அவன் ரெடியாகட்டும்…”என்று தமக்கைக்கு அறிவுறுத்திவிட்டு விஷாலை நோக்கி லட்சுமி சென்றார்.

அங்கே நடந்த களோபரங்களை கண்டுகொள்ளாமல் நிவி போனில் தலையை புதைத்திருக்க, ஆனந்தோ டீவியில் மூழ்கியிருந்தான்.

“டேய் ஆனந்த், நீ டிவி பார்த்தது போதும், போய் சாமானையெல்லாம் வண்டியில் ஏற்று. ஹேய் நிவி நீயும் அவனுக்கு ஹெல்ப் பண்ணு…” என்று சிவகாமி ஆர்டர் போட இருவருமே அமைதியாக அவர் சொன்ன வேலையை பார்க்க ஆரம்பித்தார்கள்.

பொருட்களை எடுத்துக்கொண்டு போர்டிகோவிற்கு சென்றவர்கள் வண்டியில் ஒவ்வொரு பொருளையும் எடுத்து வைத்தபடி,”ஏண்டா ராஜமாதாவுக்கு மகனுக்கு திருமணமாகவில்லையே என்ற கவலையில்லை. ஆனால் அவன் காதலிக்கிற மாமா மகளை கல்யாணம் செய்துக்கொள்ள கூடாது. வர வர இந்த ராஜமாதாவின் அராஜகம் தாங்கலை…”

நிவியின் சலிப்பு தான் அவனுக்கும். பொண்ணு அமையணும்னு கோவில் கோவிலா சுத்தறதுக்கு பதில் அண்ணன் ஆசைப்பட்ட ரித்திகாவையே ஈகோ பார்க்காமல் திருமணம் செய்து வைத்திருக்கலாமே. அதை விட்டு எதற்கு இந்த பிடிவாதம். அப்புறம் மகனுக்கு திருமணமாகவில்லைன்னு புலம்ப வேண்டியது.

தான் நினைத்ததை கூறி,”அப்படி என்ன தப்பு பண்ணிட்டாங்கன்னு மாமா குடும்பத்தையே தள்ளி வைச்சிருக்காங்க. அவங்க கூட அன்னம் தண்ணி புழங்கக்கூடாதுன்னு பழங்ககாலத்து ஆள் மாதிரி பேசிட்டு திரியறாங்க. மாமாவும், அத்தையும் இறந்து அவங்க பெண்ணுக்கு திருமணமாகி மூன்றாவது தலைமுறையும் வந்தாச்சு. இவங்க இன்னும் காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டாங்கன்னு ஒரே காரணத்தை பிடிச்சிக்கிட்டு தொங்கிக்கிட்டிருக்காங்க. இவங்களை என்ன செய்யறது…”

“உண்மை தாண்டா பெரியப்பாவும் எதுவும் பேசமாட்டேன்கிறார், இதுக்கெல்லாம் என்ன தான் முடிவு…” என்று பெருமூச்செடுத்தாள்.

“பெரியவங்க அப்படி என்ன விஷயம் பேசிக்கிட்டிருக்கீங்க. பெருமூச்செல்லாம் பலமா இருக்கு…”

பக்கத்தில் கேட்ட குரலில் இருவருமே திடிக்கிட்டு திரும்ப விஷால் தான் நின்றுக்கொண்டிருந்தான்.

இருவருமே சற்று தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டு உள்பக்கம் பார்வையை செலுத்தி,”ப்ச் எல்லாம் அம்மா செய்கிற வேலை தான். எப்போ பார்த்தாலும் ரித்திகாவை கரிச்சி கொட்டறதே வேலையா போச்சு அவங்களுக்கு…”

ஆனந்தை தொடர்ந்து,”ஆமாம் விஷால், எனக்கென்னவோ நீ ரித்திகாவை மறந்திட்டு பெரியம்மா சொல்ற பெண்ணை கல்யாணம் செய்துக்கோ. இவங்க பழைய சினிமா வில்லன்கள் ரேஞ்சுக்கு தலைமுறை தலைமுறையா பகையை வளர்த்துக்கிட்டு. இருக்காங்க…”

சிறியவர்களின் பேச்சிற்கு விஷாலிடமிருந்து இளம் புன்னகை மட்டுமே பிறந்தது. அவனுக்கு தெரியும் தன் காதல் ஒரு எட்டாக்கனி என்று. ஆயினும் அவனால் ரித்திகாவை மறக்க முடியவில்லை. இதுவே அவள் மாமன் மகளாக இல்லாமல் வேறொரு பெண்ணாக இருந்திருந்தால் பெற்றவர்களின் பேச்சை மீறி திருமணம் செய்துக்கொண்டு வந்திருப்பான். ஆனால் ஏனோ மாமன் குடும்பத்திற்கு தன்னால் எந்தவொரு அவப்பெயரும் வந்துவிட கூடாது, தன்னை பெற்றவர்கள் மாமா, அத்தையையும், ரித்திகாவை திட்டறதையும் அவனால் தாங்கிக்கொள்ளவே முடியாது.

இப்பொழுது கூட ஏன் ரித்திகாவை கரிச்சி கொட்டறீங்கன்னு கேட்டுவிட முடியும். ஆனால் அதன் பிறகு மேலும் அவர்கள் வாயில் அவள் விழ வேண்டி இருக்கும். என்னமோ அவள் தான் தன் மகனை மயக்கியவள் மாதிரி சித்தரிப்பார்கள். இதெல்லாம் தேவையில்லை என்று தான் விஷால் அமைதியாக செல்கிறான். சிறியவர்களுக்கு இன்னும் பக்குவம் போதவில்லை, அதனால் தான் கோபப்படுகிறார்கள்.

பெரியவர்கள் வரும் ஓசை கேட்க மூவரும் வண்டியில் ஏறி அமர வண்டி கோவிலை நோக்கி புறப்பட்டது. அதை செலுத்தியவன் விஷால். ஆனால் அவன் மனமோ ரித்திகாவை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது எதிர்திசையில். கோவிலில் கூட , உனக்கு சீக்கிரம் திருமணம் பிராப்தம் கூட வேண்டும்ன்னு வேண்டிக்கோ என்ற தாய்க்கு புன்னகையை பரிசாக கொடுத்துவிட்டு, ரித்திகாவும், அனாயாவும் நன்றாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்துவிட்டு ப்ராகாரத்தை சுற்றி வந்து தம்பி தங்கையுடன் அமர்ந்தான்.

இளையவர்கள் மூன்று பேரும் அதிகமாக பெரியவர்களிடம் சகஜமாக பேச மாட்டார்கள். சிறிய வயதில் மாமாவின் பிரச்சினை தெரியும் முன் அவர்களும் சராசரி பிள்ளைகளாக இருந்தவர்கள் தான். ஆனால் பத்தாவது படிக்கும் பொழுது விஷாலுக்கு மாமாவின் காதல் விஷயம் தெரிய வர அது பெரிய விஷயமாக அவனுக்கு தோன்றவில்லை.

அவருக்கு பிடித்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் என்ற கருத்து அவனுக்கு. இதில் கோபப்படவோ, ஒதுக்கி வைக்கவோ என்ன இருக்கு? அவர் என்ன கொலையா செய்துவிட்டார். இதையே தன் தம்பி தங்கைகள் கேட்ட பொழுது அவன் சொல்ல அவர்களுக்கும் விஷாலின் மனநிலை தான். அது இன்றுவரை அப்படியே தான் இருக்கிறது. ஆனால் பெரியவர்கள் அவ்வப்பொழுது மாமன் வீட்டாரை தரக்குறைவாக பேசுவதை கேட்டு சிறியவர்கள் மனதில் கோபத்திரை விழுந்துவிட்டது பெற்றவர்கள் மீது.

ஓரிருமுறை ஏன் இல்லாதவர்களை பற்றி கேவலமாக பேசுகிறீர்கள் என்று கேட்டதற்கு, உன் மாமா பெண்டாட்டியை பற்றி உங்களுக்கென்ன தெரியும். அவள் ஒரு ஆள் மயக்கி, மாமாவின் வாழ்க்கையை நாசம் செய்தவள் என்று கூற அந்த பிஞ்சுகளின் மனதில் பெற்றவர்களின் மேல் வெறுப்பை வளர்த்து விட்டிருந்தது. அன்றிலிருந்து பெரியவர்கள் எதை பேசினாலும் கண்டுகொள்வதில்லை. சிறியவர்கள் தங்களுக்குள் பொருமிக்கொள்வதோடு சரி.

ரித்திகா வீடு…

காலையில் எழுந்திருக்கும் பொழுதே அவளின் மனதில் இனம் புரியாத புத்துணர்ச்சி. புன்னகையோடு கைபேசியை எடுத்தவள் நோட்டிபிகேஷனில் இருந்த கார்த்திக்கின் டெக்ஸ்ட்டை ஓபன் செய்ய அதில் லென்ஸ் வைத்து ஆராயும் ஸ்மைலியை அனுப்பியிருக்க சிரிப்பு வந்தது. கூடவே ஒரு குட்மார்னிங் வேறு. பதில் குட்மார்னிங் சொல்லாமல் கைபேசியை வைத்துவிட்டு குளித்து காஃபியை தயாரித்துக்கொண்டு ஹாலுக்கு வர அவளின் கைபேசி விஷாலின் அழைப்பில் சிணுங்கியது.

“குட் மார்னிங், சொல்லு விஷால், எப்போ வர்றே வீட்டுக்கு…?

சில நொடிகள் தயங்கி,”சாரி ரிது , என்னால் ஒரு வாரத்திற்கு அங்கு வர முடியாது. அதை சொல்லத்தான் அழைத்தேன். என்னை தப்பா நினைக்காதே ப்ளீஸ்…”

ஒரு வாரம் வர முடியாது என்றதும் ரித்திகாவிற்கு தனியாளாக கிராமத்திற்கு சென்று எப்படி குத்தகை விஷயத்தை கையாள்வது என்ற கவலை உண்டானது. பெண் மட்டும் தனியாக வந்திருக்கிறாள் என்றால் என்ன தான் பழகிவனர்கள் என்றாலும் நிச்சயம் ஏமாற்ற முயற்சிப்பார்கள். இப்பொழுது என்ன செய்வது? ஒரு வாரம் கழித்து செல்லலாம் என்றால் ஊருக்கு செல்வதற்கு முன் இந்த வேலையை முடிக்க வேண்டும். ரிஜிஸ்டர் அது இதுன்னு எப்படியும் இழுத்து விடுவார்கள்…

“ரிது லைனில் இருக்கியா, சாரிம்மா, இங்கே அம்மாவுக்கும், எனக்கும் ஒரே பிரச்சினை நேற்று. இந்த சமயத்தில் நான் உன் வீட்டுக்கு வந்தால் பிரச்சினை தான் எழும். கொஞ்சம் சமாளிச்சிக்கோ, ஒரு வாரம் கழிச்சி நான் எப்படியாவது வந்துடறேன். அம்மா வர்றாங்க, நான் வைச்சிடறேன்…” என்று இணைப்பு துண்டிக்கப்பட ரித்திகா அடுத்து என்ன செய்வதன்று தெரியாமல் குழம்பி கைப்பேசியையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

விஷாலை கண்டிப்பாக குற்றம் சொல்ல முடியாது, இரண்டு அத்தைகளும், சரி அவர்களின் கணவர்களும் சரி மூத்த தலைமுறையின் கோபத்தை ஒரு துளி கூட சிந்தாமல் சிதறாமல் அப்படியே பாதுகாத்து வருகிறவர்கள். குடும்பம், மானம், கெளரவம், ஜாதி, மதம் ஆகியவற்றை கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்கிறவர்கள். இவர்களின் மத்தியில் அவர்களின் மூன்று பிள்ளைகளும் தன்னிடம் சினேகமாக, அன்பாக இருப்பதே பெரிய விஷயம்.

அடுத்து என்ன செய்யலாம், மறுபடியும் குத்தகைக்கே விட்டுடலாமா? அப்படி விட்டால் ஒரு வார வேலையோடு முடிந்துவிடும். கடை லோக்கலில் இருப்பதால் அதை இங்கேயே வைத்து முடிக்கலாம். ஆனால் அதற்கும் அடித்து பேசுகிறவர்கள் யாராவது இருந்தால் நன்றாக இருக்கும். சரி தான் பிரான்சிலிருந்து இங்கு யாராவது உதவுவார்களா என்று நினைத்தா இங்கே வந்தேன். என் வேலையை நான் தான் பார்த்தாகணும். முதலில் கடை பிரச்சினையை முடிப்போம் என்று முடிவு செய்தவளாக குழந்தையை எழுப்பி குளிக்க வைத்து மார்னிங் உணவை சாப்பிட வைத்தாள்.

அவளும் ஜீன்ஸில் ரெடியாகி குழந்தையுடன் தன் கடைக்கு செல்ல அவள் கடை இருக்கும் பகுதி இன்று நன்றாக முன்னேறி இருந்தது. அப்பொழுது தான் கடையை திறந்து நேம் போர்டை வெளியே கொண்டு வந்து வைக்க ரிது குழந்தையுடன் காரில் அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்தாள். கடையின் ஓனர் வந்திருக்கவில்லை. வேலை செய்கிறவர்கள் தான் கடையை திறந்து சுத்தம் செய்துக்கொண்டிருந்தார்கள். கடையின் சேல்ஸ் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து தானே கடையை விலை பேச முடியும். அந்த கடையையே அவள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்க காரின் கதவை யாரோ தட்டினார்கள்.

கவனம் கலைந்து திரும்பியவள் காரின் வெளியே கார்த்திக்கை கண்டதும் அவளுள் இனிய திகைப்பு. அதை மறைத்துக்கொண்டு காரின் கதவை திறக்க, அனாயா “கார்த்தி தொந்தோன் …”என்று துள்ளி குதித்தாள்.

ரிது குழந்தையை தூக்கிக்கொண்டு காரைவிட்டு வெளியே வர குழந்தை கார்த்திக்கிடம் தாவியது. அவளை வாங்கி முத்தமிட்டவன் ரிது பார்த்துக்கொண்டிருந்த கடையை ஒரு முறை பார்த்துவிட்டு, அவளிடம் திரும்பினான்.

“ஏதோ இரண்டு நாளைக்கு வேலை இருக்குன்னு சொன்னே, இங்கே பொட்டிக் ஓபன் செய்வதை பார்த்திட்டிருக்கே. ஷாப்பிங் செய்ய பொட்டிக் ஓபன் செய்வதற்க்காக காத்திருக்கியா ரித்திகா, நல்ல பொட்டிக் தான். எல்லா துணி வகைகளும் தரமா இருக்கும். மதுவும் அடிக்கடி அங்கே போய் பர்ச்சேஸ் பண்ணுவா. சரி வா நானும் வர்றேன்…” என ரித்திகா மென்மையாக புன்னகைத்தாள்.

“நான் ஷாப்பிங் செய்ய வரலை கார்த்திக், நான் சொன்ன வேலையை செய்ய வந்திருக்கேன்…”என்றாள் பூடகமாக.

“வாட் வேலையா…? என்ன வேலை…?

“நீங்க சொன்னீங்களே, அங்கே எல்லாம் தரமா இருக்கும்னு. அது என் பொட்டிக் தான்…”

“வாவ் சூப்பர், தென் இங்கேயே ஏன் நிக்கிறே, உள்ளே போக வேண்டியது தானே…”

“போகலாம், ஆனால் ஊருக்கு போவதற்கு முன் லீஸ்க்கு விட்டிருந்தேன். இப்போ கடையை வித்திடலாம்ன்னு யோசிச்சிட்டிருக்கேன். அதான் கடையில் பிசினஸ் எப்படின்னு பார்த்திட்டிருக்கேன்…”

“ஹ்ம்ம் உண்மையில் பெரிய வேலை தான், ஆனால் ஏன் விற்கணும். நீயே நடத்தலாமே…”

“ப்ச் எப்படி முடியும், என்னால் பிரான்ஸிலிருந்துகிட்டு இங்கே எப்படி இதை பார்த்துக்கிறது. உடையவன் பார்க்காவிட்டால் பயிரும் கட்டையாம். அப்படி ஆயிடும் என் நிலைமை…”

“ஹ்ம்ம் இதுவும் உண்மை தான், சரி வா அங்கே இருக்கிற ஐஸ்க்ரீம் பார்லர்ல போய் உட்காரலாம்…”என ரித்திகாவும் குழந்தையை மனதில் இறுத்தி அவனுடன் நடந்தாள்.

இருவரும் ஒரு நல்ல இடத்தை தேர்ந்தெடுத்து அமர்ந்ததும், குழந்தைக்கு ரசமலாய் வாங்கி கொடுத்துவிட்டு தங்களின் பேச்சை தொடர்ந்தார்கள்.

“நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா, நீ கடையை விற்க வேண்டாம், நீயே கூட அதை நடத்தலாம்…”

“எப்படி …? என்றாள் குழப்பமாக.