Nenjil Therikuthu Panithuli -23

அத்தியாயம் -23

பாக்கியத்தின் பேச்சை சுவாரசியமாக கேட்டுக்கொண்டிருந்தவளுக்கு கார்த்திக்கின் குரல் அபஸ்வரம் தட்டியது போலிருந்தது.

“அம்மா உங்களுக்கும் எப்பவும் இதே பேச்சு தானா ? நான் எதை மறக்க நினைக்கிறேனோ அதை நீங்க விடாம பேசிட்டிருக்கீங்க. ப்ளீஸ்ம்மா இனியாவது அந்த பெயர்களை இந்த வீட்டில் சொல்லாமல் இருங்களேன். நீங்க சொல்லும் மஹாலக்ஷ்மி வாசம் செய்துட்டு போகட்டுமே…”என்றான் எரிச்சலுடன்.

அவன் பேச்சில் சிரிப்பு வந்தது இரு பெண்களுக்கும். ரிதுவுக்கு நன்றாகவே புரிந்தது அவன் அந்த பெண்களை எந்தளவு வெறுக்கிறான் என.

“சரிப்பா நான் இனி பேசலை…”என்று உடனேயே பெரியவர் ஒத்துக்கொள்ள கார்த்திக் அவளிடம் திரும்பினான். 

“ரித்திகா நான் குழந்தையை வெளியே அழைச்சிட்டு போறேன். நீ அம்மாவிடம் பேசிட்டிரு…” என அவள் அவசரமாக எழுந்தாள். 

“இல்லை கார்த்திக், நாங்க கிளம்பறோம். நேரமாச்சு, ஆன்ட்டியை பார்க்க வந்தேன், பார்த்து பேசிட்டேன் இனி கிளம்ப வேண்டியது தான்…”என்றபடி தன் பேகை எடுக்க முயல அவளை தடுத்தான் மற்றவன். 

பாக்கியத்திற்கும் சிறியவள் கிளம்புகிறாள் என்றதும் முகம் தொங்கிவிட்டது, அவளை ஏதாவது சொல்லி சற்று நேரம் நிறுத்தணும்னு நினைக்கும் பொழுதே சீமந்த புத்திரன் அதை செயலாக்கினான். 

“அதெல்லாம் போகலாம். இன்னும் கொஞ்ச நேரத்தில் அப்பா வந்திடுவார். நானும் வெளியே போயிட்டு வந்துடறேன். சாப்பிட்டுட்டு கிளம்பு…”என்று அவள் மறுக்க முடியாத வண்ணம் பேசிவிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே செல்ல ரித்திகா அவனையே ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். 

‘யாரிவன் என்னை தடுக்க, அதுவும் என் குழந்தையை மிகவும் உரிமையுடன் தூக்கிக்கொண்டு செல்கிறான். ஒருவேளை தங்கையின் குழந்தை என்ற உரிமையா ? இல்லை நான் சொல்வதை கேட்டே ஆகவேண்டும் என்ற எண்ணமோ… ? 

“என்னம்மா நின்னுக்கிட்டே இருக்கே ? என்று பெரியவர் சொல்லும் பொழுது தான் நின்றுகொண்டிருக்கிறோம் என்றே புரிந்தது. 

மீண்டும் அமர, “அதான் கார்த்திக் சொல்லிட்டானே, சாப்பிட்டுட்டே போ. எத்தனை வருஷம் ஆச்சு உன்னை பார்த்து பேசி…”என்றவர் வாயில் பக்கம் பார்த்துவிட்டு,

“அவனுக்கு ஈஷா என்ற பெயரே பிடிக்காது, போதத்திற்கு பூஜா என்ற பெயரும் இப்போ வெறுத்துவிட்டது. ஆனால் இந்த ஈஷா இவனை விடற மாதிரி இல்லை, விடாது கருப்பு மாதிரி அவனை தொடர்ந்துக்கிட்டே இருக்கா. 

என்னமோ சொல்வாங்களே, அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் அமுதமும் வைச்சிகிறவ. அவளிடமிருந்து தப்ப வைக்க தான் வேறு ஒரு பெண்ணை பார்த்து கட்டி வைச்சோம். ஆனால் வாணலிக்கு பயந்து கழனி பானையில் விழுந்த கதையாயிடிச்சி. ஹ்ம்ம் அழகும், அறிவும், அந்தஸ்தையும் கொடுத்த ஆண்டவன் விதியை மட்டும் அழகில்லாமல் எழுதி வைச்சிட்டான்.

இவனுக்கு ஏற்ற மாதிரி ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கலாம்ன்னா இவன் திருமணம் என்ற வார்த்தையை கேட்டாலே பிடரியில் கால் பட காத தூரம் ஓடறான். நாங்க என்னம்மா செய்யறது… ? என்று அவரின் ஆதங்கத்தை கொட்டி தீர்க்க ரித்திகா பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தாள். 

அவளுக்கும் கார்த்திக்கையும், ஆன்ட்டியையும் நினைத்து பரிதாபமாக இருந்தது. 

பாவம் எந்தளவு ஒரு பெண்டாட்டியிடம் கொடுமையை அனுபவிச்சிருந்தால் திருமணமே வேண்டாம் என்பார். அவரிடம் பேசணும், எல்லா பெண்களும் ஒரே மாதிரியில்லை என்று எடுத்து சொல்லணும். பெரியவர்கள் ஆசைப்படி திருமணம் செய்துக்க சொல்லணும்…’

“உன்னை மாதிரி ஒரு பெண் அவனுக்கு அமைந்தால் நன்றாக இருக்கும். ஹ்ம்ம் அதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும் போல…”என ரித்திகாவிற்கு இதயம் இனிதாக அதிர்ந்தது. அதே சமயம் பயமாகவும் இருந்தது இதே மாதிரி கார்த்திக்கிடம் சொல்லி வைத்துவிட போகிறார் என.

அதன் பிறகு என்னென்னமோ பேசினார்கள். பாக்கியம் வீட்டை சுற்றி காட்டினார். தேவராஜனும் வந்துவிட அவரும் சிறிது நேரம் பேசி சிரித்துக்கொண்டிருந்தார். நேரம் போனதே தெரியாமல் நேரம் ஒன்பதை நெருங்கியிருக்க ரித்திகாவிற்கு பரபரப்பு உண்டாக ஆரம்பித்தது.குழந்தையுடன் சென்ற கார்த்திக் இன்னும் வீடு திரும்பவில்லையே. குழந்தைக்கு ஏதேனும் … ? என்று நினைக்கும் பொழுதே வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு அவசரமாக வெளியே சென்றாள். 

காரிலிருந்து இறங்கியவன் தூங்கிவிட்டிருந்த குழந்தையை தோள் மீது போட்டபடி கையில் ஒரு சில பைகளோடு உள்ளே வந்துக்கொண்டிருக்க ரித்திகா அவனை எதிர்க்கொண்டாள் சிறு கவலையுடன். 

“என்னாச்சு கார்த்திக் அனாயாவுக்கு…”என்று அவனிடமிருந்து குழந்தையை வாங்க முற்பட அவளை நாசூக்காக தடுத்தான். 

“வெளியே சுற்றியலைந்த களைப்பில் தூங்கிட்டா, வேறேதும் இல்லை. இரு குழந்தையை படுக்க வைச்சிட்டு வர்றேன்…”என்றவன் அவனின் படுக்கைறைக்கு செல்ல ரித்திகாவும் அவனை பின்தொடர்ந்தாள் குழந்தையை கவனிக்க. 

 ரித்திகா செய்ய எதுவுமில்லாததால் உறங்கும் குழந்தையையே பார்த்துக்கொண்டிருக்க, படுக்கையில் குழந்தையை கிடத்திவிட்டு சரியாக போர்த்திவிட்டு திரும்பியவன் ரித்திகா மீது மோதிக்கொண்டான். 

மகளை பற்றிய கவலையிலும், இங்கேயே உறங்கிவிட்டாளே என்ற எண்ணத்திலும் அவளையே பார்த்தபடி நின்றுக்கொண்டிருந்தவள் கார்த்திக்கை சுத்தமாக மறந்துவிட்டிருந்தாள்.

“ஷ்ஷ்ஷ் ஆஆஆ …” என்று நெற்றியை தேய்த்துவிட்டபடி,”ஸாரி, ஏதோ நினைப்புல அப்படியே நின்னுட்டேன்…” என்றாள் கூச்சத்துடன். 

“ஹேய் அதனால் என்ன… ? என்றவன் அவளின் நெற்றியை பார்த்து, “ரொம்ப வலிக்குதா, தேய்ச்சி விடவா…”என்று அவளை நெருங்க சட்டென்று பின்னடைந்தாள்.

“இல்லையில்லை, இப்போ பரவாயில்லை…”என்றவளின் விழிகள் குழந்தையிடம் தாவிவிட்டு வெளியே செல்ல கார்த்திக்கும் கதவை சத்தமில்லாமல் மூடிவிட்டு அவளுடன் இறங்கினான். 

அவர்களை எதிர்க்கொண்ட பாக்கியம்,”சாப்பிட வாம்மா ரித்திகா, கார்த்திக் வாப்பா …”என்று அழைக்க இருவருமே டைனிங் டேபிளை நோக்கி நடந்தார்கள். 

அவளின் வேலை, பிரான்ஸ் நாட்டின் தட்பவெட்ப நிலை, குழந்தையின் படிப்பு, அவர்களின் கம்பனி, அதில் தயாரிக்கும் பொருட்கள் என்று பேச்சு களைகட்ட அரட்டையும் சிரிப்புமாக சாப்பிட்டு முடித்தார்கள்.  மணி பத்தை நெருங்கிவிட்டிருக்க ரித்திகாவுக்கு அதற்கு மேல் அங்கு நிற்க மனமில்லை. 

“சரிங்க ஆன்ட்டி, அங்கிள் நாங்க கிளம்பறோம். கார்த்திக் போகலாமா…” என்றாள் கெஞ்சும் விழிகளோடு. 

புன்னகையுடன் தன்னறைக்கு சென்று உறங்குகின்ற குழந்தையை பூ மாதிரி தூக்கிக்கொண்டு வர அவன் குழந்தையை பார்த்துக்கொள்ளும் விதத்தில் ரித்திகாவின் மனது கொள்ளை போனது. ஏன் இவனை மாதிரி நரேஷ் இல்லாமல் போனான். உலகத்தில் ஐம்பது சதவிகித ஆண்கள் நரேஷ் மாதிரியும், இருபத்தியைந்து சதவிகித ஆண்கள் கார்த்திக் மாதிரியும் மீதி சதவிகித ஆண்கள் எதிலும் சேர்த்தி இல்லாதவர்களாக இருப்பதேன். ஹ்ம்ம் என்று பெரிய பெருமூச்சொன்று எழுந்தது. 

ரித்திகா அமர்ந்ததும் அவள் மடியில் குழந்தையை படுக்க வைத்த கார்த்திக்கின் அருகாமை அவளை ஏதோ செய்தது. அவன் நிமிரும் வரை தலையை குனிந்து விழிகளை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.  கார்த்திக் அவன் சீட்டில் அமர்ந்ததும் பெரியவர்களுக்கு கையாட்டி விடைபெற வண்டி ரித்திகா வீட்டை நோக்கி சென்றது. 

இருவருமே பேசிக்கொள்ளவில்லை. இருவருமே தத்தம் நினைவில் பயணிக்க வீடு வந்ததும் கார்த்திக் இறங்கி குழந்தையை வாங்கி தன் தோளில் அலுங்காமல் நலுங்காமல் போட்டுக்கொள்ள ரித்திகா வீட்டை திறந்து உள்ளே சென்றாள். 

உரிமையுள்ளவன் போல் குழந்தையை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு, வெளியே வர, ரித்திகா குழந்தையின் செருப்பு, மற்றும் அவளுக்கு போட்டுவிட்டிருந்த நகைகளை கழட்டினாள். போர்வையை இழுத்து போர்த்திவிட்டு விடிவிளக்கை எரியவிட்டுவிட்டு கதவை மூடிக்கொண்டு வெளியே வர கார்த்திக் சோஃபாவில் கால் மேல் கால் போட்டபடி போனில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தான் மும்மரமாக. 

ஹாலில் நிறைய ஷாப்பிங் செய்த பைகளும், பொம்மைகளும் இருக்க, ரித்திகாவின் விழிகள் அவனை கேள்வியாக நோக்கியது இதெல்லாம் எதற்கென்று. 

தோளை ஸ்டைலாக குலுக்கி,”காலையில் வரும் பொழுது குழந்தைக்கு எதுவுமே நான் வாங்கிட்டு வரலை. அதான் குழந்தையுடன் ஒரு ஷாப்பிங்…” என ரிது அமைதியாக அவன் வாங்கிய பொருட்களை பார்த்துவிட்டு நிமிர்ந்தாள். 

“உங்க தங்கையின் குழந்தை என்கிற பாசமா கார்த்திக், அதனால் தான் இதெல்லாமா…? என்றாள் வறண்ட புன்னகையுடன். 

“வாட் நான்சென்ஸ், எனக்கு அப்படியொரு தாட்ஸ் என்றைக்குமே இருக்காது. வெயிட் …வெயிட் அப்போ அனாயா தான் மதுவின் குழந்தையா… ? என்றான் ஆச்சர்யமாக.

அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல், “ஓகே கார்த்திக் தேங்க்ஸ் பார் எவ்ரிதிங், நேரமாச்சு…” என்று குறிப்பாக அவனை கிளம்ப சொல்ல சிரிப்புடன் எழுந்தான். 

“ஆனால் நீ பதில் சொல்லலை, இருந்தாலும் நீ கழுத்தை பிடிச்சி தள்றதுக்குள் போய்டறேன். ஆனால் நீ என்னிடம் பேசணும்னு சொன்னது நினைவில் இருக்குன்னு நினைக்கிறேன். சொல்லு எப்போ பேசலாம்…”

“சொல்றேன், ஆனால் நீங்க இந்த நேரத்திற்கு இங்கே இருந்தால் என் கணவர் என்னை தவறா நினைப்பார். ப்ளீஸ் கிளம்புங்க. இரண்டு நாளைக்கு முக்கியமான வேலைகள் இருக்கு.  அதை முடிச்சிட்டு உங்களுக்கு டெக்ஸ்ட் பண்றேன்…” 

“ஓகே இதுக்கும் மேல் இங்கிருந்தால் அடிச்சே விரட்ட கூட சாத்தியமிருக்கு. இன்னொரு நாள் அனாயாவின் அம்மாவுடன் ஷாப்பிங் போகலாம்ன்னு பிளான் வைச்சிருக்கேன். போகலாமா மேடம்…”என்றான் கண்சிமிட்டி குறும்போடு. 

இனியும் இவன் இங்கிருந்தால் சரி வராது, அப்புறம் மனதில் தேவையில்லாத எண்ணங்கள் வந்து அலைக்கழிக்கும் என்று நினைத்தவளாக,”ப்ளீஸ் கார்த்திக்…” என்றாள் வாசலை நோக்கி கையை காட்டி. 

“ஓகே …ஓகே… போறேன், டோன்ட் பர்கெட், ஒரு நாள் அனாயா அம்மா என்னுடன் ஷாப்பிங் வரணும் …”என்று சிரித்தபடி வெளியே செல்ல இதழில் நெளிந்த புன்னகையுடன் அவனை பின்தொடர்ந்தாள். 

சென்றுகொண்டிருந்தவன் சட்டென்று திரும்ப இம்முறை உடனே சுதாரித்து இரண்டடி நகர்ந்தவளை ஏற இறங்க நோக்கிவிட்டு,”சோ அல்லூரிங் , கார்ஜியஸ் ரித்திகா. கல்லூரி தினத்திலே உன் ட்ரெஸ்ஸிங் சென்ஸ் சூப்பரா இருக்கும். இப்பொழுது இன்னும் அல்டிமேட். லவ்லி…”

அவனின் பாராட்டிற்கு மெல்லிய குரலில் நன்றி சொல்ல காரில் ஏறி அமர்ந்தவன்,”சீக்கிரமே சந்திக்கலாம். குட்நைட் …”என்று சிரித்தபடி கையாட்டிவிட்டு வண்டியை கிளப்பிக்கொண்டு செல்ல ரித்திகாவிற்கு அவனின் குறும்புத்தனமான பேச்சில் சிரிப்பு பீறிட்டது. 

‘இவனை எப்படி ஒரு பெண்ணால் கஷ்டப்படுத்த முடிந்தது. இவன் இருக்குமிடம் கலகலப்பாக இருக்கும். அப்படிப்பட்டவனையே வருத்தப்படுத்துவதென்றால் என்ன பெண் ஜென்மமோ.  அவள் உண்மையில் ராட்சஸ ஜாதியை சேர்ந்தவளாக தான் இருக்க முடியும்…’

அவன் சென்றதும் இரவு உடையில் மாறி முகம் கழுவிவிட்டு கார்த்திக் வாங்கியவற்றை ஆராய்ந்தாள். நிறைய பொம்மைகள், விலையுயர்ந்த உடைகள், குழந்தையின் கைக்கு தங்க ப்ராஸ்லெட் என்று வாங்கி குவித்திருக்க சந்தோஷ படுவதற்கு பதில் மனது சுணங்கியது.

இதெல்லாம் அவன் தங்கையின் குழந்தை என்பதற்காக வாங்கியதாக தானே இருக்கும். அவன் வேண்டுமென்றால் இல்லையென்று சொல்லலாம். ஆனால் அடி மனதில் அப்படியொரு நினைவு இல்லாமலா இருக்கும் என்று யோசித்தபடியே எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு குழந்தையின் பக்கத்தில் படுத்தபடி போனில் சற்றுநேரம் புதையல் எடுக்க ஆரம்பித்தாள்.

இங்கிலிஷ், பிரெஞ்சு, மற்றும் ஸ்பெயின் ஆகிய மூன்று மொழிகளில் பாடப்பட்ட, “ஓலா, கோமோ தாலே தாலே வூ … என்ற பாடல்     ரசித்துக்கொண்டிருக்க கார்த்திக்கின் குறுஞ்செய்தி வந்தது. 

ஆர்வத்துடன் என்ன குறுந்செய்தி என்று வேகமாக திறந்து பார்த்தவளுக்கு லேசாக தூக்கிவாரி போட்டது. நீ ஒரு டிவோர்சி என்று எனக்கு தெரியும் என்று கூறி சிரிக்கும் ஸ்மைலியை போட்டிருந்தான்.