Nenjil Therikuthu Panithuli -20

அத்தியாயம் -20

ரிது அறிமுகப்படுத்தியதும், கார்த்திக்கை பார்த்து சினேகமாக சிரித்து,”ஹாய் கார்த்திக், ஐ ம் விஷால். ரிதுவின் அத்தை பையன்…” என்று சுய அறிமுகம் செய்தபடி கையை நீட்டினான் குலுக்குவதற்காக.

கார்த்திக்கின் விழிகள் ரிதுவை அழுத்தமாக நோக்கிவிட்டு விஷாலின் கையை குலுக்கி,”ஹாய், க்ளாட் டூ மீட் யூ…” என்றவன் நிவேதாவுக்கும் ஒரு ஹாய் சொல்லிவிட்டு ரிதுவிடம் திரும்பினான்.

அவளிடமிருந்த கைபேசியை சட்டென்று பிடிங்கி அதில் தன் நம்பரை பதிய வைத்து, அதிலிருந்து ஒரு அழைப்பை தன் கைபேசிக்கு கொடுத்துக்கொண்டவன் மீண்டும் அவளிடம் போனை கொடுத்தான்.

“உன்னிடம் பெர்சனலா பேசணும், இடத்தை டெக்ஸ்ட் பண்றேன். குழந்தையை பார்த்துக்கோ. ஓகே விஷால் நான் கிளம்பறேன்…”என்றவன் மற்றவர் பேசும் முன் அங்கிருந்து கிளம்பிவிட நிவேதா கார்திக்கையே மலைப்புடன் பார்த்தபடி அங்கேயே நின்றுவிட்டாள்.

விஷாலும், ரிதுவும் குழந்தையின் உடைமைகளை பேக் செய்துகொண்டு வெளியே வர நிவேதா இன்னும் அப்படியே தான் நின்றிருந்தாள். அவள் தலையில் விஷால் நறுக்கென்று குட்ட, ஆவென்று அலறினாள்.

“அடேய் எரும, இப்படியா கொட்டுவே, பன்னி …” வலி தாங்காமல் தலையை தேய்த்துவிட்டுக்கொண்டாள்.

“பின்னே என்னடி, உள்ளே வந்து ஹெல்ப் பண்ணாமல் வந்துட்டு போனவரை சைட் அடிச்சிட்டு இருக்கே…”

“அதில்லே அண்ணா, கார்த்திக் படு ஸ்மார்ட் இல்லே. ஹேய் ரிது பார்ட்டிக்கு திருமணம் ஆயிடுச்சா…” என்று விசாரித்தாள் ஆர்வமாக.

“உனக்கு ஏன் அந்த விவரங்கள்…? என்றபடி எல்லோரும் வண்டியில் ஏறி அமர வண்டி புறப்பட்டது.

குழந்தையை தன் மடியில் வைத்திருந்தவள் அவளின் பட்டான கன்னத்தை வருடி,”ப்ச் சரியான தத்தி அண்ணன், தத்தி அத்தை பொண்ணு. வேறு எதுக்கு கேட்பாங்களாம். என்னை மாதிரி வயசு பொண்ணு ஒரு பையனை பற்றி விசாரிக்கிறான்ன்னா கல்யாணத்துக்கு அப்ளிகேஷன் போடத்தான்…”என்று கண்ணடித்தாள் குறும்பாக.

அவளின் பேச்சிற்கு ரிதுவுக்கு புன்னகை தான் வந்தது.

“ஓ எஸ் தெரிஞ்சிக்கலாமே அவரின் மனைவியை கேட்டு …”

ரிதுவின் நமுட்டு புன்னகையை கண்டுகொண்டவள்,”அடிப்பாவி, எனக்கு வில்லன், வில்லிங்க வெளியில் இல்லை , கூடவே இருக்குதுங்க…” என்று பொரும விஷால் வாய்விட்டு சிரித்தான்.

“நீ தானே கார்த்திக்கை பார்த்து ஜொள்ளுவிட்டு கேட்டே, அப்போ அதோட விளைவுகளையும் அனுபவிச்சு தானே ஆகணும். சரி ரிது உன்னிடம் பெர்சனலா பேச அவருக்கு என்ன இருக்கு…?

“அதானே ….? என்றாள் நிவேதா.

“நீங்க ரெண்டு பேரும் அங்கு தானே இருந்தீங்க, கேட்க வேண்டியது தானே…”என்றாள் அசட்டையாக.

“சேச்சே அது அநாகரிகம்…” இது நிவேதா.

“ஆமாம் ரிது நாங்க கேட்டால் நன்றாகவா இருக்கும். சரி விடு பேசிவிட்டு வந்து சொல்லலாம்னா சொல்லு…” என அவர்கள் வீடு வந்துவிட்டிருந்தது.

“நிவி நீ ரிதுவுடன் இரு. நான் ஆபிஸ் போயிட்டு வந்துடறேன்…”என அவசரமாக விஷாலை மறுத்து பேசினாள்.

“ஹேய் வேண்டாம் , வேண்டாம் நிவி நீ ஆபிஸ்க்கு கிளம்பு. நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும். நான் அனாயவுடன் வீட்டில் தான் இருப்பேன். நீ எதுக்கு உன் லீவை வேஸ்ட் பண்றே. அப்புறம் விஷால் அடுத்த வாரம் தென்னந்தோப்பு குத்தகையை புதுப்பிக்கணும், அதே போல கடையை விற்பதை பற்றியும் முடிவெடுக்கணும். நீ இருந்தால் நன்றாக இருக்கும்…”

“கண்டிப்பா போகலாம். என்றைக்குன்னு சொல்லு, எல்லா வேலைகளையும் முடிச்சிடலாம்…”என்றவன் வீட்டின் வெளியே காரை நிறுத்திவிட்டு இறங்க, குழந்தையை தூக்கிக்கொண்டு நிவியும், ரிதுவும் இறங்க, விஷால் ரிதுவிடம் சாவியை வாங்கி கேட்டை திறந்து உள்ளே செல்ல பெண்கள் அவனை பின்தொடர்ந்தார்கள்.

வீட்டின் கதவை திறந்து, மூவரும் உள்ளே செல்ல ரிது சாப்பிட்டுவிட்டு போக சொல்ல, மற்ற இருவரும் வேலை இருக்கு என்று உடனேயே கிளம்பிவிட்டார்கள். அனாயாவின் உடம்பை துடைத்து, வேறு உடை மாற்றி அவளை சாப்பிட வைத்து படுக்க வைக்க குழந்தை உடனேயே உறங்கி போனாள். ரிது தனக்காக சமைக்க தோன்றாமல் பாலில் ஓட்ஸை கலந்து கொதிக்க வைத்து அதில் ட்ரை ப்ரூட்ஸ், உப்பு போட்டு அதை இரண்டு டம்பளர் குடித்து விட்டு ஒரு புத்தகத்தோடு அனாயாவின் பக்கத்தில் படுத்தாள்.

ஓஷோவின் புத்தகத்தில் ஆழ்ந்திருக்க, அவளின் கைபேசியில் குறுந்செய்தி வரும் சத்தம் கேட்டது. அசுவாரஸ்யமாக கைபேசியை எடுத்து பார்த்தவள் திடிக்கிட்டு எழுந்து அமர்ந்தாள்.

வீட்டுக்கு வருகிறேன் என்று இரத்தின சுருக்கமாக இருந்த கார்த்திக்கின் செய்தி அவளை குழப்பியது. எவ்வளவு தைரியமாக வீட்டுக்கு வர்றேன்னு சொல்லியிருக்கான், என்னை சந்திப்பது அவன் மனைவிக்கு தெரிந்துவிட்டால் அவ்வளவு தான், வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவாளே. எப்படி இதை கார்த்திக்கிற்கு புரிய வைப்பது என்று தவிக்க அவளின் மனசாட்சி அவளை குத்தியது.

‘நீயாகவா போய் கார்த்திக்கிடம் பேச போகிறாய், அவனாகத்தானே இங்கு வர்றேன் என்கிறான். அப்போ அவன் தானே பயப்படணும். நீ எதற்கு தேவையில்லாமல் பயப்படுகிறாய். பேசும் பொழுது பயப்படாதே, பயப்படும் பொழுது பேசாதே என்று சற்று முன் படித்த ஓஷோவின் வரிகள் நினைவு வர தலையை குலுக்கிக்கொண்டாள். இதில் நான் பயப்பட ஒன்றுமே இல்லை. இது என் வீடு. என்னை யார் என்ன கேள்வி கேட்டுட முடியும் …?

எழுந்துச் சென்று முகத்தை கழுவி உடையை திருத்திக்கொள்ள, வாசலில் போலீஸ் கார் வந்து நின்றது. ஜன்னல் வழியாக எட்டி பார்த்தவளுக்கு குழப்பமாக இருந்தது போலீஸ் ஏன் வருகிறது என. அவள் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே அதிலிருந்து கார்த்திக் இறங்க அவளின் புருவங்கள் ஆச்சர்யத்தில் நெற்றியின் உச்சி மேட்டிற்கு சென்றது.

‘கார்த்திக் போலீஸா ? ஆனால் இவன் கல்லூரியில் சைன்ஸ் பிரிவை தானே தேர்ந்தெடுத்து படித்தான். இந்த போலீசுக்கும், சயின்ஸக்கும் என்ன சம்மந்தம்…? என்று யோசித்து முடிப்பதற்குள் காலிங் பெல் அடித்தது.

ஒரு பெல் அடித்து முடிப்பதற்குள்ளேயே ரிது அவசரமாக கதவை திறந்துவிட, மீண்டுமொருமுறை பெல்லின் ஸ்விட்சில் கையை வைக்க எத்தனித்தவனின் கையை அவசரமாக தடுத்தாள்.

தன் கை மீது அவளின் கையை வைத்திருக்க கார்த்திக்கின் விழிகள் அவளை ஆராய்ந்தது. ஆனால் அவளோ இதழில் விரல் வைத்து, “ஷ்ஷ்ஷ்ஷ்…” என ரசனைக்குரிய செயலாக தோன்றியது அவனுக்கு.

“குழந்தை தூங்கறா, உள்ளே வாங்க…”என்று வரவேற்க, கார்த்திக் அவளை பின்தொடர, ஹால் சோஃபாவில் அமர சொல்லி உபசரித்தாள்.

பிகு செய்யாமல் அமர்ந்தவன், அந்த வீட்டை பார்வையாலே அலசினான். அவன் வீடு அளவிற்கு பெரிது இல்லையென்றாலும் மிகவும் அழகாக, நேர்த்தியாக, மிகவும் சுத்தமாக இருக்க அதை வெளிப்படையாகவே பாராட்டினான். குழந்தையின் அறையை இழுத்து மூடிவிட்டு ஹாலுக்கு வந்தவள் அவனின் பாராட்டை இயல்பாக ஏற்றுக்கொண்டாள்.

“காஃபி ஆர் கூல்ட்ரிங்க்ஸ் ….?

“இப்போதைக்கு எதுவும் வேண்டாம், உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான் வந்தேன். அது சரி உன் ஹஸ்பெண்ட் எங்கே? ஹாஸ்பிடலில் கூட பார்க்கலையே. வெளியே போயிருக்காரோ…?

ஒரு நொடி அமைதியாக இருந்தவள்,”இப்போ அதுவா முக்கியம். நீங்க வந்த விஷயத்தை சொல்லுங்க…” என்றாள் கறாராக.

மீண்டும் அவளை ஆழமாக நோக்கிவிட்டு,”உன் சீனியர் எப்படி இருக்கானென்று கூட ஒரு வார்த்தை கூட கேட்க மாட்டியா ரித்திகா…?

“ஏன் இதில் கேட்க என்ன இருக்கு, உங்களை பார்த்தால் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்கிற மாதிரி தானே இருக்கு, போலீஸ்ல இருக்கீங்க போல, என்ன ரேங்க்ல இருக்கீங்க…?

“ஐபிஎஸ் , ஆனால் ஒரு ஆளை வைத்து அவன் வாழ்கிற வாழ்க்கை சுகமாக இருக்கும்னு எப்படி முடிவு பண்றே? ஒரு வேளை அது பொய்யாக இருந்தால்…?

ரிதுவுக்கு அவன் பேச்சின் அர்த்தத்தை புரிந்துக்கொள்ள முடியவில்லை, அதை அவள் முகபாவனையிலே வெளிப்படுத்த கார்த்திக் சன்னமாக முறுவலித்தான்.

“ஒருவர் தன்னிடமே சமாதானமாய், சுகமாய் இருக்க முடியவில்லை என்றால் யாரிடமும் சமாதானமாய், அமைதியாய்
இருக்க முடியாது. என் மனைவியாக வந்தவளுக்கு தன்னையே சமாதானப்படுத்திக்க தெரியலை…”

“சாரி புரியலை…”

மேஜை மேலிருந்த புத்தகத்தில் விழிகளை பதித்துவிட்டு அவள் பக்கம் பார்வையை திருப்பி,”ஓஷோவை படிக்கிறவர்களுக்கு அவரின் தத்துவங்கள் புரியாமல் போவதேன் …?

சில நொடிகள் அமைதி காத்தவள்,”ஈஷா உங்க மேல் வெறித்தனமா காதல் வைச்சிருந்தாங்களே, பின் எப்படி…?

“ஒரு சின்ன திருத்தம், என் மனைவியின் பெயர் ஈஷா இல்லை பூஜா. நீ சொன்னியே வெறித்தனமான காதல்ன்னு, அது காதல் இல்லை அடக்குமுறை. ஒரு ஆணோ, பெண்ணோ எதிராளி மீது காதல் என்னும் பெயரில் அடக்குமுறையை கட்டவிழ்ப்பது பெயர் தான் வெறித்தனமான காதல். இதில் சோகம் என்னவென்றால் எதற்காக ஈஷாவை வேண்டாம் என்றேனோ , அதே போல மற்றவளும் அமைந்தது தான். ப்ச் புண்ணியமில்லாத பேச்சுக்கள். சரி குழந்தை எப்படி இருக்கா? இப்போ அவளுக்கு பரவாயில்லையா? குழந்தையின் பெயரென்ன…?

கார்த்திக்கின் வாழ்க்கைக்கு பரிதாபபடும்முன்னே அவன் குழந்தையை பற்றி பேசவும் ரிதுவின் மனநிலை சட்டென்று மாறியது. அதில் சிறு புன்னகையும் மலர்ந்தது.

“ஹ்ம்ம் அனாயா நல்லா இருக்கா, ஜுரம் போய்டுச்சி. சரி நீங்க இன்னும் விஷயத்திற்க்கே வரலையே…?

“அ..னா…யா… ஹ்ம்ம் நைஸ் நேம். இளமையில் தவற விட்ட அனைத்தும் காலம் கடந்த பின் வெறும் ஏக்கங்களாகவே மாறிடுது இல்லையா ரிது…”

கார்த்திக் என்ன சொல்ல வருகிறான் என்று லேசு பாஸாக புரிய, பதில் சொல்லாமல் மௌனித்தாள். பின் மீண்டும் அவன் வந்த விஷயத்தை சொல்ல சொல்லி நினைவுபடுத்தினாள்.

“சொல்லிட்டா போச்சு…”என்று தன் பாக்கெட்டிலிருந்து ஒரு புகைப்படத்தை காட்டிவிட்டு, அதன் பின்பக்கம் திருப்பி காட்ட ரிது ஷாக்கடித்தவள் போல துள்ளி எழுந்தாள். அவளின் விழிகளில் அதிர்ச்சி மின்னல்கள்.

தன் புகைப்படத்தை தன்னிடமே காட்ட குழம்பி போய் பார்த்துக்கொண்டிருந்தவள் அதன் பின்பக்கத்தை திருப்பி காட்டவும் தான் கார்த்திக் எதற்கு வந்திருக்கான், அவன் சந்திப்பிற்கான காரணமென்ன புரிய ஆரம்பிக்க அவளின் முகத்தில் வியர்வை முத்துக்கள் அரும்ப தொடங்கியது பயத்தில்.

அவளின் கையை சுவாதீனமாக பிடித்து அமர்த்தி,”இந்த முகவரியை கொடுக்கும் பொழுதே இப்படியொரு நிகழ்வு என்றாவது ஒரு நாள் நடக்குமென்று எதிர்பார்த்து தானே கொடுத்திருப்பே. அப்புறம் எதுக்கு இந்த பயம்… ? ஏன் எதிர்பார்க்கலையா …?

“இ…இல்லை…வ…வ…வந்து …” என்று திக்க கார்த்திக் எழுந்து அவளை நெருங்கி அவள் தோளின் மீது கையை வைத்து அழுத்தினான் ஆதரவாக.

“நீ இவ்வளவு திக்கி, திணற வேண்டிய அவசியமில்லை. எனக்கு தெரிந்த ரிது மனதளவில் மிகவும் ஸ்ட்ராங் பெர்சனாலிட்டி. குழந்தை என்று வரும் பொழுது வீக் பெர்ஸனாலிட்டியா மாறிடிச்சா சூசான்… ? என மீண்டும் அவளின் தேகம் அதிர்ந்தது.

சிரமப்பட்டு தன்னை கட்டுப்படுத்தி,”நீங்க …? என்று இழுத்தாள்.

அவளின் கேள்விக்கு வாய்விட்டு சிரித்து,”இதென்ன முதலிலிருந்து ஆரம்பிக்கிறே ? ஐ ம் கார்த்திக் தேவராஜன். அதே உன் காலேஜ் சீனியர். ஆனால் கல்லூரியின் முதல் நாளிலேயே தைரியமாக முத்தமிட்ட பெண் ரித்திகாவா நீ…? என்று கேலி செய்ய ரித்திகா எரிச்சல் மிகுதியில் முறைத்தாள்.

“ஓகே அமைதி …அமைதி … உன் கேள்வியின் அர்த்தம் புரியுது. மதுரிகா என் தங்கை. ஆண்ட்ருவின் காதலி. நீ என் தங்கைக்கு செய்த உதவிக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு கூட தெரியலை. ஆனாலும் நன்றி என்ற வார்த்தையை தவிர வேறேதும் இருப்பதாகவும் எனக்கு தோணலை…” என்றான் சற்று நெகிழ்ச்சியாக.

அவளுக்கு தெரிந்த கார்த்திக் கம்பீரமானவன். கல்லூரியில் அத்தனை ஆண்களுக்கு மத்தியில் கூட இவன் தனித்தே தெரிந்தவன். ஏனோ இன்று அவன் நெகிழ்ந்து நன்றி சொன்னது அவள் மனதிற்கு இதமாக இல்லை. சற்று முன் வரை அவனின் பேச்சை ரசித்தவள். அதனால் சட்டென்று பேச்சை மாற்றினாள்.

“இப்போ ஏன் குழந்தையை தேடி வரணும். அதற்கான அவசியம் …?

கார்த்திக் மீண்டும் சோஃபாவிலிருந்து எழுந்து உறங்கும் குழந்தையை பார்த்துவிட்டு மீண்டும் வந்துமர்ந்தான்.

“உரிமையற்ற முறையில் கருவறையை திறந்து அதிலிருந்து புதையலை எடுத்தவள் அதை பாதுகாக்காமல் போனதின் விளைவு. இன்று உரிமையிருந்தும் கருவறை திறக்க முடியவில்லை. ப்ச் செய்த பாவத்திற்கு இன்று பரிகாரம் தேடி சிங்கப்பூரிலிருந்து வந்திருக்கிறாள். ஓ ! சாரி அவளை பற்றி சரியா சொல்லலையா. அவளுக்கு ராஜீவ் என்றவருடன் திருமணம் ஆகிடிச்சி. சிங்கப்பூரில் சந்தோஷமா இருக்கிறாள். குழந்தைக்காக புருஷனும், பெண்டாட்டியும் வந்திருக்காங்க. உன் பார்வையின் அர்த்தம் புரியுது. அவள் எல்லாவற்றையும் அவள் கணவரிடம் சொல்லிட்டாள்…” என்று எழுந்தான்.

“ஓகே ரிது, நீ யோசிச்சி எனக்கு போன் பண்ணு. பட் ஒன்றை மட்டும் ஞாபகம் வைச்சிக்கோ, உன்னை எந்த விதத்திலும் போர்ஸ் பண்ண மாட்டேன்…” என்றவன் அவளின் பதிலை எதிர்பாராமல் கடகடவென்று வெளியே செல்ல ரிது தளர்ந்து அமர்ந்தாள்.