Nenjil Therikuthu Panithuli -2

அத்தியாயம் -2

பிரான்ஸ் , பாரிஸ் …

கிணு கிணுன்னு அலார குயில் தன் கடமையை செவ்வென செய்ய ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ரித்திகா மெலிதாக உறக்கம் கலைந்து விழிகளை மலர்த்தாமலே கையை நீட்டி கட்டிலின் பக்கத்திலிருந்த டேபிளில் வீற்றிருந்த ஐபோனை எடுத்தாள். சோம்பலுடன் மெல்ல விழிகளை திறந்தவள் ஏதோ நினைவு வந்தவளாக அவசரகதியில் அலாரத்தை நிறுத்திவிட்டு, பக்கத்தில் பார்வையை திருப்பினாள். 

சிறு பூக்குவியல் போல ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அனாயா அலாரத்தின் சத்தத்தில் துயில் லேசாக கலைந்து மெலிதாக புரள, தன்னையே திட்டிக்கொண்டு குழந்தையை மென்மையாக தட்டிக்கொடுத்து மீண்டும் உறக்கத்திலாழ்த்தினாள்.

அனாயாவின் உறக்கத்தை தொல்லை செய்யாமல் எழுந்து, குழந்தையின் நெற்றியில் மிருதுவாக முத்தமிட்டு, ரஜாயை சரியாக இழுத்து போர்த்தியவள் சில நொடிகள் ஒரு சிறு தேவதை போல உறங்கும் மூன்று வயது பெண்ணின் உறக்கத்தை ரசித்துவிட்டு சத்தம் போடாமல் அறை கதவை இழுத்து மூடிவிட்டு வெளியே வந்தாள்.

கலைந்த கூந்தலை அள்ளி கொண்டையிட்டு பாத்ரூம் சென்று பல்லை துலக்கி, முகத்தை கழுவிக்கொண்டு சமயலறைக்கு சென்றாள். பிரிட்ஜை திறந்து ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து வெட்டி சாறு எடுத்து, அதில் அரை ஸ்பூன் தேனை கலந்து குடித்துவிட்டு ஹாலுக்கு வந்தவள் சில நொடிகள் ஸ்ட்ரெச்சை முடித்துக்கொண்டு அரை மணி நேரம் சில உடற்பயிற்சிகள் செய்தாள். பின் குளித்து குழந்தைக்கு ஹாட் சாக்லெட்டை ரெடி செய்துவிட்டு, தனக்கு ஒரு காஃபியை தயாரிக்க அடுப்பில் பாலை வைத்துவிட்டு காத்திருந்தாள் அது பொங்குவதற்காக. அதற்குள் அவளை பற்றி நாம் பார்த்துவிடலாம்.

தாய் லிஸாவுக்கும், தந்தை ஈஸ்வரனுக்கும் பிறந்த ஒரே மகள் ரித்திகா. லிஸா கிறிஸ்டியன், ஈஸ்வரன் ஹிந்து என்பதால் பெற்றவர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க உலக காதலர்கள் செய்கிற அதே தவறை இவர்களும் செய்தார்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துக்கொண்டார்கள். இருவருமே நன்றாக படித்திருந்ததால் பொருளாதார பிரச்சினை எழவில்லை. அதிகமாகவே சம்பாதித்தார்கள். ஆயினும் லிஸாவின் பெற்றோர் அவளுக்கு சேரவேண்டிய சொத்துக்களை அவளுக்கு கொடுத்ததோடு அவள் பிரான்ஸ் செல்ல அவளின் நேஷனலிட்டி பேப்பரையும் கொடுத்தார்கள் ஒரே ஒரு வேண்டுகோளுடன். 

அந்த வேண்டுகோள் வேறொன்றுமில்லை, கணவனுடன் பிரான்ஸ் சென்றுவிடு என்பது தான். ஆனால் ஈஸ்வரனுக்கு சொந்த நாட்டை விட்டு வெளிநாடு செல்ல விருப்பமில்லை. அதனால் லிஸாவும் கணவரை வற்புறுத்தவில்லை. அவர்களின் வாழ்க்கை சுபபோகமாக சென்னையில் சென்றது.

ரித்திகா பிறந்த பொழுதும் இரு தரப்பு பெற்றோர்களின் கோபம் மட்டுப்படவில்லை. காதல் தம்பதியினரும் அதை எதிர்பார்க்கவில்லை. மகள் பிறந்து, வளர்ந்து படித்து முடித்து அவளின் கனவான பொட்டிக்கை பெற்றோரின் ஆதரவுடன் ஆரம்பித்தாள். அவளின் கற்பனைக்கும், ரசனைக்கும் உயிர் கொடுத்து அவளே ஆடைகளை வடிவமைத்தாள். அவளின் பொட்டிக்கில் இருக்கும் புடவைகளை வேறு கடையில் பார்த்துவிட முடியாது. துணி வகைகளும், சரி, உடைகளும் சரி தனி ரகத்தை சேர்ந்தவை. அதனால் என்னவோ விலை சற்று கூடுதலாக இருந்தாலும் பிசினெஸ் அள்ளிக்கொண்டு சென்றது.  

மகள் வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டாள் என்ற எண்ணத்தில் பெற்றவர்கள் அலைந்து திரிந்து அவளுக்கு மாப்பிள்ளை தேடுமுன் ரித்திகாவே அவளின் வருங்கால கணவனை அவள் பொட்டிக்கில் சந்தித்து தேர்ந்தெடுத்தாள். தங்கையுடன் அவளது பொட்டிக்கிற்கு புடவை எடுக்க வந்தவனே அவளின் மணாளனாகவும் மாறினான் பின்னொரு சுபயோக சுபதினத்தில்.

திருமணத்திற்கு பிறகு ஒரு கஷ்டமான காலகட்டத்தில் அவளின் தந்தை இறந்துபோக , தாய் அந்த கவலையிலே நொடிந்து போனாள். தனக்கு பிறகு தன் மகள் யாருமற்ற அனாதையாக நின்னுடுவாளோ என்ற பயமே அவரை கரையானாக அரித்து அவரின் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்தது. தாயின் கவலை பற்றி அறிந்தாலும் அதை பற்றி அலட்டிக்கொள்ளவேண்டாம், நான் நன்றாக இருக்கிறேன் என்று ரித்திகாவால் சமாதானம் சொல்ல முடிந்ததே தவிர தாயின் வேதனையை சரி செய்ய முடியாமல் போனது. 

ஒரு நாள் காலையில் வழக்கம் போல தனது பொட்டிக்கிற்கு கிளம்பி,  தாயிடம் சொல்லிவிட்டு செல்லலாம் என்று அவர் அறைக்கு செல்ல அங்கு அவள் கண்டது தாயின் உயிரற்ற உடலை தான். தாயின் மறைவிற்கு பிறகு அங்கு இருக்க பிடிக்காமல் பெற்றோரின் ஆசைப்படி பிரான்ஸ் வந்துவிட்டாள். மகளை பிரெஞ்சு படிக்க வைத்து ஒரு பிரெஞ்சு நேஷனாலிட்டி பையனுக்கு திருமணம் செய்துவைத்து அவளை பிரான்ஸ்க்கு அனுப்பி வைக்கவேண்டுமென்ற ஆசை அவர்களுக்கு.  அவர்கள் ஆசைப்படி பிரெஞ்சு படித்தாள். ஆனால் அமைந்த மணாளன் சென்னையில் தொழில் செய்கிறவன் என்பதால் பெற்றவர்களின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. அவர்களின் மறைவுக்கு பிறகு பிரான்ஸ் வந்தவள் தன்னுடன் லிசேவில் படித்த தோழியின் வீட்டில் தங்கி தன் பேப்பர் வேலைகளை முடித்து தனி வீடெடுத்து , ஒரு நல்ல வேலையையும் தேடிக்கொண்டாள். 

ஆரம்பத்தில் வேலை வாய்ப்பு ஏஜென்சி மூலம் சின்ன சின்ன வேலைகள் செய்தபடியே அரசு தேர்வு எழுதி அதில் தேர்வாகி இன்று வருமான வரி துறையில் ஒரு நல்ல பதவியில் இருக்கிறாள். இப்போதைக்கு இது போதும் ….

காஃபியை தயாரித்துக்கொண்டு மீண்டும் ஹாலுக்கு வந்து சோஃபாவில் அமர்ந்தபடி டிவியை ஆன் செய்தாள். நியூஸ் சேனலை வைத்து காலை செய்திகளை பார்த்தபடியே காஃபியுடன் இரண்டு டயட்டிக் பிஸ்கட்டை சாப்பிட்டாள். செய்திகள் முடிந்ததும் யூ ட்யூப்பை திறந்து அங்கேயும் சன் டிவியில் செய்திகளை பார்த்தவளுக்கு போரடித்தது. இந்திய செய்திகள் சிலவற்றை ஒரு உச்சு கொட்டலுடன் பார்த்துவிட்டு சேனல் சேனலாக தாவினாள் ரிமோட்டின்  உதவியால். 

மனைவியின் மீது சந்தேகப்பட்டதால் கணவன் கொலை என்ற செய்தியை கண்டதும் அனாயாவின் இதழ்களில் சிறு நகை பிறந்தது. அப்படியே ஸ்க்ரால் செய்து வர அன்றைய செய்தியாக இளம்பெண் கழுத்து வெட்டப்பட்டு கொலை, கணவன் கதறல் என்ற தலைப்பை கண்டதும் அந்த செய்தியை காண கிளிக் செய்தாள். 

கணவன் ஜாக்கிங் சென்றிருந்த சமயம் அடையாளம் தெரியாத நபரால் இளம் மனைவி கொடூரமாக கழுத்து அறுக்கப்பட்டு நாற்காலியில் அமர்ந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார், கொலையாளி யாரென்று போலீஸ் துப்பு துலக்குகிறது என்ற செய்தியை கேட்டதும் ரித்திகாவின் உடல் லேசாக குலுங்கியது. 

“ச்சே ஒரு மனுஷனுக்குள் இத்தனை கொடூரமா, அப்படி என்ன மாபாதகம் செய்தாள் அந்த பெண் அவனுக்கு? என்ன மனுஷ பிறவியோ…? இவனுக்கெல்லாம் கட்டாயம் நரகம் தான்…” என்று வாய்விட்டே புலம்பியவள் மேலும் சில செய்திகளில் விழிகளை மேயவிட மணி ஏழரையை நெருங்கிக்கொண்டிருந்தது.  

டிவியை அணைத்துவிட்டு குழந்தையின் ஸ்கூல் பேகை சரி பார்த்து எடுத்து வைத்துவிட்டு, குழந்தையின் அன்றைய உடைகளை எடுத்துக்கொண்டு, அப்படியே தனக்கும் தேர்ந்தெடுத்தவள் அவற்றை அயர்ன் செய்து ரெடி செய்து வைத்துவிட்டு அனாயாவை எழுப்பினாள்.

“கண்ணா ரெவே துவா செல்லம் (எழுந்திரு ) எக்கோலுக்கு (ஸ்கூல் ) நேரமாச்சு…”

பலமுறை எழுப்பியும் குழந்தை படுக்கையில் புரண்டாலே தவிர விழிகளை திறக்காமல் மீண்டும் ரஜாயை இழுத்துபோர்த்திக்கொண்டு உறங்க முயற்சிக்க ரித்திகாவின் இதழ்களில் புன்னகை மலர்ந்தது. 

குழந்தைக்கு கிச்சு கிச்சு மூட்ட, அவள் எதிர்பார்த்தது போலவே விழிகளை திறக்காமலே கிளுகிளுத்து சிரித்த குழந்தையை ஆசையோடு அள்ளி முத்தமிட அனாயாவும் தாயின் கழுத்தை கட்டிக்கொண்டாள். 

“போக்கிரி சம்தி, திமாஷ் (சனி, ஞாயிறு ) மட்டும் எப்படிடி ஆறு மணிக்கே விழிச்சிக்கிறே, எக்கோல் நாளில் மட்டும் கும்பகர்ணி தூக்கம் தூங்கறே…”

சிவந்த ரோஜா மொட்டுக்கள் போன்ற இதழை அனாயா பிதுக்கி தெரியலையே என்றாள். குழந்தையின் செயலில் மதி மயங்கி அவளின் கன்னத்தில் வன்மையாக தன் இதழை பதித்து தன்னோடு இறுக்கிக்கொண்டாள். 

சில நொடிகள் கழித்து அவளை கீழே இறக்கி, மகளின் மூக்கை செல்லமாக நிமிண்டி,”ஓடு…ஓடு … ஸ்கூலுக்கு நேரமாச்சு, வா குளிக்கலாம்…”

“மம்மா வேணாம், குளிருது , நான் ஸுவார் (ஈவ்னிங்) குளிக்கிறேன். இப்போ ப்ரோஸ் (ப்ரஷ்) பண்ணறேனே…”என்றது அவளின் பிரின்சஸ்.

டிசம்பர் மாதம் தொடங்கிவிட்டதால் குளிர் அதிகம் தான், பாதி குழந்தைகள் குளிக்காமல் முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு வருகிறவர்கள் தான். ஆனால் அனாயாவுக்கு தினமும் குளித்து, கடவுளை சேவித்த பிறகு தான் சாப்பிடுவதும், மற்ற விஷயங்களும் என்ற பழக்கத்தை  கொண்டு வந்திருந்தாள். இருந்தாலும் இந்த மாதிரி சில சமயங்களில் சோம்பேறித்தனத்தினாலோ, குளிரின் தாக்கத்தினாலோ அடம் பிடிப்பது உண்டு. இன்றும் அப்படி கேட்டுவிட்டு தாயை சலுகையாக நோக்கினாள். 

“தக்கோர் (ஓகே ) ஆனால் அடிக்கடி இப்படி செய்ய கூடாது. குளிக்காமல் போவது பேட் ஹாபிட்ஸ், தினமும் குளிச்சிட்டு பள்ளிக்கு சென்றால் தான் நீயும் ஆக்டிவ்வா இருப்பே…” 

“சரிம்மா…” என்று சமர்த்தாக சொல்லிவிட்டு துள்ளி குதித்து பாத்ரூம் சென்று அவளுடைய குட்டி ப்ரஷை எடுத்து பல்லை துலக்க, ரித்திகா பாத் டவல் கொண்டு குழந்தையின் உடம்பை துடைத்து க்ரீமை தடவி உடையை அணிவித்து, அந்த வயதிற்க்கே நீளமாக வளர்ந்திருந்த கூந்தலை வாரி போனிடைல் போட்டுவிட்டாள். 

குழந்தையை அமர வைத்து, ஹாட் சாக்லேட்டையும், கூடவே சில பிஸ்கஸ்ட்ஸ் வைத்து சாப்பிட சொல்லிவிட்டு, தனது லேயர் கட் கூந்தலை ப்ரஷ் செய்து, மெல்லிய ஒப்பனையை செய்தவள் ஆபிஸ் செல்லும் உடைக்கு மாறினாள். ஜீன்ஸ் அண்ட் டி ஷர்ட் அணிந்து ஆங்கிள் பூட்டஸ் அணிந்து தனது போன், பர்ஸ் ஆகியவற்றை சரிபார்த்தபடி அனாயாவிடம் வந்தாள். 

அதற்குள் அவளே சாப்பிட்டு முடித்ததும் கப்பை வாஷ் பேஸினில் போட்டு விட்டு குளிருக்கு அணியும் ஜெர்கினை அணிந்து, முதல் நாளிரவே எடுத்து வைத்த சாக்ஸை மாட்டி, ஷூவையும் மாட்டிக்கொண்டிருக்க ரித்திகாவின் இதழ்கள் புன்னகையை பிரசவித்தது. மிகவும் புரிதல் கொண்ட குழந்தை.

குழந்தைக்கு கழுத்தில் ஸ்கார்பை சுற்றிவிட்டு, கையில் குளிருக்காக கிளவுஸை மாட்டி அவளின் லிட்டில் பார்பி பிரின்ஸ் பேகை மாட்டிவிட்டாள்.

“போகலாமாடா செல்லம்…”என்றபடி தன்  குளிர் கால கோட்டை  மாட்டி, ஸ்கார்பை அணிந்து, வீட்டு சாவியை பேகில் பத்திரப்படுத்திவிட்டு குழந்தையை அழைத்துக்கொண்டு வெளியில் வந்து கதவை இழுத்து மூடிவிட்டு காரேஜ்க்கு சென்றாள். 

குழந்தையை பின் சீட்டிலிருந்த மூன்று வயது குழந்தைகளுக்கான சீட்டில் அமரவைத்து சீட் பெல்ட் போட்டவள் அனாயா கையில் ஒரு லாலிபாப்பை கொடுத்துவிட்டு ட்ரைவர் சீட்டில் அமர்ந்து வண்டியை எடுத்தாள்.

ரிமோட்டின் உதவியால் காரேஜை திறந்து வெளியே வர டிசம்பர் மாத குளிர் சில்லென்று மேனியை உரசியது. எதிரே வரும் வண்டி தெரியாத அளவு பனி மூட்டம். இரவு பனி மழை பொழிந்திருக்க வேண்டும், சாலையின் ஓரங்களில் வெண்பஞ்சு போல பனி தேங்கியிருந்தது. சாலையில் கரையாமல் இறுகியிருந்த பனி கண்ணாடி போல வழு வழுவென்று மாறி காரின் டயரில் வழுக்கியது. 

வண்டியின் ஹீட்டரை ஆன் செய்துவிட்டு, வண்டியை கவனமாக கையாண்டபடி குழந்தையிடம் பேச ஆரம்பித்தாள்.

“அனு குட்டி, மிஸ் கிட்டே சமர்த்தா இருக்கணும், மதியம் சரியா சாப்பிடணும். டெஸெர்ட்டை வேண்டாம்னு சொல்ல கூடாது. மம்மா ஈவ்னிங் வர்ற வரைக்கும் கிளாரா மிஸ்ஸை கஷ்டப்படுத்த கூடாது. நீங்க தான் சமர்த்து செல்லமாச்சே…”

 குழந்தைக்கு ஐஸ் வைக்க குழந்தை கையில் கொடுத்த லாலிபாப்பை சுவைத்தபடி பெரிதாக தலையை உருட்டினாள். பொதுவாக அனாயா அதிகம் ஆடம் பிடிக்கிறவள் இல்லை தான். இந்த மூன்று வயதிற்கே அதிகப்படியான புத்திசாலித்தனமும், சொல்பேச்சும் கொண்டவள் என்பதினால் ரித்திகாவுக்கு சிங்கிள் மதர் என்ற நிலை பெரிய சிரமமாக தோணவில்லை. ஆயினும் அவளின் புத்திசாலித்தனமே அவளுக்கு பிரச்சினையை உண்டு பண்ணும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

இரண்டு தெரு தள்ளியிருந்த பள்ளியின் முன் காரை நிறுத்தி குழந்தையை காரிலிருந்து இறக்கி, உள்ளே அழைத்துச் சென்றாள். எதிர்ப்பட்ட குழந்தைகளின் தாயிடம் புன்னகையோடு காலை வணக்கத்தை பரிமாறிக்கொண்டே உள்ளே சென்றவள் குழந்தையின் ஜெர்கின்ஸ், ஸ்கார்ப், கையுறை ஆகியற்றை கழற்றி அனாயாவின் பெயர் பொறிக்கப்பட்ட இடத்தில் மாட்டிவிட்டு, அணிந்துவந்த ஷூவை கழற்றி வகுப்பறைக்குள் செல்ல அணியும் பஞ்சுப்பொதி போன்ற ஷூவை அணிவித்து குழந்தையின் பட்டான கன்னத்தில் முத்தமிட்டு தன் கன்னத்தில் முத்தத்தை பெற்றுக்கொண்டு, ஆசிரியையிடம் குழந்தையை ஒப்புவிக்க அவளின் விழிகளில் வகுப்பறை ஓரமாக அலங்கரிக்கப்பட்ட கிருஸ்துமஸ் ட்ரீ பட்டது. 

இன்று மாலை வீட்டிலும் மரம் ஜோடிக்கணும் என்று நினைவில் இறுத்திக்கொண்டவளாக ஆசிரியையிடம் நன்றிசொல்லி விடைபெற்று வெளியே வந்தவள் காரை எடுத்துக்கொண்டு தன் ஆபிஸ் நோக்கி சென்றாள். 

காலை நேரம் என்பதால் ஆபிஸ் செல்கிறவர்களும், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகத்திற்கு செல்லும் மாணவ மணிகள் என போக்குவரத்து களைகட்டும். பத்து மைல் தூரமுள்ள ஆபிஸ்க்கு செல்ல ஒரு மணி நேரம் பிடிக்கும். ரித்திகாவின் ஆபிஸ் அவள் வீட்டிலிருந்து அரைமணி நேர தூரத்தில் தான் இருக்கு. ஆனால் பீக் அவர்ஸில் எப்படியும் ஒன்றரை மணி நேரம் கூட ஆகிவிடும். மெதுவாக போக்குவரத்தில் நீந்தி அவளின் ஆபிஸினுள் நுழைந்து பார்க்கிங்கில் வண்டியை பார்க் செய்துவிட்டு பூட்ஸ் சப்திக்க உள்ளே சென்றாள். 

“போஞ்சூர் ரிதி, சல்யூ ரிதி, ஹேய் ச வா … என அவளுடன் வேலை செய்கிறவர்கள் வித விதமாக காலை வணக்கத்தை கூற அவர்களுக்கு ஏற்றவாறு அவளும் வாழ்த்தை பரிமாறிவிட்டு தன் இடத்திற்கு சென்று தன் குளிர்கால கோட்டை கழற்றி அதற்கென்றிருந்த ஸ்டாண்டில் மாட்டினாள். 

“ஹேய் ரிதி கிறிஸ்துமஸ்க்கு எங்கே போறே? இங்கே தானா, இல்லை வெக்கேஷன் போறியா …? 

அவளின் கேள்விக்கு புன்னகைத்துக்கொண்டே,”ஹ்ம்ம் இன்னும் முடிவு செய்யலை. அனாயா என்ன பிளான் வைச்சிருக்கான்னு தெரியலையே…”

“ஓ ! அனாயா பேப் முடிவு தானா உன்னுடையது. ஹ்ம்ம் சூப்பர். பட் திஸ் டைம் நான் இந்தியா போறேன். நீயும் இந்தியா வந்தால் நன்றாக இருக்கும். என்ன சொல்றே ரிதி … ? 

அவளுக்கும் இந்தியா போக ஆசை தான். இதுவரை அனாயாவை இந்தியாவுக்கு அழைச்சிட்டு போகலை. ஹ்ம்ம் அப்படி தான் ஆசையா வரவேற்க யார் தான் இருக்கிறாங்க என்று எண்ணமெழ கூடவே விரும்பத்தகாத நிகழ்வும் கூடவே நினைவு வர எரிச்சலுடன் தலையை குலுக்கினாள்.

காலையிலே இது தேவையா என்ற எண்ணத்தில்…

கூட