Nenjil Therikuthu Panithuli -17

அத்தியாயம் -17

கார்த்திக்கின் வீடு…

மகன் பேசிவிட்டு சென்றதும் பெரியவர்கள் இருவரும் சிலையாய் சமைந்துவிட மதுவுக்கு தமையனின் வேதனையை புரிந்துக்கொள்ள முடிந்தது. கொலை என்பது பெரிய குற்றம் தான், ஆனால் அதை செய்வதற்கு முன் ஒரு மனிதனின் மனநிலை என்பது எப்படியெல்லாம் இருக்கும் என்பதை அவளால் யோசிக்க முடிந்தது. 

தான் கர்ப்பமாக இருந்த பொழுதும் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தேன். இப்பொழுது அதை கேட்கிறவர்களுக்கு நீ வீட்டில் சொல்லியிருக்கலாம், ஒரே ஊரில் இருந்துக்கொண்டு வேறு ஒரு வீட்டில் தங்கி எப்படி உன்னால் துணிச்சலுடன் குழந்தையை பெற்றுக்கொள்ள முடிந்தது, எவ்வளவு நெஞ்சழுத்தம் என்று குற்றம் சொல்லலாம். ஆனால் இதையெல்லாம் கேட்கிறவர்கள் பிரச்சினையின் வெளியே நிற்பவர்கள். பிரச்சினையின் உள்ளே இருப்பவர்களுக்கு மட்டும் தான் அதன் வலியும், தீவிரமும் புரியும். இதை சொன்னால் வெளியே நிற்பவர்களுக்கு புரியாது. 

அவளின் கைபேசி அழைக்க சிங்கப்பூரிலிருந்து ராஜீவ் தான் அழைத்தான். கணவனின் அழைப்பு என்றதும் அவளுக்கு இத்தனை நேரம் மனதை அழுத்திக்கொண்டிருந்த விஷயம் பனி நீர் போல உருகி மறைந்துவிட முகத்தில் மலர்ச்சி குடிக்கொண்டது. 

“ராஜீவ்…”

அவள் அழைப்பில் காதலும், ஏக்கமும் கரைபுரண்டு ஓடியது.

“நீ எப்படிடா இருக்கே மது, குழந்தை விஷயம் எந்தளவு இருக்கு… ? மச்சானிடம் விஷயத்தை சொல்லிட்டியா ? இல்லை நான் அவரிடம் பேசவா …?

“நான் பேசிட்டேன், அண்ணன் ஹெல்ப் பண்றேன்னு சொல்லியிருக்கார். இப்போ அவர் கேஸில் தீவிரமா இருக்கார்…”

“ஓ குட், சரிம்மா நானும் இந்தியா வர்றேன், உன்னை இந்தியா அனுப்பிட்டு எனக்கு இங்கு ஒன்றுமே ஓடலை. காலையில் எழுந்து உன் முகத்தை பாராமல், உன் குரலை கேட்காமல் என்னவோ இழந்த மாதிரி ஓர் உணர்வு. அதான் உடனே டிக்கெட் புக் பண்ணிட்டேன்…”

கணவனின் பேச்சை கேட்டு மனது பூரித்து போனது, கர்வமாக கூட உணர்ந்தாள். அவளுக்கு குழந்தை பிரச்சினையை தமையனிடம் சொல்லும் வரை வேறு எதுவும் அவளுக்கு உரைக்கவில்லை. ஆனால் தமையனிடம் பாரத்தை இறக்கியதும் அவளுள் கணவனை பற்றிய ஏக்கம் துளிர் விட ஆரம்பித்தது. அதை வெளிப்படையாக பேசவோ, ஆதங்கப்படவோ வீட்டில் யாருமில்லை என்பதால் அவளுள்ளேயே புதைத்துக்கொண்டு வளைய வந்துக்கொண்டிருந்தாள். இன்று கணவன் தன் மனதையே பிரதிபலிக்கவும் அவள் முகம் பூவாய் மலர்ந்தது. 

ஆயினும் தன் சந்தோஷத்தை மறைத்து, அவனை சீண்ட வேண்டும் போல தோன்ற கேலியாக சிரித்தாள். 

“என்னமோ நான் அங்கிருக்கும் பொழுது கல்யாணமாயிட்டாலே பொண்டாட்டிக்கு அடங்கி போக வேண்டியிருக்கு, பேச்சிலர் லைஃப் எவ்வளவு ஜாலியாக இருந்தது, ப்ச் மிஸ் பண்ணிட்டேன்னு யாரோ ஒருத்தர் ஓவரா புலம்பினங்களே …”

மனைவியின் கேலிக்கு சிரித்து,”மது போதும் ரொம்ப ஒட்டாதே. அந்த ப்ரகஸ்பதி சாட்சாத் நானே தான் போதுமா ? என்ன செய்யறது உண்மையில் பேச்சிலரா இருக்கும் வரை வாழ்க்கை ஜாலியா தான் இருக்கு. திருமணமானதும் கொஞ்ச நாள் தன்னை போல சந்தோஷமான மனிதன் இந்த உலகத்திலேயே இல்லைன்னு ஆகாயத்தில் மிதக்கிறவன் பொண்டாட்டி கேள்வி கேட்க ஆரம்பிச்சதும் ஆகாயத்திலிருந்து தொப்பென்று கீழே விழுந்திடறான். 

அதில் ஏற்படுகிற வலியில் தான் பொண்டாட்டி என்றாலே தொல்லை, எரிச்சல் அப்படி, இப்படின்னு லூசு மாதிரி உளர்றான் ஒவ்வொரு ஆண்மகனும். அதுவே பொண்டாட்டி அவனை விட்டு விலகி போய்ட்டா அப்பொழுது தான் பொண்டாட்டி என்கிறவள் வாழ்க்கையில் எத்தனை முக்கியமானவள் என்று இந்த அசட்டு மூளைக்கு புரியுது. விடு விடு இதெல்லாம் அரசியலில் சகஜம்…”என்று மீண்டும் சிரிக்க, அவனின் மனைவியும் அதில் கலந்துக்கொண்டாள். 

“சரி ராஜீவ், நான் ஏர்போர்ட்டுக்கு அண்ணனுடன் வர்றேன்…” என்றவள் அவன் வருகிற பிளைட் மற்றும் நேரத்தை தெரிந்துக்கொண்டு இணைப்பை துண்டிக்க கணவனின் பேச்சில் அவளின் அதரங்கள் மலர்ந்தது. 

விஷயத்தை தாயிடம் சொல்ல நினைத்து தன் அறையை விட்டு வெளியே வந்தவள் சமையல்காரனிடம் இரவு சமையலுக்கு மெனு சொல்லி சமைக்க சொல்லிவிட்டு தாயை தேடி வந்தாள். 

அவர் அறையில் கட்டிலில் ஒருக்களித்து படுத்துக்கொண்டிருந்தவரை பார்த்ததும் மதுவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்த நேரத்தில் இப்படி படுக்க கூடியவர் அல்லவே. என்னாச்சு அம்மாவுக்கு என்று பயந்து அவரை நெருங்கி அம்மா என்றழைத்தபடி தொட அவரிடம் எந்த அசைவும் இல்லை. 

பதட்டத்துடன், “அம்மா …அம்மா…” என்று உலுக்கியும் அவரிடமிருந்து அசைவு இல்லை என்றதும் கைகால்கள் உதற ஆரம்பிக்க அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் மூளை ஸ்தம்பித்து போனது.

“ஹையோ அம்மா, எழுந்திரு, உனக்கென்ன ஆச்சு…”என்று உரத்த குரலில் அழ ஆரம்பிக்க சத்தம் கேட்டு கார்த்திக் இறங்கி வந்தான். 

தங்கை, தாயை உலுக்கவும் என்னவென்று விசாரித்தவனுக்கு தங்கை சொன்ன பதில் அடிவயிற்றில் கொள்ளிக்கட்டையை செருகிய மாதிரி இருந்தது. மண்டியிட்டு அவரின் முகத்தை கையிலேந்த அதில் கண்ணீர் கறைகள். அதுவே அவரின் அழுகையை பறைசாற்ற கார்த்திக்கிற்கு புரிந்து போனது தன் வாழ்க்கையை நினைத்து தன்னையே நொந்துக்கொண்டு அழுதிருக்கிறார் என.

அதன் பிறகு நொடி கூட தாமதிக்காமல், வேலைக்காரனை அழைத்து, அவனிடம் காரை திறக்க சொல்லி சாவியை கொடுத்தவன், தாயை தன் கைகளில் தூக்கி கொண்டு காருக்கு ஓடினான். தங்கையிடம் தந்தையை பற்றி விசாரிக்க அவளுக்கு அப்பொழுது அப்பாவை பற்றி நினைவு வர அவரை அழைத்தபடி உள்ளே சென்றாள். வீடு முழுவதும் தேடிவிட்டு வாசலில் வந்து காரை பார்க்க அவரின் வண்டி அங்கில்லை என்று உணர்ந்தாள். அதற்குள் கார்த்திக் தாயை சீட்டில் கிடத்தி, ட்ரைவர் சீட்டில் அமர்ந்திருந்தான்.

“அப்பா வீட்டில் இல்லைண்ணா, எனக்கு பயமா இருக்கு, அம்மாவுக்கு என்னாச்சு…”என்று அழுதவளை சமாதானித்து, தந்தை வந்தால் அவருக்கு தகவல் சொல்ல சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு காற்றாய் பறந்தான்.

ஹாஸ்பிடலை அடைந்து அவரை அனுமதித்து டாக்டர் பரிசோதித்து மன அதிர்ச்சியில் வந்த மயக்கம் என்று சொல்லும் வரை அவன் உயிர் அவன் வசமில்லை. பயப்படவேண்டாம் இன்னும் சில நிமிடங்களில் கண் விழித்துவிடுவார் என்று சொல்லி அவருக்கு ட்ரிப்ஸ் ஏற்றிய பிறகு தான் கார்த்திக்கிற்கு சற்று நிம்மதியாக இருந்தது. 

தாயின் கையை பிடித்தபடி அவர் அருகில் அமர்ந்திருந்த கார்த்திக்கின் கைபேசி தந்தையின் அழைப்பில் சிணுங்கியது.

“இங்கே போன் பேச கூடாது, வெளியே போய் பேசுங்க ப்ளீஸ்…” என்ற செவிலியரின் பேச்சிற்கு கட்டுப்பட்டு வெளியே வந்தவன் தன்னை ஒரு பெண் அவசரமாக கடந்து போகவும், திரும்பி பார்த்துவிட்டு தந்தையிடம் பேச ஆரம்பித்தான்.

பதட்டத்துடன் மனைவியை பற்றி விசாரித்து தெரிந்துக்கொண்டு எந்த ஹாஸ்பிடல் என்று விசாரித்தார் வருவதற்காக. கார்த்திக் தான் பார்த்துக்கொள்வதாக கூறியும் மனிதர் சமாதானமாகவில்லை. அதற்கு மேல் வாதாடாமல் ஹாஸ்பிடல் பெயரை கூற அடுத்த சில நிமிடங்களில் தேவராஜன் அங்கு வந்துவிட்டார். மனைவியை உள்ளே சென்று பார்த்தவருக்கு விழிகள் கலங்கியது. 

கார்த்திக் பேசிவிட்டு எழுந்துச் சென்றதும் இருவருமே அதிர்ச்சியில் சமைந்திருந்தார்கள். இருவருக்குமே என்ன பேசுவது ? என்னவென்று பேசுவது என்ற குழப்பம். தாங்கள் மகனுக்கு இழைத்த அநீதி அவர்களை நிறையவே நிலைகுலைய வைத்திருந்தது. மருமகளாக வீட்டுக்குள் நுழைந்த பெண் உருவில் இருந்த பேய் கொஞ்ச கொஞ்சமாக அவளின் சுயரூபத்தை காட்டிய பொழுது அவர்கள் அடைந்த வேதனைக்கு அளவில்லை. 

அப்படியிருந்தும் மகன் அவளை அனுசரித்து சென்று குடும்ப மானத்தை நடுத்தெருவில் கொண்டு வராமல் போராடியது தெரிந்ததும் அவர்களின் மனது சுத்தமாக விட்டு போனது. தாங்கள் இந்த வீட்டில் இருந்தால் தானே அவள் மகனிடம் சண்டை போட்டு அவனை டார்ச்சர் செய்வாள், மகளோடு வேறு வீட்டிற்க்கு சென்றுவிடலாம் என்று யோசித்து அதை செயல்படுத்த எண்ணிய பொழுது மகன் குறுக்கே வந்து தடுத்தான். 

அப்படி நீங்க வீட்டை விட்டு சென்று தான் நான் இவளோடு வாழணும் என்றால் அப்படியொரு வாழ்க்கை எனக்கு தேவையில்லை என்று உறுதியாக சொல்லிவிட பெரியவர்கள் என்ன செய்வதன்று தெரியாமல் தத்தளித்தனர். ஒரு கட்டத்தில் மகனால் மனைவியாக வந்தவளின் அராஜகத்தை தாங்க முடியாமல், வருவது வரட்டும் என்று துணிந்து டிவோர்ஸ்க்கு அப்ளை செய்த பொழுது பெற்றவர்களுக்கு அது தவறு என்று சொல்ல வாய் வரவில்லை. 

அத்தோடு விட்டாளா அந்த மகராசி, கார்த்திக்கை ஆண்மையில்லாதவன் என்றாள் ஒரு நாள், இன்னொரு நாள் அவனுக்கு பலபெண்களோடு தொடர்பு என்றாள். மற்றொரு நாள் நாள் அவனுக்கு எய்ட்ஸ் இருக்கு என்று கோர்ட்டில் நாலு பேர் முன்பு விஷமாய் கக்கினாள். ஆனால் கார்த்திக் எதற்குமே மறுப்பு கூறவில்லை. 

அவன் கூறியதெல்லாம் ஒன்றே ஒன்று தான், எதிர்தரப்பு சொன்ன குற்றச்சாட்டுக்களை ஆய்வு செய்து தீர்ப்பளித்தால் போதும் என்றது தான். அதே போல பூஜாவை துளைத்தெடுத்தார் கார்த்திக்கின் வக்கீல். கார்த்திக் யாருடன் தொடர்பு வைத்திருக்கிறார், அவர்களின் பெயர், முகவரி கொடுங்க. இல்லை என்ன ஆதாரம் இருக்கு என. அதற்கு அவளிடமிருந்து சரியான பதில் வரவில்லை. முன்னுக்கு பின் முரணாக பதில் வர அதை கோர்ட் ஏற்றுக்கொள்ளவில்லை. அடுத்து அவனுக்கு எய்ட்ஸ், மற்றும் ஆண்மையில்லாதவன் என்ற குற்ற சாட்டுக்கு அவனுக்கு மருத்துவ பரிசோதனையில் அதுவும் பொய்யென்று நிரூபணமாக கோர்ட்டே ஒரு முடிவுக்கு வந்து கார்த்திக் கேட்ட விடுதலையை வாங்கி கொடுத்தது. 

கோர்ட் வாசலில் அவள் ஆடிய பேயாட்டம் இன்றும் அவர்களின் கண்முன் வந்து செல்ல இருவருமே ஒன்று போல தேகத்தை சிலிர்த்துக் கொண்டார்கள். இருவரின் மனதும் ஒரே விஷயத்தை தான் அசைப்போட்டது போலும். 

பாக்கியம் கண்ணீரோடு தங்கள் அறைக்கு செல்ல பின்தொடர்ந்து வந்த கணவனை நோக்கினார் உயிரற்று. அவரோ மனைவியின் கைகளை பிடித்துக்கொண்டார் குற்றஉணர்ச்சியுடன் .

“என்னை மன்னிச்சுடு பாக்கியம், ஒரு பேயிடமிருந்து காப்பாத்தறேன்னு இன்னொரு அரக்கியிடம் நம் மகனை மாட்டிவிட்டேனே.  அப்போவே நீயும் சொன்னே, நான் தான் கேட்கலை. வீட்டுக்கு ஒரே மகள், ஓவர் செல்லத்தில் வளர்ந்தவள், அதனால் கொஞ்சம் பிடிவாதத்துடன் இருக்கிறாள் என்று நினைத்தனே தவிர இப்படியொரு கேவலமான பிறவியாக இருப்பாள்ன்னு நினைக்கவே இல்லையே. ஆசை ஆசையாய் வளர்த்த மகனுக்கு ஒரு அரக்கியை திருமணம் செய்து வைத்து அவன் வாழ்க்கையையே நாசமாக்கின பாவி நானு…”என்று வாய்விட்டு கதறினார். 

கணவரின் கண்ணீரும், அவரின் குற்ற உணர்ச்சியும் மனைவியை பதற வைக்க அவரின் வாயை கையால் மூடி,”இது உங்க தப்பில்லேங்க, எல்லாம் விதி, நடக்கணும்னு இருக்கிற ஒன்றை நம்மால் எது கொண்டும் தடுத்து நிறுத்த முடியாது. தேவையில்லாமல் பழியை தூக்கி உங்க மேலே போட்டுக்காதீங்க. ப்ளீஸ்…”என்று அவர் பங்குக்கு கணவரின் நெஞ்சில் சாய்ந்து அழ பெரியவர்கள் இருவருமே குற்ற உணர்ச்சியில் தவித்தார்கள் சில நிமிடங்கள்.

கண்ணை துடைத்துக்கொண்டு,”சரி பாக்கியம், நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்றேன், நீ ரெஸ்ட் எடு…”என்றவர் மனைவியின் கண்ணீரை துடைத்துவிட்டு கார் சாவியை பொறுக்கிக்கொண்டு தளர்வான நடையோடு வெளியே செல்ல பாக்கியம் முற்றிலும் உடைந்து போக கட்டிலில் படுத்தார். ஆனால் இப்படி மருத்துவமனையில் அனுமதிக்கிற அளவுக்கு மனைவியின் மனதில் ரணமிருக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. 

மனைவியின் கைகளை எடுத்து அதில் முகத்தை புதைத்துக்கொள்ள தந்தையே கவலையோடு பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு அவரின் செய்கை மேலும் கவலையூட்டியது. ஒரு தொழில் சாம்ராஜ்ஜியத்தை இன்று வரை ஒரு சிறு தொய்வு கூட இல்லாமல் நடத்திக்கொண்டு வருகிறவர். ஆனால் இன்று தன் வாழ்க்கையை நினைத்து நினைத்து தாயும், தந்தையும் மருகுவதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியலை. இவர்களின் காயத்தை ஆற்றும் சக்தி எதுவென்றும் அவனுக்கு தெரியவில்லை. 

தன்னையே மகன் பார்த்துக்கொண்டு நிற்பதை உணர்ந்த தேவராஜன், கண்ணீரை துடைத்துக்கொண்டு எழுந்து வந்து மகனின் தோள்மீது கையை போட்டபடி வெளியே அழைத்தது வந்தார். 

“அம்மாவை நான் பார்த்துக்கிறேன் கார்த்திக், அம்மாவுக்கு ஒன்றுமில்லை. நீ வீட்டுக்கு கிளம்பு, மதுக்குட்டி தனியா இருக்காள். ஏற்கனவே பயந்து போயிருக்கிறாள். நீ போய் அம்மாவுக்கு ஒன்றுமில்லைன்னு சொல். அம்மாவை டிஸ்சார்ஜ் செய்து நான் அழைச்சிட்டு வர்றேன்…” என்றார் கனிவாக ஆனால் உறுதியாக. 

எப்பொழுதுமே தாய், தந்தை பேச்சை மீறி நடக்கும் வழக்கமில்லாத மகனுக்கு, இன்றும் அவரின் பேச்சை மீறும் தெம்பில்லை. அவருக்கு தலையை உருட்டிவிட்டு மீண்டுமொரு முறை தாயை பார்த்துவிட்டு கார் பார்க்கிங் நோக்கி சென்றான். 

அவன் சென்ற ஒரு சில மணித்துளிகளில் பாக்கியத்தின் மயக்கம் தெளிந்து முற்றிலும் குணமாகிவிட கட்டிலில் எழுந்து அமர தேவராஜனின் முகம் நிம்மதியில் முக்குளித்தது. 

“ரொம்ப பயந்துட்டீங்களா, சாரிங்க…”என்று கணவரின் கன்னத்தை அன்போடு வருட அதில் தன் அதரங்களை பதித்தார் கணவர் அன்போடு.

“நீ இல்லாத வாழ்க்கையை என்னால் நினைச்சி பார்க்க முடியாது பாக்கியம், இந்த உலகத்தை விட்டு போகணும் என்றால் அது நீயும், நானும் ஒன்றாக தான் போகணும். என்னை விட்டு தனியா போகணும்னு நினைக்காதே…” 

கணவரின் பேச்சில் புன்னகை மலர,”போதுமே, அசட்டு தனமா பேசாதீங்க. சரி கார்த்திக், மது எங்கே ? 

அவர் விஷயத்தை கூற,”ப்ச் பாவம் அவனை ரொம்ப பயமுறுத்திட்டேன் போல. சரி டாக்டரிடம் வீட்டுக்கு போக கேட்டுட்டு வாங்க…”என அவரே உள்நுழைந்தார்.

“ஹலோ மிஸ்டர், மிஸர்ஸ் தேவராஜன்…” என்றபடி உள்ளே வந்தவர் பாக்கியத்தின் தெளிவை கண்டதும் சந்தோஷமாக புன்னகைத்தார். 

பாக்கியத்தை சோதித்துவிட்டு,”யு ஆர் பெர்பெக்ட்லி ஆல்ரைட், நீங்க இப்போ கூட வீட்டுக்கு கிளம்பலாம். பாவம் உங்க மகன் தான் ரொம்ப பயந்துட்டார். அப்புறம் மிஸரஸ் தேவராஜன் நமக்கு வயசாக வயசாக நம் உணர்ச்சி வசப்படறதையும், தேவையில்லாமல் சிந்திக்கிறதையும் நிறுத்திட்டாலே நம் உடம்பு நம் சொல்பேச்சு கேட்கும். இல்லையென்றால் அது நம்மை ஆட்டிப்படைக்கும் அது இஷ்டத்திற்கு…”என்று சிரிக்க மற்ற இருவரின் விழிகளும் அர்த்தத்துடன் சந்தித்துக்கொண்டது.

டாக்டர் ஒரு சில அறிவுரைகளோடு டிஸ்சார்ஜ் சம்மரியை ரெடி செய்து கொடுக்க தேவராஜன் பணம் கட்டிவிட்டு வர செல்ல பாக்கியம் தன் அறையை விட்டு வெளியே வந்து மெதுவாக அந்த வராண்டாவில் நடந்துக்கொண்டிருந்தவரின் விழிகளில் அந்த இரவில் ஒற்றை ஆளாக அங்கிருந்த சேரில் தலை சாய்த்து அமர்ந்திருந்த ஒரு பெண் பட அவளை நெருங்கினார்.

அருகே நெருங்க நெருங்க, எங்கேயோ பார்த்த முகமாய் இருக்கிறதே என்று நினைத்துக்கொண்டே அவள் தோளில் கையை வைத்தார் ஆதூரமாக. அந்த பெண் பயந்து போய் நிமிர அவளின் முகத்தை பார்த்தவருக்கு முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப். 

“நீ …நீ…”என்று பெயர் வராமல் தடுமாற, ரிதுவின் முகம் மலர்ந்தது அவரை அடையாளம் தெரிந்துக்கொண்டு தினுசில்.