Nenjil Therikuthu Panithuli -16

அத்தியாயம் -16

கார்த்திக் வீடு ….

வீட்டுக்குள் நுழைந்த கார்த்திக் ஹாலில் அமர்ந்திருந்த பெற்றவர்களை கண்டதும் அங்கேயே அமர்ந்தான் சோர்வாக. அவினாஷின் வாக்கு மூலம் கார்த்திக்கின் கடந்த கால வாழ்க்கையின் ரணங்களை கிளறிவிட்டிருக்க, அதன் விளைவாக மனதும், உடலும் சோர்ந்து போயிருந்தது. 

தமையனை கண்டதும் ஜூஸ் கொண்டு வர மது உள்ளே செல்ல பெற்றவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

“என்னாச்சு கார்த்திக், ரொம்ப டயர்டா இருக்கே? வேலை பளு அதிகமா …? 

“ப்ச் இல்லைம்மா…”என்றபடி எழுந்துச் செல்ல முற்பட்டவனின் கையை பிடித்திழுத்து அமர வைக்க , மது அவனிடம் ஆரஞ்சு பழ ஜூஸை கொண்டு வந்து நீட்டினாள். 

அவனுக்கும் அது தேவைப்பட்டது போல கடகடவென சரித்துக்கொண்டான். தொண்டையில் பதமான குளிர்ச்சியில் பழச்சாறு உள்ளிறங்க காயப்பட்டிருந்த மனது லேசாக சமன் பட்டது போல உணர்ந்தான். 

“ஹ்ம்ம் இப்போ சொல்லு, என்னாச்சு உனக்கு…? 

“என்ன சொல்ல, இன்று ஒரு கேஸ் க்ளியர் ஆச்சு. அதன் அக்யூஸ்ட் சொன்னது என் மனதை பாரமாக்கிடுச்சிம்மா…” என்றவன் கேஸ் பற்றிய விவரத்தை கூறி எதற்காக கொலை செய்தான் என்றும் கூற மற்ற மூவரும் அதிர்ந்து போனார்கள்.

“அடப்பாவி இதற்காக கொலை செய்தான், இந்த மாமியார் மருமகள் பிரச்சினை ஆதி காலம் தொட்டே இருந்துட்டு வர்றது தானே, இப்போ புதுசா என்ன கண்டுபிடிச்சிட்டான்னு அவனே அவனுக்கு சவ குழியை தோண்டியிருக்கான் முட்டாள்…” என்று அங்காலாய்த்தார் பாக்கியம். 

“இதெல்லாம் முட்டாள்தனம். இவனுக்கு அடஜஸ்ட் பண்ணி நடக்க தெரியலை…” இது தேவராஜன்.

“இவனுக்கு அம்மா தான் முக்கியம் என்றால் மனைவியை டிவோர்ஸ் பண்ணியிருக்கலாமே. இது என்ன அராஜகம். இப்படி கொலை செய்திட்டே போனால் நாடே சுடுகாடா தான் இருக்கும். அது சரிண்ணா இதுக்கு நீங்க ஏன் பரிதாபப்படறீங்க அவன் மேல்…?

மூவரும் பேசியதை கேட்டதும் கார்த்திக்கின் இதழ்களில் மெல்லிய புன்னகை தோன்றி உடனே மறைந்தும் போனது. 

“உங்க பார்வையிலிருந்து அதை பார்க்கறீங்க, அதனால் உங்களால் சுலபமா விமர்சிக்க முடியுது. ஆனால் நான் அவனை என் பார்வையிலிருந்து பார்க்கிறேன், அதனால் அவனை நினைச்சி வருத்தப்படறேன். அதற்காக அவன் செய்தது சரின்னு வாதாடவில்லை. ஒருத்தன் கட்டின மனைவியை கொலை செய்கிறான் என்றால் அவன் மனதளவில் எப்படியெல்லாம் தயாராகி இருக்கணும். இத்தனைக்கும் காதலித்து மணந்த பெண். அவன் தாய்க்காக மனைவியை கொடுமை செய்யவில்லை, உதாசீனம் செய்யவில்லை. மனைவியின் ஆசையையும் பூர்த்தி செய்து வைச்சிருக்கான். ஆனால் அதையும் தாண்டி அந்த பெண் இவனை எந்தளவு மனதளவில் காயப்படுத்தியிருந்தால் அவினாஷ் கொலை செய்கிற அளவுக்கு போயிருப்பான்…”

அவன் பேச பேச அங்கு யாருக்குமே பதில் பேச துணிவில்லை. அவர்களும் மருமகளால் துன்பத்தை அனுபவிச்சவர்கள் தானே. 

“சொல்ல போனால் என்னை விட அவினாஷ் கட்டின மனைவியால் துன்பத்தை அனுபவிக்கவில்லை. வந்த மருமகளால் நான், நீங்க, அப்பா, மதுன்னு மொத்த குடும்பமே அவ்வளவு கஷ்டங்களை அனுபவிச்சோம். ஆனால் நான் அவளை கொலை செய்யணும்னு நினைக்கலை. என்னால் அப்படி கற்பனை செய்துகக்கூட பார்க்க முடியாது. ஒரு வேளை நான் வளர்ந்த விதம், பழகிய சர்க்கிள் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் அவினாஷ் ரொம்ப ஈஸியா அந்த முடிவை எடுத்திருக்கான். நீங்க சற்று நேரம் முன்பு சொன்னீங்களே கொலை செய்வதற்கு பதிலா டிவோர்ஸ் செய்திருக்கலாம்ன்னு. அப்படி அவன் மனசு யோசிக்கலையே. அவன் மனதளவில் சிதைஞ்சி போய் தானே இந்த முடிவை எடுத்திருக்கான்.

எல்லா மனிதர்களின் மனமும் ஒன்று போல இருப்பதில்லையே. நம்ம கையிலே ஐஞ்சு விரலும் ஒவ்வொரு விதமா இருக்கும் பொழுது நாம நினைக்கிறதை இன்னொருத்தனும் செய்யணும், செய்திருக்கலாம் அப்படின்னு யோசிப்பதே முட்டாள்த்தனம் இல்லையா…? ஆனால் அவனின் கோபத்திற்க்காக வாழ்க்கையையே இழந்துட்டு இன்று ஒரு கொலைகாரனா நிக்கிறான். பாவம் இறந்து போ னவள் சில நிமிஷ துன்பங்களை தான் அனுபவிச்சிருப்பா. ஆனால் அவினாஷ்…? 

பாதியிலேயே பேச்சை நிறுத்த, மற்றவர்களுக்கும் கார்த்திக்கின் கோணம் புரிந்தது. அதனால் அங்கு கனமான மௌனம் நிலவ கார்த்திக் எழுந்து தன்னறைக்கு சென்று கட்டிலில் விழுந்தான். 

மெரினா பீச் …

ஆனந்தும், நிவியும் பெண்கள் பக்கம் திரும்பி கேள்வியாக நோக்க, நிவி அவசரமாக பேசினாள். 

“ஹேய் ஒன்றுமில்லை, யு கேர்ரி ஆன்…” என அவர்கள் மீண்டும் தண்ணீரில் விளையாட ஆரம்பிக்க நிவி ரிதுவை முறைத்தாள். 

“இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி கத்தறே, ஆமாம் நான் சொன்னது தான் உண்மை. விஷால் உன்னை காதலித்தான். அது எனக்கும், ஆனந்துக்கும் நல்லாவே தெரியு…”என்னும் முன்னரே இப்பொழுது ரிது குறுக்கே புகுந்தாள். 

“உளறாதே நிவி, ஒரு நாளும் அவன் அந்த மாதிரி என்னிடம் பேசியதுமில்லை, பார்வை பார்த்ததுமில்லை. தேவையில்லாமல் குழப்பத்தை உண்டு பண்ணாதே…”என்றாள் கடுமையுடன். 

“நான் குழப்பத்தை உண்டு பண்ணலை, நிதர்சனம் என்னவோ அதை சொல்றேன். உன்னிடம் அவன் சாமியார் வேஷம் போட்டிருக்கலாம். ஆனால் அவன் மனம் முழுக்க நீ மட்டுமே இருந்தே. அதற்கு நாங்க சாட்சி. அவன் காதலை சொல்லாததிற்கு காரணம் நம்ம வீட்டு பெரியவங்க. கத்தரிக்காய் முத்தினா கடை தெருவுக்கு வரும்ங்கிற அவன் காதல் முத்தி உன்னிடம் ஆசை ஆசையாய் சொல்ல வந்த பொழுது நீ தான் பெரிய இடியை எங்க தலைமேல் இல்லையில்லை விஷால் தலைமேல் மின்னாமல் முழங்காமல் இறக்கினே. பாவம் அவன் எப்படி துடிச்சு போனான் தெரியுமா? உன் முன்னால் அவன் வலியை காட்டிக்க முடியாமல் உள்ளுக்குள் அழுது வெளியே சிரிச்சின்னு, ப்ச் உனக்கு எங்கே அந்த வலி புரிய போகுது…”

நிவி பேச பேச ரித்திகா சிலை போல் சமைந்திருந்தாள். அவளுக்கு விஷால் தன்னை விரும்பிய விஷயம் அதிர்ச்சியை உண்டு பண்ணியிருந்தது. அதை விட தன் மேல் வைத்த காதலுக்காக அவன் இன்னும் திருமணமே செய்யாமல் தனிமரமாக இருப்பது வேதனையை மேலும் அதிகப்படுத்தியது. 

“என்னடி ஊமை மாதிரி உட்கார்ந்திருக்கே? எதுவும் பேச முடியலையா. சரி விடு இப்பொழுதும் ஒன்றும் கெட்டு போய்டலை. இப்போ நீயும் டிவோர்சி, அவன் மனதில் உன்னை தவிர வேறு பெண்ணுக்கு இடமில்லைன்னு தெளிவா சொல்லிட்டான். இனியாவது அவன் காதலை நீ கன்சிடர் பண்ணலாமே. என்னடி சொல்றே? நீயும் வாழ வேண்டிய வயசு தானே, விஷாலும் வாழ வேண்டிய வயசு. இரண்டு பேரும் மனதளவில் ஒத்து போய் திருமணம் செய்துக்கிட்டால் அனாயாவுக்கு அன்பான ஒரு அப்பா கிடைப்பார், உனக்கு காதல் கொண்ட ஒரு கணவன் கிடைப்பான். யோசிச்சி நல்ல முடிவா எடு ரிது. மூன்று பேரும் வர்றாங்க. விஷாலின் காதலை உன்னிடம் சொன்னேனென்று அவனிடம் கேட்டுடாதே. என்னை பிராண்டிடுவான். லூசு பய புள்ள…” என்றாள் தாழ்வான குரலில்.

அதற்குள் மூவரும் பெண்கள் இருவரையும் நெருங்கிவிட, அனாயா ஓடி வந்து தாயின் பக்கத்தில் அமர்ந்து சலுகையாக சாய்த்துக்கொண்டு நிவியை குறுகுறுவென்று தன் பெரிய விழிகளால் அளந்தாள். நிவியும் அவளை போலவே பார்க்க குழந்தை தாயின் புஜங்களில் முகத்தை மறைத்துக்கொண்டாள் வெட்கத்துடன். 

“ரிது நான் ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வர்றேன், உனக்கு என்ன பிளேவர் வாங்கணும் ஏஞ்சல்…”என்று குழந்தையின் முன் மண்டியிட்டான் விஷால்.

“அவளுக்கு சாக்கோ பார் வாங்கிடு…”என்ற ரிதுவை தொடர்ந்து மற்றவர்களும் வனிலா , ஸ்டராபெர்ரி , பிஸ்தா என்று ஆர்டர் கொடுக்க விஷால் சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றான்.

“அனு செல்லம், இவங்க நிவேதா ஆன்ட்டி …”என்று ஆனந்த் அறிமுகப்படுத்த குழந்தையின் முகம் அனுமதிக்காக தாயின் முகம் நோக்கியது. 

“வாடா செல்லம்…”என்று இரண்டு கைகளையும் விரித்து நிவி அழைக்க, ரிது விழிசைவில் சம்மதிக்கவும் நிவேதாவிடம் சென்றாள்.

அவளை தூக்கி இரண்டு குண்டு கன்னங்களிலும் முத்தமிட்டு,”என் குட்டி ஏஞ்சல்…”என்று கொஞ்சியவள், “ஏண்டா என்னை பார்த்தால் ஆன்ட்டி மாதிரியா இருக்கேன், என் ஏஞ்சலின் அக்கா மாதிரி இருக்கேன். எப்படா கேப் கிடைக்கும் சைக்கிள் கேப்புல பிளைட் ஓட காத்திருப்பியே, எருமை…” 

“ஆமாம் நீ ஆன்ட்டி மாதிரி தான் இருக்கே, ஜீன்ஸ், டாப்ஸ் போட்டுக்கிட்டா நீ யூத்துன்னு நினைப்போ…? சரியான பழைய டெலிபோன் பூத்து நீ…” என்று அவளின் காலை வாரினான் மற்றவன்.

“ஏஞ்சல் நீயே சொல்லு, நான் பாட்டி மாதிரியா இருக்கேன், உன் அங்கிள் தான் தாத்தா மாதிரி இருக்கான், சொல்லுடா தங்கம் …” 

இருவரும் மாறி மாறி செல்ல சண்டை போட்டுக்கொள்ள அனாயாவுக்கு இதெல்லாம் புதிதாக இருக்க, அவள் குலுங்கி குலுங்கி சிரித்தாள். அதுவரை தன் யோசனையில் மூழ்கியிருந்த ரித்திகா மகளின் சிரிப்பில் கவனம் கலைந்து திரும்ப அனாயாவின் சிரிப்பை ஆச்சர்யத்தோடு பார்த்தாள். 

இதுவரை மகள் இப்படி சிரித்து பார்த்ததே இல்லை. அதற்காக அவள் சிரித்ததே இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனால் குலுங்கி குலுங்கி சிரித்ததே இல்லை. அவளின் சிரிப்பழகை ரசித்துக்கொண்டிருந்தவளுக்கு இன்னொன்றும் தோன்றியது. தான் என்னதான் மகளை பார்த்து பார்த்து செல்லம் கொடுத்து வளர்த்தாலும் அதில் ஒரு இயந்திரத்தனம் இருப்பதை மனது உறுதி செய்தது. இங்கே மாமா, அத்தை என்று இருந்தால் குழந்தை இன்னும் மனதளவில் ஆரோக்கியமாக வளருவாளோ என்ற எண்ணமும் உண்டாக அவளின் விழிகள் விஷால் சென்ற பக்கம் திரும்பியது. 

‘அவன் நம்ம வீட்டு பெரியவர்களுக்காக உன்னிடம் அவன் ஆசையை சொல்லாமல் மூடி மறைச்சு வைச்சான். கர்ப்பத்தையும், காதலையும் என்றுமே மறைக்க முடியாதுன்ற சொல் எத்தனை சத்தியம். பாவம்…’ என்ற நிவியின் பேச்சு அவள் காதில் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது.

அன்றய பொழுது ரீதிக்காவுக்கு சிந்தனையிலே கழிய, மற்ற நால்வரும் விளையாடினார்கள், கொஞ்சினார்கள், சிரித்தார்கள். மணலில் வீடு கட்டினார்கள். கடலில் சிப்பிகளை பொறுக்கினார்கள். இருட்ட தொடங்கியதும் கடல் காற்றில் மாலை நேர தென்றலும் கூடி இணைந்து சுகமான குளிர் தென்றலை பிரசவிக்க அனாயாவின் தொண்டை கமறியது. 

இருந்தது போதுமென்று நால்வரும் குழந்தையுடன் வீட்டுக்கு திரும்ப, ஆனந்த் இரவு சாப்பாட்டை வாங்கி வர சென்றுவிட்டான். குழந்தையை குளிக்க வைத்து வேறு உடை மாற்றி, ரிதுவும் ரெபிரெஷாகி உடை மாற்றிக்கொண்டு வர அதற்குள் ஆனந்த் வந்திருந்தான்.

குழந்தை களைப்பாக இருந்ததினால் அவளை சாப்பிட வைத்து படுக்க வைக்க, உடனே உறங்கிவிட்டாள் பழக்கமற்ற விளையாட்டில் உண்டான களைப்பில்.  மற்ற நால்வரும் பேசியபடியே சாப்பிட பேச்சு ரிதுவின் பெற்றோர், நரேஷ், அத்தைகள், சித்தி, சித்தப்பா அவர்களின் வேலை திறன், பிரான்ஸ் என்று சுற்றி வந்தாலும் ரிதுவின் விழிகள் அடிக்கடி விஷாலை ஆராய்ந்துக்கொண்டு தானிருந்தது.

ஆனால் அவனோ நிவி சொன்ன மாதிரி இல்லாமல் வெகு சகஜமாக இருக்க ரிது குழம்பிப்போனாள். எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும் சற்று நேரம் பேசிவிட்டு அவரவர் வீட்டுக்கு சென்றுவிட ரிது தனித்துவிடப்பட்டாள். அவளின் மனது நிவியின் பேச்சை நிதானமாக அசை போட்டது. 

யோசனையின் நடுவில் மெல்லிய இருமல் சத்தம் கேட்க குழந்தை உறக்கத்தில் இருமுகிறாள் என்று நினைத்து தன் யோசனையில் உழல ஆரம்பித்தவளை மீண்டும் அனாயாவின் வன்மையான இருமல் சத்தம் நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தது. ஓடி சென்று குழந்தையை கவனிக்க அனாயா அதிகமாக இரும ஆரம்பிக்க குழந்தையின் நெஞ்சை நீவி கொடுக்க கையை வைத்தவள் ஷாக்கடித்தவள் போல் அதிர்ந்து போனாள். 

குழந்தையின் உடல் அனலாய் காய்ந்தது. ஒரு நொடி செய்வதறியாது தவித்தவள், அடுத்த நொடி தான் இந்தியாவில் தானே வளர்ந்தோம் என்பது நினைவு வர கார் சாவியை எடுத்துக்கொண்டு குழந்தையின் கர்னே சாந்தே (மெடிக்கல் புக்) எடுத்து பையில் வைத்துக்கொண்டு அனாயாவை தூக்கிக்கொண்டு காரில் படுக்க வைத்துவிட்டு வீட்டை பூட்டிக்கொண்டு காரை ஹாஸ்பிடல் நோக்கி செலுத்தினாள்.

வழியில் புகழ் பெற்ற மருத்துமனையை கண்டதும் வண்டியை அதனுள் கொண்டு நிறுத்திவிட்டு குழந்தையை ஹாஸ்பிடல் அனுமதிக்க வைரல் பீவர் என்றார் டாக்டர்.  

பொதுவாகவே வெளிநாட்டின் தட்ப வெட்ப நிலையிலிருந்து சில மணி நேரங்களில் வேறு ஒரு நாட்டின் தட்ப வெட்ப நிலைக்குள் நுழையும் பொழுது அதை உடல் ஏற்றுக்கொள்ள சற்று திணறி உள்ளுக்குள் போராடும். இது வெளிநாட்டிலிருந்து வரும் குழந்தைகளுக்கு வருகின்ற பிரச்சினை என்பது பிரான்ஸில் இருக்கும் இந்திய தாய்மார்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறாள்.

பிறந்தத்திலிருந்து ஒரே காலநிலையில் வளர்ந்த அனாயாவுக்கு முதல் முறையாக கால சூழ்நிலை மாறவும் அவளுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்பதை அவளால் புரிந்துக்கொள்ள முடிந்தது. ஆனால் வைரல் பீவர் என்பது தான் அவளின் பயத்தை அதிகப்படுத்தியது. விஷால், நிவியிடம் சொல்லி அவர்களை வர சொல்லலாமா என்று யோசித்த கணமே அதை கைவிட்டாள். 

வேண்டாம் அவர்கள் இன்னும் வீடு போய் சேர்ந்திருக்க மாட்டார்கள், இந்நேரத்தில் அவர்களை தொல்லை செய்வது சரியில்லை. காலையில் சொல்லிக்கொள்ளலாம் என்று முடிவு செய்து ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்த அனாயாவை கவலையோடு பார்த்துவிட்டு பீடியாட்ரிக் வார்டு காரிடாரில் போட்டு வைத்திருந்த சேரில் அமர்ந்தாள்

எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தாளோ திடீரென்று தோள் மீது ஒரு கரம் படிய விலுக்கென்று நிமிர்ந்தாள்.