Nenjil Therikuthu Panithuli -15

அத்தியாயம் -15

வீடு சுத்தமாக பரிமாரிக்கபட்டிருந்தது. இது விஷாலின் வேலை என்று சொல்ல தேவையில்லை. அவள் அங்கு வாழ்ந்த பொழுது அடிக்கடி பூஜாடிகளில் பூவை மாற்றுவது, திரை சீலைகளை மாற்றுவது, எங்கும் தூசி தும்பு இல்லாமல் பளபளவென்று வைத்திருப்பது, சீசனுக்கு ஏற்றவாறு தோட்ட செடிகளை வெட்டி விடுவது, களையெடுப்பது என்பது ரித்திகாவின் வழக்கம். அவள் எப்படி விட்டு சென்றாளோ அதை அப்படியே அவன் பாதுகாத்து வைத்திருக்கவும் அவளுள் ஆச்சர்ய ஊற்று.  நன்றியுரைக்கும் விதமாக அவனை பார்த்தாள் ரிது. 

அதை கண்டுகொள்ளாதவன் போல, “சரி ரிது நீயும், ஏஞ்சலும் ரெபிரெஷாயிட்டு ரெடியா இருங்க, நான் இழவு வீட்டுக்கு அழைச்சிட்டு போறேன்…” பேசிக்கொண்டிருந்தவனை கையமர்த்தி நிறுத்தி மகள் பக்கம் திரும்பினாள். 

“அனும்மா, நீங்க உங்க ரூம்க்கு போங்க, மம்மா அங்கிளிடம் பேசிட்டு வர்றேன்…” என குழந்தை தலையாட்டிவிட்டு உள்ளே செல்ல, விஷாலிடம் கோபத்துடன் திரும்பினாள். 

“குழந்தை முன்னாடி என்ன பேசறே நீ… ? 

“இதில் என்ன இருக்கு, எப்படி இருந்தாலும் அனுவுக்கு அவள் அப்பாவை காட்டி தானே ஆகணும். அவ கையால் காரியங்களை செய்யணுமில்லே…”

“இல்லை, அனு வரமாட்டாள். ஒரு காலத்தில் அவன் கையால் தாலி கட்டிக்கிட்ட பாவத்திற்காக நான் வந்து பார்க்கிறேன். அதுவும் ஜஸ்ட் ஐஞ்சு நிமிஷம் தான் அங்கு இருப்பேன்…” என்றாள் கறாரான குரலில். 

“ஏன்…? 

அவனை அமைதியாக பார்த்துவிட்டு உள்ளே செல்ல, விஷால் ஒரு பெருமூச்சுடன் வெளியே சென்றான். 

நரேஷ் இல்லம்…

வீட்டின் ஹாலில் நடுநாயகமாக ஐஸ் பெட்டியில் சகலமும் அடங்கி பாவமே உருவாக கண்மூடி படுத்திருந்தவனை சலனமே இல்லாமல் ஒரு கூட்டத்தோடு கூட்டமாக நின்று பார்த்தவளுக்கு பரிதாபமோ, ஒரு துளி கண்ணீரோ கூட வரவில்லை. அவன் சடலத்தின் பக்கத்தில் தங்கை என்று சொல்லி அறிமுகமாகிய கந்தர்வ காதலி லலிதாவை தேடியலைந்த விழிகளில் தலை விரிகோலமாக, அழுதழுது மை கலைந்து சிவந்து ஊறிய விழிகளோடு ஒரு பெண் அமர்ந்திருக்கவும் ரித்திகாவுக்கு குழப்பம் உண்டானது. 

இவன் இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டது லலிதாவை இல்லையா? இவள் இரண்டாவது ஏமாளியோ என்று சிந்தித்தபடி அவளின் முகத்தை உற்றுநோக்கினாள். அதில் கவலையோ, வாழ்க்கையை இழந்த பயமோ இல்லை. மாறாக கடமைக்கு அழுத மாதிரி தோன்ற ரித்திகா தலையை குலுக்கிவிட்டுக்கொண்டாள்.

விஷாலிடம் சொன்ன மாதிரி ஐந்து நிமிடம் தான் நின்றிருப்பாள். அவளை அடையாளம் தெரிந்து யாரென்று வந்து கேட்பதற்குள் ரித்திகா வீட்டை விட்டு வெளியேறி ஆட்டோ பிடித்து வீட்டுக்கு சென்றவள் விஷாலும், அனாயாவும் தன்னை நோக்கி வருவதை கூட கவனிக்காமல் பாத்ரூம் சென்று ஷவரின் அடியில் நின்றாள். 

மனம் முழுவதும் நரேஷின் துரோகங்களும், கொடுமைகளும், ஏமாற்றுத்தனங்களும் மட்டுமே நிறைந்திருக்க, அன்றோடு அவளின் வாழ்க்கையின் முதல் அத்தியாயம் முடிந்த மாதிரி ஓர் உணர்வு அவளுள். 

அனாயாவோடு மோனோபொலி விளையாடிக்கொண்டிருந்த விஷால் குளித்து வெளியில் செல்லும் உடையோடு வந்து நின்ற ரித்திகாவை புரியாமல் நோக்கினான். 

“பீச்சுக்கு போகணும்னு சொன்னியே, மறந்துட்டியா… ? அனாயா ஷெரி நாம பீச்க்கு போகலாமா… ? 

“தக்கோர் மம்மா…”என்றவள் விளையாடிக்கொண்டிருந்த கேம் போர்டை எடுத்து வைத்துவிட்டு தன் ஷூவை அவளே போட்டுக்கொள்ள விஷால் தாயையும், மகளையும் ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். 

தன் பேகையும், வீட்டு சாவியையும் எடுத்துக்கொண்டு குழந்தை மற்றும் விஷாலுடன் வெளியே வந்தாள். 

“எல்லோரையும் வர சொல்லிட்டியா விஷால், பார்த்து மூன்று வருஷமாச்சு, அத்தை, சித்தி, சித்தப்பா எல்லோரும் எப்படி இருக்காங்க… ? 

வண்டியை கையாண்டுக்கொண்டிருந்தவன்,”அவங்களுக்கு என்ன, நல்லாவே இருக்காங்க. விடு ரிது அவங்களை பற்றி பேசி என்ன ஆக போகுது. அனு செல்லம் நீங்க பீச்சை பார்த்திருக்கீங்களா… ? என்று பேச்சை திருப்பினான். 

“நோ அங்கிள், அங்கு பீச் இல்லையே… ? 

“என்ன ரிது சொல்றா ? அங்கு பீச் இல்லையா… ?

“இருக்கு, ஆனால் நான் இருக்கிற பாரீஸ்ல இல்லை, பல நூறு மைல் தள்ளி இருக்கிற ஊரில் இருக்கு…”

“ஓ சரிடா அனு செல்லம் நாம பீச்சில் விளையாடலாம்…” என்றவன் ரிதுவிடம் பேசியபடி மெரீனா பீச்சை அடைந்து வண்டியை நிறுத்திவிட்டு குழந்தையின் கையை பிடித்தபடி கடலை நோக்கி செல்ல புது உலகத்தை பார்த்த தினுசில் குழந்தை மிரள மிரள விழித்தபடி நடந்தது.

பீச்சில் குவிந்திருந்த மக்களையும், ஆங்காங்கே இருந்த தள்ளுவண்டி கடைகளையும் விழிகள் விரிய பார்த்துக்கொண்டே நடந்தவளுக்கு பரந்து விரிந்த கடலை கண்டதும் விழிகளை முடிந்தளவு விரித்தாள் சிறு பெண்.

“மம்மா மணிபிக் (magnificent) என்று கையை தட்டி வியந்தாள் குட்டி பெண். 

“ஹ்ம்ம் இதுக்கே அதிசயபட்டால் எப்படி, வா நாம தண்ணீரில் விளையாடலாம் ஏஞ்சல் …” என்று குழந்தையை அலேக்காக அள்ளிக்கொண்டு கடலை நோக்கி விஷால் செல்ல,”விஷால் கேர்புல் …” என்ற ரிதுவின் குரல் காற்றில் தான் கரைந்து போனது. 

குழந்தையும், குழந்தையாய் மாறிய விஷாலும் தண்ணீரில் குதூகலத்துடன் ஓடி பிடித்தும், அலைகளை துரத்திக்கொண்டும், கடல் நீரை ஒருவர் மேல் ஒருவர் வாரி தெளித்துக்கொண்டும் விளையாட ரிது மேடான மணலில் அவர்களை பார்த்தபடி அமர்ந்து புன்னகையுடன் ரசித்துக்கொண்டிருந்தாள். அப்படியே மற்ற குழந்தைகள் தத்தம் பெற்றோருடன் சந்தோஷமாக விளையாடுவதையும் ரசித்துக்கொண்டிருந்தவளுக்கு மகளை நினைத்து வருத்தம் உண்டானது. 

மற்ற குழந்தைகளுக்கு அமைந்த மாதிரி அனாயாவுக்கு மட்டும் ஏன் ஆண்டவன் தந்தையை கொடுக்கவில்லை. பாவம் குழந்தை, அவள் வாழ்க்கையில் தாய் மட்டுமே சாசுவதமோ ? என்னை போல அவளும் தனி மரம் தானோ. ச்சே நான் மட்டும் ஆரம்பத்திலேயே நரேஷ் பற்றி சரியாக விசாரித்திருந்தால் இன்று நானும், அனாயாவும் தனிமரமாக நின்றிருக்க மாட்டோம். எல்லாம் விதி. 

“ஹேய் ரிது…” என்ற பெண் குரலில் எண்ண வலைகள் அறுபட வேகமாக திரும்பியவள் சின்ன அத்தையின் ஒரே மகள் நிவேதாவும், விஷாலின் தம்பி ஆனந்தும் வந்திருந்தார்கள்.

“ஹேய் நிவி, எப்படி இருக்கே ? ஹாய் ஆனந்த், இப்போ தான் உனக்கு நேரம் கிடைச்சுதா ? 

வரவேற்பும், குறையுமாக பேசினவளை கண்டு இருவருமே சிரித்தார்கள்.

“நாங்க நல்லா இருக்கோம், இவன் ஆபிஸ் ஒர்க்கில் கொஞ்சம் பிஸி. இவனால் எனக்கும் வர தாமதமாயிடிச்சி. சரி சொல்லு ரிது, உன் லைஃப் எப்படி போகுது ? எங்கே உன் குட்டி ஏஞ்சல் … ? என்று படபடத்தாள் நிவேதா. 

அவளின் பேச்சிற்கு புன்னகைத்து தூரத்தில் கையை நீட்டி விஷாலையும், குழந்தையையும் காட்ட, ஆனந்த் எழுந்து ஓடியே விட்டான் அவர்களிடம். நிவேதா குழந்தையை நிதானமாக ரசித்தபடி ரிதுவின் அருகில் அமர்ந்து அவளின் கையை பிடித்துக்கொண்டாள் ஆதரவாக. 

“அனாயா உண்மையில் ஏஞ்சல் மாதிரியே இருக்கா, எப்படி தனியா சமாளிக்கிறே ? அப்பா எங்கேன்னு குழந்தை தொல்லை செய்யலையா…? 

குழந்தையை பாராட்டியதும் தாய் முகத்தில் பெருமித புன்னகை மலர்ந்தது. 

“எனக்கென்ன பிரச்சினை. நான் ரொம்ப நிம்மதியா, சந்தோஷமா இருக்கேன் நிவி. அப்பா இருந்திருந்தால் அனாயா எப்படி இருந்திருப்பாளோ, ஆனால் முழுக்க முழுக்க என் வளர்ப்பில் அருமையா வளர்ந்திருக்காள். மிகவும் புரிதல் உள்ளவள். ஒரு முறை ஒரு விஷயத்தை சொல்லிக்கொடுத்தால் அதை உடனே கற்பூரம் மாதிரி பிடிச்சிக்குவா. அவளால் எனக்கு தொல்லையே இல்லை. எங்க உலகம் ரொம்ப சின்னது நிவி. அவளுக்கு நான், எனக்கு அவள்…”

“ஓ கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீ இந்த நாட்டை விட்டு பச்சை குழந்தையை தூக்கிட்டு தன்னந்தனியா கிளம்பும் பொழுது நாங்க மூன்று பேருமே ரொம்ப கஷ்டப்பட்டோம். ஆனால் இப்போ நீ சொல்றதை கேட்கும் பொழுது மனசுக்கு நிம்மதியா, நிறைவா இருக்கு. ஆனால் இந்த பெரியவங்க கொஞ்சம் திருந்தியிருக்கலாம்…”

பெருத்த நிம்மதியுடன் பேசிக்கொண்டிருந்தவள் கடைசி வாக்கியத்தை சொல்லும் பொழுது அவளின் முகம் கடுகடுத்தது. 

அவளை யாரை பற்றி சொல்கிறாள் என்று ரிதுவுக்கு தெரியும். தந்தையின் இரண்டு தங்கைகளை பற்றி தான் சொல்கிறாள். மூத்த தங்கையின் பெயர் சிவகாமி. இவரின் கணவர் புருஷோத். வருமானவரி துறையில் பெரிய ஆபிஸர். இவர்களுக்கு இரண்டுமே ஆண் பிள்ளைகள். விஷால் மற்றும் ஆனந்த். சின்ன தங்கையின் பெயர் லக்ஷ்மி, இவரின் கணவர் தண்டபாணி. இவர் சொந்தமாக ஹார்டுவேர்ஸ் கடை வைத்திருக்கிறார். இவர்களுக்கு ஒரே பெண் நிவேதா. 

இரண்டு தங்கைகளும் பெற்றவர்களை பின்பற்றி அண்ணன் மேல் கோபத்தை கருவேல மரம் போல வளர்த்து வைத்திருந்தாலும் இளைய தலைமுறை அவர்களுள் அன்பாக பழகி, நண்பர்கள் போல உதவி செய்துக்கொண்டார்கள் பெற்றவர்களுக்கு தெரியாமலே. தெரிந்தால் தேவையில்லாத பஞ்சாயத்துக்கள், கேள்விகள் எழும். ஆடு பகை, குட்டி உறவா என்ற அரதப்பழசான வாக்குவாதங்களுக்கு இடம் கொடுக்க இளசுகளுக்கு விருப்பமில்லை. 

பெரியவர்களில் மற்றவர்கள் முறுக்கிக்கொண்டு இருந்தாலும் ரிதுவின் தந்தை ஈஸ்வரன் தங்கை பிள்ளைகள் மேல் அன்பாக இருந்தார். அதன் பலன் தான் அவர்களும் ரிது வெளிநாட்டுக்கு சென்றுவிட்டாலும் விடாமல் அவளுடன் தொடர்பில் இருந்தார்கள். இவர்களின் உறவு மட்டும் இரண்டு அத்தைகளுக்கும் தெரிந்தது அவ்வளவு தான். இவர்களின் நட்பு இழை அறுந்துவிட கூட வாய்ப்புண்டு. எட்டாம் உலக போரும் சாத்தியமே.

தாய்க்கும் ஒரு தங்கை உண்டு தான். அவர்களின் பிள்ளைகள் மீதும் ரிதுவுக்கு அளவுகடந்த அன்பு உண்டு. அது அத்தை பிள்ளைகளுக்கும் தெரியும்.

“விடு நிவி, தெரிஞ்ச விஷயம் தானே. அதை பற்றி பேசி தேவையில்லாமல் நம் பீபியை ஏத்திக்குவானேன். சரி உன் ஜாப் எப்படி போகுது ? ஐடியில் தானே ஒர்க் பண்றே… ? 

“ஆமாம்பா, பெரிய ஐடி. பெத்த பேரு தான்…” என்று அலுத்துக்கொண்டாள். 

“ஏன் என்னாச்சு, நீ ஆசைப்பட்டு தான் இந்த துறையை தேர்ந்தெடுத்தே, இதுக்காக மாமாவிடம் அழுது அடம் பிடித்து கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சதா விஷால் சொன்னானே. இப்போ சலிச்சிக்கிறே ? 

“எல்லாம் சரி தான், கடலில் இறங்காத வரை ஆழம் தெரியாதும்பாங்க, அது போல தான் என் கதையும். ஆசை ஆசையா படிச்சி கேம்பஸ் இன்டெர்வியுவில் செலெக்ட் ஆனபொழுது என் கால் தரையில் படவே இல்லை. அப்படியே வானத்தில் மிதந்தேன். படிப்பு முடிஞ்சி ஆபிஸ் போன ஆறு மாதம் எல்லாம் நன்றாக தான் இருந்தது. அதன் பிறகு தான் எரிச்சல் துளிர்விட ஆரம்பிச்சது. இப்போ ஆபிஸ், வேலை என்றாலே அத்தனை எரிச்சல். எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுட்டு வீட்டில் இருக்கணும்னு மனசு ஏங்குது…”

“அப்படி என்ன எரிச்சல் உன் வேலை மேல், நல்ல பதவி, நல்ல சம்பளம். அப்புறம் என்ன மாப்பிள்ளை பசங்க நான் நீன்னு போட்டி போடுவாங்களே திருமணம் செய்துக்க…” என்றவளை இடைமறித்து தன் ஆதங்கத்தை கொட்டினாள். 

“உன்னை மாதிரி பலபேர் இப்படி தான் நினைக்கறீங்க. ஆனால் ரியாலிட்டி என்ன தெரியுமா ரிது, ஐடியில் வேலை செய்கிற பெண் என்றால் வேண்டாமாம்…”

“வாட், ஏனாம் … ? 

“ஹ்ம்ம் ஐடியில் வேலை செய்கிற பெண்ணின் சம்பளம் வேண்டும் , ஆனால் அவளை கட்டிக்கிட்டால் அவளுடன் ஒரு விழாவிற்கு போக முடியாது, கண்ட கண்ட நேரத்திலெல்லாம் ஆபிஸ் வேலைகள் வந்திடும், வேலை முடிஞ்சி தாமதமா வீட்டுக்கு வருவா, வீட்டிலுள்ளவர்களை கவனிக்க நேரமிருக்காது. திருமணத்திற்கு முன்னாடி கம்பெனி பார்ட்டியில் கலந்துக்கிட்டு கூத்தடிக்கிறவங்களாம், நிறைய சம்பாதிப்பதால் புருஷனை மதிக்க மாட்டாளாம். ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் உடனே டிவோர்ஸ் கொடுத்திடுவாளாம்ன்னு காரணங்களை மலை போல அடுக்கிட்டே போறானுங்க பொண்ணு பார்க்க வர்றவனுங்க. 

எனக்கு அது கூட பிரச்சினையில்லை. நிம்மதியா தூங்க முடியலை, குடும்பத்துடன் நிம்மதியா உட்கார்ந்து பேச முடியலை. அம்மா, அப்பாவுடன் சேர்ந்து ஒரு விசேஷத்துக்கு போக முடியலை. எப்போ பார்த்தாலும் வேலை வேலைன்னு ஆலாய் குதிரை மாதிரி பறந்துக்கிட்டு ஓட வேண்டியதா இருக்கு. இப்படியே இரண்டு வருஷமாக ஓடி ஓடி எனக்கும், அம்மாவுக்கும் நடுவில் ஒரு பெரிய அகழியே உண்டான மாதிரி பிளவு உண்டாயிடிச்சி. இன்னும் கொஞ்ச நாள் போனால் அதில் முதலை வந்து வாழ்ந்தால் கூட அதிசயமில்லை…”

“ஹய்யோ …”

“ப்ச் அதான் என் எரிச்சலே. சரி என் கதையை விடு, உன் ஜாப் நேச்சர் எப்படி… ? 

“ரொம்ப க்ளீன், மார்னிங் நைன் டு ஈவ்னிங் சிக்ஸ். ஆட்டை மேய்ச்சோமா, கோலை போட்டோமோன்னு இருக்கும். ஆபிஸ் முடிஞ்சி வீட்டுக்கு வந்துட்டால் நானும், அனாயாவும் மட்டும் தான். எங்க நடுவில் என் வேலை தொல்லை செய்யாது…”என்றாள் பெருமையாக. 

“சூப்பர் ரிது, ரியலி யு ஆர் ப்லெஸ்ஸட், பேபி விஷயத்திலும், வேலை விஷயத்திலும். என்ன ஒன்று மாமாவும், அத்தையும் இருந்திருந்தாங்கன்னா இன்னும் நல்லா இருந்திருக்கும். ப்ச் மாமாவுக்கும், அத்தைக்கும் கொடுத்து வைக்கலை அவங்க பேத்தியுடன் வாழ…”

நிவேதாவின் பேச்சிற்கு ரிது அமைதியாக கடலை பார்த்துக்கொண்டிருக்க,”ஐம் சாரி ரிது, தேவையில்லாமல் உன் துக்கத்தை கிளறிட்டேனா. என் வாய் தான் எனக்கு முதல் எதிரியே. இப்படியே தான் அம்மாவிடம், ஆபிஸிலும் பேசி தொலைச்சிடறேன். எல்லோருக்கும் ஜாதகத்தில் கட்டம் சரியில்லைன்னு சொல்வாங்க. எனக்கு நாக்கில் கட்டம்,சதுரம், செவ்வகம் சரியில்லைன்னு நினைக்கிறேன்…” என்று குற்ற உணர்ச்சியில் தன்னையே நொந்துக்கொண்டிருக்க ரிதுவுக்கு அவளின் பேச்சில் சிரிப்பு வர வாய்விட்டு சிரித்தாள். 

“அப்பாடி சிரிச்சிட்டே, அது போதும். கொஞ்ச நேரத்தில் பயந்துட்டேன். சரி வா நாமும் அலையில் விளையாடலாம் …”என்று நிவேதா எழ ரிது அவளின் கைபிடித்து அமர்த்தினாள். 

“ப்ச் அப்புறம் விளையாடலாம், உன்னிடம் ஒரு விஷயம் கேட்கணும். இந்த விஷால் ஏன் இன்னும் திருமணமே செய்துக்காம இருக்கான். நான் ஊரை விட்டு கிளம்பும் பொழுதே அத்தை அவனுக்கு பெண் பார்த்ததாக கேள்விப்பட்டேன். இன்னுமா இவனுக்கு பிடிச்ச மாதிரி பெண் அமையலை… ? 

ரிதுவின் ஆச்சர்யமாக கேள்விக்கு அவளை புரியாத பார்வையால் வருடினாள் மற்றவள். 

“ஹேய் இப்போ எதுக்கு என்னை வினோத ஐந்து மாதிரி பார்க்கிறே… ? 

“பின்னே, நீ தெரிஞ்சு கேட்கறியா, இல்லை தெரியாம கேட்கறியா… ? விஷால் மனதில் இன்னும் நீ தான் இருக்கே… ? 

“என்ன உளர்றே நிவி… ? என்றாள் கடுமையாக.

கோபத்தில் அவளின் குரல் சற்றே உயர்ந்து விட அருகிலிருந்த ஒரு சிலர் அவர்களை திரும்பி பார்த்தார்கள். ரிதுவின் குரலை காற்று கடமை வீரனாக விளையாடி கொண்டிருந்த இரு ஆண்களிடம் கொண்டு சேர்த்துவிட்டதோ என்னமோ அங்கிருந்தே இரு பெண்களையும் திரும்பி பார்த்த ஆண்கள் என்னாச்சு என்று சைகையில் விசாரித்தனர்.