Nenjil Therikuthu Panithuli -14

அத்தியாயம் -14

கார்த்திக்கின் வீடு …

சோர்வுடன் வீட்டுக்கு திரும்பியவன் தனக்காக தங்கை ஹால் ஸோபாவில் அமர்ந்திருக்கவும் ஆச்சர்யத்துடன் அவளருகில் சென்று அமர்ந்தான்.

“ஹேய் மது, தூங்காம இங்கே உட்கார்ந்திருக்கே… ?

“உனக்காக தான், அம்மா தான் காத்திருந்தாங்க, நான் தான் அவங்களை தூங்க அனுப்பிட்டு காத்திருக்கிறேன். சரிண்ணா நீங்க ரெப்பிரேஷ் செய்துக்கிட்டு வாங்க, நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்…”என்று எழ, கார்த்திக் புன்னகையுடன் தன் அறைக்கு சென்றான்.

அடுத்த சில நிமிடங்களில் அவன் இரவு உடையில் வர, தட்டை வைத்து அவனுக்கு இரண்டு ஓட்ஸ் தோசை மற்றும் கார சட்னியை பரிமாறினாள். கார்த்திக்கிற்கு இரவு உணவு எப்பொழுதும் மிகவும் இலகுவானதாக இருக்க வேண்டும். பாதி நாட்கள் வீடு திரும்ப தாமதமாகிவிடும். அந்த நேரத்தில் ஹெவியாக எடுத்துக்கொண்டால் ஜீரணத்திற்கும், உடல்நிலைக்கும் ஒத்துவராது என்பான். ஓட்ஸ், கம்பு, கேழ்வரகு சாமை, வரகு, ஆகிய ஏதோ ஒன்றில் இரவு உணவு வேண்டும்.

ஆரம்பத்தில் அவனுக்கு மட்டும் செய்து கொடுத்து வந்த பாக்கியம் மகளின் திருமணத்திற்கு பிறகு அதையே தனக்கும், கணவருக்கும் சேர்த்து செய்துக்கொண்டார். இப்பொழுது மதுவும் அதையே விரும்பி சாப்பிட இரவு உணவு யாருக்கும் பிரச்சினையில்லாமல் போனது.

“ஹ்ம்ம் சொல்லு மது, என்னிடம் ஏதோ பேச காத்திருக்கேன்னு புரியுது, என்ன விஷயம் …? என்றான் சாப்பிட்டபடி.

அவனை பார்ப்பதும், தன் கைவிரல்களை ஆராய்வதும், அவன் தட்டை நோக்குவதுமாக அவன் எதிரில் அமர்ந்திருந்த தங்கை ஆச்சர்யத்துடன் நிமிர்ந்தாள்.

“அண்ணா … !

“சொல்லும்மா, குழந்தை விஷயம் தானே. கண்டிப்பா முடிச்சி கொடுக்கிறேன். இப்போ ஒரு கொலை கேஸில் பிசியா இருக்கேன். அநேகமா நாளை, அல்லது நாளை மறுநாள் முடிஞ்சிடும். அதன் பிறகு உன் விஷயத்தை தான் கையிலெடுக்கிறேன்…”

“சாரிண்ணா, நான் உங்களை ரொம்ப தொந்தரவு செய்யறேனா … ?

அவளின் குரலிலிருந்த வலியும், குற்ற உணர்ச்சியும் அவனுக்கு புரிந்தது. எப்பொழுது என்ன பிரச்சினை வரும்ன்னு யாருக்கு தெரியும். யார் தான் தவறு செய்யவில்லை. பாவம் இவள். கார்த்திக்கிடம் ஒரு பெருமூச்சு எழுந்தது.

“ஒரு தொந்தரவும் இல்லை, திருமணமானதும் ரொம்ப பெரிய மனுஷி ஆயிட்டியோ… ? என்று சிரித்து, “போய் தூங்கு. நேரமாச்சு, குட் நைட்…”என்று அவளின் கன்னத்தில் தட்டிவிட்டு செல்ல மதுவின் முகம் மலர்ந்தது.

அடுத்த நாள் காலையிலே எழுந்து கிளம்பியவன் தாயின் வற்புறுத்தலில் காஃபியை மட்டும் குடித்துவிட்டு சிறைக்கு சென்றான். இரண்டு கான்ஸ்டபிள்களுடன் சிறை அதிகாரி கார்த்திக்கை கண்டதும் மலர்ச்சியுடன் வரவேற்று அவினாஷிடம் அழைத்துச் சென்றார்.

கம்பிகளுக்கு பின்னால் ஒரு மூலையில் குத்த வைத்து அமர்ந்து, எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தான்.

“சார் இவன் இரவெல்லாம் இப்படியே தான் உட்கார்ந்திருந்தான், தூங்கவே இல்லை. எந்த பிரச்சினையும் செய்யாததால் நாங்களும் அவனை தொல்லை செய்யலை…”

“நான் ஆபிஸ் அறையில் இருக்கேன், அவனை அழைச்சிட்டு வாங்க…”

அறைக்குள் சென்று அவன் கேஸ் பைலை திறந்து எதையோ பார்த்துக்கொண்டிருந்தவன் அரவம் கேட்டு நிமிர, எதிரில் அவினாஷ் அவனை முறைத்துக்கொண்டு நின்றிருந்தான். அவனின் முறைப்பையும் விறைப்பையும் கண்டு உள்ளுக்குள் நகைத்தபடி தன் சீட்டை விட்டு எழுந்து மேஜை மேலிருந்த தடியை கையில் எடுத்து அதை கொண்டு அவினாஷின் முகவாயை நிமிர்த்தினான்.

“ஹ்ம்ம் சொல்லு, எதுக்காக உன் மனைவியை கொலை செய்தே ? என்றான் மிகவும் நிதானமாக. அவன் பேச்சில் அலட்சியம் தொக்கி நின்றது.

அந்த அலட்சியம் அவினாஷை சீண்ட,”சார் என்ன பேசறீங்கன்னு தெரிஞ்சு தான் பேசறீங்களா ? நானே என் மனைவியை பறிகொடுத்திட்டு வேதனையில் புழுவா துடிச்சிட்டிருக்கேன். நீங்க…”என்றவனை மேலே பேச விடாமல் கையமர்த்தினான்.

“நீ வேதனையில் புழுவா துடிச்சியோ அல்லது சாக்கடையில் புழுவா துடிச்சியோ எனக்கு தெரியாது. என் கேள்வி ஒன்றே ஒன்று தான். பாவ்னாவை எதுக்கு கொலை செய்தே… ? என்றான் மீண்டும் அழுத்தத்துடன்.

“ஸார் நான்…”என்று மீண்டும் மறுத்து பேச முயல, இம்முறை கான்ஸ்டபிள் கோபத்துடன் இடைமறித்தார்.

“டேய் உன் வண்டவாளம் எல்லாம் சாருக்கு தெரியும். உன்னை ஆதாரத்தோடு கையும் களவுமா பிடிச்சிருக்காங்க. அப்படியிருந்தும் நீ கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி ஒரே பதிலை சொல்றே. உண்மையை சொல்லுடா…”என்று அவர் கையிலிருந்த தடியால் அவனை ஒரு போடு போட்டார்.

இத்தனைக்கும் அவர் லேசாக தான் தட்டினார், அதுக்கே அவினாஷ் துடித்து போனான். அவனின் துடிப்பை கண்ட கார்த்திக்கின் இதழ்களில் கசப்பான புன்னகை நெளிந்தது.

டேபிளின் முனையில் ஒற்றை காலை ஊன்றி அமர்ந்து, கையிலிருந்த தடியை கையால் உருட்டியபடி,”லுக் அவினாஷ் உனக்கு ஐஞ்சு நிமிஷம் டைம் தரேன். அதற்குள் நீயாகவே எல்லாவற்றையும் ஒத்துக்கிட்டால் நல்லது. இல்லைன்னா போலீஸின் ட்ரீட்மெண்ட் எப்படி இருக்கும்னு உனக்கு காட்ட வேண்டியதா போய்டும்.

ஹ்ம்ம் அப்புறம் நீ கொலையே செய்யலைன்னு சாதிப்பது சுத்த வேஸ்ட். அநேகமா இன்று நைட் முழுவதும் நீ எப்படி மாட்டினேன்னு தான் யோசிச்சிருப்பேன்னு நினைக்கிறேன். என்னடா நாம கொஞ்சம் கூட விட்னெஸ், எவிடன்ஸ் இல்லாமல் சம்பவம் நடந்த இடத்தில் நீ இல்லாத மாதிரி அலிபி கிரியேட் செய்து பாவ்னாவை தீர்த்துக்கட்டினோமே, எப்படி இவன் கையில் மாட்டினோம் என்ற சந்தேகம் உன் மனதில் ஓடுமே…”என்று தடியால் அவன் நெஞ்சை லேசாக குத்தி காட்ட அவினாஷின் முகம் மேலும் இருண்டது.

ஆயினும் தன்னை சமாளித்து,”சார் நீங்க ஏதோ தவறா நினைச்சி என்னை கைது செய்திருக்கீங்க, இதுக்காக பின்னால் வருத்தபடுவீங்க…” என்றான் விடாப்பிடியாக.

அங்கிருந்த எல்லோருக்குமே அவினாஷின் பேச்சு கோபத்தை உண்டாக்கியது. கான்ஸ்டபிள் இரண்டு பேரும், வார்டனும் கார்த்திக்கை அர்த்தத்துடன் நோக்கினார்கள்.

“நான் வருத்தப்படுவேன்னு நினைச்சி நீ வருத்தப்பட்டு உன் உடம்பை கெடுத்துக்காதே அவினாஷ் …” என்று கேலியாக கூறியவனின் விழியசைவை தொடர்ந்து அவினாஷுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.

“ஹையோ என்னை விடுங்க, விடுங்க வலிக்குது…” என்று அவினாஷ் துள்ளி துடிக்க கார்த்திக் கையை உயர்த்தி நிறுத்த சொன்னான்.

தரையில் விழுந்த மீனாய் துடித்துக்கொண்டிருந்தவனின் அருகில் குனிந்து,”ரொம்ப வலிக்குதா ? இத்தனைக்கும் எங்க ஆளுங்க உனக்கு ஒரு சாம்பிள் தான் காட்டியிருக்காங்க. இதுக்கே துடிக்கிறியே, உன் மனைவி என்னடா பாவம் செய்தாள். அவள் தலையில் கட்டையால் அடிச்சி, கழுத்தை அறுத்திருக்கியே, அப்பொழுது எப்படி துடிச்சிருப்பாங்க. உனக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா… ?

ஒரு மனுஷனின் கழுத்தை அறுக்க மனதில் அத்தனை கொடூரம் இருக்கணும், நீயெல்லாம் மனுஷன் தானா… ? சொல்லு எதற்கு அவங்களை கொலை செய்தே. இனியும் நீ கொலை செய்யவே இல்லைன்னு அடம் பிடிக்கவே மாட்டேன்னு நினைக்கிறே. இல்லை இன்னும் போலீஸ் அடி வேண்டுமா… ? என்று கையில் வைத்திருந்த தடியை ஓங்கினான்.

“ஹையோ சார், வேண்டாம் வேண்டாம். நான் உண்மையை சொல்லிடறேன். நான் தான் பாவ்னாவை கொலை செய்தேன்…” என்று அடிக்கு பயந்து அலற கார்த்திக்கின் இதழ்களில் புன்னகை நெளிந்தது.

கான்ஸ்டபிள்களுக்கு அவன் வாக்குமூலத்தை எழுத்தாலும், வீடியோ மூலமாகவும் பதிவு செய்ய கட்டளையிட்டவன் அவன் முன் சேரில் அமர்ந்தான்.

“நீ தான் கொலையாளின்னு எங்களுக்கு தெரியும். ஆனால் ஏன் கொலை செய்தே ? உண்மையான காரணத்தை சொல்லணும்…” என்றான் குரலை உயர்த்தாமலே ஆனால் அழுத்தத்துடன்.

சில நொடிகள் மௌனமாக இருந்த அவினாஷ் தலையை நிமிர்த்தாமலே பேச ஆரம்பித்தான்.

“நான் பாவ்னாவை ஆசைப்பட்டு தான் திருமணம் செய்துக்கிட்டேன். ஆனால் கொஞ்ச நாளிலேயே எனக்கும் அவளுக்கும் ஒத்து வரலை. எனக்கு என் அம்மாவை மிகவும் பிடிக்கும். அவங்களுக்கும் நானென்றால் உயிர். அவங்களுடன் தான் திருமணமானதும் இருந்தோம். பாவ்னாவுக்கு என் அம்மாவை கண்டாலே பிடிக்கலை. தினமும் அவங்களுடன் சண்டை. தனிக்குடித்தனம் போகணும்னு நச்சரிப்பு. இவளின் நச்சரிப்பு தாங்க முடியாமல் அம்மா எங்களை தனிகுடித்தனம் வைச்சிட்டாங்க. கூட்டு குடும்பத்தை உடைத்த அவள் மீது எனக்கு தீராத கோபம். போதத்திற்கு என்னையும் அம்மாவை பார்க்க கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா ஆர்டர் போட்டுட்டாள். அப்படியும் ஒரு நாள் நான் ஆபிஸ் முடிஞ்சதும் அம்மாவை பார்த்துட்டு வந்ததற்கு ஒரு வாரம் வீட்டில் சண்டை.

என்னை பார்க்காத ஏக்கத்தில் என் அம்மா நோயாளி ஆகிட்டாங்க. அவங்களை பார்க்க முடியலை என்ற ஆதங்கம். சந்தோஷமாக இருந்த கூட்டு குடும்பத்தை உடைச்சிட்டாள் என்ற ஆத்திரம் எல்லாம் சேர்ந்து தான் என்னை இந்த முடிவிற்கு தள்ளியது…” என்று முடிக்க கார்த்திக் அசந்து போய் அமர்ந்திருந்தான்.

அவினாஷ் கொலை செய்தது மாபெரும் குற்றம் தான், ஆனால் அவனின் எண்ணம் ஒரு குடும்பத்தை உடைக்க கூடாதென்பது தானே, தாயின் மீதும், குடும்பத்தின் மீதும் பாசம் வைப்பது ஒன்றும் குற்றமில்லையே. ஆனால் திருமணமானதும் ஏன் இந்த பெண்கள் கணவன் குடும்பத்தை கஷ்டப்படுத்துகிறார்களோ… ? அவனும் சூடு பட்ட பூனை தானே.

எழுதிய வாக்கு மூலத்தில் கையெழுத்திட்டு, சாட்சி கையெழுத்தையும் வாங்கி, வீடியோ எடுத்த போனையும் ஒரு கவரில் பத்திரப்படுத்தியவன் வார்டனுக்கு நன்றி சொல்லிவிட்டு எழுந்துச் செல்ல முற்பட அவனை நிறுத்தினான் அவினாஷ்.

“ஸார் நான் ஒன்று கேட்கலாமா… ? என்றான் ஈனஸ்வரத்தில்.

அவன் கொலையாளியாக இருந்தாலும் அவன் மீது கார்த்திக்கிற்கு மெல்லிய பரிதாபம் தோன்றியது. அதனால் அவனின் கோரிக்கைக்கு மீண்டும் சேரில் வந்து அமர்ந்தான் கேளு என்பதாக.

“நான் பக்காவா பிளான் செய்து பாவ்னாவை தீர்த்துக்கட்டிட்டேன்னு இறுமாந்திருந்தேன், ஆனால் நீங்க எதை வைச்சி என்னை நெருங்கனீங்கன்னு நான் தெரிஞ்சிக்கலாமா… ?

அவனின் கேள்விக்கு சன்னமாக புன்னகைத்து,”நீ நல்லா தான் பிளான் செய்தே, ஆனால் பாவ்னாவை கொலை செய்திட்டு ஜாகிங் போகும் பொழுது பாவ்னா உனக்கு போன் செய்த மாதிரி பேசினே பார் அங்கே செய்தே தப்பு…” என அவினாஷுக்கு புரியவில்லை.

“உன் முக பாவனையிலே புரியுது, நான் சொல்றது உனக்கு புரியலைன்னு. உனக்கு புரியும்படியே சொல்றேன். நீ பாவ்னாவை கொலை செய்யும் நோக்கத்தோடு கட்டையால் அடிச்சி அவள் மயங்கியதும் பாவ்னாவின் போனில் இருந்து உன் போனுக்கு ஒரு நாலு நிமிஷத்துக்கு கால் பண்ணியிருக்கே. பாவனா உனக்கு பேசினா மாதிரி. அதன் பிறகு பாவனாவின் கதையை முடிச்சிட்டு நீ சம்பவ இடத்தில் இல்லாத மாதிரி அலிபி கிரியேட் செய்ய தீபேஷுடன் ஜாகிங் போயிருக்கே. அங்கே பாவ்னா உனக்கு அழைத்த மாதிரி ப்ரிட்டன்ட் செய்திருக்கே. அதில் தான் நீ மாட்டிக்கிட்டே.

உன் கால் ஹிஸ்டரியை செக் செய்ததில் நீ பாவ்னாவிடம் பேசியதாக தீபேஷ் சொன்ன நேரத்திற்கும், பாவ்னாவின் கால் ஹிஸ்ட்ரியில் உனக்கு அழைத்த நேரமும் கொஞ்சம் கூட சிங்க் ஆகலை. இப்போ புரியுதா … ? என்று கேலியாக புன்னகைக்க அவினாஷ் முகத்தை இருகைகளாலும் மூடிக்கொண்டான்.

அவினாஷை சிறையில் அடைக்க சொல்லிவிட்டு, டிஜிபி ஆபிஸ்க்கு காரை செலுத்தினான்.

சென்னை ஏர்போர்ட்…

ரித்திகா பயணிக்கிற எமிரேட்ஸ் பிளைட் இன்னும் சற்று நேரத்தில் வந்திறங்குவதாக இனிய குரலில் ஒரு பெண் அறிவிப்பு செய்ய விஷால் ஆவலுடன் காத்திருந்தான். ரித்திகா நாட்டை விட்டு செல்லும் பொழுது அவள் கையில் அனாயா ஒரு மாத குழந்தை. அதன் பிறகு அவன் போட்டோவில் கூட பார்த்ததில்லை. இப்பொழுது அவள் எந்தளவுக்கு வளர்ந்திருப்பாள், ரித்திகா எப்படியெல்லாம் மாறி போயிருப்பாள் என்ற கியூரியாசிட்டி நிமிடத்துக்கு நிமிடம் வளர்ந்துக்கொண்டே சென்றது.

அவனை அதிகம் தவிக்க விடாமல் எமிரேட்ஸ் வந்திறங்க அடுத்த சில நிமிடங்களில் ரித்திகா ஒரு சிறிய தேவதையுடன் டிராலியை தள்ளியபடி வர விஷால் வேகமாக அவர்களை நெருங்கினான்.

“வெல்கம் ரித்திகா…”

விஷால் வந்திருக்கிறானா என்று விழிகளால் அந்த ஜனத்திரளில் துழாவிக்கொண்டிருந்தவள் அருகில் கேட்ட குரலில் தூக்கிவாரி போட திரும்ப விஷால் புன்னகையுடன் நின்றுக்கொண்டிருந்தான்.

“ஹேய் விஷால், எப்படி இருக்கே …?

“நான் , மற்றும் அனைவரும் நலம். இவங்க தான் அனாயா ஏஞ்சலா…? வாவ் செம கியூட்…” என்றவன் ரித்திகாவிடமிருந்து டிராலியை வாங்கிக்கொண்டான்.

“குழந்தையை தூக்கிக்கோ, நாம காரிடம் போய்டலாம்…” என்றபடி காரை நெருங்கி, லக்கேஜை காரின் டிக்கியில் ஏற்றிவிட்டு அனாயாவை ரித்திகாவிடமிருந்து வாங்கினான்.

“ஹாய் மேடம், நீங்க அனாயா, நான் யார் தெரியுமா? உன் மம்மா சொன்னார்களா…? என்று கேட்டபடி ரித்திகாவிடம் பார்வையை திருப்பினான்.

குழந்தை தாயை பார்க்க,”விஷால் தொந்தோன் (அங்கிள்) , மம்மா குசின் (கசின் ) என்றாள் அறிமுகப்படுத்துவிதமாக.

விஷால் குழந்தையின் கன்னத்தில் ஆசையோடு முத்தமிட்டு அவளை பின்சீட்டில் அமர வைத்து பெல்ட் போட்டவன் ரித்திகாவை அமர சொல்லிவிட்டு தானும் ட்ரைவர் சீட்டில் அமர்ந்தான்.

ஒரு சில நிமிடங்களில் ரித்திகாவின் வீட்டில் கார் நிற்க காரிலிருந்து இறங்கி நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் கண்ணீர் பூக்கள் பெற்றோரின் நினைவில்…