Nenjil Therikuthu Panithuli -13

அத்தியாயம் -13

கீழ் வானம் சிவந்துக்கொண்டிருக்க, நிலா பெண் தன் ஆட்சியை தொடங்க முஸ்தீபுகளை செய்துக்கொண்டிருந்தாள். 

அவினாஷ் சோஃபாவில் புதைந்து எதிரில் இருந்த டீப்பாயில் காலை நீட்டி போட்டுக்கொண்டு கையில் சோமாப்பாணத்தையும் பக்கத்தில் ஒரு கிண்ணத்தில் வறுத்த முந்திரிப்பருப்பையும் வைத்துக்கொண்டு இதை ஒரு சிப், முந்திரிப்பருப்பில் ஒன்று என்று சாப்பிட்டபடி டிவியில் பேஷன் சேனலை பார்த்தபடி உல்லாசமாக அமர்ந்திருந்தான்.

அரை கிலோ எலும்பில் ஒன்றை மீட்டர் தோலை போர்த்திக்கொண்டு அரைகுறை உடையோடு இல்லாத இடுப்பை ஒடித்து ஒடித்து நடந்து காட்டிக்கொண்டிருக்க அவினாஷ் போதையில் மிதக்கும் விழிகளோடு மாடல் அழகிகளை (?!) காம பசியோடு விழுங்கிக் கொண்டிருக்க காலிங் பெல் சத்தம் அழைத்தது. 

ஆனால் அவினாஷின் விழிகள் மாடல் பெண்களை துகிலுரித்துக் கொண்டிருந்ததால் அவனின் செவிகளில் அழைப்பு மணியின் சத்தம் கேட்கவில்லை. மீண்டும் மீண்டும் அழைப்பு மணி அலற அந்த சத்தம் அவனின் காதுகளை ஒருவாறு எட்டியது. 

“ச்சே எவண்டா இந்த நேரத்தில் மனுஷனை நிம்மதியா இருக்க விடாமல் தொல்லை செய்யறது…” என்று நிந்தித்தபடி கையில் மது கோப்பையோடு கால்கள் பின்ன கதவை நோக்கி  தள்ளாடி தள்ளாடி நடந்தான்.

அதற்குள் பலமுறை அழைப்பு மணி விடாமல் அலற,”யாருடா பெல் அடிச்சி உயிரை எடுக்கிறது, ஒரு நேரம் காலம் வேண்டாம். ****” என்று ஏக வசனத்தில் பேசியபடி படாரென்று கதவை திறக்க, வெளியில் நின்றிருந்தவர்கள் மசமசன்னு தெரிந்தார்கள்.

“அவினாஷ் உன்னை தேடி போலீஸ் வந்திருக்கு, வெளியே வா …” என்றது ஒரு ஆண் குரல். 

அது பத்பநாபனின் குரல் என்று அந்த போதையிலும் அவனுக்கு புரிய, விழிகளை கசக்கிக்கொண்டு கண்களை சுருக்கி பார்க்க உயரமாக வாட்ட சாட்டமாக மணல் கலர் பேண்டுக்கு, டார்க் ப்ளூ ஷர்ட்டில் கம்பீரமாக ஒரு இளைஞன் நிற்கவும் அவினாஷுக்கு அவன் யாரென்று தெரியவில்லை. அவன் பின்னால் அந்த தெருவே கூடி நின்றது. 

ஏதோ போலீஸ் என்றார்களே, அப்படி யாரையும் காணோமே என்று குழம்பியபடி வீட்டு வாசற்படியை தாண்டி வர எங்கிருந்தோ முளைத்தது போல இரண்டு கான்ஸ்டபிள்ஸ் அவனை நெருங்கினார்கள். 

“யார் ஸார் நீங்க, இந்த நேரத்தில் இங்கே கூட்டத்தை கூட்டிக்கிட்டு என்ன செய்யறீங்க… ? என்றான் உதார் அதட்டலோடு. 

“நான் கார்த்திக் தேவராஜன், உன் மனைவியின் கொலை கேஸை விசாரிக்கிற ஆபிசர். உன்னை மாமியார் வீட்டுக்கு தடபுடலா அழைச்சிட்டு போக தான் வந்திருக்கோம்…”

“என்ன மாமியார் வீடா… ? 

ஒரு கான்ஸ்டபிள் அவனை நெருங்கி அவன் கையிலிருந்த மது கோப்பையை பிடிங்கி பக்கத்திலிருந்த சாக்கடையில் வீசி,”பெரிய ஆபிசர் வந்திருக்கார், நீ என்னவோ பெரிய இவனாட்டம் கையில் கிளாஸோடு வர்றே, நட ஸ்டேஷனுக்கு, உன்னை கைது செய்ய தான் ஆபிசர் வந்திருக்கார்…” என்று அவன் கையில் விலங்கை மாட்ட முயற்சிக்க கூடியிருந்த கூட்டம் ஸ்தம்பித்து போய் நின்றது. 

“என்னது என்னை கைது செய்ய போறீங்களா ? இறந்து போனது என் மனைவி, அவளை கொலை செய்தவனை கண்டு பிடிக்காமல் என்னை கைது செய்யறீங்க. பத்பநாபன், சபரி நாதன் இதையெல்லாம் நீங்க கேட்க மாட்டீங்களா… ? என்றான் குழறலோடு. 

அவனால் ஸ்டெடியாக நிற்க கூட முடியலை. கான்ஸ்டபிளிடமிருந்து திமிறி விடுவித்துக்கொள்ள முயல, கார்த்திக்கின் கை இடியாக அவன் கன்னத்தில் இறங்கியது.

அதை எதிர்பார்க்காத அவினாஷ் அப்படியே சுருண்டு கீழே விழ, அவன் சட்டையை கொத்தாக பிடித்து தூக்கி,”கட்டின மனைவியை அழகா பிளான் செய்து கொலை பண்ணிட்டால் மாட்டிக்காமல் தப்பிச்சிடலாம்னு நினைச்சியா ? எங்களை என்னவென்று நினைச்சே. கான்ஸ்டபிள் இவனை ஜீப்பில் ஏத்துங்க …” என்றான் கட்டளையாக. 

கூடியிருந்த கூட்டம் அதிர்ச்சியில் சிலையாக நின்றது. இதுவரை பாவ்னாவை யாரோ கொலை செய்துட்டாங்க, பாவம் மனைவியை இழந்து அவினாஷ் மிகவும் வேதனைபடுகிறான் என்று அவனுக்கு ஆதரவாக நின்ற கூட்டம் இன்று அவனை விழிகளாலே சுட்டெரித்தது. 

படுபாவி கட்டின மனைவியையே கொலை செய்திட்டு நல்லவன் மாதிரி நடிச்சிருக்கான் ….

இவனுக்கெல்லாம் மோட்சமே கிடையாது…

பித்ரு தோஷம் பிடிச்சவன், இவனெல்லாம் விளங்கவே மாட்டான் …. 

இவனுக்கெல்லாம் நல்ல சாவே வராது…

ஆளாளுக்கு அவனை கரிச்சி கொட்ட ஒரு கான்ஸ்டபிள் அந்த வீட்டினுள் சென்று டிவியை நிறுத்திவிட்டு கதவை பூட்டி விட்டு கொலையாளியுடன் வண்டியில் ஏற அவினாஷ் யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். 

ஜீப்பை முன்னே போக சொல்லிவிட்டு கார்த்திக் அவன் வண்டியில் ஜீப்பை பின்தொடர்ந்தான். அவனை அந்த நேரத்திற்க்கே ஜட்ஜ் வீட்டுக்கு அழைத்துச் சென்று எவிடன்ஸ் மற்றும் எப்.ஐ.ஆர் டாகுமெண்ட்ஸை நீட்ட அவினாஷை ஒரு புழு போல பார்த்துவிட்டு பத்து நாள் கஸ்டடிக்கு அனுமதி கொடுக்க கார்த்திக் நன்றி சொல்லிவிட்டு அவினாஷை சிறையில் கொண்டு வந்து அடைத்தான். 

“அவன் இப்போ குடிச்சிருக்கான், இப்போ அவன் கொடுக்கிற ஸ்டேஸ்ட்மென்ட் செல்லாது, இப்பொழுது எதையும் செய்யாதீங்க. சாப்பாடு தண்ணீர் எதுவும் கொடுக்காதீங்க. நாளை நான் வந்து விசாரிக்கிறேன். பத்திரம் …” என்றுவிட்டு அங்கிருந்து கிளம்பினான். 

தன்னை கைது செய்ததுமே அவினாஷுக்கு ஏறியிருந்த போதை முற்றிலும் சரசரவென இறங்கிவிட்டிருந்தது. அவன் மண்டையில் ஓடிக்கொண்டிருந்த கேள்வியெல்லாம் ஒன்றே ஒன்று தான். இவ்வளவு பிளான் செய்து கச்சிதமா பாவ்னாவை தீர்த்துக்கட்டியும் போலீஸிடம் சிக்கிட்டேனே. எங்கு தப்பு செய்தேன் என்று அன்று இரவெல்லாம் மூளையை போட்டு குடைந்துக்கொண்டிருந்தான்.

அவன் கேள்விக்கு அடுத்த நாள் கார்த்திக்கிடமிருந்து பதில் வந்தது…