Nenjil Therikuthu Panithuli -12

அத்தியாயம் -12

விஷால் பேசிவிட்டு போனை வைத்துவிட ரித்திகாவிற்கு தான் உறக்கம் அவளை நட்டாற்றில் விட்டது. விஷால் சொன்னதும் சரி தான். என்ன தான் மாஜி கணவன் என்றாலும் ஒரு காலத்தில் அவனுடன் வாழ்ந்தவள் நான். இன்று அவன் இறந்துவிட்டான் என்றால் அதற்குடைய கடமையை செய்ய வேண்டியது என் பொறுப்பு தானே. செய்யாமல் போனால் தான் தேவையில்லாமல் பேச்சுக்கள் எழும். விஷால் சொன்னபடி செய்துட்டு அத்தோடு எல்லாவற்றையும் முறிச்சிக்கிட்டு வரணும்.

நெஸ்ட் வீக் இரண்டு வார லீவ் இருக்கு, அதில் இந்தியாவுக்கு போயிட்டு வந்திட வேண்டியது தான். அநாயாவுக்கும் இந்தியாவில் சில இடங்களை சுற்றி காட்டலாம் என்று முடிவு செய்தவள் நாளை காலையில் முதல் வேலையாக ஏர் டிக்கெட் புக் செய்யணும் என்று மனதில் இருத்திக்கொண்டவளாக மீண்டும் மகளின் அருகில் படுத்து விழிகளை மூட உறக்கம் வர மறுத்தது. 

மாஜி கணவனின் அராஜக பேச்சுக்களும், அவன் தன்னிடம் நடந்துக்கொண்ட முறைகளும் அவளின் மனதை ரணமாக்கி வைத்திருந்தது. சரியான ஹிப்போகிரேட், அவனை மாதிரி ஒருத்தனை, இல்லையில்லை இன்னும் எத்தனை பேர் இருக்கானுங்களோ இந்த உலகத்தில் என்ற எண்ணம் எழுந்ததுமே, சே இறந்து போனவனை பற்றி தவறாக பேசக்கூடாது என்ற நியாயவாதி மனம் அவளின் கோபத்திற்கு அணை போட்டது.

ஆனால் மனசாட்சி சும்மா இருக்குமா, அது குதித்து வந்து முன்னால் நின்று கெக்கெலி கொட்டியது. போடி முட்டாள் ஒருத்தன் செய்கிற அத்தனை அராஜகத்தையும் செய்திட்டு செத்து போய்ட்டால் அவன் நல்லவனாக மாறிடுவானா? 

உண்மை தான் ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழிச்சவன், குயில்கள் கூவும் நந்தவனத்தில் தேவதை போல சுற்றி வந்த ஒரு பெண்ணை வலைவீசி பிடித்து அதன் இறகுகளை வெட்டி ரசித்த சேடிஸ்ட். அவனிடமிருந்து தப்பி வந்ததே போதும் போதுமென்றாகிவிட்டது என்று நினைக்கும் பொழுதே மனம் கட்டவிழ்ந்த கன்றுக்குட்டியாய் கசப்பான கடந்த காலத்தை மேய ஓடியது.  அவன் ஒரு பெண்ணுடன் தனது பொட்டிக்கிற்கு புடவை எடுக்க வந்த பொழுது ரித்திகாவிற்கு எல்லோரையும் போல அவனும் ஒரு கஸ்டமர்.

ஆமாம் கஸ்டமர்கள் தான் தங்களின் கடவுள் என்ற தரகமந்திரத்தை உறுதியாக பற்றியிருந்த ரித்திகா கடைக்கு வந்திருந்தவர்களை  இன் முகத்துடன் வரவேற்று அமர வைத்து, அவர்கள் கேட்ட புடவைகளை முகம் சுளிக்காமல் எடுத்து காட்டினாள். அவனுடன் வந்தவள் புடவைகளை சிரத்தையாக ஆராய, அவனோ ரித்திகாவை சிரத்தையுடன் ஆராய்ச்சி செய்தான் பார்வையால். 

ரிதிக்காவிற்கு அவனின் ஊசி பார்வைகள் புரிந்தாலும் புரியாத மாதிரியே நடித்து, புடவைகளை காட்டி, விளக்கி அவர்களை வாங்க வைத்தாள். அன்று அவர்கள் சென்றபிறகு அடுத்த நாள் அவன் மட்டும் வந்தான். முதல் நாள் தங்கை எடுத்துச் சென்ற புடவை வீட்டில் உள்ளவர்களுக்கு பிடித்துவிட்டது. அதனால் இன்று அம்மாவுக்கு புடவை எடுக்க வந்தேன் என்றான். 

அன்று தான் அவனின் பெயரை சொன்னான் நரேஷ் என்று. தன்னுடன் வந்தவள் தங்கை லலிதா என்று உபரி தகவலை வழங்கினான். 

அப்பொழுதும் அவள் வழக்கம் போல புன்னகைத்து,”ஓ நல்லது மிஸ்டர் நரேஷ். ஆனால் வயதானவங்க அணிகிற மாதிரியான புடவைகள் இங்கு கிடைக்காது. நீங்க வேற இடத்தில் பாருங்களேன்…”

“ஹையோ என்ன மிஸ் இப்படி பட்டுன்னு சொல்லிட்டீங்க, நான் உங்களை பார்க்க தான் …”என்னும் பொழுதே ரித்திகா இடையிட்டாள். 

“என்ன … ? என்றாள் லேசான கண்டிப்புடன். 

“ஓ சாரி முழுசா சொல்லி முடிப்பதற்குள் அவசரப்பட்டுட்டீங்க. உங்க கடையில்…”என்றவனை இடைமறித்து,”திஸ் இஸ் பொட்டிக் மிஸ்டர்   நரேஷ்…”

“சாரி …சாரி… உங்க பொட்டிக்கில். இருக்கிற மாதிரி வேறு எங்கேயும் இல்லை. எல்லாமே வித்யாசமா இருக்கு, ஒரு டிசைனில், ஒரு கலரில் வேறு இல்லை. இதுவே கடைகளில் ஒரே டிசைனில் பல கலர்களில் இருக்கும். ஆனால் …”என்றவனை கையமர்த்தி அவன் பேச்சை நிறுத்தினாள். 

“சாரி மிஸ்டர் நரேஷ், என் பொட்டிக் உள்ளே நின்றுக்கிட்டு அடுத்த கடைகளை பற்றி விமர்சனம் செய்ய வேண்டாமே ப்ளீஸ். இப்பொழுது உங்களுக்கு என்ன மாதிரி புடவைகள் வேண்டும்…” 

ரித்திகா கறாராக பேசவும் அதற்கு மேல் அவன் வளவளவென்று பேசாமல் அவள் காட்டிய புடவைகளை ரித்திகாவிற்கு மனதினுள் அணிந்து பார்த்து தேர்ந்தெடுத்தான். இப்படியே தினமும் அவன் ஏதோ ஒரு காரணத்தை சொல்லிக்கொண்டு புடவை எடுக்க வர, ரித்திகாவிற்கு அழுவதா ? சிரிப்பதா என்று தெரியவில்லை. 

ஆயினும் அவனை ஊக்குவிக்க கூடாதென்று நினைத்தவள் அவன் மீண்டுமொரு நாள் வந்த பொழுது அவள் அவனை வரவேற்கவில்லை. மாறாக இனி நீங்கள் இங்கு வரவேண்டாம் என்றாள் அழுத்தத்துடன். 

“ஏன், ஏன் நான் வரக்கூடாது. நான் உங்க கஸ்டமர், அதெப்படி கஸ்டமரை வரவேண்டாம்னு சொல்வீங்க … ? இப்படி செய்தால் உங்க பிசினெஸ் பாதிக்கப்படாதா … ? என்றான் அவசரத்துடன். 

அவளோ ஓவர் நிதானத்துடன்,”அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். நீங்க போகலாம்…”என்று வெளி பக்கம் கையை காட்ட அவனோ உப்பென்று ஊதியபடி அங்கிருந்த குஷன் சோஃபாவில் அமர்ந்தான். 

“சரி நான் உங்க கஸ்டமரா வரலை, உங்களின் அபிமானத்தை பெறவே வந்தேன்…”

“பார்டன்…”

“கமான் ரித்திகா, நீங்க ஒன்றும் சிறுமியோ, ரெண்டுங்கெட்டான்  வயது பெண்ணோ கிடையாது. உங்களுக்கு நான் என்ன சொல்ல வரேன்னு தெள்ள தெளிவா புரிஞ்சிருக்கும். அப்படி புரியலை என்றால் ஸபீனா போட்டு விளக்கி சொல்றேன். நான் முதன் முதலில் வந்த பொழுதே எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சி போச்சு. அன்றே நீங்க என் மனதில் சத்தமில்லாமல் புகுந்துட்டீங்க. அதனால் தான் நான் அடுத்த நாளே உங்களை தேடி வந்தேன். 

இருங்க நான் பேசி முடிக்கலை, நான் முழுசா சொல்லி முடிச்சதும் உங்க பதிலை சொல்லுங்க. அதை தொடர்ந்து வந்த நாட்களும் வந்தேன். நீங்களே யோசிச்சி பாருங்க தினமும் புடவை வாங்கிட்டு போறேனே. அதிலிருந்தே உங்களுக்கு என் மனசு புரிஞ்சிருக்குமே. இத்தனைக்கும் எனக்கு அம்மா கிடையாது. 

என் தங்கை வருஷத்திற்கு ஒரு முறை தான் புடவையே கட்டுவாள். ஆனால் நான் கிட்டத்தட்ட ஒரு மாசமாய் புடவை வாங்கியிருக்கேன். அதெல்லாம் நான் என் தங்கைக்கு வாங்கலை, உங்களுக்கு தான் வாங்கினேன்…” என்னும் பொழுதே ரித்திகா இதழை பிதுக்கி அலட்சியமாய் தோளை குலுக்கினாள். 

“உங்களுக்கு நான் பேசறது பைத்தியக்காரத்தனமாய் தான் தோன்றும். ஆனால் அத்தனையும் நிஜம் ரித்திகா. எனக்கு உங்களை ரொம்ப, உங்களை என்ன உங்களை. உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. உன்னை திருமணம் செய்துக்க ஆசைப்படறேன். சினிமா ஹீரோக்கள் மாதிரி எனக்கு அலங்காரமா பேச தெரியாது. உன்னை வாழ்நாள் முழுவதும் சந்தோஷமா வைச்சுக்குவேன். இது சத்தியம், எங்கு திருமணத்தை வைச்சிக்கலாம்…”

ரித்திகாவிற்கு அவன் பேச்சு எரிச்சலை கொடுத்தது. ஆணாதிக்கத்தனமாகவும் தோன்றியது. இவன் ஆசைப்பட்டால் போதுமா, எனக்கு இவனை பிடிச்சிருக்கா இல்லையான்னு கேட்க வேண்டாமா, அட்லீஸ்ட் தெரிஞ்சிக்க வேண்டாமா. இதென்ன அதிகப்ரசங்கி தனம். இவன் புடவை வாங்கி அலமாரியில் அடுக்கிட்டா பல்லை இளிச்சிட்டு கழுத்தை நீட்டறதுக்கு இந்த ரித்திகா முட்டாளில்லை. முதலில் இவனை அதிகம் பேசவிடாமல் இங்கிருந்து கிளப்பியாகணும்.

“நீங்க சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டீங்க என்றால் நீங்க கிளம்புங்க. நான் யோசிச்சி சொல்றேன் என் பதிலை. இப்போ என் பிஸினஸ் பாதிக்கப்படுது பாருங்க…” என்றாள் முடிந்த அளவு பொறுமை காத்தபடி. 

சற்று அவன் யோசிக்கவும்,அங்கே வேலை செய்கிற பெண்ணை அழைக்க வாயெடுத்தவள் அவனே எழுந்திருக்கவும்,”ஹ்ம்ம் ப்ளீஸ்…” என்றாள் வாயிலை காட்டி.

“நீங்க என்னை பற்றி ஏதோ தவறா மனசில் நினைச்சிருக்கீங்கன்னு புரியுது. நான் வசதியான வீட்டு பையன்க. நானும் கை நிறைய சம்பாதிக்கிறேன். திருமணமாகி வந்தால் உங்களுக்கு எந்த பிக்கல், பிடுங்கலும் இல்லை. திருமணத்திற்கு பிறகு உங்களுக்கு முழு ஆதரவை கொடுப்பேன் உங்க பிசினஸில். 

என் தங்கைக்கும் உங்களை ரொம்ப பிடிச்சி போச்சு, அவளால் நாத்தனார் கொடுமை என்ற பிரச்சினை எழாது. நீங்க நில்லுன்னா நிப்பேன், எழுந்திருன்னா எழுந்திருப்பேன். நல்லா யோசிச்சி ஒரு நல்ல முடிவா சொல்லுங்க. நான் ஒரு வாரம் டைம் தரேன். ஒரு வாரம் கழிச்சி வருவேன், உங்க பதிலை தெரிஞ்சிக்க…”என்று படபடவென்று பேசிவிட்டு பொட்டிக்கை விட்டு வெளியேற ரித்திகாவிற்கு தலை வலித்தது. 

அவன் பேச்சிலும், உடல் மொழியிலும் எண்பதுகளில் நடித்த கார்த்திக் போலவே இருக்க, அலட்சியமான இதழ் வளைவு உண்டானது அப்பட்டமான காப்பி என்று.

ஒரு வாரம் எவ்வித தொந்தரவுமில்லாமல் நிம்மதியாக சென்றது. இதற்கு நடுவில் தாயும், தந்தையும் ஒரே பெண் என்பதால் வீட்டோடு மாப்பிள்ளையாக தேட எவரும் சரி வரவில்லை. 

வந்தவர்களில் பாதி பேர் அவர்களின் சொத்தில் தான் ஆர்வம் காட்டினார்கள். மீதி பாதி பேர் அவள் திருமணத்திற்கு பிறகு பிசினெஸ் செய்ய கூடாது, தனக்கு அடங்கிய மனைவியாக வாழவேண்டும் என்றார்கள். அற்ப பதர்கள் என்றார் தந்தை. நீ பிரின்சஸ்டி, உன் அருமை வந்தவங்களுக்கு புரியலை. உனக்கென்று ஒருத்தன் ஏற்கனவே பிறந்திருப்பான், அவன் வருவான் என்றார் தாய். இருவரின் நம்பிக்கைகளையும் கெடுக்க ரித்திகா விரும்பவில்லை.

ஆயினும் ஏற்கனவே பிறந்தவனுக்கு என் வீட்டு அட்ரஸ் தெரியாமல் என்னை தேடி அலைஞ்சிட்டு இருக்கானோ, ஒருவேளை கடவுள் கொடுத்தனுப்பலையோ என்று நினைத்து சிரித்துக்கொள்வாள்.

ஒரு வார கெடு முடிந்து நரேஷின் நச்சரிப்பு அதிகமானது. முதலிலாவது கடையில் வந்து தொல்லை கொடுத்தான். இப்பொழுதோ அவள் செல்லும் இடங்களிலெல்லாம் வந்து அவனின் இருப்பை காட்டிக்கொண்டான். ரித்திகாவிற்கு அவனின் செயல் எரிச்சலை கொடுத்தாலும் மெல்ல மெல்ல அந்த எரிச்சல் மழுங்கிக்கொண்டே வந்தது.

இத்தனை பேர் வந்தும் யாரும் சரிவரவில்லை. இவனோ என்னை எனக்காக நேசிக்கிறவன், நாத்தனார் தொல்லை இல்லை, என் பிசினெஸ்க்கு சப்போர்ட் செய்வேன் என்கிறான். இவனுக்கும் நிறைய சொத்துக்கள் இருப்பதால் இவன் என் சொத்துக்கள் மீது ஆசைப்பட மாட்டான். ஒரு வேளை இவன் தான் எனக்காக பிறந்தவனோ, சரியான முகவரியில் வந்து, நான் தான் முகவரி தவறுன்னு ரிஜெக்ட் செய்து அனுப்பறேனா என்று தோன்றியது. 

இப்படியே ஒரு வாரம் ஓட, விடாமல் அவளை துரத்தி அவள் வாயாலே எனக்கு திருமணத்தில் சம்மதம் என்று சொல்ல வைத்துவிட்டான் நரேஷ். பெற்றவர்களுக்கு சற்று வருத்தம் இருந்தாலும் பையன் பார்க்க லட்சணமாக இருக்கிறான். மகளுக்கு பிடித்திருக்கிறது, இதற்கு மேல் என்ன வேண்டும். மகளின் ஆசைப்படி திருமணம் சிம்பிளாக கோவிலில் தாலி கட்டி, சர்ச்சில் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள். 

அவளின் திருமண வாழ்க்கையும் தொடங்கியது. ஒரு வாரம் பத்து நாள் வாழ்க்கை ஜெகஜோதியாக சென்றது. நரேஷ் மாதிரி ஒரு கணவன் உலகத்திலேயே கிடையாது என்று கர்வம் கொண்டாள். சடுகுடு ஆடலாம், கிரிக்கட் ஆடலாம், ஆணவத்தில் மட்டும் ஆடக்கூடாதுன்னு விஜயானாந்தா சொன்னதை ரித்திகா கேட்கவில்லை போலும். ஆண்டவன் தலையில் நறுக்கென்று ஒரு கொட்டு கொட்டினார் நரேஷ் தங்கைன்னு சொன்னது தங்கை இல்லை, அவன் காதலின்னு சொல்லி. 

அதை அவனிடம் கேட்க,”இதென்ன லுச்சா தனமா பேசறே…” என்று முதல் முறையாக அவனின் ஒரிஜினல் லோக்கல் பாஷையை அறிமுகப்படுத்தினான். 

“நான் என் கண்ணால் பார்த்தேன், ஒரு ஐஸ்க்ரீம் பார்லரில் இரண்டு பேரும் சிரிச்சி சிரிச்சி பேசியபடி ஐஸ்க்ரீம் சாப்பிட்டீங்க…”

“ஐஸ்க்ரீம் சாப்பிட்டது குத்தமா ? ஏன் தங்கையுடன் ஐஸ்க்ரீம் சாப்பிட கூடாதுன்னு எந்த முட்டாளாவது சட்டம் போட்டிருக்கானோ … ? எகத்தாளமாக வந்தது பதில். 

ரித்திகா கோபத்தை அடக்கி,”ஐஸ்க்ரீம் சாப்பிடறது குத்தமில்லை. ஆனால் எந்த அண்ணனும், தங்கையின் உதட்டிலிருந்து ஐஸ்க்ரீமை வழிச்சி ரசிச்சி தான் சாப்பிட மாட்டான்…” என்றாள் அழுத்தமாக, அதே சமயம் அருவருப்பாக. 

“ஓ ! அப்போ எல்லாத்தையும் பார்த்திட்டே, சரி இனி ஏன் நான் உன்னிடம் மறைக்கணும். ஆமா அவ என் காதலி தான். இப்போ உண்மையை சொல்லிட்டேன். என்ன செய்வதாக உத்தேசம்… ? 

நரேஷின் குரலில் இருந்தது திமிரா, ஆணவமா, ஒரு பெண்ணை ஏமாற்றிவிட்டோம் என்ற மிதப்பா, எதுவென்று ரித்திகாவிற்கு பிரித்தறிய தெரியவில்லை தான். ஆனால் அவனை போல குரலை உயர்த்தி பேசியறியாதவளுக்கு அவன் பேச்சில் அவளுள் ஏதோ ஒன்று உடைந்தது. அதன் பிறகு அது ஒட்டவே இல்லை என்பது வேறு கதை.

அன்றிலிருந்து அவனிடம் பேசுவதை தவிர்த்தாள். அவனுடன் ஒரே ரூமில் இருப்பதை தவிர்த்தாள். அவன் ரூமிலிருந்து வந்தாள் இவள் பின்பக்கம் சென்றுவிடுவாள். அவன் ஹாலுக்கு வந்தால் இவள் அவளுக்கென்று இருந்த அறைக்கு வந்துவிடுவாள். அவன் எழும் முன் அவன் கண்ணில் படாமல் எழுந்து ரெடியாகி பெற்றவர்கள் வீட்டுக்கு சென்றுவிடுவாள். ஆனாலும் நரேஷ் அவளை சும்மா விடவில்லை.

தினமும் உரண்டை இழுப்பான். வேண்டுமென்றே அவளை சீண்ட காதலியை அழைத்து வந்து அவளெதிரில் கொஞ்சுவான், முத்தமிடுவான். பாதி நாட்கள் கணவனுடன் சுகித்த அந்த கட்டிலில் அவன் காதலியுடன் இருப்பதை பார்த்து நெஞ்சு கொதிப்பாள். சீய் இவனுக்கும் எனக்கும் ஒன்றுமில்லை என்றான பிறகு நான் ஏன் அவன் கண்டவளோடு இருப்பதை கண்டு தீயாய் தஹிக்க வேண்டும் என்று தன்னையே நிந்தித்துக்கொண்டாலும் உண்மை வேறானதாக இருந்தது.

அவளின் கொதிப்பிற்கு காரணம் அந்த சாக்கடையில் தானும் உழன்றிருக்கிறோம் என்ற அருவெறுப்பு, உடல் முழுவதும் நரகலை அள்ளி பூசிக்கொண்ட நாற்றம், புத்திசாலியான தன்னையே நடித்து ஏமாற்றிவிட்டானே என்ற ஆதங்கம், பெற்றவர்களின் ஆசை நிராசையாக போனதே என்ற கொந்தளிப்பு. 

ஒரு நாள் பொறுக்க முடியாமல் கேட்டாள், உனக்கு தான் காதலி இருக்காளே, அப்புறமும் எதற்கு என்னை துரத்தி துரத்தி காதலிக்கிற மாதிரி நடிச்சே என்று. 

அதற்கு அவன் சொன்ன பதில் அவள் தலையில் இடியை இறக்கியது. அருவருப்பில் வயிற்றை பிரட்டியது. 

சென்னை … கமிஷனர் ஆபிஸ்…

அர்ஜுன் ராவ்க்கு விரைப்பான சல்யூட் ஒன்றை உதிர்த்து விறைப்பாக நின்றான் நம் நாயகன். 

“சொல்லுங்க கார்த்திக், கேஸ் எந்த தூரத்தில் இருக்கு… ? ஏதேனும் முன்னேற்றம் இருக்கா… ? 

“எஸ் சார், ஆனால் கேஸ் முடிய நீங்க எனக்கொரு உதவி செய்யணும்…”

“என்ன உதவி … ? என்று நெற்றியை சுருக்கினார் ராவ். 

அவன் என்ன உதவி என்று சொல்ல, ராவ் முகத்தில் ஆச்சர்ய கோடுகள்…