Nenjil Therikuthu Panithuli -11

அத்தியாயம் -11

சென்னை, கார்த்திக் வீடு… 

ஜூஸை குடிச்சிட்டு தனபாலன் எழவும், கார்த்திக்கும் எழுந்தான். 

“ஓகே சார் நான் கிளம்பறேன்…” என கார்த்திக் நன்றி சொல்லி வழியனுப்பி வைத்துவிட்டு மாடிக்கு சென்றான். 

பாவ்னாவின் போனில் அவள் கடைசியாக அழைத்த நேரத்தை ஒரு பேப்பரில் குறித்தான். அதே போல அட்டாப்ஸி ரிப்போர்ட்டில் பாவ்னா இறந்த நேரத்தையும் குறித்தான். இரண்டுக்குமே சில நிமிட வித்யாசங்கள் இருந்தது. அதாவது அவள் இறப்பதற்கும், உயிரோடு இருந்ததற்கும் நடுவில் அந்த அழைப்பு இருந்தது. சரியாக சொல்ல போனால் சில நொடிகள் வித்யாசம். 

தான் குறித்து வைத்த நேரத்தையே வெறித்துக்கொண்டிருந்தவன் என்ன நினைத்தானோ எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு அட்டாப்ஸி ரிப்போர்ட்டுடன் ஹாஸ்பிடல் விரைந்தான். அவனுக்குள் ஒரு சில சந்தேகங்கள் இருந்தது. அதை நிவர்த்தி செய்துகொள்ளத்தான் பாவ்னாவை போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டர் சுந்தரேஸ்வரை நாடி சென்றுக்கொண்டிருந்தான்.

அடுத்த சில நிமிடங்களில் அவன் டாக்டர் அறையில் அவர் முன் அமர்ந்திருக்க,”சொல்லுங்க மிஸ்டர் கார்த்திக், உங்களுக்கு நான் எந்த வகையில் உதவணும்… ? 

“தேங்க்ஸ் டாக்டர், ஆனால் பெரிசா இல்லைன்னு நினைக்கிறேன். உங்க ரிப்போர்ட் படிச்சேன். அதில் எனக்கு ஒரு சந்தேகம்…”

“ஹ்ம்ம் கேளுங்க …”

“பாவ்னா தலையில் தடியால் அடிச்சதற்கும், கழுத்து அறுபட்டதற்கும் இடையில் எவ்வளவு நேரம் இருந்திருக்கும், அதே போல அவங்க தலையில் ஒரு முறை தான் அடிக்கப்பட்டதா, இல்லை பலமுறை அடிக்கப்பட்டிருக்கா…”

கார்த்திக்கின் கேள்வியை உள்வாங்கிக்கொண்டவர் நிமிர்ந்து அமர்ந்து,”நீங்க ஏன் இதை கேட்கறீங்கன்னு தெரியலை, கண்டிப்பாக உங்களுக்கு ஏதேனும் பர்பஸ் இருக்கும். உங்களின் முதல் கேள்விக்கு பதில் அதிக பட்சம் ஒரு பத்து நிமிடம். எக்ஸ்சாக்ட்டா சொன்னால் எட்டரை நிமிடங்கள்…”

“ஓ ! 

“உங்களின் இரண்டாவது கேள்விக்கு பதில் ஒரே முறை தான் அடிச்சிருக்காங்க, ஆனால் ஓங்கி பலமா அடித்ததில் அவங்க மூளையில் ரத்தம் கசிஞ்சு உறைஞ்சு போயிருக்கு. அப்படி அடிச்சத்தில் அவங்க கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்புக்கே போயிருக்காங்க. அதன் பிறகு தான் கழுத்தை அறுத்திருக்காங்க. இஸ் இட் க்ளியர் ? வேறேதேனும் கேள்வி இருக்கா மிஸ்டர் கார்த்திக்… ? 

டாக்டர் சொன்னதை வைத்து அவன் மனது எதையோ கணக்கு போட்டுக்கொண்டிருக்க, டாக்டரின் கேள்விக்கு மீண்டும் நிமிர்ந்து அமர்ந்தான். 

“கட்டையால் அடித்ததில் மயங்கி, உங்க சொல்படி மரணத்தின் விளம்புக்கே போனாலும், கழுத்தை அறுக்கும் பொழுது கண்டிப்பா வலியில் கத்தியிருக்கணுமே. அப்படி கத்தியிருந்தால் அக்கம் பக்கத்து ஆட்கள் வந்திருப்பங்களே டாக்டர். ஆனால் ஏன் பாவ்னா கத்தலை. ஒரு வேளை கட்டையால் அடிக்கும் பொழுதே இறந்திருப்பாங்களோன்னு எனக்குள் ஒரு சந்தேகம்…”

“சர்ட்ன்லி நாட் கார்த்திக், ஆனால் அவங்க ஏன் கத்தாமல் இருந்தாங்கன்னு தெளிவு செய்ய முடியும். பிகாஸ் கொலைகாரன் முதலில் அவங்க வோக்கல் கார்ட் (vocal cord) தான் அறுத்திருக்கான். அதனால் கத்த முடியாமல் போயிருக்கலாம்…”

“ஓ யா, இட் மே பீ பாஸிபிள். தேங்க் யூ டாக்டர். நவ் ஐ ம் க்ளியர்…”  என்று எழுந்து டாக்டரின் கையை குலுக்கிவிட்டு ஹாஸ்பிடலை விட்டு வெளியே வந்தான். 

அடுத்து அவன் சென்ற இடம் தீபேஷின் ஆபிஸ். வெளியே நின்றபடி தீபேஷ்க்கு போன் செய்து அழைக்க, அவனுக்கோ செம குழப்பம். காரணம் பக்கத்து சீட்டில் தான் அவினாஷ் பல நாள் தாடியோடு அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தான். பாவ்னா இறந்த பிறகு இன்று தான் அவன் ஆபிஸ்க்கு வந்திருந்தான். 

இன்னும் கொஞ்ச நாள் லீவில் இருக்க வேண்டியது தானே என்ற தீபேஷ்க்கு மனைவியின் நினைவு கொல்லுது, எங்கு திரும்பினாலும், தொட்டாலும் அவள் ஞாபகம் தான். கனவிலும் அவளின் முகவரி தான். என்னால் அவளை இழந்து நிம்மதியாக இருக்க முடியலை. அதனால் தான் ஆபிஸ் வேலையில் என் வேதனைகளை மறக்கலாம்ன்னு வந்தேன் என அவினாஷை பார்க்க அவனுக்கு பரிதாபமாக இருந்தது.

கார்த்திக் அழைக்கவும், ‘மறுபடியும் ஏன் போலீஸ் வந்திருக்கு, அதுவும் இறந்து போனவளின் கணவனை அழைக்காமல் என்னை ஏன் அழைக்கிறார். இதென்ன பெரிய தொல்லையா இருக்கு என்று உள்ளுக்குள் சலித்துக்கொண்டாலும் கார்த்திக்கை அதிகம் காக்க வைக்காமல் எழுந்து வெளியே வந்தான். 

கார்த்திக் வெளியே ஆபிஸ் வளாகத்தில் ஒரு நிழலில் போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்தவாறு காத்திருக்க, அவனை நெருங்கினான் தீபேஷ். 

“ஹலோ ஸார் …”

“ஹாய் தீபேஷ் வாங்க, உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா, சாரி…”

வரும் பொழுது அர்ச்சனை செய்துக்கொண்டு வந்தவன் கார்த்திக்கின் மன்னிப்பில் உருகிவிட,”ஹையோ சார், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஒரு சின்ன குழப்பம் மட்டும் தான்…”

“என்ன… ? 

“அவினாஷ் ஆபிஸ் வந்திருக்கான், அவனை விட்டுட்டு என்னை ஏன் அழைச்சிங்கன்னு தான்…”

‘சோ சார் தன் நாடகத்தை ரொம்ப திறம்பட தான் நடத்துக்கிறாராக்கும். நடத்தட்டும், எல்லாவற்றிக்கும் சேர்த்து வைக்கிறேன் ஆப்பு அவனுக்கு …’

“உங்க ப்ரெண்டை அப்புறம் விசாரிச்சிக்கிறேன். இப்போ உங்களிடம் தான் முக்கியமா பேசணும். முதலில் உட்காருங்க…” 

இருவரும் அமர்ந்ததும்,”தீபேஷ் நான் கேட்கிற கேள்வியை உள்வாங்கி சரியான பதிலை சொல்லுங்க, பிகாஸ் நீங்க சொல்ற பதிலில் தான் கொலைகாரனை என்னால் பிடிக்க முடியும். புரியுதா உங்களுக்கு… ? 

“ஷியூர் ஸார், பாவனா என் சிஸ்டர் மாதிரி, அவங்களை கொன்றவர்களை கண்டுபிடிச்சே ஆகணும். நீங்க கேளுங்க சார்…” என்றான் ஆர்வமாக. 

“வெல் ! வழக்கமா நீங்களும் உங்க நண்பர் அவினாஷும் எத்தனை மணிக்கு ஜாகிங் போவீங்க, ஐ மீன் பார்க்கில் சந்தித்து ஜாகிங் போவீங்க… ? 

“ஐந்து மணிக்கு, அப்பொழுது தான் இரண்டு மணி நேரம் ஓடி விட்டு அரைமணி நேரத்திற்குள் வீடு திரும்பி ஆபிஸ்க்கு கிளம்பி ஒன்பது மணிக்கு ஆபிஸ் வர நேரம் சரியாக இருக்கும்…” சற்றும் தயங்காமல் வந்தது பதில். 

“ஓ ! குட், எத்தனை மாதங்களாக இருவரும் ஒன்றாக ஜாகிங் போறீங்க… ? 

“சாரி சார் இதுக்கு அட்சர சுத்தமா பதில் சொல்ல முடியாது. நானும், அவினாஷும் ஆபிஸில் சந்தித்து தான் நண்பர்களானோம். இருவருக்குமே ஜாகிங் பழக்கம் இருந்ததால் ஒன்றாக காந்தி நகர் பார்க்கில் ஜாகிங் போகலாம்னு முடிவு செய்தோம். நாங்க இருவரும் தனி தனியா பார்க்கிற்கு வந்து ஒன்றாக பேசிக்கிட்டே ஓட ஆரம்பிப்போம். இந்த பழக்கம் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக இருக்கும்னு நினைக்கிறேன்…”

“சூப்பர், அப்போ சரியா ஐந்து மணிக்கு தினமும் சந்திச்சிப்பீங்க பார்க்கில், இதில் ஒரு நாள் கூட நேரம் தவறியதில்லையா… ? 

“ஹ்ம்ம் அப்படி சொல்ல முடியாது. சில நாட்களில் பத்து நிமிஷம், கால் மணி நேரம்ன்னு தாமதமாகும். சில சமயம் எனக்கும், சில சமயம் அவனுக்கும். ஏன் சார் இந்த கேள்வியை கேட்கறீங்க. வாட்ஸ் யுவர் மோட்டிவ் … ? 

“சொல்றேன் …சொல்றேன்… அதற்கு முன்னால் இந்த கேள்விக்கு நல்லா யோசிச்சி பதில் சொல்லுங்க. சம்பவம் நடந்த அன்று அவினாஷ் எத்தனை மணிக்கு ஜாகிங் வந்தார். நல்லா நேரம் எடுத்து பதில் சொல்லுங்க தீபேஷ்… ? என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தினான். 

சற்று யோசித்து,”சார் இதில் யோசிக்க என்ன இருக்கு, அவன் அன்று ஒருமணி நேரம் தாமதமா தான் வந்தான்…”என கார்த்திக்கின் விழிகள் பளிச்சிட்டது.

புரியாமல் விழித்த தீபேஷை மேலே சொல்லுமாறு சைகை செய்ய, அவன் தொடர்ந்தான். 

“சம்பவத்தன்று நான் பார்க்கிற்கு போய்ட்டேன். ஆனால் அவினாஷ் வரலை. அவனுக்காக காத்திருந்தபடி போனில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்தேன். பத்து நிமிடம் ஆனதும் அவனுக்கு அழைத்தேன். இதோ வர்ரேண்டா கிளம்பிட்டே இருக்கேன்ன்னு சொன்னான். அவினாஷ் வந்த பிறகு ஓடலாம் என்று நினைத்தபடியே போனில் மூழ்கிட்டேன். திடீரென்று மணியை பார்க்க முக்கால் மணி நேரம் சென்றிருந்தது நான் வந்தே. 

அதனால் மீண்டும் அவனை அழைத்த பொழுது,”வந்துட்டே இருக்கேன், சாரிடா தாமதத்திற்கு என்றான். இனி அவன் வந்து ஓடிவிட்டு வீடு திரும்ப எப்படியும் ஆபிஸ்க்கு லேட் ஆயிடும் என்பதால், நான் வீட்டுக்கு போறேன், இன்று ஜாகிங் வேண்டாம் என்றேன். ஆனால் அவன் விடவில்லை. இதோ பார்க்கின் அருகில் வந்துட்டேன், உள்ளே வந்துட்டேன், பைக்கை நிறுத்தறேன்ன்னு சொல்லி சொல்லியே கால் மணி நேரம் ஆக்கிட்டான். அன்று நாங்க ஒரு மணி நேரம் மட்டும் ஓடிட்டு வீட்டுக்கு திரும்பினோம். 

இப்போ சொல்லுங்க ஸார், கொலையாளி…” என்று பேசிக்கொண்டு வந்தவன்,”ஸார் நீங்க கேட்கிற கேள்வியெல்லாம் அவினாஷை சுற்றியே இருக்கு. நீங்க அவனை சந்தேகப்படறீங்களா… ? ஆனால் அவன் கொலையாளி என்றால் அவனால் எப்படி ஜாகிங் பொழுது பாவ்னா சிஸ்டரிடம் பேசியிருக்க முடியும் ? ஆணித்தரமாக கேட்டான் தீபேஷ்.

“நல்ல கேள்வி தான், ஆனால் அந்த கேள்விக்கும் பதில் இருந்தால்… ? என்று சிரித்தவன்,”அவினாஷ் போனில் பேசியதை தான் நீங்க பார்த்தீங்க, ஆனால் அவருக்கு இன்கமிங் கால் வந்ததை நீங்க பார்த்தீங்களா… ? 

தீபேஷ் சற்று நிதானித்து யோசித்தவன்,”நீங்க இதை சொல்லும் பொழுது தான் ஒரு விஷயம் எனக்கு தோணுது. அன்று நாங்க பேசிட்டே இருக்கும் பொழுது அவன் பாக்கெட்டிலிருந்து போனை எடுத்து, சொல்லு பாவ்னா என்றான். நான் ஓடுவதில் கவனம் வைத்ததால் அவனுக்கு அழைப்பு வந்ததா இல்லையான்னு கவனிக்கலை. ஆனால் ஸார் நீங்க அவனின் போனை வாங்கி கால் ஹிஸ்டரியை சோதிச்சிருக்கலாமே…”

“உங்க ப்ரெண்ட் அதை அழிக்காமல் அப்படியே வைத்திருப்பார்ன்னு நினைக்கறீங்களா தீபேஷ்… ? என்று மீண்டும் சிரிக்க தீபேஷ் திருதிருத்தான். 

“ஓகே தீபேஷ், தேங்க்ஸ் பார் யூர் கொப்பேரேஷன், அண்ட் ஒன் மோர் திங், இப்போதைக்கு நான் உங்களை விசாரிச்சதை உங்க நண்பரிடம் சொல்லிக்க வேண்டாம். சீக்கிரமே கொலையாளி யாருன்னு பேப்பரை பார்த்து தெரிஞ்சிக்கங்க…” என்று எழுந்து தீபேஷ்க்கு தலையசைத்துவிட்டு தன் காரிலேற மற்றவன் அயர்ந்து நின்றான்.

பிரான்ஸ்…

அடுத்த அழைப்பு வந்ததுமே அவசரமாக எடுத்து ஹலோ என்றாள் சன்னமாக. 

“ஹேய் நான் விஷால் பேசறேன், என்னை ஞாபகம் இருக்கா, இல்லை சுத்தமா மறந்துட்டியா… ? என்று உரிமையாக அதட்டியது ஒரு ஆண் குரல். 

அப்பாவின் தங்கை மகன் தான் விஷால். பெரியவர்களுக்குள் மனக்கசப்பு இருந்தாலும் சிறியவர்கள் ஒன்றாக கலந்து பழகினார்கள். அப்பாவின் இரண்டு தங்கைகளின் பிள்ளைகளும், அம்மாவின் தங்கை பிள்ளைகளும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். அதில் பெரிய அத்தை மகன் தான் அழைத்திருந்தான். 

“ஹாய் விஷால் நீயா, என்ன திடீர்னு அழைப்பு ? 

“அதிருக்கட்டும் இவ்வளவு நாள் எங்களையெல்லாம் மறந்தே போய்ட்டியா ? மூன்று வருஷம் ஆச்சு நீ பேசி…” என்று குற்றப்பத்திரிக்கை வாசிச்சான். 

“ஓ ஆமாம், நீ போன் செய்து செய்து நான் பேசி பேசி என் காதிலே ரத்தமே வந்திடுச்சி விஷால். ஏண்டா டெய்லி போன் செய்து அறுக்கறே … ? 

“அடிப்பாவி நான் உன்னை கேள்வி கேட்டேன்னு என்னை நக்கலடிக்கறியா ? ஹையோ சொல்ல வந்த விஷயத்தை மறந்துட்டு நான் பேசிட்டே இருக்கேன் பார்…”

“அப்படி என்னடா முக்கியமான விஷயம்.  உனக்கு பொண்ணு பார்த்துட்டாங்களா அத்தை. எந்த அப்பாவி வந்து மாட்டினாள் உன்னிடம்… ?

“த்ச்சு, விஷயம் என்னை பற்றியது இல்லை. உன் மாஜி கணவர் இறந்துட்டார் இன்று காலையில். நீ வந்து அவரின் காரியங்களில் கலந்துக்க வேண்டாமா … ? 

அதை கேட்டதும் ஒரு நொடி ரித்திகாவின் இதயம் நின்று துடித்தது. மனதுக்கும் வருத்தமாக இருந்தது. ஆனால் எல்லாமே ஓரிரு கணங்கள் தான். அடுத்த நொடியே அவன் என் கணவனில்லை, வேறு ஒருத்திக்கு கணவனாக இருந்தவன் என்ற அலட்சியம் அவளுள் குடிபுகுந்தது. 

“ஓ அப்படியா ! அதை ஏன் என்னிடம் சொல்றே ? எனக்கு டிவோர்ஸ் ஆகி மூன்று வருஷமாகுது விஷால், உனக்கு நினைவிருக்கா இல்லையா ? நான் ஏன் அவரின் காரியங்களில் கலந்துக்கணும்… ? எரிச்சல் விரவியிருந்தது அவள் பேச்சில். 

“ஐ நோ ரித்தி, உனக்கும் அவருக்கும் டிவோர்ஸ் ஆகியிருக்கலாம், ஆனால் உனக்கும், அவருக்கும் பிறந்த குழந்தை இருக்காளே. அவளுக்காக வந்துட்டு போ … “என்றான் சற்று அழுத்தமாக.  

விஷாலின் பேச்சில் ரித்தி வாயடைத்து போனாள்.