Nenjil Therikuthu Panithuli -10

அத்தியாயம் -10
பிரான்ஸ்…

அடுத்த நாள் வீக்கெண்ட் என்பதால் மிக தாமதமாக எழுந்து குளித்து, கிச்சனில் புகுந்துக்கொண்டவள் குழந்தைக்கு பிடித்த சிக்கன் நக்கெட்ஸ், சீஸி சிக்கன் பாஸ்தா அண்ட் சீசர் சாலட் செய்ய எல்லாவற்றையும் ரெடி செய்துவிட்டு தனக்கு ஒரு காஃபியை தயாரித்துக்கொண்டு ஹாலில் அமர்ந்தாள்.

போனில் இன்ஸ்ட்டாக்ராமை மேய்ந்துக்கொண்டிருக்க சில புடவைகளும், சுரிதார் வகைகளும் கண்ணை பறித்தது. நினைத்தால் உடனே வாங்கிவிடலாம் தான். ஆனால் வாங்கி என்ன செய்வது… ? இங்கே அதை அணிந்துக்கொண்டு எங்கே செல்வது ? ஒரு முறை புடவை கட்டிக்கொண்டு சென்றுவிட்டு அனாயாவின் பள்ளியிலும், அவளின் ஆபிஸிலும் கேட்பவர்களுக்கு பதில் சொல்லவே நேரம் போதவில்லை. போதத்திற்கு அவளுடன் வேலை செய்கிற ஆண் கொலீக்ஸ் அவளின் அழகை வர்ணிக்கவும் போதும்டா சாமி என்றாகிவிட்டது. இனி புடவை என்றொரு உடையையே அணியக்கூடாது என்று சபதமே எடுத்துக்கொண்டாள்.

ஒரு பெருமூச்சுடன் இன்ஸ்ட்டா ரீல்ஸை ஸ்க்ரால் செய்தவள் ரீல்ஸில் கிளாராவை கண்டதும் அதை பார்க்க ஆரம்பித்தாள். அவளின் ஹஸ்கி நாய் செய்யும் சேட்டைகளை போட்டிருந்தாள். அதை ரசித்தவளுக்கு தன் வீட்டிலேயும் ஒரு நாய் வாங்க வேண்டுமென்ற ஆசை எழுந்தது. அனாயாவுக்கும் நாய் என்றால் ரொம்ப இஷ்டம். ஆனால் அதை வாங்கிவிட்டால் அதற்கு வேலை செய்யவே நேரம் தனியாக ஒதுக்க வேண்டும். காலையில் வாக்கிங் ஆரம்பித்து, அதற்கென்று ஸ்பா, ஹேர் கட்டிங், வேக்சின், மற்றும் அதற்கு ஈடு கொடுத்து விளையாட வேண்டும். இல்லையென்றால் நாய் சோர்ந்து, நோயாளியாகிவிடும்.

நம்ம ஊர் நாட்டு நாயென்றால் எப்படி வேண்டுமானாலும் வளர்க்கலாம், இந்த ஊர் நாய்களை அப்படி வளர்க்க முடியாது. போதத்திற்கு அனாயாவுக்கு நாயின் முடிகளால் அலர்ஜி வந்துவிடுமோ என்ற பயம் வேறு. இதற்காகவே தன் ஆசையை ஒத்திப்போட்டாள்.

க்ளாராவின் ஐடியை கிளிக் செய்ய அவளின் வீடியோக்கள் நிறைய இருந்தது. அதில் அவளின் பழைய, மற்றும் புதிய பாய் பிரெண்டை பார்த்ததும் முதல் நாள் மாலை ரீதிக்காவிடம் கேட்ட கேள்வியே அவளை சுற்றி சுற்றி வந்தது. எவ்வளவு சாதாரணமாக சொல்ல முடிகிறது இவர்களால், சீக்கிரமே ஒரு பாய் பிரெண்டை ஏற்பாடு செய்யணுமாம். இத்தென்ன மனசா இல்லை சட்டையா அடிக்கடி மாத்திக்கிறதுக்கு. இவங்க இனத்து பெண் மாதிரி என்னையும் நினைத்துவிட்டாள். போலிருக்கு. உங்களை மாதிரி நானில்லைன்னு அழுத்தமாக அவள் நெற்றி பொட்டில் அறைகிற மாதிரி பதில் சொல்லவேண்டும் என்று ஆசை தான். ஆனால் அவளை சொல்லி என்ன ஆக போகுது. அவளுக்கு தெரிந்த வகையில் எனக்கு யோசனை சொல்வதாக நினைச்சுக்கிட்டு இருக்காள். இனி என் வாழ்க்கையில் ஆண்களுக்கே இடமில்லைன்னு சொன்னால் கிளாராவால் நம்பவே முடியாது. நான் இதை சொல்லும் பொழுது அவளின் முகம் போகிற போக்கை காண வேண்டும் போல ஒரு ஆவல் தோன்றி மறைய ரித்திகாவின் இதழ்களில் புன்னகை மலர்ந்தது.

“மம்மா போஞ்சூர் …” என்றபடி அனாயா ஓடிவந்து ரித்திகாவின் கழுத்தை கட்டிக்கொண்டு தாயின் கன்னத்தில் முத்தமிட அவளும் மகளின் பட்டான கன்னத்தில் இதழ்களை வன்மையாக பதித்தாள்.

“சரிடா செல்லம், நீங்க பிரஷ் பண்ணுங்க, மம்மா வந்து குளிக்க வைக்கிறேன். அதற்கும் முன்னே கோகொனட் ஆயில் கொண்டு வாங்க…”என்று கட்டளையிட்டாள்.

“மம்மா கொஞ்ச நேரம் தேசே அனிம் (கார்ட்டூன்) பார்க்கிறேனே சில் வூ பிளே (ப்ளீஸ்) என்று கண்ணை சுருக்கி உதடு குவித்து வேண்டுகோள் வைக்க ரித்திகா தன்னை மறந்து குழந்தையை கட்டிக்கொண்டாள்.

“தாராளமா பார், அதற்கு முன்னால் உன் முடிக்கு ஆயில் போட்டுக்கோ, அப்பொழுது தானே ஹேர் நீளமா வளரும் பிரின்சஸ் டிஸ்னி ராய்ப்போன்ஸ் மாதிரி …” என்று ஆசை காட்ட குழந்தை உடனே ஒத்துக்கொண்டாள்.

ஓடிச்சென்று வெங்காயத்தையும், கறிவேப்பிலையையும் போட்டு கொதிக்க வைத்த எண்ணையை கொண்டு வந்து தாயிடம் கொடுத்துவிட்டு சோஃபாவின் முன் போடப்பட்டிருந்த டீப்பாவின் மீது அமர்ந்துக்கொண்டபடி ரிமோட்டை கையில் எடுத்தாள்.

புன்னகைத்தபடி குழந்தையின் சிகையை பிரித்து வகிட்டுக்கு வகிடு எண்ணையை தேய்த்து லேசாக மஜாஜ் செய்து கூந்தலை கிளிப் போட்டு கொண்டையிட்டவள் குழந்தையின் அனுமதியோடு முகத்திற்கும், உடம்பிற்கும் பாதாம் எண்ணையை தேய்த்துவிட்டு கையை கழுவச் சென்றாள். எப்படியும் ஒரு மணி நேரமாகும் தலையில் எண்ணெய் ஊற, அதற்குள் சமையலை முடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் அடுப்படிக்குள் நுழைந்தாள்.

கிச்சன் மேடை மீது போனை வைத்துவிட்டு ஏற்கனவே முடிவு செய்த சமையலை செய்ய ஆரம்பிக்க, அவளின் கைபேசி அழைத்தது.

சிக்கனில் கையை வைத்திருந்தவள்,”ப்ச் இந்த நேரத்தில் யார் அழைப்பது… ? என்று எரிச்சலோடு போனில் டிஸ்பிளேயை நோக்க, அவளின் கொலீக்ஸ் தியானா அழைத்திருந்தாள்.

இவள் பொதுவாக அதிகமாக அழைக்க மாட்டாள், இன்று என்ன விஷயமோ…’ என்று நினைத்தவளாக கையை கழுவிக்கொண்டு ஏர்ப்போடை எடுத்து காதில் மாட்டியபடி போனில் தொடர்பை இணைத்தாள்.

மீண்டும் தன் வேலைகளை தொடர்ந்தபடி,”சல்யூ தியானா, நல்லா இருக்கியா … ?

அவளும் பதிலுக்கு நலம் விசாரித்துவிட்டு,”ரிது இன்று நம் ஆபிஸ் ஏற்பாடு செய்த எக்ஸ்போ, கான்ஸெர்ட், பார்ட்டி இருக்கே, ஞாபகம் இருக்கா…?

அவள் சொன்ன பிறகு தான் அப்படி ஒரு விஷயம் இருப்பதே நினைவு வந்தது.

“ஓ தேசோலே (சாரி) சுத்தமா மறந்துட்டேன்…” என்றபடி வெட்டி கழுவிய சிக்கனை மைதாவில் போட்டு புரட்டி எடுத்தாள்.

“அது சரி, இப்போ நினைவு வந்துச்சு இல்லையா, இன்று ஈவ்னிங் வருவதானே, அனு பேப்ஸ் அழைச்சுக்கிட்டு…”

சில நொடிகள் யோசித்தவளுக்கு சென்ற வருடம் நடந்த நிகழ்ச்சிகள் மனதில் ஊர்வலம் வந்தது. கான்ஸெர்ட், எக்ஸ்போ எல்லாம் நன்றாக தான் இருக்கும். ஆனால் பார்ட்டியில் லிக்கர் கன்ஸ்யூம் செய்துவிட்டு டான்ஸ் என்ற பெயரில் அடிக்கும் கூத்துக்கள் ரித்திகாவுக்கு சுத்தமாக ஆகாது. அதுவும் அவளுடன் வேலை செய்கிற அந்துவான் அவளோடு நடனம் ஆடுகிறேன் பேர்வழி என்று அவளை இடுப்போடு இழுத்து அணைப்பதும், அவளை முத்தமிட முயற்சிப்பதுமாக இருக்க, அதிலிருந்து அவள் தப்பி வந்ததும் பெரிய கதை. இப்பொழுது நினைத்தாலும் உடல் சிலிர்த்தது அருவெறுப்பில். இந்த வருடமும் அதே கூத்து நடக்காதென்று என்ன நிச்சயம்.

சிக்கனை மீண்டும் முட்டை கலவையில் முக்கியெடுத்து ரஸ்க் தூளில் மீண்டும் புரட்டி ஒரு தட்டில் வைத்தபடியே பேச ஆரம்பித்தாள்.
“இல்லை தியானா, நான் இன்று அனுகுட்டியோடு ஷாப்பிங் போறேன். நோயல்க்கு (கிறிஸ்துமஸ்) டிரஸ் எடுக்கணும். நீங்க என்ஜாய் பண்ணுங்க…” என எதிர்பக்கம் சலிப்பான உச்சுக்கொட்டல் கேட்டது.

ரித்திகா மெலிதாக புன்னகைத்துக்கொண்டாள். தியானா அவள் பாய் ப்ரெண்டுடன் வந்து புல் தண்ணியில் மிதப்பாள். அவள் பாய்ப்ரெண்டும் அப்படியே. கிளம்பும் பொழுது யார் யாரை தாங்கிக்கொண்டு செல்கிறார்கள் என்றே தெரியாத அளவுக்கு இருக்கும். இருவரின் கால்களும் எக்ஸ் மாதிரி பின்னிக்கொள்ளும். இதெல்லாம் போதாதென்று நாலு சுவற்றுக்குள் நடக்க வேண்டிய விஷயங்களை பாதி நடு ரோட்டிலேயே முடித்துக்கொள்வார்கள்.

அதுவும் பார்ட்டிக்கு வந்தவர்கள் சிலர் குடித்துவிட்டு குளறும் பொழுது அவர்களை சிக்ஸ்டி சிக்ஸ் சொல்ல சொல்லி கேட்கணும் என்று விபரீத ஆசை தோன்றும்.

“ஓகே பை…” என்று தியானா இணைப்பை துண்டிக்க ரித்திகாவிற்கு அப்பாடா என்றிருந்தது.

சற்று நேரம் கழித்து மீண்டும் அழைப்பு வர எரிச்சலுடன் காதிலிருந்த ஏர்ப்போடை ஆன் செய்ய அவள் யாரை நினைத்து பயந்தாளோ அவனே அழைத்தான்.

“ஹாய் ரித்திகா ஷெரி. கோமோன் ஸ வா (hw r u) … ?

“ஹ்ம்ம், கோமோன் வா தூ அந்துவான் ? (வாட் அபௌட் யூ) என்ன திடீர்னு அழைச்சிருக்கே …?

“நத்திங், இன்று மாலை கிறிஸ்துமஸ் பார்ட்டி இருக்கே, வருவ தானே … ?

அதே கேள்வி, ஆனால் நோக்கம் வேறு. ரித்திகாவிற்கு சலிப்பு தட்டியது.

“இல்லை எனக்கு வேறு வேலை இருக்கு, என் ரிலேஷன் ஒருத்தங்க என் வீட்டுக்கு வர்றாங்க. சோ எனக்கு அவங்களை கவனிக்கணும்…”

“ஒ நோ, அவங்களிடம் நாளை வரசொல்லியிருக்க வேண்டியது தானே, இல்லை ஜஸ்ட் பார்ட்டி அட்டென்ட் பண்ணிட்டு போயேன் ஷெரி…”

அவன் பேச்சில் ரித்திகாவின் கோபம் தலைதூக்கியது. பார்ட்டிக்கு வரலை ஷாப்பிங் போறேன் என்றால் அதை நாளை வைத்துக்கொள் என்பான். வேறு என்ன காரணம் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளாமல் பார்ட்டி அட்டென்ட் செய்வதை தவிர வேறேதும் முக்கியமில்லை என்பதை மாதிரி ஒரு பேச்சு வரும். அதனால் தான் வீட்டுக்கு விருந்தாளி வருகிறார்கள் என்று ஒரே போடாக போட்டாள். அதையும் வெட்டி பேசவும் அவளின் பொறுமை அத்துமீறியது.

“லுக் அந்துவான், அடுத்தவர்கள் வாழ்க்கையில் மூக்கை நுழைக்காமல் இருப்பது உனக்கு நல்லது. எனக்கு வேலை இருக்குன்னு சொன்னால் அத்தோடு விடு. நீ போய் என்ஜாய் பண்ணு. அதைவிட்டு தொணதொணக்காதே. இப்பொழுது எனக்கு வேலை இருக்கு, போனை கட் பண்றேன் …” என்றதோடு நில்லாமல் தொடர்பை துண்டிக்க எத்தனிக்க அந்துவானே பேசினான்.

“சாரி ஷெரி, உன்னை டென்ஷானகிட்டேன் போல. சரி நானே வைச்சிடறேன்…” என்று தொடர்பை துண்டி க்க ரித்திகா வாயை ஊதி ஆசுவாசப்படுத்திக்கொண்டாள் தன்னை.

பேசியபடியே சிக்கன் நகெட்ஸிற்கு ரெடி செய்துவிட்டு, ஸாலட்க்கு சிக்கனை பொடிப்பொடியாக வெட்டி மசால் போட்டு இரும்பு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் விட்டு வறுக்க ஆரம்பித்தாள். அது வறுபடுவதற்குள் வெங்காயம், தக்காளி, லெட்டூஸ் இலைகளை வெட்டி மயோன்னைஸ், எலுமிச்சை சாறு, ஆலிவ் ஆயில் போட்டு ரெடி செய்து வைத்துவிட்டு சிக்கனையும் வேக வைத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துவிட்டு, பாஸ்தாவிற்கு தேவையானதை செய்து முடித்தாள். சாப்பிடும் முன் நக்கெட்ஸ்ஸை பொறித்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தாள்.

இதற்குள் ஒரு மணி நேரம் கடந்திருக்க, அனுவே அவளிடம் வந்தாள் குளிக்க வைக்க சொல்லி. அவளை பிரஷ் செய்ய வைத்து, அவளின் கூந்தலை ஷாம்பூ போட்டு அலசி ஹேர் ட்ரையர் போட்டு தலைக்கு ஹேர் பேண்ட் போட்டவள், க்ரீம் பூசி, ட்ரெஸை எடுத்துக்கொடுத்துவிட்டு கிச்சனுக்கு வந்தாள்.

குழந்தைக்கு ஹாட் சாக்லெட்டை ரெடி செய்து எடுத்துக்கொண்டு வர அனாயா கடவுளை சேவிச்சிட்டு ஹாலுக்கு வந்தாள். அவளிடம் சாக்லெட்டை குடிக்க சொல்லிவிட்டு நக்கெட்ஸ்ஸை எண்ணையில் பொரித்தெடுத்தாள். அதற்குள் அனாயா தட்டுக்களை டைனிங் டேபிளில் கொண்டு வைத்தாள். ஏற்கனவே செய்து வைத்திருந்த சிக்கனையும், சாலட் கலவையையும் கொண்டு வைக்க, ரித்திகா பாஸ்தா, மற்றும் நக்கெட்ஸை எடுத்துக்கொண்டு மகளோடு ஹாலுக்கு சென்றாள். இருவரும் அமர, சாலட்டில் வறுத்த சிக்கனையும், உப்பையும் போட்டு கலந்து மகளுக்கும் தனக்கும் பரிமாறிக்கொண்டாள்.

இருவரும் டிவி பார்த்தபடியே, பேசிக்கொண்டு சாப்பிட்டு முடித்ததும் தாயுடன் சேர்ந்து சாப்பிட்டதை ஒழுங்கு செய்துவிட்டு மீண்டும் டிவியில் கார்ட்டூன் பார்க்க ஆரம்பித்தாள். மாலை கிறிஸ்துமஸ் ட்ரீ வைக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் ஸ்டோர் ரூமில் வைத்திருந்த டெகேரேஷன் பொருட்கள் என்னென்ன இருக்கு என்று சோதித்து எடுத்து வைத்தவள் என்னென்ன தேவை என்பதை ஒரு பேப்பரில் குறித்து வைத்த்துக்கொண்டாள். சில நிமிடங்கள் மகளோடு பேசிக்கொண்டிருந்தவள் சற்று நேரம் கண்ணயர அனுவும் அவள் மடியில் படுத்தபடி உறங்கி போனாள்.

ஐந்தானதும் எழுந்து சிறு குளியல் போட்டு ரெடியாகி, மகளையும் எழுப்பி அவளையும் ரெடி செய்து இருவரும் ஷாப்பிங் சென்றார்கள். மகளுக்கு பிடித்த சில உடைகளையும், அவளுக்கு பிடித்த சில உடைகளை மகளுக்கும் எடுத்தவள் தனக்கும் சில ஷர்ட்ஸ், ஜீன்ஸ், ஸ்கர்ட்ஸ் எடுத்துக்கொண்டு மரம் ஜோடிக்க தேவையான பொருட்களையும் வாங்கிக்கொண்டு அப்படியே ஐஸ்க்ரீம் சாப்பிட்டபடி சொர்க்கலோகம் போல வண்ண வண்ண விளக்குகளில் ஜொலித்த கடைத்தெருக்களில் இருவரும் சுற்றினார்கள்.

இரவானதும் ஒரு ரெஸ்ட்டாரெண்டில் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்ப இருவருமே களைத்து போயிருந்தார்கள். அனுவை உடம்பு கழுவி வேறு உடை மாற்றி அவளை படுக்க வைக்க சுற்றிய களைப்பில் குழந்தை உடனே உறங்கிவிட்டாள். ரித்திகாவும் குளித்து உடைமாற்றியவள் வாங்கி வந்த பொருட்களை எடுத்து வைத்துவிட்டு, வாங்கி வந்த மரத்தை வைத்து அழகாக ஜோடித்து முடித்து வண்ண விளக்குக்களை பொருத்தி முடிக்க முழுதாக ஒரு மணி நேரம் கரைந்திருந்தது.

அவளுக்கும் சுற்றியதில் அலுப்பாக இருந்ததால் மகளின் அருகில் படுத்துக்கொண்டாள். சற்று நேரத்திலேயே அவளின் விழிகளை உறக்கம் இழுத்துக்கொள்ள நித்ராதேவி ஆசையோடு அணைத்துக்கொண்டாள். எங்கேயோ கேட்ட போன் சத்தத்தில் புரண்டு படுத்தாள். போன் மணி விடாமல் அடிக்க சிரமமப்பட்டு விழிகளை மலர்த்தியவள் சிணுங்குவது தன் போன் தான் என்று புரிய கை நீட்டி கைபேசியை எடுத்து யாரிந்த நேரத்தில் என்று ஆராய இந்தியா நம்பர் டிஸ்பிளேயில் ஓடியது.

துணுக்குற்று வேகமாக எழுந்து அமர்வதற்குள் கைபேசியின் சிணுங்கல் நின்று போனது.

‘யாராக இருக்கும், அதுவும் இந்த நேரத்தில் என்று யோசித்தபடி நேரத்தை பார்க்க மணி இரண்டு என்றது. ஓ இந்தியாவில் இப்பொழுது மணி ஆறரை. ஆனால் யார் அழைத்திருப்பார்கள் ? ஏன் ?

அவள் குடும்பத்து ஆட்கள் யாரிடமும் பேசுவதில்லை. அத்தைகள், சித்தி, சித்தப்பாக்கள் இருந்தாலும் யாரிடமும் தொடர்பு இல்லை. தாலி கட்டி கைவிட்டவனும் வேறு ஒரு திருமணம் செய்துக்கொண்டதாக யார் மூலமாகவோ கேள்விப்பட்டாள். இப்பொழுது யார் என்னை அழைத்திருப்பார்கள். யாருக்கு என் நம்பர் தெரியும் என்று யோசனையினூடே மீண்டும் அவளின் கைபேசி சிணுங்கியது.