Nenjil Therikuthu Panithuli – 1

அத்தியாயம் -1

பார்க் …

இருள் பிரிந்தும் பிரியாததுமாக அடி வானம் காதலனின் கொஞ்சலில் காதலியின் கன்னங்களில் மலர்ந்த சிவந்த ரோஜாக்கள் போல தீற்றலாய் சிவந்திருந்தது. மார்கழி மாதத்திற்க்கே உரிய குளிர் கண்ணுக்கே தெரியாத பனி சாரலாய் தூவி தேகத்தை உரசியது. பார்க்கின் நடைபாதையில் இருபக்கமும் வளர்ந்திருந்த மரங்களின் இலைகளில் பனி படர்ந்து இலைகள் இளம்பெண்ணின் தேகமாய் ஜொலி ஜொலித்தது.

மருத்துவரின் அறிவுரைப்படி நடக்க வந்த சர்க்கரை வியாதி நோயாளிகள் சீரான நடையோடு நடக்க, உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்பிய இளைஞர்களும், இளைஞிகளும் காதில் மாட்டிய இயர் போனில் கசிந்த இசையை ரசித்தபடி மிதமான வேகத்தில் ஓடிக்கொண்டிருக்க, ஒய்வு பெற்ற ஐம்பதை கடந்த வயதான ஆண்கள் தங்களின் நண்பர்களோடும், தனி தனியாகவும், தத்தம் துணையோடு பேசியபடி மெதுவாக நடந்துக்கொண்டிருக்க பார்க் கொஞ்சம் கொஞ்சமாக அன்றய நாளை கனஜோராக துவக்கி கொண்டிருந்தது.

“டக்…டக் … டக் … டக் …

இரண்டு ஷூக்களின் தாள லயத்தோடு இரு ஆண்கள் மெல்லிய குரலில் சிரித்து பேசியபடி ஓடிக்கொண்டிருந்தார்கள்.

“முதலில் உன் லீவை உறுதிப்படுத்து அவினாஷ், அதன் பிறகு எங்கு லீவை கழிக்கலாம் என்று முடிவு செய்யலாம்…”

சொன்னவன் தீபேஷ். எம்.என்.சியில் ஒரு நல்ல பதவியில் இருக்கிறவன். அவினாஷ் என்று அழைக்கப்பட்டவனும் அதே கம்பெனியில் ஒரு நல்ல பதவியில் இருக்கிறவன், இருவரும் நெருங்கிய நண்பர்கள். 

“ஹ்ம்ம் கண்டிப்பாடா, பாவ்னாவிடம் கேட்டுட்டு சொல்றேன். அவளுக்கும் லீவ் கிடைக்கணுமே. ஹேய் அப்புறம் ஈவ்னிங் விக்ரம் படத்திற்கு போறோம். நீயும் வர்றியா… ? 

“ப்ச் இந்த வாரம் என்னால் முடியாதுப்பா. நான் நாளை மனைவியோடு அவ அம்மா வீட்டுக்கு போறேன். நீ போய் என்ஜாய் பண்ணு…”

தீபேஷ் சொல்லி முடிப்பதற்குள் அவினாஷின் கைபேசி சிணுங்கியது.  

“இப்போ தான் நீ வீட்டிலிருந்து கிளம்பி வந்தே, அதற்குள் பாபி அழைக்கிறாங்க…”என்று கேலி செய்து சிரித்த நண்பனுக்கு அசடு வழிந்துவிட்டு தன் மொபைலை எடுத்து பேசினான். 

“சொல்லு பாவ்னா…”

“அவினாஷ் உங்களை தேடி இரண்டு பேர் வந்திருக்காங்க, நீங்க வர சொன்னீங்களா…? வெயிட் பண்ண சொல்லவா…? இல்லை அப்புறம் வர சொல்லட்டுமா? 

“என்னை தேடி இரண்டு பேரா? நான் அப்படி யாரையும் வர சொல்லவே இல்லையே. நீ அவங்களை அனுப்பிட்டு கதவை மூடிட்டு ஜாக்கிரதையா இரு…” என்று கைபேசியை அணைத்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டவன் மீண்டும் நண்பனுடன் பேசியபடி ஓட்டத்தை தொடர்ந்தான். 

“இன்று ஆபிஸ் முடிந்ததும், பாவ்னாவை ஆபிசிலிருந்து பிக் அப் செய்துக்கிட்டு அப்படியே புதிதாக ரிலீஸ் ஆகியிருக்கிற விக்ரம் படத்திற்க்கு போயிட்டு வெளியேவே இரவு உணவை முடித்துக்கொண்டு வந்துவிட வேண்டும். விக்ரம் டீசர் வெளியான நாளிலிருந்து படம் ரிலீஸானதும் பார்க்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறாள். பாவம் ஆபிஸ் விட்டால் வீடு, வீட்டு விட்டால் ஆபிஸ்ன்னு ரொம்ப மெஷின் தனமா ஓடிக்கிட்டு இருக்காள்…”

அவினாஷின் பேச்சிற்கு தீபேஷ் கேலியாக சிரிக்க, அவினாஷும் சிரித்தான் வெட்கத்துடன். 

“இன்னும் கூட உங்க தேனிலவு முடியலை போலிருக்கே…? 

தீபேஷின் கேலிக்கு மீண்டும் சிரித்துவிட்டு, “ஒரு நாள் சிஸ்டரை வீட்டுக்கு அழைச்சிட்டு வா தீபேஷ், உன் பாபி கூட கேட்டுக்கிட்டே இருந்தாள்…”

“நிச்சயம் அழைச்சிட்டு வர்றேன், ஆனால் இந்த மாசம் முடியாது. அடுத்த மாசம் வர்றோம்…” 

இருவரும் பார்க்கின் கேட்டை நெருங்கிவிட, சற்று தங்களை அசுவாசப்படுத்திக்கொண்டு அவரவர் பைக்கை நெருங்கினார்கள். 

“சரிடா ஆபிஸில் பார்க்கலாம். படம் பார்த்துவிட்டு வந்து சொல், டிக்கெட் காசு செரிக்குமா, செரிக்காதான்னு…”என்று சிரித்தபடி தீபேஷ் பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்ப, அவினாஷும் புன்னகையுடன் பைக்கில் வீட்டை நோக்கி பறந்தான். 

இருவரும் பைக்கை எடுத்துக்கொண்டு பார்க்கில் வந்து சந்தித்து அதன் பிறகு ஒன்றாக பேசியபடி ஓடுவார்கள். இன்றும் அதே போல ஓட்டத்தை முடித்துக்கொண்டு வீட்டிற்கு சென்ற அவினாஷுக்கு அன்றைய நாள் ஒரு பெரிய துக்க நாளாக அமையுமென்று அவன் எதிர்பார்க்கவில்லை. 

காலை காற்று இதமாக முகத்தில் மோத, வியர்த்திருந்த தேகத்திற்கு சுகமாக இருந்தது.

அவினாஷுக்கு ஆறு மாதம் முன்பு தான் திருமணமாகி இருந்தது. அவன் மனைவி பாவ்னா வட நாட்டை சேர்ந்தவள். அவனும் வட நாட்டை சேர்ந்தவன் தான் என்றாலும் அவன் படித்து வளர்ந்ததெல்லாம் சென்னை தான். சொந்தக்காரர்கள் வீட்டிற்க்கோ, விழாக்களுக்கோ செல்லும் பொழுது பாவ்னாவை சந்தித்து முதல் பார்வையிலேயே பிடித்து போய் பெற்றவர்களின் சம்மதத்துடன் திருமணமும் செய்துக்கொண்டான்.

திருமணமானதிலிருந்து தாய், தந்தையுடன் வசித்து வந்தவன் சமீபத்தில் தான் காதல் மனைவியுடன் தனிக்குடித்தனம் வந்திருந்தான். இருவரும் வாழ்க்கையை எவ்வித இடையூறும் இல்லாமல் சந்தோஷமாக வாழ வேண்டுமென்பதற்காக குழந்தை பற்றிய முடிவை தள்ளிப்போட்டிருந்தார்கள். 

பாவ்னாவை நினைத்தாலே அவன் தேகத்தில் ஓர் இனிய சிலிர்ப்பு ஓடும். மனைவியை பற்றிய சந்தோஷ கனவுகளுடன் வீடு அமைந்திருக்கும் தெருவில் பைக்கை திருப்பியவனின் புருவங்கள் நெரிந்தது புரியாமல்.

தெருமுழுக்க மனித தலைகளும், போலீஸும், போலீஸ் ஜீப்பும் நிறைந்திருக்க, ஒரு கான்ஸ்டபிள் அவனை வழி மறித்தார். 

“உள்ளே போக முடியாது ஸார், நீங்க வேறு வழியில் போங்க…” என கையை திருப்பி மணியை பார்த்தான்.

“என்ன பிரச்சினை ? யார் வீட்டிலாவது திருட்டு போய்டுச்சா ஸார்… ? 

“இல்லை, ஒரு பெண்ணை கொலை செய்துட்டாங்க… “

“என்னது கொலையா ? எந்த வீட்டில் ஸார் ? அதிர்ந்து போய் கேட்டான் .

“போங்க ஸார், இன்னும் எத்தனை பேருக்கு தான் பதில் சொல்றது…”என்று அலுத்துக்கொள்ள அவனுக்குமே கான்ஸ்டபிளின் மனநிலை புரிந்தது.

பாவம் இதுவரை எத்தனை பேருக்கு பதில் சொல்லியிருப்பாரோ, ஆனால் யார் வீட்டில் கொலை விழுந்திருக்கும். அவர்கள் இங்கு குடி வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகியிருக்கும். அக்கம் பக்கம் ஒரு சிலரை தவிர அதிகம் யாரையும் தெரியாது.  அவனுக்கு தெரிந்த வரை பக்கத்து வீட்டு பத்பநாபன் வீட்டில் இரண்டுமே ஆண் பிள்ளைகள், அதுவும் சிறிய பிள்ளைகள். இன்னொருத்தர் ஷங்கர். அவனுக்கு திருமணமாகி ஒரு வருடம் தான் ஆகிறது. ஷங்கர் வீட்டு பக்கத்தில் இருக்கிற சபரிநாதனுக்கு இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் பிள்ளை. மகன் அமெரிக்காவில் வேலை செய்கிறான். மகள்களில் ஒருத்தி கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கிறாள். இன்னொருத்தி ஐ.டி கம்பெனியில் வேலை செய்கிறாள்.  

போன வாரம் கூட அந்த பெண்ணிடம் ரோட்டோர ரோமியோ ஒருத்தன் வம்பு செய்து அவளிடம் செருப்படி வாங்கிக்கொண்டு சென்றான். ஒருவேளை அவளை தான் கொலை செய்துட்டானோ அந்த ரோமியோ என்று நினைக்கும் பொழுதே சபரிநாதனுக்காக மனது வருத்தப்பட்டது. ஆனால் அடுத்த நிமிடமே தன்னுணர்வு வந்தது.

‘ஹையோ ஆபிஸ் போகணுமே, இந்த தெருவுக்குள் செல்ல வேறு வழி பாதையும் இல்லை. இந்த ஒரே வழி பாதை மட்டும் தான்.  ஏற்கனவே நேரமாயிடிச்சி, இனி போய் குளிச்சி, சாப்பிட்டு ஆபிஸ்க்கு கிளம்பி பாவ்னாவை அவள் ஆபிசில் இறக்கிவிட்டு, நானும் ஆபிசில் போய் இறங்க எப்படியும் அரைமணி நேரமாவது தாமதாயிடும். 

ஹ்ம்ம் ஈவ்னிங் படம் போக ஒரு மணி நேரம் அனுமதி கேட்கலாம்ன்னு நினைச்சா…ப்ச் இன்றைக்கு பார்த்தா இப்படி நடக்கணும் என்று அலுத்துக்கொண்டவனாக அங்கிருந்த டீக்கடையில் பைக்கை நிறுத்தி பூட்டி, டீக்கடைக்காரரிடம் சொல்லிவிட்டு தெருவுக்குள் நுழைந்து நடக்க ஆரம்பித்தவனுக்கு ஏதோ நெருடியது.

அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் தெருவில் ஆங்காங்கே கும்பல் கும்பலாக நின்று பேசிக்கொண்டிருக்க அந்த கூட்டத்தில் தன் மனைவியை காணவில்லை. வெளியே இவ்வளவு அநர்த்தனம் நடக்கும் பொழுது அவள் உள்ளே வேலையா இருக்கிறாளா… ?

வீட்டை நெருங்க நெருங்க அவினாஷின் இதயம் முரண்டியது. வீட்டின் கேட் பப்பரக்கா என்று திறந்து கிடக்க, வெளியே இரண்டு போலீஸும், உள்ளிருந்து ஒரு போலீஸும் வர அவனையும் அறியாமல் கால்கள் தடதடக்க, நெஞ்சாங்கூடு காலியான மாதிரி உணர்வு உண்டானது. 

ஹையோ பாவ்னாவுக்கு ஏதாவது என்னும் பொழுதே கான்ஸ்டபிள் சொன்ன ஒரு பெண்ணை கொலை செய்துட்டாங்க என்ற வாக்கியம் அவன் நினைவில் கரையேற உடம்பே பயத்தில் ஆடியது. இரும்பு குண்டை காலில் கட்டிய மாதிரி நடக்க முடியாமல் தடுமாறிய கால்களை இழுத்து பிடித்து ஓடி வந்தவனை பக்கத்து வீட்டு பத்பநாதன் வேகமாக நெருங்கினார். 

“அவினாஷ் எங்கே போயிருந்தீங்க, சீக்கிரம் உள்ளே போங்க…”என்னும் பொழுதே மற்றவர்களும் அவனருகில் நெருங்கி ஆளாளுக்கு அவனிடம் பேச எதுவுமே அவன் கருத்தில் பதியவில்லை. வியர்த்து விறுவிறுக்க பதட்டத்துடன் வீட்டினுள் செல்ல முற்பட காவலுக்கு நின்றிருந்த கான்ஸ்டபிளால் நிறுத்தப்பட்டான்.

“வெளியேய் போப்பா, உள்ளே பாடி இருக்கு, செத்து போன பொண்ணை வேடிக்கை பார்க்க எவ்வளவு ஆர்வம், வக்கிரம் புடிச்ச மனுஷங்க…” என்றார் எரிச்சலுடன்.

“சார்…நான்…நான் …”என்றானே தவிர விஷயத்தை சொல்ல முடியாமல் தொண்டை அடைத்தது அழுகையிலும், அதிர்ச்சியிலும்.

“சார் இவர் தான் கொலை செய்யப்பட்ட பாவ்னாவின் கணவர். உள்ளே அனுப்புங்க சார் பாவம்…” என்று பத்பநாபன் முடிப்பதற்குள் கான்ஸ்டபிள் அவனை விசாரிக்க ஆரம்பித்தார்.

“உங்க பெயர் என்ன ? இவ்வளவு நேரம் எங்கே போனீங்க… ? உங்களுக்காக தான் எஸ்.ஐ காத்துட்டு இருக்கார்…”

அவினாஷை அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல பரபரவென்று வேலை செய்துக்கொண்டிருந்த பாரன்சிக் ஆட்களையும், கொலையான பாவ்னாவையும் பார்த்தபடி தனபால் யோசித்துக்கொண்டிருந்தார். மூளை தான் யோசித்ததே தவிர அவரின் கழுகு விழிகள் அந்த இடத்தை இன்ச் இஞ்சாக அலசியது ஏதாவது தடயம் கிடைக்குமா என. 

அவரின் சர்விஸில் நிறைய கொலைகள், தற்கொலைகளை பார்த்திருக்கிறார். ஆனால் இப்படியொரு கொடூரமான கொலையை பார்த்ததே இல்லையென்று தான் சொல்லவேண்டும். கொலையாளியின் மனதில் எத்தனை குரூரம் இருந்திருந்தால் இப்படி செய்திருக்க முடியும்? நிச்சயம் அவன் ஒரு மனிதனாக இருக்க முடியாது, அரக்க மனம் கொண்டவனாக தான் இருக்கவேண்டும். 

இந்த பெண்ணும் அப்படி என்ன செய்திருப்பாள் அவனுக்கு? பாவம் சின்ன பெண், சமீபத்தில் தான் திருமணமாகி இருக்கு. பார்க்கவும் அழகாக இருக்கிறாள். இவளுக்கு இப்படியொரு கொடூரம். அல்பாயுசில் அகால மரணம் அடையணும்னு தலையில் எழுதி இருக்கு. ஹ்ம்ம் விதியை வெல்ல யாரால் முடியும்…? என்று அந்த பெண்ணிற்காக பரிதாபப்பட்டாலும் இந்த கேஸ் எந்தளவு ஆட்டம் காட்ட போகிறதோ என்ற கவலையும் எழாமல் இல்லை.  

கான்ஸ்டபிள் கலவர முகத்துடன் ஒருத்தனை அழைத்துக்கொண்டு வர வேகமாக அவர்களை நெருங்கினார்.

“யாருய்யா இந்தாளு, எதுக்கு பப்ளிக்கை அழைச்சிட்டு உள்ளே வர்றீங்க…? 

“சார் இவர் தான் இறந்து போன பெண்ணோட கணவர், பெயர் அவினாஷ்…” என அப்பொழுது தான் எஸ் ஐ அவனை சரியாக கவனித்தார். 

டிவி டேபிளின் மேல் இறந்து போன பெண்ணுடன் நெருக்கமாக சிரித்தபடி நின்றுக்கொண்டிருந்த இளைஞன். அவரின் பார்வை அவனை எடை போட அவினாஷின் பார்வையோ ஹாலில் கழுத்து வெட்டப்பட்டு முண்டமாக நாற்காலியில் அமர்ந்த நிலையில் இறந்து கிடந்த மனைவியின் மேல் விழ மூளையில் மின்னல் தாக்கியது போல அதிர்ந்து வேரறுந்த மரம் போல பேச்சு மூச்சற்று சரிந்தான். 

“சார்…சார்…” என்ற கான்ஸ்டபிளின் குரலில் பாடியிலிருந்து விழிகளை விலக்கி திரும்பிய தனபால் மயங்கி

கிடந்தவனின் அருகில் மண்டியிட்டு அமர்ந்தார். 

“யோவ் போய் தண்ணீர் கொண்டு வா…” என்று ஏவிவிட்டு, அவன் கன்னத்தில் தட்டி அவனை எழுப்ப முயற்சித்துக்கொண்டிருந்தார். 

“ச்சே ஏற்கனவே ஒரு தடயம் கூட கிடைக்கலை. இதில் இது வேற…”என்று அலுத்துக்கொண்டவராக கான்ஸ்டபிள் கொண்டு வந்து கொடுத்த தண்ணீரை அவன் முகத்தில் தெளித்து உலுக்கினார்.