MNMN FINAL 2

MNMN final part 2
நிவேத்யாவை பார்த்ததும், “என்ன நிவி நாங்க பேசினதை கேட்டுட்டு தானே இருந்த, நீ விருப்பப்பட்டது போல சிவா இங்க வந்து வேலை செய்ய முடிவெடுத்துட்டான். இப்போ உனக்கு சந்தோஷம் தானே, உங்க கல்யாணத்தை முடிவு செஞ்சுடலாமா?” என்று ஜெயச்சந்திரன் அவளிடம் கேட்க,
“இல்லை சித்தப்பா, அவங்க அந்த வேலையை விட வேண்டாம், அவங்க ஆசைப்பட்ட கம்பெனியிலேயே அவங்க வேலைக்கு போகட்டும், அவங்க கேட்ட மாதிரி டைம் எடுத்தே இங்க வரட்டும், எனக்கு அதில் எந்த பிரச்சனையுமில்லை.” என்று அவள் பதில் கூறினாள்.
“என்ன நிவி, சிவா உனக்காக இங்க வரேன்னு சொல்லிட்டான். இப்போ இப்படி பேசற, உன்னோட மனசுல என்ன இருக்கு, சிவா இங்க வரவேண்டாம்னா அப்போ நீ அங்க போறீயா? இல்லை இப்போ இந்த கல்யாண பேச்சை எடுக்க வேண்டாம்னு சொல்றீயா?” என்று ஜெயச்சந்திரன் புரியாமல் கேட்க,
“அவங்க என்கிட்ட டைம் கேட்டாங்க, அதுப்படி அவங்க என்ன முடிவெடுக்கிறாங்களோ எடுக்கட்டும், கல்யாண சம்பந்தமா நீங்க என்ன முடிவெடுக்கறீங்களோ எடுங்க, இதில் எனக்கு எந்த பிரச்சனையுமில்லை.” என்று அவள் சொல்லிவிட்டு போகவும்,
“இப்போ நிவி என்னத்தான் சொல்றா ண்ணா,” என்று ஜெயச்சந்திரன் புரியாமல் கேட்டார்.
“இப்போ உடனே கல்யாணம் வச்சாலும் அவளுக்கு சம்மதம்னு சொல்றா, அவளோட பிடிவாதத்தை கொஞ்சம் விட்டு கொடுத்துட்டா, சிவா அவளிடம் என்ன சொன்னானோ அதுபடி நடந்துக்கட்டும்னு சொல்றா,” என்று ரவிச்சந்திரன் விளக்கமாக சொல்ல,
“அப்போ கல்யாணமாகி நிவி நியூஜெர்ஸிக்கு போக தயாரா இருக்காளா?” என்று ஜெயச்சந்திரன் கேட்கவும்,
“அது தெரியல, அது அவங்க பேசி முடிவு செஞ்சுப்பாங்க, நாம அவங்க என்ன முடிவெடுத்தாலும் ஏத்துக்கணும், நம்ம முடிவை நாம அவங்களிடம் திணிக்கக் கூடாது,” என்று ரவிச்சந்திரன் கூற, ஜெயச்சந்திரன் அதற்கு சம்மதமாக தலையசைத்தார்.
நிவேத்யாவின் முடிவு வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிய வரவும், வழக்கம்போல் ஆத்யா மூலம் அது சிவாதித்யன் காதுக்கு போனது. உடனே அவன் நிவேத்யாவை வீடியோ காலில் அழைக்க, அவள் அந்த அழைப்பை ஏற்றதும்,
“ஆத்யா சொன்னது உண்மையா?” என்று எடுத்ததுமே கேட்டான்.
“அதுக்குள்ள ஆத்யா சொல்லிட்டாளா?” என்று நிவேத்யா அவனை பார்த்துக் கேட்க,
“ம்ம் சொன்னா, ஆனா நீ ஏன் எதுவும் சொல்லல,” என்று அவன் பதிலுக்கு கேட்டான்.
“நீங்க கூடத்தான் என்கிட்ட எதுவும் சொல்லல,” என்று அவள் கூறவும்,
“சொல்லக் கூடாதுன்னு இல்ல, இந்தியால எந்த கம்பெனி பெஸ்ட்னு பார்த்து தான் அப்ளை செய்யணும், முக்கியமா சென்னையில் பார்க்கணும், ஒருவேளை சென்னையில் இருக்க கம்பெனில எனக்கு அப்ளை செய்ய பிடிக்கலன்னா நீ வேற ஊருக்கு வருவீயான்னு தெரியல, அதெல்லாம் முடிவு செஞ்சுட்டு உன்னிடம் சொல்லலாம்னு இருந்தேன்.
இப்படி ஒரு முடிவை எடுத்ததும் முதலில் அப்பா, அம்மாவிடம் சொல்லணும் இல்லையா? அதான் சொன்னேன். அது அப்படியே பரவி உன்னோட காதுக்கு வந்துடுச்சு, விஷயம் தெரிஞ்சதும் நீயே போன் செய்வேன்னு நினைச்சேன். ஆனா நீ வேற மாதிரி ஷாக் கொடுக்கிற, ஆனா ஏன்? நான்தான் முடிவு எடுத்துட்டேனே, அப்புறம் ஏன் நீ இப்படி சொல்ற?” என்று அவன் கேட்டான்.
“நானும் தான் முடிவு எடுத்துட்டேன். என்னோட முடிவை நான் சொன்னேன்.” என்று அவள் பதில் கூற,
“அதான் எதுக்கு? அதெல்லாம் தேவையில்லை. நான்தான் அங்க வர சம்மதிச்சிட்டேனே, அதுக்கு நீ சந்தோஷப்படுவ, நேர்ல இல்லன்னாலும் இப்படி வீடியோ காலிலாவது ரெண்டு கிஸ் கிடைக்கும்னு எதிர்பார்த்தேன்.” என்று அவன் சொல்லவும்,
“ம்ம் ஆசை தான்,” என்றவள்,
“நீங்க எனக்காக இறங்கி வந்த மாதிரி நான் உங்களுக்காக இறங்கி வரக் கூடாதா?” என்று கேட்டாள்.
“ஆனா அதுக்கு அவசியமில்லை. நான் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவை எடுத்தேன். எப்படியோ ரெண்டு மூனு வருஷத்தில் நானே சொந்த கம்பெனி ஆரம்பிக்கப் போறேன். அப்போ அந்த வேலையை விட்டு தானே ஆகணும், அதனால இப்போ அந்த வேலைக்கு போகாததால எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அதனால நான் அங்க வருவது தான் சரி.” என்று அவன் கூற,
“இப்போ நீங்க இங்க வர வேண்டாம்னு நான் எப்போ சொன்னேன். இங்க வந்து நீங்க வேலைக்கு சேருவதற்கு பதிலா, நீங்க டைம் எடுத்து இங்க வந்து உங்க சொந்த கம்பெனியை ஆரம்பிங்க, உங்க திறமை நம்ம நாட்டுக்கு பயன்படட்டுமே, அதனால நம்ம நாட்டுக்கு பெருமை சேரட்டும், அதுவரை நீங்க வேலை செய்ய விரும்பின கம்பெனியிலேயே வேலை பாருங்க, அதில் எனக்கு எந்த பிரச்சனையுமில்லை.” என்றாள்.
“அப்போ அதுவரைக்கும் நம்ம கல்யாணம் நடக்காதா?” என்று அவன் குழப்பத்தோடு கேட்க,
“அப்போ நடக்க வேண்டாமா?” என்று அவள் பதிலுக்கு கேட்டாள்.
“அதில்ல, நீ கல்யாண விஷயத்தில் என்ன முடிவில் இருக்கன்னு தெரியலையே, இங்கேயும் நீ வரமாட்டேன்னு சொல்லுவ, நானும் உடனே வரக் கூடாதுன்னா அப்போ,” என்று அவன் புரியாமல் கேட்க,
“கல்யாண விஷயமா பெரியவங்களை முடிவெடுக்க சொல்லிட்டேன். அவங்க எப்போ முடிவு செய்றாங்களோ எனக்கு சம்மதம் தான்,” என்றாள் அவள்,
“அப்போ உடனே நிச்சயம் செய்தா என்ன செய்வ?” என்ற அவனது கேள்விக்கு,
“கல்யாணம் முடிஞ்சு நான் அங்க வரேன். அதைதான் என்னோட வீட்டிலும் விரும்புவாங்க,” என்ற அவளின் பதிலை கேட்டு,
“வேண்டாம், உனக்கு விருப்பமில்லாத விஷயத்தை எனக்காக ஒத்துக்க வேண்டாம், பெரியவங்க எப்போ கல்யாணம் ஏற்பாடு செய்றாங்களோ அப்பவே நம்ம கல்யாணம் நடக்கட்டும், அதுக்குப்பிறகு நான் அங்க நிரந்தரமா வரவரைக்கும் அம்மாவை அங்க வீடு எடுத்து தங்க வைக்கிறேன். அம்மாவோட நீ இருந்தா அப்போ உன்னோட சொந்தக்காரங்க ஒன்னும் கேட்க மாட்டாங்கல்ல, உன்னோட வீட்டிலும் அவங்களுக்கு இது பெரிய விஷயமா தெரியாது. நானும் கிடைக்கற ஃப்ரீ டைம்ல அங்க உடனே வந்துடுவேன். உன்னை பார்க்காம ரொம்ப நாள் இருப்பதெல்லாம் கஷ்டம்,” என்றான் அவன்.
அதைக்கேட்டு நெகிழ்ந்தவள், “எனக்காக நீங்க இவ்வளவு யோசிக்கும்போது, நான் என்னோட பிடிவாதத்தில் இறங்கி வராம இருப்பது நல்லா இருக்காது. நீங்களும் தான் என்னை சந்திக்கிறதுக்கு முன்ன வரை இந்தியாவில் வந்து பத்து நாள் தங்கவே யோசிச்சீங்க, ஆனா இப்போ எனக்காக இப்படி ஒரு முடிவுக்கு வரலையா? அப்போ நான் இப்படி ஒரு முடிவுக்கு வருவதில் என்ன தப்பு?
அங்க இருப்பவங்களும் மனுஷங்க தானே, அதில்லாம நீங்க என்னோட பக்கத்திலேயே இருக்க போறீங்க, பெரியவங்களும் நாம ஒன்னா ஒரே இடத்தில் இருக்கணும்னு ஆசைப்படுவாங்க, அதனால ரெண்டு மூனு வருஷத்துக்கு நான் அங்க வந்து இருக்கேன்.
நான் வேலை செஞ்சுட்டு இருந்த கம்பெனியிலேயே ஆன்சைட்க்கு போக சொல்லி கேட்டுட்டு இருந்தாங்க, அதான் அங்க வேலையை விட்டு நிக்க இருந்தேன். ரிசைன் லெட்டரும் கொடுத்துட்டேன். ஆனா அவங்க இன்னும் அதை ப்ரொசீட் செய்யல, கொஞ்சம் யோசிச்சு முடிவெடுக்க சொன்னாங்க, அந்த ஆன்சைட் வேலை அங்க கிடைக்குமான்னு பார்க்கிறேன். இல்லை அங்கேயே ஏதாச்சும் வேலை தேடிக்கலாம்,
நீங்க சொன்னமாதிரி கொஞ்ச வருஷம் ரெண்டுப்பேரும் அங்க வேலை பார்ப்போம், அப்புறம் உங்க பிஸ்னஸை இங்க வந்து ஆரம்பிக்கலாம், கண்டிப்பா நானும் உங்களுக்கு உங்க பிஸ்னஸ்ல சப்போர்ட்டா இருப்பேன். எனக்கும் ஃப்யூசர்ல சில ஐடியாஸ் இருக்கு, கண்டிப்பா அதை இங்க தான் நான் செய்வேன்.” என்று அவள் தீர்மானமாக கூற,
“கண்டிப்பா உன்னோட ஃப்யூசர் பிளானுக்கு நான் சப்போர்ட்டா இருப்பேன்.” என்றவன்,
“ஒருவேளை நான் சொன்ன மாதிரி என்னால நடந்துக்க முடியாம போச்சுன்னா என்ன செய்வ?” என்று கேட்கவும்,
“கண்டிப்பா எனக்காக நீங்க இங்க வர முயற்சி செய்வீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு, அப்படி அது நடக்க தாமதமானாலும் அது நீங்க திட்டமிட்டு செய்ததா இருக்காதுன்னு என்னால புரிஞ்சிக்க முடியும்,” என்று அவள் பதில் கூறினாள்.
அதில் நெகிழ்ந்தவனாக, “எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல, என் பக்கமும் நீ யோசிச்சு முடிவெடுத்ததை நினைச்சு நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? கண்டிப்பா என்மேல நீ வச்ச நம்பிக்கைக்கு, நான் சொன்ன ப்ராமிஸை காப்பாத்துவேன். அதை எவ்வளவு சீக்கிரம் ஆரம்பிக்கணுமோ, அவ்வளவு சீக்கிரம் ஆரம்பிப்பேன்.”என்றவன்,
“எனக்கு உடனே உன்னை பார்க்கணும் போல இருக்கு, அடுத்து எந்த ஃப்ளைட் கிடைக்குதோ உடனே அதில் கிளம்பி வரேன்.” என்று குதூகலிக்க,
“வந்தீங்க அப்புறம் நான் என்ன செய்வேன்னே தெரியாது. கூட கொஞ்சம் பேசி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வராம, அப்படியே கோபப்பட்டு போனீங்கல்ல, நம்ம கல்யாணம் முடிவாகும் வரை நீங்க இங்க வரக் கூடாது. வீடியோ காலிலேயே பேசக் கூடாதுன்னு தான் நினைச்சேன். ஆனா இந்த விஷயம் முக்கியம் என்பதால தான் பேசினேன். இல்லன்னா எனக்கு உங்கக்கிட்ட பேசணும்னு ஆசை இல்லை.” என்றாள் கோபமாக,
“நான் சொல்ல வருவதை நீ புரிஞ்சிக்கலையே என்கிற கோபம், அதுக்குப்பிறகு அங்க இருக்க ஒருமாதிரி கஷ்டமா இருந்துச்சு, நீயே கொஞ்ச நேரத்துக்கு முன்ன சொன்னல்ல, பத்து நாள் தான் இருப்பேன்னு சொல்லிட்டு இருந்தவன், உன்னால தான் ஒருமாசம் இருக்க சம்மதிச்சேன். விஷயம் பெரியவங்க வரை தெரிஞ்சு போய் அங்க இருப்பது எனக்கு ஒருமாதிரி சங்கடமா இருந்துச்சு,
அதில்லாம அங்க இருந்தா மத்தவங்க கட்டாயத்தில் ஏதாவது முடிவெடுக்கிற மாதிரி ஆகிடும், அப்புறம் அது நம்ம எதிர்காலத்தை தான் பாதிக்கும், இதுவே இப்போ நிதானமா யோசிச்சு முடிவெடுக்கும்போது, இப்போ நம்ம முடிவு நமக்கே ஒரு திருப்தியை கொடுக்குது இல்லையா? அதான் உடனே கிளம்பி இங்க வந்தேன்.” என்று அவன் நிலையை விளக்க,
அது அவளுக்கு புரிந்தாலும், “ம்ம் ஆனாலும் நீங்க செஞ்சதை என்னால ஒத்துக்க முடியாது. நீங்க இங்க என்னை பார்க்க வந்தா, நான் வேற எங்கேயாச்சும் கிளம்பி போயிடுவேன்.” என்று மிரட்டினாள்.
“இப்படி சொன்னா எப்படி?” என்று நொந்து கொண்டவன்,
“அப்போ சீக்கிரமா நம்ம கல்யாணத்தை முடிவு செய்ய சொல்லி அப்பாவிடம் பேசறேன்.” என்று அவன் கூற,
“அப்படியா? பேசுங்க, எனக்கு வேலை கிடைக்கணும், அதனால 6 மாசத்துக்கு கல்யாணத்தை தள்ளி போட சொல்லி நான் என்னோட அப்பாவிடம் சொல்லுவேன்.” என்று அவள் கூறினாள்.
“அவளுக்கு எப்போ வேலை கிடைக்குதோ அப்போ இங்க வரட்டும் அங்கிள். அதுவரைக்கும் கல்யாணத்தை தள்ளி போட வேண்டாம் அப்படின்னு நான் அங்கிள் கிட்ட பேசுவேன். ஆல்ரெடி நீ இங்க வந்தே ஆகணும்னு கட்டாயம் இல்லைன்னு தானே சொல்லிட்டு இருக்கேன்.” என்று அவன் சொல்ல,
“ஓ அப்படியா? அப்போ சரி, கல்யாணம் நீங்க கேட்டது போல சீக்கிரம் நடக்கட்டும், ஆனா எனக்கு வேலை கிடைச்சு அங்க வர வரைக்கும் நீங்க சிங்கிளா தான் இருக்கணும் பரவாயில்லையா?” என்று அவள் கேட்கவும்,
அவள் சொன்னதின் அர்த்தத்தை புரிந்து, “எனக்கு உன்னை கல்யாணம் செய்துக்கணும் அதுபோதும்,” என்று மனதார கூறியவன்,
“ஆனா உன்னை போல எனக்கு கல் மனசெல்லாம் இல்லை. உனக்கு வேலை கிடைக்கறவரை உன்னை சிங்கிளா எல்லாம் இருக்க விடமாட்டேன். சீக்கிரமே நானே உனக்கு ஒரு நல்ல வேலை தேடி தருவேன்.” என்றான்.
“ஓ அதையும் தான் பார்ப்போம், ஆனா இப்போ நீங்க கிளம்பி வர கூடாது. அப்படி மீறி வந்தா நான் உங்களை பார்க்கவும் மாட்டேன். பேசவும் மாட்டேன்.” என்று உறுதியாக அவள் கூற,
“ப்ளீஸ் நிவி கொஞ்சம் இரக்கம் காட்டு,” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே அவள் அழைப்பை அணைத்திருந்தாள்.
“ராட்சசி, கல் மனசுக்காரி,” என்று வாய்விட்டு அவளை திட்டியவன்,
“இப்போ வரக் கூடாதுன்னு சொல்லிட்டாளே, இப்போ என்ன செய்றது?” என்று புலம்பியவனோ,
“அவ சொன்னா கேட்கணுமா? நான் உடனே கிளம்புவேன்” என்று சொல்லி கொண்டவன், உடனே அடுத்து விமானம் எப்போது கிளம்புகிறது என்று பார்க்க ஆரம்பித்தான்.
அது தெரியாமல் ஜெயச்சந்திரன் அலைபேசியில் சொன்ன விஷயத்தை கேட்டு வனிதாவோ திவாகரனிடம், “நிவியும் பக்குவப்பட்ட பொண்ணுன்னு காண்பிச்சிட்டா பார்த்தீங்களா? இப்போ ரெண்டுப்பேருமே ஒருத்தருக்கொருத்தர் விட்டு கொடுக்க தயாராகிட்டாங்க, அடுத்து அவங்களுக்குள்ள பேசி அவங்களா ஒரு முடிவுக்கு வரட்டும், அது என்ன முடிவானாலும் அதை நாம அப்படியே ஏத்துக்கணும்,
இதுக்கு மேல கல்யாண விஷயத்தை தள்ளி போட வேண்டாம், ரெண்டு மூனு மாசம் போகட்டும்னு ஒரு நல்ல நாளா பார்த்து கல்யாண தேதியை முடிவு செய்வோம், அதுக்கு முந்தின நாளே நிச்சயத்தை வச்சுப்போம், இதைப்பத்தி ஜெயச்சந்திரன் அண்ணனிடமும் நிவியோட அப்பாவிடம் பேசுங்க,” என்று சொல்லி கொண்டிருக்க,
“இரு வனி, சிவா என்ன நினைக்கிறான்னு தெரியாம அவசரப்பட வேண்டாம், முதலில் அவனிடம் கேட்போம்,” என்று திவாகரன் மனைவிக்கு பதில் சொல்லி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு சிவாதித்யன் வரவும், “சிவா இப்போ தான் ஜெயச்சந்திரன் விஷயத்தை சொன்னான். உனக்கும் விஷயம் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். நீ நிவியிடம் இதுபத்தி பேசினீயா? உங்க கல்யாண தேதி குறிக்கலாம்னு இருக்கோம், நீ என்ன நினைக்கிற?” என்று திவாகரன் கேட்கவும்,
“நாம இப்போ தான் அங்க இருந்து கிளம்பி வந்தோம், உடனே திரும்ப கிளம்பி போக முடியுமா? அதனால நிச்சயம், கல்யாணம் எல்லாம் ரெண்டு மூனு மாசம் கழிச்சு ஒன்னா வச்சுக்கலாம்னு நான் அப்பாவிடம் இப்போ தான் சொல்லிட்டு இருந்தேன். உனக்கு அது ஓகே தானே,” என்று வனிதா கூற,
“பெரியவங்க நீங்க பேசி அதை முடிவு செஞ்சுக்கோங்க ப்பா, எனக்கும் சரி நிவிக்கும் சரி, நீங்கல்லாம் என்ன முடிவு செய்தாலும் எங்களுக்கு சம்மதம் தான், ஆனா நானும் நிவியும் பேசி வச்சப்படி நான் அந்த வேலைக்கே போகலாம்னு இருக்கேன். அது பத்து பதினைந்து நாளில் அந்த வேலையில் சேருவது மாதிரி இருக்கும், சேர்ந்த உடனே லீவ் போட முடியாது. நிவிக்கும் கொஞ்ச வருஷம் இங்க வந்து இருக்கும் எண்ணம் இருக்கு, அதுக்கான ஏற்பாடுகளை அவ செய்யணும், நீங்க சொன்னதைவிட இன்னும் ரெண்டு மாசம் கூடவும் ஆகலாம், அதுக்கேத்த மாதிரி கல்யாண தேதியை முடிவு செய்ங்க,
ஆனா அதுவரைக்கும் எல்லாம் என்னால நிவியை பார்க்காம இருக்க முடியாது. நான் இந்தியாக்கு டிக்கெட் புக் செய்துட்டேன். உடனே இந்தியா கிளம்பறேன்.” என்றான் அவன்.
“அது நல்லா இருக்குமா சிவா, முன்னன்னா சாகி கல்யாணம்னு போனோம், இப்போ நீங்க காதலிக்கிற விஷயம் எல்லோருக்கும் தெரிஞ்ச பிறகு இப்படி அங்க போய் தங்கினா அது நல்லா இருக்குமா?” என்று வனிதா கேட்க,
“ப்ளீஸ் ம்மா, இப்படி ஏதாவது சொல்லி என்னோட பயணத்துக்கு தடை சொல்லாதீங்க, நாம நினைச்ச மாதிரி எங்கேஜ்மென்ட் முடிச்சிட்டு வந்தா அது வேற, ஆனா நாம எந்த சூழ்நிலையில் வந்தோம்னு உங்களுக்கே தெரியும், அப்படியிருக்க என்னால நிவியை பார்க்காம இருக்க முடியாது. நான் நம்ம ஜெய் அங்கிள் வீட்டுக்கு தானே போறேன். அதனால ஒன்னும் தப்பால்லாம் நினைக்க மாட்டாங்க,” என்று அவன் பதில் கூறினான்.
“ஆமா ஜெய் அண்ணா வீடும் நிவி வீடும் வேற வேற திசையில் இருக்குப் பாரு, சரி முடுவெடுத்துட்ட கேட்கவா போற, ஆனா திரும்ப அவங்களோ நாமளோ சங்கடப்பட்றது போல எதுவும் நடக்க கூடாது.” என்று வனிதா எச்சரிக்கை செய்ய,
“சரிம்மா, அப்படி அங்க தங்குவது நல்லா இருக்காதுன்னா, அங்க இருக்க வரைக்கும் ஏதாச்சும் ஹோட்டலில் கூட தங்கிக்குவேன். அப்புறம் நான் இந்தியாக்கு போகப் போறதை இப்போதைக்கு ஜெயச்சந்திரன் அங்கிளிடம் சொல்லிடாதீங்க, கோமளா ஆன்ட்டி, ஆத்யா, சகி யாருக்குமே இந்த விஷயம் தெரிய வேண்டாம், நான் நிவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கணும்,” என்றவன், அவன் பொருட்களை அடுக்க தயாரானான்.
அவன் சொன்னதற்கு இருவரும் சம்மதம் தெரிவித்ததும், “அவன் சர்ப்ரைஸ் கொடுக்கவா போறான்னு நினைக்கறீங்க, நிவிக்கு எப்படியோ இவன் மேல கோபம் இருக்கும், இவனை அங்க வர வேண்டாம்னு சொல்லியிருப்பா, அதான் அவளுக்கு தெரியாம கிளம்பறான்.” என்று வனிதா சரியாக யூகித்து கூறியவர்,
“சரி சிவா சொன்ன விஷயத்தை மனசுல வச்சு அவங்க கல்யாண விஷயமா நிவி வீட்டில் பேசுங்க,” என்று சொல்லவும், திவாகரனும் அதை ஆமோதித்தார்.
சிவாதித்யன் கிளம்புவதாக சொன்ன இரண்டாம் நாள் விடியற்காலை அவன் சென்னையில் ஜெயச்சந்திரன் வீட்டின் அழைப்பு மணியை அடித்து கொண்டிருந்தான். இந்த நேரத்தில் யாரென்று குழப்பத்தோடு ஜெயச்சந்திரனும் கோமளாவும் வந்து கதவை திறக்க, அங்கு நின்றிருந்தவனை பார்த்து இருவரும் அதிர்ச்சியாகினர்.
“என்ன சிவா, சொல்லாம கொள்ளாம திடீர்னு வந்திருக்க, திவாவும் எதுவும் சொல்லலையே, சொல்லியிருந்தா ஏர்ப்போர்ட்க்கு வந்திருப்பேனே,” என்று ஜெயச்சந்திரன் கேட்க,
“நான்தான் சொல்ல கூடாதுன்னு சொன்னேன் அங்கிள். எல்லாம் நிவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க தான்,” என்றவனை வரவேற்று உபசரித்தனர்.
காலையில் எழுந்து வந்த ஆத்யாவும் சிவாதித்யனை பார்த்து மகிழ்ச்சியானவள், “ஷிவ் எப்போ வந்த, ஏன் நீ வருவதை சொல்லல,” என்று உற்சாக கூச்சலிட,
“அதுவா, நான் இங்க கிளம்பி வருவதை சொல்லியிருந்தா, உன்னோட வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்ட, உடனே போய் அதை நிவியிடம் சொல்லுவ, அதான் எதுவும் சொல்லல,” என்று அவன் சொல்லவும்,
“நீ வந்ததுக்கு நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன். ஆனா நீ என்னை இப்படி சொல்ற இல்ல, ஐயா ரூட் கிளியர் ஆனதும் நாங்கல்லாம் கண்ணுக்கு தெரிவோமா?” என்று ஆத்யா கோபித்து கொண்டாள்.
“சிவா நிவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வந்திருக்கானாம் ஆது, அதுக்கு தான் இப்படி சொல்றான்.” என்று ஜெயச்சந்திரன் கூற,
“இந்த முகத்தை பார்த்தா, இவன் நிவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வந்தா மாதிரி தெரியலையே, வேற என்னவோ இருக்கு, என்ன நிவி உன்னை இங்க வரக் கூடாதுன்னு சொல்லிட்டாளா? அதான் எங்க யாரிடமும் சொல்லாம வந்திருக்கியா?” என்று ஆத்யா கேலியாக கேட்டாள்.
அவள் சரியாக யூகித்ததை பார்த்து சிவாதித்யன் திருதிருவென விழித்தாலும், உடனே சுதாரித்து கொண்டவன், “நிஜமாவே நான் நிவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க தான் வந்தேன். அவளுக்கும் என்னை பார்க்கணும்னு ஆசையா இருக்கு, ஆனா இப்போ தானே இங்க இருந்து போனேன். திரும்ப வர செலவாகும்னு வேண்டாம்னு சொல்லிட்டா, அதான் அவளுக்கு தெரியாம கிளம்பி வந்தேன் போதுமா?” என்று அவன் சமாளிப்பாக பதில் கூற,
“நிஜமாவா, நம்ப முடியலையே,” என்று ஆத்யா சந்தேகமாக கேட்க,
“போதும் டீ, சிவாவை ரொம்ப ஓட்டாத,” என்று கோமளா அவனுக்கு உதவிக்கு வந்தவர்,
“சரி சிவா, நீ குளிச்சுட்டு ஃப்ரஷ் ஆகு, நான் போய் டிஃபன் செய்றேன்.” என்றார்.
அதற்கு சிவாதித்யனோ, “எனக்கு நிவியை பார்க்கணும் ஆன்ட்டி,” என்று சொல்ல,
“மேல எல்லாம் எழுந்துட்டாங்களா தெரியலையே, நீ முதலில் குளிச்சிட்டு வந்து சாப்பிடு, அப்புறம் நிவியை பார்க்கலாம்,” என்று கோமளா அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே,
காலை நடைபயிற்சிக்காக தம்பியை அழைப்பதற்கு, “ஜெய்,” என்று அழைத்தப்படி ரவிச்சந்திரன் அங்கு வந்தவர், சிவாதித்யனை அங்கு பார்த்து வியந்தார்.
சிவாதித்யனும் அவரை கண்டதும் அருகில் வந்தவன், “குட்மார்னிங் அங்கிள், என்னை ஆசீர்வாதம் செய்ங்க,” என்று அவர் காலில் விழ,
“அய்யோ என்னப்பா, இப்படி நினைக்கறப்பல்லாம் காலில் விழுந்துக்கிட்டு, சரி நல்லப்படியா சந்தோஷமா இருக்கணும்,” என்று அவனை ஆசிர்வதித்தவர்,
“திடீர்னு வந்து நிக்கற, யாரும் என்கிட்ட சொல்லலையே,” என்று கேட்டப்படி தன் தம்பியையும் மற்றவரையும் கேள்வியாக பார்த்தார்.
“எங்களுக்கே தெரியாதுன்னா, உண்மையாகவே திடீர்னு வந்து தான் நிக்கறான். கேட்டா நிவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வந்தானாம், உடனே நிவியை பார்க்கணுமாம்,” என்று ஜெயச்சந்திரன் பதில் கூற,
“சரி குளிச்சிட்டு சாப்பிடு ப்பா, அப்புறம் நிவியை பார்க்கலாம்,” என்றவர்,
“அப்புறம் கோமளா, சிவா மேல வந்து சாப்பிடட்டும், நான் ஜானகியிடம் சொல்றேன். சிவா மட்டும் இல்லை, எல்லோருக்கும் இன்னைக்கு மேலேயே விருந்து ரெடி செஞ்சுடலாம்,” என்றார் ரவிச்சந்திரன்.
“அப்போ அக்காக்கு நானும் போய் உதவி செய்றேன்.” என்று கோமளா மேலே செல்ல, நிவேத்யாவை இன்னும் பார்க்க முடியாத சோகத்தில் சிவாதித்யன் தவித்து கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் ஆத்யாவோடு அவன் மேலே செல்ல, ரவிச்சந்திரனோடு ஜானகி, சிபி அனைவரும் அவனை வரவேற்றனர். ஆனாலும் அவன் பார்வை நிவேத்யாவை தேட, அவளோ அங்கு எங்கும் கண்ணில் தென்படவில்லை.
“என்ன ஆது, நான் அவ்வளவுதூரம் டிராவல் செய்து வந்ததே நிவியை பார்க்கத்தான், அவளை கண்ணில் கூட காட்ட மாட்டேங்குறீங்க,” என்று அவன் கேட்க,
“என்னத்தான் நீங்க காதலிச்சாலும், இது வீட்டில் பேசி நடக்கும் கல்யாணம் என்பதால நிவியை அடிக்கடி கண்ணில் காட்ட மாட்டாங்க, நீ வேணும்னா நரேஷ் மாமாவிடம் கேட்டுப்பாரேன். அவரும் இதெல்லாம் அனுபவிச்சிருப்பாரு,” என்று ஆத்யா பதில் கூறவும்,
“ஆனா எனக்கு நிவியோட பேசணுமே,” என்றான் தவிப்போடு,
“சரி சாப்பிடலாமா ப்பா,” என்று ரவிச்சந்திரன் அவனை அழைக்கவும், அவர்கள் பேச்சு அத்துடன் நின்றது.
பின் அவன் சென்று உணவு மேசையில் அமரவும், ரவிச்சந்திரன், ஜெயச்சந்திரன், சிபி மற்றும் ஆத்யாவும் அவனுடன் அமர்ந்தனர். அவன் அந்த வீட்டின் வருங்கால மாப்பிள்ளை என்பதால் காலை உணவையே இனிப்போடு சேர்த்து தடபுடலாக செய்திருந்தனர். அனைத்தையும் எடுத்து வந்து மேசையில் வைக்கும்போதே அதை அவன் மலைப்பாக பார்க்க,
“வாவ் செம்ம, இன்னைக்கு உன் பேரை சொல்லி செம விருந்து தான் போலேயே,” என்று ஆத்யா கூறவும், அவளை கடுப்புடன் முறைத்தான்.
“முதலில் சிவாவுக்கு ஸ்வீட் கொண்டு வந்து பரிமாறுங்க,” என்று ஜெயச்சந்திரன் கூற, கேசரியை கொண்டு வந்து பரிமாறுவரை கூட கவனிக்காமல் அவன் அமர்ந்திருக்க, அடுத்த கரண்டி கேசரியை அவன் தட்டில் வைக்கவும் தான், “அய்யோ போதும்,” என்றப்படி பரிமாறுபவரை கவனிக்க, நிவேத்யா தான் அவனுக்கு இனிப்பை பரிமாறியிருந்தாள்.
அவளை கண்டதே அவனுக்கு அவள் பரிமாறிய கேசரியை விட பலமடங்கு இனிப்பை சாப்பிடது போன்ற உணர்வோடு அவளை காதலாய் பார்க்க, அவளும் அதே பார்வையை அவனுக்கு பரிசளித்தாள்.
“எங்களுக்கெல்லாம் கேசரி கிடையாதா?” என்ற ஆத்யாவின் குரலில் இருவரும் நிகழ் உலகத்திற்கு வர, பின் ஆத்யா மற்றவர்களுக்கு இனிப்பை பரிமாறினாள்.
அடுத்து அவனை அனைவரும் விழுந்து விழுந்து உபசரித்து காலை உணவை முடித்து கொண்டு எழுந்தவன் கைகழுவ போக, அவனுக்கு கை துடைக்க துணி கொண்டு வந்தாள் நிவேத்யா.
“ஹே எதுக்கு இதெல்லாம், என்கிட்ட கர்சீஃப் இருக்கு,” என்று அதில் துடைத்து கொண்டவன்,
“எதுக்கு இந்த ஸ்பெஷல் கவனிப்பெல்லாம்?” என்று கேட்க,
“நீங்க இந்த வீட்டுக்கு வர போற மாப்பிள்ளை இல்லையா? அதனால் தான்,” என்று நிவேத்யா பதில் கூறினாள்.
“மாப்பிள்ளைன்னா, எனக்கென்ன ரெண்டு கொம்பா முளைச்சிருக்கு, இதுக்கு முன்ன வந்தப்பவே விருந்தாளி என்கிற கவனிப்பே நார்மலா தான் இருந்துச்சு, இப்போ இந்த வீட்டில் நானும் ஒருத்தனா ஆகப் போறேன். அப்புறம் எதுக்கு இப்படியெல்லாம், என்கிட்ட சாதாரணமா பேசி பழகினாலே போதும், அப்புறம் காலையில் பிரேக்பாஸ்ட்டே ரொம்ப ஹெவி ஆகிடுச்சு, மதியத்துக்கும் இப்படி ஏதாச்சும் செஞ்சுட போறாங்க, எப்போதும் உங்களுக்கு எப்படி செய்வீங்களோ அப்படியே செய்ய சொல்லு,” என்று அவன் பரிதாபத்தோடு கூற, நிவேத்யாவும் புன்னகையோடு அதற்கு சம்மதமாக தலையசைத்தாள்.
அப்போது ஆத்யா சாப்பிட்டுவிட்டு கைகழுவ வந்தவள், “என்ன கிடைச்ச் கேப்ல லவ்ஸா?” என்று கேட்டு சிரித்துவிட்டு போக, அவர்களும் அங்கிருந்து நழுவினர்.
அதன்பின், “அங்கிள், நான் நிவியோட கொஞ்சம் பேசணும், வெளிய கூட்டிட்டு போகட்டுமா?” என்று சிவாதித்யன் ரவிச்சந்திரனிடம் அனுமதி கேட்க, அவர் தயங்கவும்,
“இங்க பக்கத்தில் இருக்க கோவிலுக்கு தான் அங்கிள், போயிட்டு கொஞ்ச நேரத்தில் வந்திடுவோம்,” என்று அவன் சொல்ல, அவரும் சம்மதித்தார்.
வீட்டினர் அனுமதியோடு இருவரும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்து கொண்டு மண்டபத்தில் அமர, “அப்பா இப்போ தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு, நான் இங்க வந்தா பார்க்க மாட்டேன். பேச மாட்டேன்னு சொன்னீயா, அதான் நான் சொல்லாம கொள்ளாம அங்க இருந்து கிளம்பிட்டேன். இருந்தாலும் மனசுக்குள்ள ஒரு பயம், நீ என்னை பார்த்தா எப்படி ரியாக்ட் செய்வீயோன்னு, ஆனா அப்படி நீ நடந்துக்கல,” என்று சிவாதித்யன் மகிழ்ச்சியோடு கூற,
“ஹலோ, என்னைப் பார்த்தா அவ்வளவு டெரராவா தெரியுது.” என்று நிவேத்யா அவனை முறைத்தாள்.
“அப்போ என்மேல கோபம் இல்லையா?” என்று அவன் கேட்கவும்,
“இல்லைன்னு யார் சொன்னா, நான் பிடிவாதம் பிடிச்சா, போடின்னு அப்படியே விட்டுட்டு போயிடுவீங்களா? அப்போ அவ்வளவு தானா உங்க காதல்?” என்று அவள் இந்தமுறை கோபமாக இல்லாமல் வருத்தமாக கேட்டாள்.
“அய்யோ சாரி நிவி, நான்தான் சொன்னேனே, ஒருபக்கம் நீயும் முக்கியம். இன்னொருபக்கம் நான் யோசிச்சு வச்சிருந்த ஃப்யூசர் பிளானும் முக்கியம். எனக்கு அப்போ என்ன முடிவெடுக்கறதுன்னு தெரியல, ஏதாவது ஒரு முடிவெடுத்தா தான் நம்ம கல்யாணம் நடக்கும்னு நீ பிடிவாதம் பிடிக்கவும், நீ என்னை நம்பலையேன்னு எனக்கு கொஞ்சம் கோபம் வந்துடுச்சு, அதுக்கு சாரி. சாரி. சாரி. இன்னுமே என்மேல இருக்க கோபம் போகலன்னா எனக்கு என்ன தண்டனை வேணும்னா கொடு.” என்று அவன் கூற,
“அதான் தண்டனை கொடுக்காதபடி செஞ்சுட்டீங்களே,” என்றவள்,
“இத்தனை குழப்பமா இருந்தவங்க, அப்புறம் எப்படி முடிவு எடுத்தீங்களாம்?” என்று கேட்டாள்.
“எல்லாம் உன்னோட அம்மாவால தான், அவங்க உனக்கு வேற இடத்தில் மாப்பிள்ளை பார்க்கிறாங்கன்னு தெரிஞ்சதும், எப்படியோ நீ அதுக்கு ஒத்துகலன்னாலும் அப்படி ஒரு விஷயம் கேட்டதுமே, உன்னைவிட அந்த வேலை எனக்கு முக்கியமில்லை என்று தோனுச்சு,” என்று தன் பெற்றோர்களிடம் பேசியதை அவளிடமும் கூற,
“அப்போ அம்மா என்ன பேசினாங்கன்னு நிஜமா நான் கவனிக்கவே இல்லை. எனக்கு என்னோட குடும்பத்தில் பாசம் இருக்கு தான், அதுக்காக உடனே மனசு மாறும் அளவுக்கு என்னோட காதல் அவ்வளவு வீக்கானது இல்லை. அதுவுமில்லாம என்னை கட்டாயப்படுத்தி வேற ஒருத்தரை கல்யாணம் செய்ய ஒத்துக்க வைக்கற அளவுக்கு என்னோட வீட்டிலும் அந்த அளவு மோசமானவங்க இல்லை. அம்மாவுக்கும் கூட ஏதோ உங்களை பார்த்து பிடிச்சுது, அதனால உங்க மேல எனக்கு கொஞ்சம் இன்ட்ரஸ்ட் இருக்கு என்கிற அளவுக்கு தான் அவங்க புரிதல். மத்தப்படி அவங்களுக்கு உங்களை பிடிக்காதுன்னு இல்லை.” என்ற அவளின் விளக்கத்திற்கு,
“நானும் உன்னோட அம்மாவையோ உன்னோட பேமிலையோ தப்பா நினைக்கல, உனக்கு முன்னமே சகியும் ஆதுவும் உன்னோட அப்பா, அம்மா பத்தி சொல்லியிருக்காங்க, இருந்தாலும் மனசுல ஒரு சின்ன பயம் அவ்வளவு தான்,” என்று அவளுக்கு சமாதானம் கூறியவன்,
“அப்புறம் என்னமா என்னை பயமுறுத்தின நீ. நான் இங்க வந்தா என்னை பார்க்க மாட்ட, பேச மாட்டன்னு எப்படியெல்லாம் பேசின நீ. நான் பயந்தே போயிட்டேன் தெரியுமா?” என்று மீண்டும் அவன் அதே விஷயத்தை பேச,
“ஆமாம், அப்படியே பயந்துட்டாலும், நீங்க என்கிட்ட பேசின நேரத்துக்கு கணக்கு வச்சிக்கிட்டாலும், நேத்து நைட்டே வருவீங்கன்னு நினைச்சேன். நீங்க லேட் தான்,” என்றாள்.
“அப்போ என்னை எதிர்பார்த்த அப்படித்தானே,” என்று அவன் கேட்க,
“இல்லன்னுல்லாம் சொல்ல மாட்டேன். எப்படியோ நான் சொன்னாலும் நீங்க கண்டிப்பா கிளம்பி வருவீங்கன்னு எனக்கு தெரியும், ஆனாலும் லேட் தான்,” என்றாள்.
“கிளம்பறேன்னு சொன்னதும், நான் என்ன சூப்பர் மேனா? உடனே அங்க இருந்து பறந்து வர்றதுக்கு, ஃப்ளைட் கிடைக்க வேண்டாமா? அதுவுமில்லாம இதை வாங்கவும் கொஞ்சம் டைம் ஆகிடுச்சு,” என்று தன் சட்டை பாக்கெட்டிலிருந்து ஒரு சிறிய நகைப்பெட்டியை எடுத்தவன், அதை திறந்து அவளிடம் காண்பித்தான்.
அதில் அழகிய மோதிரம் ஒன்று இருந்ததை பார்த்து மகிழ்ந்தவள், “இது எனக்கா?” என்று அவனிடம் கேட்டாள்.
ஆமாமென்று தலையசைத்தவன், “அப்பாவும் அம்மாவும் ரெண்டு மூனு மாசத்திலேயே நம்ம கல்யாணத்துக்கு நாள் குறிக்கணும்னு சொல்லிட்டு இருந்தாங்க, ஆனா வேலையில் சேர்ந்ததும் உடனே லீவ் எடுக்க முடியாது. உனக்கும் வேலை கிடைச்சு அங்க வரணும், அதனால இன்னும் கொஞ்சம் மாசம் போகட்டும்னு சொல்லியிருக்கேன். உனக்கும் இது ஓகே தானே,” என்று கேட்க,
“ம்ம் நீங்க சொல்றதும் சரிதான்,” என்று அவளும் அதை ஆமோதித்தாள்.
“நம்ம சகி, நரேஷுக்கு செஞ்ச மாதிரி நமக்கும் நிச்சயமும் கல்யாணமும் ஒரே டைம்ல வைக்கப் போறாங்களாம், அதான் இப்போதைக்கு கோவிலில் வச்சு உன் கையில் இந்த ரிங்கை போட்டுவிடப் போறேன். உனக்கு சம்மதம் தானே, இந்த ரிங் உனக்கு பிடிச்சிருக்கா?” என்று அவன் கேட்கவும்,
“ரொம்ப அழகா இருக்கு,” என்றவள்,
“ஏன் நான் திரும்ப மனசு மாறிடுவேன்னு பயமா?” என்ற அவளின் கேள்விக்கு,
“இப்போதும் உன்னை நான் கட்டாயப்படுத்தல, நீ என்னை கட்டாயப்படுத்தினதாகவும் நினைக்கல, அதனால உன்னோட மனசு மாறிடுமோன்னு நான் எதுக்கு பயப்படணும்? உன்னை பார்க்க வரும்போது ஏதாச்சும் கிஃப்ட் வாங்கணும்னு தோனுச்சு, ஆனா என்ன வாங்கன்னு யோசிக்கும்போது, அப்பாவும் அம்மாவும் நம்ம கல்யாண தேதியை குறிக்கறது பத்தி கேட்டாங்களா? அப்போதான் இந்த ஐடியா வந்துச்சு, அதில்லாம இதை பார்க்கும்போது உன்னையே நினைச்சுட்டு அமெரிக்கால ஒருத்தன் வேலை பார்க்கிறான்னு உனக்கு ஞாபகம் வந்துக்கிட்டே இருக்கணும் புரியுதா?” என்றான் அவன்,
“ஓ அப்படியா? அப்போ நானும் உங்களுக்கு ஏதாச்சும் கிஃப்ட் தரணுமே, அப்போ தானே இங்க ஒருத்தி உங்களுக்காக இருப்பது உங்களுக்கு ஞாபகம் வரும், இல்ல அன்பை காட்றேன்னு யாராச்சும் உங்களை ஸ்பெஷலா கவனிச்சா என்ன செய்றது?” என்று அவள் கேட்க,
“ச்சீச்சீ, கோவிலில் வச்சு என்ன பேசுற, நான்தான் முன்னமே சொன்னேனே, எனக்கானவ ஒருத்தி இருக்கான்னு நான் அவங்களிடம் சொல்லிடுவேன். அப்படியும் உனக்கு பயமா இருந்துச்சுன்னா, அந்த அன்பு இல்லல்ல காதல் பரிமாற்றத்தை வீட்டுக்கு போனதும் கிடைக்கற தனிமையில் உன்னோட கிஃப்ட்டா எனக்கு தந்திடு, அப்புறம் நான் நல்ல பையனா இருப்பதுக்கு 100% கேரன்ட்டி தரேன்.” என்று அவன் கூறினான்.
“ஓ ஐயாக்கு இந்த நினைப்பெல்லாம் இருக்கா, அதுவும் கோவிலில் வச்சு என்ன பேசறீங்க, நம்ம கல்யாணம் முடியும் வரை இப்படி எதுவும் எதிர்பார்க்காதீங்க, அதேசமயம் நீங்க சொன்ன நல்ல பையனாவும் இருக்கணும் புரியுதா?” என்று அவனை மிரட்டினாள்.
“சரி கையை காட்டு,” என்று அவன் கூற, அவளும் தன் கையை நீட்ட, அதில் அவன் அந்த மோதிரத்தை போட்டுவிட்டான்.
அடுத்து இருவரும் வீட்டிற்கு வர அங்கு பார்த்தால் சாகித்யாவும் நரேஷும் வந்திருந்தனர். சிவாதித்யன் வந்ததை ஆத்யா உடனே சாகித்யாவுக்கு தெரிவிக்கவும், அவளும் நரேஷும் உடனே டெல்லியிலிருந்து விமானத்தில் கிளம்பியிருந்தனர்.
அவர்கள் இருவரையும் பார்த்ததும் சிவாதித்யனும் நிவேத்யாவும் மகிழ்ந்து போனாலும், “ஹே தண்டோரா, அதுக்குள்ள சொல்லிட்டீயா?” என்று சிவாதித்யன் ஆத்யாவிடம் கேட்டவன்,
“ஆமா டெல்லியில் ஒரு நாலு நாளாச்சும் தொடர்ந்து இருந்திருப்பீங்களா?” என்று நரேஷ், சாகித்யாவிடம் கேட்டான்.
“ஏன் டா கேட்க மாட்ட, நீங்க ரெண்டுப்பேரும் செஞ்ச களோபரத்துக்கு இப்படி ஒரு கேள்வி கேட்கிற பத்தீயா நீ,” என்று நரேஷ் புலம்ப,
“நீ எதுக்கு இப்படி கேட்கிறேன்னு எங்களுக்கு தெரியுது தம்பி, இப்படி கேட்டதும் நாங்க உடனே கிளம்பிடுவோம்னு நினைக்காத, நீ எத்தனைநாள் இருக்க போறீயோ, அத்தனைநாளும் நாங்களும் இங்க தான் இருக்கப் போறோம், ஆத்யா காலேஜுக்கு வேற போயிடுவா? உன்னை நம்ப முடியாது. அதனால நிவிக்கு நான்தான் துணையா இருக்கறப் போறேன்.” என்று சாகித்யா கூறினாள்.
“ஆமாம் க்கா, கிடைச்ச கேப்ல ரெண்டுப்பேருக்கும் ஒரே லவ்ஸ்னா பார்த்துக்கோயேன்.” என்று ஆத்யா கூற,
அதை கேட்டு சிவாதித்யனோ, “உங்க ரெண்டுப்பேருக்கும் இது ஓவரா இல்லையா? அப்படியே கேப்பே கிடைச்சாலும் இந்த லவ்ஸ், ரொமான்ஸ் இதெல்லாம் நிவியிடம் நடக்கும்னு நினைக்கறீங்க?” என்று கேட்டான்.
“சிவா, என்ன இருந்தாலும் காதலிக்கிறதுக்கு முன்னாடி நீ என்கிட்ட ஒருவார்த்தை கேட்டிருந்தா, அக்கா மாதிரி தங்கையும் இருக்க வாய்ப்பிருக்குன்னு நான் எச்சரிச்சிருப்பேன். இப்போ அதைப்பத்தி பேசி என்னடா பிரயோஜனம்.” என்று நரேஷ் கூற,
“ஹே நான் உன்னோட பெஸ்ட் ஃப்ரண்ட் தானடா, நான் கேட்டு தான் இதெல்லாம் சொல்லணுமா?” என்று சிவாதித்யன் அவனை பதிலுக்கு கேட்டான்.
நிவேத்யாவும் சாகித்யாவும் முறைத்து கொண்டிருப்பதை கவனிக்காமல் இருவரும் பேசி கொண்டிருக்க, “வாயை கொடுத்து மாட்டிக்கிட்டீங்க, இனி உங்களை காப்பாத்துவது ரொம்ப கஷ்டம்,” என்று ஆத்யா அவர்களை பார்த்து சிரிக்க, ஆண்கள் இருவரும் அவரவர் இணையிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்த என்று அவர்கள் பொழுது கெஞ்சலும் கொஞ்சலும் வாரலுமாய் செல்ல, பெரியவர்களோ இருவரின் திருமணத்திற்காக நாளை குறிக்க ஆரம்பித்தனர்.
முதல் பார்வையிலேயே என்னை
கொள்ளை கொண்டு போனாயோ!
உன் முரண் நயத்தால்
என் மனதை நெய்தாயோ!
சுபம்