MNMN final 1

MNMN final part 1

நிவேத்யாவின் தோழி நிஷா அவளை காண வீட்டிற்கு வந்திருந்தாள். நிஷா வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பவள், விடுமுறைக்காக இந்தியா வந்திருந்தவள், நிவேத்யா தன் மீது கோபம் கொண்டு பேசாதிருப்பதனால், அவளை சமாதானப்படுத்த வேண்டுமென்று வந்திருந்தாள்.

நிவேத்யாவும் நிஷாவும் இன்னும் சில தோழிகள் அனைவரும் ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் ஒன்றாக படித்தவர்கள். படிக்கும்போது தகவல் தொழில்நுட்பம் படிக்க வேண்டுமென்று விரும்பியே அந்த படிப்பை எடுத்தனர். ஐடி நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும், வெளிநாட்டிற்கெல்லாம் செல்ல வேண்டுமென்ற ஆசையெல்லாம் அப்போது அவர்களுக்கும் இருந்தது.

ஆனால் அதன்பின் இந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்க தன்மை மேல் அவர்களுக்கு பிடித்தமின்மை இல்லாமல் போக, அவர்கள் உழைப்பு இந்தியாவிற்காக இருக்க வேண்டுமென்ற தீர்மானத்தை எடுத்திருந்தனர் அந்த தோழிகள். அனுபவத்திற்காக சில கார்ப்பரேட் நிறுவனங்களில் தற்போது வேலை பார்த்தாலும், அவர்கள் எடுத்த தீர்மானங்களால் அலுவலகத்தில் தொடர்ந்து பணி செய்ய முடியாமல், அடிக்கடி அவர்கள் வேறு வேலைக்கு மாறுவதும் உண்டு. அப்படியிருக்க அவர்கள் எடுத்த தீர்மானத்தை உடைத்து நிஷா வெளிநாட்டிற்கு வேலைக்கு போன காரணமே, நிவேத்யாவையும் சேர்த்து அனைத்து தோழிகளும் அவள் மீது கோபமாக இருக்கின்றனர்.

தன் தோழிகளிடம் தன் நிலையை புரிய வைத்து அவர்களை சமாதானப்படுத்துவது நிஷாவிற்கு அவசியமாக தோன்ற, முதலில் அவள் நிவேத்யாவை தேடி வந்திருந்தாள். என்னத்தான் கோபம் இருந்தாலும், வீடு தேடி வந்த தோழியை நிவேத்யாவும் அவமானப்படுத்தவில்லை. அவளிடம் நல்லப்படியாகவே பேசினாள்.

“வேலையெல்லாம் எப்படி போயிட்டு இருக்கு, எத்தனைநாள் லீவ்ல வந்திருக்க, வீட்டில் எல்லாம் நல்லா இருக்காங்களா?” என்று நிவேத்யா தோழியை நலம் விசாரிக்க,

“ம்ம் வேலை நல்லா தான் போயிட்டு இருக்கு, ஒருமாசம் லீவ்ல வந்திருக்கேன். நீ எப்படி இருக்க?” என்று நிஷாவும் பதிலுக்கு நிவேத்யாவை நலம் விசாரித்தவள்,

“உன்னோட சாகி அக்காக்கு இப்போ தான் கல்யாணம் முடிஞ்சுது போல, நம்ம ஃப்ரண்ட்ஸ் எல்லாம் வந்திருக்காங்க, அவங்க இன்ஸ்டால ஷேர் செய்த போட்டோஸ் பார்த்தேன். ஆனா என்னை இன்வைட் செய்யணும்னு உனக்கு தோனவே இல்லல்ல, எல்லாம் சேர்ந்து என்னை ஒதுக்கி வச்சிட்டீங்கல்ல,” என்று வருத்தமாக கூறினாள்.

“அது, அது, நீ எப்படியோ கல்யாணத்துக்கு வர முடியாதுன்னு தான்,” என்று நிவேத்யா பதில் சொல்ல முடியாமல் தயங்க,

“சும்மா சமாளிக்காத நிவி, சொல்லணும்னு மனசு இருந்தா கண்டிப்பா சொல்லியிருப்ப, இப்போ வந்தவ விஷயம் தெரிஞ்சிருந்தா பத்து நாளுக்கு முன்னமே இந்தியா வந்திருப்பேன். எனக்கு தெரியும், நாம எடுத்த உறுதியை மீறி நான் யு.எஸ் போனது தான் உங்களோட கோபம். ஆனா எதுக்காக நான் அப்படி ஒரு முடிவு எடுத்தேன்னு யாராச்சும் கேட்டீங்களா? எனக்குமே அப்போ எதுவும் சொல்ல முடியாத சூழ்நிலை.

ஆனா இப்போ என்னோட சூழ்நிலையை சொல்றேன். அப்போதும் நான் செஞ்சது தப்புன்னா, யாரும் என்னை மன்னிக்க வேண்டாம்,” என்ற நிஷா தன் பக்க நியாயங்களை சொல்ல ஆரம்பித்தாள்.

“அப்பா பிஸ்னஸ் திடீர்னு லாஸ் ஆகிடுச்சு, அவர் கடன் வாங்கி தான் புது பிராஜக்ட்ல இன்வெஸ்ட் செஞ்சிருந்தாரு, ஆனா அந்த பிஸ்னஸ் லாஸாகிடவே, அந்த கடனை அடைக்க, எங்களுக்கு சொந்தமான வீடு, ப்ராப்பர்ட்டி, ஜுவல்ஸ் எல்லாம் விக்க வேண்டியதா போச்சு, கிட்டத்தட்ட எங்கக்கிட்ட ஒன்னுமில்லாத நிலை. அதனால அப்பாவோட ஹெல்த்தும் மோசமாகிடுச்சு,

நானும் அக்காவும் வேலைக்கு போறதனால, அந்த சம்பளத்தை வச்சு தான் எங்க குடும்பத்தை பார்த்துக்கும் நிலைமை. அப்பாவோட ட்ரீட்மென்ட் செலவு வேற, இதுக்கெல்லாம் எங்க சேலரி பத்தல, இதில் அப்போ அக்காக்கு அலையன்ஸ் வேற பார்த்திருந்தோம், ஆனா எங்க நிலைமை மோசமானது தெரிஞ்சு அவங்க எங்களோட சம்மந்தம் வச்சுக்க விரும்பல, இப்படியான சிட்டுவேஷன்ல தான் நான் வேலை செய்யும் கம்பெனியில் இப்படி ஒரு ஆஃபர் வந்துச்சு, அதை விட்டா அப்புறம் என்னோட குடும்பத்தை பழைய நிலைமைக்கு கொண்டு வருவது கஷ்டம். அப்படி இருக்கும்போது என்னை என்ன செய்ய சொல்ற நிவி, என்னோட குடும்பம் இப்படி ஒரு நிலையில் இருக்கும்போதும் நான் இங்க தான் இருப்பேன்னு என்னை பிடிவாதம் பிடிக்க சொல்றீயா?” என்று நிஷா கேட்க,

“என்ன சொல்ற நிஷ், இது எதுவுமே எங்க யாருக்கும் தெரியாதே, ஏன் எங்கக்கிட்ட நீ எதுவும் சொல்லல? இதெல்லாம் எப்போ நடந்துச்சு?” என்று நிவேத்யா அதிர்ச்சியாக கேட்டாள்.

“அப்பாக்கு கொஞ்சம் லாஸ் ஆனது தெரிஞ்சதுமே, எங்களை அம்மா வழி பாட்டி வீட்டுக்கு அனுப்பி வச்சாரு, நான் கூட பாட்டிக்கு உடம்பு சரியில்லன்னு சொல்லி ஊருக்கு போயிருந்தேனே, அப்போ தான் இதெல்லாம் நடந்துச்சு, அப்பாவும் அம்மாவும் இங்க எல்லா பிரச்சனையும் முடிச்சு அவங்களும் அங்கேயே வந்தாங்க, அடுத்து என்ன செய்யப் போறோம்னு அவங்களுக்கு புரியாத நிலை.

நாங்க தான் வேலைக்கு போறோமே, சமாளிச்சுக்கலாம்னு நானும் அக்காவும் தான் ரெண்டுப்பேருக்கும் ஆறுதல் சொல்லிட்டு இருந்தோம், ஆனாலும் அப்பாக்கு முடியாம போச்சு, அப்புறம் ஹாஸ்பிட்டலில் சேர்த்து அவருக்கு ட்ரீட்மென்ட்னு ரொம்பவே கஷ்டமான நாட்கள் அது.

இந்த விஷயத்தை சொன்னா எல்லாம் கண்டிப்பா என்னோட நிப்பீங்கன்னு எனக்கு தெரியும், ஆனா இப்போதைக்கு எந்த பிரச்சனையும் யாருக்கும் தெரிய வேண்டாம்னு அம்மா சொல்லிட்டாங்க, அடுத்து அப்பா, அம்மா இங்க வரவேயில்ல, சொந்த வீட்டில் இருந்துட்டு வாடகை வீட்டுக்கு போக அவங்களுக்கு விருப்பமில்லை. இங்க அப்பா வழி உறவுக்காரங்க, தெரிஞ்சவங்க யாரையும் சந்திக்க அவங்களுக்கு தயக்கம். அதனால அங்கேயே இருக்க முடிவு செஞ்சுட்டாங்க,

அக்காவும் அங்கேயே அவளோட வேலையை மாத்திக்கிட்டா, நானும் வேற பிராஞ்ச்க்கு மாத்திக்க கேட்டு தான் சென்னை வந்தேன். அப்போ தான் ஆன்சைட் போற ஆஃபர் வந்துச்சு, எனக்குமே அதைவிட மனசில்ல, நீங்க கேள்வி கேட்டபோது கூட எனக்கு என்ன சொல்லன்னு புரியல, எப்பயாச்சும் என்னோட விளக்கத்தை சொன்னா நீங்க புரிஞ்சிப்பீங்கன்னு நினைச்சேன்.” என்று நிஷா முழுவதுமாக சொல்லி முடிக்கவும்,

“இது எதுவுமே எங்களுக்கு தெரியாது. விஷயம் தெரியாம நாங்களும் உன்மேல அதிகமாகவே கோபப்பட்டு பேசிட்டோம், இருக்க பிரச்சனையில் இதுவும் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தியிருக்கும்ல நிஷ், சாதாரணமா சாரின்னு சொல்லிடலாம், ஆனா அது உன்னை சமாதானப்படுத்துமான்னு தெரியல, விஷயத்தை கேட்டு எனக்கு ரொம்பவே குற்ற உணர்ச்சியா இருக்கு,” என்று நிவேத்யா வருத்தப்பட்டாள்.

“அப்படி நினைச்சிருந்தா நான் உன்னை தேடி வந்திருப்பேனா? உங்கக்கிட்ட இருந்து சாரில்லாம் வேண்டாம், என்னோட சூழ்நிலையை புரிஞ்சிக்கிட்டு திரும்ப நீங்கல்லாம் என்கிட்ட நல்லா பேசினா அதுவே எனக்கு போதும்,” என்று நிஷா கூற,

“கண்டிப்பா, ஆனா நாங்க கேட்ட தப்புக்கு சாரி கேட்டு தான் ஆகணும், சாரி நிஷ், ஐம் ரியலி வெரி சாரி. நம்ம மத்த ஃப்ரண்ட்ஸ்க்கிட்டேயும் இந்த விஷயத்தை சொல்லி உன்கிட்ட பேச சொல்லுறேன். சீக்கிரமா எல்லாம் பொதுவா ஒரு இடத்தில் சந்திக்கலாம்,” என்று நிவேத்யா கூறவும், நிஷா மகிழ்ச்சியானாள்.

“சரி இப்போ அப்பாக்கு எப்படி இருக்கு, இப்போ எந்த பிரச்சனையும் இல்லல்ல,” என்று நிவேத்யா கேட்க,

“அப்பா இப்போ நார்மலாகிட்டார். ஆனா அவருக்கு நல்ல ரெஸ்ட் தேவைன்னு டாக்டர் சொல்லியிருக்காங்க, இப்போதும் நானும் அக்காவும் தான் பார்த்துக்கிறோம், முன்ன மாதிரி இல்லன்னாலும் ஓரளவுக்கு எல்லாம் சரியாகிடுச்சு, அக்காவோட சேலரியில் மாசம் மாசம் குடும்ப செலவு ஓடிட்டு இருக்குன்னா, என்னோட சேலரியில் சேமிக்க முடியுது. இப்போ திரும்ப அக்காவுக்கு வரன் பார்த்துட்டு இருக்கோம், அது கண்டிப்பா முடிவாகிடும் போல தான் இருக்கு,

இப்போ வந்ததால திரும்ப அக்கா கல்யாணம் முடிவானா என்னால திரும்ப லீவ் போட்டு வர முடியுமான்னு தெரியல, எல்லோரையும் விட்டுட்டு எனக்கு அங்க தனியா இருப்பது கூட ரொம்ப கஷ்டமா தான் இருக்கு, ஆனா இப்போ எங்க குடும்பம் ஓரளவுக்கு அமைதியா வாழ்ந்துட்டு இருக்கோம்னா அது இந்த வேலையால தான்,

எனக்குமே நம்ம நாட்டுக்காக நம்ம உழைப்பு இருக்கணுமே, அது முடியலையேன்னு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு, ஆனா முதலில் நம்ம குடும்பம் முக்கியமில்லையா? இங்க இருந்து வெளிநாட்டில் போய் வேலை பார்க்கும் முக்கால்வாசி பேரு, இப்படி குடும்பத்தின் தேவைக்காக அங்க போய் தனியா கஷ்டப்பட்றவங்களா தான் இருப்பாங்க,

ஏன் குடும்பமா போய் இருக்கவங்க மட்டும் ரொம்ப வசதி வாய்ப்புமாகவா இருக்காங்க, அங்க வாங்கற சம்பளத்துக்கு அங்க இருக்க பொருளாதாரத்தை சமாளிச்சு கொஞ்சம் சேமிச்சு இங்கேயும் அவங்களை சேர்ந்தவங்களுக்கு பணம் அனுப்பின்னு ஆரம்பத்தில் அவங்க பாடு திண்டாட்டம் தான், ஆனா நாம சாதாரணமா அவங்களுக்கு என்னப்பா வெளிநாட்டுல வேலை செய்றாங்க, டாலர்ல சம்பளம்னு ஈஸியா நினைச்சுக்கிறோம், விரும்பியே அங்க வேலைக்கு போறவங்களுக்கும் சில கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும்,

நான் இப்போதைக்கு கான்ராக்ட்ல தான் போயிருக்கேன். அக்கா கல்யாணம், அடுத்து என்னோட கல்யாணம் அதுக்காக இன்னும் சில வருஷத்துக்கு அந்த கான்ட்ராக்ட்டை நீட்டிப்பேன். அதுக்குப்பிறகு கண்டிப்பா இங்க வந்துடுவேன். எனக்கு அங்க நிரந்தரமா இருக்கணும்னு எல்லாம் இல்லை நிவி, ஆனா நம்ம எதிர்காலம் நமக்கு என்ன வச்சிருக்குன்னு இப்பவே சொல்ல முடியாதே,” என்று நிஷா கூறினாள்.

“எனக்கு புரியுது நிஷ், எதிர்காலத்தில் நீ என்ன முடிவெடுத்தாலும் கண்டிப்பா உன்னை நாங்க புரிஞ்சிப்போம், முதலில் உன்னோட குடும்பம் தான் உனக்கு முக்கியம்,” என்று நிவேத்யா சொல்லவும்,

“என்ன சொல்ல, எனக்கு இதுபோதும் நிவி, அங்க இருப்பது எனக்கு பிடிக்கலன்னாலும் என்னோட குடும்பம் இப்போ சந்தோஷமா இருக்கே, அது தான் எனக்கு நிம்மதியை கொடுக்குது, நாம அவங்க மேல வச்ச நேசத்துக்காக நம்ம கொள்கையை கொஞ்சம் விட்டு கொடுத்தா தப்பில்லன்னு தோனுச்சு, அவங்க பக்கத்தில் இருந்து அவங்க மேல காண்பிக்கிறது மட்டும் தான் அன்பு அப்படின்னு இல்லை. அவங்களுக்காக யோசிச்சு செய்ற எந்த விஷயமும் அவங்க மேல இருக்க அன்பை நாம வெளிப்படுத்துவது தான், அதான் உறுதியா நான் இந்த முடிவை எடுத்தேன். என்ன நீங்கல்லாம் என்னோட பேசாம இருந்தது தான், என்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டு இருந்துச்சு, இப்போ அந்த பிரச்சனையுமில்ல, இனி நான் இன்னும் நிம்மதியாவும் சந்தோஷமாகவும் இருப்பேன்.” என்று நிஷா மகிழ்ச்சியோடு கூறினாள்.

பின் இன்னும் சிறிதுநேரம் நிஷா பேசிவிட்டு கிளம்பியதும், நிஷா கடைசியாக சொன்ன விஷயத்தை நினைத்து நிவேத்யாவின் மனதிலும் பலவிதமான சிந்தனைகள் ஓடி கொண்டு இருந்தது.

இங்கு இவள் இன்னும் சிந்தனையிலேயே இருக்க, அங்கு சிவாதித்யன் எடுத்த முடிவை கேட்டு அவனின் பெற்றோர்கள் அதிர்ந்தனர்.

“என்ன சொல்ற சிவா, இப்போ ஜாயின் செய்திருக்க கம்பெனிக்கு நீ போகப் போறதில்லையா? இந்தியால போய் வேலை செய்யப் போறீயா? எதுவா இருந்தாலும் கொஞ்சம் நிதானமா யோசிச்சு முடிவெடு. அவசரப்படாத, இந்த வேலையில் சேரணும் என்பது உன்னோட பலநாள் கனவு. அது இன்னும் நிறைவேறாத நிலையில் நீ இப்படி ஒரு முடிவெடுக்க கூடாது.” என்று திவாகரன் கூறினார்.

ஆம் சிவாதித்யன் நிவேத்யாவிற்காக இந்தியா செல்வதென முடிவெடுத்துவிட்டான். நிவேத்யாவின் அம்மா அவளுக்கு வேறு வரன் பார்ப்பது குறித்து பேசியது அவனது மனதில் சிறு பயத்தை விளைவித்திருந்தது.

என்ன தான் நிவேத்யா அதற்கு ஒத்து கொள்ளவில்லையென்றாலும், தன் குடும்பத்தின் மீது அதிக நேசம் வைத்திருப்பவள், ஒருநாள் இல்லை ஒருநாள் அவள் குடும்பத்திற்காக ஒத்து கொண்டால், அதை யோசித்து பார்த்தவனால் அதற்கு மேலும் அமைதியாக இருக்க முடியவில்லை. இருவரில் யாராவது ஒருவர் இறங்கி வரவேண்டுமென்றால், முதலில் தானே இறங்கி வருவதென்ற முடிவிற்கு அவன் வந்திருந்தான்.

அந்த முடிவைப்பற்றி பெற்றோர்களிடம் சொல்லவும் தான் திவாகரன் இப்படி கூறினார். வனிதாவும் கூட, “நிவேத்யாவை விட்டு கொடுக்க முடியாம தான் அவளுக்காக உனக்கு பிடிச்ச வேலையையும் விட்டு கொடுக்க முடிவெடுத்திருக்கியா சிவா, அதில் எங்களுக்கு சந்தோஷம் தான், ஆனாலும் அப்பா சொல்றது போல ஒருமுறைக்கு பலமுறை நல்லா யோசிச்சு முடிவெடு ப்பா, என்று சொல்ல,

“உனக்கு பிடிச்ச பொண்ணுக்காக நீ இறங்கி போக நினைப்பது தப்பில்ல சிவா, ஆனா உன்னோட சூழ்நிலையை அந்த பொண்ணும் புரிஞ்சவளா இருக்கணும், இன்னைக்கு காதலுக்காக நீ விட்டு கொடுத்து போறது உனக்கு சந்தோஷத்தை கொடுக்கலாம், ஆனா நாளைக்கு அதை நினைச்சு நீ வருத்தப்பட்றது போல ஆச்சுன்னா, அது உங்க எதிர்காலத்துக்கு நல்லதில்ல, அதுக்கு தான் சொல்றேன். நல்லா யோசிச்சிக்க சிவா,” என்று திவாகரன் மீண்டும் ஒருமுறை தன் கருத்தை வலியுறுத்தி சொல்ல,

“நீங்க சொல்றது எனக்கு புரியுது ப்பா, நீங்க சொல்றது போல நல்லா யோசிச்சு தான் இந்த முடிவை நான் எடுத்தேன். நான் விரும்பி சேரணும்னு ஆசைப்பட்ட வேலையை விட்டு கொடுக்க முடியாது. உனக்காக என்னால இறங்கி வர முடியாதுன்னு இப்போதும் என்னால வீம்பா இருக்க முடியும், இன்னுமே என்னோட சூழ்நிலையை அவ புரிஞ்சிக்கலையே என்கிற கோபமும் அவளிடம் எனக்கு இருக்கு,

அந்த கோபத்தோட அதே பிடியில் நின்னு நான் அந்த வேலைக்கு போறேன்னு வச்சிக்கோங்க, திடீர்னு எனக்கே அந்த வேலை பிடிக்காம போகலாம், அந்த வேலையை விட்டு நான் இன்னொரு வேலையை தேடலாம், அந்த வேலைக்காக நான் வேறொரு நாட்டுக்காக போகறதா கூட இருக்கலாம், ஏன் எனக்கு இந்த புரொஃபஷனே ஒருகட்டத்தில் பிடிக்காம கூட போகலாம், நாளைக்கு என்ன நடக்கும்னு நம்மால இப்போ சொல்ல முடியாது.

ஆனா என்னோட வாழ்க்கை துணையா நிவேத்யா மட்டும் தான் வரமுடியும், அதில் நான் உறுதியா இருக்கேன். கண்டிப்பா அந்த இடத்தை வேற யாருக்கும் நான் தரமுடியாது. தரவும் மாட்டேன். வாழ்நாள் முழுக்க அவளோட தான் என் வாழ்க்கை அப்படிங்கிறதை நான் முடிவு செஞ்சுட்டேன்.

அப்படியிருக்கப்போ என் வாழ்க்கையோட கடைசி வரைக்கும் வரப்போற ஒருத்திக்காக நான் இறங்கி போறதிலோ விட்டு கொடுக்கறதிலோ எந்த பிரச்சனையும் கண்டிப்பா வராது ப்பா,

இங்க வந்து செட்டில் ஆகணும்னு நீங்கத்தான் ஆசைப்பட்டதாகவும், அதை சொன்னதும் அம்மாவும் எதுவும் மறுத்து பேசாம உங்களோட வந்துட்டதாகவும் நீங்க எத்தனைமுறை சொல்லியிருக்கீங்க, ஒருவேளை அம்மா உங்க விருப்பத்தை ஏத்துக்காம உங்களோட வர முடியாதுன்னு சொல்லியிருந்தா, அப்போ உங்களால இங்க மனைவி பிள்ளைங்க கூட இருக்க அமைதியான வாழ்க்கை உங்களுக்கு கிடைச்சிருக்குமா? இங்க அம்மா தானேப்பா உங்களுக்காக இறங்கி வந்தாங்க,

இல்லை அம்மா நீங்க இந்தியா விட்டு எங்கேயும் போக கூடாது. அங்க தான் இருக்கணும்னு சொல்லியிருந்தா என்ன செஞ்சிருப்பீங்க, கண்டிப்பா உங்க குணத்துக்கு அம்மாக்காக உங்க ஆசையை விட்டு கொடுத்திருப்பீங்க, அப்படி ஏதாவது ஒருகட்டத்தில் யாராவது ஒருத்தர் விட்டு கொடுத்தாலோ, இல்லை இறங்கி வந்தாளோ தான் அந்த கல்யாண வாழ்க்கை நல்லா சந்தோஷமா இருக்கும், அது கல்யாணத்துக்கு மட்டும் பொருந்தாது. காதலுக்கும் பொருந்தும், இங்க நிவிக்காக நான் இறங்கி போறதுல எனக்கு சந்தோஷம் தான் ப்பா,” என்று சிவாதித்யன் கூறினான்.

“நீ சொல்றது சரிதான், என் மகன் இவ்வளவு தெளிவா பேசறது எனக்கும் சந்தோஷமா இருக்கு, நீ சொல்றது போல கல்யாண வாழ்க்கையில் ரெண்டுப்பேரில் ஒருத்தர் விட்டு கொடுத்து போகணும் தான், ஆனா அது ஒரே ஒருத்தரா மட்டும் இருக்கக் கூடாது. அப்படி இருந்துட்டா ஒருகட்டத்துக்கு மேல எல்லாத்துக்கும் நான்தான் விட்டு கொடுத்து போகணுமா அப்படிங்கிற எண்ணம் அவங்களுக்கு வர ஆரம்பிச்சுட்டா அப்பவே அங்க இத்தனைநாள் அவங்க வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லாம போயிடும், முதலில் விட்டுக் கொடுப்பது சுகமா இருக்கும், ஆனா போக போக அதுவே அவங்களுக்கு சுமையா மாறிடும், அப்போதுதான் அங்க பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும்,

எனக்காக நீ எல்லாத்தையும் விட்டுட்டு வான்னு நிவேத்யா உன்னிடம் கேட்பது தப்பில்ல, ஆனா உன்னோட வேலை இதுதான், இங்க தான் நீ இருக்க, இப்படி எல்லாம் தெரிஞ்சும் அந்த பொண்ணு பிடிவாதம் பிடிக்கும்போது உன்னை எல்லா நேரத்திலும் அவ புரிஞ்சிப்பவளா இருப்பாளா? இப்படி எல்லாத்துக்கும் நீதான் இறங்கி வரணும்னு நினைப்பாளா? அப்படி ஒரு நிலை வந்தா அப்போதும் நீ இப்படி அவளுக்காக சந்தோஷமா இறங்கி போவீயா? அதெல்லாம் முன்னாடியே யோசிச்சிக்க,” என்று திவாகரன் கூறவும்,

“என்னங்க நீங்க, குழந்தைங்க பெத்து அவங்க கல்யாணம் வரை எல்லாம் யோசிச்சா கல்யாணம் செய்துப்பாங்க, இவனுக்கு நிவேத்யாவை பிடிச்சிருக்கு, அவளுக்காக எதையும் செய்வேன் அப்படிங்கிற மனநிலையில் இவன் இருக்கான்னா, இவன் இவனோட காதலில் உறுதியா இருக்கான்னு அர்த்தம். இதுக்குமேல பேசி நாம இவனை குழப்பக் கூடாது. நம்ம மகனிடம் திறமை இருக்குங்க, அந்த திறமையால இவன் எங்க போனாலும் இவனுக்கு நல்ல எதிர்காலம் தான் இருக்கும், இவன் எடுக்கும் முடிவு சரியா இருக்கும்னு புரிஞ்சு நாம இவனுக்கு சப்போர்ட் செய்யணுமுங்க,

அப்புறம் நிவேத்யாவும் நாம பார்த்த வரையிலும் பக்குவமில்லாத பொண்ணு கிடையாது. இந்த ஒருவிஷயத்தை வச்சு நாம அவளைப்பத்தி எந்த முடிவுக்கும் வரக் கூடாது.” என்று வனிதா கூறினார்.

“அம்மா சொல்றது சரிதான்ப்பா, இந்த ஒரு விஷயத்தை வச்சு நிவி இப்படித்தான் முடிவு செய்ய வேண்டாம் ப்பா, இந்த விஷயத்தில் அவளோட பிடிவாதத்தை ஒரு குழந்தையோட பிடிவாதமா தான் நான் பார்க்கிறேன். அவளுக்காக இதை நான் சந்தோஷமா தான்ப்பா செய்றேன்.” என்று சிவாதித்யன் கூற,

“நீ தெளிவா இருக்கேன்னா சரிதான், இதில் அப்புறம் நான் என்ன மறுப்பு சொல்லப் போறேன். இப்போ வேலைக்கு போகப் போற கம்பெனியில் வர முடியாதுன்னு சொல்லிட்டீயா?” என்று திவாகரன் கேட்டார்.

“இல்லப்பா, இந்தியால எந்தெந்த கம்பெனிக்கு அப்ளை செய்யலாம், எது பெஸ்ட் இதெல்லாம் முடிவு செய்யணும், முக்கியமா சென்னையில் பார்க்கணும், இதெல்லாம் கிளியரா தெரியற வரை அவசரப்பட வேண்டாம்னு நான் இன்னும் எதுவும் சொல்லிக்கல, இதுக்குமே அவசரமா எதுவும் செய்ய முடியாது ப்பா, அதான் இன்னும் இதைப்பத்தி நான் நிவியிடம் கூட பேசல,” என்று அவன் கூறவும்,

“ம்ம் ஆமாம் எதிலும் அவசரப்படாம நிதானமாவே செய்.” என்று திவாகரன் கூறினார்.

பின் அந்த விஷயத்தை திவாகரன் ஜெயச்சந்திரனிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ள, ஜெயச்சந்திரனோ மனைவி, மகள்களிடம் விஷயத்தை கூறினார். அவர் மூலம் விஷயத்தை அறிந்து கொண்ட ஆத்யாவோ, நேராக நிவேத்யாவிடம் ஓடியவள்,

“நிவி, உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஷிவ் இந்தியாக்கு வர முடிவெடுத்துட்டானாம், இங்க இருக்க கம்பெனிஸ்க்கு அப்ளை செய்ய போறானாம், உனக்காக அவனோட ஆசையை விட்டுட்டு வரப் போறான். உனக்கு ஹாப்பி தானே, எங்க நீங்க பிரிஞ்சிடுவீங்களோன்னு எனக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சு, ஒருவகையில் அதுக்கு நான்தான் காரணமோன்னு கூட தோனுச்சு, இப்போ தான் எனக்கு சந்தோஷமா இருக்கு,

ஒருபக்கம் ஷிவ் அவன் ஆசைப்பட்ட கம்பெனியில் வேலைக்கு சேராதது ரொம்ப கஷ்டமா தான் இருக்கு, ஆனா அவனுக்கு டேலன்ட் இருக்கு, கண்டிப்பா அவனுக்கு இதைவிட எல்லாம் பெஸ்ட்டா கிடைக்கும், அதில்லாம அவன் உனக்காக யோசிச்சு வரான்னா, அப்போ அவனுக்கு உன்மேல அந்த அளவு லவ் இருக்கு தானே, அப்புறம் ஷிவ் இங்க வந்து இருக்கப் போறதுல எனக்கும் டைம் ஜாலியா போகும்,” என்று குதூகலத்துடன் சொல்லிவிட்டு சென்றாள்.

அதைகேட்டு நிவேத்யா மகிழ்ச்சியானாளா என்பதை கூட ஆத்யா கவனிக்கவில்லை. அடுத்து அந்த விஷயத்தை மற்றவர்களிடமும் சொல்ல ஓடினாள்.

விஷயத்தை கேட்டு மற்றவர்களுக்கும் இதை எப்படி எடுத்து கொள்வதென்று தெரியவில்லை. ஆத்யா விஷயத்தை சொல்லியிருப்பாள் என்பது தெரிந்து ஜெயச்சந்திரன் மேலே தன் அண்ணனை பார்க்க வர, “ஆத்யா சொல்றது உண்மையா ஜெய், நிஜமாவே சிவா அந்த வேலையை விட முடிவெடுத்திருக்கானா?” என்று நம்ப முடியாமல் கேட்டார்.

“ஆமாம் ண்ணா, சிவா அந்த முடிவில் தான் இருக்கானாம், ஆனா இன்னும் வேலையிலிருந்து நிக்க போறதா சொல்லலையாம், இங்க வேலை கிடைச்சப்பிறகு சொல்ல இருக்கானாம்,” என்று ஜெயச்சந்திரன் விளக்கமாக கூற,

“அமெரிக்கால அது பெரிய கம்பெனின்னு கேள்விப்பட்டேன். அந்த வேலையை விட்டுட்டு இங்க வந்தா அந்த அளவு நல்ல வேலை இங்க கிடைக்குமா? அதில்லாம சம்பளமும் அங்க அளவு கிடைக்காதே,” என்று ரவிச்சந்திரன் கேட்க,

“உண்மை தான் ண்ணா, ஆனா முன்னமே சிவாக்கு அங்க நிரந்தரமா வேலை செய்யும் ஐடியா கிடையாது. கொஞ்ச வருஷத்துக்கு பிறகு தனியா கம்பெனி ஆரம்பிக்கணும்னு என்கிட்ட முன்னமே சொல்லியிருக்கான். இப்போ நம்ம நிவிக்காக இப்படி ஒரு முடிவெடுத்திருக்கான் போல, சிவா அந்த வேலையை விட்டுட்டு இங்க வருவதில் உங்களுக்கு விருப்பமில்லையா ண்ணா, ஏன் இப்படி கேட்கறீங்க?” என்று ஜெயச்சந்திரன் பதிலுக்கு கேட்டார்.

“இல்ல, நிவி தான் அவ நினைக்கறது நடக்கணும்னு பிடிவாதம் பிடிக்கிறான்னா, அவளுக்காகன்னு சிவா எதுவும் அவசரமா முடிவெடுத்து அது தப்பாகிட கூடாதில்லையா? அப்புறம் அது அவங்க எதிர்காலத்தை தானே பாதிக்கும்,” என்று ரவிச்சந்திரன் கூற,

“சிவா ரொம்ப திறமையான பையன் ண்ணா, இந்த கம்பெனிக்கு வேலைக்கு போகாததால சம்பளம் தான் கம்மியாகும் தான், ஆனா அதுக்காக சிவா ஏதோ ஒரு வேலைக்கு போக மாட்டான். அவன் திறமைக்கு ஏத்த வேலையா தான் கண்டிப்பா தேடுவான் பயப்படாதீங்க, அதுவுமில்லாம நிவி இப்போ குழந்தைத்தனமா அடம்பிடிச்சிட்டு இருக்கா, நாளைக்கே அனுபவம் அவளுக்கு நிறைய புரிய வைக்கும், அப்போ அவ மனசும் மாறலாம், சிவாவோட திறமைக்கு அவன் சொந்தமா ஆரம்பிக்கும் பிஸ்னஸும் நல்லா தான் போகும், இல்லன்னாலும் எந்தநேரமும் சிவாவோட படிப்புக்கும் எக்ஸ்பிரீயன்ஸ்க்கும் எந்த நாட்டுக்கு போனாலும் அவனுக்கு வேலை கிடைக்கும் ண்ணா, நிவியும் படிச்சிருக்கா, அதனால அவங்க எதிர்காலத்தை நினைச்சு பயப்பட தேவையில்லை.” என்று ஜெயச்சந்திரன் கூறவும்,

“நீ சொல்றதும் வாஸ்தவம் தான், அவங்க ரெண்டுப்பேரும் படிச்சவங்க, நல்லா யோசிச்சு தான் செய்வாங்க,” என்று ரவிச்சந்திரன் தம்பியின் பேச்சை ஆமோதித்தார்.

“அப்போ இவங்க கல்யாண பேச்சை ஆரம்பிப்போமா ண்ணா,” என்று ஜெயச்சந்திரன் கேட்க,

“இந்த கல்யாண விஷயமா திவாகரன் வீட்டில் என்ன முடிவில் இருக்காங்கன்னு தெரியலையே, இப்போ தான் செலவு செஞ்சு இவ்வளவுதூரம் வந்துட்டு போனாங்க, கிளம்பும்போது நிச்சயத்தை முடிச்சிட்டு கிளம்பலாம்னு ரொம்ப ஆவலா இருந்தாங்க, ஆனா அது முடியல, இப்போ அவங்க மனநிலை மாறியிருக்கலாமில்ல, அதெல்லாம் முதலில் தெரிஞ்சிப்போம் அதுக்கும் முன்ன நிவியிடம் இது சம்பந்தமா பேசுவோம், சிவாவும் நிவியும் இதைப்பத்தி ஏதாவது முடிவு செஞ்சு வச்சிருக்கலாமில்ல,” என்று ரவிச்சந்திரன் கூறினார்.

“இன்னும் நிவியிடம் இதைப்பத்தி சிவா எதுவும் பேசலன்னு தான் நினைக்கிறேன். இங்க வேலை கிடைச்சதும் தான் இதைப்பத்தி அவக்கிட்ட சொல்லணும்னு சிவா சொல்லிட்டு இருந்ததா திவா சொன்னான். ஆனா ஆது வந்து முதலில் நிவியிடம் விஷயத்தை சொல்லிட்டா, நாமளே இதைப்பத்தி அவக்கிட்ட கேட்டுட்டலாம், அப்புறம் திவாகரனிடம் பேசுவோம்,” என்று ஜெயச்சந்திரன் கூற,

“அப்படியா, அப்போ நிவியிடம் முதலில் கேட்போம்,” என்று ரவிச்சந்திரன் கூறியப்படியே, நிவேத்யாவின் அறை வாசலை பார்க்க, நிவேத்யா இவர்கள் பேசுவதை கேட்டப்படி அங்கு தான் நின்றிருந்தாள்.

முரண்படும்..