MNMN 9

MNMN 9
திருமணம் முடிந்த அன்று மறுவீட்டு சடங்கிற்காக நரேஷ் சாகித்யாவின் வீட்டிலேயே தங்கிவிட, அன்றிரவே அவர்களின் இல்லற வாழ்க்கையை இனிதே ஆரம்பித்தனர். மறுநாள் தங்கள் இல்லற வாழ்வின் இரகசிய பக்கங்களை அறிந்து கொண்ட பூரிப்பில் புதுமண தம்பதிகள் அவ்வப்போது இரகசியமாக காதல் பார்வை பார்த்தப்படி இருக்க,
“ஹே இப்போ உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு, காதலிக்கும்போதே இப்படி இரகசிய பார்வை பார்க்கலையாம், இப்போ என்ன நேராவே பார்த்துக்கோங்க,” என்று சிவாதித்யன் இருவரையும் கேலி செய்தான்.
புதுமண தம்பதிகள் இருவரோடு சேர்ந்து இளைஞர் பட்டாளம் அனைவரும் சிவாதித்யன் குடும்பம் தங்க ஏற்பாடு செய்திருந்த வீட்டில் அரட்டை அடித்து கொண்டிருக்க, அப்போது தான் சிவாதித்யன் இப்படி கூறினான்.
“ஆமாம், வெளிப்படையா காதலை சொல்லாம இருப்பவங்க தான் இப்படி ரகசிய பார்வை பார்த்துக்கணும், அப்படித்தானே ஷிவ்?” என்று ஆத்யா கேட்டாள்.
திருமண சடங்கின் போது சிவாதித்யனும் நிவேத்யாவும் கண்களாலேயே பேசி கொண்டதை கவனித்ததால் அவள் அப்படி சொல்லவும், அதை புரிந்து கொண்ட சிவாதித்யன் நிவேத்யாவை பார்க்க, அவளுக்கும் ஆத்யா சொன்னது புரிந்ததாலோ என்னவோ? அவளும் அப்போது அவனை பார்த்தாள்.
“ஆமாம், காதலை சொல்றதுக்கு முன்னமே, அதே காதல் அவங்க காதலிக்கிற நபரிடமும் இருக்கிறதான்னு இரகசியமா பார்த்து தெரிஞ்சிக்கறதில் ஒரு சுகம் இருக்கே, அதை வார்த்தையால் சொல்ல முடியாது. அதை அனுபவிச்சா தான் புரியும்,” என்று சிவாதித்யன் நிவேத்யாவின் பார்வையை சந்தித்தப்படியே கூற, நிவேத்யா உடனே தன் பார்வையை தாழ்த்தி கொண்டாள்.
“அந்தப்பக்கமிருந்து எப்படியான ரியாக்ஷன் வந்துச்சாம்?” என்று ஆத்யா கேட்க,
“அதெல்லாம் நம்ம எதிர்பார்த்த ரியாக்ஷன் தான் வரும், தெரிஞ்சு தானே பார்க்கிறோம்,” என்று சிவாதித்யன் பதில் கூறவும், அப்போதுதான் சாகித்யாவிற்கும் அவர்களின் பேச்சில் ஏதோ இருப்பதாக தோன்றியது.
“அப்படின்னா, அதெல்லாம் நாங்களும் கடந்து தான் டா வந்திருக்கோம், சகிக்கும் என்னை பிடிச்சிருக்குன்னு உணர்ந்ததால தான், உன்கிட்ட என்னோட காதலைப்பத்தி சொன்னேன். அதுக்கு முன்னாடி எங்களுக்குள்ளேயும் இந்த இரகசிய மொழியெல்லாம் இருந்துச்சு தெரிஞ்சுக்கோ,” என்று நரேஷ் சாகித்யாவை பார்த்தப்படி கூற,
“அப்புறம் இப்போ எதுக்குடா திரும்ப இந்த பார்வை?” என்று சிவாதித்யன் கேட்டான்.
“என்ன ஷிவ், இது கூட தெரியாதா? நேத்து என்ன நாள்? ஏற்கனவே ஏன் தான் விடிஞ்சுதோன்னு நினைச்சுட்டு இருப்பவங்களை தனியா விடாம, இங்க கூட்டிட்டு வந்து பேசிட்டு இருந்தா பாவம் அவங்க நிலைமயை யோசிச்சு பார்த்தீயா ஷிவ்,” என்று ஆத்யா அதற்கு பதில் கூற,
“ஓஹோ, அதான் விஷயமா? அப்போ நாம தான் காரணமா?” என்று சொல்லி சிவாதித்யன் சிரித்தான்.
“ஹே என்கிட்ட அடி வாங்க போறீங்க ரெண்டுப்பேரும்,” என்று சாகித்யா அவர்களை கோபித்து கொண்டாலும், முகம் வெட்கத்தில் சிவந்திருந்தது.
“ஆது, அக்கா செம கலர்னு இன்னைக்கு தான் தெரியுது? எப்படி முகம் சிவந்து போச்சு பாரேன்.” என்று நிவேத்யா கூற,
“ஹே நீயுமா? எல்லாம் சும்மா இருக்கப் போறீங்களா? இல்லையா?” என்று சாகித்யா செல்லமாக கோபித்து கொண்டாள். இப்படியே சிறிதுநேரம் இருவரையும் கேலி செய்தப்படி இருந்தார்கள்.
“சரி இன்னைக்கு என்ன பிளான்?” என்று சிவாதித்யன் அத்துடன் அந்த பேச்சை மாற்ற,
“நீயே ஏதாவது பிளான் வச்சுருப்பியே, என்னன்னு சொல்லு?” என்று நரேஷ் கேட்டான்.
“கல்யாண பிஸியில் எங்கேயும் போக முடியல, ஈவ்னிங் சினிமா போலாமா?” என்று சிவாதித்யன் கேட்க,
“ஹே சூப்பர், என்ன படம் போலாம்?” என்று தேவ் கேட்டான்.
“நான்தான் என்ன படம்னு சொல்லுவேன். அதுக்கு தான் எல்லாம் போகணும்,” என்று ஆத்யா கூறினாள்.
“நாளைக்கு உன்னோட பர்த்டேக்கு சில பிளான்ஸ் இருக்கு, அது நீ சொல்றபடி செய்வோம், இன்னைக்கு ஸ்பெஷல் டே சகிக்கும் நரேஷுக்கும் தான், அதனால அவங்களே என்ன படம்னு சொல்லட்டும்?” என்று சிவாதித்யன் கூற,
“அடப்பாவி, அப்போ நாங்க தனியா படத்துக்கு போறோம், நீங்கல்லாம் எதுக்குடா எங்க கூட?” என்று நரேஷ் கேட்டான்.
“அதானே, அக்காவும் மாமாவும் மட்டும் சினிமாக்கு போகட்டும், அவங்க தனியா டைம் ஸ்பெண்ட் செய்யட்டும், நாமல்லாம் எதுக்கு அவங்களை டிஸ்டர்ப் செய்துக்கிட்டு?” என்று நிவேத்யாவும் சொல்ல,
“இன்னும் 3 நாளில் ரெண்டுப்பேரும் ஹனிமூன் போயிடுவாங்க, வந்ததும் உடனே டெல்லிக்கு கிளம்பிடுவாங்க, அங்கல்லாம் இவங்களை யாரு டிஸ்டர்ப செய்ய போறா? இதுக்குப்பிறகு எல்லாம் இப்படி சேர்ந்திருக்க வாய்ப்பு எப்போ கிடைக்குமோ? அதனால இன்னைக்கு நம்மளோடவே அவங்க வரட்டும்,” என்று சிவாதித்யன் கூற,
‘ஆமாம் இவன் அவங்க ஹனிமூனுக்கே சிவ பூஜையில் கரடியா வரட்டுமான்னு கேட்டவனாச்சே, இவன்கிட போய் சொன்னோம் பாரு,’ என்று நினைத்து நிவேத்யா அவனை முறைத்தாள்.
நரேஷும், “அடப்பாவி நல்லா வருவடா நீ, எங்களை இப்படியெல்லாம் படுத்தறதுக்கு, உனக்கும் இப்படி ஒரு நேரம் வராமலா போகும், அப்போ நாங்க என்னல்லாம் செய்யப்போறோம் பாரு,” என்றான்.
“எனக்கு வரப்போற பொண்ணும், நம்ம சகி மாதிரி தான் ரொம்ப நல்ல பொண்ணு, என்ன அடிச்சாலும் தாங்கிக்கும்,” என்று சிவாதித்யன் நிவேத்யாவை பார்த்தப்படி கூற, அவளோ அவனை முறைத்தாள்.
“அடப்பாவி என்னை மாதிரி அப்பாவி பொண்ணு வேணுமா உனக்கு, உனக்கெல்லாம் உன்னை நல்லா ஆட்டிப்படைக்கும் பொண்ணு தான் வரும்,” என்று சாகித்யா கூற,
“ஆமாம் இப்போ மட்டும் என்னவாம், இப்பவே அவ என்னை ஆட்டிப்படைக்க ஆரம்பிச்சிட்டா,” என்று யாருக்கும் கேட்காதபடி சிவாதித்யன் வாய்க்குள்ளேயே முனகினான்.
“என்னடா வாய்க்குள்ளேயே முனகற, நீ சரியில்லையே, காதலைப்பத்தியும் உன்னோட வருங்கால மனைவி பத்தியெல்லாம் பேசற, என்னவோ இருக்கு போல,” என்று சாகித்யா கேட்கவும்,
“அக்கா, எப்போதும் நரேஷ் மாமாவை பத்தி மட்டுமே நினைச்சுக்கிட்டு இருக்காத, சுத்தியும் என்ன நடக்குதுன்னு பாரு,” என்று ஆத்யா கூறினாள்.
“என்னடி சொல்ற, அப்போ ஏதோ சம்திங் சம்திங் அப்படித்தானே,” என்று சாகித்யா கேட்டவள்,
“ஷிவ் என்கிட்ட சொல்லவே இல்லை பார்த்தீயா?” என்று கேட்டாள்.
“ஹே ஆதுக்கு வேற வேலையில்லை. இப்போ நாம என்ன பேசிட்டிருந்தோம், அதைப்பத்தி பேசு,” என்றவன், தேவ் வேறு அருகில் இருக்கிறான் என்று கண்களாலேயே ஜாடை காட்டினான்.
அதன்பின், “என்ன மூவின்னு சொல்லுங்க, இப்போ இங்க என்ன மூவி ரிலீஸ் ஆகியிருக்கு,” என்று தனது அலைபேசியை எடுத்து ஆராயந்தப்படியே அவன் கேட்க,
“அக்காவும் மாமாவும் மட்டும் இன்னைக்கு போகட்டுமே, நாமெல்லாம் இன்னொரு நாள் போகலாம்,” என்று நிவேத்யா திரும்ப அதையே கூறினாள்.
“இருக்கட்டும் நிவி, சிவா சொல்றது போல, நாமெல்லாம் இப்படி ஒன்னா டைம் ஸ்பெண்ட் செய்ய திரும்ப எப்போ நேரம் கிடைக்குமோ தெரியாது. அதனால எல்லாம் சேர்ந்தே சினிமா போகலாம், நாங்க சும்மா அவனிடம் விளையாட்டுக்கு பேசினோ, எங்களுக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை.” என்று நரேஷ் கூற, சாகித்யாவும் அதை ஆமோதித்தாள்.
அடுத்து எந்த திரைப்படம் என்பதை முடிவு செய்தவர்கள், சாப்பிட வரச் சொல்லி அழைப்பு வரவும், அங்கிருந்து அனைவரும் கலைந்து செல்ல, “ஒருநிமிஷம்,” என்று நிவேத்யாவை நிறுத்திய சிவாதித்யன்,
“சகி, நரேஷ்க்கு தனிமை கொடுக்கலன்னு கோபம் தானே, எல்லாம் சேர்ந்து போனாலும், நான் அவங்களுக்கு தனியா கப்பிள் சீட் தான் புக் செய்யப் போறேன். சினிமா பார்க்கும்போது அவங்க தனியா தான் பார்ப்பாங்க போதுமா?” என்றான்.
“ம்ம் அப்படின்னா ஓகே தான்,” என்று நிவேத்யா பதில் கூற,
“அப்படியே இன்னொரு கப்பிள் சீட்டும் புக் செய்யவா?” என்று அவன் கேட்கவும், அவள் புரியாமல் பார்த்தாள்.
“நம்ம ரெண்டுப்பேருக்கும் தான்,” என்று அவன் சொல்ல,
“இது ஜோக்னு சொல்லிட்டீங்கன்னா, நானும் கொஞ்சம் சிரிச்சிப்பேன்.” என்ற அவளது பதிலில்,
“அதானே பிடி கொடுத்து பேச மாட்டீயே,” என்று அவன் வாய்க்குள்ளேயே முனகினான்.
அவனது முனகலில் அவனுக்கு தெரியாமல் கள்ளச் சிரிப்பு சிரித்தவள், “என்ன அப்பப்போ வாய்க்குள்ளேயே முனகிக்கிறீங்க?” என்று கேட்டாள்.
“வேற என்ன செய்ய? இப்படி வாய்க்குள்ளேயே புலம்பணும்னு என் தலையில் எழுதியிருக்கு போல,” என்று அவன் சொல்லவும், அவளும் வெளிப்படையாகவே அவனை பார்த்து சிரித்துவிட்டு செல்ல,
“ராட்சஷி, இப்படி என்னை புலம்ப விட்டுட்டு சிரிப்பு வேற,” என்று அதற்கும் அவனால் புலம்ப மட்டுமே முடிந்தது.
அடுத்து பெரியவர்கள் யாராவது திரைப்படம் பார்க்க வருகிறார்களா? என்று கேட்க, அவர்கள் வர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். சிபியும் தனக்கு வேலை இருப்பதாக சொல்ல, இவர்களுக்கு மட்டும் சிவாதித்யன் டிக்கெட் பதிவு செய்து கொண்டான்.
அங்கே போனதும் சாகித்யா, நரேஷிற்கு கப்பிள் சீட் எடுத்திருப்பதாக சிவாதித்யன் சொல்லவும், “எதுக்கு டா, நாங்களும் உங்களோடவே படம் பார்த்திருப்போமே, ஏன் எங்களுக்கு மட்டும் தனி சீட்?” என்று நரேஷ் கேட்க,
“போதும், எங்களுக்கு எதுக்கு புதுசா கல்யாண ஆன ஜோடிங்க சாபம், ரொம்ப சீன் போடாம தனியா போய் படத்தை பார்த்து எஞ்சாய் செய்ங்க, போங்க, போங்க,” என்று சிவாதித்யன் கூறவும்,
‘இதற்குமேல பேசினால் இதற்கும் நண்பன் ஏதாவது ஆப்பு வைத்து விடுவான்.’ என மனதில் நினைத்த நரேஷ்,
“சரி வா சகிம்மா,” என்று அவளை அழைத்து கொண்டு தனியாக சென்றான்.
மற்ற நால்வருக்கும் சுவரோரமாய் நான்கு இருக்கைகளை சிவாதித்யன் பதிவு செய்திருக்க, சுவரோர கடைசி இருக்கை தனக்கு வேண்டுமென்று சொல்லி தேவ் சென்று அங்கு அமர்ந்துவிட,
“நான் தேவ் பக்கத்தில் உட்கார்ந்துக்கிறேன். நீ என் பக்கத்தில் உட்கார்ந்துக்க,” என்று ஆத்யாவிடம் சொல்லிவிட்டு நிவேத்யா அமர்ந்துவிடவும், சிவாதித்யன் ஏமாற்றத்தோடு அவளை பார்த்தவன், ஆத்யாவின் அருகில் அமர்ந்து கொண்டான்.
படம் ஆரம்பித்து சிறிதுநேரம் சென்றதும், “ஆது, ஆது,” என்று சிவாதித்யன் அவளது கைகளை சீண்ட,
“என்ன ஷிவ், இன்ட்ரஸ்ட்டான சீன் போயிட்டிருக்கு, இப்படி தொல்லை செய்ற, என்ன பிரச்சனை உனக்கு?” என்று ஆத்யா எரிச்சலோடு அவனுக்கு மட்டுமே கேட்கும்படி கேட்டாள்.
“எனக்கு என்ன வேணும் தெரியாதா? என்னோட காதலுக்கு உதவியெல்லாம் செய்றதா சொல்லிட்டு, இப்படி எனக்கும் நிவிக்கும் நடுவில் நந்தி போல உட்கார்ந்திருக்கியே, இது உனக்கே நல்லா இருக்கா?” என்று அவன் கேட்க,
“அடப்பாவி, நேத்து சோளக் கொள்ளை பொம்மை, இன்னைக்கு நந்தியா? நீங்க கல்யாணம் செஞ்சுக்குறதுக்குள்ள இன்னும் என்னெல்லாம் பேரோ எனக்கு? அவ தானே அங்க உட்காரணும்னு உட்கார்ந்தா? அதுக்கு நான் என்னடா செய்யட்டும்?” என்று அவள் கேட்டாள்.
“இப்படி சொன்னா எப்படி? நீதான் ஏதாவது செய்யணும்?” என்று அவன் பாவமாக சொல்ல,
“உன்னை எப்படி நான் நம்பறது? என்னோட அக்காக்கிட்ட நீ ஏதாச்சும் சில்மிஷம் செஞ்சீன்னா?” என்று அவள் கேட்கவும்,
“யாரு நானு? அதுவும் உன்னோட அக்காக்கிட்ட, இப்படியும் நடக்கும்னு உனக்கு ஒரு நினைப்பு இருக்கா? உன் அக்காக்கிட்ட மாட்டிக்கிட்ட நான் எவ்வளவு பாவம்னு உனக்கே தெரியும், அப்படியும் நீ இப்படி பேசற பார்த்தீயா?” என்றான் அவன்,
“சரி சரி விடு, ஒரு பத்து நிமிஷம் காத்திரு, நான் அவளை இங்க உட்கார வைக்கிறேன். அதுக்குள்ள என்னை சீண்டிக்கிட்டே இருக்காத, அதைப் பார்த்து நாம ரெண்டுப்பேரும் லவ்வர்ஸ்னு எல்லாம் தப்பா நினைச்சுக்க போறாங்க,” என்று ஆத்யா கூறினாள்.
அதன்பின் அவள் சொன்னது போல் சிவாதித்யன் நிவேத்யா அவன் அருகில் அமரும் தருணத்திற்கு காத்திருக்க, ஆத்யாவோ நிவேத்யாவிடம் திரும்பியவள், “நிவி எனக்கு முன்னாடி உட்கார்ந்திருக்கவங்க உயரமா இருக்காங்க, எனக்கு சரியா படம் தெரியல, நீ இங்க வந்து உட்கார்ந்துக்கிறீயா?” என்று கேட்க,
இத்தனைநேரம் சிவாதித்யனும் அவளும் பேசி கொண்டிருந்தது அவளுக்கு தெரியும், ஆனால் என்ன விஷயம் என்பது அவளுக்கு சரியாக கேட்கவில்லை. இப்போதோ ஆத்யா அவளை மாறி அமர சொல்வதிலேயே அது என்னவாக இருக்குமென்பது நிவேத்யாவிற்கு புரிந்ததால்,
“நம்ம சீட் கொஞ்சம் உயரமா தானே இருக்கு, நீயும் உயரமா தான் இருக்க, அப்புறம் எப்படி மறைக்கும்?” என்று கேட்டாள்.
“நிஜமா எனக்கு சரியா தெரியல நிவி, நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் செஞ்சுப்ப, என்னால முடியல, கார்னர் சீட் கேட்டா தேவ் தரமாட்டான். அதனால நீ இங்க வந்து உட்காரேன் பிளீஸ்,” என்று அவள் கெஞ்சவும்,
“உங்க கூட படம் பார்க்க வந்தேன் பாரு, என்னை சொல்லணும்,” என்று நிவேத்யா சலித்து கொண்டாலும், இருவரும் இடம் மாறி அமர்ந்து கொண்டார்கள்.
“என்னாச்சு? ஏன் ரெண்டுப்பேரும் மாறி உட்கார்ந்துக்கிட்டீங்க?” என்று சிவாதித்யன் தெரியாதது போல் நிவேத்யாவிடம் கேட்க,
அவனை திரும்பி முறைத்தவளோ, “ஏன்னு உங்களுக்கு தெரியாது. அதை நான் நம்பணுமா?” என்று கேட்க, சிவாதித்யனோ அசடு வழிய, அவளோ அவனுக்கு தெரியாமல் புன்னகைத்து கொண்டாள்.
சிறிதுநேரம் கழித்து அவள் அருகில் சென்றவன், “கப்பிள் சீட் மிஸ் ஆனாலும், இதுவும் நல்லா தான் இருக்கு,” என்று சொல்ல,
அவளுமே அதை உணர்ந்ததாலோ என்னவோ? அவனை முறைக்க முயன்று தோற்று போனாள்.
மொத்தத்தில் இருவருக்குமிடையே வெளிப்படையான காதலோ, சின்ன சின்ன தீண்டல்களோ, காதல் பேச்சுக்களோ இல்லையென்றாலும் அந்த அருகாமையை இருவருமே ரசித்தனர். விரும்பினர்.
முரண்படும்..