MNMN 8

MNMN 8

இளஞ்சிவப்பு நிறத்தில் சட்டையும் அதே நிறத்தில் கரை வைத்த வெள்ளை வேட்டியும் அணிந்து, சிவாதித்யன் கம்பீரமாக திருமணத்திற்கு தயாராகி வந்தான். திருமணத்தன்று சிபி, சிவாதித்யன், தேவ் மூவரும் வேட்டி சட்டை தான் போட வேண்டுமென்று ஏற்கனவே சாகித்யாவும் நரேஷும் தீர்மானித்து வைத்திருக்க,

“வேஷ்டி சட்டையா? என்னால அதெல்லாம் போட முடியாது. இதுக்கு வேற ஆளை பாருங்க, எனக்கு எந்த ட்ரஸ் கம்ஃபார்ட்டா இருக்கோ அதைத்தான் போடுவேன். வேஷ்டியை கட்டிட்டு அது எப்போ கழண்டுக்குமோன்னு என்னை டென்ஷனா சுத்த சொல்றீயா? அவங்க போட வேண்டிய ட்ரஸ் என்னன்னு அவங்கவங்க தான் தீர்மானிக்கணும், நீங்க என்ன இதெல்லாம் முடிவு செய்றது?” என்று சிவாதித்யன் வீடியோ காலில் சாகித்யாவையும் நரேஷையும் சிடுசிடுத்து பேச,

“பொண்ணுங்க பட்டு புடவை, நீங்கல்லாம் வேஷ்டி, சட்டைன்னு ட்ரஸ் கோட் முடிவு செஞ்சிருக்கோம் ஷிவ், பெரியவங்க சின்னவங்க எல்லோருக்குமே இந்த ட்ரஃஸ் கோட் தான், எங்க வீட்டில் எல்லாம் ஓகே சொல்லிட்டாங்க, நரேஷ் வீட்டிலும் ஓகே சொல்லிட்டாங்க, ஆன்ட்டி, அங்கிள், தேவ் இவங்கல்லாம் கூட ஓகே சொல்லிட்டாங்க, ஆனா நீதான் ஓவரா சீன் போட்ற, இப்போல்லாம் ஒட்டிக்கோ கட்டிக்கோ வேஷ்டி வந்துடுச்சு ஷிவ், அதனால அதெல்லாம் ஒரு பிரச்சனையேயில்லை.” என்று சாகித்யா அவனை சம்மதிக்க வைக்க பேசி கொண்டிருக்க,

“அவன் எப்படி போடாம போவான். அவனை இந்த ட்ரஸ் போட வைக்க வேண்டியது என் பொறுப்பு சகிம்மா, நீ அவனுக்கு வேஷ்டி சட்டை எடுக்க வேண்டிய வேலையை பாரு,” என்று நரேஷ் அதற்கு பதில் கூறினான்.

“ஆக ரெண்டுப்பேரும் முடிவு செஞ்சுட்டீங்க, என்னமோ செய்ங்க, ஆனா மேரேஜ் அன்னைக்கு யார் மாப்பிள்ளைன்னு யாரும் குழம்பிட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை நரேஷ்,” என்று சிவாதித்யன் கூற,

“என்னோட சகி செல்லத்துக்கு நான்தான் மாப்பிள்ளைன்னு தெரியுமில்ல, அதுபோதும்டா எனக்கு,” என்று நரேஷ் பதில் கூறினான்.

அவன் இங்கு வருவதற்கு முன்பு நடந்தது இது, அதன்படி சாகித்யாவும் ஆத்யாவும் தேர்ந்தெடுத்து வாங்கி வைத்திருந்த வேஷ்டி சட்டையை தான், வேண்டா வெறுப்பாக அணிந்து அவன் தயாராக, “கல்யாண மாப்பிள்ளை நானே தயாராகிட்டேன். உனக்கு இவ்வளவு நேரமா?” என்று நரேஷ் தான் புலம்பி கொண்டிருந்தான்.

நரேஷை மணமேடைக்கு அழைக்கவும், மாப்பிள்ளை தோழனாக சிவாதித்யன் தான் அவனை மணமேடையில் அமர வைத்து விட்டு வர, அவன் அருகே சென்ற வனிதா, “அய்யோ என் பிள்ளை என்ன அம்சமா இருக்கான். என் கண்ணே பட்டுடும் போல, வேஷ்டி சட்டை போட்டதும் உனக்கும் கல்யாணக் களை வந்துடுச்சு, சீக்கிரம் உனக்கும் ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணத்தை முடிக்கணும்,” என்று சொல்ல, அவன் கண்களோ உடனே நிவேத்யா எங்கே என்று தேடியது.

அவளும் சற்று தொலைவில் நின்று அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள். அவனை பார்க்க கூடாது என்று நினைத்தாலும், வேஷ்டி சட்டையில் கம்பீரமாக தெரிந்தவனில் அவளையும் மீறி கொஞ்சம் கொஞ்சமாக தொலைந்து கொண்டிருந்தாள். அவன் இதெல்லாம் அணிய மாட்டான் என்று அவள் நினைத்திருக்க, அதற்கு மாறாக அவன் வேட்டி சட்டை அணிந்து வந்ததில் அவனை கண்டு வியப்பாகி போயிருந்தாள்.

ஆனாலும் இதற்கிடையில் நேற்று அவனைப்பற்றி கேள்விப்பட்ட விஷயம் அவளுக்கு ஒருபக்கம் உறுத்தலாக தான் இருந்தது. ஆனாலும் ‘அது அவனோட பர்சனல், அவனுக்கு வேண்டியவங்களே சும்மா இருக்கும்போது எனக்கென்ன வந்துச்சாம்?’ என்று அந்த விஷயத்தை அவள் கடந்து போக நினைத்தாலும் அது அவளுக்கு கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது.

சிவாதித்யன் அவளை பார்க்கவும் உடனே அவள் தன் பார்வையை தாழ்த்தி கொண்டாள். ஆனாலும் அவன் அதை கண்டு கொண்டான். அதிலும் அவளும் அதே இளஞ்சிவப்பு நிறத்தில் பட்டுப்புடவை கட்டியிருந்ததை பார்த்து அவன் கண்கள் வியப்பை காட்டியது. இது யாருமே திட்டமிட்டு செய்தது கிடையாது. தற்செயலாக அமைந்த ஒன்று தான், ஆனாலும் அவன் மகிழ்ந்து போனான். அவளுக்குமே அது வியப்பு தான்,

“சரிம்மா, ஒரு சின்ன வேலை வந்துட்றேன்.” என்று வனிதாவிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து விலகி வந்தவன், அவளை நோக்கி தான் சென்றான்.

நேற்றிலிருந்து அவளது பாராமுகம் அவனுக்கு மிகவுமே கஷ்டமாக இருந்தது. அதற்கு என்ன காரணம் என்றும் அவன் அறிவான். இரவு படுக்க செல்வதற்கு முன் ஆத்யாவை தனியாக அழைத்து அவளிடம், “நிவிக்கு என்ன ஆச்சு ஆது, என்னை ஒருமுறை கூட பார்க்க மாட்டேங்குறா?” என்று கேட்க,

“அதுவா தம்பி, கொஞ்சநேரம் முன்ன தான் உன் வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறுச்சு தெரியுமா?” என்று ஆத்யா அவனை கேலி செய்தாள்.

“விளையாடாத ஆது, வண்டவாளமா? என்ன வண்டவாளம்?” என்று அவன் புரியாமல் கேட்க,

“இப்போ நீங்க நடத்தினீங்களே பார்ட்டி, அதுபத்தி நிவிக்கு தெரிஞ்சிடுச்சு, நீ குடிப்ப, அதாவது சரக்கடிப்பன்னு நிவி தெரிஞ்சிக்கிட்டா,” என்று ஆத்யா விளக்கமாக கூறினாள்.

“இதைப்பத்தி நீதான் நிவியிடம் சொன்னீயா?” என்று அவன் சந்தேகமாக கேட்க,

“நான் ஏன் அதெல்லாம் சொல்லப் போறேன். நீ வந்து பார்ட்டி பத்தி நரேஷ் மாமாவிடம் பேசினீயா? அதைக் கேட்டுட்டு நிவி சாகி அக்காவிடம் நரேஷ் மாமா குடிப்பாங்களா? நீ குடிப்பீயான்னு எல்லாம் கேட்டு தெரிஞ்சிக்கிட்டா,” என்று நடந்ததை ஆத்யா விளக்கமாக சொல்லவும்,

“சரி அதனால என்ன? நான் ஒன்னும் டெய்லி குடிக்கிறவன் இல்லை. எப்பயாச்சும் இப்படி பார்ட்டின்னு சொல்லி குடிக்கிறது தான், அதிலும் என்னோட லிமிட் என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும், இதனால நான் குடிகாரன்னு அர்த்தமாகிடாது.” என்றான் அவன்,

“ஆனா இன்னைக்கு கொஞ்சமா ஆரம்பிக்கிற பழக்கம் தான், நாளைக்கு நம்ம கன்ட்ரோலையும் மீறி குடிக்க தூண்டும் என்பது நிவியோட கருத்து, நிவி சொல்றது தான் உண்மை என்பது என்னோட கருத்தும் கூட, ஆனா நாங்க சொன்னால்லாம் நீங்க கேட்பீங்களா? அதான் நான் இதை கண்டுக்காத மாதிரி போயிட்றது.

ஆனா நிவி அப்படியில்லை. பெரியப்பா ஒருமுறை அபிஷியல் பார்ட்டின்னு குடிச்சிட்டு வந்ததுக்கு அவரிடம் கிட்டத்தட்ட ஒருமாசம் அவ பேசாம இருந்தா தெரியுமா? இனி குடிக்க மாட்டேன். உன் மேல சத்தியம்னு பெரியப்பா அவளிடம் மன்னிப்பு கேட்டதுக்கு பிறகு தான் அவ பெரியப்பாவிடம் பேசினா,

எங்க அப்பாவும் சில சமயம் இப்படி குடிப்பாருன்னு அவளுக்கு தெரியும், ஆனா நாங்க பெங்களூருவில் இருந்ததாலோ என்னவோ எங்க அப்பாவிடம் அவ அவ்வளவு உரிமை எடுத்துக்கல, ஆனா குடிச்சிருந்தாருன்னா அப்பா அவ முன்னாடி போகவே பயப்படுவாரு, இந்த விஷயத்தில் நிவி அவ்வளவு ஸ்ட்ரிக்ட். அதான் நான் முதலிலிருந்தே அவ உனக்கு செட் ஆக மாட்டான்னு சொல்லிட்டு இருக்கேன்.” என்று ஆத்யா சொல்ல,

“ப்ளீஸ் இப்படி நெகட்டிவ்வா பேசாத ஆது, இதான் விஷயம்னு சொல்லிட்டல்ல அதுபோதும் எனக்கு, மீதியை நான் பார்த்துக்கிறேன்.” என்று அவனும் கூறியிருந்தான். ஆனால் நிவேத்யாவை எப்படி சமாதானப்படுத்துவது என்பது தான் அவனுக்கு தெரியவில்லை. இப்போதோ அவளே அவனை பார்த்து வைக்கவும், அவளிடம் பேச சென்றான்.

அவன் தன்னை நோக்கி தான் வருகிறான் என்று தெரிந்து அவள் ஏதோ வேலை இருப்பது போல் அந்த இடத்தை விட்டு நகரவும், அதற்குள் அவள் அருகில் சென்றவன், “வேஷ்டி சட்டையில் நான் அப்படியே ஹீரோ மாதிரி இருக்கேனா நிவி, என்னையே வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருந்த?” என்று அவன் அவளை சீண்ட,

“சிலருக்கு நினைப்பு தான் பிழைப்பை கெடுத்துச்சாம், உங்களுக்கு வேற வேலையே இல்லையா? நீங்க தானே நரேஷ் மாமாக்கு மாப்பிள்ளை தோழன். கூரை வேஷ்டி கொடுத்தப்பனுப்பும் போது நீங்க தானே அவங்களை கூட்டிட்டு போகணும், அங்க உங்களை கூப்பிடுவாங்க போங்க, அங்க பக்கத்திலேயே இருங்க,” என்று அவளோ அவனை விரட்டுவதில் குறியாக இருந்தாள்.

“இனி எனக்கு அங்க வேலையில்லை. எல்லாம் உங்க அண்ணன் சிபி பார்த்துப்பான். அதனால அவங்க திரும்ப மணமேடைக்கு வந்து உட்காரும்போது போயிக்கலாம், ஆனா நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்ல மாட்டீயே, இப்படி ஏதாவது மாத்தி பேசிடுவியே, உன்னோட கண்ணுக்கு நான் எப்போதும் வில்லனா தான் தெரியுறேன் போல, அப்புறம் எங்க இருந்து ஹீரோவா தெரிய? ஆனா இந்த பட்டுப்புடவையில் நீ என்னோட கண்ணுக்கு தேவதையா தெரியற,” என்று அவன் கூற,

“எந்த ஊரில் தேவதை பட்டுப்புடவை கட்டியிருந்ததாம்?” என்று அவள் கேட்டாள்.

“அப்பா எவ்வளவு பெரிய டவுட்டு, தேவதையை கூட்டிட்டு வந்து பட்டுபுடவை கட்டி விட்டா எப்படி இருக்கும் தெரியுமா? அப்படியிருக்க போதுமா?” என்று அவன் சொல்ல,

“ஓ அப்படி சொல்ல வரீங்களா? ரொம்ப தேங்க்ஸ்,” என்று அவள் இழுத்து சொல்ல,

‘இந்த தேங்க்ஸ்க்கா இதெல்லாம் நான் பேசிட்டு இருக்கேன்.” என்று நினைத்தவன்,

“சரி நாம மேட்சிங்கா சேம் கலர்ல ட்ரஸ் போட்ருக்கோமே, இந்த கோ இன்ஸிடென்ஸ் எப்படி அமைஞ்சுதாம், அப்போ நமக்குள்ள ஏதோ கனெக்ட் ஆகுதுல்ல,” என்று கேட்க,

“நாம மட்டுமா ஒரே கலரில் ட்ரஸ் போட்ருக்கோம்,” என்று சொல்லியப்படி, திருமணத்தில் கலந்து கொண்ட கூட்டத்தை பார்வையால் ஒரு அலசு அலசியவள்,

“அதோ அந்த பாட்டி கூட தான் இந்த கலரில் புடவை கட்டியிருக்காங்க, அதோ அந்த ஆன்ட்டி அவங்களும் இதே கலரில் புடவை கட்டியிருக்காங்க, அப்போ அவங்களுக்கும் உங்களுக்கு ஏதோ கனெக்ட் ஆகுது போல,” என்றவள்,

“வாவ் அதோ ஹான்ட்சம்மா ஒரு யங் பர்சன் நின்னுட்டு இருக்காரே, அவர் கூட இந்த கலரில் தான் ஷர்ட் போட்டுருக்கார். அப்போ அவருக்கும் எனக்கும் ஏதோ கனெக்ட் ஆகுது போல,” என்று அவள் சொல்லி முடிக்கவில்லை.

அவளின் வாயை தன் கைகளால் பொத்தியவன், “போதும்மா தாயே, ஒரே கலரில் ட்ரஸ் போட்டதால் நமக்குள்ள எதுவும் கனெக்ட் ஆகல போதுமா? புரியாதவங்களுக்கு புரிய வைக்கலாம், புரிஞ்சும் புரியாத மாதிரி நடிக்கறவங்களுக்கு எப்படி புரிய வைப்பதாம்?

அப்புறம் என்ன சொன்ன? எனக்குன்னா பாட்டி, ஆன்ட்டிங்க கூட கனெக்ட் ஆகுது. உனக்கு மட்டும் ஒரு யங் பர்சன் கூடவா?” என்று கேட்டவன், அவனும் அந்த கூட்டத்தை பார்வையால் அலசியவன்,

“வாவ் அங்க பாரு, ஒரு ப்யூட்டி கல்யாணத்துக்கு வந்துட்டு இருக்கு, அந்த பொண்ணும் இந்த கலர் ட்ரஸ் தான் போட்டிருக்கு, அப்போ எனக்கும் அந்த பொண்ணுக்கும் கனெக்ட் ஆகுது தானே?” என்று கேட்க,

அவன் அப்படி வாயை பொத்துவான் என்று எதிர்பார்க்காது முதலில் திகைத்து விழித்தவள், அவன் ஒரு பெண்ணை பற்றி பேசியதும், உள்ளுக்குள் எழுந்த பொறாமையில் அவனது கைகளை தன் வாயிலிருந்து பிரித்தவள், அவன் காட்டிய திசையை பார்க்க, ஒரு ஐந்து வயது சிறுமி இளஞ்சிவப்பு நிறத்தில் பாவாடை சட்டை அணிந்து வருவதை பார்த்ததும் தான் அவன் வேண்டுமென்றே சொல்கிறான் என்பதை புரிந்து கொண்டவள் அவனை பார்க்கவும்,

அவனோ அவளை பார்த்து கண்ணடித்தவன், “என்ன கனெக்ட் ஆதுது தானே?” என்று கேட்டான்.

அவளோ அதற்கு பதில் கூறாமல், “இவ்வளவு கூட்டத்தில் வாயை பொத்தறீங்க? கண்ணடிக்கிறீங்க? யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க?” என்று கோபமாக கேட்க முயற்சித்து அது முடியாததால் சாதாரணமாக கேட்டு வைக்க,

“அப்போ உனக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லையா?” என்று அவன் கேட்டான்.

அதற்கும் அவள் பதில் கூறாமல், “உங்களோட வெட்டியா பேசிட்டு இருக்க எனக்கு நேரமில்லை. நரேஷ் மாமா போனதும் சாகி அக்காவை தான் கூப்பிடுவாங்க, அவ ரெடியாகிட்டாளான்னு தெரியல, நான் போய் பார்க்கிறேன்.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

ஒரு புன்னகையையும் குறும்பான பார்வையை மட்டுமே அவளோடு தொடர விட்டவன், அங்கேயே நின்றிருக்க, “ஷிவ் நான் இந்த பட்டுப்புடவையில் அழகா இருக்கேனா?” என்று கேட்டப்படி ஆத்யா அங்கு வந்து நின்றாள்.

அவளை பார்த்து சட்டென சிரித்தவன், “அப்படியே சோள கொள்ளை பொம்மைக்கு புடவை கட்டி விட்டது போலவே இருக்க ஆது, அதிலும் இந்த ரெட் கலர் வேற, இதே கெட்டப்போட வெளிய போயிடாத, மாடு வந்து முட்டிட போகுது.” என்று கேலி செய்ய,

“போடா, புடவையில் நிவி தேவதையா இருக்கா, நான் சோள கொள்ளை பொம்மை மாதிரி இருக்கேனா? நான் உனக்கு சாபம் விட்றேன். நிவி உனக்கு,” என்று அவள் ஏதோ சொல்ல வருவதற்கு முன்பே, அவளது வாயை பொத்தியவன்,

“ஹே நேத்து தானே எதுவும் நெகட்டிவ்வா பேசாதன்னு சொன்னேன். ஆமாம் என்ன எங்களையே ஃபாலோவ் செய்றீயா? உனக்கு வேற வேலையே இல்லையா?” என்று கேட்டான்.

அவன் கையை வாயிலிருந்து பிரித்தவள் “உனக்கு தான் வேற வேலை இல்லை. நிவி பின்னாடியே சுத்திட்டு இருக்க, அவளும் அதைத்தானே கேட்டா, அதுவும் இத்தனை பேர் இருக்க கூட்டத்தில் அவளோட வாயை பொத்தற, எனக்கென்னமோ கூட்டத்தில் சிக்கி நீ கல்லடி வாங்கப்போறேன்னு தான் தோனுது.” என்று அவளும் விடாமல் பதில் கூற

“இப்போ இதே கூட்டத்தில் உன்னோட வாயையும் தானே பொத்தினேன். இதை அப்போ தப்பா நினைக்க மாட்டாங்களா? அப்புறம் அது மட்டும் எப்படி தப்பாகும்? நிவி திரும்ப என்கிட்ட பேசுவாளோ இல்லையோன்னு டென்ஷனாகவே இருந்துச்சு, ஆனா அவ பேசிட்டா, நீ என்னடான்னா நிவி விஷயத்தில் நெகட்டிவ்வாகவே பேசிட்டு இருக்க, உனக்கு பாஸிட்டிவ்வாகவே பேச வராதா?” என்று அவன் கேட்டான்.

“நான் கேட்டதுக்கு அப்பவே நீ அழகா இருக்க ஆதுன்னு சொல்லியிருந்தா நானும் அதோட போயிருப்பேன். நீதானே என்னை சோள கொள்ளை பொம்மை அது இதுன்னு சொன்ன, நாம சின்ன வயசிலிருந்து இப்படித்தான் பழகறோம், யாராச்சும் கேட்டா கூட நமக்கு முன்ன நம்ம அப்பா, அம்மாவே இதுக்கு பதில் சொல்லிடுவாங்க, ஆனா நிவி விஷயம் அப்படியில்லை. அதான் கவனமா இருன்னு சொல்றேன்.

அப்புறம் நிவி பேசிட்டாளேன்னு நினைச்சும் சந்தோஷப்படாத, அவ எதையும் பளிச்சுன்னு அப்பவே வெளிப்படையா பேசறவ இல்ல, மனசுக்குள்ள அந்த விஷயம் அவளை உறுத்திக்கிட்டு தான் இருக்கும், ஆனாலும் உன்கிட்ட அவளுக்கு என்ன உரிமை இருக்கு அப்படின்னு தான் அவ நினைப்பா, சீக்கிரம் நிவியிடம் உன்னோட காதலை சொல்ல பாரு, அப்போ தான் அவளும் அவ மனசுல இருப்பதை வெளிப்படையா சொல்லுவா,” என்று ஆத்யா சொல்ல,

“ம்ம் இந்த கல்யாண பிஸி குறையட்டும், அப்புறம் அவளிடம் நேரடியா பேசறேன்.” என்றவன்,

“அப்புறம் இந்த புடவையில் எப்படி இருக்கன்னு தானே கேட்ட, எப்படி இருக்க தெரியுமா? அப்படியே சினிமால காட்டும் அம்மன் மாதிரி,” என்று அவன் சொல்ல,

அவள் அதில் மகிழ்ந்து போனவளாக அவனை பார்க்க, “காளியம்மன் மாதிரி,” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டான். அவளும் கோபத்துடன் அவனை திட்டி தீர்த்தாள்.

அடுத்து சிறிது நேரத்தில் நரேஷ், சாகித்யா இருவரும் மணமேடை வந்து அமர்ந்ததும் திருமண சடங்குகள் ஆரம்பிக்க, சிவாதித்யன், நிவேத்யா, ஆத்யா அனைவரும் மணமேடையில் தான் அவர்களை சூழ்ந்தப்படி நின்றிருந்தனர். குறிப்பிட்ட முகூர்த்தத்தில் நரேஷ் சாகித்யாவின் கழுத்தில் மங்கல நாணை சூடி அவளை தன் சரி பாதி ஆக்கி கொள்ள, அனைவரும் அட்சதை தூவி அவர்களை வாழ்த்தினர்.

அந்தநேரம் சிவாதித்யன் நிவேத்யாவை பார்க்க, அவளும் அதேநேரம் அவனை பார்த்தாள். பார்வையால் இருவரும் பேசி கொண்ட சேதி என்னவோ?

முரண்படும்..