MNMN 7

MNMN 7

சென்னை போக்குவரத்து நெரிசலை கடந்து சிவாதித்யனும் நிவேத்யாவும் ஒருவழியாக வீட்டை அடைந்தனர். சந்திர நிவாசத்தின் நுழைவு வாயிலில் வண்டியை நிறுத்திவிட்டு அந்த தெருவை பார்க்க அது இருளில் மூழ்கியிருந்தது. அங்கு மின்சாரம் தடைப்பட்டு போயிருப்பதை அந்த இருண்ட தெருவே சொல்லிற்று.

இந்த தெருவில் முக்கால்வாசி பேர் இவர்களின் திருமணத்தில் தான் கலந்து கொண்டிருப்பர். அதனால் அங்கங்கே ஒன்றிரண்டு வீட்டின் உள்ளே இன்வென்டர் மூலம் விளக்குகள் எரிய, அது அந்த தெருவில் கொஞ்சம் வெளிச்சத்தை தந்தது. ஆனாலும் அவர்களின் வீட்டு பக்கம் இருட்டாக தான் இருந்தது. அதைப்பார்த்து, “ஏரியால பவர் கட் போல,” என்று நிவேத்யா சொல்ல,

“ஓ அதான் இருட்டா இருக்கா? ஆமாம் திரும்ப பவர் எப்போ வரும்,” என்று சிவாதித்யன் கேட்டான்.

“அடிக்கடி போகாது, ஏதாச்சும் பிரச்சனைன்னா தான் போகும், வரவும் கொஞ்ச நேரம் ஆகும்,” என்ற அவளது பதிலுக்கு,

‘உங்க வீட்டில் இன்வென்டர் இல்லையா?” என்று அவன் கேட்க,

“இருக்கு, ஆனா அது வீட்டுக்குள்ள தானே லைட் எரியும், கதவு ஜன்னல் எல்லாம் மூடியிருக்கே, அதான் வெளிய இருட்டா இருக்கு,” என்று பேசியப்படியே அவள் நுழைவு வாயிலின் கதவை திறந்து உள்ளே போக, அவனும் அவள் பின்னாலேயே சென்றான்.

இருளில் நடந்ததில் கீழே ஏதோ பொருள் ஒன்று பட்டு அவள் தடுக்கி விழப் போக, “ஹே பார்த்து பார்த்து,” என்று சிவாதித்யன் அவளை தாங்கி பிடித்தான்.

ஆனால் அவன் பிடித்ததோ அவளது இடையில், அதுவும் அவள் அணிந்திருந்த லெஹங்காவில் லேசாக தெரிந்த அவளது வெற்றிடையில், அவள் விழப்போனதும், அவன் தாங்கி பிடித்ததும் சாதாரண நிகழ்வு தான், அவனது தொடுதலில் அவள் எதுவும் தவறாக உணரவில்லை. ஆனால் அவனிடம் தன் மனம் சாயவா? வேண்டாமா? என்று தவிக்கும் நிலையில் அவனது தொடுதல் நிவேத்யாவை ஏதோ செய்ய,

“எதுக்கு என்னை பிடிச்சீங்க? எனக்கு விழாம பார்த்துக்க தெரியாதா?” என்று அவள் சிடுசிடுத்தாள்.

“என்ன நீ? வண்டியில் பேலன்ஸ்க்காக நான் உன்னை தொட்டாலும் சிடுசிடுக்கற, நீ கீழே விழப் போறது தெரிஞ்சு உன்னை பிடிச்சாலும் சிடுசிடுக்கற, நான் என்ன உன் கண்ணுக்கு வில்லனாவா தெரியறேன்.” என்றவனுக்கோ,

அவளது வெற்றிடையில் தான் பிடித்து கொண்டிருக்கிறோம் என்பது உணர்ந்தாலும், பிடித்ததுமே அவள் தவறாக நினைப்பாள் என்று நினைத்து உடனே கையை எடுத்தால் அதில் அவள் திரும்ப விழுந்து விடுவாளோ என்று தான் தொடர்ந்து பிடித்திருந்தான். ஆனாலும் அவள் என்னவள் என்ற உணர்வே உரிமையாக அங்கிருந்து கையை எடுக்க மனமில்லாமல் இருந்ததும் உண்மை.

“அதான் நான் இப்போ விழலையே, என்னை விட்றீங்களா?” என்று அவள் கூறவும் தான் கையை எடுத்தான்.

“ச்சே என்னோட மொபைலை வேற டான்ஸ் ஆடும்போது அம்மாக்கிட்ட கொடுத்து வச்சதை அவசரத்தில் வாங்க மறந்து வந்துட்டேன்.” என்று அவள் கூறவும்,

“மொபைல் போனா? ஆமாம் யார்க்கிட்ட பேசணும்? என்கிட்ட இருக்கே?” என்று அவன் தன் பான்ட் பாக்கெட்டிலிருந்து தனது அலைபேசியை எடுக்க, அவள் அவனை முறைத்து கொண்டிருப்பது அவனுக்கு இருளில் தெரியவில்லை.

“கையில் மொபைல் தான் வச்சிருக்கீங்கல்ல, கண்டிப்பா அதில் டார்ச் இருக்கும், இருட்டில் தட்டு தடுமாறி வரோமே, அந்த டார்ச்சை ஆன் செய்வோம்னு தோனுச்சா உங்களுக்கு? நீங்கல்லாம் மூளையை யூஸ் பண்ணுவோம்னு இல்லாம அதை பத்திரப்படுத்தி வச்சு என்ன செய்ய போறீங்களோ?” என்று அவள் கேட்கவும் தான்,

அவனும், ‘ச்சே இது நமக்கு தோனாமே போச்சே,’ என்பதை உணர்ந்தான். ஆனாலும் அப்படி தோன்றாததும் ஒருவிதத்தில் நல்லதுதான் அவளது ஸ்பரிசத்தின் மென்மையை இன்னுமே அவன் கைகளில் உணர்ந்திருந்தான் அவன்.

“ஹலோ, நான் சொல்றது உங்களுக்கு காதில் விழுந்துச்சா? இப்பயாச்சும் டார்ச்சை ஆன் செய்ங்க, கதவை திறக்க வெளிச்சம் வேணும்,” என்று அவள் கேட்கவும் தான் நடப்பிற்கு வந்தவன்,

அலைபேசி மூலம் வெளிச்சத்தை வரவைத்து, “இருந்தாலும் என்னை நீ ரொம்ப டேமேஜ் செய்ற நிவி, ஏதோ எனக்கு டக்குன்னு இது தோனாம போச்சு, மொபல் கையில் வச்சிருக்கீங்களான்னு கேட்கணும்னு உனக்கும் தோனல தானே,

ஆனா நீ என்னடான்னா ஒரு கேம் டெவலப்பரை பார்த்து மூளையை பத்திரப்படுத்தி வச்சிருக்கேன்னு சொல்ற, இந்தநேரம் இந்த உலகத்தில் எத்தனை பேர் நான் கண்டுபிடிச்ச கேமை விளையாடிட்டு இருப்பாங்க தெரியுமா?” என்று அவன் கண்டுபிடித்த விளையாட்டு செயலியின் பெயரை கூறவும்,

நிவேத்யாவிற்கும் அந்த விளையாட்டு செயலியை கண்டுபிடித்தது அவன்தான் என்று சாகித்யா சொல்லி தெரியும், என்றாலும் அதை காட்டி கொள்ளாது, “ஓ இந்த கேமா, எங்க பக்கத்து வீட்டு பையன் கரண் கூட எப்போ பார்த்தாலும் இந்த கேமை தான் விளையாடுவான். ஆனா அவன் அதுக்கு அடிக்ட் ஆகியிருப்பதை பார்த்து, எனக்கு செம கடுப்பாகும், அந்த கேம் டெவலப்பர் மட்டும் என் கையில் கிடைக்கட்டும், அப்புறம் இருக்கு அவனுக்குன்னு நினைச்சிருக்கேன்.” என்று அவள் சொல்ல,

“கையில் கிடைச்சா என்ன செய்யணும்னு நினைச்ச, நீ என்ன செஞ்சாலும் எனக்கு சம்மதம் தான்,” என்று அவன் பதில் கூறினான்.

அதை கண்டு கொள்ளாதவள் போல் சாவி கொண்டு வீட்டின் கதவை திறந்தாள். மின்சாரம் தடைப்பட்டதும் வீட்டில் விளக்கு எரிவது போல் தயார்படுத்தி வைத்திருந்ததால் உள்ளே வெளிச்சமாக இருந்தது.

வீட்டின் உள்ளே சென்றதும், “ஆனாலும் நான் கண்டுபிடிச்ச கேம் எவ்வளவு யூஸ்ஃபுல் ஆனது தெரியுமா? நீ என்னடான்னா இப்படி சொல்ற,” என்று அவன் கேட்க,

“எதுவுமே அளவுக்கு மிஞ்சினா அது நல்லதில்ல, புதுசு புதுசா கண்டுபிடிக்கணும்னு நீங்கல்லாம் போட்டி போட்டுக்கிட்டு கேம்ஸா கண்டுபிடிக்கிறீங்க, ஒவ்வொன்னும் இத்தனை லெவல் அத்தனை லெவல்னு அடங்கியிருக்கு, அதிலும் சிலது பயங்கரமா வேற இருக்கு, அத்தனை லெவலையும் தாண்டனும்னு சிலர் அதிலேயே மூழ்கி போறாங்க, இருக்க மூளையை அதுக்கு உபயோகிச்சிட்டு மத்ததில் மந்தமா போறாங்க, இதில் உங்களை மட்டும் குறை சொல்ல முடியாது. அவங்க வளரும் முறையும், இந்தக்கால வாழ்க்கை முறையும் கூட இதில் அடங்கி இருக்கு, மத்தப்படி உங்களோட கண்டுபிடிப்பை நான் குறை சொல்லலை,” என்றவள்,

பேசியப்படியே பூஜை அறைக்கு சென்று கூரைப் புடவையும் வேட்டியும் ஒரு பையில் இருப்பதை கண்டவள், “புடவை, வேஷ்டி இதோ இருக்கு, சரி சீக்கிரம் கிளம்புவோமா? நாம போற வரைக்கும் விஷயம் யாருக்காவது தெரிஞ்சிடுமோன்னு அம்மாவும் சித்தியும் டென்ஷனா இருப்பாங்க,” என்று அவனிடம் சொல்ல, அவனும் தலையாட்டி கொண்டான்.

வெளியே வந்து கதவை பூட்டும் வரையுமே அவன் அமைதியாக இருக்கவும், “சாரி, நான் பேசினது உங்களை ஹர்ட் பண்ணிடுச்சா? விளையாட்டா தான் முதலில் பேசினேன். அப்புறம் இதில் நான் எப்போதும் யோசிப்பதையும் சொல்ல வேண்டியதா போச்சு,” என்று அவள் பேச,

“அய்யோ நீ பேசினதை நான் தப்பால்லாம் நினைக்கல நிவி, நீ சொன்னது உண்மை தானே, அதைத்தான் யோசிச்சேன். அடுத்தமுறை இதையும் மைன்ட்ல வச்சு என்னோட கண்டுபிடிப்பு இருக்கும்,” என்று அவன் சொல்ல, அவள் புன்னகைத்து கொண்டாள்.

ஒருவழியாக இருவரும் மண்டபத்தை வந்தடைய, ஆத்யா அவர்களுக்காக பார்க்கிங்கில் காத்திருந்தாள். அவளை பார்த்தப்படியே வண்டியை நிறுத்த வேண்டிய இடத்தில் நிவேத்யா நிறுத்தவும், ஆத்யா அவர்கள் அருகில் வந்தவள், “என்ன புடவை வேஷ்டி எடுத்துட்டு வந்துட்டீங்களா?” என்று இருவருடமும் பொதுவாக கேட்க,

“ம்ம் எடுத்துட்டு வந்தாச்சு ஆது, என்ன விஷயம் யாருக்காச்சும் தெரிஞ்சிடுச்சா? எங்களை காணும்னு தேடினாங்களா?” என்று நிவேத்யா பதட்டமாக கேட்டாள்.

“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனையில்லை. பெரியம்மாவும் அம்மாவும் தான் கொஞ்சம் டென்ஷனா இருந்தாங்க, நீ எடுத்துட்டு வர போயிருக்க விஷயத்தை சிபி அண்ணா என்கிட்ட சொல்லி என்னை அவங்கக்கிட்ட சொல்ல சொன்னாரு, ஆனாலும் இதை எடுத்துட்டு வர வரைக்கும் அவங்க டென்ஷனா இருப்பாங்கன்னு உனக்கே தெரியாதா? நீ வேற மொபைலை எடுத்துட்டு போகல, என்னவோ ஏதோன்னு பதட்டப்பட்டாங்க, மத்தப்படி ஒன்னும் பிரச்சனையில்லை,” என்றவள்,

“நிவி மொபைல் எடுத்துட்டு போகலன்னு தெரிஞ்சதும், உனக்கு தான் போன் செஞ்சேன் ஷிவ், ஆனா நீ எடுக்கவே இல்லை, அதான் வந்துட்டீங்களான்னு பார்க்க இங்க வந்தேன்.” என்று அவனிடம் சொல்ல,

“அப்படியா? வண்டியில் வரும்போது போன் செஞ்சுருப்ப, அதான் சத்தம் கேட்டிருக்காது.” என்று சிவாதித்யன் அதற்கு பதில் கூறினான்.

“சரி இதை கொண்டு போய் கொடுத்தா தான், அவங்க டென்ஷன் குறையும்,” என்று நிவேத்யா அங்கிருந்து வேகமாக சென்றுவிட,

அவள் பின்னாலேயே செல்ல இருந்த சிவாதித்யனை தடுத்து நிறுத்திய ஆத்யா, “எப்படி ஷிவ்? நீ நினைக்கறது அப்படியே நடக்குது? நிவி கூட டைம் ஸ்பெண்ட் செய்ய தானாகவே வாய்ப்பு கிடைக்குது?” என்று ஆச்சர்யமாக கேட்க,

“அதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும், அது எனக்கு ஆதரவா இருக்கு போல,” என்று சிவாதித்யன் பதில் கூறினான்.

“கூட ஆத்யா துணையும் வேணும், சிபி அண்ணா என்கிட்ட இந்த விஷயத்தை சொன்னப்ப, நான் நினைச்சிருந்தா நிவி வேண்டாம், நான் போறேன்னான்னு கூட சொல்லியிருக்க முடியும், சரி நீ நிவி கூட போகற சான்ஸை கெடுக்க கூடாதுன்னு தான் அமைதியா விட்டுட்டேன். இப்போ சொல்லு இது அதிர்ஷ்ட தேவதை வேலையா? இல்லை ஆத்யா தேவதை வேலையா?” என்று அவள் கேட்க,

“எனக்கு தெரியும், என் ஆத்யாவுக்கு என்மேல அவ்வளவு பிரியம்னு, தேங்ஸ்டா,” என்று அவனும் மகிழ்ச்சியாக கூறினான்.

அப்படியே இருவரும் மண்டபத்தின் உள்ளே போக, “ஹே மச்சி எங்கடா ஆளையே காணும்,” என்றப்படி அவனது நண்பர்கள் கூட்டம் அவனை சூழ்ந்து கொண்டது. அனைவரும் அவனோடும் நரேஷோடும் ஒன்றாக படித்தவர்கள், வேலை நிமித்தமாக அனைவருக்கும் முன்கூட்டியே வரமுடியாததால் இப்போது வந்திருந்தனர்.

“ஒரு வேலையா போனேன் டா,” என்று சொன்னப்படி சிவாதித்யன் அவர்களோடு கலந்து கொண்டான். அதன்பின் அவனுக்கு அவர்களுடனே நேரம் சென்றது.

திருமண வரவேற்பு நல்லபடியாக முடிந்து ஓரளவுக்கு வந்திருந்தவர்களெல்லாம் சென்றிருக்க, இருவீட்டாரின் உறவினர்கள் மட்டுமே அந்த மண்டபத்தில் இருந்தனர்.

நரேஷ், சாகித்யாவை வளைத்து வளைத்து புகைப்பட நிபுணர் புகைப்படமாக எடுத்து தள்ள, நிவேத்யாவும் ஆத்யாவும் அவர்களுக்கு துணையாக அங்கு இருந்தனர்.

அப்போது ஆத்யாவோ, “பாவம் சாகி அக்காவுக்கும் நரேஷ் மாமாக்கும் ரொம்ப பசிக்குமில்ல, அதைப்பத்தி யோசிக்காம இந்த போட்டோஃகிராபர் விடாம போட்டோவா எடுத்து தள்றாரே, கல்யாணம்னா இந்த கொடுமையெல்லாம் வேற நடக்குமா? அப்படின்னா எனக்கு கல்யாணமே வேண்டாம்,” என்று சொல்ல,

“போட்டோஃகிராபர் மட்டும் சாப்பிட்டாரா? அவருக்கு இது தொழில், அவங்களுக்கு இது ஸ்வீட் மெமரிஸ். எனக்கென்னமோ உனக்கு தான் இப்போ பசிக்குதுன்னு தோனுது, நீ வேற பசி தாங்கமாட்ட, அதனால நீ போய் சாப்பிடு, நான் சாகி அக்கா, நரேஷ் மாமாவோட சாப்பிட்றேன்.” என்று நிவேத்யா சொல்ல,

“நான் பசியோட இருக்கேன்னு உனக்கு யார் சொன்னது? என்னோட ஃப்ரண்ட்ஸ் வந்திருந்தாங்கல்ல, அவங்களை சாப்பிட உட்கார வச்சிட்டு வரும்போது தேவ், திவாகரன் அங்கிள், வனிதா ஆன்ட்டி எல்லாம் உட்கார்ந்து சாப்பிட்டிட்டு இருந்தாங்களா? மெனு எல்லாம் எப்படி இருக்குன்னு டேஸ்ட் பார்க்க, அவங்க 3 பேரு இலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா எடுத்து லைட்டா சாப்பிட்டிட்டு வந்துட்டேன். எல்லாம் செம சூப்பரா இருந்துச்சு நிவி, இப்போ வயிறுமுட்ட சாப்பிட வெயிட்டிங், ஆனா போட்டோகிராஃபர் இப்போதைக்கு இவங்களை விடமாட்டாரு போல,” என்று ஆத்யா கவலையோடு கூற,

“அடிப்பாவி சாப்பாட்டில் ட்ரையல் பார்த்துட்டு வந்த உனக்கே இப்படின்னா, எங்க நிலைமையை யோசிச்சு பார்த்தீயா? கொஞ்சநேரம் சாப்பாட்டை பத்தி பேசாத, அப்புறம் எனக்கு பசி அதிகாமாகிடும், அதனால அமைதியா இரு,” என்று நிவேத்யா கூறினாள்.

இப்படி இவர்கள் பேசி கொண்டிருந்த நேரம் சிவாதித்யன் அங்கு வந்தவன், நரேஷை தனியாக அழைத்து, “மச்சி, நம்ம ஃப்ரண்ட்ஸ்லாம் எப்போ பார்ட்டி ஆரம்பிக்கறதுன்னு கேட்கிறாங்க, நீ வர இன்னும் லேட்டாகுமா?” என்று கேட்க,

“பின்ன இப்போ எப்படிடா நான் வர முடியும்? மேல எனக்குன்னு கொடுத்திருக்க ரூம்ல எல்லாம் அரேஞ்மென்ட்ஸும் செஞ்சுருக்கேன். நீயே அதெல்லாம் பார்த்துக்க, நான் போட்டோ எடுத்து முடிச்சதும், சாப்பிட்றதுக்கு முன்ன சும்மா வந்து தலையை காட்டிட்டு போறேன்.” என்று நரேஷ் பதில் கூறவும்,

அருகிலிருந்த நிவேத்யா, ஆத்யா இருவருக்கும் அது நன்றாகவே காதில் விழுந்தது. பார்ட்டி என்றால் அது என்னவாக இருக்குமென்பது நிவேத்யாவிற்கு புரிந்ததால், ‘என்ன நரேஷ் மாமா குடிப்பாங்களா?” என்று அதிர்ச்சியானவளுக்கு,

‘அப்போ சிவாதித்யனும் குடிப்பாங்களா?” என்பது தான் அவளுக்கு அதைவிட அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் அதுதான் உண்மை என்பதும் அவளுக்கு உறுதியாக தெரியவில்லை.

சிவாதித்யனிடம் சொன்னது போலவே புகைப்படங்கள் எடுத்து முடித்ததும், “ப்ரண்ட்ஸை பார்த்துட்டு கொஞ்ச நேரத்தில் வந்துட்றேன்.” என்று நரேஷ் சாகித்யாவிடம் சொல்லிவிட்டு செல்ல,

“என்ன க்கா நடக்குது இங்க, மாமா எதுக்கு போறாங்கன்னு உனக்கு தெரியுமா? தெரியாதா? அவங்க சொல்றதுக்கெல்லாம் தலையை தலையை ஆட்ற, அவங்க பார்ட்டி அப்படி இப்படின்னு பேசறாங்க, அது என்ன பார்ட்டின்னு உனக்கு தெரியுமா?” என்று நிவேத்யா சாகித்யாவிடம் கேட்க,

“தெரியும் நிவி, நரேஷ் ஃப்ரண்ட்ஸ்லாம் பேச்சுலர் பார்ட்டி கேட்டுட்டு இருக்காங்க, அவங்க இன்னைக்கு தானே பங்க்‌ஷன்க்கு வந்திருக்காங்க, அதான் இன்னைக்கு இந்த ஏற்பாடு,” என்று சாகித்யா கூற,

“பார்ட்டினா ட்ரிங்ஸ் பார்ட்டி தானே, அப்போ நரேஷ் மாமா குடிப்பாங்களா? அதை எப்படிக்கா நீ அக்சப்ட் செஞ்சுக்கற?” என்று நிவேத்யா அதிர்ச்சியோடு கேட்டாள்.

“ஹே நரேஷ் அவ்ளோ பெரிய குடிகாரரெல்லாம் இல்ல, எப்போயாச்சும் அஃபிஷியல் பார்ட்டி, இப்படி ஃப்ரண்ட்ஸை சந்திச்சா, சும்மா கொஞ்சமா எடுத்துப்பாங்க, அப்போதும் என்கிட்ட அதுக்கு பர்மிஷன் கேட்பாங்க, இப்போ பார்ட்டி கூட ஃப்ரண்ட்ஸ்க்காக மட்டும் தான், நரேஷ் சும்மா ஒரு சிப் அவங்களுக்காக குடிக்கிறேன்னு சொல்லியிருக்காங்க,” என்று சாகித்யா கூற,

“நரேஷ் மாமா உன்கிட்ட சொல்லிட்டு செய்றாங்க ஓகேதான், ஆனா கொஞ்சமானாலும் அது தப்பில்லையா? இப்போ கொஞ்சம்னு ஆரம்பிக்கறது தான், நாளைக்கு அது அதிகமா ஆகவும் வாய்ப்பிருக்கு, அப்போ அது நரேஷ் மாமாக்கு மட்டும் கெடுதலா ஆகாது. உங்க வாழ்க்கைக்கும் அது பிரச்சனையாகலாம், அதனால இப்பவே இதெல்லாம் வேண்டாம்னு மாமாக்கிட்ட கண்டிச்சு சொல்லலாமில்ல,” என்று நிவேத்யா கூறவும்,

“இப்போ நரேஷ் என்கிட்ட சொல்லிட்டு செய்றாங்க, இதுவே நான் இதெல்லாம் வேண்டாம்னு அவங்களை கண்டிச்சு சொன்னா, நாளைக்கே என்கிட்ட மறைச்சு இதை அவங்க செய்யவும் வாய்ப்பிருக்கில்ல, அதுக்காக நானும் சாதாரணமா சம்மதம்னு சொல்ல மாட்டேன். இந்த பழக்கத்தை தொடருவது தப்புன்னு சொல்லவும் செய்வேன்.” என்று சாகித்யா பதில் கூறினாள்.

“நீ சொல்றது புரியுது க்கா, ஆனா உன்மேல அதிக காதல் இருந்தா, அவங்க அப்பா, அம்மா மேல ரொம்ப பாசம் இருந்தா, இந்த பழக்கத்தை சுத்தமா மாமா விடணும், இப்படி சொல்லி அவங்களுக்கு புரிய வை. இதுதான் நரேஷ் மாமாக்கும் நல்லது. உங்க எதிர்காலத்துக்கும் நல்லது.” என்று நிவேத்யா கூற,

“எனக்கு புரியுது நிவி, நரேஷ்க்கிட்ட நான் இதைப்பத்தி கண்டிப்பா பேசறேன்.” என்று சாகித்யா நிவேத்யாவின் வாதத்தை ஒத்து கொண்டாள்.

“அப்புறம் க்கா, அதுவந்து,” கேட்கலாமா? வேண்டாமா? என்று தயங்கிய நிவேத்யா,

“உன்னோட ஃப்ரண்ட் சிவாதித்யனும் குடிப்பாங்களா?” என்று கேட்க,

“ஷிவ்வும் நரேஷ் போலத்தான், எப்போயாச்சும் தவிர்க்க முடியாத நேரத்தில் குடிப்பான். ஷிவ், நரேஷ் மட்டுமில்ல, அவங்க ஃப்ரண்ட்ஸுமே அப்படித்தான், யாருமே ரொம்ப மோசம் கிடையாது.” என்று சாகித்யா கூற, ஆனால் அதுவே நிவேத்யாவால் ஏற்று கொள்ள முடியாததாக தான் இருந்தது.

அடுத்து நரேஷும் அவனது நண்பர்கள் கூட்டமும் வந்துவிட, அனைவரும் சாப்பிட சென்றார்கள். சாகித்யா சொன்னதுபோல் அவர்களெல்லாம் குடித்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியாதபடி தான் அவர்களது நடவடிக்கை இருந்தது. ஆனாலும் நிவேத்யாவால் அதை ஏற்று கொள்ள முடியவில்லை.

நண்பர்கள் இருப்பதால் சிவாதித்யன் கொஞ்சம் அடக்கி வாசித்தவன், ஆனாலும் யாருக்கும் தெரியாமல் அவ்வப்போது நிவேத்யாவை பார்க்க, அவளோ ஒருமுறை கூட அவனை பதில் பார்வை பார்க்கவில்லை.

‘என்னாச்சு இவளுக்கு, இப்போத்தானே கொஞ்சம் நல்லப்படியா பேச ஆரம்பிச்சா, இப்போ திரும்ப என்னவோ?’ என்று அவளது செய்கையில் சிவாதித்யன் தான் குழம்பி போனான்.

முரண்படும்..