MNMN 4

MNMN 4

சொந்த பந்தங்கள் சூழ்ந்திருக்க, நிச்சயதார்த்த சடங்குகள் இனிதே நடந்தேறிக் கொண்டிருந்தது. பெரியவர்கள் தாம்பூலத்தை மாற்றி கொள்ளவும், சாகித்யாவை வரவழைத்தவர்கள் அவளிடம் நிச்சய பட்டை தர அதை உடுத்திக் கொண்டு வந்தாள். பின் நரேஷையும் அவளுடன் அமர வைத்து இருவருக்கும் நலங்கு வைத்தனர். பின் மணமக்கள் இருவரும் பொதுவாக உற்றார் உறவினர் முன் விழுந்து கும்பிட அனைவரும் அட்சதை தூவி அவர்களை வாழ்த்தினர்.

பெரியவர்களின் சடங்குகள் அத்துடன் முடிந்ததும், நரேஷும் சாகித்யாவும் அவர்கள் செலவிலேயே அடுத்தவருக்கு மோதிரம் வாங்கி வைத்திருக்க, சபையினர் முன் இருவரும் அந்த மோதிரத்தை மாற்றி கொண்டனர். பின் நிவேத்யாவும் ஆத்யாவும் சேர்ந்து வாங்கி வைத்திருந்த கேக்கை கொண்டு வந்து வைத்து மணமக்கள் இருவரையும் வெட்ட சொல்ல, உடன் சிவாதித்யன், தேவ், சிபி இன்னும் இளைஞர்கள் பட்டாளம் அனைவரும் அங்கு சூழ்ந்து அந்த இடத்தை அமர்க்களப்படுத்தி கொண்டிருந்தனர்.

கேக்கை வெட்டி மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி கொள்ள, அடுத்து சாகித்யா தங்கைகள் இருவருக்கும் மற்றும் சிபி, சிவாதித்யன், தேவ் இவர்களுக்கும் தன் கையாலேயே கேக்கை ஊட்டி விட்டாள்.

பின் மீதமிருந்த கேக்கை பங்கிட்டு மற்றவர்களுக்கும் கொடுக்கலாம் என்று நிவேத்யா அதை எடுத்து செல்ல, “என்னங்க, மாப்பிள்ளை தோழனுக்கு ஃபர்ஸ்ட் கேக் ஊட்ட மாட்டீங்களா?” என்று சிவாதித்யன் அவளிடம் வந்து கேட்டான்.

“என்னது?” என்று அவள் கோபமாக கேட்கவும் தான்,

“இல்ல கேக் தர மாட்டீங்களான்னு கேட்டேன்.” என்று அவன் சமாளித்து சொல்ல,

“அதான் சாகி அக்கா ஊட்டி விட்டாளே, அப்புறம் என்ன? ஓ இன்னும் கொஞ்சம் வேணுமா? இப்படித்தான் கூச்சப்படாம கேட்டு வாங்கி சாப்பிடணும்,” என்று கூறியவள், ஒரு கேக் துண்டை அவனிடம் கொடுத்துவிட்டு செல்ல,

அவனோ, ‘சும்மா அவக்கிட்ட பேச்சு கொடுக்கலாம்னு போனா, நம்மளை தீனி பண்டாரம்னு நினைச்சிருப்பாளோ,” என்று நினைத்து விழித்தான்.

அனைத்து நிகழ்வுகளும் சுபமாக முடிய அதன்பின் தான் பெற்றவர்கள் அருகிலேயே வந்தான் சிவாதித்யன், “இப்போயாச்சும் எங்க நினைப்பு வந்துச்சே,” என்ற வனிதா,

அங்கு நின்றிருந்த ரவிச்சந்திரன், ஜானகி தம்பதியரிடம் சிவாதித்யனை அழைத்து சென்று, “இவன் தான் என்னோட மூத்த மகன் சிவாதித்யன்,” என்று அறிமுகப்படுத்தியவர்,

“இவங்க தான் சாகித்யாவோட பெரியப்பா, பெரியம்மா,” என்று மகனுக்கும் அவர்களை அறிமுகப்படுத்த,

‘சகியோட பெரியப்பா, பெரியம்மான்னா அப்போ நிவியோட அப்பா, அம்மா தானே,’ என்று மனதில் நினைத்தவன்,

“வணக்கம் அங்கிள், வணக்கம் ஆன்ட்டி,” என்றவன், “என்னை ஆசிர்வாதம் செய்ங்க,” என்று அவர்கள் இருவரது காலிலும் விழுந்துவிட்டான்.

அவன் அப்படி செய்வான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. “அய்யோ என்னப்பா இது காலில் விழுந்துக்கிட்டு, நல்லா இரு, நல்லா இரு,” என்று சொல்லியப்படி ரவிச்சந்திரன் அவனை எழுப்பிவிட்டாலும், ‘இந்த காலத்திலும் இப்படி ஒரு பையனா?’ என்று நினைத்து நெகிழ்ந்து போனார்.

அவனது இந்த செயலை பார்த்து அவனை பெற்றவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை தான், நம்ம மகன் காலில் விழுந்தானா?” என்று வியப்பாக பார்த்தார்கள். அதற்காக அவன் பெரியவர்களுக்கு மரியாதை தராதவன் என்று இல்லை. சிறு வயதிலிருந்தே உறவுகளிடமிருந்து தள்ளி இருந்ததால், அவர்களை பார்த்தால் கடமைக்கு இரண்டு வார்த்தைகள் பேசுவதோடு கடந்துவிடுவான். அவனுக்கு பிடித்த சாகித்யா, ஆத்யாவின் பெற்றோர்கள் என்பதால் ஜெயச்சந்திரன், கோமளா மட்டும் இதில் விதிவிலக்கு, அதனால் தான் அவர்களுக்கு அந்த வியப்பு.

அவர்கள் மட்டுமல்ல, நரேஷ், சாகித்யா, தேவ் இவர்களுமே ‘என்னாச்சு இவனுக்கு?’ என்று பார்த்து கொண்டிருந்தார்கள்.

ஆத்யா மட்டும், ‘எனக்கு என்ன விஷயம்னு தெரியும் தம்பி,’ என்பதுபோல் அவனை பார்த்து சிரிப்பை கட்டுப்படுத்தி கொண்டு நின்றிருந்தாள்.

காலில் விழுந்து எழுந்தவன், அங்கு நின்றிருந்த நிவேத்யாவை பார்க்க, ‘லூசா இவன்,’ என்பதுபோல் அவள் பார்வை இருக்கவும்,

‘கொஞ்சம் ஓவரா போயிட்டோமோ,’ என்று நினைத்தப்படி மற்றவர்களை பார்க்க, அவனை ஒரு அதிசயத்தை பார்ப்பது போல் அனைவரும் பார்ப்பதை கண்டு, சிரித்தப்படி அசடு வழிந்தான்.

“இந்தா துடைச்சோக்கோ ஷிவ்,” என்று ஆத்யா அவள் கையிலிருந்த கைக்குட்டையை தர, அனைவரும் சிரித்துவிட்டனர். அதில் நிவேத்யாவும் அடக்கம், அனைவரும் தன்னை கேலி செய்துதான் சிரிக்கிறார்கள் என்பது புரிந்தாலும் நிவேத்யாவின் சிரிப்பை ரசித்து பார்த்திருந்தான்.

“எங்க எல்லோரையும் வச்சிக்கிட்டே இப்படி என் அக்காவை சைட் அடிக்கிறீயே, உனக்கு ரொம்ப தைரியம் ஜாஸ்தி தம்பி, பார்த்து பத்து நாளில் போகறதா சொல்ற உன்னை ரெண்டே நாளில் இங்க இருந்து துரத்திட போறாங்க,” என்று ஆத்யா கூறவும் தான், அவனும் கொஞ்சம் சுதாரித்து கொண்டான்.

மாலை ஆனதும் சகோதரிகள் மூவரும் திவாகரனுக்கு ஏற்பாடு செய்திருந்த வீட்டிற்கு நடன பயிற்சிக்காக சென்றனர். நரேஷும் நடன பயிற்சிக்காக அன்று இரவு சிவாதித்யன் கூடவே தங்குவதற்காக இருந்து கொண்டான்.

முதலில் மணமக்கள் இருவரும் ஆடுவதற்கான பயிற்சியை ஆரம்பித்தனர். நரேஷுக்கு அந்த அளவு நடனம் வரவில்லையென்றாலும் சாகித்யாவின் மகிழ்ச்சிக்காக நடனம் ஆட ஒத்து கொண்டான். அதேபோல் தேவ் ஆடப்போவதாக கூறியதால் ஆத்யா அவனுக்கு பயிற்சி அளித்து கொண்டிருந்தாள்.

“அண்ணா நீயும் ஆட்றியா?” என்று தேவ் சிவாதித்யனிடம் கேட்க,

எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை, நீங்களே ஆடுங்க,” என்று அவன் பார்வையாளனாக மட்டுமே இருந்து கொண்டான்.

அவர்களுக்கு அங்கேயே இரவு உணவையும் கொண்டு வந்து கொடுத்திருக்க, ஐவரும் சாப்பிட்டப்பின் திரும்ப நடன பயிற்சியை ஆரம்பித்தனர். இப்போது நிவேத்யாவும் ஆத்யாவும் இத்தனைநாள் பயின்றிருந்ததை வைத்து ஒருமுறை ஆடிக்காட்டலாம் என்று ஆடி கொண்டிருக்க, தேவ்சரணும் அவர்களோடு சேர்ந்து ஆடினான்.

சிவாதித்யன் பார்வையோ ஆடி கொண்டிருக்கும் நிவேத்யாவையே ரசனையோடு பார்த்து கொண்டிருக்க, அந்த பார்வை அவளை என்னவோ செய்து கொண்டிருந்தது. அதனால் முடிந்த அளவு அவனை பார்ப்பதை தவிர்த்து கொண்டிருந்தாள்.

பின் ஒருவழியாக பதினொரு மணிக்கு அவர்களின் நடன பயிற்சியை முடித்து கொள்ள, மறுநாள் மதியம் வரை மீதி பயிற்சியை தொடரலாம் என்று முடிவெடுத்தவர்கள் சிறிதுநேரம் சாதாரணமாக பேசி கொண்டிருந்தார்கள். அப்போது சாகித்யா, “என்ன ஷிவ் நரேஷுக்கு ஆரத்தி எடுக்கும்போது ஸ்மார்ட்டா பேசி எல்லார் மனசிலேயும் இடம் பிடிச்சிட்ட போல, பெரியப்பா, பெரியம்மா, இன்னும் சில சொந்தக்காரங்க அதைபத்தி தான் சொல்லிட்டு இருந்தாங்க, நீ அப்படித்தான் பேசுவன்னு எங்களுக்கே தெரியும், ஆனா பெரியப்பா, பெரியம்மா காலில் விழுந்த பாரு, அதைதான் தாங்கிக்கவே முடியல, என்னடா ஆச்சு உனக்கு? நீ இப்படியெல்லாம் கிடையாதே?” என்று கேட்க,

“ஒரு நல்ல பையனா, மரியாதை தெரிஞ்சவனா இருந்தா உங்களுக்கெல்லாம் பொறுக்காதே,” என்று சிவாதித்யன் சமாளிப்பாக பேசவும்,

“காலில் விழுந்து கும்பிட்டா தான் நாம மரியாதை வச்சிருக்கோம்னு அவங்களுக்கு தெரியுமான்னு கேட்ப, இப்போ என்ன அப்படியே ரொம்ப நல்லவன் மாதிரி பேசற, நீ இப்படியெல்லாம் செய்ய கூடிய ஆள் இல்லையே, என்னவோ இருக்கு,” என்று நரேஷும் சந்தேகமாக கேட்டான்.

“அது என்னன்னு எனக்கு தெரியும் மாமா, நான் சொல்லட்டா,” என்று சிவாதித்யனின் அருகில் நின்றிருந்த ஆத்யா பேசவும்,

அவசரமாக அவளின் வாயை பொத்தியவன், “ஏதாச்சும் உளறின, அப்புறம் தான் இருக்கு உனக்கு,” என்று சிவாதித்யன் அவளை மிரட்டினான்.

“என்ன தெரியும் உனக்கு?” என்று சாகித்யா அவளிடம் கேட்க,

“அவ சும்மா உளரிட்டு இருக்கா,” என்று சிவாதித்யன் சமாளித்தான்.

“சரி அதை விடுவோம், இதை கேளுங்க நரேஷ், இவன் இங்க பத்து நாள் தான் தங்க போறானாம், யார் சொன்னாலும் கேட்க மாட்டானாம், நீங்க கொஞ்சம் சொல்லக் கூடாதா?” என்று சாகித்யா நரேஷிடம் குற்ற பத்திரிக்கை வாசிக்க,

“நானும் தான் சொல்லி பார்த்துட்டேன். ஐயா ரொம்ப தான் பிகு செஞ்சுக்கிறாரு, விடு விடு நமக்கும் ஒரு காலம் வராமலா போயிடும்,” என்று அவன் பதில் கூறினான்.

“நீங்கல்லாம் இவ்வளவு சொன்ன பிறகு நானும் நல்லா யோசிச்சு ஒருமாசம் இங்கேயே இருக்கலாம்னு முடிவு செய்துட்டேன்.” என்று சிவாதித்யன் நிவேத்யாவை ஒருமுறை பார்த்துவிட்டு கூற, அதை நரேஷும் கவனித்தான்.

“ஐ நிஜமாவா அண்ணா, அப்போ ஜாலியா இருக்கும், அப்பாவும் அம்மாவும் இதை கேட்டா சந்தோஷப்படுவாங்க,” என்று தேவ் மகிழ்ச்சியாக கூற,

“ஹே நிஜமாவா டா, என்னால நம்பவே முடியல, சும்மா எங்களுக்காக சொல்லலையே?” என்று சாகித்யா கேட்டாள்.

“நிஜமா தான் சகி, நான் ஒருமாசம் இங்க இருக்கலாம்னு முடிவு செஞ்சுட்டேன்.” என்று அவனும் உறுதியாக கூறினான்.

“ஆனா எப்படி திடீர்னு இந்த முடிவு எடுத்த, இங்க வர வரைக்கும் சீன் போட்டுட்டு இருந்த?” என்று சாகித்யா இன்னும் அவன் சொல்வதை நம்ப முடியாமல் கேட்க,

“எல்லாம் இங்க வந்த பிறகு நிலைமை தலைகீழா மாறிடுச்சு, ஷிவ் இங்க இருக்க ஒத்துக்கிட்ட ரீஸன் எனக்கு தெரியுமே,” என்று ஆத்யா கூற, நரேஷுக்குமே அது என்னவாக இருக்கும் என்பது கொஞ்சம் விளங்க ஆரம்பித்திருந்தது.

“என்ன உனக்கு தெரியுமா? அப்படி என்ன காரணம்?” என்று சாகித்யா ஆத்யாவிடம் கேட்க,

“அது ஒன்னுமில்ல, ஆத்யா தான் நான் இங்க இருக்கணும்னு கெஞ்சி கேட்டா, என் டார்லி மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு நானும் ஒத்துக்கிட்டேன்.” என்று சிவாதித்யன் அதற்கு பதில் கூறியவன்,

“இங்கப்பாரு நீயா எதையாச்சும் நினைச்சுக்கிட்டு உளறின, அப்புறம் தானே இருக்கு உனக்கு,” என்று ஆத்யாவிற்கு மட்டும் கேட்பது போல் மீண்டும் மிரட்டினான்.

அதற்கு அவளோ, “ஒன்னும் நீ எனக்காக இருக்க வேண்டாம், உனக்கு அங்க நிறைய கேர்ள் ஃப்ரண்ட்ஸ் இருப்பாங்க, அவங்கல்லாம் நீ எப்போ வருவன்னு காத்துட்டு இருப்பாங்க, அதனால நீ கல்யாணம் முடிஞ்சதுமே கூட கிளம்பு, அதனால எனக்கு ஒன்னுமில்ல,” என்று அவள் நிவேத்யாவை பார்த்தப்படி கூற,

அதுவரை அவர்கள் பேசுவதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் அமைதியாக இருந்த நிவேத்யா அவனை பார்த்தாள். அதை கவனித்தவன், “இப்போ உன்கிட்ட யாராச்சும் கேட்டாங்களா? நீ என்ன சொல்றது? நான் இங்க தான் இருக்கப் போறேன். ஆனா உனக்காக இல்லை. என் சகிக்காகவும் நரேஷ்க்காகவும்,” என்று அவன் ஆத்யாவிடம் கூற,

“முன்ன ஆத்யாக்காக, இப்போ எங்களுக்காகவா, போதும்டா இதோட நிறுத்திக்கோ, நீ இருக்கன்னு சொன்னதே சந்தோஷம்,” என்ற நரேஷ் அவனை கையெடுத்து கும்பிட்டான்.

நரேஷையும் சேர்த்து அனைவரும் நிவேத்யாவிற்கு நெருக்கம் என்றாலும், பேச்சு சிவாதித்யனை பற்றி இருந்ததால், அங்கு நிவேத்யா ஒருமாதிரி தனிமையை உணர்ந்தாள். அதேபோல் தேவ்சரணும் உறக்க கலக்கத்தில் கொட்டாவி ஒன்றை விடவும், அதை பார்த்தவளுக்கு அது தொற்றி கொள்ள, “சரி பேசினது போதும் தூங்க போகலாமா?” என்று பொதுவாக மற்றவர்களை பார்த்து கேட்டாள்.

உடனே சாகித்யாவும் நரேஷும் ஒருவருக்கொருவர் பார்த்து கொள்ள, நாளை வரைக்கும் தான் அவர்கள் இருவரும் காதலர்கள். அதற்பிறகு இருவரும் கணவன் மனைவி ஆகி விடுவர். நாளைக்கு இருவருக்கும் மனம்விட்டு பேச சந்தர்ப்பம் கிடைக்குமோ என்னவோ? இப்போது சிறிதுநேரம் இருவருக்கும் தனிமையாக அந்த பொழுதை கழிக்க வேண்டுமென்ற ஆசை உண்டாக,

“ப்ளீஸ் நிவி இன்னும் கொஞ்சநேரம் இருக்கலாம், நாளைக்கு நரேஷோட பேச முடியுமான்னு தெரியல, இன்னைக்கு கொஞ்சநேரம் நரேஷோட பேசிட்டு இருக்கணும்னு இருக்கு, உங்களை மட்டும் அனுப்பலாம்னா, என்னை மட்டும் இங்க இருக்க விடமாட்டாங்க, ப்ளீஸ்,” என்று சாகித்யா கெஞ்சவும்,

சகோதரியின் நிலை புரிந்ததால், “சரி,” என்று நிவேத்யாவும் ஒத்து கொண்டாள்.

அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு மற்றவர்கள் அறையை விட்டு வெளியேற, “இனனைக்கு ஷிவ் நடந்துக்கறதெல்லாம் கொஞ்சம் வித்தியாசமா இருக்குல்ல நரேஷ்,” என்று சாகித்யா கூறவும்,

“ம்ம் அது எதுக்கா இருக்கும்னு எனக்கு சின்னதா ஒரு சந்தேகம்,” என்று நரேஷ் பதில் கூறினான்.

“எதனால? என்ன சந்தேகம்? ஆத்யாவும் ஏதோ சொல்லிட்டு இருக்கா? என்ன விஷயம் நரேஷ்,” என்று சாகித்யா கேள்விகள் எழுப்ப,

“இரு, நான் நினைச்சது சரியான்னு தெரிய வரட்டும், அப்புறம் சொல்றேன்.” என்றவன்,

“சரி நாம கொஞ்சநேரம் தான் பேச முடியும் போலிருக்கு, நாளைக்கு ரொம்ப பிஸியாகிடுவோம், அதனால நம்ம பேச்சுக்கு வருவோம், இப்போ தான் உன்னை ஸ்கூல் டிரஸ்ல சிவாவோட வீடியோ சேட்டிங் செஞ்சப்போ உன்னை பார்த்தது போல இருந்துச்சு, அதுக்குள்ள இத்தனை வருஷம் ஓடி போய் இப்போ நமக்கு கல்யாணம். நினைக்கவே ரொம்ப வியப்பா இருக்கு,” என்று நரேஷ் மகிழ்ச்சியோடு கூறினான்.

“ஆமாம் நரேஷ், எனக்குமே இந்தநாள் கனவா நனவான்னு அப்பப்போ சந்தேகமா இருக்கு, நீங்க என்னை காதலிக்கிறதா ஷிவ் என்கிட்ட சொன்னப்போ, உங்களை வேண்டாம்னு சொல்லணும்னு தோனவே இல்லை. வீட்டில் இதுக்கு சம்மதம் சொல்லணுமேன்னு தான் தோனுச்சு, அதை அப்படியே ஷிவ்க்கிட்ட நான் சொன்னப்போ,

உனக்கும் நரேஷை பிடிச்சிருக்கா இல்லையான்னு மட்டும் சொல்லு, மத்தப்படி வீட்டில் ஏதாச்சும் பிரச்சனைன்னா நான் அங்கிள் ஆன்ட்டி கிட்ட பேசறேன்னு ஷிவ் தைரியம் கொடுக்கவும் தான், நானும் உங்களிடம் தைரியமா என்னோட காதலை சொன்னேன். இப்போ எல்லாம் சுமூகமா வந்து நம்ம காதல் கல்யாணத்தில் முடியறது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?” என்று கூறியவள், நரேஷின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

இருவருக்குமே அதிகம் பேச வேண்டுமென்று தோன்றினாலும், அவர்கள் காதல் கைகூடியதில் மனதில் ஒரு நிறைவு உண்டாக, அப்படியே ஒரு மோன நிலையில் நின்றிருந்தனர்.

அறையை விட்டு வெளியே வந்ததும், “எனக்கு பயங்கரமா தூக்கம் வருது, நான் தூங்க போறேன், குட்நைட்.” என்று சொல்லி தேவ் கீழே உள்ள அவனது அறைக்கு சென்றுவிட, அப்போது ஆத்யாவின் அலைபேசி இசைத்தது.

“யார் இந்த நேரத்தில்?” என்று நிவேத்யா அவளிடம் கேட்க,

“ஸ்கூல் ஃப்ரண்ட் நிவி, பெங்களூரு ஃப்ரண்ட், அக்கா கல்யாணத்துக்கு இன்வைட் செஞ்சிருந்தேன் இல்ல, அதைப்பத்தி விசாரிக்கவா தான் இருக்கும், நான் பேசிட்டு வந்துட்றேன்.” என்று சொல்லிவிட்டு ஆத்யா அங்கிருந்து மொட்டை மாடிக்கு சென்றுவிட்டாள்.

‘என்ன எல்லாம் போயிட்டாங்க?’ என்பது போல் நிவேத்யா நின்றிருக்க,

“கொஞ்சநேரம்னு சொல்லிட்டு சகியும் நரேஷும் எப்படியோ ஒருமணி நேரம் பேசிட்டு இருப்பாங்க, ஆத்யா மட்டும் என்ன? அவளும் போன் பேசினா ரொம்ப நேரம் பேசுவா, அவங்க ரெண்டுப்பேரும் இல்லாம நீங்க வீட்டுக்கும் போக முடியாது. வாங்க அதுவரைக்கும் அப்படி உட்காரலாம் நிவி,” என்று சிவாதித்யன் மொட்டை மாடிக்கு செல்லும் படிக்கட்டை காண்பிக்க, நிவேத்யாவும் அவன் சொல் கேட்டு அங்கு சென்று அமர்ந்தாள்.

அவனும் அதே படிக்கட்டில் சிறிய இடைவெளி விட்டு அமர்ந்தவன், “என்ன கொஞ்சநேரம் முன்ன வரை நல்லா இருந்தீங்க? திடீர்னு மூட் அப்செட் ஆகிட்டீங்க? என்னைப் பத்தி பேசவும் தானே?” என்று அவளின் மனநிலையை சரியாக புரிந்தவனாக கேட்க,

அவன் சரியாக கண்டுபிடித்து சொல்வதை நினைத்து வியந்தவள், ஆனால் அதை ஆமாம் என்று ஒத்து கொள்ள முடியுமா? அதனால், “ச்சேச்சே அப்படில்லாம் இல்லை.” என்று அவன் சொல்வதை மறுத்தாள்.

“இல்லை நான் சொன்னது சரிதான், நான் தப்பா எடுத்துக்குவேனோன்னு சொல்ல தயங்குறீங்க, ஆனா இதில் தயக்கம் எதுக்கு? எல்லாம் உங்களுக்கு நெருக்கமானவங்க, ஆனா என்னை இன்னைக்கு தானே பார்க்கறீங்க? அப்போ இப்படித்தானே ஃபீல் செய்வீங்க, ஆனா அதுக்கு அவசியம் இல்லை. சகி, ஆதுவுக்கு வேண்டியவங்க எல்லாம் எனக்கு வேண்டியவங்க, நெருக்கமானவங்க,” என்றவன்,

“ப்ரண்ட்ஸ்,” என்று கேட்டப்படி கை நீட்ட,

முதலில் தயங்கினாலும் அதன்பின் “ஃப்ரண்ட்ஸ்,” என்றப்படி அவனது கையை குலுக்கினாள்.

பின் இருவரும் அடுத்தவரை பற்றி பொதுவான விஷயங்களை விசாரித்தப்படி சிறிது நேரம் பேசினர். அடுத்து நிவேத்யாவோ, “ஆமாம் அன்னைக்கு சாகி அக்காக்கிட்ட பேசினப்போ, இங்க பத்து நாளுக்கு மேல இருக்க மாட்டேன்னு சொன்னீங்க? இப்போ எப்படி இருக்க ஒத்துக்கிட்டீங்க?” என்று கேட்கவும்,

‘உனக்கு எப்படி அது தெரியும்?’ என்பதுபோல் அவன் பார்வை இருக்கவும்,

“அன்னைக்கு அக்கா போனை ஸ்பீக்கரில் போட்டு தான் பேசிட்டு இருந்தா, நான் அப்போ அவளுக்கு மெகந்தி போட்டுட்டு இருந்தேன்.” என்று அவனது பார்வையின் அர்த்தம் புரிந்தவளாக பதில் கூறினாள்.

அப்போது தான் அவனுக்கும் சாகித்யாவிடம் பேசும்போது நடுவில் ஒரு பெண் குரல் கேட்டதும், அவன் அது ஆத்யா என்று நினைத்துமல் கேட்டதும், அது ஆத்யா இல்லை இவள் என்று சாகித்யா கூறியதும் அவனுக்கு நினைவிற்கு வந்தது. அதுமட்டுமா? நானும் நரேஷும் இல்லையென்றாலும் ஆதுவும் நிவியும் இருப்பாங்க என்று சாகித்யா கூறியதற்கு, ஆத்யாவிற்காக யோசிக்கலாம், நிவி கிவிக்காக எல்லாம் என்னால் இருக்க முடியாது என்று அவன் சொன்ன பதிலும் அவனது ஞாபகத்திற்கு வந்து புன்னகைத்து கொண்டான்.

அவன் ஏதாவது பதில் சொல்வான் என்று அவனது முகம் பார்த்து கொண்டிருந்தவளோ அவன் புன்னகைப்பதை பார்த்து, “என்ன சிரிக்கிறீங்க?” என்று கேட்க, அவன் ஒன்றுமில்லை என்பதுபோல் தலையசைத்தான்.

“என்ன நான் கேட்டதுக்கு பதிலே சொல்லல, அன்னைக்கு அப்படி சீன் போட்டீங்க, இங்க என்னால இருக்கவே முடியாதுன்னு, இப்போ என்ன காரணமாம்?” என்று கேட்டதும் தான் கொஞ்சம் அதிகமாக பேசிவிட்டோம் என்பதே அவளுக்கு உரைத்தது.

ஆனால் அவன் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை என்பது போல், “அதுவா, இங்க இருக்கவே பிடிக்கலன்னு சொன்னவனை ஏதோ காந்த சக்தி அப்படியே கட்டி இழுக்குது. இங்க இருந்து போகாதன்னு சொல்லுது. என்னை என்ன செய்ய சொல்றீங்க?” என்று ஒரு காந்த பார்வையை செலுத்தியப்படி அவன் கூற,

அந்தப்பார்வை அவளை ஏதோ செய்ய, அதற்குமேல் பேச முடியாமல் அவள் மௌனமாகி விடவும், “என்ன நிவி, அப்பப்போ சைலன்ட்டா ஆகிட்றீங்க, உங்களை முதலில் பார்த்தப்போ நீங்க வாயாடின்னு நினைச்சேன். அப்படி இல்லையா?” என்று கேட்டான்.

“ஆமாம் வாயாடி தான், ஆனா ரொம்ப நெருக்கமானவங்களிடம் மட்டும் தான்,” என்று அவள் கோபமாக கூற,

“அப்போ நாம நெருக்கமில்லையா?” என்று அவன் கேட்க, மீண்டும் அவளால் பதில் பேச முடியாமல் போகவும்,

“இப்போ தானே ஃப்ரண்ட்ஸ்னு கைக்குலுக்கிக்கிட்டோம், அப்போ நாம நெருங்கிட்டோம் தானே, அப்புறமும் ஏன் என்கிட்ட பேச தயங்கறீங்க,” என்று அவன் கேட்டான்.

அதற்கும் அவள் “ம்ம்,” என்ற பதிலோடு நிறுத்தி கொள்ள,

அவன் அவளிடம் பேச்சை வளர்க்கும் எண்ணத்தோடு அவன் பேச ஆரம்பிக்க, “என்னடா என் அக்காக்கிட்ட என்ன வம்பு வளர்த்துட்டு இருக்க?” என்று கேட்டப்படி, அவர்களுக்கு நடுவில் அவர்களை இடித்து கொண்டு ஆத்யா அமரவும்,

“ஹே மேல படிக்கட்டில் உட்காரலாமில்ல,” என்றவன்,

“என்ன? அதுக்குள்ள பேசி முடிச்சிட்ட, அய்யோ மழை கொட்டோ கொட்டுன்னு கொட்ட போகுது.” என்று ஒருவித ஏமாற்றம் சூழ, அதை மறைத்து கொண்டு அவளை கேலி செய்தான்.

“ஆமாம், நிவி தனியா இருக்கால்ல அதான்,” என்று கூறிய ஆத்யா அவனை பார்த்தது போல் அவனுக்கு ஒழுங்கு காட்ட,

“இப்படி சீரியல் வில்லி போல இருக்காத, நான் பாவமில்ல,” என்று அவளுக்கு கேட்கும்படி அவனும் கூறினான்.

அப்போது நரேஷும் சாகித்யாவும் அறையிலிருந்து வெளியே வரவும், “போச்சு, இன்னைக்கு வெறும் மழை மட்டுமில்ல, இடி, காத்து, புயல்னு சும்மா சுழட்டி அடிக்க போகுது, அதுக்குள்ளவா பேசி முடிச்சிட்டீங்க,” என்று சிவாதித்யன் அவர்களை பார்த்து கேட்கவும்,

“அது நீங்கல்லாம் வெளியில் காத்திருக்கீங்களேன்னு தான்,” என்று சாகித்யா பதில் கூற,

“ஆமாம் க்கா, எனக்கு பயங்கரமா தூக்கம் வருது,” என்று ஆத்யா கூற, சிவாதித்யன் அவளை கொலைவெறியோடு பார்த்தான்.

பின் மூவரும் அவர்கள் வீட்டிற்கு கிளம்ப, “இருங்க நானும் வீடு வரைக்கும் வரேன்.” என்று நரேஷ் அவர்களோடு துணைக்கு செல்ல,

சிவாதித்யனை பார்த்து நிவேத்யா போய் வருவதாக தலையசைக்கவும், அவளோடு இருக்க வேண்டுமென்ற ஏக்கத்தை அடக்கி கொண்டு அவனும் தலையசைத்தான்.

முரண்படும்..