MNMN 3

MNMN 3

அன்று காலை ஜெயச்சந்திரன் விமான நிலையத்திற்கே சென்று திவாகரன் குடும்பத்தை வீட்டிற்கு அழைத்து வந்தார். வீட்டு வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டதும், கோமளா, சாகித்யா, ஆத்யா மூவரும் அவர்களை நேரில் காணும் ஆவலோடு வாசலுக்கே சென்றனர். ரவிச்சந்திரன் குடும்பத்தினருக்கு அந்த அளவு ஆர்வம் இல்லையென்றாலும் விருந்தினரை வரவேற்கும் நோக்கத்தோடு அவர்களும் வாசலுக்கு சென்றனர்.

காரிலிருந்து திவாகரன், வனிதா, தேவ்சரண் மூவரும் இறங்கினர். சிவாதித்யன் இவர்களோடு வரவில்லை. அவன் நேராக சென்னையில் இருக்கும் நரேஷின் உறவினர் வீட்டிற்கு சென்று அங்கிருந்து நரேஷுடன் வருவதாக ஏற்கனவே திட்டமிருந்தது அவர்கள் நால்வருக்கும் தெரியும்.

காரிலிருந்து இறங்கியதும், “சகி அக்கா, ஆது அக்கா,” என்று தேவ் அவர்கள் இருவரையும் ஒன்று சேர அணைத்து கொண்டான். அவர்களும் அவன் வரவில் அத்தனை மகிழ்ச்சியாகினர். கோமளாவும் வனிதாவிடம் நலம் விசாரிக்க ஆரம்பித்தார். திவாகரனோ ரவிச்சந்திரனையும் ஜானகியயும் பார்த்தவர், இருவரிடமும் நலம் விசாரித்தார்.

பின் வீட்டிற்கு சென்றும் சிறிதுநேரம் அனைவரும் பேசி கொண்டிருக்கவும், “ஹே திவா, நான்தான் காரில் வரும்போதே சொல்லியிருந்தேன் இல்ல, நானும் அண்ணனும் உடனே போய் சமையல் காண்டாக்டரை பார்க்கணும், என்னடா வந்ததும் விட்டுட்டு போறானேன்னு நினைக்காத, நம்ம ஆதுவும் நிவியும் உங்களுக்கு தங்க ஏற்பாடு செய்த வீட்டுக்கு கூட்டிட்டு போவாங்க, ஃப்ரஷ் ஆகிட்டு வந்து சாப்பிடுங்க,” என்று ஜெயச்சந்திரன் கூற,

“என்னடா, இதுக்கு ஏன் நான் தப்பா நினைக்க போறேன். கல்யாண வேலை எவ்வளவு இருக்கும்னு எங்களுக்கு தெரியாதா? இதில் எங்களுக்காக வேற மெனக்கிடுற, சரி நீங்க போய் வேலையை பாருங்க, நாங்க மேனேஜ் செய்துப்போம்,” என்று திவாகரனும் நிலைமை புரிந்தவராக கூறினார்.

பின் நிவேத்யாவும் ஆத்யாவும் தான் அவர்கள் மூவரையும் அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த வீட்டிற்கு கூட்டி சென்றனர். சிவாதித்யன் நரேஷுடன் வரவிருப்பது நிவேத்யாவிற்கு தெரியாது என்பதால், ‘என்ன இவர்கள் மூன்று பேர் மட்டும் வந்திருக்காங்க, அவன் வரல? என்ற கேள்வி அவளுக்கு தோன்றினாலும்,
‘அவன் வந்தா என்ன? வரலன்னா நமக்கு என்ன? சாகி அக்காவும் ஆத்யாவுமே எதுவும் கேட்டுக்கல, நமக்கெதுக்கு?’ என்று நினைத்தவள், அமைதியாகிவிட்டாள்.

அனைவரும் வீட்டினுள் சென்றதும், “இந்த வீடு தான் சித்தப்பா உங்களுக்காக ஏற்பாடு செய்தது. உங்களுக்கு எந்த ரூம் வசதியோ நீங்க தங்கிக்கலாம்,” என்று நிவேத்யா மூவரிடமும் கூற,

“இருக்கற கல்யாண செலவில் இது வேற எக்ஸ்ட்ரா செலவு. நாங்க அங்கேயே வீட்டிலேயே தங்கிக்க மாட்டோமா?” என்று திவாகரன் கேட்டார்.

“சாகி அக்கா கல்யாணம் முடிஞ்சாலும் அந்த சடங்கு இந்த சடங்குன்னு ரிலேஷன்ஸ் கொஞ்சநாள் வந்து போயிட்டு இருப்பாங்க அங்கிள். உங்களுக்கு அது கொஞ்சம் சங்கடமா இருக்கும், அதான் அப்பா இந்த ஏற்பாடு செய்தாங்க, இதில் அவங்களுக்கு ஒன்னும் சிரமம் இல்லை.” என்று ஆத்யா பதில் கூறினாள்.

“சரி நீங்கல்லாம் குளிச்சு ரெடியாகுங்க, சாப்பிடலாம்,” என்று நிவேத்யா சொல்ல, அவர்களும் அதற்கான வேலையில் இறங்கினர். பின் மூவரும் குளித்து முடித்து வந்த நேரம் நிவேத்யாவும் ஆத்யாவும் அங்கேயே அவர்களுக்கான உணவை கொண்டு வர,

“என்னம்மா, நாங்க அங்கேயே வந்து சாப்பிட்டுக்க மாட்டோமா? உங்களுக்கு சிரமம் தானே,” என்று வனிதா கேட்டார்.

“இருக்கட்டும் ஆன்ட்டி, டிராவல் செய்தது டயர்டா இருக்கும், ஒவ்வொரு முறையும் அங்கேயும் இங்கேயும் போயிட்டு வந்துட்டு இருப்பீங்களா? அதான் இங்கேயே கொண்டு வந்தேன். சாப்பிட்டு நல்லா ரெஸ்ட் எடுத்தீங்கன்னா, மதியம் அங்க வந்து சாப்பிடலாம், கூடவே ஈவ்னிங் பங்ஷனுக்கு கிளம்பவும் சரியா இருக்கும்,” என்று பேசியபடி கொண்டு வந்த உணவுகளை அவள் உணவு மேசையில் வைக்க, மூவரும் வந்து அமர்ந்தனர்.

உணவை வைத்தது மட்டுமில்லாமல், நிவேத்யாவே அவர்களுக்கு பரிமாறவும் செய்ய, “அய்யோ பரவாயில்லம்மா, நாங்களே போட்டு சாப்பிட்டுக்கிறோம்,” என்று திவாகரனும் வனிதாவும் சொல்லியும் கேட்காமல்,

“இருக்கட்டும் ஆன்ட்டி,” என்று சொல்லி அவளே பரிமாறினாள்.

“உன்னோட பேர் நிவேத்யா தானே, குழந்தையா இருக்கும்போது பார்த்தது. நீ ஆத்யாவோட பெரியவ இல்ல, படிச்சு முடிச்சிருப்ப, வேலைக்கு போறீயா?” என்று திவாகரன் விசாரிக்க, அவளும் அதற்கு பதில் கூறினாள்.

அவர்களுடன் கொஞ்சம் சகஜமாக பேச ஆரம்பித்ததும், “எப்படியோ ஒருமாசம் இருக்கத்தான் வந்திருக்கீங்க, அது கொஞ்சம் முன்னாடியே வந்திருந்தா உங்களுக்கு வசதியா இருந்திருக்கும் இல்லையா? இப்போன்னா ஜெட்லாக் படுத்தி எடுக்கும், ஆனாலும் வரிசையா ஒவ்வொரு சடங்கிலும் கலந்துக்கணும், உங்களுக்கு கஷ்டம் தானே,” என்று நிவேத்யா கேட்க,

“ம்ம் அப்படி சொல்லுங்க க்கா, நானும் இதையே தான் சொன்னேன். ஆனா இவங்க எங்க கேட்கிறாங்க,” என்று தேவ்சரணும் அவளது பேச்சை ஆமோதிப்பது போல் பெற்றோர்கள் மீது குற்ற பத்திரிக்கை வாசித்தான்.

“எங்களுக்கு மட்டும் அந்த எண்ணம் இல்லாமலா? லீவ்னா அதுக்கு முன்னாடி முடிச்சு கொடுக்க நிறைய வேலை இருக்கே, அதெல்லம் முடிச்சுட்டு கிளம்ப எனக்கு லேட்டாகிடுச்சுமா? இவங்க ரெண்டுப்பேரையும் முன்னமே கிளம்ப சொல்லிட்டு, நானும் சிவாவும் இன்னைக்கு வரலாம்னு நினைச்சோம், ஆனா இவ தான் எல்லாம் ஒன்னா போகலாம்னு சொல்லிட்டா,” என்று திவாகரன் பதில் கூறினார்.

சிவாதித்யனின் பேச்சு வரவும், “என்னங்க சாப்பிட்டதும் சிவாவுக்கு போன் பேசுங்க? அவன் அங்க போயிட்டானான்னு கேளுங்க? அங்க போய் ஈவ்னிங் நரேஷோட வருவதற்கு நம்மளோட சேர்ந்து நேரா இங்க வந்திருக்கலாம்,” என்று வனிதா சொல்ல, நிவேத்யாவின் கேள்விக்கு அவரது பேச்சிலேயே பதில் கிடைத்தது.

“நரேஷூக்கு நம்ம சிவா தான் மாப்பிள்ளை தோழனா இருக்கணுமாம், அதில்லாம அவனோட ஃப்ரண்ட் கூட இருக்கணும்னு நரேஷும் எதிர்பார்க்க மாட்டானா? சாப்பிட்டு போன் செய்து பேசுவோம்,” என்று திவாகரன் கூறினார்.

இப்படியே அவர்கள் பேசியபடி சாப்பிட்டு முடித்திருக்க, அதற்குள் ஆத்யா அந்த வீட்டை சுற்றி பார்த்துவிட்டு வந்தவள், “நிவி, இந்த வீட்டில் மேல ஒரு பெரிய ரூம் இருக்கு, அதுவும் காலியா இருக்கு, இன்னைக்கு நைட் நாம இங்கேயே டேன்ஸ் ரிகர்ஸல் செய்யலாம்,” என்று கூற,

“டான்ஸ் ரிகர்ஸலா? எதுக்கு?” என்று தேவ் கேட்டான்.

“ரிஷப்ஷன்க்கு இப்போல்லாம் டான்ஸ் ஆடுவது ட்ரெண்ட் இல்லையா? அதான் என் ஃப்ரண்ட்க்கு தெரிஞ்ச ஒரு டான்ஸ் க்ரூப்பை ஏற்பாடு செய்திருக்கோம், நானும் நிவியும் கூட ஆட போறோம், ஏன் கல்யாண பொண்ணும் மாப்பிள்ளையும் கூட ஆடப் போறாங்க, நானும் நிவியும் அப்பப்ப கொஞ்சம் பிராக்டிஸ் செய்துக்கிட்டோம், சாகியும் நரேஷ் மாமாவும் தான் இன்னும் பிராக்டிஸ் செய்யல, இன்னைக்கு எங்கேஜ்மென்ட் முடிஞ்சதும் நரேஷ் மாமாவை இங்கேயே தங்க சொல்லி பிராக்டிஸ் செய்ய சொல்ல ரிகர்ஸல் பார்க்க வேண்டியது தான்,” என்று ஆத்யா கூறி கொண்டிருக்க,

“ஆது க்கா, நானும் உங்களோட ஆட்றேன். ரிஷப்ஷன்ல போட ஷெர்வாணில்லாம் எடுத்துட்டு வந்திருக்கேன் நானு,” என்று தேவ் ஆர்வமாக கூறினான்.

“நாளைக்கு ரிஷப்ஷன் டா, உன்னால ஒருநாளில் பிராக்டிஸ் செய்ய முடியுமா?” என்று ஆத்யா அவனிடம் கேட்க,

“நாம என்ன டான்ஸ் காம்படிஷன்லயா கலந்துக்க போறோம், சும்மா எஞ்சாய்மென்ட்க்கு தானே ஆட்றோம், அதனால நம்ம கூட தேவ்வும் ஆடட்டும்,” என்று நிவி கூறினாள்.

“சரி அப்போ நைட் தூங்க போயிடாத, நாம பிராக்டிஸ் செய்யணும்,” என்று ஆத்யா கூற, தேவ் அதற்கு தலையாட்டி கொண்டான்.

அவர்கள் பேசி கொண்டிருந்ததை பெரியவர்கள் இருவரும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க, “என்ன நீங்களும் ஆட்றீங்களா?” என்று ஆத்யா அவர்களை பார்த்து கேட்க,

“வனி ரெடின்னா, நானும் ரெடி,” என்று திவாகரன் உற்சாகமாக கூறவும்,

“ஆசையைப் பாரு, அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை.” என்று வனிதா கூறினார்.

“ஏன் ஆன்ட்டி, யாராச்சும் ஏதாவது சொல்லுவாங்கன்னு நினைக்கறீங்களா? இது நம்ம சந்தோஷத்துக்காக செய்றது. அப்புறம் அடுத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு நாம யோசிக்க கூடாது. சும்மா ஆடுங்க ஆன்ட்டி,” என்று நிவேத்யா கூற,

“அய்யோ இவர் சும்மா என்னை கேலி செய்ய சொன்னாரு, நீங்கல்லாம் ஆடுங்க, நாங்க ஜாலியா பார்க்கிறோம்,” என்று வனிதா கூறினார்.

“சரி எல்லாம் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க, அப்போ தான் ஈவ்னிங் எங்கேஜ்மென்ட் பங்ஷன்ல ஃப்ரஷ்ஷா இருப்பீங்க,” என்று சொல்லி நிவேத்யாவும் ஆத்யாவும் அவர்களுக்கு கொஞ்சம் தனிமை கொடுத்து சென்றனர்.

மாலை நிச்சயதார்த்தம் நடப்பதை குறித்து அனைவரும் பரப்பரப்பாக இருந்தனர். இன்னும் சிறிது நேரத்தில் மாப்பிள்ளை வீட்டிலிருந்து அனைவரும் வந்து விடுவர். சாகித்யாவும் நரேஷும் காதலிப்பதாக வந்து சொன்னதும் உறவினர்களை அழைத்து பேசினால் தேவையில்லாத சில சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும் என்பதை உணர்ந்து, இரண்டு குடும்பங்கள் மட்டுமே கலந்து பேசி நிச்சயதார்த்தம் முதற்கொண்டு அனைத்தையும் ஒரே சமயத்தில் நடத்த முடிவெடுத்திருந்தனர்.

நரேஷின் குடும்பம் டெல்லியில் இருந்தாலும் அவர்களின் உறவினர்கள் அதிகம்பேர் தமிழ்நாட்டில் இருக்கவே, சென்னையிலேயே விசேஷத்தை வைத்து கொள்ள முடிவெடுத்தனர். வரதட்சணை சீர்வரிசை என்று எந்த பேச்சும் இந்த திருமணத்தில் இருக்கக் கூடாது என்று நரேஷ் தீர்மானமாக பெற்றோரிடம் கூறிவிட்டான். அவர்களும் அவனது பேச்சை மீறி நடந்துக் கொள்ளவில்லை.

அவர்கள் கேட்காமல் இருக்கிறார்கள் என்று சாகித்யாவை வெறுமனவே அவர்கள் பெற்றோர்கள் அனுப்பிடமாட்டார்கள். அதேபோல் கல்யாண செலவை தாங்கள் ஏற்று கொள்கிறோம் என்று இரண்டு தரப்பிலும் அவரவர் முன்வர, பின் ஆகும் செலவை இருவரும் பிரித்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர். திருமண செலவை இருவரும் பிரித்து கொண்டாலும், திருமண குறித்த வேலைகளுக்கான பொறுப்பு முழுவதையும் ரவிச்சந்திரனும் ஜெயச்சந்திரனும் ஏற்றிருந்தனர். அதனால் நிற்க முடியாத அளவு அவர்களுக்கு வேலைகள் இருந்தது.

நிச்சயதார்த்தத்திற்கும் சேர்த்து மூன்று நாட்கள் மண்டபம் பிடிக்க தேடினார்கள். ஆனால் இது திருமணங்கள் நடக்கும் மாதம் என்பதால் மூன்று நாட்களுக்கு மொத்தமாக மண்டபம் கிடைக்கவேயில்லை. அதனால் நிச்சயதார்த்தத்தை வீட்டிலேயே வைத்து கொள்ளலாம் என பேசி முடிவெடுத்தனர். அதற்காக தான் இந்த பரப்பரப்பு.

“மாப்பிள்ளை வீட்டில் வந்துட்டாங்க,” என்று உறவினர் ஒருவரு குரல் கொடுக்கவும், அந்த வீட்டு பெரியவர்கள் நுழைவு வாயிலுக்கே சென்று அனைவரையும் வரவேற்றனர்.

நரேஷுடன் சிவாதித்யனும் இருவரோடு அவர்கள் வயதொத்த இன்னும் சில ஆண்களும் உடனிருக்க, அவர்கள் வீட்டினுள் நுழைவதற்கு முன், “மாப்பிள்ளை ஆரத்தி எடுத்ததுக்கு அப்புறம் தான் உள்ள வரணும்,” என்று கஸ்தூரி கூறியவர்,

“மச்சினிச்சி எங்க, சீக்கிரம் வந்து ஆரத்தி எடுங்க,” என்று வீட்டினுள் பார்த்தப்படி குரல் கொடுத்தார்.

“இதோ வந்தாச்சு அத்தை,” என்றப்படி நிவேத்யாவும் ஆத்யாவும் வந்தனர். ஆத்யா பாவாடை தாவணி அணிந்திருக்க, நிவேத்யாவோ குங்கும நிறத்தில் சில்க் காட்டன் புடவை அணிந்து, கையில் ஆரத்தி தட்டுடன் வந்தாள்.

மச்சினிச்சி என்றதும் சிவாதித்யன் ஆத்யாவை மட்டுமே எதிர்பார்த்திருக்க, உடன் வந்த நிவேத்யாவை பார்த்ததுமே ஏதோ இனம் புரியாத உணர்வு அவனிடம் தோன்றியது. எத்தனையோ முறை அவளை புகைப்படத்தில் பார்த்த போதெல்லாம் தோன்றாத அந்த உணர்வு. இப்போது அவளை நேரில் பார்த்ததுமே தோன்றியது ஏனோ? அவனுக்கே புரியவில்லை.

அவன் அவளையே கண்ணிமைக்காமல் பார்த்தப்படி இருந்தவன், நரேஷின் அருகிலேயே நின்றிருக்க, ஆரத்தி எடுக்கும்போது தள்ளி செல்வான் என்று நிவேத்யா எதிர்பார்த்தவள், அவன் அப்படியே நிற்கவும், “ஹலோ, கொஞ்சம் பின்னாடி போறீங்களா? மாமாக்கு ஆரத்தி எடுக்கணும்,” என்று அவனிடம் கூற,

“நான் அவனோட மாப்பிள்ளை தோழன் தான், எனக்கும் சேர்த்து எடுங்க,” என்று சிவாதித்யன் அவளை சீண்டினான்.

அதற்கு பதில் கூறாமல் அவனை முறைத்தவளோ, “மாமா நீங்க கொஞ்சம் முன்னாடி வாங்க,” என்று நரேஷிடம் கூற, அவனும் அவளின் சொல் கேட்டு கொஞ்சம் முன்னே வந்தான்.

ஆனால் அப்போதும் விடாமல் சிவாதித்யனும் கொஞ்சம் முன்னே வந்து நரேஷுடன் சேர்ந்து நிற்க, ஏற்கனவே வந்த பொழுதில் இருந்து சாகித்யாவை கண்ணில் பார்க்க முடியவில்லையே என்ற எரிச்சலில் இருந்த நரேஷ், “நீ வேற ஏன் டா, கொஞ்சம் தள்ளி நில்லுடா,” என்று சொல்லவும், பின் சிவாதித்யனும் சிரித்தப்படியே பின்னால் நகர்ந்து கொண்டான்.

அடுத்து நிவேத்யாவும் ஆத்யாவும் நரேஷுக்கு ஆரத்தி எடுக்க, நரேஷுக்கு பின்னால் நின்றிருந்த இன்னும் சில பேரில் நரேஷுக்கு உறவினர் முறையை சேர்ந்த ஒருவனோ, “நம்ம நரேஷுக்கு ஒன்னுக்கு ரெண்டு மச்சினிச்சிங்க, அதிர்ஷ்டக்காரன் டா நீ,” என்று சொல்ல, அந்த பேச்சை அங்கிருந்த யாருமே ரசிக்கவுமில்லை. அப்படியான பேச்சு யாருக்கும் பிடிக்கவுமில்லை.

அதிலும் நிவேத்யாவிற்கு அந்த பேச்சு கோபத்தை வரவழைக்க, அதற்கு மறுப்பாக பேச வேண்டும் என்று அவள் வாய் திறக்கும் முன்பே, “ஆமாம் வீட்டுக்கு ஒரே பிள்ளையா இருக்க நரேஷுக்கு ரெண்டு மச்சினிச்சிங்களா ரெண்டு தங்கச்சிங்க கிடைச்சிருக்காங்களே, அப்போ அவன் லக்கி தானே,” என்று சிவாதித்யன் பதில் கூறியவன்,

“என்னடா மச்சி, நான் சொன்னது சரிதானே,” என்று நரேஷிடமும் கேட்டான்.

“அதிலென்னடா உனக்கு சந்தேகம். நானே இவங்கக்கிட்ட அப்படித்தான் சொல்லியிருக்கேன்.” என்று நரேஷும் கூறினான்.

அவர்களின் பேச்சில், தான் பேசியது தவறான அர்த்தத்தை கொடுக்கும் என்பது புரிந்து அந்த நபரின் தலை தானாக கீழிறங்க, நரேஷை பற்றி தெரியும் என்றாலும், சிவாதித்யனின் அந்த பேச்சில் பெண் வீட்டாருக்கும் மகிழ்ச்சி. மாப்பிள்ளை வீட்டாருக்கு சங்கடங்கள் அகன்றது என்றே சொல்லலாம்,

அவனை தவிர்க்க வேண்டுமென்று முன்பு நினைத்திருந்த நிவேத்யாவும் அவனது பேச்சில் ‘நாம நினைச்ச மாதிரி இவன் இல்லையோ,’ என்று அவனை கவனிக்க ஆரம்பித்தாள்.

“சரி ஆரத்தி எடுத்தோம்ல, காசு கொடுங்க மாமா,” என்று ஆத்யா கேட்கவும்,

நரேஷ் அவனது பர்ஸில் இருந்து இரண்டு ஐநூறு ரூபாய் தாளை எடுத்து அவர்களிடம் கொடுக்க, “என்னடா கஞ்சத்தனமா கொடுக்கிற, தங்கைன்னு சொல்லியாச்சு, அதனால தாராளமா கொடு,” என்று சிவாதித்யன் கூற,

“அதானே மாமா, ஆளுக்கு ஐந்தாயிரமாச்சும் வேணும்,” என்று ஆத்யா கூறினாள்.

“அந்த அளவுக்கு இப்போ என்கிட்ட பணமா இல்லை. வேணும்னா இந்தாங்க என்னோட டெபிட் கார்ட் இருக்கு, எவ்வளவு பணம் வேணுமோ எடுத்துக்கோங்க,” என்று நரேஷ் கூற,

“அய்யோ வேண்டாம் மாமா,” என்று நிவேத்யா கூறவும்,

“கொடுக்கும்போதே வாங்கிக்கோங்க, ஏன் வேண்டாம்னு சொல்றீங்க,” என்று யாரோ ஒருவர் கூற,

“இல்லை இப்போ இந்த டெபிட் கார்டுக்கு அவசியம் இருக்காது. முதலில் கல்யாணம் முடியட்டும், மாமா இங்க வரும்போதும் நாங்க அங்க போகும்போதும், மாமாவோட கிரெடிட் கார்ட்க்கு தானே வேலையே, அதான் பெருந்தன்மையா வேண்டாம்னு சொல்றோம்,” என்று நிவேத்யா கூறினாள்.

“ஆத்தி, ஆளை விடுங்க,” என்று நரேஷ் போலியாக பயந்தவன்,

கையில் வைத்திருந்த பர்ஸை அவர்கள் இருவரின் கைகளில் வைத்தவன், “இந்தாங்க, இந்த வேலட்ல இருக்கற பணமெல்லாம் உங்களுக்கு தான்,” என்றான்.

“பரவாயில்லை மாமா, நாங்க எதிர்பார்த்த அளவுக்கு இல்லன்னாலும் வேலட் வெயிட்டா இருப்பதை பார்த்தா அதில் பாதியாவது தேறும் போல,” என்று ஆத்யா கூறினாள்.

“சரி போதும் உங்க விளையாட்டு, மாப்பிள்ளையை உள்ள வர விடுங்க,” என்று கஸ்தூரி சொன்னதும், நரேஷுக்கு இருவரும் வழி விட்டனர்.

நரேஷ் மற்றும் சிவாதித்யனோடு ஆத்யா அங்கேயே இருந்துவிட, ஆரத்தி நீரை நிவேத்யா வெளியில் கொண்டு சென்று ஊத்தி விட்டு வந்தவள், விருந்தினர்களை உபசரிக்க பெரியவர்களுக்கு உதவ சென்றாள்.

ஜானகி, கோமளா, வனிதா மூவரும் மாப்பிள்ளை வீட்டினரில் பெரியவர்களை உபசரித்துக் கொண்டிருக்க, நிவேத்யா சிறியவர்களுக்கு குளிர்பானத்தை கொண்டு சென்றவள், ஏனோ சிவாதித்யன் பேசியதில் அவன் மீது நல்ல அபிப்ராயம் வந்ததினால், முதலில் அவனிடம் போய் கொடுக்க, அவனோ அவளை வியப்பாக பார்த்தான்.

அந்த பார்வை அவளை ஏதோ செய்ய, “மாப்பிள்ளை தோழனுக்கு ஆரத்தில்லாம் எடுக்க முடியாது. ஆனா இப்படி உபசரிப்பெல்லாம் முதலில் நடக்கும்,” என்று சொல்லி சமாளித்தாள்.

அவன் குளிர்பானத்தை எடுத்து கொண்டதும், அடுத்து நரேஷுக்கு கொடுத்தவள், மீதி பேருக்கும் கொடுத்து கொண்டிருந்தாள். சாகித்யாவை பார்க்க முடியாதா? என்பது போல் நரேஷ் பார்வை அலைபாய்ந்து கொண்டிருக்க,

“இப்போதைக்கு அக்காவை உங்க கண்ணில் காட்ட மாட்டாங்க மாமா, எப்படியோ நிச்சய புடவை கொடுக்க தான் அவளை கூட்டிட்டு வருவாங்க, அதுவரைக்கும் அவ உள்ளேயே இருக்கணும்னு எங்க கஸ்தூரி அத்தை ஆர்டர் போட்டிருக்காங்க,” என்று அவனது தவிப்பை புரிந்தவனாக ஆத்யா கூறவும், நரேஷ் நிலைமை புரிந்து ஏக்க்கமாய் தலையசைத்து கொண்டான்.

அடுத்து ஆத்யா குளிர்பானத்தை பருகியப்படி நிவேத்யாவையே பார்த்து கொண்டிருந்த சிவாதித்யனின் அருகில் அமர்ந்தவள், “நீ வாயில் ஈ நுழையறது கூட தெரியாமல் பார்த்துட்டு இருப்பது என்னோட அக்கா, புரிஞ்சுதா?” என்று கேட்டாள்.

“தெரியுமே, அதுவும் வசதியா போச்சு, சரி உங்க அக்காவை எப்படி கரெக்ட் பண்றது? ஏதாவது ஐடியா இருந்தா கொடுக்கறது.” என்று அவளின் தோளில் கைப்போட்டப்படி அவன் கேட்க,

“ஓ என் அக்காவை கரெக்ட் செய்ய என்கிட்டேயே ஐடியா கேட்கிறீயா? ஆனா அதுக்கு வாய்ப்பேயில்லை தம்பி,” என்றாள் ஆத்யா.

“ஏனாம், நான் ஹாண்ட்சம்மா இருக்கேன்னு நான் சொல்லித்தான் உனக்கு தெரியணும்னு இல்லை. நல்லா படிச்சிருக்கேன். இங்கல்லாம் வேலை கிடைக்குமான்னு ஏங்கும் அமெரிக்காவின் ஒரு பெரிய கம்பெனியில் வேலை செய்யப் போறேன். இதைவிட என்ன வேணுமாம் உன்னோட அக்காக்கு,” என்று அவன் கேட்க,

“ஆமாமாம் நீ ஹாண்ட்சம்மா தான் இருக்க, அதை இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனா நீ ரெண்டாவதா சொன்னீயே அதுதான் உன்னை என்னோட அக்கா வேண்டாம்னு சொல்றதுக்கான முதல் ரீஸன். இந்த அமெரிக்கா வேலை. டாலர்ல சம்பளம் இதெல்லாம் என்னோட அக்காக்கிட்ட எடுபாடாது தம்பி,

ஏதோ நீ கொஞ்ச நேரத்துக்கு முன்ன பேசின பேச்சுக்கு தான் இந்த உபசரிப்பெல்லாம், மத்தப்படி உன்னை அவ திரும்பி கூட பார்க்கமாட்டா பார்த்துக்க,” என்றாள் ஆத்யா,

“ஹலோ, ஏதோ உன்னோட அக்கா கொஞ்சம் அழகா இருக்காளேன்னு பார்த்தேன். சும்மா உன்கிட்ட எப்படி கரெக்ட் பண்றதுன்னு கேட்டேன். அவ்வளவுத்தான், அதுக்குமேல என்னோட லெவல்க்கெல்லாம் உன்னோட அக்கா வொர்த் இல்லை புரிஞ்சுதா? ரொம்ப பெருசால்லாம் யோசிக்காத என்ன?” என்று தலைக் குப்புற விழுந்தவனுக்கு மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் அவன் பேச,

“ம்ம் நீ சொன்ன மாதிரி இதோட இதை அப்படியே விட்டுட்டு நீ வேற வேலையை பார்ப்பது தான் உனக்கும் நல்லது தம்பி,” என்று சொல்லிவிட்டு ஆத்யா அங்கிருந்து சென்றுவிட்டாள்.

ஆத்யா சொன்னது போலவே, அவன் பேசியதை கேட்டு நெகிழ்ந்தவளாக ஒரு ஆர்வத்தில் நிவேத்யா அவனுக்கு முதலில் குளிர்பானத்தை கொண்டு வந்து கொடுத்துவிட்டாளே தவிர, அதன்பின் தான்,

‘ச்சே என்னைப்பத்தி அவன் என்ன நினைச்சிருப்பான்? அமெரிக்காவில் இருந்து வந்திருக்கான் என்பதால, அவனிடம் வழியறதா அவன் நினைச்சிருக்க மாட்டான். இனி இப்படி நடந்துக்காத நிவி,” என்று தனக்குள்ளேயே சொல்லி கொண்டாள்.

அதன்பின் ஆத்யாவிடம் வீம்புக்கு சொல்லி விட்டாலும் சிவாதித்யன் நிவேத்யாவை தன் பார்வையால் தொடர்ந்து கொண்டிருக்க, அவளோ அவனை கவனமாக தவிர்த்து கொண்டிருந்தாள்.

முரண்படும்..