MNMN 2

MNMN 2

நியூஜெர்ஸி

இன்று இரவு விமானம் ஏறுவதற்காக காலை நேரமே பயணத்திற்கு தேவையான பொருட்களை எடுத்து வைப்பதில் திவாகரனும் வனிதாவும் தீவிரமாக இருந்தனர்.

“வனி, சாகித்யாக்கு வாங்கின கிஃப்ட் எந்த பையில் வச்ச? மத்தவங்களுக்கு வாங்கினதெல்லாம் எதில் இருக்கு?” என்று திவாகரன் கேட்க, வனிதா அதற்கு பதில் சொல்லி கொண்டிருந்தவர்,
“நாம போகறது பெங்களூருக்கு இல்லை. சென்னைக்கு, அங்க உங்க ஃப்ரண்ட் மட்டும் இல்லை. அவங்க அண்ணன் குடும்பமும் இருக்கு, அவங்களுக்கும் கிஃப்ட் வாங்கனும்னு சொன்னேனே, வாங்கிட்டீங்களா?” என்று வனிதா அவரை பதில் கேள்வி கேட்டார்.

“வாங்கிட்டேனே ம்மா, உன்கிட்ட கூட காண்பிச்சேனே, நீ நல்லா இருக்குன்னு சொன்னீயே, நீதான அதையும் பேக்ல வைப்பதா சொன்ன? வச்சீயா? இல்லையா?” என்று திவாகரன் கேட்க,

“ஆமாமில்ல, நான்தான் மறந்துட்டேன்.” என்று வனிதாவும் பதில் கூறினார்.

வேலை நிமித்தமாக நியூஜெர்ஸியை தங்களது இருப்பிடமாக மாற்றி கொண்டாலும், தங்கள் தாய்நாட்டிற்கு செல்கிறோம் என்பதில் இருவருக்கும் தலைகால் புரியவில்லை. இருவருக்குமே தாய் தந்தை காலமாகியிருக்க, வனிதா ஒரே பெண் என்பதால் இந்தியாவில் போய் அவ்வப்போது தங்குவதற்கு அவருக்கு நெருங்கிய சொந்தம் என்று இல்லை.

திவாகரனுக்குமே அவரின் உடன்பிறந்தவர்கள் இங்கு தான் நியூயார்க், வாஷிங்டன் என்று செட்டில் ஆகியிருக்க, அவருக்கும் இந்தியா சென்று தங்கும் அளவுக்கு உறவுகள் இல்லை. இவர்களின் குறையை போக்குவது போல் திவாகரனின் உயிர் தோழன் ஜெயச்சந்திரன் பெங்களூரில் இருப்பதால் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை விடுமுறைக்கு அங்கு சென்று ஒரு மாதம் இருந்துவிட்டு வருவர். ஜெயச்சந்திரன், திவாகரன் மட்டுமில்லாமல் அவர்களின் இரண்டு குடும்பமும் கூட நெருங்கிய நண்பர்கள் போல் பழகுவதால் தான் அது சாத்தியமயிற்று.

அதையும் தாண்டி இருவருக்கும் சம்பந்தி ஆக வேண்டுமென்ற ஆசையும் உண்டு. அதற்கு ஏற்றாற்போல் அவர் மகன், இந்த கதையின் நாயகன் சிவாதித்யன். 26 வயது நிறைவடைந்து 27ல் நிற்பவன், படிப்பு வேலை என்று அவன் நினைத்த இலக்கை கிட்டத்தட்ட அடைந்து விட்டவன், சாகித்யாவும் படித்து முடித்து இப்போது ஒரு நல்ல வேலையில் இருப்பதால், இதுதான் அவர்களின் திருமணத்தை பற்றி பேச வேண்டிய நேரம் என்பதை புரிந்தவராக, தன் மகனிடம் இதைப்பற்றி பேசும்போது,

“என்னப்பா சொல்றீங்க, நானும் சாகித்யாவும் நல்ல ஃப்ரண்ட்ஸ், எங்களுக்குள்ள இப்படியெல்லாம் நாங்க யோசிச்சு பார்த்ததில்லை. அதுமட்டுமில்ல சகியும் நரேஷும் ஒருத்தரையொருத்தர் விரும்புறாங்க, அவங்க கல்யாணம் தான் நடக்கணும்,” என்று கூறி அவரை அதிர வைத்தான்.

ஆமாம் நரேஷ் சாகித்யாவின் காதலுக்கு தூது சென்றதே அவன்தான், சிவாதித்யனின் தோழன் தான் நரேஷ். டெல்லியிலிருந்து இங்கு வந்து படித்த நரேஷும் அவனும் நெருங்கிய நண்பர்கள் ஆயினர். அதன்பின் சிவாதித்யன் பெங்களூரு வந்தால் அவனை சந்திக்கவென்று நரேஷ் வரும்போது சாகித்யாவுடன் அறிமுகமாகி அவளை காதலிக்க ஆரம்பித்தான்.

அதை அவளிடம் வெளிப்படையாக சொல்ல தயங்கியவன், சிவாதித்யன் மூலமாக சொல்ல, சாகித்யாவிற்கும் நரேஷ் மேல் விருப்பம் இருப்பதால் அதை உடனே அவள் ஒத்து கொண்டு இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர்.

இப்படி ஆகும் என்று எதிர்பாராத திவாகரனுக்கு சிறிது ஏமாற்றமாக தான் இருந்தது. “சரி ஆத்யாவை உனக்கு பேசலாமா?” என்று அவர் கேட்க,

“அப்பா, நான் அவளை தங்கையாக தான் நினைச்சிட்டு இருக்கேன். அவளை போய் கல்யாணம் செய்ய சொல்றீங்க, அதுவுமில்லாம அவ இன்னும் படிப்பை முடிக்கல, அதுக்குள்ள அவ கல்யாணத்தை பத்தி பேசாதீங்க,” என்று சிவாதித்யன் அதற்கும் மறுப்பு தெரிவித்தான்.

ஆத்யா முதுநிலை படிப்பின் இறுதியில் இருப்பவள், சாகித்யாவின் திருமணம் முடிந்ததும் கூட இதைப்பற்றி மேற்கொண்டு பேசலாம், ஆனால் தங்கையாக நினைக்கிறேன் என்று சிவாதித்யன் சொன்னப்பிறகு திவாகரன் என்ன பேசுவார்? அத்துடன் அந்த பேச்சை நிறுத்தி கொண்டார்.

சிவாதித்யன் மூலம் திவாகரனுக்கு விஷயம் தெரிந்து விடவே, இதற்கு மேல் வீட்டில் விஷயத்தை சொல்லாமல் இருக்க முடியாது என்று சாகித்யாவும் நரேஷும் தங்களின் காதலை பற்றி அவரவர் வீட்டில் தெரிவிக்க, இரண்டு குடும்பத்திலும் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாததால் பேசி இதோ திருமணம் வரை வந்துவிட்டது.

“அம்மா, என்னோட திங்ஸ்லாம் எடுத்து வச்சாச்சா?” என்று கேட்டப்படி வந்தான் தேவ்சரண். அவர்களின் இரண்டாவது மகன். சிவாதித்யனுக்கும் இவனுக்கும் பத்து வயது வித்தியாசம். சிவாதித்யனின் ஐந்து வயதில் அவர்கள் இங்கு வந்தவர்கள், இந்த நாட்டின் குடியுரிமையை பெற இங்கு குழந்தை பெற்று கொள்ள வேண்டுமென்று தவமாய் தவமிருந்து அடுத்த ஐந்து வருடம் காத்திருந்து தான் தேவ்சரணை பெற்றெடுத்தார்கள். இப்போது அவன் பள்ளி படிப்பின் இறுதியில் இருக்கிறான். அவனும் இந்தியா செல்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தான்.

“வச்சிட்டேன். நீ ஒருமுறை செக் செஞ்சுக்க, வேறெதுவும் வைக்கணுமா பார்த்துக்க, அதுக்குன்னு தேவையில்லாததை எடுத்து வைக்காத, அப்புறம் வெயிட் போட்டு பார்த்துட்டு அதிகமா இருந்தா கிளம்பற அவசரத்தில் கஷ்டம் ஆகிடும்,” என்று மகனிடம் வனிதா சொல்லி கொண்டிருந்தவர்,

அடுத்து ஏதோ அலைபேசியில் பார்த்தப்படி வந்த சிவாதித்யனிடம், “சிவா உன்னோட திங்க்ஸ் பேக் செஞ்சுட்டீயா? ஏதாவது ஹெல்ப் வேணுமா?” என்று அவனிடம் கேட்டார்.

“எடுத்து வச்சாச்சு ம்மா, வேற ஏதாவது வேணுமான்னு பார்த்துட்டு சொல்றேன். அப்புறம் நான் ஏற்கனவே சொன்னது தான், நான் அங்க பத்து நாளுக்கு மேல இருக்க மாட்டேன். அங்க வந்து இன்னும் கொஞ்சநாள் இருன்னு என்னை கட்டாயப்படுத்த கூடாது.” என்று அவன் சொல்லி கொண்டிருக்க,

“அண்ணா, நீயும் இல்லன்னா எனக்கு அங்க ஒருமாதிரி இருக்கும், எனக்காக இருக்கலாமில்ல,” என்று தேவ் அவனிடம் கெஞ்சினான்.

“அப்போ நீயும் என்னோட கிளம்பி வந்துடு, அம்மாவும் அப்பாவும் ஒருமாசம் என்ன? இரண்டு மாசம் கூட இருந்துட்டு வரட்டும், நாம இங்க ஜாலியா இருக்கலாம்,” என்று சிவாதித்யன் கூற,

“ம்ம் அப்படி சொல்லிட்டு கொஞ்சநாளில் நீ வேலைக்கு போயிடுவ, அப்புறம் நான் தனியா தான் இருக்கணும், அதில்லாம என்னால அம்மாவை விட்டுட்டு நிறைய நாளெல்லாம் இருக்க முடியாது.” என்று தேவ் பதில் கூறினான்.

“இன்னும் கொஞ்சம் வருஷம் கழிச்சு இதே பதிலை சொல்றீயான்னு பார்க்கலாம் தம்பி,” என்று சிவாதித்யனும் விடாமல் கூறி கொண்டிருந்தான்.

“எப்படியோ புது கம்பெனியில் வேலையில் சேர ஒருமாசத்துக்கு மேல டைம் இருக்கே, அப்புறம் என்ன சிவா, அங்க வந்து இருந்தா என்ன?” என்று திவாகரன் கேட்க,

“அந்த டைம் நான்தான் கேட்டு வாங்கினேன். அந்த டைம் வரைக்கும் லைஃபை நல்லா எஞ்சாய் செய்யணும்னு நினைக்கிறேன். இந்தியாவில் எல்லாம் என்னால அத்தனைநாள் இருக்க முடியாது. அங்க என்ன எஞ்சாய்மென்ட் இருக்கு சொல்லுங்க?” என்று அவன் அவர்களிடம் கேட்டான்.

அவன் வேலை செய்த நிறுவனத்தில் அவன் கண்டுபிடித்த புதிய கேம் ஒன்று குழந்தைகளை ஈர்க்க கூடிய ஒன்று, அதேசமயம் அவர்களின் மூளைக்கும் வேலை கொடுக்க கூடியது. அது பல நாடுகளில் பிரபலமான கேம் ஆக மாறியதில் அவனை தங்கள் நிறுவனத்திற்கு கூப்பிட்டு கொள்ள பல நிறுவனங்கள் முயற்சி செய்தது.

அவனும் அதை எதிர்பார்த்து தான் பல மாதங்கள் மூளைக்கு வேலை கொடுத்து அந்த கேமை கண்டுபிடித்தான். ஒரே இடத்தில் தேங்கிடாமல் அவனது முன்னேற்றத்தை பற்றி யோசிப்பவன், அவன் எதிர்பார்த்த நிறுவனத்திலிருந்து அழைப்பு வரவும் அதை அப்படியே பிடித்து கொண்டான்.

பழைய வேலை விட்டவனுக்கு புதிய நிறுவனத்தில் சேர ஒரு மாதத்திற்கு மேல் நேரம் இருந்தது. வேலையில் சேர்ந்து விட்டால் அவனது மூளைக்கு வேலை அதிகமாகிவிடும், அதுவரை வாழ்க்கையை மகிழ்ச்சியோடு செலவழிக்க நினைத்தவனுக்கு இந்தியா செல்வதில் துளியும் விருப்பமில்லை.

ஆனால் இந்த நேரத்தில் நரேஷ், சாகித்யா திருமணம் நடக்கவிருப்பதால் அவன் அதில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும், இந்த நேரத்தில் திருமணம் நடப்பதும் ஒருவகையில் நல்லது தான் என்று நினைத்தவன், பத்து நாளுக்கு மேல் அங்கு இருக்க கூடாது என்று முடிவு செய்தவன், அதைதான் வீட்டில் உள்ளவர்களிடம் அவ்வப்போது சொல்லி கொண்டே இருக்கிறான்.

“என்னங்க, நாம சொன்னா எல்லாம் இவன் கேட்க மாட்டான். நான் சாகித்யாவிடம் விஷயத்தை சொல்லிட்டேன். அவன் எப்படி ஒருமாசம் இங்க தங்காம போவான். நான் பேசிக்கிறேன்னு சொல்லிட்டா,” என்று வனிதா கணவனிடம் கூறியவர்,

“கிளம்பறதுக்குள்ள அவக்கிட்ட உன்னை பேச சொன்னா,” என்று மகனிடம் தகவல் கூறினார்.

“சாரி, நான் யார் சொன்னாலும் கேட்பதாயில்லை, அவளே கல்யாணம் முடிஞ்சு டெல்லிக்கு போக போறா, அப்புறம் என்னை எதுக்கு அங்க இருக்க சொல்றா, நான் அவக்கிட்ட பேசிக்கிறேன்.” என்று கொஞ்சமும் இறங்கி வராதவனாக பேசிவிட்டு சென்றவன், அங்கு போனதும் ஒருத்தியிடம் மனதை பறி கொடுப்பான் என்று கொஞ்சமும் நினைத்திருக்க மாட்டான்.

இரவு உணவை முடித்து கொண்டு நிவேத்யாவும் சாகித்யாவும் சாகித்யாவின் அறைக்கு வந்தனர். நிவேத்யா தான் சாகித்யாவிற்கு மெகந்தி போட்டு விடப் போகிறாள். அதனால் தொல்லையாக இருப்பாள் என்பதால் ஆத்யாவை உறங்க அனுப்பிவிட்டு இருவர் மட்டும் வந்தனர். முதலில் மணப் பெண்ணுக்கு முடித்து விட்டால், அவளுக்கும் ஆத்யாவிற்கும் நாளை இரவு போட்டுக் கொள்ளலாம் என்பது நிவேத்யாவின் எண்ணம்.

படித்தது தகவல் தொழில்நுட்பம் என்றாலும் இப்படி மெகந்தி போடுவது பெரிய பெரிய கோலம் போடுவது, விதம் விதமாக புகைப்படம் எடுப்பது இதிலெல்லாம் நிவேத்யாவிற்கு அதிக ஆர்வம்.

நிவேத்யா மெகந்தி போட்டால் அழகாக இருக்குமென்பதால் தான் சாகித்யா மெகந்தியை தவிர மற்றதற்கு மட்டும் அழகு நிலையத்தை அணுகியிருந்தாள். அழகுபடுத்தவதிலும் நிவேத்யா நன்றாக தான் செய்வாள். ஆனால் சாகித்யா மணப்பெண் என்பதால் அழகு நிலையத்திலேயே செய்து கொள்ளட்டும் என்று நிவேத்யாவே கூறிவிட்டாள். ஆனால் ஆத்யாவிற்கு நிவேத்யா தான் செய்ய வேண்டுமென்று ஆத்யா முன்னமே கூறிவிட்டாள்.

கையில் மெகந்தி கோனை கொண்டு வந்தவள், “அக்கா, நரேஷ் மாமாவிடம் சொல்லிட்டல்ல, நடுவில் போன் செய்து டிஸ்டர்ப் செய்ய மாட்டாரே?” என்று நிவேத்யா கேட்க,

“சொல்லிட்டேன் டீ, நரேஷ் போன் செய்ய மாட்டாரு,” என்று சாகித்யாவும் பதில் கூறினாள்.

அடுத்து நிவேத்யாவும் அவளது வேலையை ஆரம்பிக்க, சிறிது நேரத்தில் சாகித்யாவின் அலைபேசி இசைக்கவும், நிவேத்யா அவளை முறைத்தவள், “என்னக்கா மாமா போன் செய்ய மாட்டாருன்னு சொன்ன?” என்று கோபமாக கேட்டாள்.

“நரேஷா இருக்காது நிவி, யாருன்னு பாரேன்.” என்று சாகித்யா கூறினாள். ஏனென்றால் போன் அவர்கள் அருகில் இல்லாமல் கொஞ்சம் தள்ளி இருந்தது.

நிவேத்யாவும் எழுந்து சென்று யார் அழைப்பது என்று பார்க்க, ஷிவ் காலிங் என்ற ஆங்கில எழுத்தோடு சிவாதித்யன் புன்னகையோடு நின்றிருந்த புகைப்படமும் திரையில் மிளிர்ந்தது.

அவனை நேரில் பார்த்ததில்லை என்றாலும் அவனை அவளுக்கு தெரியும், சாகித்யாவும் ஆத்யாவும் தான் எப்போது பார்த்தாலும் ஷிவ் ஷிவ் என்று பேசி அவளது காதை புண்ணாக்கியிருக்கிறார்களே, அப்படியிருக்க எப்படி தெரியாமல் போகும்? ஜெயச்சந்திரன் குடும்பத்தோடு பெங்களூருவில் இருந்த போது, கோடை விடுமுறையில் தான் ஒன்று இவர்கள் அங்கு செல்வதோ இல்லை அவர்கள் இங்கு வருவதோ நடக்கும், நடுவில் வந்து போகும் சிவாதித்யனின் குடும்பத்தை அவள் பார்த்ததேயில்லை.

யாரென்று சொல்லாமல் அலைபேசியை சாகித்யாவிடம் அவள் காட்ட, “ஷிவ் வா? நான்தான் அவனை பேச சொல்லியிருந்தேன். கொஞ்சம் கால் அட்டன்ட் செய்து ஸ்பீக்கர்ல போடு நிவி,” என்று சாகித்யா சொல்லவும், அவளை முறைத்தவள், அலைபேசியின் அழைப்பை ஏற்று சகோதரி சொன்னதை செய்தாள்.

அழைப்பு ஏற்கப்பட்டதும், “ஹே சகி, பேச சொன்னீயாம்,” என்று சிவாதித்யன் பேசுவது ஸ்பீக்கரில் போட்டிருந்ததால் நிவேத்யாவிற்கு நன்றாகவே கேட்டது.

“எதுக்கு பேச சொன்னேன்னு தெரியாதா? ஆன்ட்டி உன்கிட்ட சொல்லலையா? தெரியாத மாதிரி நடிக்காத டா?” என்று சாகித்யா கூறவும், சிவாதித்யன் மறுமுனையில் சிரிப்பது இருவருக்கும் நன்றாகவே கேட்டது.

அவர்கள் பேசட்டும் என்று நிவேத்யா தனது வேலையை பார்க்க ஆரம்பிக்க, “இங்க பத்து நாள் தான் இருக்கப் போறதா சொல்லிட்டு இருக்கீயாம், அதெல்லாம் என்னால ஒத்துக்க முடியாது. நீ கண்டிப்பா ஒருமாசம் இங்க தங்கணும் ஷிவ்,” என்று சாகித்யா கட்டளை போல் கூறி கொண்டிருந்தாள்.

“ஆமாம் நீ கல்யாணம் முடிஞ்சு ஒருவாரம் தானே இங்க இருக்க போற, அப்புறம் நீயும் நரேஷும் ஹனிமூன் போயிட்டு அப்படியே டெல்லிக்கு போயிடுவீங்க, அப்புறம் எதுக்கு என்னை அங்க இருக்க சொல்லிட்டு இருக்க?” என்று அவன் பதிலுக்கு கேட்க,

“நாங்க டெல்லிக்கு போனதும் நீயும் அங்க வந்து இரு, அதுவரைக்கும் கொஞ்சம் நீ அட்ஜஸ்ட் செஞ்சுக்க கூடாதா?” என்று சாகித்யா கேட்கவும்,

“ஏன் ஹனிமூனுக்கும் என்னை கூட்டிட்டு போங்களேன். சிவ பூஜையில் கரடியாட்டம்,” என்ற அவனது பதிலில் சாகித்யா சிரித்தாள்.

அதை கேட்டு கொண்டிருந்த நிவேத்யாவோ, ‘என்ன இவன் இப்படி பேசறான்? அதையும் கேட்டு அக்கா சிரிச்சிட்டு இருக்கு,’ என்று கடுப்பாகி கொண்டிருந்தாள்.

“அந்த ஒருவாரம் நாங்க இல்லன்னா என்ன? ஆது இருக்கா, சிபி அண்ணா இருக்கான், நிவி இருக்கா, இவங்கல்லாம் உனக்கு கம்பெனி கொடுக்கப் போறாங்க,” என்று சாகித்யா கூற,

“ஆதுக்காக கொஞ்சம் யோசிக்கலாம், மத்தப்படி நிவி கிவிக்காகல்லாம் என்னால அங்க இருக்க முடியாது.” என்று அவன் சொல்ல,

அதைகேட்டுக் கொண்டிருந்தவளோ இன்னும் கடுப்பாகி, ‘எனக்காக இவனை யாரு இருக்க சொன்னா, பத்து நாள் என்ன? கல்யாணம் முடிஞ்சதும் போயேன். யாருக்கென்ன வந்தது.’ என்று மனதில் சொல்லி கொண்டவள், சகோதரியை முறைக்க, சாகித்யாவும் மௌனமாக மன்னிப்பு கேட்டு கொண்டாள்.

அவன் பேசியதில் எரிச்சலானவள், “கொஞ்சம் அசைக்காம காட்டு க்கா,” என்று சாகித்யாவிடம் கூற, அது மறுமுனையில் சிவாதித்யனுக்கும் கேட்க,

“யாரு சகி, ஆதுவா கூட இருக்கா?” என்று கேட்டான்.

“இல்லடா, அது ஆது இல்ல நிவி, எனக்கு மெகந்தி போட்டுட்டு இருக்கா, பேசறீயா அவக்கிட்ட,” என்று சாகித்யா சொல்ல, நிவியோ வேண்டாம் என்பது போல் மறுப்பாக தலையசைத்தாள்.

அவனுக்கும் நிவி என்பது சாகித்யாவின் பெரியப்பா பெண் என்று தெரியும், அதுதான் சாகித்யாவும் ஆத்யாவும் சென்னைக்கு போனதில் இருந்து மூவரும் சேர்ந்து எங்கே போனாலும் சில பல செல்ஃபிக்கள் எடுத்து அதை இருவரும் வாட்ஸ் அப் ஸ்டேஸில் வைப்பதில் அவன் நிவேத்யாவை பார்த்திருக்கிறானே, ஆனால் அதற்கு மேல் அவனுக்கு அவளைப்பற்றி யோசிக்க ஒன்றும் இருந்ததில்லை.

இப்போதும் அவளிடம் பேசும் ஆர்வம் இல்லாததால், “அங்க தானே வரப் போகிறேன். நேரில் பார்த்து பேசிக்கலாம்,” என்ற அவனது பதிலில் நிவேத்யாவும் கொஞ்சம் ஆசுவசமானாள்.

“சரி கடைசியா நீ என்னத்தான் சொல்ல வர? ஒருமாசம் இங்க இருக்க போறீயா இல்லையா?” என்று சாகித்யா அவனிடம் கேட்க,

“சாரி டார்லி, நான் யார் சொல்றதையும் கேட்க தயாரில்லை. இந்தியாவில் என்ன எஞ்சாய்மென்ட் இருக்கு சொல்லு? இங்கன்னா ஃப்ரண்ட்ஸ் பார்டின்னு சும்மா களைகட்டும், செம ஃபன்னா இருக்கும், உன்னோட கல்யாணம் மட்டும் இல்லன்னா எனக்கு அங்க வர சுத்தமா இன்ட்ரஸ்ட் இல்லை. அதனால நான் யார் சொன்னாலும் கேட்க போறதில்லை. நீங்க ஹனிமூன் போனதும், நானும் இங்க வந்துடுவேன்.” என்று அவன் திட்டவட்டமாக கூறினான்.

“ம்ம் ஓவரா போறல்ல, போ தம்பி போ. உனக்கு கல்யாணம் நடக்கும், அப்போ நானும் இப்படி சீன் போடல, என்னோட பேர் சாகித்யா இல்லை.” என்று அவள் கூற,

“இதுக்கெல்லாம் இந்த சிவா அசரமாட்டான் டார்லி, நான் சொன்னது சொன்னது தான்,” என்று சொல்லி அலைபேசி அழைப்பை அவன் அணைக்க,

‘என்ன இவன்? இந்தியாவில் பிறந்துட்டு, இந்தியாவில் என்ன இருக்குன்னு கேட்கிறன். நீயெல்லாம் இந்த நாட்டுக்கு தேவையே இல்லை போடா,” என்று நிவேத்யாவும் மனதில் சொல்லி கொண்டாள்.

இப்படி முரண்பாடான எண்ணம் கொண்ட இருவரும் நேரில் சந்திக்கும்போதும் அதே எண்ணத்துடன் இருப்பார்களா? எதிரெதிர் துருவம் தானே ஈர்க்கும், இந்த துருவங்களும் ஒன்றுக்கொன்று ஈர்க்க காத்திருக்கின்றனவோ!

முரண்படும்..