MNMN 14

MNMN 14

திவாகரன் குடும்பம் நியூஜெர்சிக்கு கிளம்பி இரண்டு நாள் ஆகியிருந்தது. இப்படியான ஒரு சூழ்நிலையில் இங்கு இதற்கு மேல் இருப்பது அவர்களுக்கு மிகவுமே சங்கடமாக இருந்தது. அன்று சிவாதித்யன் பேசிவிட்டு சென்றதுமே திவாகரனால் அங்கிருப்பவர்கள் முகத்தை பார்க்க கூட முடியவில்லை.

“சாரி, நான்தான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன். இன்னும் தெளிவா சிவாவிடம் இதைப்பத்தி கேட்டுட்டு அப்புறம் உங்கக்கிட்ட இதைப்பத்தி பேசியிருக்கணும்,” என்று வருத்தத்துடன் ரவிச்சந்திரனிடம் கூற,

“இதில் உங்க மகனிடம் மட்டும் தப்பு சொல்ல முடியாது. ரெண்டுப்பேரும் பேசி இப்படி ஒரு முடிவுக்கு வந்ததா சொன்னதை என் பொண்ணும் ஒத்துக்கிட்டா தானே, அதனால எல்லாத்துக்கும் நீங்க பொறுப்புன்னு ஆகிடாது.” என்று ரவிச்சந்திரன் சமாதானமாக பேசினாலும், இந்த சம்பவம் அவருக்கு சங்கடமாக தான் அமைந்தது.

“சாரி டா ஜெய், சிவாவால் உனக்கும் சங்கடத்தை கொடுத்துட்டேன்.” என்று ஜெயச்சந்திரனிடமும் அவர் தனியாக மன்னிப்பு கேட்டார்.

“இதில் உன்னோட தப்பு என்னடா இருக்கு, அவங்க ஒருத்தருக்கு விரும்புறாங்கன்னு தெரிஞ்சு தானே அண்ணனிடம் இதைப்பத்தி பேசினோம், ஆனா ரெண்டுப்பேரும் இப்படி பேசுவாங்கன்னு நாம எதிர்பார்த்தோமா என்ன?

ஆனா அப்படி என்ன அவங்களுக்கு பிரச்சனை. சிவா சும்மா டைம் பாஸுக்கு பழகற பையன் இல்லை. அப்படின்னாலும் உன்னிடம் பேச சொல்லியிருக்க மாட்டானே, நிவிக்கு சிவா மேல அப்படி ஒரு எண்ணம் இல்லைன்னு சொல்ல முடியாது. அவளும் அப்படி மறுப்பா ஏதும் சொல்லலையே,

சரி சிவா தான் வெளிநாட்டில் வளர்ந்த பையன், அவனுக்கு இது பெரிய விஷயமா இருக்காதுன்னு வச்சிக்க, ஆனா நிவி அப்படி இல்லையே டா, சும்மா பேசினோம், பழகினோம், பிரிஞ்சிட்டோம்னு சொல்ற அளவுக்கு இதெல்லாம் சாதாரணமா எடுத்துக்க கூடிய பொண்ணு கிடையாது. என்னவோ போ இந்த காலத்து பிள்ளைங்களை புரிஞ்சிக்கவே முடியறதில்ல,” என்று ஜெயச்சந்திரன் கூறவும்,

“நீ இதை சரியா புரிஞ்சிக்கிட்டதுக்கு நன்றி டா, உங்க அண்ணனும் இதை தப்பா எடுத்துக்காத மாதிரி தான் பேசினாரு, ஆனாலும் இதுக்கு மேலேயும் நாங்க இங்க தங்கறது சரியா வராது. நாங்க கிளம்பலாம்னு இருக்கோம்,” என்று திவாகரன் கூறினார்.

“எனக்கென்ன சொல்றதுன்னு தெரியல திவா, ஒருமாசம் இங்க தங்கலாம்னு ஆசையா வந்தீங்க, இப்போ இப்படி ஒரு பிரச்சனையில் கிளம்பணும்னு சொன்னதும், வேண்டாம் இங்கேயே இருங்கன்னு என்னால சொல்ல முடியல, முன்ன மாதிரி சகஜமா எல்லோரோடவும் உங்களால இருக்க முடியாது. அதுக்காக நீங்க கிளம்புங்கன்னும் என்னால சொல்ல முடியல திவா,” என்று ஜெயச்சந்திரன் வருத்தமாக கூறவும்,

“நான் உன்னை தப்பா எடுத்துக்க மாட்டேன் ஜெய், அதில்லாம நம்ம சகி, நரேஷ் கல்யாணத்துக்கு தானே நாங்க வந்தது. அது நல்லப்படியா நடந்து முடிஞ்ச திருப்தியோட நாங்க கிளம்பறோம் டா,” என்று திவாகரன் சமாதானம் கூறினார்.

அடுத்து மனைவி மகன்களிடம் திவாகரன் நியூஜெர்ஸிக்கு கிளம்புவது பற்றி கூற, “ம்ம் ஆமாங்க, நாம இதுக்கு மேலேயும் இங்க இருந்தா நல்லா இருக்காது. சீக்கிரம் டிக்கெட் புக் செய்ங்க,” என்று வனிதாவும் அதை ஆமோதித்தார்.

ஏற்கனவே சிவாதித்யன் கிளம்பும் எண்ணத்தில் இருக்க, “நானே சொல்லணும்னு நினைச்சேன் ப்பா, நீங்கல்லாம் வரலன்னாலும் நான் இங்க இருந்து கிளம்பும் ஐடியால தான் இருந்தேன். இப்போ எல்லோரும் போகலாம்னு நினைச்சா, நானே எல்லோருக்கும் டிக்கெட் புக் செய்றேன்.” என்றான்.

தேவ்சரணுக்கு தான் இங்கிருந்து கிளம்ப மனசில்லாமல், “ஒருமாசம் ஜாலியா இருக்கலாம்னு நினைச்சு வந்தேன். இப்படி உடனே போகலாம்னு சொல்றீங்களே,” என்று வருத்தமாக சொல்ல,

“புரிஞ்சிக்கோ தேவ், இப்போ சூழ்நிலை சரியில்லை. அதனால நாம கிளம்பி தான் ஆகணும்,” என்று வனிதா கூறவும், தேவ்சரணும் அரை மனதாக சரியென்று தலையசைத்தான்.

அவர்கள் இருந்த அந்த இரண்டு நாளில் சிவாதித்யன், நிவேத்யா இருவரையும் ஆத்யா தான் சமாதானப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தாள். இருவரையும் பேச விட்டுவிட்டு தோழி வீட்டிற்கு சென்றிருந்தவள் வீடு திரும்பியதும் கோமளா, ஜானகி மூலம் விஷயத்தை அறிந்து கொண்டவளால், அது உண்மையென்று நம்பவே முடியவில்லை. அது உண்மையாக இருக்கவும் கூடாது என்றே அவள் விரும்பினாள்.

ஆனால் நடந்தது அதுதானே, ஒன்றும் புரியாமல் முதலில் சிவாதித்யனை தான் பார்க்கச் சென்றாள். “என்னாச்சு ஷிவ், நிவியிடம் பேசியே ஆகணும்னு சொல்லவும் தானே, அவளை அங்க கூட்டிட்டு வந்தேன். ஆனா ரெண்டுப்பேரும் பிரியும் அளவுக்கு என்ன நடந்துச்சு?” என்று ஆத்யா கேட்க,

“அதை போய் உன்னோட அக்காவிடம் கேளு,” என்று முதலில் சிவாதியன் கோபமாக கூறினாலும், விஷயத்தை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள தோன்றியதால், நடந்ததை அவன் அவளிடம் கூறினான்.

அதை கேட்டு அதிர்ச்சியானவளோ, “உன்னை காதலிக்கிறான்னா, உன்னோட நியூஜெர்ஸி வர நிவி ரெடியா இருப்பான்னு தான் நான் நினைச்சேனே, ஆனா அவ இப்போதும் இப்படி பேசுறான்னா, ஒருவேளை அன்னைக்கு நான்தான் தேவையில்லாம அந்த விஷயத்தை அவளுக்கு ஞாபகப் படுத்திட்டேனா? நான்தான் உங்க சண்டைக்கு காரணமா?” என்று ஆத்யா வருத்தப்படவும்,

“இல்லன்னாலும் அவ அதைப்பத்தி கண்டிப்பா பேசியிருப்பா, உன்னால எல்லாம் எந்த பிரச்சனையுமில்லை. நீ அப்பவே நிவியோட எண்ணத்தை பத்தி என்னிடம் சொன்ன, ஆனா நான்தான் அதை பெருசா எடுத்துக்கல,” என்று அவளுக்கு சமாதானம் கூறினான்.

“சரி ஷிவ், அதுக்காக நிவியை வேண்டாம்னு சொல்லிடுவியா? அவளுக்காக கொஞ்சம் நீயும் யோசிச்சு பார்க்கலாமில்ல,” என்று ஆத்யா கூற,

“நான் யோசிக்க மாட்டேன்னு சொல்லவேயில்ல ஆது, ஆனா எனக்கு அதுக்கு டைம் வேணும், நான் நிவியை விட்டு கொடுக்க நினைக்கல, அவ தான் நான் எல்லாத்தையும் விட்டுட்டு வரலன்னா என்னை விட்டு கொடுக்கவும் தயாரா இருக்கா,

அவளுக்கு தான் என்னைப்பத்தி தெரியாது. ஆனா உனக்கு கூடவா தெரியாது. நான் அந்த ஜாப்ல ஜாயின் செய்ய எவ்வளவு ஹார்ட் வொர்க் போட்ருக்கன்னு உனக்கு தெரியாதா? எல்லாத்தையும் ஈஸியா விட்டுட்டு வான்னா எப்படி முடியும்? நிவி தான் என்னை புரிஞ்சிக்கலன்னா நீ கூடவா புரிஞ்சிக்கல,” என்று சிவாதித்யன் வருத்தமாக பேசவும், ஆத்யாவால் அதற்கு மேல அவனிடம் பேச முடியவில்லை.

நிவேத்யாவிடம் சென்றாலோ, “உன்னோட ஃப்ரண்ட்க்கு சப்போர்ட் செய்து பேசணும்னா இதைப்பத்தி எதுவும் பேச வேண்டாம்,” என்று ஒரே வாக்கியத்தில் முடித்து கொண்டாள்.

இரண்டு பேரிடமுமே ஆத்யாவின் சமாதான பேச்சுக்கள் வேலைக்காகவில்லை. ஆனால் அவர்களுக்கு நடுவில் என்ன பிரச்சனை என்பது யாருக்கும் தெரியாமல் குழம்பி கொண்டிருக்க, ஆத்யாவால் தான் அவர்களின் பிரச்சனை என்ன என்பது அனைவருக்கும் தெரிய வந்தது. ஆனால் அதற்கு என்ன தீர்வு என்பதை யாராலும் கூற முடியவில்லை.

சாகித்யாவும் நரேஷும் கூட விஷயம் கேள்விப்பட்டு அவர்களின் தேனிலவு பயணம் முடிந்ததும் டெல்லிக்கு போகாமல் நேரே இங்கே வந்துவிட்டனர். வந்ததும் சாகித்யாவோ, “எதுக்கு ப்பா, அவங்களை போக விட்டீங்க, நான் வந்து ஷிவ்க்கிட்ட பேசி பார்த்திருப்பேன் இல்ல,” என்று ஜெயச்சந்திரனிடம் கேட்க,

“திவா ரொம்ப சங்கடமா ஃபீல் செய்தான். அதான் அவன் கிளம்பறேன்னு சொன்னதும் சரின்னு சொல்லிட்டேன். அதில்லாம ஒருத்தருக்கொருத்தர் விரும்புறேன்னு சொல்லிட்டு, இப்போ சண்டை போட்டுக்கிட்டாங்க, அதுக்குப்பிறகும் அவங்களை இங்க தங்க வச்சா அண்ணன் என்ன நினைப்பாரோன்னு தோனுச்சு, நான் அண்ணனுக்காக பார்ப்பேனா? இல்லை திவாகரனுக்காக பார்ப்பேனா?” என்று ஜெயச்சந்திரன் பதில் கூறவும்,

“எனக்கும் அதுதான் ப்பா யோசனையா இருக்கு, நான் ஷிவ்க்காக பேசுவேனா? இல்லை நிவிக்காக பேசுவேனா? ரெண்டுப்பேரையும் எனக்கு நல்லா தெரியும், ஷிவ் அந்த கம்பெனிக்கு வேலைக்கு போக எவ்வளவு இன்ட்ரஸ்ட்டா இருந்தான். அதை நிவிக்காக விட்டுவிடுன்னு என்னால எப்படி சொல்ல முடியும்?

அதேபோல நிவி எப்போதும் சொல்லிட்டு இருப்பது அவளுக்கு இந்தியா விட்டு எங்கேயும் போக வேண்டாம் என்பது தான், அதனால நீ ஷிவ்வை கல்யாணம் செஞ்சுக்கிட்டு நியூஜெர்சிக்கு போ அப்படின்னும் என்னால அவளிடம் சொல்ல முடியாது.” என்று சாகித்யா கூறினாள்.

“ஆனா இந்த விஷயம் முன்னமே அவங்களுக்கு தெரியும் தானே, அப்போ அதைப்பத்தி யோசிக்காமலே ரெண்டுப்பேரும் காதலிக்க ஆரம்பிச்சிட்டாங்களா?” என்று நரேஷ் கேட்க,

“கண்டிப்பா நமக்காக இறங்கி வருவாங்கன்னு ரெண்டுப்பேருமே எதிர்பார்த்ததோட விளைவு தான் மாமா இது, ஆனா பேசி பார்க்கும்போது அது நடக்காததால் தான் ரெண்டுப்பேருக்குமே பிரச்சனை. ஆனா இதில் ஷிவ்வை என்னால முழுசா தப்பு சொல்ல முடியல, ஷிவ் டைம் கேட்கிறான். ஆனா நிவி அந்த டைம் வரும்போது கல்யாணம் செய்துக்கலாம்னு சொல்றா, அதுதான் ஷிவ்வோட கோபம்,” என்று ஆத்யா கூறினாள்.

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல, ஷிவ் இங்க வந்ததும் கண்டிப்பா நிவிக்கும் அவனுக்கும் செட் ஆகாதுன்னு தான் நினைச்சேன். ஆனா அவங்க காதலிக்கிறாங்கன்னு தெரிய வரும்போது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு, ஆனா அந்த சந்தோஷம் சில நாளிலேயே நின்னுடும்னு நான் நினைக்கல,” என்று சாகித்யா வருத்தப்பட,

“ஏன் அப்படி நினைக்கிற, இது அவங்களுக்குள்ள வந்த சின்ன மிஸ் அன்டர்ஸ்டாண்டிங் அவ்வளவு தான், அவங்க யோசிக்க டைம் தேவைப்படும்னு தானே சொல்லியிருக்காங்க, கண்டிப்பா யோசிச்சு நல்ல முடிவா தான் எடுப்பாங்க, நாம காதலிக்கும்போது நம்ம ரெண்டுப்பேருக்கும் வராத சண்டையா? ஆனா சமாதானம் ஆகிடுவோம் தானே, அப்படித்தான் அவங்களுக்கும், எதுக்கும் நான் சிவாவிடம் பேசறேன். நீ நிவியிடம் பேசு,” என்று நரேஷ் கூறவும், சாகித்யாவும் அதை ஆமோதிப்பது போல தலையசைத்தாள்.

இப்படி அவர்கள் இருவரையும் சுற்றி இருப்பவர்களுக்கே அவர்களின் பிரிவு வருத்தத்தை கொடுக்கிறது என்றால், அவர்களை அந்த பிரிவு பாதிக்காதா? கண்டிப்பாக அவர்களுக்குள்ளும் அந்த பாதிப்பு இருந்தது. அதனால் எந்த வேலையிலும் அவர்களால் கவனம் செலுத்த முடியவில்லை. எதையோ பெரிதாக இழந்தது போல் தான் இருவரும் சுற்றி கொண்டிருந்தார்கள். ஆனால் அதற்கான தீர்வை இருவரும் யோசித்தார்களா? என்றால் அதுதான் தெரியவில்லை.

இப்படித்தான் எதையோ பறிகொடுத்தது போல் நிவேத்யா அன்று அவளது அறையில் அமர்ந்திருக்க, வீட்டில் ரவிச்சந்திரனும் சிபியும் இல்லாத தருணமாக பார்த்து ஜானகி மகளிடம் பேச நினைத்து, அவளின் அருகில் வந்து அமர்ந்தவர், “சாகிக்கு இப்போ தானே கல்யாணம் முடிஞ்சிருக்கு, உனக்கு ஒரு வருஷமாச்சும் ஆகட்டும்னு தான் நினைச்சிருந்தேன். ஆனா உனக்கும் உடனே கல்யாணம் செய்யணும் என்கிற அவசியத்தை நீ உண்டாக்கிட்ட,

உனக்கு ஒரு பையனை பிடிச்சிருந்துச்சு, அவனுக்கு உன்னை கல்யாணம் செய்து வைக்க நாங்களும் தயாராக தான் இருந்தோம், ஆனா இப்போ வேண்டாம்னு சொல்லிட்ட, அதுவும் நல்லதுக்கு தான், உன்னை வெளிநாட்டில் கட்டிக் கொடுத்துட்டு, நினைச்ச நேரம் பார்க்க முடியாம கஷ்டப்படணும், உனக்கும் அதில் விருப்பம் இல்லை தானே, அதனால நடந்ததை மறந்துட்டு சகஜமாக இருக்கப் பாரு,

அப்புறம், என் சித்தி பொண்ணு நம்ம சாகி கல்யாணத்துக்கு வந்தால்ல, அவ சென்னையில் ஒரு வரன் இருக்கு, நம்ம நிவிக்கு பார்க்கலாம்னு கேட்டா, நான்தான் இப்போதைக்கு வேண்டாம்னு அவளிடம் சொல்லி வச்சிருந்தேன். இப்போ வேணும்னா அவக்கிட்ட சொல்லி அந்த வரனை விசாரிக்க சொல்லட்டுமா? நீ ஆசைப்பட்ட மாதிரி நீ இங்கேயே எங்க பக்கத்தில் இருக்கலாம்,” என்று ஜானகி சொல்லி கொண்டிருக்க, அப்போதும் நிவேத்யா அமைதியாக இருந்தாள்.

“என்ன நிவி, நான் சொல்றதுக்கு ஒன்னுமே சொல்ல மாட்டேங்குற, உனக்கு இதில் சம்மதம் தானே, நான் அவக்கிட்ட பேசட்டுமா?” என்று திரும்ப ஜானகி கேட்கவும்,

அவர் இதுவரை என்ன பேசினார் என்பதை நிவேத்யா கவனிக்காதவள், அவர் பேசின விஷயம் என்ன என்பது தெரியாமலே, “சரிம்மா, உங்களுக்கு என்ன தோனுதோ செய்ங்க,” என்று பதில் கூறினாள்.

“ரொம்ப சந்தோஷம் நிவி, நான் சீக்கிரம் சித்திக்கிட்ட பேசறேன்.” என்று ஜானகி மகிழ்ச்சியாக கூறிவிட்டு போக, அவர் எதுக்காக இவ்வளவு மகிழ்ச்சியாக பேசுகிறார் என்பது புரியாமல் அவள் பார்த்து கொண்டிருக்க, அங்கு ஏதோ சொல்வதற்காக ஆத்யா மேலே வந்தவள், ஜானகி பேசியதை முழுதாக கேட்டாள்.

அடுத்து ஆத்யா சிவாதித்யனை அழைத்து ஜானகி பேசியதை கூறியவள், “இதுக்கு மேலேயும் பொறுமையா யோசிக்கணும்னு சொல்லாம, சீக்கிரமா ஏதாவது முடிவு எடு ஷிவ்,” என்று சொல்ல,

“நிஜமாவே நிவி அவங்க அம்மா சொன்னதுக்கு ஒத்துக்கிட்டாளா? தெரியாம ஏதாவது சொல்லாத,” என்று சிவாதித்யன் நமப முடியாமல் கேட்டான்.

“அவ தான் உங்க விருப்பம்னு சொன்னாளே, அதைகேட்டு தான் எனக்கும் அதிர்ச்சியா இருந்துச்சு, அதுக்குமேல அவளிடம் என்ன கேட்கிறதுன்னு தான் அங்க இருந்து வந்துட்டேன். இதைப்பத்தி உன்கிட்டேயும் சொல்ல கூடாதுன்னு தான் முதலில் நினைச்சேன். ஆனா மனசு கேட்கல, அதான் சொல்லிட்டேன்.” என்று ஆத்யா சொல்லவும்,

“நிவி கண்டிப்பா விஷயம் தெரிஞ்சு சம்மதம் சொல்லியிருக்க மாட்டா, ஆரம்பிச்ச சீக்கிரத்திலேயே முடிஞ்சு போற அளவுக்கு எங்க காதல் ஒன்னும் அவ்வளவு வீக் இல்லை. அதனால நீ இதைப்போட்டு குழப்பிக்காத,” என்று அவன் அவளுக்கு சமாதான வாரத்தைகள் கூறும்படி ஆனது.

ஆனாலும் உடனே நிவேத்யாவை அலைபேசியில் அழைத்தான். அவன் எண் என்று தெரிந்து முதலில் அந்த அழைப்பை ஏற்கலாமா? வேண்டாமா? என்று நிவேத்யா யோசித்தவள், பின் அழைப்பை ஏற்றதுமே, “உங்க அம்மா வேற வரன் பார்க்க சொன்னதுக்கு நீ ஓகே சொல்லிட்டீயா?” என்று எடுத்ததும் கேட்டான்.

அதற்கு அவள் கோபமாக, “என்ன உளர்றீங்க, எங்க அம்மா வேற வரன் விஷயமா பேசினாங்களா? ஏதாவது கனவு கண்டீங்களா?” என்று நிவேத்யா புரியாமல் கேட்க,

அவன் யூகித்தது போல் அவள் விஷயம் தெரியாமலேயே சம்மதம் சொல்லியிருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டவனுக்கு மனதில் ஒரு நிம்மதி வந்து குடியேறியது.

ஆனாலும், “ஆத்யா சொல்லும்போது இப்படித்தான் இருக்கும்னு நினைச்சேன். அது சரியா இருந்திருக்கு, ஆனா உன்னோட அம்மா என்ன பேசினாங்கன்னு கூட தெரியாம நீ ஓகே சொல்லியிருக்கன்னா, அதுக்கு என்ன அர்த்தம்? கண்டிப்பா நம்ம பிரிவு உன்னை பாதிக்குது தானே, உண்மையை சொல்லு,” என்று அவன் கேட்க,

“கண்டிப்பா இல்லன்னு நான் பொய் சொல்ல மாட்டேன். ஆனா அதுக்காக நான் இறங்கி வருவேன்னு நினைக்காதீங்க,” என்ற அவளின் பதிலை கேட்டு அவனுக்கு கோபம் வரவும்,

“போடி,” என்று கூறிவிட்டு அழைப்பை அணைத்தான்.

சிவாதித்யன் கூறவும் தான், அவள் அன்னை திருமணத்தை பற்றி பேசியதே நிவேத்யாவிற்கு தெரிய வரவும், “இந்த அம்மா இதைத்தான் பேசினாங்களா? இது தெரியாம நான் வேற,” என்று வாய்விட்டு சொல்லியப்படியே தலையில் அடித்து கொண்டவளுக்கோ,

ஜானகி பேசிவிட்டு போன நேரம் ஆத்யா அங்கு வந்ததை அவள் பார்த்ததால், ஆத்யா தவறாக புரிந்து கொண்டு அதை சிவாதித்யனிடம் சொல்லியிருக்க வேண்டும் என்பதை சரியாக யூகித்தாள். இருந்தாலும், ‘என்னைவிட ஆதுக்கு, அவளோட ஃப்ரண்ட் தான் முக்கியம், என்கிட்ட இதைப்பத்தி பேசாம, அவங்கக்கிட்ட சொல்லியிருக்கா,” என்ற பொறாமையும் நிவேத்யாவிற்கு எழுந்தது.

அதேசமயம் ஆத்யாவை இந்த விஷயமாக எதுவும் பேசவிடாமல் தான் நடந்து கொண்டது அவளது நினைவிற்கு வரவும், அந்த கோபம் தணிந்தது. அதில்லாமல் முதலில் தன் அன்னையிடம் சம்மதம் சொன்னதை தெளிவுபடுத்தும் கட்டாயம் இருந்ததால் அவள் ஜானகியை தேடி சென்றாள்.

தன் அறையிலுருந்து அவள் வெளியே சென்று வரவேற்பறையில் பார்க்க, ரவிச்சந்திரனும் அப்போது வீட்டில் இருந்தார். நிவேத்யாவை பார்த்ததும், “நிவி, சித்தி சொன்ன வரன் விஷயமா உன்கிட்ட கேட்டதுக்கு நீ சம்மதம் சொன்ன தானே, உங்க அப்பா அதை நம்ப மாட்டேங்கிறார் பாரு,” என்று அவள் பேச வந்ததை ஜானகி ஆரம்பிக்கவும்,

அவர்கள் அருகில் சென்றவள், “அம்மா, நீங்க என்ன பேசினீங்கன்னு நான் கவனிக்கல ம்மா, நீங்க ரெண்டாவது சம்மதமான்னு கேட்டதும், வேற எதுவோன்னு நினைச்சு நான் சரின்னு சொல்லிட்டேன். அம்மா ஏற்கனவே சொன்னது தானே ம்மா, இப்போ இருக்க சூழ்நிலையில் இந்த கல்யாண பேச்செல்லாம் எடுக்காதீங்க, என்னை கொஞ்சம் குழப்பாம விடுங்க,” என்று அவள் பதில் கூறவும்,

“அப்போ கொஞ்சநாள் போகட்டும்னு கல்யாண பேச்சை எடுக்கலாமா நிவி ம்மா,” என்று ரவிச்சந்திரன் கேட்டார்.

அதற்கு பதில் சொல்ல முடியாமல் அவள் மௌனமாக இருக்கவும், அவளை தன்னருகில் அமர்த்தி கொண்டவர், “சிவாதித்யனை தவிர வேற எந்த பையனை கல்யாணம் செய்துக்கறதை பத்தி பேசினாலும் உன்னோட பதில் மௌனமா இருக்கும்னு எனக்கு தெரியும், இப்போ நீ குழப்பமான மனநிலையில் இருக்க, நீயே நல்லா யோசிச்சு உன்னோட குழப்பத்துக்கு தீர்வு கண்டுபிடிப்பேன்னு தான் நான் இதைப்பத்தி உன்னிடம் எதுவுமே பேசல,

ஆனா நான் வெளிய போயிருந்த கேப்ல உன்னோட அம்மா இந்த கிறுக்கு தனத்தை செய்துட்டா, ஆனா அவ கேட்டது கூட தெரியாம நீ சரின்னு தலையாட்டி இருக்க, அப்போ இன்னும் நீ குழப்பத்தில் தான் இருக்கீயா? அதுக்கான தீர்வை நீ கண்டுப்பிடிக்கலையா? எவ்வளவுநாள் இப்படியே இருக்கப் போற,” என்று ரவிச்சந்திரன் கேட்க, அவள் அப்போதும் மௌனமாக இருந்தாள்.

“இங்கப்பாரு, உங்க ரெண்டுப்பேருக்கும் நடுவில் என்ன பிரச்சனை என்று நீங்க சொல்லலைன்னாலும் அது என்னன்னு எங்களுக்கு தெரியும், நீயும் சிவாவும் ஒருத்தரையொருத்தர் விரும்பறீங்கன்னு தெரியும்போது, எனக்கு என்ன ஆச்சர்யம்னா, இந்தியாவை விட்டு போக மாட்டேன்னு சொல்லிட்டு இருந்த பொண்ணு, எப்படி அந்த பையனை விரும்பினா? என்ற கேள்வி தான் என் மனசுக்குள் வந்துச்சு,

இப்போ நான் உன்கிட்ட கேட்கிறது ஒன்னே ஒன்னு தான், சிவா உன்கிட்ட நான் உனக்காக இங்க வருவேன்னு பொய்யான வாக்குறுதி கொடுத்து ஒன்னும் உன்கிட்ட காதலை சொல்லலையே, இல்லை உனக்கு முன்னாடியே சிவா வெளிநாட்டில் இருக்க பையன். அவன் அங்க தான் வேலை செய்றான். இதெல்லாம் உனக்கு தெரியாம இருந்துச்சா, இல்லை அந்த பையனோ இல்ல மத்தவங்களோ அதெல்லாம் உன்கிட்ட இருந்து மறைச்சாங்களா? இல்லல்ல,

கல்யாணத்துக்கு வரன் தேடும்போது நமக்கேத்த மாதிரி பார்க்கலாம், ஆனால் காதலில் அப்படி பார்க்க முடியாது. சிவாதித்யனை பத்தி எல்லாம் தெரிஞ்சு தானே அவனை உனக்கு பிடிச்சுது, இப்போ நீ நினைச்சது போல அந்த பையன் நடந்துக்கணும்னு எதிர்பார்ப்பது எந்தவிதத்தில் நியாயம்? சரி நமக்கு வரப் போற வாழ்க்கை துணை நம்ம விருப்பப்படி நடந்துக்கணும்னு எதிர்பார்ப்பதோ, அவங்க நமக்காக அதை செய்யணும்னு நினைப்பதோ தப்பில்ல, ஆனா அவங்களை நாம அதுக்காக கட்டாயப்படுத்துவது தான் தப்பு,

இப்போ உன்னையும் அந்த பையன் அப்படி கட்டாயப்படுத்தினா, அவனிடமும் நான் இதையே தான் சொல்லியிருப்பேன். ஆனா அவன் உனக்காக இறங்கி வரேன்னு சொல்லியிருக்கான். அதுக்கான நேரத்தை அவன் கேட்கிறான். ஆனா அதையும் புரிஞ்சிக்காம நீ நினைப்பது மட்டுமே நடக்கணும்னு எதிர்பார்ப்பது எப்படி சரியாகும் நிவிம்மா, அந்த பையனோட சூழ்நிலையையும் நீ புரிஞ்சிக்கணுமில்ல,

நீ என்னத்தான் என்னோட அப்பா எனக்கு வீட்டோட மாப்பிள்ளை பார்ப்பாருன்னு சும்மா சொல்லிட்டு இருந்தாலும், அப்படி ஏதும் நடக்கப் போறதில்லன்னு உனக்கே தெரியும், இங்க உன்னோட விருப்பப்படி சென்னையிலேயே ஒரு மாப்பிள்ளை பார்த்தாலும், நீ அங்க போய் அவங்க வீட்டில் தான் வாழப் போற, நீ எந்த ஊரில் வாழப்போற, அது சென்னையா? நியூ ஜெர்சியா? என்பது முக்கியமில்லை. மனசுக்கு பிடிச்சவங்களோட நம்ம வாழ்க்கை அமையறது தான் முக்கியம்.

வாழ்க்கை என்னைக்கும் நாம எதிர்பார்த்தது போலவே இருக்காது. நாளைக்கு என்ன நடக்கும்னு நமக்கு தெரியாது. நம்ம வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் அனுபவங்கள் நம் எண்ணத்தை எப்படி வேணும்னாலும் மாத்தலாம், அதை புரிஞ்சிக்காம, இன்னைக்கு நாம என்ன நினைக்கிறோமோ அது நடக்கணும்னு எதிர்பார்க்கிறோம், அது தப்பில்ல, ஆனா அதில் நாம விரும்பினதை இழந்துட்டோம்னா அப்புறம் அந்த எதிர்ப்பு பூர்த்தியாகறதில் நமக்கு என்ன சந்தோஷம் கிடைக்கும் சொல்லு,

இதெல்லாம் நல்லா யோசிச்சு பாரு உனக்கே புரியும், உன்னோட குழப்பத்தை தெளிவுப்படுத்த எத்தனைநாள் எடுத்துக்கிறீயோ எடுத்துக்கோ, அதுவரை நாங்க உன்னை எதுக்காகவும் அவசரப்படுத்தவோ கட்டாயப்படுத்தவோ மாட்டோம், அதேபோல நீயும் ஏதோ ஒரு கட்டாயத்துக்காக ஏதோ ஒரு தீர்வை யோசிக்காத, உனக்கு எது சரின்னு தோனுதோ அந்த முடிவை எடு, அது எதுவா இருந்தாலும் அப்பா உனக்கு கண்டிப்பா சப்போர்ட்டா இருப்பேன்.” என்று ரவிச்சந்திரன் பேசி முடிக்க,

அப்போது நிவேத்யாவிற்கு குழப்பமாக தான் இருந்தது. இன்னுமே முடிவெடுக்க முடியாமல் திணறினாள். ஆனால் அதேநேரம் சிவாதித்யன் அங்கு ஒரு தீர்க்கமான முடிவை எடுத்திருந்தான்.

முரண்படும்..